பிஞ்சிலே பழுத்த இளம் பிஞ்சுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 24, 2020
பார்வையிட்டோர்: 11,149 
 
 

“அம்மா… அம்மா… ” என்று அழைத்தபடி அங்கிருந்த ஷேரில் அமர்ந்தான் கண்ணன்.

“என்ன சொல்லு எனக்கு வேலையிருக்கு” என்றபடி கிச்சனில் இருந்து வெளியே வந்தாள் கண்ணனின் அம்மா ராசாத்தி.

“எங்க கலேஜ்ல படிக்கிற ரமேஷ் அக்காவுக்கு மேரேஜ் என்னை கூப்பிட்டுருக்கான் நானும் போகனும்மா…” என்றான் மெல்ல.

“யாருடா அது அன்னைக்கு போன்ல பேசினானே அவனா?”

“இல்லம்மா இவன் வேற என்னம்மா நான் போகட்டுமா…”

“சரி.. சரி.. போகலாம் அதுக்கு முன்னாடி கடையில போய் மளிகை சாமான் லிஸ்ட் போட்டு வைச்சிருக்கேன் அதை கொடுத்திட்டு வா… நாளைக்கு பூவாக்கு ஒன்னும் இல்ல அப்புறம் பழைய பாக்கியும் கொடுத்துட்டு வந்திரு இல்லன்னா பாதி சாமான் ஒழுங்காவே போடமாட்டான்..”

“என்னம்மா நீங்க ” என்று இழுத்தான்

“என்னடா… வாங்கிவச்சிட்டு போறதுன்னா போ… இல்லன்னா நீ போக வேண்டாம்” என்றாள் கோபத்துடன்.

“சரி வாங்கி தொலைக்கிறேன் ஏதாவது கேட்டா ஒரு வேலை சொல்வீங்க என்று எரிச்சலோடு கூறிவிட்டு வீட்டுக்கு பின்புறம் சென்று செல்லை எடுத்து டயல் செய்தான். “ஹலோ.. மாப்புள்ள என்னடா நல்லா இருக்கியா..?”

“ஏய் பேசுடா நான்தாண்டா பேசுறேன்…”

“என்னங்க அம்மாகிட்ட பர்மிஷன் வாங்கிட்டிங்களா அம்மா என்ன சொன்னாங்க…” கிசுகிசுப்பாக கேட்டாள் நிம்மி என்ற நிர்மலா.

“ம்… கேட்டாச்சுடா.. போக சொல்லிட்டாங்க நாளை நான் சொன்ன இடத்துக்கு வந்திடு சரியா”

“சரி நான் வந்துர்றேன் அம்மா எதுவும் சந்தேகப்படலையே”

“இல்ல.. இல்ல.. சந்தேகம் வரல”

“சரிடா நாளை நேரில் சந்திப்போம் இப்ப வைக்கவா?”

“ஏய்.. கொஞ்சம் இரு நான்தான் அம்மாகிட்ட பர்மிஷன் வாங்கிட்டேனே அதுக்கு பரிசா எனக்கு ஒன்னு தந்தா என்ன”

“ம்..கூம்.. அதெல்லாம் கிடையாது நான் வைக்கிறேன்”

“ரொம்பதான் பிகுபண்றே நாளைக்கு வச்சுகிறேன்டி உனக்கு” என்றபடி செல்லை அணைத்தான் கண்ணன்.

கண்ணனும், நிர்மலாவும் காதலர்கள் நிர்மலா அரசு கலைஅறிவியல் கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் இரண்டாமாண்டு படிக்கின்றாள். கண்ணன் கேட்டரிங் கலேஜில் முதலமாண்டு படிக்கிறான். இருவருக்கும் ஓரிரு மாதங்கள்தான் வயது வித்தியாசம் கண்ணனின் பெற்றோர்கள் காதல் திருமணம் புரிந்தவர்கள் ஆதலால் இவன் பக்கம் எதிர்ப்பு இல்லை ஆனால் தன் மகன் இந்த வயசிலே காதலில் சிக்கி விட்டானே என்ற கவலை அவனின் பெற்றோருக்கு உண்டு சில நேரங்களில் எரிச்சலாய் திட்டுவதும் உண்டு.

கண்ணன் பெரிய அழகு ஒன்றுமில்லை தனுஷ்போல அதே ஒட்டிய கன்னம், ஒல்லியான தேகம், கறுப்பு தோற்றம் ஆனால் நிர்மலா நல்ல நிறம், நல்ல அழகு, நல்ல வசதி இருவரும் ஒரே பஸ்சில்தான் காலேஜ் போவது வழக்கம் அப்போ ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறிவிட்டது இது இரண்டாவது வருடம் தொடர்கிறது இவரது காதல் பயணம்.

மறுநாள் காலை “அம்மா நான் போயிட்டு வர்றேன்மா” என்றான்.

“எல்லாம் எடுத்துட்டியா?”

“ம் எடுத்துட்டேன்மா.. இன்னும் ஒரு நுறுரூபா தாங்கம்மா” கெஞ்சினான்.

“ஏய் நேத்துதானே ஐநூறு ரூபா கொடுத்தேன் போதும் போ”

“என்னம்மா நீங்க ரெண்டுநாள் தங்குறேன் அப்றம் கிப்டு வேற வாங்கனும்”

“இங்கபாரு அதெல்லாம் எனக்குத் தெரியாது ஒம்பிரண்ட்க்கு கிப்டு வாங்கு வாங்கமா போ எனக்குத் தெரியாது சரி இந்தா ஐம்பது ரூபா கொடு நூறுரூபா தர்றேன்”

“என்னம்மா” என முனங்கியபடி ஐம்பது ரூபாய் கொடுத்துவிட்டு நூறு ரூபாய் வாங்கிகொண்டு பை.. பை.. சொல்லிவிட்டு அவசரமாக கிளம்பினான் கண்ணன். அங்கே பஸ் ஸ்டாண்டில் வெகு நேரமாக காத்துக் கொண்டிருந்தாள் நிர்மலா.

பஸ் ஸ்டாண்டை நெருங்கியதும் ஜன்னல் வழியாக நிர்மலாவைத் தேடினான் கண்ணன். நிர்மலா நகத்தை கடித்து துப்புவதும், கடிகாரத்தை பார்ப்பதுமாக இருந்தாள் அவள் கோபத்தில் இருக்கிறாள் என்பதை சொல்லாமல் சொல்லியது போய் சமாதானம் செய்ய வேண்டும் என நினைத்தப்படி பஸ்சை விட்டு இறங்கி நிர்மலாவிடம் சென்றான்.

“என்னங்க இப்படி லேட் பண்ணிட்டிங்க கொஞ்சம் சீக்கிரம் வரக்கூடாதா?”

“சாரிடா கிளம்பும் போது அம்மா ஒரு வேலை சொல்லிட்டாங்க அதான் கிளம்பி வர்றதுக்கு கொஞ்சம் லேட் ஆச்சு”

“சரி சரி வாங்க பஸ் நிக்கிது போகலாம்” இருவரும் ஊட்டி பஸ்சில் இடம் பார்த்து ஏறி அமர்ந்தனர். நிர்மலாதான் பேச்சை ஆரம்பித்தாள். “என்னங்க நாம மேரேஜ்னு பொய் சொல்லிட்டு கிளம்பி வந்துட்டோம் அவங்களும் நம்பிட்டாங்க ஆனாலும் பயமா இருக்குங்க”

“சரி அதவிடு, என்றவன் அவளின் கைப்பிடித்து தன் கைக்குள் வைத்துக்கொண்டு “இப்ப அதுவா முக்கியம் ஜாலியா வேற ஏதாவது பேசுவோம்” என்றான்.

“இல்லங்க எங்கப்பாவுக்கு நம்ம விஷயம் தெரிஞ்சு போச்சுன்னு நினைக்கிறேன். மதுரையில் இருக்கிற எங்க அத்தை பையனை கட்டிக்கச்சொல்லி வர்புறுத்துறாங்க நேத்து கூட எங்கத்தை என்னை வந்து பார்த்துட்டு போனாங்க.

நம்ம காதலை ஏத்துக்கமாட்டாங்க ஏத்துக்கலன்னா நேரா உங்க வீட்டுக்கு வந்திடுவேன்.

“ஏய்.. லூசு.. எங்கம்மா ஒத்துப்பாங்கதான் ஆனால் இப்ப சரியான நேரமா இது எங்கப்பா என்ன சொல்வாரோ தெரியல”

“இல்லங்க உங்கப்பா அம்மாவை நான் சரி பண்ணிடுவேன் ஆனா உங்க தங்கச்சிக்குதான் கொஞ்சம் பயமா இருக்கு என்றாள் பயந்தவாரே” இப்படியே பேசிக்கொண்டே அப்டி இப்டி சில்மிஷமும் செய்து கொண்டே தூங்கி போனார்கள். அனிதா கண்ணனோட தங்கச்சி அரசு பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படிக்கிறாள். யாரோடும் அத்தனை எளிதாக பேசிட மாட்டாள் அவள் மனதில் இடம் பிடிக்க வேண்டுமென்றால் அவளை புகழ்ந்து பேசினாள் போதும் விழுந்து விடுவாள். அன்பு, பாசம் என்றால் கிலோ என்ன விலை என்பாள் அதான் நிர்மலாவுக்கு கொஞ்சம் பயம்.

ட்ரிங்… ட்ரிங்… ட்ரிங்… டெலிபோன் மணி அடித்தது. “ஏய் அனிதா போன் அடிக்கிதுல்ல எடுத்தா என்ன டிவி சவுண்டை குறை என்றபடி போனை எடுத்தாள் ராசாத்தி.

“ஹலோ… யாரு”

“நான் தான் மேடம் கண்ணனோட சார் பேசுறேன்.”

“வணக்கம் சார் நல்லா இருக்குறீங்களா?

“நல்லா இருக்கேன் கண்ணன் எங்கம்மா தூங்குறானா?”

“என்ன சார் சொல்றீங்க உங்க காலேஜ்ல படிக்கிற பையனோட அக்காவுக்கு கல்யாணம்னு சொல்லிட்டு போனான் சார் உங்களுக்குத் தெரியாதா?”

“என்ன மேடம் சொல்றீங்க யாருக்கு கல்யாணம் அப்படியெல்லாம் இல்லையே சரி கண்ணன் வந்தா நான் கால் பண்ணினதா சொல்லுங்க சரிம்மா நான் வைக்கிறேன்”

ராசாத்தி போனை வைத்தவள் “எங்க போய் தொலைஞ்சான் இந்த பய… எங்கிட்ட ஒரு உண்மையும் சொல்லமாட்டேங்குறானே வரட்டும் அவனை என்ன செய்யுறேன் பாரு…” பிபி ஏற கத்தினாள்.

“சரி விடுங்கம்மா… அண்ணன் வீட்டுக்கு வரதானே போகுது அப்ப கேட்டுக்கலாம் அவனுக்கு ரொம்ப தான் செல்லம் கொடுக்குறீங்க ஆம்பிளை புள்ளன்னு ரொம்ப ஓவரா பண்றீங்கம்மா… அதான் அது இப்படி பண்ணுது.. நீங்க வீணா டென்ஷன் ஆகாதிங்க” எனக் கூறிவிட்டு டிவியை பார்க்கத் தொடங்கினாள் அனிதா.

ராசாத்திக்கு மனம் சமாதானம் ஆகவில்லை ஏதேதோ மனம் குழம்பி போய் கவலையோடு படுத்தாள்.

ஊட்டி மலை சிகரம் காதலர்களை எப்போதும் இரு கரம் நீட்டி அழைத்துக்கொள்கிறது. அதனால் தான் அங்கே காதலர்கள் படையெடுக்கிறார்கள். மலைகளின் ராணி ஊட்டி எழில் கொஞ்சம் அழகோடு பனி போர்வை விரித்தபடி காட்சி தந்தாள். கண்ணனும் நிர்மலாவும் ஊட்டியில் வந்து இறங்கியதும் ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து குளித்து சாப்பிட்டுவிட்டு வெளியே சுற்றிப் பாரத்துக்கொண்டே வந்தனர். எங்கும் வண்ண வண்ண மலர்கள் பூத்து குலுங்கியது.. அதன் அழகை ரசித்தப்படி வந்தார்கள் நிர்மலா ஒரு அழகான மலரை சுட்டிக்காட்டி “என்னங்க அந்த ப்ளவர் பாருங்களேன் எவ்வளவு அழகா இருக்கு” என்றாள்.

“ஆமான்டி உன்னமாதிரி ரொம்ப அழகா இருக்கு” என்றான்

“ஆ…மா…. இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல இத்தனை நாளா காதலிக்கிறீங்க ஒரு மல்லியப்பூ வாங்கி தந்துயிருக்குறீங்களா?”

“இதோ வாங்கி தர்றேன்” என்றவன் கொஞ்ச தூரம் சென்று மல்லியப்பூ வாங்கி வந்து அவளின் தலையில் வைத்தான். அவன் அவள் தலையில் அந்த பூவை வைத்தவுடன் அவள் அப்படியே சிலிர்த்து நின்றாள்… அந்த நேரத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கன்னத்தில் இதமாக முத்தமிட்டான். அவள் அப்படியே கொஞ்ச நேரம் செயல் இழந்து நின்றாள். கடைசியில் அவள்தான் சுதாரித்துக் கொண்டு சீ… போங்க… யாராவது பார்த்த என்ன நினைப்பாங்க”

“யார் பார்த்தா என்ன? என்னோட காதலிக்கு ஒரு முத்தம் கூட குடுக்க கூடாதா? இங்கே எல்லாரும் எதுக்கு வர்றாங்க ஜாலியா என்ஜாய் பண்ணதான் ஒன்னுமே பண்ணாம இருக்கனும்ன்னா நாம இங்கே வந்திருக்க கூடாது எங்காவது கோயில் குளம்னு போயிருக்கனும்..”

“அய்யோ… தெரியாம சொல்லிட்டேன் சாமி ஆள விடுங்க..” என்று கை கூப்பி சிரித்தாள்.

அவள் அப்படி செய்ததும் அவன் சிரித்துக்கொண்டே ஒரு கையால் அவளை அணைத்து இன்னொரு கையால் அவள் கை கோர்த்து அழைத்து சென்றான். அவளும் அவன் மீது சாய்ந்த படி சென்றாள் ஊட்டி குளிருக்கு அது இதமாக இருந்தது. இந்த சுகத்திற்குதான் காதலர்கள் இந்த இடத்தை தேர்வு செய்கிறார்களோ…

இருவரும் மனம் போன போக்கில் சுற்றி திரிந்தார்கள் விதவிதமாக போட்டோ எடுத்தார்கள். கண்ணில் பார்த்தவற்றை வாங்கி சாப்பிட்டார்கள், எல்லா இடமும் சுற்றிவிட்டு ரொம்ப சோர்வாக இரவு ரூமிற்கு வந்தார்கள். நிர்மலா பாத்ரூம் சென்று குளித்துவிட்டு வந்து அமர்ந்தாள். கண்ணன் அவளை விழுங்குவது போல் பார்த்துக்கொண்டு இருந்தான். இவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது… இவன் பார்க்கிற பார்வைய பார்த்தா இன்று ஏதாவது தப்பு நடந்திருமோ கடவுளே அப்படி ஏதும் நடந்திட கூடாது அந்த தைரியத்தை எனக்கு கொடு மனசை அலைபாய விடாதே … என்று தனக்குத்தானே எச்சரித்துக்கொண்டாள்.

அவன் மெல்ல அவளை நோக்கி நெருங்கி வந்தான்.. இவள் சுதாரித்துக்கொண்டு “ஹலோ… சார் என்ன ரொமான்ஸா… போதும்.. போதும்.. நீங்க போய் குளிச்சிட்டு வாங்க ரொம்ப கனவு காணாம போங்க இன்னைக்கு எதுவும் நினைச்சிக் கூட பார்க்காதீங்க..சிரித்துக்கொண்டே சொன்னாள். அவன் ப்ளீஸ்.. ப்ளீஸ்.. எனறு கெஞ்ச கெஞ்ச..பாத்ரூமில் தள்ளி கதவை சாத்தினாள். அவன் பாவமாக மூஞ்சை வைத்துக்கொண்டு நீயும் வாயேன் என்றான் கண்ணடித்து.

“உதைபடுவே ராஸ்கல் ச்சீ.. போடா..” என்றபடி வந்து கட்டிலில் அமர்ந்து பெருமூச்சு ஒன்றை வெளியே விட்டாள். அவன் அப்படி இப்படி ஏதாவது செய்தால் எங்கே விழுந்து விடுவோமோ என்ற பயம் வந்தது அவளுக்கு.

அவன் குளித்துவிட்டு வந்ததும் இருவரும் சாப்பிட்டு விட்டு தூங்க ஆயுத்தமானார்கள் அவன் மனமோ… அலைபாந்து கொண்டே இருந்தது அவ கிட்ட கேட்கலாம் கேட்டா தப்பா நினைப்பாளோ என்று பயம் வந்தது நூல்விட்டு பார்ப்போம் என்றபடி மீண்டும் அவளிடம் வந்தான். அவள் செல்லமாக முறைத்துப் பார்த்தாள்.

“நாம பேசாம எங்காவது கோவிலுக்கே போயிருக்கலாம் தெரியாம இங்கே வந்துட்டோம் ..”என்றான்.

“நாம இதுக்காகவா வந்தோம் கொஞ்ச நேரம் உன் கூட இருக்கனும் உன் கை பிடிச்சு சுத்தனும்னு நினைச்சேன் அதெல்லாம் நடந்திருச்சு எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குத் தெரியுமா.. தேங்க்ஸ்டா கண்ணா..நான் இதுவரைக்கும் எங்கேயும் போனதில்லை எங்கப்பாவுக்கு அது பிடிக்காது வெளியே கூட்டிகிட்டே போகமாட்டார். அதான் இங்கே வர சம்மதிச்சேன் நீ ஏதாவது கற்பனை பண்ணிட்டு வந்தா அதற்கு நான் பொறுப்பில்ல என்று கண்சிமிட்டி சிரித்தாள். அவளுக்கு அவனை பார்க்கும் போது பாவமாக இருந்தது இருந்தாலும் மனசு இடம் தரவில்லை இதான் பெண்மையின் பாதுகாப்பு உணர்வோ…

அவனோ அவளை முறைத்துக்கொண்டு போய் கட்டிலில் படுத்தான்.. அவள் அவனருகே சென்று அவன் கேசம் ஒதுக்கி நெற்றியில் முத்தமிட்டுவிட்டு… மனச போட்டு குழப்பாம தூங்குங்க நாம நாளை ஊருக்கு போகனும் ஞாபகம் இருக்கா…?” என்றாள்

அவள் தந்த முத்தத்தை ரசித்தபடி, “ஆமால்ல சுத்தமா மறந்து போச்சு எனக்கு வீட்டுக்கு போகவே பிடிக்கல நிம்மி உன் கூடவே இருக்கனும் போல தோணுது”

“இருக்கலாம்.. இருக்கலாம்.. உங்க ஆசை சீக்கிரம் நிறைவேறும் அதுக்கு நாம கல்யாம் பண்ணிக்கனும்” என்று சிரித்தாள். பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தப்படி தூங்கி போனார்கள் .மாறுநாள் காலை ரூமை காலிசெய்துவிட்டு இருவரும் ஊருக்கு கிளம்பி அவரவர் வீட்டுக்கு சென்றார்கள்.

இரவு ராசாத்தி சமையல் செய்துக்கொண்டிருந்தாள். அனிதா பக்கத்து ரூமில் நாளைக்கான பாடங்களை படித்துக்கொண்டிருந்தாள். கண்ணன் மெல்ல வந்தான் பேக்கை தன் ரூமில் வைத்தவன் சமையலறை பக்கம் சென்றான். “என்னம்மா சமையலா வாசம் ஆளை தூக்குதே” கண்ணன் நல்லா ஐஸ் வைத்து பேசக்கூடியவன் ராசாத்தியிடம் இப்படிதான் ஏதாவது சொல்லி தப்பித்துவிடுவான்.

ராசாத்தி கோபத்தோடு தலையை வெடுக்கென்று திருப்பி “எங்கேடா போய் தொலைஞ்சே ரெண்டு நாளா… எங்க போனே.. நீ.. புள்ளையா.. நீ.. என்னைக்காவது உண்மையை சொல்றீயா ப்ராடு.. ப்ராடு.. மூஞ்சிய பாரு.. ” ஏக வசனத்தில் திட்டி தீர்த்தாள்.

“என்னம்மா.. இப்படி கோபமா பேசுறீங்க., நான் என்னம்மா தப்பு செஞ்சேன்.. நான் கல்யாணத்துக்கு தாம்மா போனேன்…” என்றான் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு.

“ஏய்… ஏய்… திரும்ப.. திரும்ப.. பொய் பேசாத… ரெண்டு பேரும் ஊர் சுத்த போனிங்களா அவக்கூட தானே போனே… எம் புள்ளையா நீ.. உனக்கு இப்ப என்னடா வயசு ஐயோ… உங்கப்பாவுக்கு மட்டும் தெரிஞ்சுது என்னைய திட்டி தீர்த்திடுவார். உங்க சார் போன் பண்ணி பேசினார் அப்பதான் நீ கல்யாணத்துக்கு போகலன்னு தெரிஞ்சுது. என் மூஞ்சிலே முழிக்காதே.. உன்னை பார்த்தாலே எனக்கு பிடிக்கல முதல்ல இங்கிருந்து.. போ…” கோபமாக கத்தினாள்.

உண்மை வெளிப்பட்டுவிட்டது என தெரிந்தவன் ஒன்றும் பேசாமல் நைசாக நழுவி பாத்ரூம் பக்கம் சென்று முகம் கை கால் கழுவிக் கொண்டு வந்து ஹாலில் உள்ள ஷேரில் அமர்ந்தான். ராசாத்தி சமையலை முடித்துவிட்டு “ஏய்.. அனிதா.. இங்கே வா.. இதெல்லாம் எடுத்துவை மணி 9 ஆச்சு சாப்பிடணும்.. அனி்தா வேண்டா வெறுப்பாக சலித்தப்படி செய்த சாப்பாடுகளை ஒவ்வொன்றாக எடுத்து வந்து ஹாலில் வைத்தாள்.

“ஏய் அவனையும் சாப்பிடச் சொல்லுடி எனக்கு பசிக்குது” என்றபடி தட்டுகளை எடுத்து வைத்து சாப்பாடுகளை போட்டு வைத்தாள்.

“அண்ணா… அண்ணா.. இங்க பாரு வந்து சாப்பிடு… ”

“எனக்கு வேணாம் நீங்க சாப்பிடுங்க ..” கொஞ்சம் பிகு பண்ணினான்.

“என்னைக்கு நாம தனியா சாப்பிட்டு இருக்கோம் வரச்சொல்டி அவனை நாம தான் கோபமா இருக்கனும் அவனுக்கென்ன..”

பிறகு எழுந்து வந்து சாப்பிட உட்கார்ந்தான் எல்லோரும் மவுனமாக சாப்பிட்டுவிட்டு அவரவர் போய் படுத்தனர். அதன் பிறகு ராசாத்தி அவனோடு சில நாட்கள் பேசாமல் இருந்தாள். அவனின் காதல் இவளுக்கும் தெரியும் ஏற்கனவே சொல்லியிருக்கிறான். இவன் முதன் முதலில் கல்லூரி சென்று வரும்போது என்னை அந்த பொண்ணு பார்த்துச்சும்மா.. இந்த பொண்ணு பார்த்துச்சும்மா என்று பெருமையாக சொல்லும் போது ரசித்தாள் யாராவது ஒரு நல்ல பொண்ணை பார்த்து புடிச்சிருடா என்பாள் ஆனால் அது அவள் செய்த தவறு என்று பிறகுதான் உணர்ந்தாள். ஒரு நாள் அந்த பெண்ணை காதலிக்கிறேன்னு சொன்ன போது அதன் தீவிரம் ராசாத்திக்கு புரியவில்லை இப்போது வருந்துகிறாள்.

இரண்டு மாதம் கழித்து, ட்ரிங்… ட்ரிங்… போன் அலறிக்கொண்டு இருந்தது கண்ணன் ஓடி வந்து எடுக்க வந்தான். அதற்குள் ரிசிவரை எடுத்துவிட்டாள் ராசாத்தி. “ஹலோ.. ஹலோ.. யாரு பேசுங்க.. ஒன்னும் பேசாம இருந்தா எப்படி ஹலோ… சிறிது நேரத்திற்கு பிறகு மறுமுனையில் பதில் வந்தது ஹலோ.. நான்தான் அத்தை நிர்மலா பேசுறேன்..”

“ஏய்.. என்ன நீ., போனை எடுத்தா பேசமாட்டிய ஏன் இப்படி போன் பண்ணி அவனை தொந்தரவு செய்யுறே…. அவன் ஒழுங்கா படிக்கிறதே இல்லை எல்லாத்துலையும் பெயில் உனக்குத் தெரியுமா? நீ நல்லா படிச்சு பர்ஸ்ட் ரேங் எடுக்குற ஆனா இவன் அப்படி இல்ல என்று கடுப்படித்தாள் இப்ப எதுக்கு போன் பண்ணின?”

“ஒன்னுமில்ல” என ஓ… வென அழத்தொடங்கினாள் நிர்மலா.

“ஏய்… இங்கபாரு.. எதுக்கு இப்ப அழுறே முதல்ல அழுறத நிறுத்து விஷயத்தை சொல்லு”

” நேத்து என்னை பொண்ணு பார்க்க வந்தாங்க நான் பிடிக்கலன்னு சொல்லிட்டேன் எங்கப்பா.. சத்தம் போட்டாரு.. நான் உண்மையை சொல்லிட்டேன்”

“ஏய் எல்லாத்தையும் சொல்லிட்டியா…?

“ம்..”

“நீ படிச்ச பொண்ணுதானே.. இப்ப எதுவும் சொல்லாதே அப்புறம் பிரச்சினை பெரிசாயிடும்னு சொன்னேனா இல்லையா நீ இவனை மாட்டிவிட போற இவனுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா என்னால தாங்க முடியாது சொல்லிட்டேன்..”

“ஒன்னும் நடக்காது அத்தை என்னை முழுசா சொல்லவிடுங்க நான் எல்லாத்தையும் சொன்னவுடன் அப்பா.. விவரம் கேட்டாரு என்ன சாதி, என்ன பண்றான் அவங்க அப்பா என்ன செய்யுறாருன்னு கேட்டாரு நான் எல்லாத்தையும் சொல்லிட்டேன் அவரு ஒத்துக்கல என்னைய ரொம்ப திட்டி அடிச்சாரு நான் உங்க மகனைதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னேன்.. அதுக்கு அவர் என்னவோ பண்ணிதொலை இனி உன்னை படிக்க வைக்க மாட்டேன் என் மூஞ்சிலே முழிக்காதேன்னு சொல்லிட்டு போயிட்டாரு என்று அழுதாள்.

“சரி சரி அழதே.. நீ பாட்டுக்கு இப்படி அழுது அழுது அவனுக்கு போன் பேசினியன்னா.. அவன் என்ன செய்வான் வீட்டுல யாரோடும் பேசுறதும் இல்ல சாப்பிடறதும் இல்ல எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கான். இங்கபாரு அவன் கூட சந்திச்சு பேசுறதை அளவோடு வச்சுக்க… உங்கப்பா எங்காவது பார்த்தா பிரச்சனை ஆயிடும் சொல்லிட்டேன் என்ன புரிஞ்சுதா? இதுக்குதான் இப்ப எதும் சொல்லாத அவனோட அப்பா வந்ததும் பேச சொல்லலாம்னு நினைச்சேன் அதுக்குள்ள எல்லாத்தையும் சொல்லிட்ட அதுவும் நல்லதுதான் எப்ப இருந்தாலும் சொல்லித்தானே ஆகனும்.. சரி நான் வைக்கிறேன் என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள் ராசாத்தி.

நாட்கள் சென்றது இருவரும் இஷ்டத்து ஊர் சுற்றினார்கள் சினிமா, பார்க் என்று உல்லாசமாக இருந்தனர். ஆனால் நிர்மலாவோட அப்பாவோ அவர்களை ரகசியமாக கண்காணித்துக்கொண்டே இருந்தார்.

சிறுவயதில் காதல் என்பது ஒரு இன கவர்ச்சியே அது அத்தனை பக்குவபடாதது. எப்போதும் அது வாழ்க்கைக்கு ஒத்து வராது இன்றைய பிள்ளைகள் அதை மறுக்கிறார்கள் நல்லா உல்லாசமாக சுத்துகிறார்கள் தியேட்டர், பீச் என்று இரவில் செல்கிறார்கள் கேட்டால் பாய் பிரண்ட் தட்ஸ்ஆல் னு சொல்லிட்டு போறாங்க இன்னொரு பக்கம் வீட்டில் பார்க்கின்ற பையனையோ பெண்ணையோ கல்யாணம் செய்து விட்டு எல்லாவற்றையும் மறந்து விட்டு போய்விடுகிறார்கள் இதுதான் இன்றைய உண்மையான காதல். இப்படிதான் கண்ணனுக்கும் நிர்மலாவுக்கும் காதல் காட்டுத் தீ போல் படர்ந்தது சைவமாக இருந்த காதல் அசைவாக மாறியது.

நிர்மலா வழக்கம் போல் கண்ணனுக்கு போன் செய்தாள் “என்னங்க அம்மா எப்ப ஊருக்கு கிளம்புறாங்க?

“இப்பதான் கிளம்பிட்டு இருக்காங்க அவங்க போனதும் உனக்கு போன் பண்றேன் நீ வந்திடு..”

“நான் இப்ப பஸ் ஸ்டாண்டுலதான் நிக்கிறேன் சீக்கிரம் அவங்களை அனுப்பி வைய்ங்க அப்பாகிட்ட காலேஜ் போறதா பொய் சொல்லிட்டுதான் வந்திருக்கேன் யாராவது என்னை பார்த்திட்டு சொல்லிட்டா அவ்வளவுதான்…”

“சரி..சரி.. நான் போய் அனுப்பிட்டு வர்றேன் நீ போனை வை.. ” என்றபடி உள்ளே சென்றான். “என்னம்மா.. நீங்க கிளம்பிட்டிங்களா..? நான் மட்டும் எப்படிம்மா தனியா இருக்கிறது எனக்கு ரொம்ப போரடிக்கும் நீங்க போய் சித்தி வீட்டுல நல்லா சாப்பிடுவீங்க இங்கே நான் காஞ்சி கிடைப்பேன்.. அம்மா சித்திகிட்ட சொல்லி வரும்போது இறால் தொக்கு சமைச்சு வாங்கிட்டு வாங்கம்மா.சித்தி நல்லா செய்வாங்க…” என்றான் அப்பாவியாக ராசித்திக்கு இப்படி சொன்னாள் போதும் உச்சி குளிர்ந்து விடுவாள்.

இது புரியாத ராசாத்தி.. “சீச்சீ.. என்னடா இப்படி சொல்றே… அங்கே நிறைய விதவிதமா இருக்கும் என்னால அங்க சாப்பிடவே முடியாதுடா உன் நினைப்பாதான் இருக்கும் சித்தி உனக்கு செஞ்சிதான் தருவா வரும் போது கொண்டு வர்றேன் அலையாதே… அப்புறம் தங்கச்சிகிட்ட சண்டையெல்லாம் போடாதே வீட்டுலையே இரு எங்கேயும் போகாதே… காலையில எழுந்து தண்ணி புடிச்சி வச்சிரு அவ சாதம் வடிச்சிருவா உங்க ரெண்டு பேருக்கும் சிக்கன் வாங்கி க்ரேவியா செஞ்சு வைச்சிருக்கேன் இப்பவும் சாப்பிட்டு நாளைக்கும் சூடு பண்ணி சாப்பிடுங்க அவகிட்ட எந்த வம்பும் வச்சுக்காத சொல்லிட்டேன். நான் சித்தி வீட்டுக்கு போறதே ரெண்டு நாள் நிம்மதியா இருக்கத்தான் நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டு என் நிம்மதியை கெடுத்துறாதீங்க.. ”

“என்னம்மா நீங்க நான் பத்திரமா பார்த்துக்கிறேன் சரி சீக்கிரம் கிளம்புங்க லேட் ஆச்சு பஸ் வரப்போகுது அப்புறம் இந்த பஸ்சை விட்டா பதினோரு மணிக்குதான்..” அவசரப்படுத்தினான் கண்ணன்.

“ராசாத்தி அனிதாவிடம் வந்து ரகசியமாக காதில் கிசுகிசுத்தாள் அவன் மேல ஒரு கண் வைச்சுக்க ப்ரோ சாவிய நான் இங்க வைக்கல எடுத்துட்டு போறேன் அவனை நம்ப முடியாது நீ ஸ்கூலுக்கு போயிடுவே அவன் வழக்கம் போல விளையாட்ட காட்டிருவான்.. நீ அவன் கூட சண்டை எதும் போடாதே அவன்கிட்டயும் சொல்லியிருக்கேன் என்ன எதுவா இருந்தாலும் எனக்கு போன் பண்ணு. உனக்கு ஸ்நாக்ஸ் எல்லாம் வாங்கி வைச்சிருக்கேன் புஜ்ஜிம்மாவும் நீயும் சாப்பிடுங்க சரியா சரி நீ ஸ்கூலுக்கு கிளம்பு நானும் கிளம்புறேன் லேட் ஆச்சு..”

“சரிம்மா.. நான் போயிட்டு வர்றேன் டாட்டா…. “சொல்லியபடி கிளம்பினாள் அனிதா.

ராசாத்தியும் கண்ணனிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள். இவள் வருவதற்கு மூன்று நாள் ஆகும் அதை சாதகமா பயன்படுத்திக்க நினைச்சான் கண்ணன் இது புரியாமல் ராசாத்தி தன் மகன் ரொம்ப பாசமா இருக்கிறதா நினைத்துக்கொண்டு போகிறாள் . இந்த உலகில் சுயநலமில்லாத அன்பு எங்கே இருக்கு எல்லாம் ஏதோ ஒரு கணக்கோடுதான் நாட்களை நகர்த்திக்கொண்டு இருக்கிறார்கள். அதில் இவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன வீட்டுக்கு வீடு இப்படிதான் இருக்கிறது.

கண்ணன் நிர்மலாவுக்கு போன் செய்தான்.. ஒரு ரிங்கிலே எடுத்துவிட்டாள். “என்னங்க அம்மா கிளம்பிட்டாங்களா..?

“கிளம்பிட்டாங்க நீ வந்திடு..”

“இன்னும் பத்து நிமிஷத்துல வந்திருவேன்..” சொல்லிவிட்டு அலைபேசியை அணைத்தால். சொன்னபடியே பத்து நிமிஷத்தில் கண்ணனின் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் நிர்மலா..”

“ஏ… நிம்மி வா..வா.. சீக்கிரம் யாராவது பார்த்திட போறாங்க..”

“வெளியே யாருமே இல்ல பார்த்திட்டுதான் வந்தேன்..”

“சரி.. வா” என்று கையை பிடித்து இழுத்து விசமத்தோடு சரித்தான்.

“ச்சீ… போங்க அந்த பக்கம் கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் தப்புங்க..”

“என்னடி தப்பு? நாளைக்கு நாம ரெண்டு பேரும் கணவன் மனைவி ஆகப்போறோம் இதிலென்ன இருக்கு இப்படி சரி தவறுன்னு சொல்லவா உன்னை வீட்டுக்கு கூப்பிட்டேன்… மீண்டும் அவளது கையை இருக்கமாக பிடித்து இழுத்து இதழில் அழுத்தமாக முத்தமிட்டான்.. அதுவரை தவறு தவறு என்று சொன்னவள் செயலிழந்து நின்றாள். சிறிது நேரத்தில் சுதாரித்து இங்க பாருங்க இப்படியெல்லாம் பண்ணினா நான் இப்பவே வீட்டுக்கு போயிடுவேன்.. பொய்யாக மிரட்டி வைத்தாள். ஆனாலும் இவளுக்கும் உள்ளுக்குள் ஆசை இருக்கதான் செய்தது.

“என்ன நிம்மி.. இனிமே இந்த மாதிரி ஒரு நாள் வருமா.. அம்மாவை கிளப்ப நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? இன்னைக்கு மட்டும்தான் இனிமே நாம எப்ப இப்படி இருக்க முடியும் சொல்லு நல்ல சான்ஸ் நாம மிஸ் பண்ணக்கூடாது. என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா..” கோபமாக கேட்டான்

“இல்லங்க.. கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் தப்புங்க.. உங்க மேல நம்பிக்கை இல்லாம இல்ல நாளைக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா யாருக்காவது தெரிஞ்சா என்னாகும் என்னைய அசிங்கம்மா நினைப்பாங்க இல்ல அதான் பயமா இருக்கு” எவ்வளவோ மறுத்துப் பார்த்தாள்.

“எம்மேல உனக்கு நம்பிக்கை இல்லை எனக்கு நல்லா தெரியுது உன் மேல எவ்வளவு அன்பு வைச்சிருக்கேன் தெரியும்மா? நிறைய பேர் இப்ப அப்படிதான் இருக்காங்க நீதான் வீணா பயப்படுறே..”

“நிஜம்மா ஒன்னும் பிரச்சினை வராது இல்ல “அவள் அப்படி கேட்கும்போதே அவனுக்கு புரிந்துவிட்டது கிளி சிக்கிறிச்சுன்னு.. அப்புறமென்ன இதற்காகவே காத்திருந்தது போல் அவன் காரியத்தில் இறங்கினான் ப்ரிட்ஜ்யை திறந்து மல்லியப்பூவை அவள் தலையில் வைத்துவிட்டான். பூ வைத்ததும் ஏதோ ஒரு பெரிய ஐஸ் கட்டியை தலையில் வைத்தது போல் அவள் சிலிர்த்து போனாள். இந்த பெண்கள் பூ விஷயத்தில் ஏன் இப்படி மயங்கி விழுகிறார்கள் என்று விஞ்ஞானியால் கூட இன்னும் கண்டு பிடிக்க முடியல. ஏற்கனவே ஒரு முறை ஒரு பூ கூட வாங்கித்தரலன்னு அவள் சண்டை போட்டு இருக்கிறாள். இன்று அது தானாக கிடைத்தது அதில் கொஞ்சம் மயங்கிதான் போனாள். அந்த மயக்கத்திலே அவள் மெல்ல கேட்டாள்.

“ஏங்க.. நாம அலைபாயுதே படத்தில் வர்ற மாதிரி ரிஜிஸ்டர் ஆபிஸ்ல போய் கல்யாணம் பண்ணிக்கலாமா? அப்புறம் எனக்கு கட்டாய கல்யாணம் பண்ணி வைக்க முடியாதுல்ல”

“உங்கப்பா உனக்கு கல்யாண ஏற்பாடு பண்ணினா நாம யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிக்கலாம். இப்ப நீ ஒன்னும் பேச வேணாம்..” என்றபடி அவளை இழுத்து அணைத்தான் அவளும் அதற்கு இசைந்தாள் இருவரும் இந்த உலகைத்தையே மறந்தனர்.

மதியம் இரண்டு மணி வெளியே காலிங் பெல் சத்தம் அலறியது. இருவரும் திடுக்கிட்டு எழுந்தனர். யாருங்க அது அனிதா ஸ்கூல்ல இருந்து வந்திருச்சோ மணி நாலு ஆச்சா ஐயயோ இன்னைக்கு மாட்டினோம். கண்ணன் வாட்ஸ்சை எடுத்து பார்த்துவிட்டு ச்சீ… மணி ரெண்டுதான் ஆகுது பயப்படதே இரு பார்த்துட்டு வர்றேன். இந்த நேரத்தில் யாரா இருக்கும் அந்த பக்கத்து வீட்டு பொம்பளையா இருக்குமோ மெல்ல லேசாக ரூம் கதவை திறந்தான்.

அவன் நினைத்தது போல் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர்தான். கண்ணனுக்கு அந்த பக்கத்து வீட்டு அம்மாவை கண்டாலே பிடிக்காது எப்ப வீட்டுக்கு வந்தாலும் எரிந்து விழுவான் இப்ப சொல்லவா வேணாம் கதவை திறந்த என்ன என்றான்.

“அம்மா இல்லையா..”

“அம்மா சித்தி வீட்டுக்கு போயிருக்காங்க நீ போங்க” என்றான் வெடுக்கென்று.

“அவள் ஒரு மாதிரி சந்தேகத்தோடு அவனை பார்த்தபடி கிளம்பினாள் அவள் போகும் போதே வாசலில் புது லேடிஸ் செப்பல் கிடப்பதை கவனிக்க தவறவில்லை. நிர்மலாவீட்டுக்கு வரும்போதே தூரத்தில் இருந்து அவள் கவனித்து விட்டாள் நீண்ட நேரம் ஆகியும் அந்த பெண் வெளியே வராததால் சந்தேகப்பட்டுதான் நோட்டமிட வந்திருக்கிறாள்.

கண்ணன் ரூமுக்குள் வந்தான் நிர்மலா பதறி போய் “யாருங்க அது?”

“பக்கத்துவீட்டு பொம்பள எப்போதும் எங்க வீட்டுக்கே வரும் லூசு சில சமயம் நான் திட்டிவிட்டுறுவேன்..”

“என்னை அது பார்த்திருக்குமோ…,”

“தெரியல பார்த்தா பார்க்கட்டும் எங்கம்மாகிட்ட ஏதாவது சொன்னுச்சு அப்புறம் இருக்கு..”

“சரி அதை விடு நீ சாப்பிடுறீயா..?”

“ம்.. சரி நாம் போய் ரெடியாகி வர்றேன் பாத்ரூம் எங்கே இருக்கு வெளியிலையா..? ”

” ஆமாம்.. நானும் வரட்டா.. கண்சிமிட்டி சிரித்தான் ”

“உதைப்பேன் ராஸ்க்கல் உன்னாலதான் இப்படியாச்சு எனக்கு பயமா இருக்குடா..”

“ச்சீ… நீ ஒன்னும் பயப்படாதே.. சரி சீக்கிரம் போயிட்டு வா எனக்கு பசிக்குது..”

நிர்மலா பாத்ரூம் சென்று முகம் கழுவி ப்ரஷ் ஆகி வந்தாள்.. கலைந்த தலையை சீவிக்கொண்டு கொஞ்சம் முகத்தில் பவுடர் பூசிக்கொண்டு என்ன சமையல் இன்னைக்கு.. கேட்டபடி கிச்சனுக்குள் போனாள்.

“அம்மா சிக்கன் சமைச்சு வைச்சுட்டு போனாங்க சாப்பிட்டு பாரு சூப்பரா இருக்கும்..?”

“ம்… என்னைவிட அம்மா நல்லா சமைப்பாங்களா..? வாயில் ஒரு சிக்கன் பீஸை போட்டு ரசித்து சாப்பிட்டுவிட்டு ஓரக்கண்ணால் பார்த்தப்படி கேட்டாள்.

“நீயும் நல்லா சமைப்பே அம்மாவும் நல்லா சமைப்பாங்க போதுமாடா செல்லம் இதுக்கு மேல ஒரு கேள்வியும் கேட்காத எனக்கு ரொம்ப பசிக்குது நான் சாப்பிடப் போறேன் நீயும் சாப்பிடு” என்றான்.

இருவரும் ரசித்து ருசித்து சாப்பிட்டார்கள் நிர்மலா சொன்னாள் “ம்.. அம்மா நல்லா டேஸ்டாதான் செஞ்சிருக்காங்க.. ”

“அதான் நான் சொன்னேன் இல்லை எங்க சார் வந்தா இங்கே தான் சாப்பிடுவார்..”

“கண்ணா… எனக்கு ரொம்ப பயமா இருக்குடா நாம தப்பு பண்ணிடோம்னு ”

“ஏய்… சும்மா பயப்படாதே அடுத்து நாம எப்ப இப்படி மீட் பண்றது என்றான் சிறிதும் கவலையில்லாமல்..”

“என்னைப்பத்தி உனக்கு கவலையே இல்லை உன் வேலை முடிஞ்சதும் மறுபடியும் அதுலையே நிக்கிற பார்த்தியா?”

“கண்ணன் பதில் ஏதும் சொல்லாமல் சரி நிம்மி நீ கிளம்பு நான் கொண்டு வந்து பஸ் ஸ்டாண்டுல ட்ராப் பண்றேன்.. அனிதா ஸ்கூல் விட்டு வந்திரும் இப்பவே மணி மூனு ஆச்சு நீ வீட்டுக்கு போறதுக்கும் சரியா இருக்கும்…”

” ம்.. சரி என்றபடி தட்டை கழுவி வைத்துவிட்டு பேக்கை எடுத்துக்கொண்டு கிளம்பர தயாரானாள். கண்ணன் பைக்கை ஸ்டாட் செய்து வைத்துக்கொண்டு ரெடியாக நின்றான். நிர்மலா வீட்டை பூட்டி சாவியை நிலையின் மேலே மறைவாக வைத்துவிட்டு யாராவது பார்க்கிறார்களா என அங்குமிங்கும் பார்த்தபடி வந்து பைக்கில் ஏறி அமர்ந்தாள். கண்ணன் அவளை பஸ் ஸ்டாண்டில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்து கலைந்து கிடந்த கட்டிலை சரி செய்து வைத்தான் எந்த ஒரு சந்தேகமும் வராதபடி மாற்றி வைத்துவிட்டு மறுபடியும் அதிலே படுத்து தூங்கிப் போனான்.

நாட்கள் வருடங்களை கடந்தது நிர்மலா காலேஜ் இறுதி ஆண்டை முடித்தாள். கண்ணனோ படிப்பு ஒழுங்கா வராததால் பாதியிலே நிறுத்திவிட்டான். ஒரு போட்டோ ஸ்டியோ கடையில் வேலைக்கு சேர்ந்து செய்து கொண்டு இருக்கிறான். ஒருநாள் திடீரென்று கோவிலுக்கு போவதாக சொல்லி நிர்மலாவை அவள் அம்மா கூட்டிச் சென்றாள் நிர்மலாவின் அப்பாவோ ரகசியமாக மாப்பிள்ளையோடு சிலரை கோவிலுக்கு அழைத்து வந்து பேசி முடித்துவிட்டார். இவள் அதை எதிர் பார்க்கவில்லை கண்ணனுக்கு சொல்ல வழியும் இல்லை இவளின் மொபைலை அவள் அம்மா எடுத்து மறைத்து வைத்துக்கொண்டால். எல்லாம் சில நொடிகளிலே முடிந்து போனது. பிறகு போனை எடுத்து கண்ணனுக்கு தகவல் சொன்னாள். நான் வந்து உங்கப்பாகிட்ட பேசுறேன் என்று சும்மா ஒரு வார்த்தைக்காக தான் சொன்னான். ஏனெனில் கணவன் மனைவில் போல் சில நாள் வாழ்ந்து விட்டார்கள் அதன் பிறகு அவனுக்கு கொஞ்சம் கசந்து போனது. இவள் அடிக்கடி அறிவுரை சொல்வது அங்கே போகாதே இங்கே போகாதேன்னு கண்டிப்பது நல்ல வேலைக்கு போ நிறைய சம்பளம் வாங்குன்னு தொந்தரவு செய்வது எல்லாமே வெறுப்பை உண்டு பண்ணியது அதான் இதை அவன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இவளோ தினமும் அழுது அழுது கண்ணனுக்கு போன் செய்து தொந்தரவு செய்தாள். கண்ணனுக்கோ தினமும் இப்படி செய்வதால் அவள் மீது எரிந்து விழுந்தான் சில நேரங்களில் போனை எடுக்காமல் தவிர்த்தான். இந்த மாதிரி சூழ்நிலையில் ஒருநாள் வீட்டுப்போனுக்கு அடிக்கையில் ராசாத்தி தான் போனை எடுத்தாள். மறுமுனையில் இருப்பது நிர்மலா என்றதும் என்னடி உங்களுக்குள் ஏதாவது சண்டையா அவன் மூஞ்சை தூக்கி வச்சுகிட்டு இருக்கான் அவள் அப்படி கேட்டதும்.

நிர்மலா எல்லாவற்றையும் கொட்டத் தொடங்கினாள் அத்தை இப்ப அவர் எங்கூட சரியாவே பேசுறார் இல்ல வேற யாரோ ஒரு பொண்ணு கூட பேசுறாருன்னு நினைக்கிறேன் அவர் முன்னாடி மாதிரி இல்லை…. என்று அழுதாள்.

இங்கபாருடி எம்புள்ளையின்னு நான் எப்பவும் உசத்தியா பேச மாட்டேன் அவனைப்பத்தி எனக்கு நல்லாவே தெரியும் அவன் நிறைய பொய் சொல்வான் நல்ல பையன் இல்லன்னு உனக்கு அவன் சரிப்பட்டு வரமாட்டான் நீ நிறைய படிச்சு இருக்கே அவன் படிப்பை பாதியிலே நிறுத்திட்டான் இதனால் உங்களுக்குள்ள பின்னாடி பிரச்சினை வரும்முன்னு சொல்லியிருந்தேன் நீ கேட்கவே இல்லை. இப்பவும் ஒன்னு கெட்டுப்போகல நீ உங்கப்பா சொல்ற பையனையே கட்டிக்க உங்கப்பா பெரிய ஆள் எம் பையனை ஏதாவது செஞ்சாலும் செய்வார் இதெல்லாம் தேவையா சொல்லு நாம நினைச்ச மாதிரி எல்லா வாழ்க்கையும் நடக்கிறது இல்ல நீ படிச்ச புள்ள புரிஞ்சுக்க..”

“அய்யோ… அத்தை என்னால அப்படி முடியாது நாங்க ரெண்டு பேரும் தப்பு பண்ணிட்டோம் நான் அவருக்கு மனைவியா வாழ்ந்திட்டேன் இனிமே எப்படி இன்னொருத்தரை கல்யாணம் பண்றது…? கேவி.. கேவி அழுதாள்.

“என்னடி.. சொல்றே இதெல்லாம் எப்ப நடந்துச்சு..? ராசாத்தியால் அதிர்ச்சியை தாங்க முடியாமல் கேட்டாள்.

நிர்மலா ஒன்றுவிடாமல் நடந்த எல்லாவற்றையும் சொன்னாள். ராசாத்தி க்கு தலைசுற்றுவது போல் இருந்தது சின்னபுள்ளைங்கன்னு நினைச்சேன் ஆனால் இதுங்க இப்படி இருக்கேன்னு நினைத்து நினைத்து ஆதங்கப்பட்டாள். எம் பையனா இப்படி இதை எப்படி நான் அவருக்கிட்ட சொல்வேன் என்று புலம்பினாள். சரி நீ ஒன்னும் தப்பான முடிவு எதும் எடுக்காதே பொறுமையா இரு பேசிப்போம் என்று அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு போனை வைத்தாள்.

இரவு 9 மணிக்கு வீட்டுக்கு வந்தான் கண்ணன்.. வீடு அமைதியாக இருந்தது எப்போதும் டீவி ஓடிக்கொண்டு இருக்கும் இன்று அதுவும் இல்லை.. அம்மா ஹாலில் ஓரமாக படுத்திருப்பதை பார்த்துவிட்டு.. “என்னம்மா இங்கே படுத்து இருக்குறீங்க உடம்புக்கு ஏதாச்சும் முடியலையா என்ன ஹாஸ்பிட்டல் போகலாம் வாங்க..என்றபடி மேலே கை வைத்தான்.

“ச்சீ.. கையை எடுறா ராஸ்க்கல் என்ன வேலைடா பண்ணித் தொலைச்சிருக்கே நீ… உன்னையா நான் தவம் இருந்து பெத்தேன்.. மூஞ்சையும் மொகரகட்டையும் பாரு எம் மூஞ்சியிலே முழிக்காதே போ அந்த பக்கம்..” கடும் கோபத்தில் எரிந்து விழுந்தாள் ராசாத்தி.

“என்னம்மா சொல்றீங்க நான் என்னம்மா தப்பு செஞ்சேன் இப்படி பேசுறீங்க..”

“நீ என்ன தப்பு செஞ்சியா..? நீ என்ன தப்புதாண்டா செய்யல எல்லாத்தையும் செஞ்சிட்டு ஒன்னுமே தெரியாத மாதிரி கேட்கிறீயே.. நீ புள்ளையா நீ…. நான் உன்கிட்ட என்னைக்காச்சும் அம்மா மாதிரி நடந்திருக்கேனா ஒரு ப்ரண்ட் மாதிரி தானே நடந்துகிட்டேன். ஆனால் என்கிட்ட எல்லாத்தையும் மறைச்சிட்டியேடா.. நீ பொய் சொல்வேன்னு எனக்குத் தெரியும் ஆனா ஒரு பொண்ணுக்கு பாவத்தை செய்வேன்னு நான் நினைக்கவே நம்ம வீட்டிலும் ஒரு தங்கச்சி இருக்கு பொண்ணுன்னா எல்லாம் பொண்ணுதாண்டா அய்யோ… என்னால நினைச்சு கூட பார்க்க முடியல எம்புள்ள இப்படியான்னு.. இதையே சொல்லி.. சொல்லி புலம்பிக்கொண்டு இருந்தாள் ராசாத்தி.

கண்ணனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை நம்மள இப்படி மாட்டிவிட்டுட்டாளே என்று நிர்மலா மீது கோபம் வந்தது வந்த கோபத்திற்கு போனை போட்டு கண்டபடி திட்டி தீர்த்தான். என்கூட இனிமே பேசாதே நீ எவனை வேணா கட்டிக்க என் மூஞ்சிலையே முழிக்காதே.. என்ன பேசுறோம்னு தெரியாமலே பேசினான். அவளுக்கு ஆந்திரம் வந்தது அவளும் பதிலுக்கு பதில் சண்டை போட்டாள் நான் சொல்றதை நீ எதுவும் கேட்கிறது இல்லை உன் ஆசை தீர்ந்து போச்சு அதான் இப்ப வேற ஒருத்திய தேடுற எங்கப்பா அப்பவே சொன்னாரு நான் தான் கேட்கல இப்பதான் எல்லாம் புரியுது உன் லோக்கல் புத்திய காட்டிட்ட உன்னைவிட நல்ல பையனா எனக்கு ஏத்த மாதிரி ஒருத்தனை கல்யாணம் பண்றேன் பாரு.. என்றபடி போனை வைத்துவிட்டாள்.

மூன்று மாதங்களுக்கு பிறகு சுமுகமான சூழ்நிலை திரும்பியது. ராசாத்தியும் கோபத்தை மறந்து கண்ணனோட சகசமாக பேசத்தொடங்கிருந்தாள் நிர்மலாவிடம் இருந்து எந்த போனும் வராமல் இருக்கவும் இராசாத்திதான் மகனிடம் கேட்டாள். “என்னடா இப்பெல்லா நிர்மலா போன் பண்றதே இல்ல, நீ என் கூட பேசக்கூடாதுன்னு சொல்லிட்டியா..? என்றாள்.

“இல்லம்மா… நமக்கு இனிமே அது செட் ஆகாதும்மா நீங்க சொன்னதுதாம்மா சரி அது பெரிய இடம் என்னைவிட நிறைய படிச்சு இருக்கு தங்கச்சிக்கும் அதுக்கும் ஒத்து வராது அது ஒரு சைக்கோம்மா எப்ப பார்த்தாலும் சண்டை போட்டுட்டே இருக்கும் நமக்கு வேண்டாம்மா..” என்றான் வெறுப்பாக.

“என்னடா சொல்றே… என்னை ஏமாத்துறதுக்காக சொல்றீயா..? இல்ல நிஜமாவே சொல்றீயா.. சிரித்தபடி கேட்டாள் ராசாத்தி.

“நிஜம் தாம்மா…’ என்றபடி ஒரு பத்திரிக்கை ஒன்றை நீட்டினான்..

“ராசாத்தி ஒன்றும் புரியாமல் வாங்கி பார்த்து அதிர்ச்சியானாள். அது கல்யாண பத்திரிக்கை மணப்பெண் நிர்மலா மணமகன் சரவணன் என்று இருந்தது என்னடா இது அவளோடு அத்தை பையன் பேரு இது இல்லையே? என்றாள் அதிர்ச்சியாக.

“நானே அதிர்ச்சியாகல நீங்க ஏம்மா அதிர்ச்சியாகுறீங்க…? அவங்க காலேஜ்ல புரபோசரா ஒருத்தன் இருக்கான் அவனைதான் கல்யாணம் பண்ணிக்க போறா.. அதுவும் காதல் கல்யாணம்தான். அன்னைக்கு நீங்க என்னை திட்டுனீங்க இல்ல அப்ப நான் கோபத்துல கண்டபடி திட்டி கல்யாணம் பண்ணிக்க முடியாது யாரை வேணா கட்டிக்கன்னு சொல்லிட்டேன். அந்த கோபத்துல அவளும் கல்யாணத்து ஓகே சொல்லிட்டா ஏற்கனவே அவன் அவளை காதலிச்சிருப்பான் போல இப்ப என்னைவிட அவன் பெட்டரா தெரிஞ்சதும் கல்யாணம் பண்றா.. நான் நிறைய தடவை போனிலும் நேரிலும் ஸாரி சொல்லி பார்த்தேன் அவ கேட்கல அப்புறம் நானும் விட்டுட்டேன். என்கிட்டையே வந்து தைரியமா பத்திரிக்கையை நீட்டுறாம்மா… சரிதான் போடின்னு சொல்லிட்டேன் அவளுக்கே இன்னொருத்தனை கட்ட மனசு வரும் போது ஆம்பளை எனக்கு இருக்காதா..? நீங்க ஒன்னும் கவலைப்படாதிங்கம்மா இனிமே எனக்கு காதலே வேண்டாம் நீங்க எந்த பொண்ணை பார்த்து கட்டி வைச்சாலும் நான் கட்டிக்குவேன்…” என்றான்.

“எப்படிடா அந்த பொண்ணுக்கு மனசு மாறும் உன்னைதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சத்தியம் பண்ணிச்சுடா கண்ணா நீ என்னதான் சொன்னாலும் எம் மனசு ஆறவே இல்லடா அவ அத்தை பையனை கட்டிகிட்டாலும் பரவாயில்லை அதெப்படிடா டக்குன்னு இன்னொருத்தனை லவ் பண்ணி கல்யாணம் பண்ண முடியும்?”

“இப்ப எல்லா பொண்ணுங்களும் அப்படி தாம்மா இருக்கு நேத்து பஸ்ல ஒரு பொண்ணு என்னயே பார்த்து லுக் விட்டுச்சும்மா… தினமும் என்னை பார்த்து சிரிக்கும்மா..” என்றான் சிரித்தப்படி.

வேணாம்டா கண்ணா நீ ஏற்கனவே ஒரு பொண்ணுக்கு பாவம் செய்திருக்க அதை மனசுல வைச்சுக்கு பெண் பாவம் பொல்லாததுடா.. ” என்றாள்.

“எம்மேல எந்த தப்பும் இல்லம்மா… வீடுன்னா கோபம் சண்டை இதெல்லாம் வரத்தான் செய்யும் அனுசரித்துதான் போகனும் அதுக்கு எம்மேல சந்தேகப்பட்டா கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே இப்படி இருந்தா ஆனபிறகு சொல்லவே வேணாம்.. அதான் தொலைஞ்சு போகட்டும்னு விட்டுட்டேன்… உங்க மகன் அழகுக்கு ஆயிரம் பொண்ணு க்யூவுல நிக்கிம்மா.. என்றான் சட்டை காலரை தூக்கிவிட்டபடி..

ராசாத்தியும் அவனை தோளில் செல்லமா அடித்து போடா நீ எப்ப பாரு உனக்கு விளையாட்டுதான் உனக்கு எப்பதான் பொறுப்பு வருமோ தெரியலை என்றாள். எப்போதுமே தாய்க்கு தன் குஞ்சு பொன் குஞ்சுதான் மகன் எத்தனை தவறுகள் செய்தால் அம்மாக்காள் கண்டும் காணாதது போல் மன்னித்து விட்டு வி்டுகிறார்கள். இதுவே அவர்களுக்கு சாதகமா ஆகிவிடுகிறது. பெண்ணின் பெற்றோர் எப்போதும் கண்டிப்புடனே வளர்க்க நினைக்கிறார்கள் அது அன்பைத் தேடி வேறிடம் செல்கிறது. காதல் தவறில்லை ஆனால் பக்குவப்பட்டு வரனும் அப்பதான் வாழ்க்கை என்றால் என்னவென்று புரியும்.

நிர்மலா எதுவும் நடக்காதது போல் வேற ஒருவனை காதலித்து திருமணம் செய்துகொண்டு போய்விட்டாள். இவனோ வேறொரு பெண்ணை ரூட்டு விட்டுக்கொண்டு இருக்கிறான்.. இது இனி ஒரு தொடர்கதைதான். கண்ணன் நிர்மலா இருவருமே எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அவரவர் தனித்தனி வழியே நடக்கத் தொடங்கிவிட்டனர்.

“ஹலோ… மச்சி என்னடா பண்றே சாப்பிட்டியாடா… நாளைக்கு மறக்காம வந்திருடா…” அந்த இரவு வேளையில் வழக்கம் போல் கண்ணன் யாரிடமோ கடலை போட்டுக்கொண்டு இருந்தான். தூரத்தில் சின்ன புள்ளியாய் ஒரு வெளிச்சம் இருட்டை வெளிச்சமாக்கியதால் நிலவுக்கு இணையாக தன்னை நினைத்து அங்குமிங்கும் சந்தோஷமாக பறந்து கொண்டு இருக்கிறது இந்த மின்மினி பூச்சிகள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *