எண்ட காதலி உங்களுக்கு மனைவி ஆகலாம், ஆனால் உங்க மனைவி எனக்கி திரும்ப காதலியாகாது சாரே , அந்த ஏழு நாட்கள் பாக்யராஜ் மாதிரி வாழ்ந்து கொண்டிருந்த நான் இப்பொழுதெல்லாம் மற்றவர்களுக்கு உரிமையான பெண்களிடம் அடிக்கடி சஞ்சலப்படுகின்றேன். சாதரண அழகுடையப் பெண்கள் கூட அடுத்தவனின் காதலி என அறியப்படும் பொழுது அவர்களின் மேல் இருக்கும் கவர்ச்சி மேலும் அதிகமாகுகிறது. வயது கடை இருபதுகளில் இருப்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம். அம்மு நீங்கலாக முன்னாள் காதலிகள் அனைவருமே அவர்களின் திருமண நிச்சயதார்த்ததிற்குப்பின்னர் “கார்த்தி, நீ ஒரு ஜெண்டில்மேன்” ஒரு முறையாவது சொல்லியதுண்டு. அம்முவின் திருமணத்திற்குப்பின்னர் அவளைச் சந்திக்கும் வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் அவளும் சொல்லி இருப்பாள்.
சபலங்களாலும் சஞ்சலங்களாலும் நிறைந்து இருந்து மனது, கிருஷ்ணமூர்த்தியின் காதலியைப் பார்த்தபின்னர் , அவளைக் கவர்ந்து ஒட்டு மொத்தமாக தனதாக்கிக் கொள்ளும் எண்ணங்களையும் விதைத்தது. பார்த்த மாத்திரத்தில் அடுத்தவனின் காதலியிடம் காதல் வயப்பட்டது கேவலமானதுதான், இருந்தாலும் என்ன செய்வது, ஆதிமனிதனின் ஜீன்கள் எங்கோ ஒளிந்து இருக்கின்றனவே!!
அம்முவைப்போல இருக்கும் பெண்களிடம் மட்டுமே அதீத ஈர்ப்பு வந்து கொண்டிருந்ததற்கு மாற்றாக , துளிகூட அம்முவின் தோற்றத்திற்கோ குரலுக்கோ நடை உடை பாவனைக்கோ சம்பந்தமில்லாத கிருஷ்ணமூர்த்தியின் சோமாலியா நாட்டுக் காதலி முதல் பார்வையிலேயே என்னை தடுமாற வைத்துவிட்டாள். வற்றிய வயிறு , ஒட்டியக் கண்ணங்கள் என பஞ்ச தேசம் அறியப்படும் சோமாலியாவில் இருந்து இப்படி ஒரு அழகியா ! மாநிறத்திற்கும் சற்றும் அதிகமான நிறத்தில் இருக்கும் பெண்களால் மட்டுமே ஈர்க்கப்பட்ட நான், முதன் முறையாக கருப்பும் அழகுதான் என அவளை டென்மார்க் தலைநகரான கோபன்ஹேகன் விமானநிலையத்தில் ரசித்துக் கொண்டிருதேன். கிளியோபட்ரா கருப்பு என்ற கூற்று நிஜமெனில், கிளியோபட்ரா இவளைப்போலத்தான் இருந்திருப்பாள்.
“கார்த்தி, பிரயாணம் எல்லாம் சௌகரியமாக இருந்ததா !! இது என் காதலி ஆமினோ” என என்னுடைய மனதுக்கினியவளை கிருஷ்ணமூர்த்தி அறிமுகப்படுத்தினான்.
கைக்குலுக்குவதா, கைகூப்பி வணக்கம் சொல்லுவதா என்ற ஒரு வித தயக்கத்திற்குப்பின்னர், தொட்டுப்பார்த்துவிடவேண்டும் என அழுத்தமாக ஆமினோவின் கைகளைக்குலுக்கினேன்.
நானும் கிருஷ்ணமூர்த்தியும் ஆத்மார்த்தமான நண்பர்கள் எல்லாம் கிடையாது , ஒரே கல்லூரியில் படித்தவர்கள், தேவைப்படும்பொழுது ஒருவரை ஒருவர் தங்களுக்கு சாதகமான விசயங்களுக்குப் பயன்படுத்துக் கொள்வதில் நாங்கள் இருவரும் சளைத்தவர்கள் இல்லை. நெதர்லாந்தில் நான் இருந்தபொழுது டி வால்லன் பகுதியைச் சுற்றிப்பார்க்க கிருஷ்ணமூர்த்தி வந்திருந்தான். தேவையான உபசரிப்புகள் அளித்ததன் பயன், நான் இப்பொழுது சுவீடன் செல்லும் முன்னர், கோபன்ஹேகனின் செலவில்லாமல் இரண்டு நாட்கள் தங்க இடம் கிடைத்திருக்கின்றது. இரண்டாமாண்டில் சுபத்ரா ரங்கனாதனையும் கடைசிவருடத்தில் ராகினி வாசுதேவனையும் காதலித்த கிருஷ்ணமூர்த்தி, கருப்பாய் இருக்கும் பெண்களின் மீதும் மோகம் கொள்வான் என்பது உறுத்தலாகவே இருந்தது. ஆமினோ அருகில் இல்லாதபொழுது அவனிடம் நேரிடையாகவே கேட்டுவிட்டேன்.
“கருப்பா இருந்தா என்ன? வெளுப்பாய் இருந்தா என்ன? சிவப்பு பாஸ்போர்ட் கிடைக்கனும்னுதான் இந்தக் கருவாச்சியை ரூட் போட்டேன்”
ஆமினோ வின் பெற்றோர்கள் சோமாலியா நாட்டில் பணக்காரக் குடும்பங்களில் ஒன்று, பஞ்சமும், உள்நாட்டு பிரச்சினைகளும் தலைவிரிக்க ஆரம்பித்தபொழுது அகதிகளாக இங்கு வந்து ஒரு பதினைந்து வருடங்கள் ஆகின்றதாம். ஆப்பிரிக்கா பூர்வீக வளமும், டென்மார்க்கில் தட்டுக் கழுவி சேர்த்த பணமும் கோபன்ஹேகன் அகதிகளில் முதல் பணக்காரக் குடும்பம் என்ற நிலைக்கு கொண்டு வந்திருக்கின்றது என கிருஷ்ணமூர்த்தி விவரித்துக் கொண்டிருந்தான்.
அன்றிரவு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சாப்பிடும் உணவகத்தில் சாப்பிட்டோம். சுமாரான பெண்களே ஜொலிக்கும் மெழுகுவர்த்தியின் ஒளியில் ஆமினோ தேவதையைப்போல தெரிந்தாள். சிறிய அளவில் வைனுக்குப்பின்னர் ஆமினோவின் வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து கதை பேச ஆரம்பித்தோம்.
ஆமினோ மனித உரிமைகள் படிப்பதாக சொன்னாள். ஈழம் பற்றி பேசினாள். பிடித்த படம் அன்பே சிவம் என்றாள். பரவாயில்லை கிருஷ்ணமூர்த்தி தமிழ் பற்றிய விசயங்களும் சொல்லி இருக்கின்றான். கிரிக்கெட் பார்க்கக் கற்றுக்கொண்டிருப்பதாக சொன்னாள். வெறும்பார்வையைக் காட்டிலும் பேசும் பாவங்களுடன் மேலும் அழகாகத் தெரிந்தாள். ஆமினோ என்றால் நம்பிக்கையானவள் எனப்பொருள் என்றாள். கிருஷ்ணமூர்த்தி தூங்கியபின்னரும் நாங்களிருவரும் பேசிக்கொண்டிருந்தோம். இரவோடு இரவாக, இவளை சுவீடனுக்குக் கடத்திக் கொண்டு போய்விடலாமா என ஒருக் கணம் யோசித்தேன். தெளிவான பேச்சு, வார்த்தைகளில் கண்ணியம் , கருத்துகளில் நேர்மை. தூங்குவதற்கு முன் கட்டியணைத்து “குட் நைட்” சொன்னாள்.
கிருஷ்ணமூர்த்தி அடுத்த நாள் நானும் ஆமினோவும் பேசுவதைத் தடுக்கும் வகையிலேயே ஏதாவது செய்துகொண்டிருந்தான். சுவீடனுக்கு கிளம்பும் அன்று ஆமினோவைப் பார்க்க முடியவில்லை. சுவீடன் வந்த முதல் வேளையாக அவளை பேஸ்புக்கில் இணைத்துக் கொண்டேன். தொடர்ந்து அவளின் புகைப்படங்களுக்கு அபிப்ராயங்களைத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த ஒரு நாள், கிருஷ்ணமூர்த்தி மின்னரட்டையில் வந்தான். எடுத்தவுடனேயே சோறுபோட்டு சாப்பிடுபவன் அடுத்தவனின் பொண்டாட்டியைப் பார்க்க மாட்டான் என்றான். ஏதோ குடித்துவிட்டு பேசுகிறான் என, “உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா” எனக்கேட்டபொழுது கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்துவிட்டான்.
நான் எதிர்த்து பேசவில்லை, தவறு என் மேல்தானே !! பாம்பின் காலை பாம்பறிந்துவிட்டது. எனக்கும் ஏதோ அசிங்கத்தை மிதித்தது போல இருந்தது. தன் துணையை அடுத்தவன் பார்க்கிறேன் எனும்பொழுது வரும் ஆத்திரத்தின் வெளிப்பாடாகவே நான் உணர்ந்து கொண்டேன் . அதன் பின்னர் ஆமினோவையும் கிருஷ்ணமூர்த்தியுடன் பேஸ்புக்கில் உரையாடுவதை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் பிறன் மனை நோக்குவதையும் அடியோடு நிறுத்தினேன். ஆறுமாதங்கள் ஓடி இருக்கும், திடீரென ஆமினோவிடம் இருந்து நலம் விசாரித்து ஒரு மின்னஞ்சல் வந்து இருந்தது. ஆமினோவின் பேஸ்புக்கில் /ஸ்டேடஸ்/ சிங்கிள் என மாறி இருந்தது. கிருஷ்ணமூர்த்தியை பொதுவான நண்பனாகவும் காட்டவில்லை.
முதல் வேளையாக கிருஷ்ணமூர்த்தியை ஒட்டுமொத்தமாக தடைசெய்து ஆமினோவிடன் பேச ஆரம்பித்தேன்.
– செப்டம்பர் 2010