மீன்கள் இல்லாத தொட்டியில் மீன்களை…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 17,378 
 
 

படுத்து இருக்கிற கட்டில் பக்கம் இப்படி ஒரு ஜன்னல் இருப்பது எவ்வளவு நன்றாக இருக்கிறது. கண்ணாடிக் கதவுகள். ஆனால், அதைக்கூட சாத்திக்கொள்வது இல்லை. என்னதான் மழை என்றாலும், ஜன்னல் கண்ணாடியில் வழிகிற மழைத் துளியும், பின் வீட்டு வாழை இலையில் நேரடியாக விழுந்து தெறிக்கிற மழைத் துளியும் ஒன்றா?

வாழைப் பூவின் மடலும் கருநீல நிறமும் ஏற்கெனவே அழகு. இந்த இரண்டு மூன்று நாட்களின் மழை அதைக் கழுவிக் கழுவி மேலும் அழகாக்கி இருந்தது. இப்படி ரொம்ப அழகாக இருந்தால், எதுவுமே ஒட்டாமல் உருண்டு போய்விடுமோ? வாழைப் பூவில், வாழை இலையில் எல்லாம் நனைந்த அடையாளம் இல்லை. நனைந்ததைவிட, இப்படி நனைந்தும் நனையாமல் இருப்பதுதான் ரொம்ப அழகுபோல.

கொஞ்ச நேரத்துக்கு முந்தி கண்ட கனவில் வந்த மஹேஸ்வரி அழகாகத்தானே இருந்தாள். அவள் நனைந்து இருந்தாளா, இல்லையா? அவள் நனையாத மாதிரியும், அவள் உட்கார்ந்து இருந்த கோயில் மண்டபம் நனைந்த மாதிரியும்தானே இருந்தது. கல் தூண்களுக்கு உள்ளே இருந்து எப்போதும் ஈரம் கசிந்துகொண்டே இருக்குமோ? முதன்முதல் செதுக்கத் தொடங்கின கையும் உளியும், ஒரு பெரும் தாகத்தில், இப்படிக் கல்லுக்குள் ஓடுகிற நதியைத் திறந்துவிடத்தான், ஒவ்வொரு பாறையாக அலைந்து அலைந்து சுனை தேடியதா?

முதலில் நான் மட்டும்தானே தொண்டை நரம்பு புடைக்க, அந்த வெண் சங்கை எடுத்து ஊதிக்கொண்டு இருந்தேன். ஏதோ கோயில் சங்கு மாதிரி, தாமிரப் பூண்கூட உதடுகளில் பதிந்த ஞாபகம் வருகிறது. அவ்வளவு கன்னம் உப்ப, நுரையீரலின் அத்தனை காற்றையும் வாய்க்குக் கொண்டுவந்து ஊதினாலும், ஏன் சத்தமே வரவில்லை? ஒரு சேகண்டிச் சத்தமும், வாங்கா ஊதுகிற சத்தமும் கேட்கிறதே தவிர, அவர்கள் எங்கு மறைந்து இருக்கிறார்கள்? இப்போது நகரா வேறு தொம்தொம் என்று அதிர்கிறது. நகரா அடிப்பவரும் வாங்கா ஊதுகிறவரும் என்னால் சங்கு முழக்க முடியவில்லை என்றால், என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்? சேகண்டியின் வெண்கலச் சத்தம் லேசாக என்னைப் பார்த்துச் சிரிக்கும் இல்லையா?

எவ்வளவு மூச்சைத் தொலைத்தாலும், இரண்டு கைகளாலும் பொத்தி உயர்த்தி இருக்கிற சங்கு, இதுவரை பெருக்கின மொத்த ஓங்காரத்தையும் திரும்பப் பெற்றுக்கொண்டு, தன் ஆதிப் பெருங்கடலின் அடி ஆழ மணலுக்குள் புதைந்துகிடக்கத் தயாராகிவிட்டதா என்ன?

எனக்குக் கண்ணீரை அடக்க முடிய வில்லை. முகச் சுருக்கத்தில், ஏதோ ஒரு வளைகோட்டில் பிசுபிசுத்த துளி இறங்கி, உதட்டில் உப்புக் கரிக்கிறது.

அந்த உப்புக் கரிப்புக்கு ஊடேதான் மஹேஸ்வரி வந்திருக்க வேண்டும். அதுகூட ஓர் உத்தேசம்தான். நிச்சயம் இல்லை. மஹேஸ்வரி சிரித்துக்கொண்டே வருகிறாள். அவளுக்கு தலைக்கு மேலும், பாதங்களுக் குக் கீழும் நீலக் கடல் இருக்கும் என்று தோன்றுகிறது. ஒரு பிரம்மாண்ட மீன் தொட்டியில் நீந்தி வரும் ஒற்றைத் தங்க மீன்போல அவளுடைய அசைவு நேர்த்தியாக இருந்தது. ஒற்றையாக அழகாக அசைந்து வந்ததெல்லாம் சரி. அதேபோல ஒற்றையாக அசைவற்று மறைந்துபோய்விட்டதுதான் துயரம்.

முன்பெல்லாம்கூட, குற்றாலிங்கம் அப்படி நெருக்கம் என்று சொல்ல முடியாது. மஹேஸ்வரி இப்படிப் பண்ணிவிட்டாள் என்று யாரோ சொல்லி என்னைப் பார்க்க வந்தவன், என்னுடன் அன்றைக்கு ரொம்ப நேரம் இருந்தான். எல்லோரும்கூடக் கேட்பார்கள், அவளுக்கு அப்படியா இப்படியா, கூடப் படித்தவர்கள் ஏதாவது தகவல் சொன்னார்களா, அது எப்படி ஒரு கடிதம்கூட எழுதிவைக்காமல் இந்த முடிவை எடுத்து இருப்பாள் என்று வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்வார்கள்.

குற்றாலிங்கம் முந்தின பக்கங்களைத் திருப்பாமல், அடுத்து வரும் பக்கங்களை யூகிக்காமல், இப்போது வாசிக்கும் பக்கத்தின் வரிகளை மட்டும் நம்புவதுபோல என்னிடம் அன்றைக்குப் பேசினான். எவ்வளவோ புத்தகங்களைப் படிக்கிறவன் என்றாலும், அவனுக்கு இசைபற்றி ஆனா, ஆவன்னாகூடத் தெரியாது என்று சொல்லி, நான் அரைகுறையாகப் பேசுவதை எல்லாம் ஒரு வியப்போடு கேட்டான்.

தற்செயலாக, நான் கண்டசாலாவின், ‘துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே’ பாடலை லேசாகப் பாடியிருப்பேன்போல. உங்களுக்குக் கண்டசாலா பிடிக்குமா என்று கேட்கவில்லை. தனக்குப் பிடிக்கும் என்றும் காட்டிக்கொள்ளவில்லை. அடுத்த தடவை பார்க்கும்போது, கண்டசாலா பாடல்கள் அடங்கிய ஓர் அருமையான சி.டி. வாங்கி வந்து கொடுத்தான். இதே மாதிரி கட்டிலில் நானும், எதிரே நாற்காலியில் அவனும் இருந்தோம். என் பக்கத்தில் கட்டில் மெத்தையில் பூப்போல அந்த கண்டசாலா சி.டி-யை வைத்துவிட்டு, வேறு எதையோ பேச ஆரம்பித்துவிட்டான்.

ஞாபகம் வருகிறது. அவன் வீட்டில் வைக்கப்போகிற இரண்டாவது பெரிய மீன் தொட்டியைப்பற்றிய பேச்சாக அது இருந்தது.

தப்பித் தவறி, “உங்க ஹாபியா அது?” என்று கேட்டுவிட்டேன்.

குற்றாலிங்கம் அவ்வளவு நேராக என் கண்களைப் பார்த்து அதற்கு முன்பு பேசியது கிடையாது. என் முகத்தை உறிஞ்சித் துப்பப்போகிற பார்வையுடன், “அது என் தியானம்” என்றான். என் கண்களைவிட்டுப் பெயராமல், “என் தியான முறை” என்றான். இதைச் சொல்லும்போதே குற்றாலிங்கம் தியானத்தில் இருப்பதுபோலத்தான் இருந்தான். அவனைவிடவும் அக் குரல் தியானத்தின் குரலாக இருந்தது.

இதுவும் அவன் சொன்னதுதான். ‘முதலில் தொட்டிக்குள் நீந்தும் மீனைப் பார்த்துப் பழகுங்கள் சுந்தரம். கொஞ்ச நாள் ஆகட்டும். தொட்டி இல்லாமல் நீந்துகிற மீன்களை உங்களால் பார்க்க முடியும். அதேபோல, மீன்கள் இல்லாத தொட்டியில் மீன்களைக்கூட…’ இதைச் சொல்லும்போது குற்றாலிங்கம் அவனுடைய வீட்டு முன்னறையில் வைத்திருந்த நீண்ட மீன் தொட்டியின் முன்னால் நின்றான். மிகக் குறைந்த விளக்கு வெளிச்சத்தில் அவனுடைய குறைந்த அசைவுகள் ஒரு நீர்த் தாவரத்தினுடையதுபோல இருந்தன. அதையே அவனிடம் சொன்னேன், “லிங்கம் உங்களைப் பார்க்கிறதுக்கு ஒரு கடல் பாசி மாதிரி இருக்கு.”

குற்றாலிங்கம் அவன் நின்ற இடத்தில் இருந்து, நான் உட்கார்ந்து இருக்கும் நாற்காலிக்கு வந்தான். சற்றுக் குனிந்து என் இரண்டு புஜங்களையும் இறுக்கமாகப் பிடித்து உலுக்கினான். ஒன்றும் சொல்லாமல் என்னைவிட்டு நகர்ந்து போய்விட்டான்.

சற்று முன்பு நாங்கள் அருந்திய பீங்கான் தேநீர்க் கோப்பைகளை குற்றாலிங்கத்தின் மனைவி வந்து எடுத்துக்கொண்டே, “அவங்க எங்கே வெளியிலே போகிறாங்க?” என்று கேட்டார்.

“தெரியாதே’ என்றேன்.

“தெரியாதா?” என்று கேட்கும்போதும் அவர் நிமிர்ந்திருக்கவில்லை. கொஞ்சம் குனிந்த, கையில் பீங்கான் கோப்பைகள் உள்ள அவருடைய சிரிக்கிற முகம் ரொம்ப அழகாக இருந்தது. அதை நான் குற்றாலிங்கம் சொல்வதுபோலச் சொன்னால், ‘அந்த முகத்தில் ஒரு மீன் நீந்திக்கொண்டு இருந்தது’.

குற்றாலிங்கம் அன்றைக்கு என்னிடம் சொல்லாமல்கொள்ளாமல் வெளியே போனதுபோல, நானும் மழையில் நனைந்த வாழை இலையையும் பூவையும் பார்த்த கண்ணோடு அப்படியே இப்போது வெளியே போய்விட வேண்டும் எனத் தோன்றியது.

சொல்லாமல்தான் போக வேண்டியது இருக்கிறது.

நிறைய விஷயங்களைச் சொல்லத்தான் முடியவில்லை. மத்தியானச் சாப்பாட்டுக்கு மேல், “கொஞ்சம் குறுக்கைச் சாய்ச்சுக்கிடுதேன் சாமி. இல்லாட்டா, சாயுங்காலம் வண்டி ஓடாது” என்று சொல்லிவிட்டுத் தூங்குகிறவளிடம், மஹேஸ்வரி இப்படிக் கனவில் வந்தாள் என்று சொல்ல முடியுமா?

மானா என்று பேச்சை ஆரம்பித்தாலே அவளுக்கு அழுகை வந்துவிடும். அவளிடம் போய், நான் ஏதோ சங்கை ஊதுகிறேன். ஊத முடியாமல் திணறும்போது மஹேஸு வந்தாள் என்று சொல்ல முடியுமா?

ஆனால், மஹேஸ்வரி அப்படி வந்தது இந்த மழைத் தண்ணீரில் அலம்பி எடுத்தது மாதிரி அவ்வளவு துல்லியமாக இருக்கிறது. எங்கு இருந்து வந்தாள் என்று தெரியவில்லை. தகடுபோல வந்து நிற்கிறாள். ‘அதை என்கிட்டே கொடுங்க அப்பா’ என்று என் கைகளில் இருந்த சங்கை அவள் வாங்குகிறாள். இதுவரை, என் மூச்சால் நிரம்பிக் கனத்துக்கிடந்த சங்கு, அவள் அதை வாங்குகிற நேரத்துக்குள், தன் அத்தனை எடையையும் உதறி, ஒரு இறகைவிடவும் லேசாகிவிட்டது. அவளுடைய முழங்கை இரண்டிலும் வரி வரியாக இருக்கிற பூனை முடியை மீண்டும் இந்தக் கனவில் பார்க்கும்போது, இதுவரைக்கும் உண்டான மூச்சுத் திணறல் ஒன்றுமில்லாதது ஆயிற்று. தொட வேண்டும்போல இருந்தது.

மஹேஸ்வரி கொஞ்சம் தலையைச் சாய்த்திருக்கிறாள். கண்கள் மூடி இருக்கின்றன. இமைகளின் குனிவில், ஏற்கெனவே அடர்த்தியான புருவங்கள் மேலும் அடர்ந்து, பறவைச் சிறகுகள்போல விரிந்து இருந்ததில் ஒரு மாயம் இருந்தது. ‘ஐயா உதடு எனக்குத்தான்’னு அப்படியே இங்கே எழுதிவெச்சிருக்கே’ என்று மஹேஸின் உதட்டைத் தன் விரல்களுக்குள் கூட்டிக் கிள்ளும் அம்மாவிடம், ‘வலிக்கும்மா’ என்று மஹேஸ்வரி கொஞ்சுகிறது ஞாபகம் வருகிறது. அவளின் உதடுகளில் சங்கு பதிந்த முதல் விநாடியில், கல் மண்டபத்தின் வேர் வரை அதிர்கிற மாதிரி பொம்மென்று முழங்கி விம்முகிறது. கல் தூண்களில் இருந்து கல் பூங்கொடி கல் பூ உதிர்க்கிறது. தளக் கல்லில் மலர்கிறது தாமரை இதழ்கள். மறு மூச்சு வாங்கக்கூட, உதட்டில் இருந்து மஹேஸ்வரி சங்கை எடுக்கவில்லை. எத்தனை காலமாகவோ அடைத்துக்கிடந்த ஒலியின் வெளிச்சம் பாய்ந்து பாய்ந்து எல்லா அமைதியையும் நிரப்பிக்கொண்டு இருந்தது. நானும் நிரம்பிவிட்டதுபோலத்தான். நிரம்பியதற்கும் வழிவதற்கும் இடைப்பட்ட விளிம்பின் தளும்பல். மூச்சு அடைக்கிறது. சங்கு ஊத முடியாத அடைப்பு அல்ல; நிறுத்த முடியாத அடைப்பு.

நான் நெஞ்சைப் பொத்திக்கொண்டுதான் தூக்கத்தில் இருந்து முழித்திருக்க வேண்டும். ‘மஹேஸு’ என்று சத்தம் போட்டேனோ என்னவோ. அதற்குள் மழைத்தாரையும் வாழை இலையும் கண்ணில் விழுந்துவிட்டது.

இனிமேல் தாங்காது. எங்கேயாவது போக வேண்டும். எதையாவது பார்க்க வேண்டும். யாரிடமாவது பேச வேண்டும்.

இப்படியே கல்வெட்டாங்குழி வழியாக, எஃப்.சி. கோடவுன் பக்கம் போய், எதிர்ப் பக்கம் சாராள் கல்லூரிக்குப் பின்னால் நடக்க நன்றாக இருக்கும். ஆதி மணலும் மழைத் தண்ணீர் ஓடித் திட்டுத் திட்டாகக் கிடக்கிற சரல் தரையும் கூப்பிடும். செம்மண்ணுக்குள் இருந்து வெளியே வருகிற இரண்டு மண் புழு அல்லது தென்றல் நகர் காலி மனைப் புல்லில் இருந்து தார் ரோட்டுக்கு நகர்கிற ஒரே ஒரு வெல்வெட் பூச்சி இப்படி எதையாவது பார்த்தால் போதும். ஒரு சீனிக் கல் எடுத்து வாயில் போட்டு ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.

பால் பாக்கெட் விற்கிற ஊதா பிளாஸ்டிக் கூடையில், நான்கைந்து பூஞ்செடி நாற்றைவைத்து விற்றுக்கொண்டு தினசரி எதிரே வருவாரே, அவர் இப்போது வந்தால்கூடச் சரிதான். இந்த மத்தியானத்தில் சைக்கிளில் மீன் விற்க வருகிற யாரையும் பார்க்க முடியாது. அவர்களை நாளைக்கு எதிர் பார்க்கிற பூனைக் குட்டிகள் வேண்டுமானால், காம்பவுண்டுச் சுவர்களில் படுத்துக்கிடக்கும். ‘கிறுக்கு மாதிரி மழையோடு மழையாக எங்கே போகிறாய் தனியாக?’ என்று அவை கண்ணைச் சுருக்கி என்னைப்பார்த்துச் சிரிக்கக்கூடச் செய்யலாம்.

அந்த மரமல்லி மரம் ஒரு சீன ஓவியம்போல அழகாகச் சாய்ந்து இருந்தது. நெடுநெடுவென்று வளராமல், மடங்கிக் கிளைவிட்டு, குளக்கரையில் நிற்கிற மரங்கள் தண்ணீர்ப் பக்கம் எட்டிப்பார்க்குமே, அதுபோலக் கொஞ்சமாகத் தன் நிழலைத் தரையில் சரித்துக்கொண்டு நிற்பதைப் பார்க்கத்தான் இந்த வழியாக வந்தேன்போல. ஒவ்வொரு மழைத் துளியும் பூவாக உதிர்ந்தது மாதிரி தரை எங்கும் கை கையாக மரமல்லி. அந்த வெள்ளையும் வாசனையும் இந்தத் தெரு வழியாக நடக்கிற எல்லோ ரையும் தொட்டு இருக்கும். என் வலக் கையை உயர்த்தி முகர்ந்து பார்க்கத் தோன்றியது.

மஹேஸ்வரி வெள்ளை இல்லை. மஹேஸுடைய வாசனையை, மஹேஸின் துணிகளின் வாசனையாக மீட்டுக்கொள்ள என்னால் முடியாது. எந்த வாசனையையும் முந்தி, அவளைச் சுற்றி, அவள் தலைமாட்டில் ஏற்றிவைத்திருந்த பத்திக்கட்டின் வாசனைதான் முதலில் வருகிறது தவிர்க்கவே முடியாமல்.

‘ஐயா, வணக்கம்’ முதலில் வந்த சத்தம் பிடிபடுவதற்குள், ‘நல்லா இருக்கீங்களா ஐயா?’ என்று எதிரே வந்துகொண்டு இருந்த அந்தப் பெண், என் பக்கத்தில் வந்து கேட்டது. முகம் முழுவதும் அப்படி ஒரு சிரிப்பு. கையில் ஹார்மோனியப் பெட்டி மாதிரி ஒரு மீன் தொட்டி. காலித் தொட்டி. நான்கு முக்கிலும் அலுமினியச் சட்டம். ஒரு பக்கக் கண்ணாடியில் சுண்ணாம்புச் சுட்டியோ, சிமென்ட் தெளிப்போ படிந்து இருந்தது. மறுபடியும் தன் காப்பிப் பொடிக் கலர் சுடிதார் சல்வாரைப் பின்னால் வீசிக்கொண்டு, என்னிடம் ஞாபகப்படுத்தியது.

“ஐயா, ஏ ஒன் ஜெராக்ஸ் கடையில இருப்பேன்ல” – அந்தச் சிரிப்பின் நுனி வழியாகவே போய் அடையாளத்தைப் பிடிப்பது எளிதாக இருந்தது.

உடனடியாக, ஒரு சைக்கிளில், பலா மரம்போல அங்கங்கே பால் குவளையும் பாத்திரமும் தொங்க, அதிகாலையில் ஒரு சிறு பெண் செல்கிற காட்சி வந்தது. நடந்து போகும் வழியில், பத்துப் பதினைந்தாகத் தரை இறங்கும் புறாக்களையா, தூரத்தில் பூத்து அசையும் தேக்கு மரத்தையா, எதைப்பார்ப்பது என்று மின்சார டிரான்ஸ்ஃபார்மர் பக்கம், தேர்ந்தெடுக்க முடியாமல் சற்று யோசித்து நின்ற சமயம், இந்தப் பெண்தான் அப்படி சைக்கிளில் சென்றது. அப்போதும் இதே சிரிப்புதான்.

“ஆமாமா. இப்பதான் ஞாபகம் வருது குட்டி”- அவளைப் பார்த்துச் சிரித்தேன்.

“எங்க கடைக்கு ஜெராக்ஸ் எடுக்க வருவீங்களே” மறுபடியும் சொன்னது. எனக்கு மறுபடியும் சைக்கிளும், பால் குவளைகளும், தேக்குப் பூவும், புறாக்களும்தான் ஞாபகம் வந்தன. ஏற்கெனவே வரைந்துவைத்திருக்கிற சித்திரங்களை அழித்துவிட்டு, உடனடியாக வேறு மாதிரி வரைந்துகொள்ள முடியவில்லை.

“சரிதான், சரிதான்” என்று சொன்னேன். அதோடு நிறுத்த முடியாது இல்லையா. “கையில என்ன, மீன் தொட்டியா குட்டி?” என்றேன். திருப்பித் திருப்பி, “குட்டி” என்று சொல்கிறேன் என்று எனக்கும் தெரிந்து, அந்தப் பெண்ணுக்கும் தெரிந்து, இரண்டு பேருமே சிரித்துக்கொண்டோம்.

“பேரு என்னம்மா?” – தலையிலோ, தோளிலோ கையைவைத்தபடி கேட்பதையே மனம் விரும்பியது. அது பதில் சொல்வதற்குள், “இது என்ன இப்படி மீன் தொட்டியோடு கிளம்பிட்டே” என்று மேலும் கேட்டேன்.

“எங்க கடை ஓனர் வீட்டை இடிச்சுக் கட்டுறாங்க. இது வேண்டாம்னு தூரத் தூக்கிப்போடப் போனாங்க.”

இதை அவள் சொல்லி முடிக்கும் முன்பு, “எனக்கு வேணும்னு நீ வாங்கிக்கிட்டியாக்கும்” என்று சொன்னேன்.

இப்போதைய சிரிப்பு அவள் சொன்னதற்கும் நான் சொன்னதற்கும் சேர்த்துச் சிரித்ததுபோல இருந்தது. ஒரு பரிசுப் பெட்டியை என்னிடம் இருந்து பெற்றுக்கொண்டது போலவும், அல்லது எனக்குக் கொடுக்கப்போவதுபோலவும் அந்த மீன் தொட்டியை வைத்துக்கொண்டு நாங்கள் இருவரும் மழை நனைத்த அந்தத் தெருவில் நிற்பது என்பது, என்னைப்போன்ற யாருக்கும் பிடிக்கத்தானே செய்யும்.

காலி மீன் தொட்டியையே பார்த்துகொண்டு இருந்தேன்.

குற்றாலிங்கம் சொன்ன, தொட்டி இல்லாமல் நீந்துகிற மீன்களையும், மீன்கள் இல்லாத மீன் தொட்டிகளில் மீன்களையும் நான் பார்க்கத் தொடங்கிவிட்டதுபோல இருந்தது.

“தொட்டி கிடைச்சுட்டது, சரி. மீனு?” அவள் மீனுக்கு என்ன செய்யப்போகிறாள் என்று தெரிய விரும்பினேன்.

“தொட்டி கிடைச்சது மாதிரி மீனும் கிடைக்கும்” என்று சொல்லிவிட்டு, என்னைப்பார்க்காமல் தலையைக் குனிந்துகொண்டு சிரித்தது. சிரிக்க வேண்டும் என்று தோன்றிவிட்டால், எதற்கு வேண்டுமானாலும் சிரிப்பு வந்துவிடும்போல.

“என்கூட வா, குட்டி” எந்தத் தயக்கமும் இன்றி, இப்போது அதன் தோளில் கையைவைத்துக்கொண்டே சொன்னேன்.

முதன்முறையாகச் சிரிப்பின் சுவடே இல்லாமல், அந்தப் பெண் என்னை ஏறிட்டுப் பார்த்தது. நான் அந்த முகத்தில் மீண்டும் சிரிப்பை நிரப்பிவிட நினைத்தேன்.

“எனக்கு ஒரு ஃப்ரெண்ட் இருக்கான். நிறைய மீன் வெச்சிருக்கான். தருவான்” என்று அவளுடைய தலையில் கைவைத்தேன். நடு வகிட்டுக்கு இரு பக்கமும் முடி சிலும்பிக்கொண்டு இருந்தது.

இரண்டு கைகளாலும் அணைத்து, நெஞ்சுக்கும் வயிறுக்குமாக ஒட்டிவைத்திருந்த அந்த மீன் தொட்டியை வாங்கிக்கொள்ள வேண்டும்போலத் தோன்றியது.

“நான் கொண்டுவாரேனே அதை” என் கைகள் இரண்டையும் நீட்டினேன். சிறு அளவு மறுப்பும் இல்லை. தொட்டி என் கைகளுக்கு மாறி இருந்தது.

இரண்டு பேரும் ஒன்றாகவே நடந்துகொண்டு இருந்தோம். கொஞ்ச நேரம் எந்தப் பேச்சுமற்று. ஈரமான தெரு உலர்ந்து எங்களுக்குப் பின்னால் போய்க்கொண்டு இருந்தது. சில சமயம் இப்படி ஏதோ நிகழ்ந்துவிடுகிறது. எல்லாம். எல்லோரும் காணாமல் போய், நான் மட்டும் மீன் தொட்டியுடன் நடந்து வருவதுபோலத்தான் இருந்தது.

நான் மீன் தொட்டியின் கண்ணாடிச் செவ்வகத்துக்குள் அசையாமல் பார்த்தபடி இருந்தேன். களகளவென்று தண்ணீர் நிரம்பிய சத்தத்துடன் தொட்டி கனக்கிறது போலத் தோன்றியது.

மஹேஸ்வரி அதற்குள் நீந்த ஆரம்பித்திருந்தாள்!

– அக்டோபர் 2010

வண்ணதாசன் என சிறுகதைகள் மூலமும், கல்யாண்ஜி என்று கவிதைகள் மூலமும் தமிழ் இலக்கிய உலகில் அறியப்படும் எஸ். கல்யாணசுந்தரம் (1946) பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மூத்த எழுத்தாளர் தி.க. சிவசங்கரன் அவர்களின் மகன்.தமிழ் இலக்கியச் சூழலில் அனைவருக்கும் நெருக்கமானவர். மிக எளிய, யதார்த்த மனிதர். திருநெல்வேலிக்காரர். ‘’அடுத்து நான் என்ன எழுதப் போகிறேன் என்பது என் முதல் வரிக்குக் கூடக் தெரியாது. எதையும் திட்டமிட்டு வாழ்பவன்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *