(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அவன் கடற்கரையில் அமர்ந் திருக்கிறான். இன்று அவன் வாழ்க் கையின் கடைசி தினம். இன்று அவன் தற்கொலை செய்துகொள்ள இருக்கிறான். உங்கள் ஊகம் சரிதான். அவன் ஒரு கலைஞன்.
உங்களுக்கு நிச்சயம் தெரிந் திருக்கும், உன்னதக் கலைஞர்கள் யாரும் நோய்வாய்ப்பட்டு சாவ தில்லை என்று. அவர்கள் தற் கொலைதான் செய்து கொள்வார்கள். அவன் அப்படி ஒன்றும் உன்னதக் கலைஞன் இல்லை. என்றாலும், தற்கொலை செய்து கொள்வதன் மூலம் உன்னதக் கவிஞன் ஆகிவிடக் கூடும். ஒரு உன்னதக் கவிஞனுக்குரிய எல்லாத் தகுதிகளும் அவனிடம் உள்ளன என்றே தோன்றுகிறது. சோகம் ததும்பும் முகவெட்டு. மிரட்சியும் பயமும் கலந்த கண்கள். பற்கள் தெரியாதபடி அவன் வீசும் தத்துவார்த்தமான புன்னகை. தவிர, அவன் கவிதைகள் கூட யாருக்கும் புரிவதில்லை. முன்னூறு பிரதிகள் அச்சிடப்படும் பத்திரிகைகளில் தான் அவை வெளியாகின்றன. அவன் வாழ்ந்தால் அந்த அவனுடைய முன்னூறு வாசகர்களுக்காகத்தான் வாழவேண்டும். இறந்தாலும் அதே முன்னூறு பேர்களை முன்னிட்டுத்தான். இன்னும் சொல்லப்போனால் அவன் தற் கொலை செய்து கொள்ள இருப் பதற்கு ராஜகுமாரியைத் தவிர அந்த முன்னூறு பேர்களும் கூட ஒரு வகையில் காரணமாக இருக்கலாம்.
ராஜகுமாரி யாரென்று நீங்கள் கேட்கலாம். ராஜகுமாரி ஒரு எளிமையான சுமாரான அழகுள்ள பெண். ஆனால், அவளுக்குக் கவிதையில் ருசி இல்லை . ராஜ குமாரிக்கு கவிதையில் ஆர்வமில்லை என்பது அவனை சிறிதும் பாதிக்கவில்லை. சுமாரான அழ குள்ள பெண்களுக்குக் கவிதை பிடித்திருக்க வேண்டும் என்று சட்ட மேதுமில்லை. எப்படியும், ராஜ தமாரிதான் அவனைக் காதலிப் பதாகச் சொன்னாள். ஆனால், அவன் அவளை பதிலுக்குக் காத லிப்பதாக சொல்லவில்லை. ராஜ குமாரியை அவனுக்குப் பிடிக்க வில்லை என்று கூறமுடியாது. பிடித்திருக்கிறது என்றும் சொல்ல முடியாது. அவனது கவி மனம் முடிவுகள் எடுத்துப் பழக்கப்பட்ட கல்ல. வாழ்க்கையின் அழகே அகன் நிச்சயமின்மையில்தான் இருக்கிறது என்று கருதுபவன் அவன். மனித மனம் முடிவுகள் எடுக்கும் எந்திரம் என்று யார் சொன்னது?
ஆனால் கடைசியில், துர திருஷ்டவசமாக அவனும் ஒரு முடிவை எடுக்கும்படியே நேர்ந்து விட்டது. ராஜகுமாரியின் காதலை முடிந்தவரை தீர்மானமாகத் தொனிக்கும் குரலில், அவன் நிராகரித்து விட்டான். என் அப் படிச் செய்தான் என்பது அவனுக்கே புரியவில்லை .
தெளிவின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளுக்கும், நிர்ப்பந்தத்தின் காரணமாக எடுக்கப்படும் முடிவு களுக்கும் அடிப்படையில் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை . எந்த ஒரு முடிவும் ஒரு சமயம் தவறென் றும் ஒரு சமயம் சரியென்றும் நிருபணமாகி விடக் கூடியதுதான். இன்று தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று அவன் எடுத் திருக்கும் முடிவும் கூட அப்படித்
இதற்கு முன்பும் அவன் இப்படித் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவோடு இதே கடற்கரையில் இதே இடத்திற்கு வந்து பலமுறை உயிரோடு திரும்பிப் போயிருக்கிறான். தற்கொலை செய்து கொள்வதற்குரிய அதிக பட்ச துணிச்சல் அல்லது கோழைத் தனம் அவனிடம் இல்லை என்று தோன்றுகிறது. ஆனால், இன்று அப்படி நடக்காது. இன்று அவன் நிச்சயமாகத் தற்கொலை செய்து கொள்வான்.
அவன் எழுந்து கடலை நோக்கி நடக்கிறான். கரையின் விளிம்பை அடைந்து.
கடலலைகள் அவன் கால்களைத் தொட்டுக் கொண்டு செல்லும்படியாக கடலின் வெகு சமீபத்தில் உட்கார்ந்து கால்களை நீட்டிக் கொள்கிறான். சிறிது நேரம் கடலை வேடிக்கைப் பார்த்தபின் நிச்சயம் அவன் தற் கொலை செய்து கொள்வான்.
கடல்! கடல்தான் எவ்வளவு அற்புதமானது! கண்களுக்கு எட்டிய வரையிலும் அதற்கு அப் பாலும் நிறைந்து கிடக்கிறது கடல், பிரம்மாண்டமான அலைகள் ஆவேசமாகப் பாய்ந்து வருகின்றன. பெரிய சிறிய அலைகள் ஒன்றோடொன்று உரசிக் கொண்டே வந்து பின் கரையில் விழுந்து சிதறும்போது ஏற்படும் சத்தம் அவனுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அந்த அமுங்கலான பெரிய ஒலி அவனுடைய இதயத்துக்குள் ஏற்படுத்தும் சலனம் ரொம்பவும் வசீகரமானது. தொடர்ந்து அலைகள் பின்வாங்க நிலவும் அந்த அரை நொடி அமைதியில் மரணத்துக்கு பின்பான மௌனம் கொந்தளிப்பதாக அவன் கற்பனை செய்து கொள்கிறான். கடல் எப்போதுமே அவனுக்கு இறுதி யில் மரணத்தையே நினைவூட்டி விடுகிறது! இயற்கையின் பிரம்மாண்டம் என்பது மனிதனுக்கு என்றுமே ஒரு அநாவசியத் தொல் லைதான். எதிர்கொண்ட ஒரு கணத்தில் மனிதனின் இயலாமையைப் பரிகசிக்கத் துவங்கிவிடும் அது.
சூரியன் மறைவதற்கான சுவடு போல் வானத்தில் லேசான பொன் னிறம் படர்ந்திருக்கிறது. தூரத் இல் எங்கோ இரண்டு படகுகள் தெரிகின்றன. கரையில் சில மீன வர்கள் காய்ந்த வலைகளை விரித்து சரிபார்த்துக் கொண்டு இருக் இறார்கள். பீடி புகையும், வியர்வை யும் கமழ அவர்கள் அவன் உட் கார்ந்திருக்குமிடத்தைச் சுற்றி அங்கும் இங்குமாக நடமாடுகிறார்கள். அவர்களில் ஒருவன் – சற்று வயோதிகன், தரைத்த மீசையும், ஒளி வீசும் கண்களையும் கொண் டவன் – அவனைப் பார்த்துப் புன்னகைக்கிறான். அவன் பதிலுக்குப் புன்னகைத்தபடி அவனிடமிருந்து வீசிய வியர்வையின் மணத்தை நினைத்துக் கொள்கிறான்.
ஒரு வகையில் ராஜகுமாரிக்கும் அவனுக்கும் இடையில் ஏற் பட்ட உராய்வுக்கு வியர்வையின் மணமும் ஒரு காரணம். முதல்முதலாக ‘இளவரசனின் மூலையில்’ எதிர்கொண்ட அவளது சிரித்த முகமும், அப்போது அவளிட மிருத்து வீசிய வியர்வை மணமும் ஞாபகம் வருகிறது அவனுக்கு. பாவம்! அறியாப் பெண். அப்படி அவனில் என்னதான் கண்டாளோ? அவனுக்கு உரக்க நாடகத்தன மாக சிரிக்க வேண்டும் போல் இருக்கிறது. தன் அற்ப வாழ்க்கையை நினைத்து. அவன் வாயைப் பிளந்து கடலைப் பார்த்து சத்தத் துடன் சிரிக்கிறான்.
உண்மையில் அவன் வாழ்க்கை மிகவும் அற்பமானதுதான்.
அவன் பெயர் ராகுல். கே. நாயக். அவன் ஒரு குஜராத்தி. ஏழை. வயது 24. உயரம் 6.3″, ஒல்லியான உருவம். மாநிறம். நுனி மழுங்கிய நீண்ட் மூக்கு. தலையும் கழுத்தும் வித்தியாசமில் லாமல் நீண்டு ஒரே கனத்தில் இருக்கும். சுருக்கமாகச் சொல்வதானால் அவன் ஒரு ஒணானைப் போல் அழகாகவே இருப்பான். எட்டாவது வரை படித்திருக்கிறான். ஆங் கிலம், குஜராத்தி இரண்டுமே அவனுக்கு சரியாக வராது. தமிழ் மட்டும் கொஞ்சமாக. ரொம்ப ரொம்ப கொஞ்சமாகத் தெரியும். இந்த தைரியத்தில்தான் அவன் தமிழில் கவிதைகள் எழுதினான் என்றும் சொல்லலாம். கல், மண் தோன்றாத காலத்திலிருந்தே இருந்து வரும் தமிழை அவன் கவிதைகள் ஒன்றும் செய்து விடவில்லை.
ஆறு மாதங்களுக்கு முன் அவன் சென்னைக்கு வந்ததே கவிதைகள் எழுதிப் பெரிய ஆளாகி விடலாம் என்றுதான். ஆனால் சென்டரலில் இறங்கியதுமே தெரிந்து விட்டது. அவனது கனவு பலிக்கப் போவதில்லை யென்று. இதுநாள் வரை அவனது எந்தக் கனவும் பலித்ததில்லை . ஊரில் விதவைத் தாய், தையல் காரனோடு ஓடிப் போய்விட்ட அக்கா. சின்னஞ்சிறு சகோதரர்கள் இந்தப் பின்னணியில் கனவுகள் என்றுமே கனவுகளாகத்தானிருக்க முடியும்.
வறுமையின் தோழமை அவ னுக்குப் புதியதே அல்ல காலியான வயிற்றில் கண்டெலிகள் ஓடி அட்டகாசம் செய்வது போல் துவங்கும் பரியின் உக்கிரமான சீண்டலை அவன் தனது 13வதுதி வயதிலியிருந்தே அனுபவித்து வந்திருக்கிறான். கிழிந்த சட்டைகள், இழிந்த செருப்புகள் தவிர வேறு எதையும் அவள் அணிந்ததில்லை . இந்தச் சிவமைகனை அவன் வெகு இயல்பாக ஏற்றுக் கொண்டான். அவனுக்குத் தெரியும். இந்திய ஏழ்மை யென்பது இந்திய மெய்ஞ்ஞான விழிப்புணர்வு போல் எல்லை காணாதது என்று.
உறவினர் ஒருவர் வீட்டில் தங்கி தினமும் நிறைய இடங்களில் வேலை தேடி அலைந்தான். ைெடயிடையே நிறைய கவிதை களும் எழுதினான். கடை கடையாக அலைந்து கடைசியில் பாண்டி பஜாரில் ‘இளவரசனின் மூலை’ என்ற அந்த ரெடிமேட் துணிக் கடையில் வேலை கிடைத்தது. மாதம் ரூபாய் 250. பத்து மணி நேர வேலை. அவன் ராஜகுமாரியை சந்தித்தது இங்குதான். ‘இளவரசனின் மூலையில் அவ னோடு ராஜகுமாரியைத் தவிர ஜெயகுமார். காஜா. ரத்தின சிங்கம், வெங்கடேசன் ஆகியோரும் வேலை பார்த்தார்கள். ராஜ குமாரியைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் தங்கள் கழ்நிலை சரியில்லாததால்தான் இளவர சனின் மூலை யில் வேலை செய் தார்கள். ரத்தினசிங்கம் லெங் கையிலிருந்து தமிழ் சினிமாவுக்கு கதை வசனம் எழுத வந்தவன். ஜெயக்குமாருக்கு தீயணைப்புப் படையில் வேலை கிடைக்கவில்லை. காஜாவுக்கு மாநகராட்சியில் கடை நிலை ஊழியன் தப்பிப் போய் விட்டது. வெங்கடேசன் அசோக் லேலண்டில் மாதம் ரூபாய் ஆயிரம் சம்பாதிக்க வேண்டியவன். ஆனால் வெறும் முன்னூறு ரூபாய்க்கு இளவரசனின் மூலையில் மார டித்துக் கொண்டிருந்தான்.
ராஜகுமாரி மட்டும். ரெடி மேட் கடையில் விற்பனை குமாஸ் தாவாக பணிபுரிவதற்காகவே அவதாரம் எடுத்தவள் போல் உற் சாலம் குன்றாமல் காணப்பட்டாள். ராஜகுமாரி சற்று குள்ளம். 4’7″க் கும் சற்றேதான் அதிகம். சுருள் சுருளான அடர்ந்த கேசம். ஆனால் நல்ல சிவப்பு. லட்சண மான முகம். உயரம் மட்டும் இருந்திருந்தால் அவள் பேரழகிதான்.
வேலையில் சேர்ந்த சில நாட் களிலேயே அவன் சக ஊழியாகள் அவனை எளிதாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள். ரத்தினசிங்கம் மட் டும் அவனை ஒரு பொருட்டாக கருதவில்லை. ரத்தினசிங்கம் அவனை ஒரு முட்டாள் என்றே நினைத்தான். தமிழ் சினிமாக் களுக்கு கதை வசனம் எழுத அறிவாளிகளால் தான் முடியும் என்று ரத்தினசிங்கம் நம்பினான்.
என்றாலும், அந்த நாட்கள் இனிதாகவே கழிந்தன என்று சொல்லலாம். ஞாயிற்றுக்கிழமை களில் அவன் நடேசன் பூங்காவில் உட்கார்ந்து கவிதைகள் எழுதினான். மூன்று வேளை சோறு சாப்பிட்டான். மரங்கள் கைகோர்த்து நிற்கும் பாண்டி பஜாரில் நள்ளிரவுக்கு மேல் தனியாக நடந்து திரிந்தான். அயல்நாட்டுத் தூத ரகங்களில் ஐரோப்பிய சினிமாக்களைப் பார்த்தான், லெக்கியக் கூட்டங்களுக்கு சென்றான். நண்பர்கள் கிடைத்தனர். அவன் கவிதைகளும் பிரசுரமாகத் துவங்கின. குறிப்பாக, மரங்களைப் பற்றி அவன் எழுதிய ஒரு கவிதை எல்லோர் கவனத்தைம் ஈர்த்தது.
இரவில்
மரங்களுக்கோர் தனியழகு
(மனைவிகளைப் போல்)
ஆலம் தரை நோக்கும்
பனையோ மேலே பார்க்கும்
தென்னை தலையவிழ்ந்து
நிலவை சலிக்கக் காக்கும்
விழிகள் துயிலுடன் பேரம்
பேசும்
மரங்களோ
இருட்டில் கரைய மறுத்து
அழுத்தப் பச்சையில்
அழகு காட்டும்
என்றென்றும்
மரங்களுக்கோர் தனியழகு
இரவில் மனைவிகளைப் போல்….
ஆனால் ‘இளவரசனின் மூலை’ யில், ராஜகுமாரி உட்பட யாருக்கும் இந்தக் கவிதை பிடிக்கவில்லை. “இதெல்லாம் ஒரு கவிதையா?” என்று உதட்டைப் பிதுக்கி சிரித் தாள் ராஜகுமாரி
பிறகு திடீரென்று ஒரு நாள் அவனை ராஜகுமாரி காதலித்தாள். அன்று மதியம் வழக்கமாக ஓட் டலில் சாப்பிடும். அவனை ஜீவா பூங்காவுக்கு அழைத்தச் சென்று வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த புளியோதரையையும், தயிர்சாதத் தையும் கொடுத்து அவனை காத லிப்பதாகவும் கூறினாள். அவன் ஆச்சரியப்பட்டுப் போனான், தன் னையும் காதலிக்க ஒருத்திக்கு மனம் வந்ததே என்று. என்றாலும் உடனே சமாளித்துக் கொண்டான். சட்டென்று ஒரு வினோத மமதை அவனை ஆட்கொண்டது. விரக் தியும் பகட்டும் தொனிக்கும் ஒரு குரலில் அவன் சொன்னான் — “இதோ பார் ராஜகுமாரி! என் உலகம் வேறு உன் உலகம் வேறு. ஒரு சாதாரண பெண். நானோ ஒரு கவிஞன். எனக்குக் காதலில் அப்படியொன்றும் பெரிய நாட்டமில்லை . ஏதோ விதி வசத்தால் நான் இப்படி ஜவுளிக் கடையில் சீரழிகிறேனே தவிர வாழ்க்கை பற்றி தான் கொண்டிருக்கும் லட் சியங்கள் மிக உயர்ந்தவை. சிகரம் களை நோக்கிய என் பாய்ச்சலின் போது காதல் என்பது எனக்கு ஒரு சுமையாக மட்டுமே இருக்கு முடியும். தயவு செய்து என்னை மன்னித்து விடு.” -ராஜகுமாரி அவன் கூறுவதில் நம்பிக்கை அற்றவளாக ஏன்துடன் வாயைத் திறந்து புன்னகைத்தாள்.
அவன் மேலும் தொடர்ந்தான், “தவிர உன்னைக் காதலிப்பதில் இன்னொரு சங்கடமும் இருக் கிறது. உனக்கு பயங்கரமாக வியர்க்கிறது. உன் மேலிருந்து வீசும் வியர்வை பூண்டு நாற்ற மடிக்கிறது. யாரையாவது காத லிக்கும் முன் உன் வியர்வை நாற் றத்தை போக்க நீ ஏதாவது மருந்து சாப்பிட்டுக் கொள்.” அவன் இப் படி சொன்னதும் ராஜகுமாரிக்கு முகம் விழுந்து விட்டது.
மறுநாள் முதல் பிடித்தது சனியன் அவனுக்கு! ‘இளவரசனின் மூலை’ யில் முதலாளிக் கிழவன் திடீரென்று அவனை விரட்ட ஆரம்பித்தான். ஐந்து நிமிடம் தாமதமாக வந்தால் திட்டு, வாடிக் கையாளர்கள் வாங்காமல் திரும்பிச் சென்றால் திட்டு, மதிய உணவிற் குப் பின்பு சிறிது ஒய் வெடுத்தால் திட்டு, எழுந்தால் திட்டு உட்கார்ந்தால் திட்டு எல்லாம் ராஜகுமாரியின் கைங்கர்யம் என் றார்கள் சக ஊழியர்கள். 305 ரூபாய்க்கு துணிகள் வாங்கிய ஒரு வாடிக்யைாளருக்கு ஐந்து ரூபாய் கழிவு தர ஒப்புக் கொண்டது மாபெரும் தவறாகி விட்டது. முதலாளி கிழவனுக்கும் அவனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கடை சியில் அவன் திடீரென்று வேலை நீக்கம் செய்யப்பட்டான். ஐந்து நிமிடத்திற்குள் எல்லாமே நடந்து முடிந்து விட்டது. வேலை பறி போனது அவனுக்கு ஒரு பெரிய அடிதான். அதை விடவும் அதை இழந்த விதம் தான் அவனுக்கு மிக மிக அபத்தமாகப் பட்டது. என்றாலும் ராஜகுமாரிக்கு தன் மீதிருந்த அதீதக் காதல்தான இப்படி அதீத வன்மமாக வெளிப்பட்டிருக்கிறது என்று கற்பித்துக் கொண்டான் அவன். சென்ற வாரம் வரை வாழ்க்கைக்கு தன்னிடம் இப்படி ஒரேயடி யாக இரக்கமில்லாமல் போய் விடும் என்று அவன் நினைத்திருக்கவில்லை. இன்று எல்லாமே வரம்பு மீறிப் போய்விட்டதாகத் தோன்றுகிறது. எல்லாமே உலர்ந்து விட்டது போல் இருக்கிறது அவனுக்கு
கடற்கரையில் காற்று வாங்க மனிதர்கள் குழுமிவிட்டார்கள். படகுகள் கரை சேர்ந்து விட்டன. மீனவர்கள் போய்விட்டார்கள். இளம் காதலர்கள் இருட்டில் பதுங்குகிறார்கள். வானத்தில் நட் சத்திரங்கள் பூத்துவிட்டன.
அவன் கடலையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறான். மரணத்தின் தறுவாயில் நிற்கும் தனக்கு கடைசி நிமிடத்தில் சிந்திக்க பெரிதாக ஒன்றுமில்லை என்ற உணர்வு அவனுக்கு ஆறுதல் அளிக்கிறது. தற்கொலை செய்து கொள்வதற்கு உகந்த மனநிலைக்கு அன்று காலையிலிருந்த அவன் தன்னை ஆயத்தமாகிக் கொண் டிருந்தான். மனதின் றுெக்கம் குலைந்து விடாமல் இருக்க இன்று அவன் யாரோடும் பேசவில்லை. யாரைப் பார்த்தும் சிரிக்க வில்லை. கண்ணாடியில் தன் முகத் தைக் கூடப் பார்த்துக் கொள்ள வில்லை . அவன் முகம் சுவாரஸ்ய மற்றதுதான் என்றாலும் இப்போது கண்ணாடியில் தன் முகம் பார்க்க எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொள்கிறான் அவன். மனித முகம் எல்லாவற்றையும் பிரதிபலித்து விடுவதில்லை. ஆசை. காதல், அன்பு, துக்கம் போன்ற மொண்ணையான உணர்வு களை அரிதாரம் போல் அத னால் அழுத்தமாகப் பூசிக் காட்டி விட முடியும். ஆனால், ஆழ் மனதில் புதைந்திருக்கும் வக்கிரத் தையும், குமுறலையும் அதனால் தீண்டக் கூட முடியாது. மலரின் மகரந்தம் வண்டால் யதேச்சை யாக பங்கப்படக் காத்திருப்பது போல் ஆழ்மனதின் கதவுகளும் மரணத்தின் கைகளால் அறையப் பட காத்திருக்க வேண்டும். மனித வாழ்க்கையின் பேதைமை பாவங்களுக்கு வசப்படாதது.
இறக்க இருக்கிறவனுக்கு முசு பாவம் முக்கியமில்லை. மனநிலை தான் முக்கியம். எப்படியும் சாவு நல்லதுதான். காரணமற்று சாவ தற்கும் காரணத்துடன் சாவதற்கும் அதிக வித்தயாசமில்லை . ஏன் வாழ்வுக்கும் சாவுக்கும் கூட அதிக வித்தியாசமில்லை. வாழ்க்கையின் நிரூபணமே மரணம்தான். அவன் பின்புறம் சாய்ந்து படுத்து வானத்தைப் பார்க்கிறான். நிலவு, நட்சத்திரங்கள், தன் இளமைப் பருவம், தன் தாய், தன் கவிதைகள் என்று பலவாறாக எண்ணங்கள் அலைபாய்ந்து, கடைசியில் மீண்டும் ராஜகுமாரியைப் பற்றியே அவன் சிந்தக்கிறான்:- ‘யோசித் துப் பார்த்தால் ராஜகுமாரி மிக நல்லவள் என்றே தோன்றுகிறது. பேசாமல் நான் அவளது காதலை ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஒரு காதலிக்குரிய வசீகரம் அவளிடம் நிச்சயம் இருக்கிறது. அதை விட வும் காதல் வயப்பட ஒரு மனதின் மாசற்ற ஆவேசம் அவள் கண் களில் மலர்ந்ததை நான் பார்த்திருக்கிறேன். அன்பின் ஊற்றி லிருந்துதான் காதலும் பிறக்கிறது என்பதை புரிந்து கொள்ளாத மூடன்தான். அவளையும், அவள் உடல் மனத்தையும் பரிகசிக்க எனக்கு என்ன தகுதி இருக்கிறது? இளமையின் அழகே உடல் மூலம் தான் துவங்குகிறது. இளம் மனதின் மாண்பும் கூட உண் மையில் ராஜகுமாரி ஒரு அற் புதமான பெண்.’ கடலலைகள் அவனது பாதங்களை வருடிக் கொண்டு செல்ல, அவன் கண் களை அழுத்தமாக மூடித் திறக்கிறான். விண்மீண்கள் நிறைந்து சிரிக்கும் வானக் காட்சி அவனக் குள் மிகுந்த பரவசத்தை ஏற்படுத்துகிறது. அவனுக்குக் கதறி அழ வேண்டும் போல் இருக்கிறது. அவன் மீண்டும் கண்களை மூடிக்கொள்கிறான்.
சற்றுக் கழித்து யாரோ தன்னை நோக்கி நடந்து வருவது போல் இருக்கிறது அவனுக்கு. ஈரமான மண்ணில் காலடிகளின் மென்மையான சப்தம் அவன் காதருகே கேட்பதை உணர்கிறான். அவனுக்கு மிக அருகில் யாரோ நின்று கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. அவன் கண்களை லேசாகத் திறந்து பார்க்கிறான், நிற்பது ராஜகுமாரி போல் இருக் கிறது. அவன் ஆச்சரியத்துடன் கண்களை முழுவதும் திறந்து பார்க்கிறான். சந்தேகமேயில்லை, ராஜகுமாரிதான். அவன் சட் டென்று எழுந்து உட்கார்ந்து கொள்கிறான். ராஜகுமாரி அந்த நிலவொளியில் மிக அழகாகக் காட்சியளிக்கிறாள். அவனைப் பார்த்து சிரிக்கிறாள். அவன் சற்று நகர்ந்து அவளைத் தன்னருகே உட் காரும்படி சமிக்ஞை செய்கிறான். அவள் உட்கார்ந்து கொள்கிறாள்.
அவன்: நீ எப்படி இங்கே ?
ராஜகுமாரி: புழுக்கமாக இருந்தது. வந்தேன்.
அவன்: எனக்கும் தான்.
ராஜகுமாரி: கோடை காலம்.
அவன்: ஆம் ரா.கு. உனக்குமா வியர்க்கிறது?
அவன்:’புரிகிறது. என்னை மன்னித்து விடு. உன்னிடம் நான் அப்படிப் பேசியிருக்க கூடாதுதான்.
ரா.கு: பரவாயில்லை . நீ உண் மையைத் தானே கூறினாய்.
அவன்: ரொம்ப வருத்தமாக இருக்கிறது.
ரா.கு. அப்படித் தானிருக்கும்.
அவன்: நீ நினைப்பது போல் நான் அவ்வளவு மோசமானவன் அல்ல.
ரா.கு: தெரியும்.
அவன்: நீ நம்ப மாட்டாய். நான் இன்று இங்கு வந்ததே தற்கொலை செய்து கொள்ளத்தான்.
ரா.கு. ஓ! அப்படியா?
அவன்: பரிகாசம் செய்யாதே. நான் ஏற்கனவே மனம் நொந்து கிடக்கிறேன்.
ராகு: நீ ஒரு முட்டாள்.
அவன்: உண்மைதான்.
ரா.கு. நீ ஒரு கோழை. சுத்த அயோக்கியன்.
அவன்: அதுவும் உண்மைதான். அவர்கள் மௌனமாக இருக்கிறார்கள்.
ராகு: நீ உன் வாழ்க்கையில் யாரையாவது காதலித்திருக்கிறாயா?
அவன் இல்லை .
ரா.கு. காதலிப்பது குற்றமா?
அவன்: இல்லை
ரா.கு: காதலிக்கு வியர்ப்பதுதான் குற்றமா?
அவன்: இல்லவே இல்லை .
ரா.கு: மறைக்காமல் சொல், நீ என்னைக் காதலிக்கவில்லை ?
அவன்: ஆம். ஒப்புக்கொள்கிறேன். நான் உன்னைக் காதலிக்கிறேன்.
ரா.கு: பின் ஏன் நாடகமாடுகிறாய்?
அவன்: அதுதான் எனக்கும் புரிய வில்லை .
ரா.கு: என்ன புரியவில்லை?
அவன்: ஒன்றுமில்லை . நீ அறியாப் பெண். வாழ்க்கையைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது. காதல் என்ற உணர்வு சந்தர்ப்பவசமானது.
ரா.கு. அதனால்?
அவன்: காதலுக்கான சந்தர்ப்பம் இப்போது இல்லை.
ரா.கு. உளறாதே.
அவன்: நான் தவறாகப் பேசியிருந் தால் என்னை மன்னித்து விடு. எனக்கு ஒன்றும் புரியவில்லை . உன்னைக் காதலிப்பதில் எனக்கு நிறைய அசௌகரியங்கள் உள்ளன.
ரா.கு: என்ன அசௌகரியம்?
அவன்: என் அம்மாவைப் பற்றி உனக்குத் தெரியாது. உன் வயதில் அவள் 5 குழந்தைகளைப் பெற்று விதவையும் ஆகிவிட்டாள். ரொம்ப வும் கோபக்காரி. பாவம் என் மீது ரொம்பவும் நம்பிக்கை வைத்திருக் கிறாள். நான் தான் அவளுக்கு எல்லாம்.
அவளது பாழும் நெற்றியைப் பார்த்துப் பார்த்து எனக்கு காதல், அன்பு, பாசம் திெலெல்லாம் நம் பிக்கையே போய்விட்டது. முகம் சுளிக்காமல் கேள். வறுமை எல் லாவற்றையும் உலர்த்தி விடக் கூடியது. மனிதர்களுக்கு பிறரிடம் வெளிப்படுத்த தேவைகளைத் தவிர வேறு ஒன்றுமேயில்லை. மனிதர்களின் அந்தரங்கம் வெறும் தேவைகளால் ஆனது. நெருங்கிப் பழகினால் தெரியும் உனக்கு மனிதர்கள் வெறும் தேவைகளின் பொதிகள்… என்றாலும் நீ ஒரு அற்புதமான பெண். உனக்கு வாழ்க் கையிடமும் மனிதர்களிடமும் பெரிய புகார்கள் ஏதுமில்லை . மனிதர்களுக்குக் கொடுக்கவும், அவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் உன்னிடம் அன்பு இருக்கிறது. காதல் இருக்கிறது. பாசம் இருக் கிறது. ஆனால், என்னிடம் ஒன்று மில்லை . என் உலகம் அன்பற்றது. விரக்தியும் சஞ்சலமும் மிகுந்தது. நிழலுக்கும் நிஜத்துக்கும் உள்ள பேதத்தில் எனக்கு ஆர்வமில்லை. அதை நான் என்றோ புறக்கணிக்க விட்டேன். என் சோகம் உண்மை யானதா பொய்யானதா என்று கூட எனக்கு நிச்சயமாகத் தெரியாது. என்னோடு இணைந்தால் உன் வாழ்க்கைதான் வீணாகும். ‘இளவரசனின் மூலை’யில் கவுன் விற்பது தான் உனக்கு உசிதமானது.
ரா.கு: நீ ரொம்பவும் உளறுகிறாய்.
அவன்: உண்மைதான். ஆனால், நான் உன்னைக் காதலிப்பதை என்னால் தாங்கிக்கொள்ள முடிய வில்லை.
ரா.கு: நீ சரியான பைத்தியம்.
அவன்: நாம் எல்லோருமே பைத் தியங்கள்தான்.
ரா.கு: நான் உன்னை மிகவும் வெறுக்கிறேன்.
அவன்: நீ என்னை வெறுக்கவேண்டும் என்பதுதான் என் விண்ணப்பமும்.
ரா.கு: நீ செத்துப் போனால் என்ன ஆகும்?
அவன்: ஒன்றும் ஆகாது.
ரா.கு: பின் எதற்காக காத்திருக் கிறாய்? போய் செத்துத் தொலை. அதோ கடல் உனக்காக காத்திருக்கிறது.
அவர்கள் மீண்டும் மௌனமாக இருக்கிறார்கள்.
அவன்: நன்றாக இருட்டிவிட்டது.
ரா.கு: ஆம்.
அவன்: நட்சத்திரங்கள் அழகாக மின்னுகின்றன.
ரா.கு: ஆம்.
அவன்: முழு நிலவு அற்புதமாக ஜொலிக்கிறது.
ரா.கு: ஆம்
அவன்: கடலலைகள் பெரிதாகி ஆர்ப்பரிக்கின்றன.
ராகு: ஆம்.
அவன்: குளிர்ந்த கடல் காற்று சந் தோஷத்தை அளிக்கிறது.
ரா.கு: ஆம்.
அவன் : நிலவொளியில் உன் முகம் அழகாகத் தெரிகிறது.
ரா.கு:…
அவன்: உன் சுருள் சுருளான கேசம் காற்றில் அலைக்கழிந்து உன் முகத்தில் விழும்போது நீ பேரழகாய் காட் சியளிக்கிறாய்.
ரா.கு:…
அவன்: உன் நீண்ட கை விரல்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றன.
ரா.கு:…
அவன்: உன் விரல்கள் மிகவும் மென்மையாக இருக்கின்றன.
ரா.கு:…
அவன்: எனக்கு இதுதான் முதல் முறை. எவ்வளவு கதகதப்பாக இருக்கிறது உன் ஸ்பரிசம்.
ரா.கு:…
அவன்: உன் உள்ளங்கையை நான் கிள்ளட்டுமா?
ரா.கு:…
அவன்: உன்னை என் மடியில் கிடத்தி வாஞ்சையுடன் உன் தலையை வருடவேண்டும் போலிருக்கிறது.
ரா.கு: ……
அவன்: நீ சம்மதித்தால் உன் சின்ன உதடுகளை முத்தமிடவும் எனக்கு விருப்பம்தான்.
ரா.கு:…
அவர்கள் இறுகத் தழுவிக் கொள் கிறார்கள். காலம் ஸ்தம்பித்து விடுகிறது.
சற்றுக் கழித்து, மெல்லிய குரலில் அவர்கள் ஏதோதோ கிசுகிசுத்துக் கொள்கிறார்கள்.
ரா.கு: ஒன்று கேட்கட்டுமா?
அவன்: ம்…….
ரா.கு: உனக்கு என்னைப் பிடித் திருக்கிறதா?
அவன்: ம்……
ரா.கு.: ரொம்பவும் பிடித்திருக்கிறதா?
அவன்: ம்.ம்.ம்……
ரா.கு: என் வியர்வை மணம்…..? அதனால் பரவாயில்லையா உனக்கு?
அவன்: ம்…..
ரா.கு: நான் அழகா?
அவன்: ம்…
ராகு: நீ என்னைக் காதலிக்கிறாயா?
அவன் : ம்….
ராகு: நிச்சயமாக காதலிக்கிறாயா?
அவன்: ம்…
ரா.கு: குழப்பம் இல்லையே?
அவன் : ம்ஹும்.
ரா.கு: சத்தியமாக?
அவன்: சத்தியமாக?
ரா.கு: பார்த்தாயா! எனக்குத் தெரியும் என் காதல் உண்மையான தென்று.
அவன்: நீ பெரிய சாகசக்காரி.
ரா.கு. போதும், இறுக்கதே. இன்னும் எத்தனை முறைதான் முத்தமிடுவாய்?
அவன்: இதுதான் கடைசி.
ரா.கு: ச்சி! வெறியனே! இவ்வளவு ஆசையை வைத்துக் கொண்டு என்ன நாடகமாடிவிட்டாய்! இருவரும் சிரிக்கிறார்கள்.
ரா.கு. சரி கிளம்பலாமா? நேரமாகி விட்டது.
அவன்: ம்…..
ரா.கு: சரி. கைகளை எடு.
அவர்கள் எழுந்து சாலையை நோக்கி நடக்கிறார்கள்.
அவன் : மறுபடியும் எப்போது வருவாய்!
ரா.கு: தெரியாது
அவன்: நாளைக்கு?
ரா.கு: இல்லை
அவன்: அடுத்த ஞாயிற்றுக்கிழமை?
ராகு: ம்……
சாலை வெறிச்சோடிக் கிடக் கிறது. பஸ் நிறுத்தத்தில் கடைசி பஸ்ஸுக்காக ஓரிருவர் நிற்பது தெரிகிறது. வெர்கள் சாலையைக் கடந்து பஸ் நிறுத்தத்தை அடைத்த வுடன் சொல்லி வைத்தாற் போல் பஸ்ஸும் வந்து விடுகிறது.
காலியான பஸ்ஸில் இருவரும் ஒரு ஓரமாக முடங்கிக் கொள்கிறார்கள். அருகே வந்த நடத்துனரிடம் ஆள் காட்டி விரலையும் பாம்பு விரலையும் விரித்து “இரண்டு பாண்டி பஜார்” என்கிறான் அவன். நடத் துனர் அவனை ஒரு மாதிரி யாகப் பார்த்து விட்டு ஒரே ஒரு சீட்டை மட்டும் கிழித்துக் கொடுக் கிறார். அவன் ராஜகுமாரி பக்கம் திரும்பி ஏதோ சொல்ல வாயெடுக் கிறான். ஆனால், ஜன்னலோரமாக உட்கார்ந்திருந்த ராஜகுமாரியை திடீரென்று காணவில்லை! அவன் கண்பணையிலிருந்து வந்தவள் அவன் கற்பனையோடு மறைந்து விட்டிருந்தாள்.
மறுநாள் : – அவன் கடற் கரையில் அமர்ந்திருக்கிறான் இன்றும் அவன் வாழ்க்கையின் கடைசி தினம். இன்றும் அவன் தற்கொலை செய்து கொள்ள இருக்கிறான். அவன் தன் கடைசி கவிதையையும் எழுதி வைத்து விட்டு வந்திருக் கிறான். இன்று அவன் நிச்சயம் செத்துப்போவான்.
மார்கழி அதிகாலை.
சன்னமாய் கேட்கிறது எங்கிருந்தோ ஒரு பக்திப் பாடல்.
உலகம் மாறாமல் ஒழுகிச் செல்கிறது.
ஒரு பழக்கப்பட்ட முகச்சாயல் போல் என்னுள் கரைந்து வதைக்கிறது வாழ்க்கை.
ஓவியனின் கற்பனையில் துடிக்கும் வடிவத்துணுக்குகள் போல் என் மேஜையெங்கும் பரவிக் கிடக் கின்றன முகங்கள், பாவங்கள், குரல்கள்.
யார் முகம் பார்க்க நான்
யார் குரல் கேட்க நான்
எங்கிருந்து துவங்க நான்
கற்பனையில் உதிர்ந்த சருகுகள்
கொண்டு
கூடு கட்டும் குருவி ஜாலம்
என்றும் பலிப்பதில்லை – என்றும்
இதயம் வற்ற இருக்கும் சோகச்சுரபி போல்
கடைசித் துளிகளை ஆழ்ந்த கசப்
புடன் பாய்ச்சுகிறது. காற்றற்ற பிற்பகலில் அசையா
விழுதுகளாய் பிணைந்து தெரிகிறது
தொன்மையான வாழ்க்கை
ஆசைகளின் சிறகுகளை
நானறிவேன்
அன்பின் வழித்தடத்தையும் கூட.
நிழல்கள் சூழ்ந்த உலகின் ஒளிப்பட்டு பளிச்சிட்ட ஒரு சிறு கோணம்
மழலையின் முதல் புன்னகை
போல்
நிரப்புகிறது
இல்லை
பரிகசிக்கிறது என்னை .
மாறாமல் ஒழுகிச் செல்கிறது உலகம்.
– ஏப்ரல் 1992