இரண்டு மணி நேரமாய் அந்த எவளோ ஒரு ‘மிஸ்’ஸுக்காகத் தனது மாடியறையில் காத்திருந்தான் வாசு. பொறுமை இழந்து முகம் சிவந்து உட்கார்ந்திருந்தவன் கடைசில் கோபத்தோடு எழுந்துசென்று ‘கப்’போர்டைத் திறந்தான்.
அதனுள் அழகிய வடிவங்களில் வடிக்கப்பட்ட கண்ணாடி மதுக் கிண்ணங்களும், கால் பாகம் குறைவாயிருந்த ஸ்காட்ச் விஸ்கி பாட்டிலும் இருக்கின்ற கோலத்தை ஏதோ ஒரு கலைப்பொருளைப் காண்பதுபோல் ரசித்துப் பார்த்தான் அவன்.
அந்த மதுக் குப்பியும், கிண்ணங்களும் மதுவின் விரோதிகளைக்கூடக் குடிக்கத் தூண்டும் அளவிற்கு மயக்கத் தக்க கலையழகு பெற்றிருந்தன.
“அதிருஷ்டவசமாகவோ, துரதிருஷ்டவசமாகவோ ஒழுக்கம் என்ற அளவுகோலினால் ஒதுக்கித் தள்ளப்பட்டுள்ள விஷயங்களெல்லாம் உலகத்தில் மகத்தான செளந்தர்யங்களாய் மாறியிருக்கின்றன!” என்று முணுமுணுத்தவாறே தன்னுள் கிளர்ந்தெரிகின்ற உணர்ச்சிகளைத் தணிக்கவோ வளர்க்கவோ கொண்ட வெறியுடன் குப்பியிலிருந்ததைக் கிண்ணத்தில் வடித்துக் கலப்படமற்ற பிரசாதம் போல் ஒரே மடக்கில் விழுங்கிக் கிண்ணத்தை மீண்டும் நிரப்பிக்கொண்டு வராந்தாவுக்கு வந்தான் வாசு.
அந்த வராந்தாவும் அவனது ஏர்கண்டிஷண்ட் அறையும் முழுக்கவும் மேநாட்டுப் பாணியில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவனும்கூட சிந்தனையிலும் ரசனையிலும் விதேசி மயமாகத்தான் இருந்தான்.
நாணல் தட்டையைப் போன்ற பிளாஸ்டிக்கினால் உருவாக்கபட்ட தட்டிகள் தொங்க விடப்பட்டிருக்கும் அந்த வராந்தாவின் ஒரு மூலையிலிருந்த ‘ரேடியோ கிராமி’ன் அருகே அவன் வந்தான். மதுக் குப்பியை அதன் மீது ஒரு புறம் வைத்து ஒரு இசைத் தட்டை எடுத்து ‘ரேடியோ கிராம்’ பெட்டியில் வைத்தான்.
அடுத்த வினாடி ‘நெம்பர் ஐம்பத்தி நாலு மூங்கில் வீடு’ என்ற ஆங்கில வரிகளைத் தாளத்தோடு ஒலிக்கின்ற இசைக்கு ஏற்ப விரலைச் சொடுக்கிக்கொண்டு அந்த வராந்தாவின் மேலும் கீழும் உலவிக்கொண்டிருந்தான் வாசு.
அங்கே நடுவில் இரண்டு குஷன் சோபாக்களுக்கு இடையே இருந்த டீபாயின் மீது சதுரங்கப் பலகையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காய்களை அந்தப் பாடல் முடியும்வரை அவன் கவனிக்கவேயில்லை. பாட்டு முடிந்ததும் அவன் மீண்டும் ஜன்னல் வழியாக வெளியில் எட்டிப்பார்த்தான். பிறகு ஹாலிலிருந்த கடிகாரத்தைப் பார்த்தான். பின்னர் மத்தியானம் இரண்டு மணியிலிருந்து – அவனால் நிறுத்தி வைக்கப்பட்டுக் காத்துக்கொண்டிருக்கும் – அந்த சதுரங்கப் படை வரிசையைப் பார்த்தான். மூண்று மணிக்கு வருவதாய்ச் சொல்லியிருந்த அந்த மிஸ் . . .?
நேற்றிரவு ஒரு விருந்தில் அவனைச் சந்தித்து அவனைக் கவர்ந்தும், அவனால் கவரப்பட்டும் இங்கு வருவதாக வாக்களித்திருந்த அவள் பெயர்கூட அவனுக்கு மறந்துபோய் இருந்தது.
அவனுக்கு பெயர்கள் முக்கியமல்ல; உறவுகள் பொருட்டல்ல. அவன் உணர்ச்சிகளை வழிபடுகிறவன். அழகுகளை ஆராதிப்பவன்; வெறும் உருவ அழகிலேயே அவன் மனம் பறி கொடுப்பான். அப்படிப் பறிகொடுப்பது தவறல்ல என்று வாதிப்பான். பிறரைக் கவர தனது உருவத்திலும், நடையுடை பாவனையிலும், பேச்சிலும் ரசனையிலும் ஒரு வித அழகினை வளர்த்துக் கொள்வதே வாழ்க்கை என்று நம்பியிருந்தான். இந்த முப்பத்தைந்து வருட வாழ்க்கையனுபவத்தில் அந்த நம்பிக்கை அவனுக்குப் பயனளித்தே வந்திருக்கிறது. அவனோடு பழகுகின்ற மனிதர்களுக்கு எது பிடிக்குமோ, அதனை எப்பாடு பட்டேனும் அவன் தேடிவைப்பான். ஆனால் பெரும்பான்மையான சமயங்களில் அவ்விதம் தேடவேண்டிய அவசியமில்லாமலே அவனிடம் அவை கையிருப்பிலேயே இருந்து விடுவதும் உண்டு.
நேற்று அப்படித்தான் அவளிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘அவளுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு என்ன?’ என்று கேட்டு, அவளொரு ‘செஸ் சாம்பியன்’ என்றறிய நேர்ந்ததில் அவன் மிகவும் மகிழ்ச்சியுற்றான். ஏனெனில் அவனுக்கும் அதில் பரிச்சயம் உண்டு. எனவே அவளுக்கு அவன் விளையாட்டாய் சவால் விடுத்தான்.
“என்னோடு விளையாடி என்னை நீ ஜெயிப்பாயா?” என்று அவன் அகங்காரத்தோடு கேட்டபொழுது, “இயன்றவரை முயன்று பார்ப்பேன்” என்று அவள் ஆங்கிலத்தில் கூறி, அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டாள்.
“விளையாட்டில் வெற்றி என்பது எவ்வளவு இயல்பானதோ அவ்வளவு இயல்பானதே தோல்வியும்” என்று அவன் தத்துவார்த்தமாய்ச் சொன்ன பதில் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.
அவனைப் பொறுத்தவறை அவன் அழைப்பை அவள் ஏற்றுக்கொண்டதே அவனுக்கு வெற்றியாய் இருந்த்து. அவனது நாட்டம் அவளது வருகையில்தானேயொழிய அவள் வந்த பின் நிகழும் விளையாட்டில் ‘யார் வெற்றி பெறுகிறார்கள்? யார் தோற்கிறார்கள்’ என்பதில் அல்ல. ஒரு ஆணும் பெண்ணும் சம்பந்தப்பட்ட விளையாட்டு – அது எத்தகையதாய் இருந்தாலும் வென்றவர் தோற்றவராவதும், தோற்றவர் வென்றவராவதும் இயல்பு என்று அவன் அறிந்திருந்தான்.
இப்பொழுது அவன் மனப் புழுக்கமெல்லாம் தன் அழைப்பை ஏற்றுக்கொண்டு அவள் வராமலிருப்பதால் விளைந்த ஏமாற்றத்தினால்தான்.
ரேடியோகிராம் மீது இருந்த மதுவை எடுத்து ஒரு வெறியுடன் அவன் உறிஞ்சித் தீர்த்தான்; அப்போது மணி ஐந்தரை அடித்தது.
மூன்று மணிக்கு வருவதாய் இருந்தவள், ஐந்தரை மணிவரை வராததாலும், அவளிடமிருந்து டெலிபோன் மூலம் கூட ஒரு செய்தியும் தெரியாததாலும் அவள் தன்னிடம் பொய் வாக்குத் தந்து ஏமாற்றிவிட்டாள் என்று ஆத்திரமுற்ற வாசு, ஒரு ஏமாளியைப்போல் அவளுக்காக இவ்வளவு நேரம் காத்திருந்த அவமானத்தால் திடீரெனச் சினம் மிகுந்து அந்த இரண்டு சோபாக்களின் இடையே இருந்த டீபாயைக் காலால் எற்றினான்.
வெள்ளையும் கறுப்புமாய்ச் சதுரங்கக்காய்கள் லினோலியம் விரிக்கப்பட்ட தரையில் சிதறி உருண்டன.
தனது ஆத்திரத்தைத் தானே சமனம் செய்துகொள்ள வேண்டி அந்த சோபாவில் சாய்ந்து கண்களை மூடினான் வாசு.
அமைதியான அந்த வினாடிகளில் அவனது செவிகளில் வீணையின் இனிய நாதம் மெல்லென வந்து ஒலித்தது.
அந்த வீட்டின் கீழ்ப் பகுதியில் இரண்டுமணி நேரங்களாக அல்ல, இரண்டு வருஷங்களாக அவனுக்காகக் காத்துக் கிடக்கும் அந்தப் பெண்ணின் – அவன் மனைவி சீதாவின் நினைவு அவனுக்கு இப்போது மிகவும் சாதாரணமாக அந்த வீணையின் நாதத்தால் ஏற்பட்டது.
இரண்டு வருஷங்களுக்கு முன், மனம் போன போக்காய் தனிவாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் வாசுவை ஒரு குடும்பக் கட்டுக்குள் நிறுத்துவதன் பொருட்டு அவனுக்கு மனைவி என்ற புதிய உறவை ஏற்படுத்தினர் அவனது பெற்றோர்.
அந்த முயற்சியை மறுக்காமல் அவன் ஏற்றுக்கொண்டான். அந்த அளவுக்கு அவன் நல்லவனாக இருந்ததில் அவனது பெற்றோருக்கு மெத்த மகிழ்ச்சி.
‘நான் சுதந்திர புருஷனாக இருப்பதைத்தவிர எந்த விதத்தில் யாருக்குத் தீயவன்?’ என்று கேட்கும் அவனது கேள்விக்கு இன்றுவரை அவனது குடும்பத்தில் தக்க பதில் சொல்ல யாரும் முன் வர வில்லை.
சாமர்த்தியமாகவும் சாதுர்யமாகவும் -பூர்வீகச் சொத்து எவ்வளவோ இருந்தும் அவற்றை எதிர்ப்பார்க்காமல் -சுதந்திரமாக ‘பில்டிங் காண்ட்ராக்ட்’ தொழிலில் இவ்வளவு சம்பாதித்திருக்கும் தனது மகனை எண்ணி அவன் தந்தைக்கு எவ்வளவு பெருமிதமிருந்தும் வாசுவின் கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறை ஒன்றே அவருக்கு பெருங் குறையாக இருந்தது.
மனைவியென்று ஒருத்தி வந்தால் அவன் மாறுவான் என்று நம்பியே சீதா அவனுக்கு வாழ்க்கைத் துணையாக்கப்பட்டாள். இன்னும்கூட அவன் அவ்விதமே மாற்றமில்லாமல் இருக்கிறான் என்றால் அதற்கு அவளே பொறுப்பு என்று தீர்மானம் செய்து விட்டார்கள் அவர்கள்.
அவள் என்ன தீர்மானத்திலோ, தன்னை அவன் பொருட்படுத்தாதது போலவே அவனது நடவடிக்கைகளை தானும் பொருட்படுத்தமல் தனி வாழ்க்கை நடத்தி வருகிறாள்.
தனி வாழ்க்கையா?
இணைந்து கலந்து இரண்டு ஆத்மாக்கள் இருவேறு உலகங்களில் பிரிந்து கிடந்தாலும் அந்த அனுபவமே தாம்பத்யம் தான்! இரண்டு ஆத்மாக்கள் சஙகமமில்லாமல் உடல்கள் என்னதான் ஒட்டிக் கலந்து உறவாடியபோதிலும் அந்த வாழ்வே ஒரு தனி வாழ்க்கைதான்.
அவ்விதம் ஒரே வீட்டில் வாழ்ந்தும், கணவன் கூப்பிட்ட மாத்திரத்தில், ஒவ்வொரு விநாடியும் அழைப்பை எதிர் நோக்கிக் காத்திருந்தவள் போன்று ஓடிவந்து எதிர்நின்றும் அவன் விரும்புவதை விரும்பியவண்ணம் அளித்துப் பணிவிடை செய்தும் ஒரு ஹிந்து மனைவியின் பண்புகளோடு வாழ்க்கை நடத்தி வந்தாலும், அவளது வாழ்க்கை தனிமைப் பட்டுக் கிடப்பது போன்ற ஒரு அமைதியான சோகம் சீதாவின் விழிகளில் நிரந்தரமாகப் படிந்திருந்தது.
எத்தனையோ நாட்களில் இரவில் வெகுநேரம்வரை ஆண்களும் பெண்களுமாய் அந்த வீட்டின் மாடிப் பகுதியில் அவனோடு குழுமியிருந்து கும்மாளமடித்துக் கொண்டிருந்த நேரங்களில் சமையற்காரப் பாட்டி மனம் பொறுக்காமல், “இப்படிக் கூட ஒரு கூத்து உண்டோ ?” என்று வியப்பது போல் பொருமியபோது, வாழ்க்கையின் கோலங்களை விலகி நின்று ரசிக்கும் ஒரு ஞானியைப்போல் புன்முறுவல் காட்டிய தல்லாமல், ஒரு வார்த்தை பாட்டியோடு சேர்ந்து பேசியதில்லை சீதா.
சீதாவைப்பற்றி மிகவும் சாதாரணமாக எண்ணிய வாசு, சீதா என்ற பெயரில் ஒரு சாதாரணப் பேதையைத் தான் கண்டான். தனக்கு மனைவியாய் வாய்த்த அந்தப் பெயரில் அவன் அறியாமல் ரகசியமாய் மறைந்துகிடக்கும் மகத்தான அர்த்தங்களை அவன் கண்டானில்லை. இப்போது அவன் அவளை நினைத்ததற்கு நேரிடையான ஒரு காரணமுண்டு.
இன்று காலை அவன் அழைத்ததன் பேரில் அவள் மாடிக்கு வந்திருந்தாள். அவனது உடைகளையெல்லாம் சலவைக்குப் போடுவதற்காக – அந்த அழுக்குகளை சுமந்து செல்ல அவள் வந்திருந்தாள். அப்போது அழுக்கோடு அழுக்காய் அவனது கோட்டுப் பையில் நேற்று இரவு அந்த எவளோ ஒரு மிஸ் அவனிடம் கோடுத்திருந்த விசிட்டிங் கார்டை வைத்த நினைவு – அதை வைக்கும்போது எந்த நிலையில் இருந்தானோ அதே நிலையில் தற்சமயம் இருக்கும் அவனுக்கு நினைவில் வந்தது.
வீணை ஒலியைத் தொடர்ந்து சீதாவும், சீதாவைத் தொடர்ந்து தனது அழுக்குகளும், அந்த அழுக்கில் ஒன்றாய் அந்த மிஸ்ஸின் விசிட்டிங் கார்டும் தனது நினைவுக்கு வந்ததையெண்ணித் தானே சிரித்துக் கொண்டான்.
அருகிலிருந்த ‘காலிங்’ பெல்லை அவன் அழுத்தினான்; வீணை இசை நின்றது.
மனைவியைக்கூட மணியடித்து அழைக்கும் பழக்கத்திற்குக் காரணம் அவன் எதை முன்னிட்டும் அந்த வீட்டின் கீழ்பகுதிக்கு பிரவேசிப்பதில்லை என்று தீர்மானம் செய்திருந்ததுதான். அதற்குக் காரணம், தனக்கு உடன்பாடில்லாவிட்டாலும் பிறர் உணர்ச்சிகளை மதிக்கும் நாகரிகம் அவனிடம் இருந்ததுதான்; ஒரு முறை செருப்புக் காலோடும், சிகரெட்டுக் கையோடும் உள்ளே நுழைந்த பொழுது, இந்திய நாகரிகமே ஒரு பெண்ணுருவில் வந்து எதிரில் நின்றது போல் அவள் மிகுந்த கோபத்தோடு அவனைத் தடுத்து நிறுத்தி, ‘இது பூஜை அறை’ என்று கூறியது தான். தனது இங்கிதமற்ற செயலுக்கு வருந்தியவன் போல். ‘ஐ யாம் ஸாரி’ என்று முனகிக்கொண்டே திரும்பி வந்த பிறகு இந்த இரண்டு வருஷக் காலத்தில் அவனை யாரும் அங்கே அழைத்ததுமில்லை; அவன் போனதுமில்லை. அப்படிப் போயிருந்தாலும் துளசி மாடமும், பூஜை அறையும், சாணி மெழுகலும், சாயக்கோலமும் அவனுக்குப் பிடித்திருக்காது.
அவனுக்கு அவள் தேவையான பொழுது இருந்த இடத்திலிருந்து அவளை அழைக்க இந்த நவீன காலத்தில் வசதிகளா இல்லாமல் போயின?
அதோ மாடிப்படிகளில் மெட்டின் ஒசை ஒலிக்க அவள் வந்து எதிரே நிற்கிறாள்.
அப்போது அங்கு வீசிய வாடையிலிருந்து அவனது நிலையை அவள் ஊகித்துக்கொண்டாள். முகத்தில் ஒரு சுளிப்பு இருக்கவேண்டுமே! புன்னகையோடு எதிரே நிற்கும் மனைவியை சிவந்த விழி திறந்து பார்த்துப் புன்னகை புரிந்தான் வாசு.
“சலவைக்குத் துணி போடறச்சே பாக்கெட்டெல்லாம் பார்க்கணும்னு சொல்லி இருக்கேனா இல்லையா?”
“ஆமாம், சொல்லியிருக்கேள்.”
“இன்னிக்குப் பார்த்தியா?”
“பார்த்தேன் . . இதுதான் இருந்தது. கேக்கும்போது தருவோம்னு பத்திரமா எடுத்து வைச்சேன் ” என்று அவனிடம் அவள் நீட்டிய அந்த விஸிட்டிங் கார்டை ஒரு முறை பார்த்துவிட்டு அவளை நோக்கித் தலைநிமிர்ந்து, “தாங்க்ஸ் . .” என்று அவன் நன்றி தெரிவித்ததும் ஒரு புன்முறுவலால் அவனுக்குப் பதிலளித்து விட்டு அவள் திரும்பினாள்.
“சீதா . . .” என்ன நினைத்தோ அவளை அழைத்தான்.
அவள் நின்றுத் திரும்பி அவனைப் பார்த்தாள்.
“இங்கே வா” என்று அவன் அவளை அருகே அழைத்தான். அவள் அருகே வந்ததும், ” நீ தான் உங்க ஊர்லே பத்தாவது வரைக்கும் படிச்சிருக்கியே . . எங்கே இதைப்படி” என்று அவளிடம் அந்த விஸிட்டிங் கார்டைக் கொடுத்தான்.
“மிஸ் சுகுணா – இங்கிலீஷ் லெக்சரர்” என்று பெண்கள் கல்லூரி ஒன்றின் பெயரையும் சேர்த்துப் படித்தபின், அதிலிருந்த அவள் வீட்டு டெலிபோன் எண்ணையிம் வாசித்துக் காட்டினாள் சீதா.
அதைப் படித்த பின்னர் அவள் முகத்தில் ஏதேனும் சலனமிருக்கிறதா என்று கூர்ந்து பார்த்தான் வாசு. வழக்கம் போன்ற புன்னகையோடு எந்த விதத்திலும் பாதிக்கப்படாத உணர்ச்சிகளோடு அவள் நின்றிருப்பதைப் பார்த்த வாசுவுக்கு, “இவளால் எப்படி இவ்விதம் இருக்க முடிகிறது?” என்ற எண்ணம் முதலாக எழுந்தது.
அவன் அவள் கண்களுக்குள் கூர்ந்து பார்த்தான். அதிலே ஆழ்ந்து துயிலும் சோகம் அவனுக்குக் தெரிந்ததோ இல்லையோ? இவளிடம் தனக்கு ஒர் ஆழ்ந்த லயிப்பு இல்லாமல் போனதன் காரணத்தை அவன் எண்ணிப் பார்த்தான். அதைத் தொடர்ந்து தன்னிடம் இவளுக்கு ஏதேனும் லயிப்பு இருக்கிறதா என்று சிந்தித்துப் பார்த்தான். ‘லயிப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் சட்டபூர்வமாய் இவள் என் மனைவி,’ என்ற மூன்றாம் பட்சமான, ஆனால் மிகவும் முரட்டுத் தனமான ஒரு பிடிப்பைப் பற்றி ஆராய்ந்துப் பார்த்தான்.
வெகு நேரமாய் ஒரு துணையை நாடிக் காத்திருந்து வெறுப்புத் தட்டிய அவனுக்கு ஏதோ ஒரு துணை தேவைப் பட்டது. எனவே அவளை அங்கே உட்காரச் சொல்லிப் பணிந்தான்.
அவள் அவன் எதிரே இருந்த மற்றொரு சோபாவில் அமர்ந்தாள். கீழே இறைந்து கிடந்த சதுரங்கக் காய்களில் ஒன்று அவள் பாதத்தில் தட்டுப்பட்டது. அதை அவள் கையிலெடுத்து குனிந்த தலையோடு பார்த்துக்கொண்டிருந்தாள்.
“அது என்ன சொல்லு, பார்ப்போம்?” என்று ஒரு குழந்தையைக் கேட்பதுபோல் அவன் கேட்டான்.
அவள் தனது பெரிய விழிகளைச் சற்றே உயர்த்தி அவனைப் பார்த்துப் பதில் சொன்னாள்: “செஸ் காய்ன்”.
“ம்ஹ்ம், ” என்று அவள் ஞானத்தை சிலாகித்துவிட்டு, “அது என்ன ‘காய்ன்’னு தெரியுமோ?” என்று கேட்டான்.
“வய்ட் பிஷப்.”
“உனக்கு செஸ் விளையாடத் தெரியுமா?”
“சுமாராகத் தெரியும்.”
“லெட் அஸ் ஸீ. போர்டை எடுத்து வைச்சி அடுக்கு பார்ப்போம்” என்று கூறியபின் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டான் வாசு.
அவள் குனிந்து தரையில் கிடந்த அந்தச் சதுரங்கக் காய்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கையில் அவளையே அவன் பார்த்துக்கொண்டிருந்தான். சில விநாடிகளுக்குப் பிறகு அவள் அழகைத் தான் ரசித்துக் கொண்டிருப்பதாக அவன் உணர்ந்தான்.
டீபாயின்மீது சதுரங்கப்பலகையில் இரண்டு தரப்பிலும் காய்களை அணிவகுத்து நிறுத்திவைத்தபின் ‘அவள் காய்களைச் சரியாக அடுக்கிவைத்திறாளா?” என்று ஒரு முறை பரிசீலனை செய்து பார்த்துவிட்டு, ‘உனக்கு எது? பிளாக் ஆர் வய்ட்?” என்று கேட்டான்.
“பிளாக்’ என்று சொல்லி அவன் தனது காயை நகர்த்துவதற்காக அவள் காத்திருந்தாள்.
அவன் ஒரு முறை காய் நகர்த்தியபின் பதிலுக்கு அவள் நகர்த்தினாள். இவ்விதம் மாறி மாறி நான்கு ‘மூவ்’கள் ஆயின.
அவன் அவளிடம் கேட்டான்: “நீ ஏதாவது தியரி படிச்சிருக்கியா?”
“இல்லே . . எப்பவோ விளையாடின பழக்கம்தான்.”
அப்போது டெலிபோன் மணி அடித்தது. இரண்டு மூன்று முறை அந்த ஓசையைப் பொருட்படுத்தாமல் ஆட்டத்தில் முனைந்திருந்தான் வாசு.
“அது யாருன்னு கேளு, ” என்று அவளிடம் சொல்லி அனுப்பினான். சீதா எழுந்துச் சென்று டெலிபோன் ரிஸீவரைக் கையிலெடுத்தாள்.
“ஹலோ . . எஸ் . . எஸ் . . மிஸ்டர் வாசு’ஸ் ஹவுஸ் . . ஐ ஆம் ஹிஸ் வய்ப் . .சொல்றேன் . . நோ மென்ஷன் பிளிஸ் ‘ என்று ரிஸீவரை வைத்துவிட்டு வந்த சீதா முகத்தில் எவ்வித சலனமுமில்லாமல் அவனிடம் தெரிவித்தாள்.
“மிஸ் சுகுணா . . நேத்திக்கு எங்கேயோ பார்ட்டியிலே சந்திச்சேளாம். இன்னிக்கு மூணு மணிக்கு வர்ரதா சொல்லி இருந்தாளாம். காலேஜுலே ஏதோ திடீர்னு வேலை வந்துடுத்தாம் – இப்ப உடனே வராளாம் ” என்று சொல்லிவிட்டு ஆட்டத்தைத் தொடர்வதற்காகச் சோபாவில் அமர்ந்தாள் சீதா.
அவள் தன் காயை நகர்த்திய பிறகும்கூட அவளையே அவன் வெறித்துப் பார்த்தவாறே உட்கார்ந்திருந்தான்.
“உங்க மூவ்தான் ” என்று அவள் அவனுக்கு நினைவூட்டினாள். அதை காதில் ஏற்றுக் கொள்ளாமலேயே அவன் அவளைக் கேட்டான்.
“நீ என்னைப்பத்தி என்ன நினைக்கிறே?”
“என்ன நினைக்கணும்? நீங்க என்னைக் கல்யாணம் பண்ணி இருக்கறவர் – அதாவது என்னோட புருஷன்னு நினைக்கிறேன்.”
அவன் நெற்றியைச் சொறிந்துகொண்டு தலை குனிந்தான். சிறிது நேரம் கழித்து மீண்டும் அவன் கேட்டான்: “என் மேலே உனக்கு ஏதாவது கோபம் . . ?”
“இல்லே . . .”
“வருத்தம்?”
“ம்ஹ்ம் . . ”
“கவலை?”
“இல்லை.”
“ஏன் இல்லை?”
“ஏன் இருக்கணும்?”
– அவனது கேள்விகளுக்கெல்லாம் அவளால் பதில் சொல்ல முடிந்தது. அவனது கேள்விகளுக்குப் பதிலாய் இன்னொரு கேள்வியையே அவள் திருப்பிப் போட்டபொழுது அந்தக் கேள்விக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை.
‘இவள் தன்னைப்பற்றி என்னதான் நினைக்கிறாள்’ என்று அறியத் துடிக்கும் அவனது ஓர் ஆர்வத்திற்கு, ‘ஒன்றுமே நினைக்கவில்லை’ என்ற பதில் உகந்ததாய் இல்லை. அப்படியொரு பதில் அவளிடமிருந்து வரும்பொழுது இவள் தன்னால் எப்படிப்பட்ட மறைவான துயரத்தை அனுபவித்து எவ்வளவு கொடிய மர்மமான பகைமையையும் வளர்த்துக் கொண்டிருக்கிறாள் என்று அறிய முடிந்தது. இன்னும்கூட ‘என்னைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்ற கேள்வியை அவள் கேட்பாளா என்று அவன் ஏங்கினான். அப்படிக் கேட்கவேண்டுமென்ற ஓர் உணர்வுகூட அவளிடம் இல்லை என்று புரிந்து கொள்கையில் அதில் விளைகின்ற ஒரு சூன்யமான, கசப்பான உணர்ச்சியை அவனால் விலக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் அவன் தவித்தான். உண்மையில் அந்த உணர்ச்சி அவனால் ஏற்க முடியாததாகவும் விலக்க முடியாததாகவும் அவனை முற்றுகையிட்டு விலகாமலும் சேராமலும் வியூகம் அமைத்திருந்தது.
‘நான் அழைத்தபோது இவள் வந்திருக்கிறாள் . . நான் அமரச் சொன்னால் அமர்கிறாள். போகச் சொன்னால் போகிறாள். சிரிக்கச் சொன்னால் சிரிக்கிறாள். ஆனால் இவள் என்னை எதுவும் சொல்வதுமில்லை . . இவளுக்காக நான் எதுவும் செய்வதுமில்லை . . இவள் என்னால் ஆக்கிரமிக்கப்பட்டவள் . . இவளுக்கு என்னிடம் அன்பு இல்லை; பகையுமில்லை. அன்பு செலுத்தவும் பகைமை பாராட்டவும் கூட ஒருவகைப் பற்று வேண்டும். இவள் என்னிடம் பற்றற்று வாழ்கிறாள். . . ”
“என்னைப்பற்றி நீ கவலைப்படாத மாதிரி – உன்னைப் பத்திக் கவலைப் படாம நானும் இருக்கணும்னு நெனைக்கிறியா? அது உனக்கும் ரொம்ப செளகரியமா இருக்கா? என் இஷ்டப்படி நான் இருக்கிறதைப் பத்தி நீ கவலைப் படாமல் இருக்கிறதற்கு அர்த்தம் – உன் இஷ்டப்படி நீ இருக்கணும்கிறத்துக்குத் தானே?” என்று மது வெறியில் அவள் மனதைத் தைப்ப்துபோல் கேட்டான் வாசு.
அவள் கண்கள் அந்த விநாடியில் கலங்கின. எனினும் அவள் அழவில்லை. “இதுதான் பெண்ணின் தலைவிதி. எப்படி யிருந்தாலும் கெட்ட பெயர்தான்!” என்று தனக்குள் முனகிக்கொண்டாள் சீதா. பின்னர் சொன்னாள்: “நான் ஒரு ஹிந்துப் பெண். யாரும் யாரையும் கெட விடறதில்லெ . . .கெடறவாளை யாரும் ஒண்ணும் பண்ணவும் முடியாது.”
அவளது வார்த்தைகளைக் கேட்டு அவனது சிந்தனை கிளர்ச்சியுற்றது. எழுந்து சென்று மேலும் ஒரு கிண்ணம் மது அருந்த எண்ணி எழுந்தான்; பிறகு ஏனோ ‘வேண்டாம்’ என்று முகத்துக்கு நேரே தானே கை வீசி அந்த எண்ணத்தை விரட்டிவிட்டு உட்கார்ந்தான் வாசு.
“எஸ் . . லெட் அஸ் பிளே . . ” என்று வெகுநேர மெளமான சிந்தனைக்குப்பின் ஒரு பெருமூச்சுடன் கூறினான் வாசு.
“உங்க மூவ்தான்” என்று அமைதியாய்ப் பதில் சொன்னாள்.
‘இவளை ஆட்டத்திலாவது வெல்ல வேண்டும்’ என்ற முனைப்பில் காயை நகர்த்தலானான் வாசு.
சீதா தனது சக்தி வாய்ந்த காய்களை எல்லாம் ஒவ்வொன்றாய் அவனுக்குப் பறி கொடுத்துக் கொண்டிருந்தாள். வாசுவின் காய்கள் முன்னேறி முன்னேறி அவளது காய்களை வெட்டி வெட்டி எடுத்துகொண்டிருந்தன.
திடீரென்று சீதா அவனுடைய ஒரே ஒரு ‘காய்’னை எடுத்து, “செக் அண்ட் மேட்’ என்று ஆட்டத்தை முடித்தாள்.
வாசு, அவனது ஒவ்வொரு காய்க்கும் செக்கிலிருந்து தனது ராஜாவை விடுவிக்க ஏதாவது வழி இருக்கிறதா என்று பார்த்தான். அவை யாவும் முற்றுகையில் இருந்தன. அவனது காய்கள் முன்னேறி இருந்தது உண்மையே; அவளது சக்தி மிக்க காய்களை எல்லாம் அவனிடம் அவள் பறி கொடுத்திருந்ததும் வாஸ்தவம் தான். ஆனால் அவனது ராஜா அவளது முற்றுகையில் சிக்கியிருந்தது எல்லாவற்றையும் விட உண்மை.
‘வெல்டன் சீதா!” என்று அவளது தோளில் உற்சாகமாய்த் தட்டினான் வாசு.
அவள் எப்போதும் போல் அமைதியான புன்னகையே பூத்தாள்.
அப்பொழுது கீழே இருந்து ‘காலிங் பெல்’லின் ஓசை கேட்டது. சீதா எழுந்தாள்.
“சீதா . . அவளாத்தான் இருக்கும். நான் இல்லேன்னு சொல்லிடு” என்று வாசு பயந்துகொண்டு பொய் கூறியதும், அவள் ஒரு கசந்த புன்னகையோடு மாடிப் படி இறங்கப் போனாள்.
“அவளை அனுப்பிவிட்டு நீ வா ” என்று கூறியபின் வாசு இரண்டாவது ஆட்டத்திற்காகச் சதுரங்கப் பலகையில் காய்களை அடுக்கலானான்.
சற்று நேரம் கழித்து மாடிப்படிகளில் ஒலித்த மெட்டியின் நாதம் கேட்டு அவன் உடல் சிலிர்த்தது. அவள் அவன் எதிரில் வந்து நிற்கையில் வாசுவின் விழிகளில் இதுவரை அவள் சந்திக்காத ஒரு புதிய உணர்ச்சி மின்னியது. ஆனால் அவளது விழிகளில் நிரந்தரமாகப் படிந்திருந்த அந்தச் சோகம் மட்டும் மாறவே இல்லை.
அவன் அவளை விளையாடச் சொன்னான்; அவள் விளையாடினாள்.
(எழுதப்பட்ட காலம்: 1966)
நன்றி: சுயதரிசனம் (சிறுகதைத் தொகுப்பு), ஜெயகாந்தன் – எட்டாம் பதிப்பு: ஜனவரி 1994 – மீனாட்சி புத்தக நிலையம், மதுரை – 1