“என்னை எந்த அளவுக்குப் புரிந்து கொண்டீங்க?” சுப்ரபாதமாக, நீதுவின் வாட்ஸ் அப் கண்டதும் எனக்கு ஆர்வம் தலை தூக்கியது.
நீது… பெயரை உதடில் நீவியதும் ஒரு புத்துணர்வு! நல்ல பெண். ஆரம்பத்தில் இருந்த அளவு அதிக அளவில் தொலைபேசித் தொடர்பு தற்போது கிடையாது.
இப்போதெல்லாம், மேகத்தில் சந்திரன் போல, முழு வானத்தில், பள பளவென்று அப்பளமாகப் பளிச்சிடுவாள். திடீரென அமாவாசையாக மேகமூட்டத்திற்குள் காணாமல் போய் விடுவாள். நானே பேசினால் போன் கட்… அவளே கூப்பிட்டால் அது கும்பாபிஷேகத்திற்குச் சமம்! எடுத்தால் மணிக்கணக்கில் முழு அலசு- சூப்பர் ரின் பவுடர் மாதிரி. மாதவன் இல்லாமலே நன்றாக அலசுவாள்.
“இவளோ ரெகுலர் விஸிட்டர் கிடையாது! ஏன் திடீரென்று உரிமை கோருகிறாள்? உடமைகளைச் சரிபார்க்கிறாள்?” என்று மனசு கேட்டாலும், சபலம், பேச்சைக் கேட்கவில்லை. “ஆஹா! புதுக் காரணம் ஏதாவது இருக்கும். ஜோசியர் இந்தவாரப் பலனில், எனக்கு ‘புது வசந்தம் உண்டாகும்’ என்று போட்டிருக்கிறாரே?” அதுதான் காரணமோ? அதுக்கு நம்ம லிஸ்டில் இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இவள் எங்கே? முற்றும் பரிச்சயமில்லாதவள்! ஒருமுறை கூட நேரில் பார்க்காதவள்-பழகாதவள் அது எப்டி?
மனசின் ஒரு பக்கத்தில் மத்தளம் கொட்டினாலும் மற்றொரு பக்கத்தில், தனி ஆவர்த்தனம்தான் சக்கைப் போடு போட்டது!
சரி! என்னதான் சம்பந்தம் உங்கள் இருவருக்கும்?
காதலா?
நோ!
ஓன் நைட் ஸ்டாண்ட் ஆ?
கிடையவே கிடையாது!
வீடியோ செக்ஸா?
ஐயோ! வெட்டிடுவா! முக்கியமான சமாச்சாரத்தை.
வாட்? அப்போ டைம் வேஸ்டர்னு சொல்லு-
இல்லப்பா! நான் தான் அவள் டைமை டெஸ்ட் பண்ணிகிட்டிருக்கிறேன். முக்கியமா இதுவரை இந்த ஐந்து வருடங்களில், வாழ்வில எந்தக் காரியம் தொடங்கினாலும், என்னிடம் கேக்காம அவ செய்தது கிடையாது! புதுப் புடவை, மேட்சிங்க் பிளவுஸ், நாயுடு ஹால் உள்ளாடை செலக்ஷன் உட்பட! அதிக பட்சம் நான் சொன்னபடித்தான் அவள் போயிருக்கா! அவளை என்னிடமிருந்து விலகாதபடி பார்த்துக்கொள்ள மட்டுந்தான் என்னுடைய சுய நலம், ஆசை எல்லாம்! வேற யாரை கன்சல்ட் பண்றாள்னு எனக்குத் தெரியாது! கவலையும் இல்லை. இன்னிக்கும் அவளை நேரில் பார்த்ததே கிடையாது! இது தொடரணும். சற்றும் தொடாமலேயே.
அடப் பைத்தியக்காரா! தானும் படுக்கான் …. தள்ளியும் படுக்கான் அப்படீன்னு என்னதான் பண்ண உத்தேசம். அவள் உன்னோட யாரு? உன் மேல் அவளுக்கு இத்தனை உரிமை என்ன? உனக்கு அவள் மேல் என்ன உரிமை? கமலி கேட்க மாட்டாளா? (கமலி என் சூப்பர் பெட்டர் ஹாஃப்)
ஆணுடன் ஒரு பெண் சகவாசம் வைத்துக் கொண்டால் அவளைப் பெண்டாளுவது ஒன்றுதான் ஆணுக்கு உபயோகமா? இது ரொம்ப சீப் ஆகத் தோணவில்லை? எந்தப் பெண்ணும் இதற்காகத்தான் ஆண்களிடம் பழகுகிறார்களா? அசிங்கமாக இல்லை? நோட்டமே சரி இல்லைதான்!
அப்ப எல்லாப் பெண்களிடமும் இப்படித்தான் உத்தமனா பழகி வருவியா? கடற்கரையில் சிலைதான் வைக்கணும்- உனக்கு.
சரிதானே? ஏன் இந்த நீதுவிடம் மட்டும் எனக்கு ‘அந்த’ உந்துதல் வரவில்லை?
காரணமிருந்தது!
நீது அறிமுகமான விதம்!
அவளுடைய அப்பா எங்கள் ஆபீஸில் ஒரு வேலையிலிருந்து ரிடையர் ஆனவர். அவருக்குப் பென்சன் இல்லை என்பதனால் ஏதாவது வேலை தேடி என்னிடம் முதன்முதலாகப் போன் வந்தது நீதுவிடமிருந்து! என் பெயரை அவளிடம் பரிந்துரை செய்தது- எனக்குத் தெரிந்த வேறு ஒரு பெண். அவள் தந்தைக்கு ஒரு ஆடிட்டரிடம் சொல்லி, வங்கிகளில் நகைக் கடன்களைச் சரிபார்க்கும் ‘ரோவிங்க் அதிகாரி’ என்ற பட்டத்தோடு ஒரு வேலை ஏற்பாடு செய்தேன்.
இந்தச் செயலால் முதலில் கனிந்தது நீதுதான். அவள் என்னை ரொம்ப உயரத்தில் நிறுத்திப் பார்க்க ஆரம்பித்தாள் என்று தோன்றியது.
இப்படி ஆரம்பித்த இந்த போன் உறவில், ஆண் பெண் வித்தியாசம் இன்றிப் பேசக் கூடிய பல விஷயங்களையும் நாங்கள் தினமும் பேச ஆரம்பித்தோம். அவளும் கூச்சமில்லாமல், தயக்கமில்லாமல் தன்னுடைய மன ஆதங்கங்களை முழுதும் கொட்ட ஒரு வடிகாலாக என்னை பாவித்தாள். எனக்கும், கமலி கூட என்னிடம் பகிர விழையாத பல விஷயங்களை, என்னை நம்பி, முற்றிலும் பரிச்சயமில்லா ஒரு காரிகை, தன் வாழ்க்கையின் அந்தரங்க விஷயங்களைக் கூட பகிர்ந்து கொள்வதில் ஒரு பெருமிதம். ஏதோ ஒரு கர்மக் கணக்கு இருக்கும்-வரலொட்டியின் பாஷையில்!
அப்பாவை வேலைக்கு அனுப்ப நீதுவிற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, படுத்த படுக்கையாகக் கிடந்த அம்மாவின் மருந்து செலவிற்கு தேவைப்பட்ட அதிகப்படி பணம். மற்றொன்று அப்பாவி அப்பாவின் நெருங்கிய நண்பர்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள! அப்போதுதான் தெரிந்தது அவள் அப்பா அத்தனை அப்பாவி இல்லை என்று!
அப்பாவின் ஆபீஸ் நண்பர்கள் அதிக அளவில் புழங்கும் ‘கிளப் ஹவுஸ்’ ஆனது நீதுவின் வீடு! படுத்த படுக்கையாகக் கிடந்த மனைவி! திருமணத்தை முறித்துக் கொண்டு பிறந்த வீட்டில் மீண்டும் புகுந்த ஒரே மகள்-நீது. குழந்தைகள் இல்லை!
இந்தப் பின்னணியில் நீதுவின் அப்பா ரிடையர் ஆனதும், ஹவுஸ் கிளப் விரிவாக்கம் செய்யப் பட்டது.
நண்பர்களிடம் கடன் வாங்குவதும், திருப்பித் தர வசதிக் குறைவு ஏற்பட்டதும் நண்பர்களில் சிலர் கடனை வசூலிக்க வேறு பார்வைகளைச் செலுத்தத் தொடங்கியதும், அப்பா அதனை சிரமேற்கொண்டு நீதுவை கட்டாயம் செய்து நண்பர்களுடன் படுக்கச் சொன்னதும்….நடந்த கதைகள்.
இரண்டு ஆண்டுகள் முன்பு என நினைக்கிறேன். நீதுவின் அப்பா எழுதிக் கொடுத்த ஆடிட் குறிப்புக்கள் நேர்மைக் குறைவானதாக இருப்பது, அவர் வேலை பார்த்து வந்த ஆடிட்டர் கம்பெனிக்குத் தெரிய வந்ததால், உடனுக்குடனே வணக்கம் சொல்லி விடை கொடுத்து விட்டனர்.
என்னிடமும் மறைமுகமாகத் தெரிவித்து விட்டனர்-அவருடைய கவனக் குறைவுகளையும், பலதரக் சபலக் கதைகளையும் சேர்த்து.
வேறு எங்கும் வேலை கிடைப்பது இயலாமல் போன சூழ்நிலையில், ஒரு நாள், சொல்லாமல் கொள்ளாமல் வேலி தாண்டிய அப்பா, வந்தே பாரத் வரும்போது, தண்டவாளத்தில் தலையைச் சாய்த்தார்.
நீதுவின் பொறுப்பு இன்னும் கோரமானது- பருந்துக் கூட்டங்களிடமிருந்து தன்னையும் காப்பாற்றிக் கொண்டு, நோயிலிருந்து அம்மாவையும் மீட்டெடுக்க அவள் மேலும் எச்சரிக்கையாக உழைக்க வேண்டி வந்தது.
சென்ற வருடம் என்று நினைக்கிறேன். தீபாவளிப் பண்டிகை அன்று அவளுக்கு ஒரு வாட்ஸ் அப் வாழ்த்து அனுப்பினேன். பல நாட்களாகத் தொடர்பில் இல்லாமல் இருந்த நீது உடனே வீடியோவில் தோன்றினாள். அரற்றினாள். புலம்பினாள்.- அவள் அம்மாவை நிரந்தரமாக இழந்து விட்டாளாம்.
அதன் பின்னர் போன்கள் வருவது குறைந்தாலும், நான் போடும் ஸ்டேட்டஸ் பார்த்து தம்ஸ் அப் போடுவதில் நீது ரெகுலராக இருந்தாள். முக்கியமான முடிவுகள் எடுக்க எப்போதும் என்னையே நாடினாள்.
இன்று மெஸேஜ் போடுகிறாள்.
“என்னை எந்த அளவுக்குப் புரிந்து கொண்டீங்க?” என்று. என்ன கேட்கப் போகிறாள்?
முதல் முறையாக என் கால் அங்கீகரிக்கப் பட்டது நீதுவால்.
“அப்பா! என்னை எந்த அளவுக்குப் புரிந்து கொண்டீங்க?” எனக்கு அதிர்ச்சி! இதுவரை அப்பா என்று அவள் அழைத்தது கிடையாது!
‘நீ ஒரு குழந்தை! ஒரு இனிமையான பூந்தோட்டம்! அன்பின் அரவணைப்பிற்கும் பாதுகாவலுக்காகவும் நீ ஏங்குகிறாய்.- உனக்கு உணர்ச்சியும் உணர்வுகளும்தான் முக்கியம் – புணர்ச்சியும் புலனின்பமும் முக்கியமானது அல்ல! இதுதான் என் புரிதல்”
“ஐ லவ் யூ டாட்! எனக்கு யாரும் இல்லை. நீங்கதான் என்னை இனிமேல் வழி நடத்தணும். என் போராட்டங்கள் அனைத்தும் முடிந்தன. எனக்கு லைஃபில் ஆறுதல், ஆதரவு நீங்கள் ஒருத்தர்தான்“ பெரிதாக அழத் தொடங்கினாள்- அந்த நேர்முக வீடியோ காலில்.
முதன் முதலாக நான் ஒரு புதிய சிந்தனையில் தள்ளப் பட்டேன்.
கண்களில் நீர் சுரக்கத் தொடங்கியது. அதே சமயத்தில், வேட்கை வெட்கப்பட்டு பின் வாங்கத் தொடங்கியதும் இரகசியமாகப் புரிந்தது.
இந்த “லவ்” ஏன் யாருக்கும் புரிய மாட்டேன் என்கிறது?
“பூந்தோட்டக் காவல்காரன் என்பது ஏன் மறந்து போனது-இதுவரை?”