நிழல்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 3, 2013
பார்வையிட்டோர்: 17,983 
 
 

நன்றாக இருட்டிவிட்டது. வீதியில் வாகனங்கள் நன்றாக குறைந்துவிட்டது ஒரு சிலர் மட்டும் வீதியின் கரையில் அமைக்கப்பட்ட கட்டில் நடந்து போவது தெரிந்தது. இரவின் நிசப்தத்தை இடைக்கிடை கிழிப்பதாய் கார்களின் வேகம். மனசைக்கூட ஒருவழிப்படுத்த முடியாமல் திணறினேன். தூரத்தில் இரண்டு காதல் ஜோடிகள் கைகோர்த்தபடி மிகவும் அருகருகே அணைத்தபடி போவது தெரிந்தது. சற்று உற்றுப்பார்க்கிறேன். இந்த காட்சி என்னை மேலும் திணறடிக்க தவறவில்லை. பார்ப்பது அழகில்லை என மனசு சொன்னாலும் கண்கள் விடுவதாய் இல்லை. சரி பாவம் கண்கள் பாத்திட்டுப்போகட்டுமே என விட்டுவிட்டேன். எனக்குள்ளேயே சிரிப்பு ஊர்ந்தது. தனிமையில் சிரிப்பது இதுதான் முதல் தடவை என பகுத்தறிவு உணர்த்தியது. காதல் செய்யும் மாயம் இதுதானோ! சில்லென அல்ப்ஸ் மலைத்தொடர்க்காற்று என்னை இதமாக தழுவிச்சென்றது. ஜுல் என வாய் முணுமுணுத்தது.

சத்தமாக உச்சரித்துவிட்டேனோ? பயம் என்னைக் கொன்று தின்றது. எத்தினைதரம் கத்திறன் படிக்காமல் உதென்ன பல்கணியில் அம்மாவின் காட்டுக்கத்தலில் மிச்சம் மீதி இருந்த நிசப்பதம் செத்தது. ஒருநிலைப்படுத்தப்பட்ட மனம் கூட திணறி மூர்ச்சையானது. விழிப்பினூடே வந்த கனவும் கலைந்தது. ஜுல் என உச்சரித்த உதடுகள் இறுக ஒட்டிக்கொண்டது. தொண்டைக்குழிக்குள் தற்காலிகமாக ஜுலை ஒழித்து வைத்துவிட்டு மீண்டும் சஞ்சலத்துடன் மேசையில் அமர்ந்தேன். ஒரு கிழமையாய் ஜுலின் நினைவு அலைக்கழிக்கிறது. என் நினைவுகளுடன் அவன் அதிகம் ஒன்றிப்பது தெரிகிறது. பிரிக்கவும் முடியாமல் சேர்க்கவும் முடியாமல் நான் படும் அவஸ்த்தையை யாரிடம் சொல்ல? நித்திரை மறந்து இரண்டு மூன்று நாட்கள் ஆகிறது. றூமுக்குள் நடு நிசியில் எழும்பி குறுக்கும் நெடுக்குமாய் நடக்கிறதே இப்போ பிழைப்பாய்ப்போச்சு. அம்மாவிடம் இப்ப நல்லாவே பொய்யும் சொல்லப்பழகிவிட்டுது இந்த நாக்கு. அம்மா என்ன ஏது யோசனை எண்டு கேக்க இந்த நாக்கு பட்டெண்டு கூசாமல் அது பாடத்திலை சின்ன ஒரு சிக்கல் அதுதான் யோசிக்கிறன் என படு பொய் எல்லாம் சொல்லுது. என்னை ஒருநிலைப்படுத்த முடியாமல் விழித்தேன். அம்மாவிடம் சொல் என மனசு கூக்குரல் எழுப்பியது. அம்மா என்றதுமே மனசு ஏனோ படபடப்பாய் ஆனது. அம்மாட்டை இதை சொன்னன் எண்டா என்னை திண்டு கைகளுவிப்போடுவா. மாமாவை வேறை கூப்பிட்டு ஒப்பாரிவைப்பா. பிறகு மாமா அற்வைஸ் எண்டு சொல்லி நிக்கவைச்சு கேள்விகேட்டு என்னை சப்பித்துப்பிப்போடுவார். அவ்வளவுதான் இப்பவே மூட்டை முடிச்செல்லாம் கட்டி ஊருக்கு கொண்டு போய்ச்சேர்த்திடுவா. பிறகு என்ரை கனவுகள் கற்பனைக்கோட்டைகள் படிப்பு எல்லாம் நாசம்.

ஜுலைக் கூட சிலவேளை நான் நினைக்காட்டிலும் இந்த மனசு அடிக்கடி ஜுலை மனப்பாடம்செய்யுது. திருமணம் எண்டா ஜுலோடைதான் எண்டு கூட நினைக்குது. எங்கள் கிராமம் சின்னதுதான். தென்னந்தோப்புகளும் வயல் வரப்புகளும் வாழைமரங்களும் பனங்கூடல்களும், ஈச்சம்பத்தைகளும், அன்னமுன்னாக் காடுகளும் என்ன ஆனந்தமான பொழுதுகள். பட்டாம் பூச்சியாய் திரிந்த அந்த நாட்கள் மனசு நிறையும். சீச்சீ பட்டாம்பூச்சியாயும் சில்வண்டாயும் திரிந்த நாட்கள் என்னை சுற்றத்தவர் சில்வண்டு எண்டுதான் கூப்பிடுவினம்.

இனவெறியரின் கோரத்தால் அப்பா இன்றுவரை உயிரோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையை தொலைக்காமல் அம்மாவின் வாழ்வு. நம்பிக்கை சிறிதும் இல்லாமல் நான். கைது என்ற போர்வையில் காணாமல் போனவர்தான் அப்பா. வருசங்கள் பலவாச்சு. கணக்குப்பார்க்க மூளை இசையவில்லை. ஜுலின் நினைவுகள்தான் என் மூளையை ஆட்கொண்டிருந்தது. அதனால் சுலபமாக கைவிரல் விட்டே ஆண்டுகளை எண்ணினேன். பதின்நான்கு வருடம் ஓடி மறைந்துவிட்டது. சுவிஸ் வந்து பன்னிரண்டு வருடம் ஓடிவிட்டது. நானோ வைத்தியத்துறையில் 2ஆம் வருடம். பரீட்சை வேறு நெருங்குகிறது.

ஜுல் எனது பாடசாலை நண்பன்தான். சுவிஸ்பிரஜை. தாய் தந்தையர் ஆசிரியர். அவரின் தாய்தந்தையருக்கு என்னை றொம்ப பிடிக்கும். அவர்களின் வீட்டு விசேசங்களுக்கெல்லாம் என்னை அழைப்பது வழமை. அவர்கள் மேலைத்தேய மக்கள் பலரது வாழ்வு போல் அல்லாது எங்கள் வாழ்வு போல் அமைந்த வாழ்வு வாழ்வதால் நானும் அவர்களுடன் நன்றாக ஒன்றிவிட்டேன். ஜுல் எப்போதுமே என்னைச்சுற்றி சுற்றி வருவான். நாம் நல்ல நண்பர்கள். சுவிசுக்கு வந்த காலத்தில் இருந்தே அவனோடுதான் படித்து வருகிறேன். ஆரம்பத்தில் மற்ற மாணவர்களால் நான் வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்த ஒரு ஜந்து போல் கணிக்கப்பட்டேன். அந்த ஆரம்ப பள்ளி வாழ்வு என்னை பலரிடத்தில் இருந்து ஒதுங்க வைத்தது. ஆனால் ஜுல் மட்டுமே என்னுடன் சேர்ந்து விளையாடுவான். என் பாட சந்தேகங்களை தீர்த்து வைப்பான். தன்னால் முடியாதபோது தன் தாயிடம் கூறி அவளை எனக்கு பாடம் சொல்லித்தர வைத்தான். அவனது பற்று என்னை அவனது குடும்பமே நேசிக்கும் அளவுக்கு காலப்போக்கில் செய்துவிட்டது. நான் தனிய ஒரு புத்தகப்பூச்சி. ஜுல் அப்படியல்ல. என்ன விடயம் அவனுக்கு தெரியாது? அரசியலில் இருந்து மடோனாவின் இறுதியாக வந்த புதிய பாடல்வரை அளந்து கட்டுவான். படிப்பிலும் புலி. அவனை பார்த்து பார்த்தே என்னையும் வளர்த்துக்கொண்டவள். அவனின் எமது நாட்டுப்பிரச்சனைபற்றிய அறிதலின் ஆர்வம் என்னை மேலும் அவனுக்கு இறுக்கமான நண்பியாக்கியது. எமது நாட்டுப்பிரச்சனைகள் பலவற்றை தெரிந்துகொண்டு வேதனைப்படுவான். ஒரு முறை இப்படித்தான் ஒளிவிச்சு கசற்றை கொடுத்தேன் பார் என்று. இடையில் பாக்கமலே நிறுத்திவிட்டன் என அழும் குரலில் அதனுடன் குமுறும் மனதுடன் அதை திருப்பித்தந்தான். எப்படி உன்னால் இதை பார்க்கமுடிகிறது. அவ்வளவு தைரியமா? அவ்வளவு சகிப்புத்தன்மையா? என பல கேள்வி கேட்டு குடைந்தேடுத்தான். எமது பண்பாடுகள் அவனுக்கு பிடித்துப்போன விடயம். போன கிழமை இப்படித்தான் சுதா வருகிறாயா கன்ரீனுக்கு உன்னோடு என் மனம் திறந்து பேசவேண்டும் என அழைத்தான். நானும் சரி நட எனக்கும் தேனீர் குடிக்க வேணும் போல் உள்ளது என அவனோடு கன்ரீன் நோக்கி நடக்க ஆரம்பித்தேன். தேனீரை நானும், அவன் கொக்காகோலாவையும் ஓடர் செய்தோம். ஒரு ஓரமாக இருந்த மேசையில் எதிரெதிரே அமர்ந்தோம். நான்தான் பேச்சைத்தொடங்கினேன். என்ன ஏதாவது பாடத்தில் பிரச்சனையா? பரீட்சை நெருங்குகிறது என கேட்டேன். அதெல்லாம் இல்லை என கூறிவிட்டு பேசத்தொடங்கினான். சுதா எனக்கு உனது பண்பாடு பழக்கவழக்கம் எல்லாம் பிடித்துப்போனது. உன் திறமை அறிவு குணம் என் தாய் தந்தையருக்கு பிடித்துப்போனது. அதனால் நான் உன்னை திருமணம் செய்யலாம் என உத்தேசித்துள்ளேன். உன் முடிவை ஆறுதலாக நிதானமாக யோசித்து சொல்லு என கூறி முடித்தான். அவன் இப்படி நேரடியாக கேப்பான் என நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை. எனது மனதில் அவனை ஒரு போதுமே திருமணம் செய்யலாம் என நினைத்தது கூட இல்லை. அவன் இப்படிக்கேட்டதும் நிறையவே தடுமாறிவிட்டேன். எனது தடுமாற்றத்தை கண்ட அவன் சுதா நன்றாக யோசித்து முடிவெடு. இப்போ பரீட்சை வேறு நெருங்குகிறது அதனால் ஆறுதலாக யோசித்து சொல்லு அவசரம் இல்லை என கூறி எழுந்தான். இந்திய சினிமாக்களையே பார்த்து பார்த்து பழகிய எனக்கு இவனது நேரடியான பேச்சு நன்றாக பிடித்துப்போனது. எவ்வளவு பெருந்தன்மையாக பேசினான் என மனதின் ஓரம் நினைத்தது. அவன் என்னைத்திருமணம் செய்ய ஆசைப்படுவதாக சொன்ன நாளில் இருந்து நான் இப்படித்தான் விசரிபோல் இருக்கிறேன். எமது தாய்நாடு என்ன? இவனது தாய்நாடு என்ன? இவனது மொழி என்ன? பண்பாடு கலாச்சாரம் என்ன? இதெல்லாம் வாழ்க்கைக்கு ஒத்துவருமா? ஒரே குழப்பமாக இருக்கிறது. நினைவுகளை மூட்டைகட்டிவிட்டு படிப்பம் என்றால் அவனது குழந்தை முகம் கண்ணாடியில் வந்து தெறிக்கும் விம்பமாய்.

அம்மா கதவைத்தட்டுவது கேட்டு தடுமாறி வாங்கோ என குரல் கொடுத்தேன். அம்மா பாலும் கையுமா நின்றா. பால் கிளாசை வாங்கும்போது கீழே விழுந்து தொலைத்தது.

அம்மாவின் குரல் சற்று ஓங்கி ஒலிக்கத்தொடங்கியது. இப்ப ஒருகிழமையா பாக்கிறன் போக்கு சரியில்லை. சோதினை நெருங்குது கடைசிநேரத்திலை வாழ்க்கையை துலைச்சிடாதை என ஒரு முறைப்போடு கூறிவிட்டு அறையைவிட்டு வெளியேறினா. அம்மான்ரை கண்கள் மிரட்டும்போது பாக்கவே பயம் எனக்கு. ஆனாலும் இண்டைக்கு துணிஞ்சு பாத்திட்டன். அவசரமா ரொயிலெற்றுக்கு போகவேணும் மாதிரி உணர்வு.

திடுக்கிட்டு எழுந்து கொட்டியபாலை துடைக்க ஆரம்பித்தேன். ஜுலின் நினைவுகளையும் சேர்த்துத்தான். ஆனாலும் உடைந்த பால் கிளாசில் கூட அவனது குழந்தைமுகம் சிரித்திருந்தது தெரிந்தது. சரி இப்போ பரீட்சை நெருங்குகிறது . இன்னும் 6 ஆண்டுகள் இருக்கிறது படிப்பு முடிய அதன்பின் இவைபற்றி ஆற அமர யோசித்து அம்மாவோடு முடிவெடுக்கலாம் என முற்றுப்புள்ளி போட்டு படிக்கத்தோடங்கினேன். ஆனாலும் ஜுலின் நினைவுகள் ஒவ்வொரு பக்கத்தை தட்டும்போது வந்து போனது. மனசோ ஜுலுக்குத்தான் இடம் என முடிவெடுப்பது இயல்பாக எனக்குப்புரிந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *