மொத்த சொந்தமும் பந்தமும் ஓர் இடத்தில் சேர்ந்து ஒருவரை ஒருவர் நையாண்டி செய்துகொண்டு இருக்க , குழந்தைகள் பட்டாளம் யார் வார்த்தைகளையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் குறுக்கே நெருக்கே ஓடி விளையாடி கொண்டு இருக்க, எந்நேரமும் அடுப்பில் ஏதோ சமையல் வேலை நடந்து கொண்டு இருக்க, வயதான தாத்தா பாட்டி தன் வாழ்க்கை நிகழ்வுகளை மற்றவர்களுடன் அசைப்போட்டு மகிழ்ந்து கொண்டு இருக்க, வீட்டின் பெண்கள் என்றைக்கும் இல்லாமல் கூடுதல் அழகோடு மின்ன, வீடே பூக்களின் வாசனையில் மிதந்து கொண்டு இருக்க, அந்த வீடே கள கள என இருந்தாள் அது நிச்சயம் கல்யாண வீடாக தான் இருக்க வேண்டும்.
எல்லாம் இப்படியே இருந்தா எப்படி. எம்மா அனிதா இன்னும் புறப்படாமல் என்ன பண்ற. மண்டபத்துல யாரும் இல்லன எப்படி. என்னங்க தேவையானது எல்லாம் எடுத்து வச்சிடிங்களா . எதையாவது மறந்திட போறிங்க. குணா கிட்ட இருந்து போன் வந்ததா. கேக்குறவங்களுக்கு பதில் சொல்ல முடில. மதியமே வந்திடுவேணு சொன்னான். இன்னும் வந்த பாடு இல்லை என முனுமுத்து கொண்டே இருந்தால் குணாவின் அம்மா.
விடிந்தால் குணாவின் அக்கா மலருக்கு திருமணம். அணைத்து சொந்தமும் வந்து சேர்ந்தாகிவிட்டது. சிறு வயதில் இருந்து மலருக்கு தம்பி, அண்ணன், தோழன், தொல்லை என அவளுக்கு எல்லாமாக இருந்த குணா இன்னும் வரவில்லை.
பெண் அழைப்புக்கு தயார் ஆன மலரின் இமைகளை மட்டும் அவ்வப்போது கண்ணீர் நனைத்து கொண்டு இருந்தது. யாருக்கும் தெரியாமல் தன் கைக்குட்டையால் கண்ணீரை மறைத்துக்கொண்டு இருந்தாள். எங்கப்பா குணா. எதாவது போன் செய்தானா என தொண்டை அடைக்க அப்பாவிடம் விம்மியபடி கேட்டாள் மலர். என்னம்மா இந்த நேரத்துல கண்ணை கசக்கிக்கிட்டு. பாக்குறவங்க தப்பா நினைக்க போறாங்க. நான் போன் பண்ணி பாக்குறேன். நீ ஒன்னும் கவலை படதே வந்திடுவான் என்று தைரியம் சொன்னார் அப்பா.
குணாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒரு வாரத்திற்கு முன்பு அவசர அலுவல் காரணமாக குணா வெளிநாடு சென்று இருகின்றான். நிச்சயம் கல்யாணத்துக்கு முன் வந்துவிடுவேன் என்று சொல்லி இருந்தான். கடைசியாக நேற்று இரவு விமான நிலையத்தில் இருந்து தொலைபேசியில் அப்பாவை அழைத்து தான் வந்து கொண்டு இருக்கின்றேன் என்றும். நாளை மதியத்திற்குள் வந்து விடுவேன் என தெரிவித்தான். அதற்க்கு பிறகு எந்த தகவலும் இல்லை.
குணா. எல்லாருக்கும் பிடித்த, பண்பான, பழக எளிமையாக, நகைச்சுவை உணர்வுடைய, எல்லா தருப்பு உறவும் நட்பும் விரும்பும் ஒருவன். அதுவும் தன் பாட்டியிடம் உரிமையாக சண்டை போடும், அளவில்லா பாசத்தை கொடுக்கும் ஒருவன். பதிலுக்கு பாட்டியிடம் இருந்து பாசத்தை வாங்கும் ஒருவன் குணா மட்டுமே. புதிதாக பழகும் குழந்தை கூட பத்தே நிமிடத்தில் அவனுடன் ஒட்டி கொள்ளும். குழந்தை என்றாள் அவனுக்கும் அவ்வளவு பிடிக்கும். குழந்தைகளும் குணாவிடம் உடனே ஒட்டிக்கொள்ளும்.
சொந்தங்கள் அனைவரும் திருமண மண்டபத்தை வந்து அடைந்தாகிவிட்டது. குணாவின் நண்பர்கள் அனைவரும் ஆஜர். படபடப்பில் அம்மா, வெளியே காட்டிக்கொள்ளாத தவிப்பில் அப்பா, பாசத்துக்காக பாட்டி , ஏக்கத்தில் அக்கா, நண்பனிடம் ட்ரீட் கேட்க காத்துகிடக்கும் நண்பர்கள் என அனைவரும் குணாவின் வருகைக்காக காத்து நிற்கின்றனர்.
பெண் அழைப்பு விழா துவங்கியாயிற்று. வந்த உறவுகளும் நண்பர்களும் எங்க குணவ காணோம் என கேட்டவாறு இருந்தார்கள். ஒரு குட்டி பையன் பெரியப்பா குணா அண்னா வந்துட்டாங்க என உரக்க கத்திக்கொண்டே மண்டபத்தின் உள்ளே நுழைந்தான். குணாவின் அப்பா லேசாக மனதுக்குள் பெருமுச்சி விட்ட படி, போய் மலர் அக்கா கிட்ட சொல்லு என்றார்… மலர் அக்கா குணா அண்ணா வந்துட்டாங்க என கத்தி கொண்டே ஓடினான்.
முகத்தில் புன்னகையோடு லேசான தாடியோடு மண்டபத்தினுள் நுழைந்தான் குணா. தூரத்தில் இருந்த அம்மா கிட்ட வந்து அவன் கையை பிடித்து கண்ணை கசக்கி கொண்டே எங்கடா போன. மலர் ஒரே அழுகை. போய் பாரு அவளை என்றாள். என்னடா தாடியும் ஆளும். இப்படியா வரது என்று கேட்டு கோபமாய் இருப்பது போல காட்டிக்கொண்டார் அப்பா. மேடையில் இருக்கும் மலரை பார்த்தவாறு சிரித்த படியே கை அசைத்தான் குணா. கண்ணீரை கைகுட்டையால் மறைத்து கொண்டு சிரித்தாள் மலர். மறுகணம் கோவத்தை உணர்த்துவதை போல பார்வையை திருப்பிகொண்டாள்.
குணவுடன் அழகிய, கலையாக, ஆடம்பரம் இல்லாத, தேவதையாய் ஒரு அழகு பதுமை வந்து நிற்பதை முதலில் யாரும் கவனிக்கவில்லை. வா காவியா என தன் தங்கையிடம் அறிமுக படுத்தினான் குணா. அந்த மன்றத்தில் இருந்த சொந்தங்களும் விருந்தினர்களும் காவியாவை உற்று பார்த்தபடி இருந்தார்கள். யாரு அந்த பொண்ணு, குணா கூட வந்து இருக்கா என ஒருவருக்குள் ஒருவர் பேசிக்கொண்டனர். மன்றத்தில் இருந்த யாரோ ஒருவர் குணா அடுத்து ரெடி ஆகிட்டான் போல என முதலில் கற்பனைக்கு பொட்டுவைத்து துவங்கி வைத்தார்.
முதல் வரிசையில் அமர்ந்து இருந்த தன் பாட்டியிடம் நேராக சென்று என்ன ஆயா எப்படி இருக்க, கல்யாண வேலை எல்லாம் சரியாக நடக்கிறதா என்று கேட்டான். பேரனை பார்த்த சந்தோஷத்தில் தன் விரல்களை மடக்கி அவன் கன்னத்தில் செல்லமாக ஒரு குத்து வைத்தாள் பாட்டி. சிரித்த படியே பாட்டியின் கைகளை பிடித்து பாட்டியிடம் பேசி கொண்டு இருந்தான் குணா. காவியா இதான் என் ஆயா. செம டென்ஷன் பார்ட்டி பாத்துபத்திரமா இருக்கனும் என்றான். பாட்டியை பார்த்து வணக்கம் வைத்தல் காவியா. அடுத்த நொடி அந்த கிழவிக்கு கற்பனை சிறகு விரித்து பறக்க துவங்கிவிட்டது. காவியாவின் கைகளை பிடித்து நலம் விசாரித்தல் பாட்டி.
தன் தங்கையை அழைத்து காவியா கூடவே இரு என்றான் குணா. வாங்க அண்ணி என்று சொல்ல வாய் எடுத்து, பின்பு சுதாரித்து நாக்கை கடித்து கொண்டு வாங்க அக்கா என்று அழைத்து சென்றால் குணாவின் தங்கை மதுமிதா. நண்பர்கள் குணாவை சூழ்ந்துகொண்டு யாருடா அந்த பொன்னு என்று வரிசையாக கேள்வி கணைகளை தொகுத்தனர்.
நீங்க நினைக்கின்ற மாதிரி ஒன்னும் இல்லை. என் நண்பன் முலமாக எனக்கு பழக்கம் ஆனவள் காவியா. எனக்கு நல்ல தோழி. நான் வந்த விமானம் தாமதமாக வருவது முன்கூட்டியே தெரிந்ததால் என் நண்பனை ஏர்போர்ட் வர சொல்லி இருந்தேன்.அவனுக்கு ஏதோ அவசர வேலை வந்துவிட்டதால் காவியாவை வர சொல்கின்றேன் என்றான். அவளையும் நான் கல்யாணத்துக்கு அழைத்து இருந்ததால் அவளும் சரி என்று நேராக விமான நிலையத்திற்கே தன் கார்ரை கொண்டு வந்துவிட்டாள். இல்லை என்றால் இன்னும் தாமதம் ஆகி இருக்கும் என்றான். குணாவின் நண்பர்களில் ஒருவன் எனக்கு இப்படி தான் எதாவது இருக்கும்னு தெரியும் மச்சி. இவனாது லவ் பண்றதாவது. அதுவும் அந்த பொண்ண என்ன ரேஞ்சுல இருக்கு. நம்பள எல்லாம் பாக்குமா என்று சொல்லி சிரித்தான்.
அதே நேரம் அங்கே காவியாவை சிலர் சூழ்ந்துகொண்டு வரிசையாக கேள்வி கணைகளை தொகுதுக்கொண்டு இருந்தனர். உன் பேரு என்ன மா. குணா கூட படிச்சியா. குணா கூட வேலை பாக்குறியா. நீயும் குணாவும் சேர்ந்து தான் வந்திங்களா . குணாவ எத்தனை நாட்களாய் தெரியும். அப்பா என்ன பண்றாங்க. கூட பிறந்தவங்க எத்தனை பேரு என காவியாவுக்கு ஒரு தேர்வே நடந்தது. காவியாவிடம் ஜாதகம் மட்டும் தான் கேட்கவில்லை. மற்றபடி அணைத்து கேள்விகளும் கேட்கபட்டாகிவிட்டது.
அன்று இரவு குணா வீட்டிலேயே தங்கினாள் காவியா. குணா தன் அறையை காவியாக்கு ஒதுக்கினான். காவியாவுக்கு துணையாக தன் தங்கையை அனுப்பினான். குணாவின் நாய்க்குட்டி அப்புவுடன் சிறிது நேரம் விளையாடி கொண்டு இருந்தாள் காவியா. காவியா உடன் உடனே ஒட்டிகொண்டது அப்பு.
விளையாடியது போதும் போய் தூங்குங்க காலையில் சீக்கிரம் எழனும் என்று அப்பா அதட்ட இருவரும் குணாவின் அறைக்குள் சென்றனர். இரவு நீண்ட நேரம் காவியாவும் மதுமிதாவும் பேசிக்கொண்டே இருந்தனர். அதில் பாதி நேரம் குணாவை பற்றியே இருந்தது பேச்சு. பேசிக்கொண்டே மதுமிதா உறங்கிவிட்டாள். காவியாவுக்கு உறக்கம் வரவில்லை.
அன்று மாலை நடந்த நிகழ்வுகளை அசை போட்டு கொண்டிருந்தாள். உறவுகள் கேட்ட கேள்விகளும் நன்பார்கள் செய்த கிண்டல்களும் அவள் கண் முன்னே வந்து போனது. குணாவின் குடும்பம் மீது காரணம் இல்லாத அன்பு வந்தது. குணா மீது காதல் வந்து விடுமோ என்று முதல் முதலாய் ஒரு ஐயம் வந்தது.
மறு நாள் காலை முகுர்ததிருக்கு தயார் ஆகி கொண்டு இருந்தது மன்றம். வேட்டி சட்டையில் குணா நடக்க, அவன் அருகில் இளஞ்சிவப்பு சேலை உடுத்தி, மருதாணி இட்ட கையில் கை நிறைய வளவி அணிந்து, மல்லி பூ சூடி, அளவாய் ஒப்பனை செய்த அம்மன் தேராய் மண்டபத்துக்குள் நுழைந்தால் காவியா. மன்றத்தில் இருந்த ஒட்டு மொத்த கண்ணும் இருவர் மீது மட்டுமே இருந்தது. இன்னக்கி கல்யாணம் மலருக்கா இல்ல குணாவுக்கா என கிண்டல் செய்தபடி மன்றத்தில் யாரோ ஒருவர் கற்பனைக்கு நிறம் கொடுத்தார். அவனுக்கு என்ன கருப்பா இருந்தாலும் கலையா இருப்பான் பையன், இதை விட எங்க போய் பொண்ணு பார்த்திட போறாங்க என இன்னொருவர் கற்பனைக்கு உருவம் கொடுத்தார். இப்படி மன்றத்தில் தானாக முன்வந்து ஆளுக்கு ஒரு பொறுப்பு எடுத்து கற்பனைக்கு உயிர் கொடுத்தனர்.
தாம்பல தட்டு எடுக்க ஒரு ஆள் வேண்டும் என்ற உடன், சிறிதும் யோசிக்காமல் காவியா அக்கா நீங்க வாங்க என்று ஆசையாய் கூப்பிட்டு தன் அருகே நிற்க வைத்து கொண்டால் மதுமிதா. அண்ணனும் தங்கையும் நல்லா பன்றிங்காடி என சிரித்தபடி கிண்டல் செய்தல் அத்தைகளில் ஒருத்தி. அனைத்தையும் அறிந்தும், எதையும் அறியாதவளாய் அமைதியாக முகத்தில் புன்னகையோடு நின்று கொண்டு இருந்தாள் காவியா. போட்டோகிராபர் தன் பங்குக்கு குறை வைக்காமல் அணைத்து புகைப்படங்களிலும் காவியாவை மறக்காமல் இணைத்து கொண்டார்.
மலர் கழுத்தில் மாங்கல்யம் ஏறியது. உறவுகளும் நட்புகளும் அட்சதை தூவியது. அது மலருக்கு தூவினாலும் அட்சதை விழுந்தது என்னமோ குணா காவியா மீதுதான். அதுதான் மன்றத்தில் இருந்து ஒட்டு மொத்த உறவுகளின் ஆசையாக இருந்தது.
திருமணம் நல்ல படியாக முடிந்தது. வாழ்த்திய உறவுகள் விடை பெற்றன. இறுதி வரை இறந்து கடைசி ஆளாய் விடை பெற்றாள் காவியா. பாட்டி அருகே சென்று நடுங்கி கொண்டு இருந்த அவர்களின் கைகளை பிடித்து போய்ட்டு வரேன் பாட்டி என்று சொன்னாள். ஆசையாய் காவியாவின் கன்னங்களை பிடித்து பத்திரமா போய்ட்டு சீக்கிரம் திரும்பி வாடா என் ராசாத்தி என்றல் பாட்டி. புன்னகையோடு மன்றத்தில் இருந்து விடை பெற்றாள் காவியா.
அண்ணா அறையில் புது வளையல்கள் இருந்தது. காவியா அக்கா விட்டுட்டு போய்டாங்க போல. கொடுத்திடு என்று குணாவிடம் கொடுத்தால் மது. வாங்கி பத்திரமாய் வைத்து கொண்டான்.
குணா அறையில் நிலைக் கண்ணாடியில் காவியா நெற்றியின் ஸ்டிக்கர் பொட்டு ஒட்டிக்கொண்டு இருந்தது. காரணம் அறியாமல் குணா கிண்னாடியையே பார்த்து கொண்டு இருந்தான். இல்லை இல்லை கண்ணாடியில் இருந்த ஸ்டிக்கர் பொட்டை. மூங்கில் காட்டில் காற்று ஊடுருவி இசை எழுப்புவது போல. காவியாவின் அவனுக்குள் ஊடுருவி ஆசைகளை எழுப்பி கொண்டு இருந்தது. கள்ளம் இல்லா குணாவின் மனதில் முதல் முறையாக ஆசை துளிர்விட துவங்கியது.
விடுப்பு எல்லாம் முடிந்து சென்னை புறப்பட்டான். கல்யாண அலைச்சல் காரணமாக சரியாக உறங்காத காரணத்தால் அலுவலகம் முடித்து சீக்கிரமே வந்து உறங்கிவிட்டான் குணா .
இரவு பத்து மணிபோல குணாவின் கைபேசி சிணுங்கியது. அரை தூக்கத்தில் பார்த்தான். காவியம் அழைத்து கொண்டு இருந்தது. ஆமாம் காவியா அழைத்தாள். அலட்டி கொள்ளாமல் கைபேசியை எடுத்து சொல்லு என்றான் குணா. அவன் அலட்டி கொள்ளாதது தான் அவளுக்கும் பிடித்து இருந்தது. இந்நாள் வரை நீ வா போ என்று ஒருமையில் பேசிவந்த காவியா முதல் முறையாக சென்னை வந்துடிங்களா என்று மரியாதையுடன் கேட்டாள் . இப்போது குணா சற்று ஆடித்தான் போனான்.
வீட்ல எல்லாரும் நல்ல இருக்காங்களா. பாட்டி எப்படி இருக்காங்க. மலர் அக்கா நல்லா இருக்காங்களா. மதுமிதா காலேஜிக்கு போரளா. விடாம பேசிட்டே இருந்தாங்களே அந்த அத்தை எப்படி இருக்காங்க. நம்ப அப்பு (நாய் குட்டி ) என்ன செய்யுது என ஒருவர் விடாமல் உரிமையாய் விசாரித்தாள் காவியா. அணைத்து கேள்விக்கும் ஒற்றை வரியில் பதில் சொன்னான் குணா. சீக்கிரமே உரையாடல் முடிந்து போனது.
இரண்டு நாட்கள் கழித்து போன் செய்து விசாரித்தாலே காவியா. மரியாதைக்கு நாமும் பேசணும் என்று காவியாவை அழைத்தான் குணா. இருவரும் பேசிக்கொண்டே இருந்தனர். சட்டென்று நாளைக்கு என்ன கோவிலுக்கு குட்டிட்டு போறிங்களா என்றால் காவியா. நீண்ட நாட்களுக்கு பிறகு கவியாவுடன் வெளியே செல்வது அதுவே. இதற்க்கு முன்பும் வெளியே சென்று உள்ளனர். ஆனால் அப்போதெல்லாம் அவர்களுடன் வேறு நண்பர்களும் இருந்தனர். போன இடமும் திரையரங்கம், ஓட்டல் என பொழுது போக்கு தலமாக மட்டுமே இருந்தது.
கோவிலில் வைத்து காவியாவுக்கு குணா அந்த வளையல்களை கொடுத்தான். மிகுந்த மகழ்ச்சியோடு வாங்கிக கொண்டு என்ன திடீர்னு வளையல் எல்லாம் என்றாள். அப்போது தான் அவை காவியாவின் வளையல்கள் இல்லை என்பதை உணர்ந்தான். விதி மீண்டும் மீண்டும் தன் சுவாரசியங்களை நிகழ்த்தி கொண்டு இருந்தது.
அந்த நிகழ்வுக்கு பிறகு இருவரின் தொலைபேசியும் அடிக்கடி காவியம் பாடியது. தோழமையை தாண்டி இருவருக்கு இடையே உறவு வளர்ந்தது. இருவருக்கு இடையே தினசரி நிகழ்வுகள் உட்பட அனைத்தும் பரிமாறப்பட்டது. இத்தனை நாட்கள் இல்லாத புது விடயங்கள் இருவருக்கு இடையே நிகழ துவங்கியது. ஆமாம் முதல் முதலாய் இருவருக்கு இடையே முதல் கருத்து வேறுபாடு வந்தது. முதல் ஊடல் வெடித்தது. முதல் கெஞ்சல் கொஞ்சியது. உரிமை கேள்வி கேட்டது. ஆசை மடங்கி நின்றது. நாணம் எட்டி பார்த்தது. வீதியில் கைகள் கோர்த்து நடந்தது.
அவள் கோபத்தில் அக்கறை இருந்தது. அது அவனுக்கு பிடித்து இருந்தது. அவனை விட அவள் பக்குவப்பட்ட பெண்ணாகவே தெரிந்தாள். அது அவனை அரவணைத்தது. அது அவனை தொலை தூர பயணத்திற்கு தயார் படுத்தியது.
மலரின் திருமண ஆல்பம் வந்தது. வீட்டில் அனைவருக்கும் மீண்டும் காவியா நினைவு வந்தது. ஒரு முறை மருத்துவ ஆலோசனைக்காக சென்னை வந்த குணாவின் பெற்றோரை காவியா தன் வீட்டுக்கு அழைத்து சென்று தன் குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்தாள். குணவிடன் இருந்து மதுமிதா வின் கைபேசி எண்ணை வாங்கி மதுமிதா விடம் தவறாமல் பேச துவங்கினால்.
சில மாதங்கள் கழித்து குணவிர்க்கு பெண்பார்க்க முடிவு செய்தனர். பல பெண்களின் புகைப்படங்களும் ஜாதகங்கள் பார்த்தும் ஒருவரையும் யாருக்கும் பிடிக்கவில்லை. வரும் வரங்களை எல்லாம் குணா தடுத்து கொண்டே இருந்தான்.அவன் மனசுலயும் என்ன இருக்கு என்று ஒரு வார்த்தை கேளுங்கள் என்றாள் குணாவின் அம்மா. என்ன இருக்க போகுது என்றார் அப்பா. என்னங்க அந்த காவியா ரொம்ப நல்ல பொன்னா தெரிரா என்று இழுத்தாள் அம்மா. ஆமா பா. என் கிட்ட கூட ரொம்ப அன்பா பேசுறாங்க என்று சொல்லிக்கொண்டு அம்மாவை பார்த்தாள் மதுமிதா . தன் பங்குக்கு ஏதோ சொல்வது போல அப்பு குலைத்தது. எல்லாம் முடிவு பண்ணிட்டு தான் நாடகம் அடுரிங்கலானு கேட்டுகொண்டே அப்பாவும் மொனமாக சிரித்தார்…. சம்மதித்தார். இரு குடும்பங்களும் தொடர்பு கொண்டன. திருமணம் நிச்சயக்க பட்டது.
அதே மன்றத்தில் குணா காவியா திருமணம் நடக்க நிச்சயக்கப்பட்டது. உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் திருமண அழைபிதழ் கொடுக்கப்பட்டது. அழைப்பிதழை பார்த்த பலரும் எனக்கு முன்னாடியே தெரியும். நம்ப மலர் கல்யாணத்திலேயே பார்த்து இருக்கோமே என்று. சித்திரை திங்கள் பதினைந்தாம் நாள் குணா காவியா திருமணதிற்கு நாள் குறிக்கப்பட்டது.
நாதஸ்வரம் இசைக்க, தாள வாத்தியங்கள் ஒலி எழுப்ப, ஊதா நிற சேலை அணிந்து, தாழம்பூவும் ரோஜாவும் சேர்த்து தொடுத்த மாலை அணிந்து, காமாட்சி விளக்கு கையில் ஏந்தி மெல்ல மெல்ல அடியெடுத்து காவியா திருமண மண்டபத்தினுள் நுழைந்தால். மன்றத்தில் கூடி இருந்த அனைவரின் கண்களும் காவியாவை பார்க்க. காவியாவின் கண்களோ குணாவை தேடிக்கொண்டு இருந்தது. அன்று கற்பனைக்கு பூ வைத்து பொட்டு இட்டு உடல் தந்து உயிர் கொடுத்த உறவுகளும் நண்பர்களும் தாங்கள் அன்றே கணித்து விட்டோம் என்ற பெருமை பேசிக்கொண்டு இருந்தனர்.
உறவுகள் சூழ, நல்ல உள்ளங்கள் வாழ்த்த, வந்தவோர் எல்லாம் அட்சதை தூவ காவியா கழித்தில் மாலை அணிந்து மாங்கல்யம் தந்தான் குணா. இருவரும் தம்பதிகளாய் சேர்ந்து அருகில் வைத்து இருந்த குணாவின் பாட்டி புகைபடதிருக்கு முன் கிழே விழுந்து வணங்கினர். ஆமாம் குணா காவியா திருமணத்தை பார்க்க அந்த உசுருக்கு கொடுத்து வைக்கவில்லை. சீக்கிரம் வந்திடுமா என்ற சொன்ன பட்டிக்கு காவியா வரும்வரை காத்திருக்க மனம் இல்லை போலும்.
மன்றமே சேர்ந்து வளர்த்த காதலுக்கு இன்று மன்றமே சேர்ந்து அட்சதை தூவி திருமணத்தை நடத்தி வைத்தது.
மன்றம் வளர்த்த காதல் – குணா காவியா
அருமை