பொழுது விழுந்து கொண்டிருந்தது. இன்னும் என்ன இந்த சாரதியக் காணோம்? என்று தனக்குத் தானே புலம்பிக் கொண்டு விளக்கை எடுத்து மாடக்குழிக்குள் வைத்தாள். வெளிச்சம் வாசப்படியைத் தாண்டவில்லை. இன்றைக்கு சீக்கிரமே இருட்டி விட்டது என்று தோன்றியது மதுரவல்லிக்கு. மார்கழி மாதம் என்றாலே சரக்கென்று பொழுது விழுந்து விடுவது இயல்பு தான் என்றாலும், அவளுக்கு அப்படித் தோன்றியதற்கு காரணம், சாரதி இன்னும் வீட்டுக்கு வராதது தான். வாசலில் இருந்து திரும்பவும் வீட்டுக்குள் பார்த்தவள், விளக்கை ஏற்றுவதற்கு உள்ளே திரும்பினாள். உத்தரக்கட்டைக் கொண்டியில் தொங்கிய லாந்தர் விளக்கை எடுத்து கீழே வைத்தாள். சீமத்தண்ணி இருக்குதா என்று ஆட்டிப்பார்த்தவள், திருப்திகரமாய் சத்தம் வர, திரியை ஏற்றிவிட்டு தீப்பெட்டியைத் தேடினாள். நிலைக்கதவுப்படியில் இருப்பதை துழாவி எடுத்துக் கொண்டு, பழைய சீலைத்துணியையும், கோலப்பொடியையும் எடுத்துக் கொண்டு கண்ணாடிக்கூட்டை எடுத்து துடைக்க உட்கார்ந்தாள்.
இங்கு குடிவந்ததில் இருந்து அடிக்கடி ஏற்படுகிற அவஸ்தை இது. கரண்ட் பெரும்பாலான நேரங்களில் இருப்பது இல்லை. கரண்ட் சப்ளை வருவதற்கு முன்னாலேயே குடிவந்துவிட்டார்கள். ஆறுமாதத்துக்குப் பிறகு தான் கரண்டே வந்தது, அதுவும் இது போல அடிக்கடி ஏதாவது பிரச்னைன்னு கரண்டு இருக்காது. அதனால், பெரிய லாந்தர் விளக்கும், சின்ன சின்ன சிம்னி விளக்குகளும் வாங்கி வைத்திருந்தாள். கண்ணாடி ஊடாய் தெரியும் மஞ்சள் ஒளியில் இருக்கிற அழகு, மெழுகுவர்த்தியில் இருப்பது இல்லை. அதுவும் வெரசா தீர்ந்துவிடுவதால், காசுக்கு பிடிச்ச கேடா என்று சீமத்தண்ணியை நம்புவது தான் சரி என்று அவளுக்கு தோன்றிவிட்டது. இப்போது கரண்ட் அடிக்கடி போவதால், இதனுடைய உபயோகம் பெரிதாய் தோன்றுகிறது.
வீடுகள் நெருக்கமாய் இல்லாததால, இது போன்ற பிரச்னைகளுக்கு யாரும் கண்டு கொள்வதில்லை. கரண்டு ஆட்களும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனாலும் மதுரவல்லிக்கு எப்படா கரண்டு போகும்னு இருக்கும், இது போல விளக்குகள் ஏற்றவும், பளபளவென்று மஞ்சள் ஒளியில் கண்ணாடியில் தன்னை பார்த்துக் கொள்ளவும் ரொம்பவும் பிடிக்கும். சுற்றிலும் காலி இடங்களும், கொஞ்சம் தள்ளி வயலும் தோப்புகளும் இருப்பதால், காற்றுக்கு பஞ்சம் இல்லை.
சீலைத்துணியில் கொஞ்சம் மாவு போன்ற கோலப்பொடியை எடுத்து லாந்தர் விளக்கின் கண்ணாடிக்கூட்டின் மீது ஒத்தியது போல அப்பினாள். எல்லா இடங்களிலும் பரவலாகப் பட்டதும், ஒருமுறை கண்ணாடிக்கூட்டை கவுத்தி, பெரிய குருணை மாதிரி இருந்த பொடியைத் தள்ளிவிட்டு, துடைத்தாள். கொஞ்ச நேரத்தில் கண்ணாடிக்கூட்டை திருப்பி திருப்பி பார்த்தவள் திருப்தியானவுடன், லாந்தர் விளக்கில் மாட்டினாள். ஒருசாய்ச்சு அதைப் பற்ற வைத்து, திரியை இன்னும் கொஞ்சம் தூண்டினாள். விளக்கு வெளிச்சம், வீடெங்கும் பரவியது.
முன்னால் இருந்த தண்ணீர்த் தொட்டியில் கிடந்த தண்ணீரை முகத்தில் அடித்துக் கழுவிவிட்டு, நிலைக்கண்ணாடி முன் இருந்த பொட்டை எடுத்து வைத்துக் கொண்டாள். நார்ப்பெட்டியில் ஈரத்துணி போட்டு மூடிவைத்திருந்த மல்லிகைப் பூவை எடுத்து தலையில் வைத்துக் கொண்டாள். லூஸ் பின்னலில் இறங்கியபடி கோர்த்த மல்லிகைச்சரம் தோளில் பட அவளுக்கு கிசுகிசுப்பாய் இருந்தது. இப்போது நிலைக்கண்ணாடியில் தன் முக வசீகரத்தைப் பார்த்துக் கொண்டே சிரித்தாள். அவளுக்கு கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது. லாந்தர் விளக்கில் இருந்த வெளிச்சம் இவளின் ஒருபக்க முகத்தை தெளிவாகவும், மறுபக்க முகத்தை இருட்டாகவும் காட்டியது. பின் பக்க ரவிக்கையை இழுத்துவிட்டுக் கொண்டு முன் பக்கம் நிமிர்வாய் காட்டிக் கொண்டாள். புடவைத் தலைப்பை ஒரு முறை எடுத்துக் கண்ணாடி முன்னால் நின்று கொண்டு திரும்பவும் போட்டுக் கொண்டாள். நாற்பது வயதில் தான் இன்னும் அழகாய், உருக்குலையாமல் இருப்பதாய்த் தோன்றியது அவளுக்கு.
சாரதியை இன்னும் காணாமல் மனசுக்குள் என்னவோ செய்தது போல இருந்தது. சீக்கிரம் வாரேன்னு தானே சொன்னாரு? என்று நினைத்துக் கொண்டே, அடுக்கப்பானைக்குள் இருந்த கருப்பட்டியை எடுத்து, காகிதத்தில் வைத்தபடியே, ஊதாங்குழலால் தட்டி பொடித்துக்கொண்டாள். அவரு வர்ற நேரத்துக்கு, கருப்பட்டி காப்பி கொடுத்தா சந்தோஷப்படுவாரு என்று நினைத்துக் கொண்டாள். வெளியே வாசல் வரை போய்விட்டு வந்தவள், சாரதி வராமல் போகவே தலையை தொங்கப்போட்டபடி காலில் முன் நடையில் கிடந்த மணலை அளைந்த படியே வந்தாள். வந்தவள் வாசலில் உட்கார்ந்து கொண்டு, கையில் கிடைத்த கற்களை வைத்துக்கொண்டு சொட்டாங்கல் ஆடுவது போல வீசி மேலேயெறிந்து பிடித்துக் கொண்டு இருந்தாள்.
மதுரவல்லியின் அம்மாவீட்டில் பல்லாங்குழி, தாயம், சொட்டாங்கல்லுன்னு விளையாட நிறைய வயசுப்புள்ளைக பக்கத்துல இருந்தார்கள். அங்க பொழுது போறதே தெரியாது, அதுவும் சமைஞ்சதுக்கப்புறம், இது தான் பொழுதன்னிக்கும் பாக்குற ஒரே சோலி. அம்மாவுக்குக் கூட எப்போதும் கூடமாட ஒத்தாசையா இருக்கிறதில்லை. சன்ன வசவா வாங்கியிருப்போம் அவளும், அவள் தங்கையும்? என்று அதனை நினைக்கும் போதே தன்னையறியாம சிரிப்பு வந்தது அவளுக்கு. இங்க அந்த மாதிரி அக்கம்பக்கத்துல வீடே இல்லாத ஒரு எடத்தில வீட்டைக் கட்டி ஒத்தையில கிடந்து அல்லாடவேண்டியிருக்கு! அவரு காலையில போனா வர்றதுக்கு பதினொரு மணி பன்னெண்டு மணியாயிடுது. ஒரு வார்த்தை பேச ஒரு கிலோ மீட்டர் தூரம் நடக்கணும். யாரும் பெரிசா சினேகிதமா பேசுறதில்லே, ரெண்டு மூணு தடவை போயி பேசினா பின்னாடி கூட. அதனால அப்படியே பேச்சில்லாமயே போயிடுச்சு. இவரு, என்னத்தக் கண்டாரோ? இங்க வந்து எடத்தை வாங்கி வீட்டைக்கட்டி பேய் பிசாசுகளோட வாழ்க்கை நடத்த வேண்டியிருக்கு! என்று தனக்குத்தானே புலம்பிக் கொண்டாள்.
போனதரம் அம்மா வந்திருந்த போது தங்கச்சி பத்தி சொல்லிட்டு அழுதிடுச்சு. அதுக்கு ஒரு கல்யாணம் கார்த்தின்னு பண்ணமுடியாம இழுத்துட்டு கிடக்கே! முப்பது வயசுக்கு மேலயா ஒரு பொண்ணை வீட்ல வச்சிருப்பாங்கன்னு எல்லாரும் கேக்கறாங்கன்னு பொலம்பிட்டு போச்சு. தங்கச்சி கல்யாணம் ஆகாம இருந்தாக்கூட நல்லது தான். தன்னைப் போல இப்படி லோல்பட வேண்டாம் என்று நினைத்துக்கொண்டாள்.. ஆனாலும் சிலசமயம், தங்கச்சிய நினைக்கும் போது மதுரவல்லிக்கும் ரொம்ப வருத்தமா தான் இருக்கும், அவளால ஏதும் செய்யமுடியாம இருக்கேன்னு? போனமுறை நாசரேத்ல இருந்து ஒருத்தன் வந்தான். தூத்துக்குடி கப்பல் கம்பெனியில ஏதோ கிளார்க் உத்யோகம்னு! அம்மாவுக்கு அவ்வளவா பிடிக்கலை, பெரிய மாமா தான் நல்ல குடும்பம், நல்ல உத்யோகம் அப்படின்னு வற்புறுத்தினார். எல்லாம் சரியாகி, தட்டு மாத்திக்கிற முன்னாடி தான் தெரிஞ்சது, பய பெரிய குடிகாரன்னு. மதுரவல்லியின் அப்பா குடிச்சு, குடிச்சு குடும்பத்த சீரழிச்சது போதும்னு, அம்மா பிடிவாதமா வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். அதுல இருந்து பெரிய மாமா பேசுறது கூட சுத்தமா நிண்ணு போச்சு! அதுக்கப்புறம் ஒரு பயலும் வரக்காணோம், இவளாவது ஏதாவது பயலை இழுத்துட்டு ஓடுறாளான்னா அதுவும் இல்லை.
மதுரவல்லிக்கு அப்போது சன்முகத்தை பற்றிய ஞாபகம் வந்தது. சன்முகம், மதுரவல்லியின் அம்மா வீட்டுக்கு எதிரே விறகுக்கடை வச்சிருந்தான். எப்போதும், இவங்க வீட்டப் பார்த்தபடியே இருப்பான். ஓயாம தண்ணீ வந்து வாங்கிக் குடிப்பான், வயிறா வண்ணாந்தாழியா என்பாள். அவனோட பார்வையும், பேச்சும் ஒரு தினுசா இருக்கும், இவளிடம் மட்டும். கொஞ்சம் சரத்பாபு மாதிரி இருப்பது மாதிரித் தோன்றும் இவளுக்கு. இவ போனா தூள் விறக ஒரு தூக்குக்கு மேல சும்மா கொடுப்பான். இந்த சாரதியும் பார்க்கிறத்துக்கு, சன்முகம் மாதிரி தான் இருக்கும். அது நிறமும்., சுருள்முடியும் பார்க்க அத்தனை அழகா இருக்கும். முதல் முறையா கரெண்ட் கனெக்ஷன் குடுக்குறத்துக்கு வந்தபோது, மதுரவல்லியின் வீட்டுக்காரர் இல்லை. சாரதி வந்து விசாரித்து கனெக்ஷன் கொடுக்க வந்திருப்பதாய்ச் சொன்ன போது, அவளுக்கு பேசவே முடியாமல், ஒரு மாதிரி மலைச்சு போயி நின்னது ஞாபகம் வந்தது. சட்டையக் கழட்டிட்டு வெறும் முண்டா பனியனோட நின்னு, வேலையப்பார்த்து, விளக்கு எரிந்தவுடன் இவளுக்கு அவன் மேல என்னன்னு சொல்லமுடியாத ஒரு பிரியம் வந்துவிட்டது. கரண்டு வேலை பார்ப்பவர்கள் மேலேயே ஒரு புது பிரியம் வந்துவிட்டது அவளுக்கு.
வட்டையில் மிஞ்சியிருந்த பாலை எடுத்து சூடு பண்ணினாள். காபி பொடி டப்பாவை எடுத்து பார்த்தபோது, தூரில் இருந்து கொஞ்சம் தூள் போதுமா என்று யோசனை வந்தது அவளுக்கு. சரி சமாளிச்சுக்கலாம் என்று தோன்றியது. சைக்கிள் மணி ரெண்டு முறை அடிப்பது கேட்டது. சாரதியாய்த் தான் இருக்கும். இது போல சைக்கிள் மணி ரெண்டு முறை அடித்தால், அவன் வருகிறான் என்பது இவர்களின் சங்கேத மொழி. மீண்டும் ஒருமுறை கண்ணாடியில் பார்த்துவிட்டு, சீப்பை எடுத்து முன்பக்க முடியை மட்டும் எடுத்து வாரி காதோடு சேர்த்து சொருகிவிட்டாள். ஒரு அவசரத்துடன், பரக் பரக்கென்று முன் நடையைத் தாண்டி வெளி வாசலுக்கு வந்தாள். அவன் தான் வந்து கொண்டிருந்தான். தலையைச் சாய்த்தவாறு ஏதோப்பாட்டை முனகிக் கொண்டே வந்து சைக்கிளை உள்ளே தூக்கிக் கொண்டு முன் நடையில் நிறுத்திவிட்டு, இவளைப் பார்த்து வலுக்கட்டாயமாய் சிரித்தது போல சிரித்தான். மதுரவல்லி அவனைப் பார்த்து அழகு காட்டினாள்.
மதில் சுவரை சுற்றி வைத்திருந்த அரளிச்செடியும், பவளமல்லியும் முன் நடையில் நடப்பதை வெளியே காட்டாது மறைத்துவிடும். அதுவும் இருட்டிய பிறகு அது சாத்தியமே இல்லை. அவனிடம் அவள் கரண்ட் போனது பற்றி பேசவே இல்லை, அவனும் அவளிடம் அது பற்றி கேட்கவே இல்லை. இவன் வேறு ஏதோ காரணத்திற்காய் வந்தது போல இருந்தது அவளுக்கு. அவன் வாசல்படியில் உட்கார, ரொம்பவும் இயல்பாக அவளும் உட்கார்ந்து கொண்டாள்.
என்ன மைனர்? ரொம்ப நாளா ஆளக் காங்கலையே? அசலூருக்கு ஏதும் போயிட்டீகளா? என்று அவனை கிண்டல் செய்வது போல அவன் பேசுவது மாதிரி பேசினாள்.
அவன் அவள் கையை எடுத்து அவன் தொடையில் வைத்துக் கொண்டே, அவளின் கை மோதிரத்தை முன்னும் பின்னும் தள்ளியபடி இருந்தான் ஏதும் சொல்லாமல். அப்படியே டரவுசரின் வெளியே தெரிந்த ரோமத்தொடையில் இனுங்கியவளின் கையை மெதுவாக ஒதுக்கினான். அவனின் செயல் அவளுக்கு வினோதமாய் இருந்தது. என்னய்யா பதிலக் காணோம்? ஊர்க்கதையெல்லாம் சொல்லுவீகளே வரும்போதெல்லாம், இப்ப என்னய்யா ஆச்சு? மூஞ்சியும் சரியாயில்லையே! துரைக்கு என்ன பிரச்னை என்று அவன் தாவாக்கட்டையை பிடித்து கொஞ்சுவது போலக் கேட்டாள்.
தலைய வலிக்கி, கொஞ்சம் காப்பித்தண்ணி தாரியா? என்றான் அவள் முகத்தைப் பார்க்காமல். என்னவென்று விளங்கிக் கொள்ளாமல், உள்ளே நுழைந்து அடுப்பைப் பற்ற வைத்தாள். வட்டையில் இருந்த பாலில் கொஞ்சம் தண்ணிய ஊத்தி, கொதித்தவுடன் பொடித்த கருப்பட்டியும், காப்பி பவுடரை ஒன்றாகப் போட்டு, பொங்க பொங்க, மத்தின் காம்பில் கிண்டிய படியே இறக்கினாள். பின்னால் அரவம் கேட்டுத் திரும்ப, கலங்கிய கண்களுடன் நிற்பவனைப் பார்த்ததும் அவளுக்கு திடுக்கென்று இருந்தது. இறக்கிய காப்பியை அப்படியே அடுப்புத் திண்டில் வைத்துவிட்டு அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.
வார்த்தையே வராமல் என்ன ஆச்சுன்னு சொல்லேன்? என்றாள். ஒன்றும் சொல்லாமல் அவன் அழ, இத்தனை நாள் முரட்டு ஆளாய் பார்த்த ஒருத்தன் இப்படி கலங்குவதைப் பார்த்தபோது அவளுக்கு ரொம்பவும் வேதனையாய் இருந்தது. முப்பது, முப்பத்தஞ்சு வயசுப் ஆளுக்குள்ள இது போல ஒரு அழுமுஞ்சி இருப்பான்னு அவளால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அடுப்புத்திண்டில் வைத்திருந்த காப்பியை கொண்டு வந்து கொடுத்து, சூடு ஆறுரதுக்குள்ள சாப்பிடு! என்று அவன் கையில் திணித்தாள். அவன் இன்னும் ஒன்றும் சொல்லாமல், வாசலைப் பார்த்தபடியே நின்றிருந்தான்.
அவனாய்ச் சொல்லட்டும், ரொம்ப நோண்டினா அழுதுடுவான், அவன் அழும்போது அத்தனை வசீகரமாய் இல்லாதது போல அவளுக்குப்பட்டது. லாந்தர் விளக்கைத் தூண்டுவது போல, அதன் அருகே நின்று கொண்டே, ஆடும் சுடரைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதன்பிறகு கண்ணாடி மீது விரலை வைத்து சூட்டவுடன், கையை வெடுக்கென்று எடுத்தாள். அதில் அவனின் கவனம் சிதறியது போல இருந்தது.
அவளிடம் வந்து கையைப் பிடித்துக் கொண்டு, என்னை கோவில்பட்டிக்கே மாத்திட்டாங்க வல்லி! எனக்குப் பிடிக்கவே இல்லை. ஆனா போயித்தான் ஆகணும், அம்மாவும், இங்கேயே வந்துடுறா! காலாகாலத்துல கல்யாணம் பண்ணிக்கிடுடான்னு அழுவுது! என்றான். இவளுக்கு, அதுவுமா? என்று தோன்றியது.
சரி அதுக்கு என்ன? போக வேண்டியது தான? என்று அவன் முகத்தைப் பார்த்தாள். அவன் தலைகுனிந்தபடியே இருந்தான்.
திரும்பவும் அவளே பேச்சை ஆரம்பித்தாள். நான் ஒண்ணு சொன்னா செய்றியா? என்ன என்பது போல அவளை நிமிர்ந்து பார்த்தான். கோவில்பட்டிக்குத் தான போற, என்னோட தங்கச்சி அருப்புக்கோட்டையில தான் இருக்கா! அவளை கல்யாணம் பண்ணிக்கிடேன்! அவளும் கல்யாணம் ஆகாம இருக்கா? நீயும் எப்படியும் கல்யாணம் பண்ணிக்கிட போற! அவளையே ஏன் பண்ணிக்கிட கூடாது? என்றவள் அவன் என்ன சொல்வான் என்று காத்திருந்தாள்.
நான் மாத்தலாகிப் போறத்துக்கு இன்னும் ஒருமாசம் இருக்குல்லா? எடையில ஒருதரம் வாரேன்! வந்து பேசிக்கிடலாம்! என்று தெளிவாய் பதில் சொல்லிக் கொண்டே விடைபெற்றான். காப்பி ஆடைகட்டியபடி அப்படியே இருந்தது குடிக்காமல்.