முல்லைக் கொடியாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 2,509 
 

(1952 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘சோ’ வென்று பெய்துகொண்டிருந்த சித்திரை மாதத்துச் செல்வ மழை அப்பொழுதுதான் விட்டது. மேகத்தின் பின்னால் அதுவரை மறைந்திருந்த ஆத தவன், வான வில்லின் வர்ண விசித்திரத்தைக் கண்டு அதிசயித்த வண்ணம் வெளியே வந்தான். ‘ஜில்’லென்று வந்த தென்றல் காற்று, ‘ஜம்’மென்று மலர்ந்த மலர்களின் ‘கம்’மென்ற மணத்துடன் கலந்து வந்தது. மழைக்குப் பதுங்கியிருந்த பட்சி ஜாலங்கள் படபடவென்று தங்கள் சிறகுகளை அடித்துக்கொண்டு வான வீதியை நோக்கி மேலே கிளம்பியபோது, அவற்றிலிருந்து வைரத் தைப் பழிக்கும் நீர்த் துளிகள் ‘சொட சொட’வென்று கீழே உதிர்ந்தன. கார் அரசன் தந்த இந்தக் காட்சியைக் கண்டு பொறாமை கொண்ட காற்றரசன், பொங்கியெழுந்து பூங்கொடிகளைக் குலுக்கிக் கொட்டி, பூமா தேவியையே ‘பூ’ தேவி யாக்கிவிட்டான். அந்த அழகில் ஈடுபட்ட ஆனந்தத்தாலோ என்னமோ, தாவர இனங்கள் தலைவிரித் தாடின. அந்த ஆனந்த நடனத்திலிருந்து கிளம்பிய அற்புத கீதம், என்னை அறையை விட்டு வெளியே வரச் செய்தது.

திண்ணைக்கு வந்தேன். அந்தக் கிராமத்திற்கே ஒரு தனி அழகைக் கொடுத்துக் கொண்டிருந்த வெளுத்த வானம் கண் கொள்ளாக் காட்சியா யிருந்தது. நான் இருந்த வீட்டுக்கு எதிர் வீட்டில் தான் அவள் இருந்தாள். அந்த வீட்டுக்கு முன் பக்கத்தில் கட்டியிருந்த வேலி மீது முல்லைக் கொடி படர்ந்திருந்தது. சந்திரன் தலை காட்டி யிருந்த சமயம்; அவள் வெளியே வந்தாள். வேறெதற்கு? பூப் பறிக்கத்தான்.

என்னைப் போல் முல்லைக் கொடிக்கும் அவளுடன் ஓடியாடி விளையாட வேண்டுமென்று வெகு நாட்களாக ஆசை போலிருக்கிறது. அதற்கேற்றாற்போல் அவளுக்கு எட்டாத உயரத்திலிருந்த ஒரு கொடியில் முல்லை மலர்கள் அரும்பியிருந்தன. மந்த மாருதத்தில் மெல்ல அசைந் தாடிக் கொண்டிருந்த அந்த முல்லைக்கொடி தன்னை நெருங்கி வரும்போது, அவள் துள்ளிக் குதித்து அதை எட்டிப் பிடிக்க முயன்றாள். அவளைச் சிரிக்க வைத்து அழகு பார்ப்பதைவிட, அழ வைத்து அழகு பார்ப்பதில் அந்தக் கொடிக்கு ஆனந்தம் அதிகம் போலிருக்கிறது; இல்லாவிட்டால் அது ஏன் அவளை அப்படி ஏமாற்றிவிட்டு அத்தனை உயரத்தில் போகவேண்டும்?- அவளும் அதை விடவில்லை ; அதுவும் அவளை விடவில்லை !- இந்த வேடிக்கையைப் பார்த்துத்தானோ என்னமோ, அவளுடைய கை வளைகள் ‘கலகல’வென்று நகைத்தன.

அதென்னமோ, இந்த ஆண்களுக்குப் பெண்களைக் கண்டாலே ஒருவிதமான பச்சாத்தாபம் உண்டாகிவிடு கிறது! அதற்கு நான் மட்டும் விதி விலக்கா, என்ன? எனக்கும் அவள்மீது பச்சாத்தாபம் உண்டாகத்தான் செய்தது. திண்ணையை விட்டு எழுந்து சென்றேன்; அந்தக் கொடியைப் பிடித்து இழுத்து அதிலிருந்த முல்லை மொட்டுக்களை யெல்லாம் பறித்து அவளிடம் கொடுத்து விட்டுத் திரும்பி வந்தேன்.

அப்பொழுது அவள் என்னைப் பார்த்த பார்வை நன்றியுடன் பார்த்ததா யில்லை; அதென்னமோ மாதிரியா யிருந்தது!- அவள் ஏன் என்னை அவ்வாறு பார்த்தாள்?

***

கோடை விடுமுறை மணிக் கொருதரம் வராவிட் டாலும் மாதத்திற் கொருதரமாவது வரக் கூடாதா? அது தான் இல்லை. வழக்கம்போல் அது வருடத்திற்கொரு முறைதான் வந்தது; நானும் வழக்கம்போல் என் தங்கை யின் கிராமத்திற்குச் சென்றேன் – சொல்ல மறந்து விட் டேனே? அந்த முல்லைக் கொடியாளும் அக் கிராமத்தில் தான் இருந்தாள்.

நான் போன சமயம் என் தங்கை வீட்டில் இல்லை; கதவு மூடியிருந்தது. சுற்று முற்றும் பார்த்துத் திருதிரு’ வென்று விழித்துக் கொண்டிருந்தேன். அவள் வந்தாள். -writ? என் தங்கையல்ல ; அன்று பார்த்த அதே முல்லைக் கொடியாள் தான்!

யார் முதலில் பேசுவது?

சிறிது நேரம் இருவரும் மௌனமா யிருந்தோம்.

இப்படியே எவ்வளவு நேரம் சும்மா இருக்க முடியும்? நான் தான் “இவர்கள் எங்கே?” என்று முதலில் அவளை விசாரித்தேன்.

“என்னைக் கேட்டால்?” என்று கேட்டுவிட்டு அவள் உள்ளுக்குள்ளேயே சிரித்துக் கொண்டாள்.

“பின் எதற்காகத்தான் இங்கே வந்தாய்?”

“அதைச் சொல்லத்தான்!”

“சொல்லேன்?” என்றேன் நான்.

“ஊஹும்” என்று மயிலின் சாயலோடு அவள் தன் தலையை அசைத்தாள். அதே சமயத்தில் முல்லைப் பந்தலின்மேல் உட்கார்ந்திருந்த ஒரு மைனா, ‘கூஹும்’ என்று அவளை நையாண்டி செய்துகொண்டே பறந்து சென்றது.

அழகும் ஆசையும்கூட ஒருவி தமான ‘லாகிரி’தானே? அவற்றை அநுபவிக்க அனுபவிக்க எனக்கு ஒருவிதமான போதை எழுந்தது. இருந்தாலும் அதை ஒருவாறு அடக்கிக்கொண்டு பேசாமலிருந்தேன்.

அவளே சிறிது நேரத்திற்குப் பிறகு, “இது தெரியாதா, உங்களுக்கு? அவர்கள் திருநாளுக்குப் போயிருக்கிறார்கள்!” என்றாள்.

“எப்பொழுது வருவார்கள்?” என்று கேட்டேன்.

“நாளைக்கு!”

“அட, ராமா! கதவைத் திறந்து வைத்துவிட்டாவது போயிருக்கக் கூடாதா?- இப்பொழுது நான் எங்கே போவது?” என்றபடி, ஒன்றும் தோன்றாமல் நான் வந்த வழியே திரும்பினேன்.

அவள், “எங்கே போகிறீர்கள் ?” என்று கேட்டாள்.

“தெரியவில்லை!” என்றேன்.

“பைத்தியந்தான்; எங்கள் வீட்டுக்கு வாருங்கள்!” என்றாள்.

அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளாமலிருக்க அவள் சொல்வதுபோல் எனக்கென்ன பைத்தியமா? சென்றேன். எனக்கு முன்னால் அவள் திடுதிடுவென்று ஓடி உள்ளேயிருந்து ஒரு செம்புத் தண்ணீர் கொண்டு வந்து “காலை அலம்பிக் கொள்ளுங்கள்” என்றாள்.

அதை வாங்கிக்கொண்டு நான் வாசலுக்கு வந்தேன். “அது யார், அம்மா?” என்று உள்ளே இருந்தபடி யாரோ கேட்டது என் காதில் விழுந்தது.

“எதிர்த்த வீட்டு அண்ணியின் அண்ணா; ஊரிலிருந்து வந்திருக்கிறார்!” என்று சொன்னாள் அவள்.

“ஐயோ, பாவம்! அவர்கள் திருநாளுக்குப் போயிருப்பது தம்பிக்குத் தெரியாதுபோலிருக்கிறது. முதலில் அவனுக்குச் சாப்பாடு போடு, அம்மா! எப்பொழுது சாப்பிட்டு வந்ததோ, என்னமோ?”

காலைக் கழுவிக்கொண்டு உள்ளே சென்றேன். அங்கே இருந்த ஒரு கிழவி, “வா, அப்பா! வா!” என்று என்னை வரவேற்றாள்.

அந்தக் கிழவியைத் தவிர அவளுடைய வீட்டிலும் வேறு யாருமில்லை. நான் அதிசயத்துடன், “உங்கள் வீட்டில்கூட ஒருவரும் இல்லையா?” என்று அவளைப் பார்த்துக் கேட்டேன்.

“இல்லை, அவர்களுடன் தான் இவர்களும் திருநாளுக்குப் போயிருக்கிறார்கள். இந்தப் பாட்டியை மட்டும் எனக்குக் காவலாக விட்டுவிட்டுப் போனார்கள்!” என்று சொல்லிவிட்டு அவள் சிரித்தாள்.

“அவளுக்குக் காவல்!”

இதைக் கேட்டதும் எனக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது – மனமிருந்தால் மார்க்கந்தானா இல்லை?

இவ்வாறு எண்ணி நான் வியந்து கொண்டிருந்த போது, “இலை போட்டாச்சு; சாப்பிட வாருங்கள்!” என்று என்னைப் பரிவுடன் அழைத்தாள் அந்தப் பாவை. சிறிது நேரத்துக்கெல்லாம் என்னுடன் கிழவியையும் உட்காரவைத்து அவள் சாதம் பரிமாறினாள். பசி தீர்ந்த பிறகு, நான் படுத்துக் கொள்வதற்காகத் திண்ணைக்கு வந்துவிட்டேன்.

அவள் பாயைக் கொண்டுவந்து திண்ணையில் விரித்த போது,

“உன்னுடைய பெயர்…?” என்று ஏதோ ஒரு விதமான உணர்ச்சி வசப்பட்டு இழுத்தேன் நான்.

“பெயரில் என்ன இருக்கிறது? பேசாமல் படுத்துக் கொள்ளுங்கள்!” என்று சொல்லிவிட்டு, அவள் உள்ளே சென்றாள்.

***

மூன்றாவது சந்திப்புக்கு முந்நூற்று அறுபத்தைந்து நாட்கள் காத்துக் கிடந்த பிறகு, அந்த முல்லைக் கொடியாளின் கிராமத்திற்குப் போவதற்காக ரயிலில் ஏறி உட்கார்ந்தேன். ‘கூகுக்’ கென்று கூவி, ரயில் தான் கிளம்பப்போவதை அறிவித்தபோது, “முல்லை மொக்! முல்லை மொக்!” என்று ஒரு பூக்காரன் கூவிக்கொண்டே வந்தான்.

“இந்த முல்லையில் ஒரு படி மொட்டை வாங்கிக் கொண்டுபோய், அவள் தலையில் கொட்டி அபிஷேகம் செய்தால் என்ன?” என். நினைத்தேன். உடனே அவனைக் கூப்பிட்டு ஒரு படி மொட்டையும் வாங்கி வைத்துக் கொண்டேன்.

அதற்குப் பிறகு, “ஆமாம், இதை எப்படி அவள் தலையில் கொட்டுவது?” என்ற பிரச்னை தோன்றி என்னை வதைத்தது. போகும்போது அவள் வீட்டுக் கொல்லைப் பக்கமாகப் போவது; வழியில் சந்தித்தால் அவள் தலையில் கொட்டுவது; இல்லாவிட்டால் தங்கை இருக்கவே இருக்கிறாள்!” என்று கடைசியில் தீர்மானித்துக் கொண்டேன்.

***

அவள் வீட்டை நான் நெருங்கியபோது மணி ஆறுக்குமேலிருக்கும். நான் எதிர்பார்த்தபடி அவள் கொல்லைப் பக்கத்தில்தான் இருந்தாள். அவளுக்கு எதிரே ஓர் எருமைக் கன்று துள்ளித் துள்ளி ஓடிக்கொண்டிருந் தது. அதைப் பிடித்துக்கட்ட எத்தனித்துக் கொண்டிருந்த அவள் என்னைக் கண்டதும், “அன்றைக்கு முல்லைக் கொடியைப் பிடித்துக் கொடுத்தீர்களே, இன்றைக்கு இந்த எருமைக்கன்றைப் பிடித்துக் கொடுங்களேன், பார்க்கலாம்?” என்றாள்.

அவள் ஏமாந்தால் தன் தாயின் மடியில் இருக்கும் பாலையெல்லாம் குடித்து விடலாமென்று எண்ணங் கொண்டிருந்த அந்த எருமைக் கன்று, சிறிது நேரம் என்னையும் ஆட்டிப் படைத்த பிறகு, சிக்கிக் கொண்டது. அவள் அதைப் பிடித்துக் கட்டிக்கொண்டே, “நல்ல சமயத்தில் வந்து சேர்ந்தீர்கள்!” என்றாள்.

“நல்ல சமயமா என்னத்திற்கு ?” என்று கேட்டேன் நான்.

“நீங்கள் பட்டணத்துப் பணக்கார ராஜா; நானோ பட்டிக்காட்டு ஏழைப் பெண். என்னுடைய கல்யாணத்தின்போது நீங்கள் வருகிறதாயிருந்தால், அது நல்ல சமயந்தானே?” என்றாள் அவள்.

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. உனக்கா கல்யாணம்? எப்பொழுது? எங்கே?” என்று பரபரப்புடன் கேட்டேன்.

“நாளைக்கு! நம்ம ஊர்க் காத்தவராயன் சத்திரத்திலே தான்!” என்று அவள் சாவதானமாகப் பதில் சொன்னாள்.

என் தலையில் இடி விழுந்தது போலிருந்தது. இதற்குத்தானா அவள் என்மீது அன்று அத்தனை அன்பு காட்டினாள்? அந்த அன்பின் அர்த்தந்தான் என்ன? அதெல்லாம் வெறும் விளையாட்டுத்தானா?

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. “அப்படியானால் நீ…நீ…” என்று தடுமாறினேன் நான். “என்ன?” என்று கேட்டாள் அவள்.

“…காதலிக்கவில்லையா?”

“ஊஹும்; எங்க ஊரிலே அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறந்தான்!” என்று சொல்லிவிட்டு, அவள் வெட்கத்தால் தலையைக் கீழே கவிழ்த்துக் கொண்டாள்.

எனக்கு எப்படியிருக்கும்?- என் மனம் அமைதியை அடியோடு இழந்துவிட்டது. அவசர அவசரமாக அவளுக்காக வாங்கி வைத்திருந்த முல்லை மொட்டுக்களை யெல்லாம் அங்கேயிருந்த ஆலமரத்தடிப் பிள்ளையாரின் தலையில் கொட்டிவிட்டு, தங்கையின் வீட்டைக்கூட மறந்து ‘விடு விடு’ வென்று வந்த வழியே திரும்பினேன்.அவள், “எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டாள்.

நான் அவளைத் திரும்பிப் பார்க்கவில்லை. பட்டணத்தைப்பற்றியும், பட்டணத்துப் பயல்களைப்பற்றியும் கொஞ்சங்கூடத் தெரியாத அந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணை நான் ஏன் திரும்பிப் பார்க்க வேண்டும்?

– முல்லைக் கொடியாள், மூன்றாம் பதிப்பு: 1952, ஸ்டார் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *