மாலதி.. ஐ லவ் யு…

 

சென்னைக்கு நான் வந்த புதிதில் எனக்கு மிக பிடித்த இரண்டு விஷயங்கள். ஒன்று பெசன்ட் நகர் பீச். இன்னொன்று சென்னை சிட்டி பஸ் பயணம். முதலில் சொன்னது எல்லோருக்கும் பிடித்த ஒன்று. இரண்டாவது சொன்னது யாருக்கும் பிடிக்காதது. அந்த கூட்டமும், கண்டக்டரின் கோவமும் தவிர எவ்வளவோ விஷயங்கள் நான் ரசித்தவை. தமிழ் தெரியாத வட நாட்டு முகங்கள், கல்லூரி சிட்டுகள், சென்னை தமிழ், படியில் தொங்கும் காளைகள், கடலை போடும் ஜோடிகள், கல்லூரி கானா பாட்டுக்கள் இன்னும் எத்தனை விஷயங்கள். அதோடு சேர்ந்து நம்மை பார்த்து சிரித்த ஒரு மங்கை சேர்ந்தால் சொல்லவும் வேண்டுமா?

தமிழ்நாட்டில் மின்வெட்டு எப்படி அடிக்கடி வருமோ அது போல அடிக்கடி காதல் வரலாம். ஆனால் அந்த முதல் காதல்…. ஐயோ .. மறக்க இயலாத ஒன்று.. அந்த காதலின் ஆயுள் ஐந்து நாட்களோ? ஐந்து வருஷமோ? அது மனசை விட்டு அகலாது. என் முதல் காதல், என்னையே எனக்கு மறக்க செய்த காதல். இன்று வரை என்னால் மறக்க இயலாத காதல். நான் அபோது பெசன்ட் நகரிலிருந்து தினமும் பஸ்ஸில் சைதாபேட்டை செல்வது வழக்கம்.

முதல் நாள், அவளை நான் முதல் முதலில் பார்த்த நாள். நான் செல்லும் பேருந்து, அவளை ஏற்றி கொண்டபோதையில் சற்று அதிகமாகவே அன்று தள்ளாடியது. இள மஞ்சள் நிற புடவையில், சற்றே படர விட்ட கூந்தலும், மெல்லிய பவுடர் பூச்சும், ஒரு நோட்டும், ஒரு கைப்பையும் அவள் கல்லூரியில் பயிலும் வானவில் என சொல்லிற்று. எனக்கு ஒரு பழக்கம். எனக்கு ஒரு பெண்ணை சைட் அடித்தால், தக்காளி….. அன்னைக்கு அந்த பொண்ணு தான்.. வேற யாரையும் பார்க்க மாட்டேன். அதிலும் ஒரு விளையாட்டு வேறு. அந்த பெண்ணே என்னை பார்த்தாலும், நான் உடனே பார்த்ததும் பார்காத மாதிரி வேறு பக்கம் திரும்பி கொள்ள மாட்டேன். அப்படி அவளை பார்த்துகொண்டே இருந்தபொழுது என்னை சற்று திரும்பி பார்த்தாள். உள்ளுக்குள் ஜிவ்வென்று அவளின் பார்வை எனக்குள் ஊடுருவியது. அந்த சந்தோஷ கணம் தாங்காது நான் என் பார்வையை பின் வாங்கவும், அவள் வேறு பக்கம் திரும்பவும் சரியாக இருந்தது. நான் இறங்க வேண்டிய இடம் வந்ததும், இறங்கிவிட்டு மீண்டும் பார்த்தேன். அவள் என்னை பார்த்து மெலிதாய் சிரித்தாள் . இதை விட ஒரு பையனுக்கு அன்றைய தூக்கமும், வேலையும் கெடுவதற்கு வேறு என்ன காரணம் வேண்டும்.

என்னை உதிர்த்த பேருந்தில் இருந்துகொண்டு
ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்தாய்….
என் உடலை வெளியில் விட்டுவிட்டு என்
இதயத்தை பேருந்தினுள்ளே இழுத்தாய்…

இரண்டாம் நாள், அன்றைய பொழுது காலை ஆறுமணிக்கே விடிந்தது. அட ஆறுமணியிலிருந்து ஒன்பது மணி ஆவதற்குள் எனக்குள்ளே மூன்று வருடங்கள் கடந்துவிட்ட உணர்வு. ஒரு நிமிடம் எவ்வளவு நீளம் என்று அன்று தான் முதல் முதலாய் தெரிந்தது. ஒன்பது மணி பஸ்சுக்கு அரை மணிநேரம் முன்னமே வந்துவிட்டேன். மூன்று டீயும், ஒரு ஆனந்த விகடனையும் கரைத்து குடித்தும் நேரம் போகவில்லை. பேருந்து வந்ததும் ஏறினேன். ஒவ்வொரு முகமாய் தேடியும் அந்த பொன் முகம் காணவில்லை. அடுத்த இரு ஸ்டாப்களில் கூட்டம் ஏறி என்னை ஒரு மூலைக்கு தள்ளி விட்டது.

கடைசி இருக்கையின் அருகில் நின்று கொண்டிருந்த நான் சற்று திரும்பி பார்க்கவும், அவள் கடைசி வரிசையின் எனக்கு அருகிலுள்ள இருக்கையில் இடம் பிடித்து அமரவும் சரியாக இருந்தது. நான் அவளை மிக அருகில் முதல் முதலில் பார்த்தேன். வகிடெடுத்த அழகு கூந்தலும், பன்னீர் ரோஜா நிற சேலையும், அதே நிற பொட்டும், பனியில் நனைந்த ஒரு ரோஜாவே அமர்ந்தது போல இருந்தது. அவள் பர்சிலிருந்து பத்து ரூபாயை நீட்டி, ” எக்ஸ்க்யுஸ் மீ, ஒன் சி ஐ டி நகர் ப்ளீஸ் ” என்று என்னிடம் நீட்டினாள். அவள் கொடுத்த பத்து ரூபாயை நான் வைத்து கொண்டு என்னிடம் இருந்த ஐம்பதை கண்டக்டரிடம் நீட்டி , டிக்கெட்டுடன் சில்லறைக்கு திட்டையும் சேர்த்து வாங்கினேன். டிக்கெட் வாங்கி கொடுத்ததும் “தேங்க்யு ” என்றாள். சொல்லி விட்டு ஒரு சிரிப்பு சிரித்தாள். நான் இறங்கும் வரை பல முறை பார்வையும் புன்னகையும் மாறி மாறி பஸ்சுக்குள் பல ட்ரிப் அடித்தன. அடடா முதல் நாள் சிரிப்பு… அடுத்த நாள் பேசி விட்டேன்… என்ன ஒரு முன்னேற்றம்.

உனது பத்து ருபாய் நோட்டு…
இனி என் சொத்து பத்திரம்…
புன்னகைத்த உன் பூ முகம்… இனி
என் மனதில் கல்வெட்டு சித்திரம்….

மூன்றாம் நாள், இரண்டாம் நாள் போல ஒரு சைதாபேட்டை, ஒரு சி ஐ டி நகரும் என்றில்லாமல் டிக்கெட் எடுக்கும் போது ஒன்று சேர்ந்து இரண்டு சி ஐ டி நகர் என்றானது. இன்றைக்கு ஏனோ ஒரு தைரியம். அவளிடம் கொஞ்ச நேரம் பேசி விட வேண்டுமென்று. அதிலும் இன்று சுடிதாரில் வந்திருந்தாள். இந்த பெண்களுக்கு சுடிதாரில் மட்டும் எப்படி தான் ஒரு ஐந்து வயதை மறைக்கிறார்களோ? எனது பையை அவளிடம் கொடுத்தேன். அதை வாங்கி கொண்டு சிரித்தாள். இது ஒரு பழைய மொக்க ஐடியா என்றாலும், வேறு எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. நானும் சிரித்து விட்டு, ” நீங்க மதுரையா? ” என்றேன். இல்லை.. நான் மாலதி என்றாள். அது ஒரு ஜோக் என்று நான் தெரிந்து கொண்டு சிரிப்பதை விட, அவள் பெயரை சொல்லி இருக்கிறாள் என்கிற சந்தோசமே அதிகமாய் என் முகத்தில் பரவியது.

” ஹல்லோ, உங்க ஊரு மதுரையானு கேட்டேன் …” என்று நானும் வழிந்தேன். ” நோ…. சேலம் …” என்றாள். ஒரு மாம்பழமே என் ஊரு சேலம் என்றது முதல் முதலில்.. அட நானும் சேலம் பக்கத்தில் தான் னு ஒரு பொய்யை சொன்னேன். அவள் முகம் மலர, உண்மையாவா? சூப்பர் என்றாள். இருவரும் சி ஐ டி நகரில் இறங்கியதும், நீங்க எங்கே போகணும் என்றாள். திரும்ப பஸ் பிடித்து வந்த வழியில் சைதாபேட்டை போகணும் என்றேன். அவள் மனதுக்குள் ஏதோ புரிந்தவளாய் சிரித்தது விட்டு சென்றாள்.

மூன்றாவது நாள் என் காதலை ஏதோ மெலிதாய் உணர்த்தி விட்டதை உணர்ந்தேன். அட நானே அவளை நேசிப்பதாய் அன்று தான் உணர்ந்தேன்.

உனது பெயர் மாலதி என்றாய்..
மாலை நேரத்து மதி தான் மாலதி என்றானதோ..?
உனது ஊர் சேலம் என்றாய்..
நீ பிறந்த பிறகே அது மாம்பழ ஊர் ஆனதோ…?

நான்காம் நாள், அவளிடம் கேட்காமலே இரண்டு சி ஐ டி நகருக்கு டிக்கெட் எடுத்து ஒன்றை அவள் கையில் திணித்தேன். என் விரல் அவள் மேல் பட, மின்சாரம் தொட்டவனை போல பின்னிழுத்தேன். அவள் அதை கண்டு கொள்ளவில்லை. பெண்களில் குணமே அது தான். சின்ன சின்ன ஸ்பரிசங்கள் ஒரே நொடியில் விழுங்கி கொள்வார்கள். ஆண்களோ அதை மென்று மென்று துப்புவார்கள். இருவரும் சி ஐ டி நகரில் இறங்கி விட்டு, ” என்னோடு ஒரு காபி ? ” என்றேன். “ஒய் நாட்? ” என்றாள். “பட் ஒன்லி ட்வென்டி மினுட்ஸ்” என்றாள்.

அந்த இருபது நிமிடமும் போனதே தெரியவில்லை. செம ஜாலியா பேசினோம். நீங்க எந்த காலேஜ் என்றேன்.. என்னை பற்றி கேட்பது இருக்கட்டும், உங்களை பற்றி சொல்லுங்கள் என்றாள். நான் என்னை பற்றி, என் குடும்பம் பற்றி எல்லாம் ஒப்பிவித்தேன். எனக்கு என்னவோ ஒரு அசட்டு தைரியம். “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க….” என்றேன். அட உண்மையா சொல்வதற்கு என்ன தைரியம் வேண்டியிருக்கு. அவள் அவ்வளவு அழகாய் தெரிந்தால். என் உள் மனது சொன்னது. அட உண்மைய சொல்றதுக்கு தைரியம் எதற்கு. அப்படியே என் காதலையும் சொல்லி விடு என்றது. அவளில் சிரிப்பும், அவளின் பழகும் விதமும் எனக்குள் இருந்த தயக்கத்தை விலக செய்தது.

அவளில் பேசி கொண்டே, காபியில் ஒரு பெரிய சிப்பை உள்ளே இழுத்து, அவள் கையை பிடித்து சொன்னேன். ” இங்க பாருங்க மாலதி, எனக்கு இந்த கார்டு கொடுத்து, ரோஜாப்பூ கொடுத்து, கவிதை எழுதி சொல்ல தெரியாது” , “அதே போல, வள வள னு இழுத்து பேச தெரியாது “. “என்னடா பார்த்த நாலாவது நாளே சொல்றேன்னு நினைக்காதீங்க.. இனி எப்போ கேட்டாலும் இதான்…”, “நான் உங்கள விரும்பறேன், உங்கள கல்யாணம் பணிக்கனும்னு நினைக்கிறன்.. நீங்க என்ன சொல்றிங்க” என்றேன். சொல்லி முடித்ததும் எனக்கு வியர்த்து கொட்டியது. அவள் எந்த சலனமும் இன்றி, என்னை பார்த்தாள். அவள் கண்களில் இதை எதிர் பார்காத அதிர்ச்சி தெரிந்தது. உடனே அவன் செல் போன் அலறியது. அதில் பேசியவள், உடனே கட் செய்தாள். ” ஒகே, நான் கிளம்பணும், டைம் ஆய்டுச்சி..” என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்பினாள்.

நான் அவள் பின்னாலே சென்று, “நாளைக்கு உங்க பதிலுக்காக வெயிட் பண்ணுவேன். என் வாழ்கையை நாளைய தினம் தீர்மானிக்கட்டும்…” னு சொல்லிட்டு நான் நிற்க, அவள் எதுவும் சொல்லாமல், என்னை பார்த்து திரும்பி விட்டு, வழக்கம் போல என்னை பார்த்து சிரித்தாள். அந்த சிரிப்பின் அர்த்தம் மட்டும் எனக்கு புரியவில்லை. உடனே அங்கு வந்த ஒரு ஆட்டோவில் ஏறி சென்று விட்டாள்.

அன்று முழுவதும் என் தவிப்பு சொல்லி மாளாது. பெசன்ட் நகர் பீச் சென்று இரவின் நீளத்தை அவளின் நினைவுகளை அளவுகோலாக்கி அளந்து கொண்டிருந்தேன். நாளை என்ன தான் சொல்வாளோ? ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அவளுக்கு என்னை பிடித்திருகிறது.. அந்த நம்பிக்கை மட்டும் என் மனதில் உறுதியாக இருந்தது. ஒவ்வொரு பெண்ணின் சிரிப்பும் சில நேரங்களில் மோனலிசா ஓவியம் போல, எப்படி பார்த்தாலும் அப்படியே தோன்றும். அதற்குள் ஒளிந்திருக்கும், கோவமும், காதலும், இரக்கமும், பாசமும், வெறுப்பும் புரிந்து கொள்ள யாராலும் முடியாது.

புரியாத சிரிப்பில் மறைத்து விட்டாய்..
என் காதலை எதிலோ புதைத்து விட்டாய்..
நாளை வரை மறைத்து வைத்தாயோ?
இன்றோடு அதை புதைத்து விட்டாயோ?

ஐந்தாம் நாள். அதே பேருந்து. டிக்கெட் அவளுக்கு மட்டும் தனியாக எடுத்து கொண்டாள். என்னை பார்க்கவே இல்லை. சிரிக்கவும் இல்லை. என் மனம் முதன் முதலாய் அழுததை உணர்ந்தேன். எனக்கும் அவளிடம் பேச மனம் வரவில்லை. பஸ்ஸில் பேச வேண்டாம். சி ஐ டி நகரில் இறங்கியதும் பேசி கொள்ளலாம் என்று அமைதியாகி விட்டேன். சற்று நேரம் கழித்து அவளை பார்த்தேன், அவள் கண்களில் ஒரு சிறு துளி.. அட அழுகிறாள். ஆனாலும் என்னை பார்க்க வில்லை. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இவள் வேறு யாரையாவது லவ் பண்றாளா? அவள் வயதை பார்த்தால் திருமணம் ஆகிருக்கவும் வாய்ப்பே இல்லை. என் அழகு தேவதையில் சோகம் என்ன? நான் நான்காம் நாளே எனது லவ் சொன்னதற்கு அவள் அந்த நான்கு நாட்களில் என்னிடம் அவ்வளவு வேகமாக நெருங்கிவிட்டாள் என்பதும் ஒரு காரணம். ஒரு வேளை என்னை ஒரு நண்பனாக பார்கிறாளோ? அட எதுவானாலும் நேற்றே சொல்லிருக்கலாமே? இது என்ன இந்த பெண்ணின் குணம். பதில் சொல்லாமல் நோகடிக்கும் குணம். என்னை நிலை குலைய செய்தது.

சி ஐ டி நகரும் வந்தது. பஸ்ஸிலிருந்து முதல் ஆளாக குதித்தேன். அவள் பேருந்திலிருந்து இறங்கி விட்டு, என்னை பார்த்தாள். மெலிதாய் சிரிக்க நினைத்த அவள் உதடு, லேசாக வெடித்து அழ தொடங்கியது. காதலுக்கும் உண்டோ அடைக்குந்தாழ்? ஆனாலும் என்னை தாண்டி வேகமாக நடந்து சென்றாள். எனக்கு கோபமும், அழுகையும் கலந்து வர, அதை மறைத்து விட்டு, அவளிடம் பேசி விட நான் பின்னாலே ஓடி சென்றேன். “மாலதி… என்ன ஆச்சு? என்ன பிரச்சனை?” என்றேன். என்னை சற்று திரும்பி பார்த்து விட்டு அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோவில் ஏறினாள். அது தான் அவளின் கடைசி பார்வை என்று எனக்கு அப்போது தெரியாது. ஆட்டோ கிளம்ப தயாரானது. நான் பின்னாலே சென்று மாலதி…. என்று கத்திவிட்டேன்.

ஆட்டோ ஒரு ஐந்து அடி சென்று நின்றது.. ஆடோவிலிருந்து ஒரு நாற்பது வயது மதிக்கதத்தக்க ஒருவர் இறங்கி வந்தார்.

“தம்பி என்னப்பா வேணும்?” என்றார்.

அவர் மாலதியின் சொந்தமோ? என்னவோ? என்று..” மாலதியிடம் கொஞ்சம் பேசணும்.. ” என்று சற்று தயங்கியவாறு சொன்னேன்.

” தம்பி, எனக்கு புரியுது..”, “அவளிடம் எதுவும் பேச கூடாது.. எல்லாமே என்னிடம் தான் பேசணும்…”, சும்மா பொது இடத்துல தொல்ல பண்ண கூடாது..” உனக்கு சரிபட்டா இந்த நம்பருக்கு நாளைக்கு கால் பண்ணு”. ” இன்னைக்கு புக் ஆகிருச்சு… “ஒரு நாளைக்கு ஆறாயிரம் ருபாய்.” என்று என் கையில் ஒரு வெள்ளை தாளை தந்து விட்டு ஆட்டோவில் ஏறி சென்றார். 

தொடர்புடைய சிறுகதைகள்
அந்த அரங்கமே அதிர ஒட்டுமொத்த கூட்டமும் கைதட்டி ஆரவாரம் செய்தது. குழந்தைகள் எல்லாம் மகிழ்ச்சியில் சிரித்து மகிழ்ந்தன. " நம்ம முருகேசன் ஜோக்கரா வந்தா போதும், இந்த சர்க்கஸ் கூடாரமே அப்படியே ஆர்ப்பரிக்குது. அவன் மொத்த கூட்டத்தையும் கட்டி போட தெரிஞ்ச தெறமசாலி, ...
மேலும் கதையை படிக்க...
ஜோக்கர்

மாலதி.. ஐ லவ் யு… மீது 3 கருத்துக்கள்

  1. jeeva says:

    உங்க கதை ரொம்பே நல்ல இருக்கு திரு சதீஷ் , கதையோட முடிவு என்ன அசின்னு நீங்க சொல்லவே இல்ல கதையோட ஹீர்ரோ என்ன முடிவு பன்னரு ???

  2. yuvaraj says:

    Arumaiyana kadhai,idayil kavithaivarigal superp

  3. Surendar says:

    உங்க கதையும் , அதை சொல்லிய விதமும் ரொம்ப நல்லா இருந்துச்சு சதீஷ்.. வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)