மாலை மணி ஏழு.
கட்டிலின் மீது அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்தான் பாஸ்கர்.
அவனுக்கு இப்போது ரிசல்ட் தெரிந்து விடும். அதனால் மிகவும் பதட்டத்துடன் இருந்தான்.
அலுவலகம் விட்டு அப்போதுதான் திரும்பிய ரூம்மேட் ரமணன், “என்னடா மச்சி ரூம்லேயே அடைஞ்சு கிடக்க…உன் லவ்வு ஊத்திக்கிடுச்சா, நீ கொடுத்த லவ் லெட்டருக்கு இன்னிக்கு பதில் தெரியும்னியே?” என்றான் கிண்டலாக.
“இல்லடா அந்த டென்ஷன்லதான் ரூம்லேயே அடஞ்சு கிடக்கேன், சுகன்யா என்னைக் காதலிக்கிறாளா இல்லையான்னு இப்ப ஏழரை மணிக்கு கண்டிப்பா தெரிஞ்சிடும். மத்தியானமே என்னுடைய லெட்டரை படிச்சுப் பார்த்திருப்பா….ம்..அந்த ஏஞ்சல் எனக்கு கிடச்சா என்னுடைய அதிர்ஷ்டம், அவளுடைய அருகாமை எனக்கு யானை பலம்…” பெருமூச்சு விட்டான் பாஸ்கர்.
சுகன்யா….
பாஸ்கருடன் ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவள். அவளுடைய அபரிதமான அழகு, அளவான புன்னகை, பழகும் தன்மை, பொறுமை, நிதானம், ரெளத்ரம் பழகாத அமைதி என தன் சிறப்பான குணங்களால் பாஸ்கரை ஏங்க வைத்து விட்டாள். அவளின் அழகையும், நல்ல தமிழ் உச்சரிப்பையும் புரிந்துகொண்ட ஒரு பிரபல டி.வி. நிறுவனம் சுகன்யாவை தன்னுடைய சேனலில் செய்தி வாசிக்க தேர்வு செய்தது. ஒரு நாள் விட்டு மறு நாள் என அவள் மாலை ஏழரை மணி செய்திகள் வாசிப்பதில் அந்தக் காலத்து ஷோபனா ரவிபோல் மிகவும் பிரபலமாகி விட்டாள்.
தன் காதலை எப்படி அவளிடம் சொல்வது என தவித்த பாஸ்கர், இன்று மதியம் அவள் அலுவலகத்தில் இருந்தபோது, தன் காதலை அழகாக வெளிப்படுத்தி ஒரு மின்னஞ்சல் அனுப்பி விட்டான். அனுப்பி விட்டானே தவிர பயமும், எங்கே தன்னை காட்டிக் கொடுத்து புகார் செய்து விடுவாளோ என பயந்து சீக்கிரமாக ரூமுக்கு திரும்பி விட்டான்.
இப்பொழுது தவித்துக் கொண்டிருக்கிறான். தான் எழுதிய மின்னஞ்சலின் நகலை ரமணனிடம் காண்பித்து படித்துப் பார்க்கச் சொன்னான். ரமணன் ஆர்வமுடன் படித்தான்.
‘என் இனிய சுகன்யாவுக்கு,
ஒரே அலுவலகத்தில் உன்னுடன் பணிபுரியும் நான் உனக்கு ஈ மெயில்
அனுப்புவது ஆச்சரியமளிக்கலாம். என்ன செய்வது, நேரில் இந்த விஷயத்தை என்னால் கோர்வையாக, அழகாக பேசமுடியாமல் பயத்தினால் வார்த்தைகளை விழுங்கி விடுவேன். எனவே தமிழில் இந்த மெயில்.
கடந்த ஒன்பது மாதங்களாகவே என்னுள் உன்னுடைய ஆக்கிரமிப்பு அதிகரித்திருப்பதை என்னால் உணர முடிகிறது. அலுவலக லஞ்ச் இடைவெளியின்போது பொது விஷயங்களை நாம் நிறைய பேசுகிறோம்; கொண்டுவரும் உணவுப் பதார்த்தங்களை பரிமாறிக் கொள்கிறோம். ஆனால் உன்னைப் பற்றிய என் எண்ணங்களை உன்னிடம் பரிமாறிக் கொள்ளத் துடிப்பது உனக்குத் தெரியுமா?
ஒரு நல்ல சினிமாவை, டிராமாவைப் பார்த்தால்; நல்ல கதை கட்டுரைகளைப் படித்தால் உடனே உன்னிடம் ஓடி வந்து அது பற்றி அளவளாவ வேண்டும் எனத் துடிக்கிறேன். இரவில் தூக்கம் வராது உன் நினைப்பில் தவிக்கிறேன்.
நீ எனக்கு அத்தியாவசியமானவள். அவசியமானவள். உன்னுடைய சொக்கும் அழகு என்னை அடித்துப் போட்டது நிஜம் என்றாலும், அது மட்டுமே காரணமல்ல. உன்னுடைய சுறுசுறுப்பு, புத்திசாலித்தனம் இன்னும் எவ்வளவோ….
நீ ஒருநாள் அலுவலகம் வரவில்லை என்றால் எனக்குப் பைத்தியம் பிடித்தது போல் இருக்கிறது. வெறுமையான உன் இருக்கையைப் பார்க்கும் போது வெறுத்துப் போய் விடுகிறது.
ஒரு நல்ல திட்டமிட்ட அழகான வாழ்க்கையை நான் உன்னுடன் அமைத்துக்கொள்ள விரும்புகிறேன். நீ என்னை விரும்புகிறாயா இல்லையா என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியாவிடினும், வெறுக்கவில்லை என்பது மட்டும் நம்முடைய இந்த ஒன்பது மாத நட்பின் மூலம் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
இந்த நட்பு காதலாகி, நம் திருமணத்தில் முடிய எனக்கு மிகுந்த விருப்பம் சுகன்யா. என்னுடைய இந்த அணுகுதலில் நேர்மை இருப்பதாக நம்புகிறேன். என் (நம்) எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உன்னுடைய சாதகமான பதிலை எதிர்பார்த்து இன்று மாலை ஏழரை மணிக்கு டி.வி.யில் நீ செய்திகள் வாசிக்கும்போது உன்னைப் பார்ப்பேன்.
உன்னிடம் இருக்கும் எனக்குப் பிடித்தமான மயில் கழுத்து நிறப் புடவையில், உன் தலையில் ஒரு ஒற்றை ரோஜாவுடன் வந்து செய்திகள் வாசித்தால் நம் காதலுக்கு நீ சம்மதம் சொல்லிவிட்டதாக எடுத்துக் கொள்வேன்.
ஆர்வமுடன், பாஸ்கர்
பாஸ்கர் மணி பார்த்தான். ஏழு இருபது.
டி.வி.யில் உப்புச்சப்பில்லாத ஒரு சீரியல் ஓடிக் கொண்டிருந்தது. ஏராளமான மார்பகங்களுடன் ஒருத்தி அழுது கொண்டிருந்தாள்.
பாஸ்கர் கட்டிலிலிருந்து எழுந்திருந்து, கண்ணாடி முன் நின்று தலையை வாரிக் கொண்டதும் மறுபடியும் கட்டிலின்மேல் அமர்ந்தான்.
மணி 7.28. மறுபடியும் எழுந்து கொண்டு கண்ணாடி முன் நின்று தன் முகத்திற்கு மெலிதாக பவுடர் பூசிக் கொண்டான். பதட்டத்துடன் கட்டிலின் மீது அமர்ந்து கொண்டான்.
ஏழு முப்பது.
.
பாஸ்கர் பர பரப்பானான்.
“வணக்கம்…செய்திகள் வாசிப்பது சுகன்யா, முதலில் தலைப்புச் செய்திகள்….”
பாஸ்கர் கட்டிலை விட்டுத் துள்ளி எழுந்தான். கண்களில் நீர் பொங்க சந்தோஷத்துடன் ரமணனை கட்டியணைத்தான்.
“மச்சி, காதலுக்கு சம்மதம் சொல்லிட்டாடா…கிளம்பு வெளில போய் சாப்பிட்டுவிட்டு செகண்ட் ஷோ சினிமா போகலாம்…இன்னிக்கி எல்லாமே என் செலவு” ரமணனை ஆயத்தப் படுத்தினான்.
சுகன்யா மயில் கழுத்து நிறப் புடவையில், தலையில் ஒற்றை ரோஜாவுடன் செய்திகளை தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தாள்.
Nice Love Story .. Like it
மிகச் சிறந்த காதல் கதை. கதைக்குள் ஒரு அற்புதமான காதல் கடிதம். புதிதாக காதலிக்க விரும்புபவர்கள் இந்தக் கதையின் காதல் கடிதத்தை பைபிளாகக் கொள்ளலாம்.
ஜனனி ராம்நாத், திருச்சி