“நினை பொன் எனக்கொண்ட பொழுதிலே”
சுசீலா பாடும்போது தன்னை அறியாமலேயே குமரன் தலையை சன்னமாக ஆட்டியபடி புன்னகைத்தான். இயர்போனை மீண்டும் சரியாக காதில் அழுத்திவிட்டு, iTunes இல் சவுண்டை கொஞ்சம் கூட்டிவிட்டான். “எந்தன் வாயினிலே அமுதூறுதே, கண்ணம்மா என்ற பேர் சொல்லும் போழ்திலே” எனும்போது டிஷூ பொக்ஸில் இருந்து ஒரு டிஷுவை எடுத்து வாய் துடைத்தான். “கண்ணம்மா கண்ணம்மா” என்று ஸ்ரீனிவாசுடன் சேர்ந்து முணுமுணுத்தபடியே service.doBnExtract(req); லைனை செலக்ட் பண்ணி Alt + Ins கீயை அழுத்தி try, catch block போட்டான். கைகள் எக்ஸ்ப்ரஸ் வேகத்தில் டைப் பண்ணிக்கொண்டிருக்க, சிறிது நேரத்தில் பாடல் முடிந்ததை உணர்ந்தவனாய், மீண்டும் விண்டோ சுவிட்ச் பண்ணி, பாட்டை ரீபிளே பண்ணிவிட்டு, ரிப்பீட் மோடுக்கு மாற்றினான். ஜாவாவுக்கு திரும்பி லொகர் சேர்த்தான்.
டாஸ்க் பாரில் ஸ்கைப் ப்ளின்க் பண்ணியது. முன் டெஸ்க்கில் இருக்கும் ருச்சித் தான். இயர்போன் எடுக்காமலேயே நிமிர்ந்து என்ன? என்று அவனை பார்த்து தலை உயர்த்தினான். ருச்சித் ஏதோ சொன்னது போல, கேட்கவில்லை. iTunes ஐ pause பண்ணிவிட்டு மீண்டும் உயர்த்தினான்.
“யுவர் போஃன் இஸ் வைப்ரேட்டிங்”
“ஓ” என்றபடி அவனுக்கு “தாங்க்ஸ்” சொல்லிவிட்டு கவனித்தால் போனில் அம்மா. ஏழு மிஸ் கோல்கள், அவசரம் என்று சொன்னது. அம்மா அலுவலக நேரத்தில் கோல் பண்ணமாட்டாள். மெஷினை லொக் பண்ணி, மொனிட்டரை டேர்ன் ஓப் செய்துவிட்டு, மீட்டிங் ரூம் விரைந்தான். அம்மாவுக்கு ரிங் பண்ணினான்.
“என்னடா செய்து கொண்டிருந்தனி?”
“ஹலோ”
“ஹலோ கிடக்கட்டும் விடு .. பேர் மேகலா … டென்டிஸ்ட் .. உன்னை போலவே மியூசிக் எண்டா..”
“ஹங் ஓன் .. ஹங் ஓன் .. பொறுங்கம்மா .. என்ன அடியுமில்லாம நுனியுமில்லாம ..”
“உண்ட அம்மாடா..”
“எனக்கேவா? .. என்னம்மா இதெல்லாம் .. ஹூ த ஹெல் இஸ் திஸ் மேகலா?”
“மைண்ட் யுவர் வேர்ட்ஸ் தம்பி … இது நீ தேடிக்கொண்டிருந்தியே .. அந்த பிள்ளைடா”
“ஆ தட் கேர்ள் .. அப்பிடி ஒரு பொம்பிளையே இல்ல .. அது வந்து வெறும் ..”
“தெரியும் .. ஆ ஊ எண்டா பாரதிண்ட கண்ணம்மா எண்டுவாய்… நீ கொஞ்சம் பொறுமையா கேளேன்..”
“என்னம்மா இது .. இவ்வளவு அவசரமா இத இப்ப கதைக்கோணுமா?”
“விட்டா அப்பர் நாளைக்கே கலியாணம் நடத்திடுவார் .. உனக்கு பிள்ளைய தெரியவேண்டாமா? இல்லையா?”
குமரன் கண்ணாடி கதவால் வெளியே பார்த்தான். புரொஜெக்ட் டீம் ஸ்டாண்ட அப் மீட்டிங்குக்கு தயாராகிக்கொண்டிருந்தார்கள். நேற்றைய கிளையன்ட் வேப்செர்விஸ் SSL செர்ட்டிபிகட் எக்ஸ்பையர் ஆனதை பிஎம் க்கு சொல்லவேண்டும் என்பது ஞாபகம் வந்தது. பம்பூ வேறு பெயில் ஆகி, ப்ச் .. நிறைய வேலைகள் இருக்கிறதே.
“லஞ்சுக்கு கதைக்கட்டா?”
“90% போருத்தமாம் .. ரகுநாத குருக்கள் பார்த்திட்டு அப்பாவை கட்டிப்பிடிச்சவராம்”
“ஆரு? அப்பா சொன்னாரா? கிழிஞ்சுது .. அவர் இப்பிடி கனக்க டைம் கட்டிப்பிடிச்சிருக்கிறார் அம்மா … அவங்கட சைட் ஒகேயாமா?”
“அதுக்கு முதல் நீ என்ன சொல்லுறாய்?”
“திங்கக்கிழமை காலமை இப்பிடி திடீரென்று கோல் பண்ணி சொன்னா எப்பிடி? ஆரெண்டே தெரியா..”
“ஷி இஸ் எ டென்டிஸ்ட் .. உன்னை விட ஐஞ்சு வயசு குறைவு .. இப்ப டிக்மென்ஸ் ரோட்ல இருக்கிற கிளினிக்ல ப்ராக்டீஸ் பண்ணுதாம் .. மேகலா தேவானந்தன்..”
“ஈபிடிபி யா?”
“கடவுளே .. கலியாண முற்றாகி தாலிகட்டும் மட்டும் நீ மௌனவிரதம் இருக்கிறியா ப்ளீஸ்?”
குமரன் சிரித்தான். அம்மாவுக்கு இந்த பதட்டத்திலும் இருக்கின்ற நகைச்சுவை உணர்வை பார்க்க வியப்பாக இருந்தது. இத்தனை வரிகளில் அந்த பெண்ணின் அழகு பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிடாமல் இருந்தது பெருமையாக இருந்தது. “அம்மா” என்றான் தனக்குள்ளே. திடீரென்று அந்தப்பெண் அழகாக மீட்டிங் ரூமின் லைப்ரரி காபினை திறந்து கொண்டு வந்து நிற்பது போல தோன்றியது. “கண்ணம்மா” என்றான்.
“மேகலாடா”
“யியா .. ஐ நோ .. யோசிச்சிட்டு சொல்லட்டா?”
“அவங்களுக்கு நான் என்ன சொல்ல? ஒகேண்டு சொல்லட்டா?”
“யூ கிரேசி .. முதலில விசாரிப்பம் .. கிம்மி டூ டேஸ்”
“பேஸ்புக்ல இருக்கிறாவாம் .. நீ தானே பிஸி .. நேரம் கிடைக்காது .. சரி விடு .. இரவு கதைக்கிறன்”
“யூ .. நோட்டி அம்மா” என்று சிரித்தபடியே சொல்லிக்கொண்டு மீட்டிங் ரூமை விட்டு வெளியே வரும்போது மொத்த டீமும் இவனுக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருந்தது. முகம் முழுக்க சிரித்தபடி சொரி சொன்னான். புரொஜெக்ட் மனேஜர் ஹாய் கைஸ் சொல்லி ஆரம்பித்தார்.
டென்டிஸ்ட் குலோக் அணிந்தபடி.
“மாப்பிள்ளைக்கு மீசையே இல்லையப்பா .. இவர போய் என்னெண்டு ..
ஐபாடில் முகத்தை சரியாகவே பார்க்காமல் மேகலா அப்பாவை முறைத்தாள். அவளுக்கு எதுவுமே பிடிக்கவில்லை. சேர்ஜரி படிக்க தயாராகிக்கொண்டிருந்தவளிடம் திடீரென்று திருமணம் செய் என்றால் எப்படி இருக்கும். அதுவும் படத்தை பார்த்து. மேகலாவுக்கு அப்பாவிடம் கோபம் கோபமாய் வந்தது. நேற்று வரைக்கும் குட்டி, கண்ணுக்குட்டி என்றவர் திடீரென்று பிள்ளை, காலையில் மேகலா என்று கூட கூப்பிட்டிருந்தார். ஏறிக்கொண்டு வந்தது. யாரென்றே தெரியாதவன், என்ன ஏது ஒரு விவரமும் தெரியாது, வெறுமனே சாத்திரி பொருத்தம் என்று சொன்னால் நம்பிவிடுவதா? இதுக்கு பேசாமல் நான் லவ் பண்ணியே இருந்திருப்பேனே. டாம்ன். ஹூ த ஹெல் இஸ் ஹீ ஹா?
“குமரன் … அந்த .. நல்லூர் திருவிழா அல்பத்தில பார் … மீசை இருக்கு”
சொல்லியபடியே அப்பா மரனின் பேஸ்புக்கில் நல்லூர் திருவிழா அல்பத்தை ஓபன் பண்ணினார். குமரன் வேஷ்டி கட்டி சால்வை இல்லாமல் நெற்றி முழுக்க பட்டையோடு, தேர் இழுத்து முடித்த களையில், இளித்துக்கொண்டு நின்றான். தலைக்கு பின்னாலே ரெண்டு விரல் கொம்பு வேறு யாரோ காட்டிக்கொண்டிருந்தார்கள்.
“இத பாரு”
“வேண்டாம் .. பார்க்கமாட்டன் .. எனக்கு இப்ப என்ன அவசரம்? .. இப்ப .. ஒரு வருஷம் கூட பிராக்டீஸ் பண்ணி முடியேல்ல .. அங்கால சேர்ஜரி படிக்க லண்டன் போகோணும்.. ஒர்தோடோண்டிக்ஸ் செய்யப்போறன் .. குழப்பாதீங்க ப்ளீஸ்”
“நீ கலியாணம் கட்டீட்டும் படிக்கலாம் மேகலா .. அவர் ஜாவா ப்ரோகிராமர்”
“ப்ரோகிராமரா? ஓ மை கோட், … தே ஆர் லூசர்ஸ் அப்பா … எப்ப பார்த்தாலும் கோடிங் கோடிங் எண்டு .. ஒரு டேஸ்ட் இல்லாத ஆக்கள் .. கிளியை வளர்த்து பூனைண்ட கையில குடுக்கிறனெண்டு சொல்லுறீங்களே”
அப்பா சிரித்தார்.
“அவருக்கு ரகுமான் பிடிக்குமாம் .. பேஸ்புக்ல கிடக்கு”
“ஆருக்கு தான் ரகுமானை பிடிக்காது?”
“Before Sunrise எண்டு ஏதும் படம் வந்ததா? Favourite Movies ல அது கிடக்கு”
“அட கடவுளே .. அந்த படமா .. பேசி பேசி கொல்லுவாங்களே!”
“விஜய் பாஃன்”
“ஷிட்”
பிள்ளை, இப்பிடி ஷிட் எண்டு சொல்லுறத எல்லாம் இனி நிப்பாட்டுறியா? பொம்பிளை பிள்ளை இப்பிடியா கதைச்சுக்கொண்டு திரியிறது.
அம்மா குசினிக்குள் இருந்து புறுபுறுக்க,
“பார்த்தீங்களாப்பா? ஒரே நாளில எல்லாமே மாறீட்டுது .. அம்மா கூட .. நான் நானா கூட இருக்கேலாட்டி அந்த கலியாணம் என்னதுக்குப்பா?”
“எல்லாத்துக்கும் வேண்டாம் .. மாட்டன் எண்டு சொல்லாத .. இப்ப முடிவு பண்ண தேவையில்ல .. பிறகு யோசிச்சுட்டு சொல்லு ..”
சொல்லியபடியே திரும்பிப்பார்க்காமல் அப்பா எழுந்து உள்ளே போனார். மேகலா குழப்பத்தோடு வேலைக்கு புறப்பட தயாரானாள். குசினி போய் பேசாமல் அம்மா தயார் செய்திருந்த லஞ் பொக்ஸ் எடுத்து ஹாண்ட்பாக்கில் வைத்துவிட்டு, தெர்மோ பிளாக்ஸில் கோப்பி ஊற்றி நிரப்பினாள். பின்னர் உள்ளே போய் பிரஷ் எடுத்து பேஸ்ட் இல்லை என்று அப்பாவை ஒரு முறை திட்டிவிட்டு, கத்திரிக்கோலால் பேஸ்ட்டை வெட்டி வழித்து எடுத்து பிரஷில் வைத்து பல்லு விளக்கியபடியே ஐபாடை சவுண்ட் சிஸ்டத்தில் டொக் பண்ணி பாட்டு போட்டாள். ஷானியா ட்வைன் “From This Moment” என்று ஆரம்பிக்க, கூட்டிவிட்டு, கிரைண்டர் போட்ட அம்மாவை, பாட்டு முடியும் மட்டும் மூச்சு காட்டக்கூடாது என்று வெருட்டி விட்டு, டவல் எடுத்து பாத்ரூம் விரைந்தாள்.
ஷவர் ஹீட்டர் சரியாக வேலை செய்யவில்லை. தண்ணீர் முகத்தில் பட்டு குளிர்ந்தது. “I give my hand to you with all my heart, can’t wait to live my life with you .. “ ஷானியாவோடு சேர்ந்து பாடினாள். பாட்டின் ஒருவித cry இவளுக்கும் தொத்தியது. ஷவரை கூட்டிவிட்டு தொடர்ந்து பாடினாள். ஹீட்டர் திடீரென்று வேலை செய்ய தொடங்கியது போல…. சடக்கென்று உடல் முழுதும் வெப்பம் படர்ந்து… அவனின்ட பெயர் என்ன .. குமரேஷ் …. ஷிட் நோ .. குமரன் .. யெஸ் குமரன். “Before Sunrise” பிடிச்சிருக்கு ஆளுக்கு. Not bad ha. அப்பாவிடம் அவசரப்பட்டு பேசிவிட்டோமோ. ப்ச் … யாரென்று விசாரித்திருக்கலாமோ. ஒருவேளை அவனாக தான் இருந்துவிட்டால்? குமரன். யார் நீ? அவனா? அவரா .. .ஹூ த ஹெல் ஆர் யூ?
மேகலா அவசர அவசரமாக டவல் எடுத்து, துவட்டி, பாத்ரூமால் வெளியே வரும்போது அம்மா “என்னடி பாத்ரூமில கச்சேரியா? நேரம் போகுது” என்று கத்திக்கொண்டிருந்தார். பதில் சொல்லாமல் நீல நிற நைலக்ஸ் சாறி செலக்ட் பண்ணி சுற்றினாள். பின்னர் ஏதோ நினைப்பு வந்தவளாக வெள்ளை நிறத்தில் நீல போர்டர் போட்டதை எடுத்து கட்டினாள். அம்மா மீண்டும் கத்த தொடங்க “வாறன் அம்மா” என்று சொல்லியபடியே வோட்ச் கட்டி ஹாண்ட் பாக் எடுத்து, கழுத்து சங்கிலி ஓம் பெண்டனை தொட்டு “பிள்ளையாரப்பா” என்று கும்பிட்டுவிட்டு சாப்பிடாமலேயே புறப்பட்டாள். அப்பா நடு ஹோலில் வீரகேசரியோடு இருந்தார். வாசலில் சாண்டில்ஸ் போட்டுக்கொண்டிருந்தவள் “போயிட்டு வாறன்” என்றாள். இரண்டடி தள்ளிப்போயிருப்பாள். தயங்கியபடியே மீண்டும் திரும்பிவந்து …
“அப்பா..”
வீரகேசரியில் இருந்து கண் எடுக்காமலேயே ம்ம் கொட்டினார்.
“குமரன்ட புல் நேம் என்னப்பா?”
வீரகேசரியை மடித்து ஸ்டூலில் வைத்துவிட்டு, முன்னே வந்து நின்று திடீரென்று வெட்கப்பட்டுக்கொண்டிருக்கும் மேகலாவை மெல்லிய புன்னகையுடன் பார்த்தபடியே பெயரை சொன்னார் அப்பா.
“மேகலா தேவானந்தன் .. “ குமரன் நாற்பதாவது முறையாக பக்கத்து டெஸ்க்கில் இருந்த ரொஷாணி பார்க்காத சமயம் பார்த்து Facebook இல் டைப் பண்ணி ப்ரோபைல் போனான். Profile படத்தில் ஒரு வெள்ளைக்காரி இருந்தாள். ஜெர்க் ஆனான்.Photos of Mehala என்று graph search செய்ய ஐந்தாறு படங்கள் வந்தது. தூக்கி வாரிப்போட்டது. இவளா? அம்மா ஒரு வார்த்தை சொல்லாமல் போனாளே என்று கோபப்பட்டான். டெஸ்க்டொப்பில் படத்தை சேவ் பண்ணி ஓபன் பண்ணினால். Ctrl++ அழுத்தி அழுத்தி ஸூம் பண்ண, மேகலா கொஞ்சம் கொஞ்சமாக அவனுள் வியாபிக்க ஆரம்பித்தாள். எப்படி இது நிகழ்கிறது என்று புரியவில்லை. அமுது ஊற்றினை ஒத்த இதழ்களும் – நிலவு ஊறித் ததும்பும் விழிகளும் – பத்து மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும்” என்று பாரதி ரிப்பீட்டினான். இன்சேன் என்று குமரனின் வாய் முணுமுணுத்தது.
உள்ளே ஷானியா டவைன் பிடிக்கும் என்றிருந்தது. கூகிள் போய் ஷானியா டிவைன் யார் என்று தேடினான். இரண்டு பாட்டு டவுன்லோட் பண்ணி கேட்டான். நன்றாகவே இருந்தது. பொன்னியின் செல்வன், அப்துல் கலாம் என்று வரிசையாக இருக்க நிமிர்ந்து உட்கார்ந்தான். கோப்பியை உறிஞ்சியபடி டைம்லைனை உருட்டிக்கொண்டு போக, பிடித்த ஹீரோ என்ற கேள்விக்கு சூரியா என்று இருந்தது. ஷிட்.
குமரனுக்கு டெஸ்ட் கேஸ் ஒன்றுமே ரன் பண்ணுவதாக காணும். பவுண்டரி கொண்டிஷன் லிஸ்ட் எழுதி முடிக்கவே ஒரு மணி நேரம் கடந்தது. அதற்குள் மூன்று தடவை Facebook, நான்கு தடவை Linkedin, கூகிள் சேர்ச்சில் நெக்ஸ்ட் நெக்ஸ்ட் என்று கிளிக் பண்ணி அடிக்கட்டை மட்டும் மேகலா பற்றி தேடிவிட்டான். மைன்ட்மப் போட்டான். அடிக்கடி பின்னாலே யாரும் போகும் சமயம் மாத்திரம் டெஸ்ட் கேஸை பெயில் ஆகும் என்று தெரிந்தும் ரன் பண்ணி தலையில் கைவைத்து யோசிப்பது போல பீலா விட்டான். மேகலா இரண்டு மணிநேரங்களில் யாதுமாகி நின்றாள்.
திடீரென்று ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாக கூகிள் போய், டிக்மேன்ஸ் ரோடில் இருக்கும் டென்டல் கிளினிக் தேடி, பஸ் ரூட் கண்டுபிடித்து, பிஎம்மிடம், “ஏர்லி லஞ், கிரடிட் கார்ட் பில் பே பண்ணவேண்டும்” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தவன், ஒரு ஞாபகம் வந்தவனாக ஓட்டோ ஸ்டாண்டில் போய் முன்னுக்கு நின்ற ஓட்டோவில் ஏறி உட்கார்ந்தான்.
“டிக்மேன்ஸ் பாரட்ட யன்ன!”
&&&&&&&&&&&&
ஸீ யூ சொல்லி சிறீசேனவை அனுப்பிவிட்டு பிளாஸ்கில் இருந்த கோப்பியை கொஞ்சம் உரிஞ்சபடியே கொம்பியூட்டரில் அடுத்த பேஷன்ட் ஹிஸ்டரியை நோட்டம் விட்டாள் மேகலா. ஹிஸ்டரி பேஜ் வெறுமையாக இருந்தது. யாராவது பல்லுக்கொதி கேஸ் போல. அவசரத்துக்கு புடுங்க வந்திருக்கு. கவனிச்சு அனுப்பிடலாம் என்று தனக்குள் சிரித்தபடியே அசுவாரசியமாக மேலே கவனித்தாள். கிளீனிங் என்று இருந்தது. கிளீன் பண்ணுவதற்கு ஏன் முதன் முதலாக இங்கே வரவேண்டும் என்று பெயரை மேலோட்டமாக கவனித்தபடியே கோப்பி குடிக்… திடுக்கென்றது. ஷிட்.
இளங்குமரன் சிவசேகரம்.
“ஜீசஸ் கிரைஸ்ட். இவன் அவனல்லோ. இங்க எதுக்கு வந்திருக்கிறான். கடவுளே” மேகலா அசிஸ்டன்ட் தருணீயிடம் சொல்லிவிட்டு அவசரமாக ரெஸ்ட் ரூமுக்குள் ஓடினாள். நெஞ்சம் படபடத்தது. ஏன் இங்கே வந்திருக்கிறான்? தெரிஞ்சு தானே வந்திருப்பான்? கடவுளே. மீசை வச்சிருப்பானா? இல்லையா? ரிசப்ஷனில் தான் இருப்பான். போய் பார்த்துவிட்டால் கண்டுபிடித்துவிடுவானே. ஸ்டிக்கர் பொட்டு வேறு இடக்கண் பக்கமாய் விலகி இருந்தது போல தெரிய சரி செய்தாள். ஹாண்ட்பாக்கில் இருந்து சீப்பு எடுத்து நீவி விட்டாள். நிவியா கிரீமை கைகளில் தடவி ஷைன் செய்தாள். தடவும் போது விரல்கள் தன்னாலே நடுங்கின. கடவுளே, டியூட்டியை மாத்துவமோ. டொக்டர் ராஜசூர்யா இருப்பாரா? ஐயோ அவர் கிளீனிக் செய்யமாட்டாரே. தருணி புதுசே. கொடுக்கமுடியாதே. சேலையின் ப்ளீட் சரி செய்தாள். ஒதுக்கினாள். முந்தானையை அப்படியே பின்னாலே சுற்றி எடுத்து இடுப்பில் கொண்டுவந்து செருகிப்பார்த்தாள். ம்ஹூம். சொதப்பல். மீண்டும் தழையவிட்டாள். கை கால் ஒன்றுமே ஓடவில்லை. அப்பாவுக்கு கோல் போட்டாள்.
“என்னடா இந்த டைம்ல”
“அவன் வந்திருக்கிறான் அப்பா”
“அவன்டா .. யாரு?”
“அதான்பா .. குமரன் … உங்கட இளங்குமரன்”
“ஓ அங்கேயே வந்திட்டாரா .. உன்னை விட பாஃஸ்டா இருக்கிறார் போல!”
“வந்தனிண்டா மூஞ்சில வந்து ஒரே குத்தா குத்துவன் சொல்லீட்டன் .. குறவர் கூட்டம்”
”சத்தியமா உன்னை பார்க்க வாறதா சொல்லேல்ல கண்ணம்மா?”
“அப்ப என்னண்டு இங்க வந்திருக்கிறார்?”
“மாப்பிள்ளைக்கு உன்னை நல்லா பிடிச்சிருக்கு போல..”
“மாப்பிள்ளையா .. லூசாப்பா நீங்க?”
“சரி விடு கண்ணம்மா .. கிளீன் பண்ண தானே வந்திருக்கிறார்? பண்ணீட்டு அனுப்பீடேன்”
“பண்ணுறன் பண்ணுறன் .. பல்லையே புடுங்கீட்டு அனுப்புறன்!”
“பார்த்துடி…”
அப்பா பேசும்போதே போனை கட் பண்ணிவிட்டு, மீண்டும் ஒரு முறை நெற்றிப்பொட்டை கவனித்தாள். வலக்கண் பக்கமாக விலகியிருந்தது. சரி செய்தாள். திரும்பி வாசல் புறம் நடந்தவள், மீண்டும் உள்ளே போய், டோய்லட் அறைக்குள் தண்ணியை பிளஷ் பண்ணிவிட்டு வெளியேறி கிளினிக் ரூமுக்குள் நுழைந்தாள். கொம்பியூட்டர் ஸ்க்ரீனை டபிள் செக் பண்ணீட்டு தருணியை த்ரில் சிஸில், மவுத் மிரர் எல்லாம் தயார் படுத்த சொல்லிவிட்டு நெக்ஸ்ட் ப்ளீஸ் என்று சொல்லி திரும்ப ….
கதவடியில் நின்று சிரித்தான் குமரன். “ஒல்மொஸ்ட் சிக்ஸ் வரும். ஹீல்ஸ் போட்டிடலாம்” என்று நினைத்துவிட்டு “ச்சீ என்ன இது” என்று பல்லை கடித்தாள்.
“ஹாய் டொக்டர் மேகலா”
மேகலா குமரனை படபடப்பாக நோட்டம் விட்டாள்.
மீசை இருந்தும் இல்லாமலும் இருந்தது. ரெண்டு நாளைக்கு முதல் ஷேவ் செய்திருக்கவேண்டும். டிஷர்ட் ஜீப் என்றது. டெனிம் ஜீன்ஸ். சப்பாத்து வீக்கென்ட் கிரிக்கட் கிரவுண்டில் சேறு என்று சொல்லியது. எல்லாத்திலும் ஒரு வித உதாசீனம் திரிந்தது. ஹாண்ட்போனை கையில் வைத்து உருட்டியபடி இருந்தான். கையில் வோட்ச் இல்லை.
“ஹாய் … டொக்டர் மேகலா”
குமரன் இரண்டாம் தடவை ஹாய் சொன்னபோது சுயநினைவுக்கு வந்தவளாய் இவனை பார்த்து அசட்டு சிரிப்பு சிரித்தாள்.
“ஹாய் .. மிஸ்டர் இலங்குமரன் சிவசேக..”
“’ல’ னா பிரச்சனையா?”
“வாட்?”
“கோல் மீ குமரன்”
“ஹாய் .. குமரன் … ப்ளீஸ் டேக் யுவர் சீட் .. லை டவுன் .. அண்ட் .. தருணி..”
சொல்லிவிட்டு மேகலா மீண்டும் மொனிட்டரை திரும்பிப்பார்த்தாள். முகம் முழுதுமாய் சிரித்தது. தலையில் மெதுவாக அடித்து, அங்கும் இங்கும் அசைத்துவிட்டு மீண்டும் திரும்பிப்பார்க்க, குமரனுக்கு தருணி பாதுகாப்பு கண்ணாடி அணியக்கொடுத்துக்கொண்டிருந்தாள்.
கண்ணாடிக்குள்ளால் நெருங்கி வந்து உட்கார்ந்த மேகலாவை கண்வெட்டாமல் பார்ப்பது குமரனுக்கு வசதியாக இருந்தது. சீரியஸாக இருந்தாலும் சிரிப்பாள் போல தெரிந்தது. கொஞ்சம் தலைக்கு அடங்காத தலைமயிரை கட்டுப்படுத்த ஒன்றுக்கு ரெண்டு கிளிப் போட்டு காப் போட்டிருந்தாள். தருணி ஏதோ தமிழில் சொல்ல, இவள் அதற்கு சிரித்தபடியே மவுத் மிரரை வாங்கும்போது ஐயோடா என்றது. அவன் கவனித்துவிட்டான் என்று அறிந்தவுடன் சிரிப்போடு வெட்கமும் சேர்ந்துகொள்ள கொஞ்சம் யன்னல் பக்கம் பார்த்து வெட்கப்பட்டுவிட்டு இவனிடம் திரும்பினாள். அம்மாவுக்கு அப்போதே கோல் பண்ணி “தெய்வமே” என்று சொல்லவேண்டும் போல இருந்தது. சிரித்தான்.
விளங்கிவிட்டது. கள்ளன். கண்ணாடியை போட்டபடி நான் கண்டுபிடிக்கமாட்டேன் என்று நினைத்து என்னை கவனிக்கிறான். பிடுங்கித்தின்றது. தருணியிடம் நம்பர் 23 என்றாள். இவன் இப்போதும் சிரித்துக்கொண்டே இருந்தான். கிராதகன். எக்ஸ்ப்ளோரரையும் மிரரையும் கிட்ட கொண்டுபோய்,
“ஆ எண்டுங்க”
“நான் ஆருக்குமே இது வரைக்கும் பல்லு காட்டினதில்ல மேடம் .. உங்களிட்ட தான் .. ”
தருணி கிளுக் என்று சிரித்தாள். மேடம் என்று இந்தியா தமிழில் நக்கலாக சொல்லுகிறான் என்று புரிந்தது. எக்ஸ்கியூஸ் மீ சொல்லிவிட்டு ரூமுக்கு வெளியே வந்து அப்பாவுக்கு அடித்தாள்.
“சிரிக்கிறான் அப்பா”
“நல்லது தானே ..”
“கண்ணாடியால உத்து உத்து பாக்கிறானே”
“அது கறுப்பு கண்ணாடியா .. அதான்”
“சரியான லொள்ளு கேஸ் அப்பா”
“அப்படி எண்டா ஒன்று செய் .. தலையிடி எண்டு சொல்லி வெளிய வா .. வேற டொக்டர் பார்க்கட்டும்”
“இல்ல இல்ல .. சரி வந்திட்டான் .. என்னவோ சமாளிச்சு அனுப்புறன்.. நீங்க போனை வையுங்க”
சொல்லியபடி போனை கட் பண்ணும்போது அப்பா அம்மாவிடம் சிரித்தபடி ஏதோ சொல்லியது கேட்டது. கோபத்துடன் உள்ளே நுழைந்த போது, அவன் இவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
“ஆர் யூ ஒல்ரைட் மேகலா?”
“டொக்டர் மேகலா”வில் டொக்டர் காணாமல் போயிருந்ததை மேகலா கவனிக்க தவறவில்லை. ஒன்றும் பேசாமல் ஒவ்வொரு பல்லாக பார்த்தாள். எல்லாமே கிளீனாக இருந்தது. கவிட்டி கூட போர்ம் பண்ணி இல்லை. ஒரே ஒரு பல்லு தான், சாதுவாக, படு பாவி. என்னை பார்க்கத்தான் வந்திருக்கிறான். வெறுமனே கிளீன் பண்ணி தருணியிடம் சக்கிங் பைப் வாங்கி தானே அவன் வாயில் வைத்து குளோஸ் பண்ண சொன்னாள். டிஷூ குடுத்து எழும்ப சொன்னபோது.
“ஸோ ஒகே யா?”
“பெக் யூ எ பார்டன்?”
“எண்ட பல்லு எல்லாம் ஒகே யா? ஏதாவது பிரச்சனை?’
“இருக்கே .. லோவர் ரைட் தேர்ட் டிகே ஆயிட்டு .. நேர்வை டச் பண்ண போகுது .. பெர்மனன்ட் பில்லிங் செய்யோணும்”
“அப்ப ஈவினிங் ப்ரீயா இருப்பீங்களா?”
“எக்ஸ்கியூஸ் மீ”
“இண்டைக்கே முடிவு பண்ணினா நல்லம் இல்லையா.. நேர்வை டச் பண்ணீடும் எண்டு நீங்க தானே சொன்னீங்க!”
இராட்சசன். Before Sunrise ரசிகன் ஆயிற்றே. இப்பிடி தான் லொள்ளு பண்ணுவான். இவனை என்ன செய்வது.
“ம்ம்ம் .. மே பி .. வெள்ளிக்கிழமை வாங்களேன் .. ஒரு முடிவு பண்ணிடலாம்!”
மேகலா சிரித்துக்கொண்டே சொல்ல, குமரன் டிஷூவால் வாயை துடைத்தபடியே தாங்க்ஸ் சொல்லிவிட்டு. தயங்கினான்.
“என்ன பேமென்டா? கவுண்டர்ல செய்யுங்க .. “
“இல்ல .. நான் ஆர் எண்டு .. உங்களுக்கு ”
“நீங்க ஆரு?”
“வந்து அம்மா தான் .. நீங்க .. மேகலா .. அந்த காற்று வெளியிடை .. யூ நோ .. பாரதியார்”
குமரன் தடக்கினான்.
“பாரதியாருக்கு என்ன?”
“சொறி .. எனக்கு கோர்வையாய் பேச தெரியாது .. நேரடியாகவே கேட்கிறேன்”
“சொல்லுங்க .. இட்ஸ் ஒகே”
மேகலாவுக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை. கை கால் உதறியது.
“ஆ ஊ என்று எவ்வளவோ கதைக்கிறம் .. பட் .. ஒரு வார்த்தை வருதில்ல ..ஒல்ரைட் .. அம்மாக்கு நான் என்ன சொல்ல?”
“உங்கட அம்மாக்கு? .. ஓ .. பல்லு அவ்வளவு பிரச்சனை இல்ல .. நல்லா தான் இருக்கு எண்டு சொல்லுங்க!”
இருவருமே சிரித்தார்கள். சிரிக்கும்போது மேகலா தேவதைகள் எல்லாமே இவளைப்போல தானே இருக்கும் என்று குமரன் யோசித்தான்.
“தாங்யூ மேகலா… .. தான்ங் கோட்”
“நம்பவே முடியேல்ல … நம்புவீங்களா?”
சிரித்தபடியே ஸீ யூ சொல்லி தயங்கி தயங்கி திரும்பி நடந்தவனை அப்படியே பார்த்துக்கொண்டிருந்தாள். திரும்படா .. திரும்படா.. திரும்படா .. கள்ளன். அமுசடக்கி. வேண்டுமென்று திரும்பமாட்டான். கதவை தாண்டி நடந்தவனை மேகலா மீண்டும் ரெண்டடி முன்னே போய் அழைத்தாள்.
“ஹேய் .. குமரன்”
திரும்பினான். என்ன? என்று தலை உயர்த்தினான்.
“அப்பாக்கு நான் என்ன சொல்ல?”
மேகலா கேட்க .. யோசித்துவிட்டு அவன் சிரித்தபடியே சொன்னான்.
“அவனுக்கு பல்லை நல்லா புடுங்கீட்டன் எண்டு சொல்லுங்க!”
இதை கேட்ட மேகலா தன்னையறியாமல் விழுந்து விழுந்து சிரிக்க தொடங்க அவளையே விழி வெட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தான் குமரன்.
ப்ப்பா….
போயினவே துன்பங்கள் இந்தக் கதையை வாசித்தபோது. நகைச்சுவை கலந்த நாணம், தாயின் வருடல், தந்தையின் நெருடல், தனையனின் தவிப்பு கலந்த ஓர் அருமையான சிறுகதை.