வு.ஏ. இல் நியூஸ் வாசிக்கிற பெட்டை அடிக்கடி, தேவையில்லாமல் பல்லைக் காட்டியது எனக்கு விசரேத்தியது. இவளவைக்கு ஏன் இநதத் தேவையில்லாத வேலை. நியூஸ் வாசிக்க வந்தால், நியூஸை வாசித்து விட்டுப் போறதுக்கு சும்மா போலித்தனமாக நடித்துக்கொண்டு… போலி நாய்கள்! எல்லாருமே போலிகள்!
இண்டைக்கு எனக்கொரு பொன்னான நாளாய் அமையப்போகுது என்று ராத்திரி படுக்கேக்கை நினைத்துக் கொண்டனான். ஆனால், விடியக்காத்தாலை இந்தப் பெட்டை நாய் பல்லைக்காட்டி விசரேத்துது. இண்டைக்குத்தான் தேவகியை ஆறேழு மாதத்திற்குப் பிறகு பார்க்கப் போகிறேன். நான் அனுப்பின காசிலைதான் கனடா வந்தவள். இங்கே வந்த பிறகு, நாலு ஐந்து வருசமாய் தேவி அக்காவோடு பக்கத்து பில்டிங்கிலே இருந்தவள். பிறகு, ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் வெளிக்கிட்டு வேறெங்கேயோ இருக்கப் போயிட்டாள். இத்தனைக்கும், அடுத்த வருஷமளவிலே எனக்கும் அவளுக்கும் கலியாணம் என்று நிச்சயித்தாச்சு. இப்பிடிப் போனால் என்ன அர்த்தம்? என்னைப் பிடிக்காமல் தான் போனாள் என்று அவளின்டை சொந்தங்கள் சொல்லிச்சினம், எனக்கு நம்பிக்கையில்லை. இவங்கள் தான் அவளின்டை மனசை மாத்திக் கூட்டிக் கொண்டு போய் வைத்திருக்கிறாங்கள் என்று நினைத்தேன்.
பிறகொரு நாள், அவளின்டை ஃபோன் நம்பரை ஒருத்தர் மூலமாக எடுத்து, அவளைப் பிடிச்சிட்டேன். “ஏன் தேவகி, என்னைப் பிடிக்காமல் தான் போனியோ?” என்று நான் கேட்டேன்.
“ம்,“ என்றாள். பன்ரெண்டாயிரம் ஏஜென்டுக்கும், இவளுக்கு செலவுக்கென்று மேலே இரண்டோ மூன்றோ அனுப்பினதுக்கு, அவள் தருகிற பதில் – ஒரு சொல், ஒரு எழுத்து.
“ஏன் என்னை பிடிக்கேலை?”
“-”
“ஏன்டி என்னை பிடிக்கேலை?”
“I dont know…I have to go now. Bye.” என்று போட்டு ஃபோனை வைத்திட்டாள். எனக்குப் பொல்லாத கோபம். திரும்பத் திரும்ப அவளுக்கு ஃபோன் அடித்தேன். ஒருத்தரும் எடுக்கேலை. ஆனால், அடுத்த நாள் ஆளைப் பிடித்திட்டேன்.
“ஏன்டி, உனக்காக நாய் போல உழைத்து காசு அனுப்பிக் கூப்பிட்டதிற்கு, நீ காட்டுகிற நன்றியோடி இது.? நான் என்னடி, உன்னட்டை காரணம் தானே கேட்கிறேன், காசோடி கேட்டனான்? ஏன்டி உனக்கு என்னை பிடிக்கேலை?”
“Listen! I will pay your money back in… three months, O.K?. Now, don’t call me back here again. I dont want to hear your voice again.…”
“என்னடி நானும் பார்க்கிறேன் நீ ஆகத்தான் ஏறகிறாய்…?” என்று நான் என்னுடைய கோபத்தைக் காட்டி முடிக்க முதலே அவள் ஃபோனை வைத்திட்டாள். திரும்பத் திரும்ப, ஒரு வெறியில் அவளுக்கு போன் அடித்தேன். பதில் இல்லை. இரண்டு மூன்று நாளில் ஃபோன் நம்பரை மாத்திட்டாள். பிறகு அவளுக்கும் எனக்கும் தொடர்பில்லாமல் போய்விட்டது.
பிறகு, நேற்றுத்தான் சிவத்தான் சொன்னான். இவள் ஏதோ கம்ப்யூட்டர் கோர்ஸ் எடுக்கிறாளாம்… இந்த இடத்திற்கு போனால் சந்திக்கலாம் என்றான். அவன் மேலேயும் ஏதேதோ சொன்னான். அவள் வெள்ளைகளோடை எல்லாம் திரிகிறாளாம். கொஞ்ச நாள் யாரோ ஒரு வெள்ளையன்டை வீட்டிலே தான் ஒன்றாக இருந்தவளாம். இப்ப பழையபடி தனிய வந்து இருக்கிறாளாம். ஆனால் இப்ப வேறேயொரு வெள்ளையோடு சுத்திறாள் என்றான். நான் எப்பவும் அரைப் போத்தல் அடித்தாலே ஸ்டெடியாக இருப்பவன், அண்டைக்கு ரெண்டாவது கிளாசிலேயே ஏறிட்டுது. அண்டைக்கே இவளை வெட்டிப் போடுகிறதென்று முடிவெடுத்திட்டேன்.
இண்டைக்கு அவள் உடயளள முடிந்து வரேக்கை குத்தி விடுகிறதென்று, நேற்றிரவு ப்ளான் போட்டுத்தான் படுத்தனான். இரவு முழுக்க யோசித்தேன். எப்படி இவள் ஊரிலே இருந்தவள்… இப்ப இங்கே வந்து ஐந்து வருஷத்திற்குள்ளே, ஆள் மாறி நாடகம் போடுகிறாள். இத்தனைக்கும் இவள் அந்த மாட்டுக்கு விடுகிற கந்தையாண்ணைன்டை மோள். அந்தாள், எங்கடை காணிக்கை, அல்லது வயலுக்கை வேலையென்றால், எங்கடை அப்பரிட்டை சம்பளத்துக்கு வேலை செய்கிறது. அவருடைய மோளுக்கு இவ்வளவு திமிர்.
இவள் என்னோட ஊரிலே டியூசனுக்கு வருகிறவள். ஆனால் எனக்கு அங்கே இவளோட அவ்வளவு பழக்கமில்லை. எங்கடை சிவப்பியை ஒருக்கா மாட்டுக்கு விட கந்தையா அண்ணை வீட்டை போனபோது தான் இவளோட பழக்கமாச்சு. அப்போது தான் இவள் கந்தையாண்ணைன்டை மகள் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால் டியூசனில் ராணி மாதிரி திரிகிறவள்.
அன்றைக்கு, சிகப்பியை மாட்டுக்கு விட போனபோது நடந்ததை வைத்தே எனக்கு இவள் எவ்வளவு ஆட்டக்காரி என்று தெரிந்திருக்க வேணும். ஆனால் எனக்கு அப்ப அவளுடைய வடிவுதான் திரும்பத் திரும்ப தெரிந்தது.
சிகப்பியோடு படலையை திறந்து கொண்டு அவையளின்ரை வளவுக்கை போன உடனே, நாய் குரைத்தது. உடனே இவள் கொட்டிலுக்கை இருந்து வந்து, “ப்ரவுனி குரைக்காமல் இரு. இங்கே வா! வா இங்கே!” என்று நாயோடு கதைத்தாள். பிறகு என்னைப் பார்த்து, “என்ன வேணும் உங்களுக்கு?” என்று கேட்டாள்.
இந்தக் கேள்வியிலேயே எனக்குத் தெரிந்திருக்க வேணும் இவளைப் பற்றி. பின்னே என்ன? படலைக்குப் பக்கத்திலே பெரிதாக இங்கு மாட்டுக்கு விடப்படும் என்று போர்ட் போட்டிருக்கினம். நான் பசு மாட்டோட வந்திருக்கிறன்;. இவள் என்ன வேணும் என்று கேட்கிறாள். அதெப்படி மாட்டுக்கு விட வந்திருக்கிறேன் என்று இவளிட்டை சொல்கிறது.
“கந்தையாண்ணை இல்லையோ?” என்றேன் நான்.
“அவர் படுத்திருக்கிறார். என்ன விஷயம் என்று சொன்னீங்கள் என்றால், தேவையோ என்று பார்த்து எழுப்பலாம்.”
“இல்லை… என்னென்றால்… கன்டுக்குட்டி வேணும் எண்டு…”
“உங்களுடைய கன்டுக்குட்டி எங்கடை காணிக்குள்ளே வந்திட்டுதோ? எந்தப்பக்கம் போனது?”
“சீச்சீ! எங்கடை மாட்டுக்கு கன்டுக்குட்டி வேணுமெண்டு… உங்களிட்டை வந்தால் கிடைக்கும் என்று அப்பா சொன்னார். அதான்…”
“நாங்கள் கன்டுக்குட்டி ஒண்டும் விக்கிறேல்லையே.”
“இல்லை… உங்கடை நாம்பன் மாட்டோடை எங்கடை மாட்டை… போர்ட்டிலே கூட போட்டிருக்குது… விட்டு… சினைக்கட்ட வேண்டும்.”
“ஓ! மாட்டுக்கு விட வந்திருக்கிறியளோ? இருங்கோ அப்பாவை கூட்டிக் கொண்டு வாறன்,” என்று போட்டு கொட்டிலுக்குள் புகுந்தாள். நாய் என்னைப் பார்த்து “உர்ர்,“ என்றது. சிகப்பி பயந்து பின்வாங்கியது.
கந்தையாண்ணை சந்தேகப் பார்வையோடு வந்தார். “அட தம்பியோ? என்ன விஷயம்?” கள்ளு வாசனை கேள்விக்கு முதல் வந்தது. மத்தியானத்திற்குள்ளேயே அடித்திட்டார். “இல்லை கந்தையாண்ணை உங்கடை நாம்பன் மாட்டுக்கு… விட்டு… சினைகட்ட வேண்டும்.”
தேவகி சிரித்தது போல் இருந்தது.
“சரி. வீட்டுக்குப் பின்னால் தான் நாம்பன் நிக்குது. பின்னாலே வா.”
சிகப்பி, நான் இழுக்க, நாய்க்குப் பயந்தோ, அல்லது விஷயம் தெரிந்தோ, வரப்பஞ்சிப்பட் டது. நான் படங்களில் வரும் வில்லன் போல் இழுத்துக் கொண்டு போனேன்.
பின்னால் நாம்பன் கறுப்பாக, கொழு கொழு வென்று படுத்துக்கிடந்தது. கந்தையாண்ணை நாம்பனை எழுப்பினார். நாம்பன் மணந்து பார்த்தது. மூடில்லை.
“தம்பி ! கோவிக்காமல் கொஞ்ச நேரம் இரு. காத்தாலை இருந்து எனக்கு பைப்பிலே தண்ணி ஒழுகிற மாதிரிப் போகுது. இரு, இந்தா வந்திர்றேன்… எடி பிள்ளை! அந்த வாளியிலே கொஞ்சம் தண்ணி கொண்டோடி வா!” என்றபடி கந்தையாண்ணை அவசரத்தில் ஓடினார்.
நான் நாம்பனையே பொறாமையாக பார்த்துக் கொண்டிருந்தேன். வாழ்க்கையென்றால் இது வாழ்க்கை. இருந்த இடத்தில் – படுத்த இடத்தில் சாப்பாடு, விதம் விதமான பசு மாடுகள். எல்லாம் அவன் செயல்!
“நீங்கள் என்னோட டியூசன் எடுக்கிறீங்கள், இல்லையோ?” தேவகி திடீர்க் கேள்வி எழுப்பி பயப்படுத்தினாள்.
“ஓம்.”
“அன்டைக்கு மாத்ஸிலே படிப்பிச்சது விளங்கினதோ? எனக்குத் துப்புரவாக விளங்கேலை.” அவள் கொஞ்சம் சிரித்தபடி கேட்டாள். அவள் சிரிக்கும் போது கன்னத்தில் குழி விழுந்து நல்ல வடிவாக இருந்தது.
அது கணக்குத் தெரிய கேட்ட கேள்வி இல்லை என்று கன நாளைக்கப்புறம் தெரிந்தது. அன்று கணக்கில் தொடங்கி, நான் கணக்கில்லாமல் இவளுக்கு காசு அனுப்பிய வரைக்கும் எங்கள் காதல் வளர்ந்தது. பிறகு தான் ஏதோ நடந்து.…
வு.ஏ. இல் இப்ப அதே பெட்டை – முதல் தேவையில்லாமல் பல்லைக்காட்டிய பெட்டை – பொஸ்னியாவில் சண்டை காரணமாக சிலர் செத்து விட்டனர் என்று படு சோகமாகச் சொன்னாள். போலி நாய்! உலகம் கிட்டடியிலேயே அழியப் போகுது: ஏனென்றால் உலகம் முழுக்க போலிகள்.
தேவகி படிக்கிற நைட் ஸ்கூலிற்கு வெளியிலே அவள் வெளியே வருவதற்காக நின்றேன்.
குளிரில் கோட் பொக்கெட்டிற்குள் இருந்த இறைச்சி வெட்டுகிற கத்தி, ஐஸ் போல குளிர்ந்தது. வெள்ளையன்டை காரிலேதான் போகிறவள் என்று சிவத்தான் சொன்னவன். கார் பார்க்கிற்கு போய், காருக்குள் ஏறேக்கை குத்திவிட வேண்டும். அங்கே தான் இருட்டு. வயிற்றிலே இரண்டு குத்து, நெஞ்சிலே இரண்டு. பிறகு முகத்திலே நாலஞ்சு தரம் கீறிவிட வேண்டும்.
இரவு 10:30 கொஞ்சம் கொஞ்சமா சனம் ஸ்கூலில் இருந்து வந்தது. அவளைக் காணேலை. ஒரு சப்பட்டைப் பெட்டை ஒண்டு, சொண்டு முழுக்க லிப்ஸ்டிக் ©சிக்கொண்டு, “வுயமந வை நயளல…ர்யஎந ய niஉந றநநமநனெ… வுயமந உயசநஇ” என்று அவளுடைய ஃப்ரெண்ட்ஸிற்கு சொல்லிக் கொண்டிருந்தது. அவங்களுடைய வீக் எண்ட் நைஸாக இல்லாட்டி இவளிற்கு நித்திரை வராதுதானே. போலிச்சனியன்!
கடைசியாக தேவகியும், அவனும் கிட்டத்தட்ட கட்டியணைத்தபடி கார் பார்க்கை நோக்கி நடந்திச்சினம். நிமிஷத்திற்கொரு தரம், ஊரில மாடு பனங்கொட்டை ச+ப்புற மாதிரி, அவன் அவளைக் கொஞ்சினான். அந்தக் குளிரிலும் எனக்கு வியர்த்தது.
முதல் அவன் டிரைவர் சீட் பக்கம் ஏறினான். இவள் அவன் கதவை திறப்பதற்காக காத்திருக்க, நான் அவளை நெருங்கி, பொக்கெட்டில் கையை விட்டு, கத்தியை தொட்டு – அவள் திடீரெனத் திரும்பி என்னைப் பார்த்தாள். முதலில் கொஞ்சம் திடுக்கிட்டாள். பிறகு என்னைப் பார்த்து சிரித்தாள் – இல்லை புன்னகைத்தாள்!
புன்னகைத்தாள்!
புன்னகைத்தபடியே காரில் ஏறிவிட்டாள். கார் வெளிக்கிட்டு பார்க்கிங் லொட்டில் ஒரு வட்டமடித்து என்னைக் கடந்து சென்றது. நான், கார் நின்றிருந்த இடத்திலேயே நின்றேன். சில நிமிடங்களாக நின்றேன். பொக்கெட்டிற்குள் என் வலது கை கத்தியை இன்னும் இறுக்கப் பிடித்திருந்தது. அப்பொழுதுதான் எனக்கொரு உண்மை விளங்கியது. அவள் கெட்டவள் இல்லை. அவளில் குறைகள் இருக்கலாம், ஆனால் அவள் கெட்டவள் இல்லை.
பஸ் ஸ்டொப்பிற்கு நடந்து போன போது, பஸ்ஸில் இருந்த போது, வீடு வரும் வரையில் அவள் என்னைப் பார்த்து சிரித்தது என் கண்முன்னால் வந்து நின்றது. அவள் சிரிக்கும் போது, அவள் கன்னத்தில் குழி விழுவது ரொம்ப அழகு!
(சக்தி, 1993.)