நாற்பது மாத்திரைகள

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 1, 2013
பார்வையிட்டோர்: 18,819 
 
 

தினமும் பழகிய இடம்தான். ஆனால் இரவில் வேறு உரு கொண்டிருந்தது. இலைச் சருகுகள் காலை வேளையில் இவ்வளவு சத்தம் செய்ததில்லை. விளக்குகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக எரிந்து வெளிச்சத்துக்குப் பதில் தூரத்தைக் காட்டி பயமுறுத்திக் கொண்டிருந்தன. பஸ் ஸ்டாப்பில் இறங்கி இவ்வளவு தூரமா நடக்கவேண்டும் ஹாஸ்டலுக்கு? வீட்டில் ஒலியும் ஒளியும் பார்த்துக்கொண்டிருந்தேன். ஹாஸ்டலில் இருந்து அவசரமாக வரச்சொல்லி போன் வர கல்லூரியின் இரவுமுகம் தரிசனம்.

ஹாஸ்டல் வாசலிலேயே இருந்தார் வார்டன். என்னை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்திருக்கிறார்.

“ஏண்டா இவ்ளோ நேரம்.. எங்களுக்கெல்லாம் வேற வேலை இல்ல?”

“பஸ் கிடைக்கல சார்”

”கிளம்பு திரும்ப.. ஹாஸ்பிடலுக்கு எடுத்துகிட்டு போயிட்டாங்க சுந்தரமூர்த்தியை”

“என்ன ஆச்சு சார் அவனுக்கு.. போன்லேயே ஒண்ணும் சொல்லல”

“எனக்கென்ன தெரியும். பவுண்டனுக்கு அடியில விழுந்து கிடந்தான். குடியா கஞ்சாவா தெரியல”

“அவன் அப்படிப்பட்ட பையன் இல்ல சார்”

“நானும் அப்படிதான் நினைச்சுகிட்டிருந்தேன். எவ்ளோ தட்டினாலும் சுரணையே இல்லாம சிரிச்சுகிட்டிருக்கான்.. நேரா பாக்கவே மாட்டேங்கறான். வாய்யா வேஸ்ட்வாட்டர்ன்றான் என்னைப்பாத்து”

வார்டன் பெயர் தண்டபாணி. மொழிபெயர்த்து வேஸ்ட்வாட்டராகத் தான் எல்லாராலும் அறியப்பட்டார். சூழல் புரியாமல் சிரிப்பு வந்தது.

”எந்த ஹாஸ்பிடல் சார்?”

“கவர்மெண்டு ஹாஸ்பிடல்தான். சரி இரு நானும் வரேன். சூசை.. பாத்துக்கடா இங்கே”

மாவு மெஷினை ஞாபகப்படுத்தும் சத்தத்தோடு கிளப்பினார் அவர் டிவிஎஸ்ஸை. ஸ்வெட்டர் போடாமல் வந்துவிட்டேன் அவசரத்தில். நள்ளிரவின் குளிர் உடம்புக்குள் ஊடுருவியது. மலைப்பகுதியின் இருள் குளிரை ஏற்றியதாகத் தோன்றியது. ஏன் இந்த ஆள் இவ்வளவு ஸ்லோவாக வண்டி ஓட்டுகிறார்? வண்டி ஓடும்போதே ஷேவிங் செய்துகொள்ளலாம் போல.

மருத்துவமனையின் கிராதிகள் இழுத்து பூட்டப்பட்டிருந்தன. தினத்தந்தி மேல் படுத்திருந்த ஆள் புரண்டு படுக்குமுன் “சத்தம் போடுங்க சார். வாட்ச்மேன் வருவான்”

“என்னா வேணும்? டாக்டரெல்லாம் காலைலேதான் வருவாங்க” தூக்கம் கலைந்த அதிருப்தி வாட்ச்மேன் குரலில் தெரிந்தது.

“சுந்தரமூர்த்தின்னு ஒரு பையன்.. காலேஜ்லே இருந்து கொண்டு வந்தாங்க”

“அந்த தற்கொலை கேஸா? காலைலதான் பாக்கமுடியும்”

தண்டபாணி அவனுக்கு கிட்டத்தில் சென்று குசுகுசுக்க, கதவு திறந்தது.

பொது வார்டில் காலையில் போட்ட டெட்டால் கரைந்துவிட்டிருந்தது. மருத்துவமனை நாற்றத்தைவிட சாக்கடை நாற்றம்தான் அதிகம் வீசியது. கட்டிலை மீறி நோய்க்கூட்டம் தாண்ட கீழே பாய்போட்டு சலைனுக்கு மட்டும் கம்பி வைத்திருந்தார்கள். பாட்டிலையும் லுங்கியையும் ஒரு சேரப்பிடித்து குந்தி இருந்த ஆள் நான் கடக்கையில் “பீடி இருக்கா தம்பி” என்றான்.

சுந்தரமூர்த்திக்கு எப்படியோ கட்டில் கிடைத்துவிட்டிருந்தது. அருகில் கோபியும் சேகரும் உட்கார்ந்திருந்தார்கள். பெரிய வாளியில் தண்ணீர், ஒரு குழாய், இன்னொரு வாளி. “குடிரா சுந்தர்” தண்ணீரை மக்கில் புகட்டிக்கொண்டிருந்தார்கள்.

“என்ன ஆச்சு கோபி?”

“தூக்க மாத்திரை போட்டுகிட்டானாம்டா”

தூக்க மாத்திரை? நேற்று சாயங்காலம் அவனுடன் மார்க்கெட்டில் அலைந்தது ஞாபகம் வந்தது. ஒவ்வொரு பார்மஸியாக உள்ளே போய் வெளியே கவருடன் வந்துகொண்டிருந்தான்.

“எதுக்குடா நாலஞ்சு கடைக்கு போறே?”

“என் தாத்தா ஊருக்கு போறாரு.. அவருக்கு நிறைய மாத்திரை தேவைப்படுது. பிரிஸ்கிருப்ஷன்லே 10 மாத்திரைதான் போட்டிருக்கான்”

”தாத்தா” வாந்தி எடுத்துக்கொண்டிருந்தான்.

”டாக்டர் பாத்தாரா?” சுற்றுவட்டாரத்தில் மருத்துவமனை சார்ந்த யாரையுமே காணவில்லை. தூங்கிக்கொண்டிருந்த எல்லாரையும் விழிக்க வைக்கும் அளவுக்கு லொக் லொக்கிக் கொண்டிருந்தார் மூன்றாம் பெட். அவருக்கு வாந்தி சத்தத்தில் சவால் விட்டுக்கொண்டிருந்தான் சுந்தர்.

வார்டின் முடிவில் நர்ஸின் வெள்ளுடையும் போன் பிடித்த கையும் தெரிந்தது.

“நர்ஸ்தான்.. டாக்டர்கிட்ட போன்லே பேசி ட்ரீட்மெண்ட் கொடுக்கறாங்க”

நர்ஸ் சேச்சி “வாந்தியிலே மாத்திரை வந்துச்சா? என்ன மருந்து போட்டான்ன்னு டாக்டர் கேக்குறார்” போனில் டாக்டர் பக்கத்தை கைவைத்து மூடியிருந்தாள்.

சுந்தரின் சட்டைப்பையில் இருந்த காகிதக்குப்பைகளில் மாலை பார்த்த மருந்துச்சீட்டை கண்டுபிடித்து எடுத்து நர்ஸிடம் கொடுத்தேன்.

“எத்தனை போட்டு?”

எனக்குத் தெரிந்து நாலு கடை.. “நாப்பது” என்றேன்.

”ஈ மருந்து ஒண்ணும் செய்யா.. சரியாப்போவாம்.. டாக்டர் பறஞ்சு”

நாப்பது மாத்திரையுமா ஒண்ணும் செய்யாது?

“ரெண்டு நாள் தூங்கும். சலைன் போட்டு. வாந்தி வேணாம்”

கோபி முகத்தில் மகிழ்ச்சி. அப்பாடா ஸ்கேவஞ்சர் வேலை பார்க்கவேண்டாம்.

“வெத்துக்கு டென்ஷன் ஏத்திட்டாண்டா”

“என்ன சொல்ற நீ? செத்தாதான் உனக்கு திருப்தியா?”

“அட.. தெரிஞ்சே பிலிம் காமிச்சானா தெரியாமயா?”

“இல்லடா. ஒரு வாரமாவே சீரியஸா யோசிச்சுகிட்டுதான் இருந்தான். அபூர்வ சகோதரர்கள் ரிலீஸன்னிக்கு கூப்டேன். அதுக்குக்கூட வரலை”

“என்ன மேட்டர்? இப்ப எதுவும் ரிஸல்டு கூட வரலையே?”

“வந்துச்சே போன வாரம் ஒரு ரிஸல்டு”

“யாருகிட்ட ஊத்தற? எனக்கும்தான் நாலு கப்பு இருக்கு. என்ன ரிஸல்டு வந்துச்சு?”

“அட எக்ஸாம் ரிஸல்டு இல்லப்பா.. லதா ரிஸல்டு”

“குள்ளி லதாவா? இந்த சொன்னையா? தேவையா இவனுக்கு இதெல்லாம்?”

“சும்மாவா? கவிதையா இல்ல பொழிஞ்சாரு அண்ணன்!”

“செருப்பால அடிச்சிருப்பாளே?”

“இல்லை.. அவ அப்படிப்பட்ட பொண்ணு இல்ல.. தனியா கேண்டீன் பக்கம் போய் ரெண்டு மணிநேரம் அட்வைஸ். உனக்கு என்ன வயசு.. நாம படிக்க வந்திருக்கோம்.. உன்னை நம்பி ஒரு குடும்பம் இருக்கு.. ஆர் சுந்தரராஜன் பட ஹீரோயின் மாதிரி அட்வைஸ்! திருந்திடுவான்னு நினைச்சேன். இப்படி மாத்திரை வரைக்கும் போவான்னு நினைக்கலை”

சுந்தரமூர்த்தி சற்று அசைந்தான். கண் திறந்தது. “நான் எங்கே இருக்கேன்? சொர்க்கத்திலயா?”

“கவர்மெண்ட் ஹாஸ்பிடல் சொர்க்கமா தெரியுதாம்டா.. அந்த மாத்திரை இனிமே மார்க்கெட்லே செம பிக்கப் ஆயிடும்” சேகருக்கு நக்கல் கொஞ்சம் ஜாஸ்தி.

“ஏண்டா லூஸு இப்படி பண்ணே? அந்த மாத்திரை அவ்ளோ டேஞ்சரஸ் இல்லையாம் தெரியுமா?”

“என்ன சொல்ற கோபி? டேஞ்சரஸ் இல்லாத மாத்திரையைப் போட்டதையா லூஸுத்தனம்ன்றே?”

“நான் சாகறதுக்குள்ள .. அவளை.. ஒரு முறையாச்சும் .. பாக்கணும்..” குண்டடி பட்ட கதாநாயகன் போல திக்கித் திக்கிப் பேசினான்.

“என்னடா பண்ணலாம்? அவ வீடு பக்கத்துலதான். வேணா போய் மேட்டர் சொல்லி கூப்டிட்டு வரட்டுமா?”

“நடு ராத்திரியிலயா? அவங்க வீடுல அலவ் பண்ணமாட்டாங்களே.. அதுவும் இல்லாம இது என்ன மரணப்படுக்கையிலயா கிடக்குது?”

“இதாண்டா சான்ஸ். சேத்துவைக்க ஒரு ட்ரை பண்ணுவோமே? அனுதாபம் வொர்க் அவுட் ஆனா ஆவட்டுமே?வேஸ்ட்வாட்டர் வெளியதான் இருக்காரு- அவரைக்கூட்டிட்டு போனா அலவ் பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன்”

“அவனைவிட நீ அதிகமா எக்ஸைட் ஆவறே!” கோபிக்கு ஏனோ என் ஐடியா பிடிக்கவில்லை.

”அட ஒழிஞ்சு போறாண்டா.. ஒரு ட்ரை அடிக்கலாமே” சேகர் ஓட்டும் என் பக்கம் சேர்ந்தது.

வார்டனுடன் கிளம்புகையில் “நான் வரேண்டா.. சேகர் இங்க இருக்கட்டும்” எனச் சேர்ந்துகொண்டான் கோபி.

ஐந்து நிமிடம் ஆனது லதா வீட்டுக் கதவு திறக்க. தெருவின் அத்தனை நாய்களும் எங்களை விரோதமாகப் பார்த்துக்கொண்டிருந்தன.லதாவின் அப்பா தூக்கம் நிரம்பிய கண்கள் சிவக்க கோபமாகத் தெரிந்தார். விஷயம் சொன்னவுடன் லதாவை எழுப்பினார்.

“அச்சச்சோ.. இப்ப எப்படி இருக்கார்?”

“எதுவும் சொல்றதுக்கில்லை.. உன் பேரையே சொல்லி புலம்பிகிட்டிருக்கான்” பில்ட் அப் தானே முக்கியம்.

”இதோ ஒரு பைவ் மினிட்ஸ்லே ரெடி ஆயிடறேன்.. உங்களுக்கு சில்வர் ப்ளஸ் ஓட்டத் தெரியுமா?” கியர் வண்டி. இரவில் முதல்முறை முயற்சிக்க வேண்டாமே என நான் தயங்க “நான் ஓட்டுவேன்” என்றான் கோபி.

”அப்ப நாங்க கிளம்பறோம். கோபி, நீ கூட்டிகிட்டு பத்திரமா வந்துரு. ரொம்ப தாங்க்ஸ் சார்” தண்டபாணி லதா அப்பாவிடம் விடை பெற்றுக்கொண்டார்.

சொன்னபடியே ஐந்து நிமிடத்தில் வந்துவிட்டாள்.

எங்களையெல்லாம் கண்டுகொள்ளாமல் நேராக சுந்தரமூர்த்தியிடம் சென்று அவனை உலுக்கினாள்.

“எழுந்துருடா.. லூஸுப்பயலே! பொண்ணுங்கன்னா மட்டம்னு நினைச்சயாடா பொறுக்கி. உனக்கு உன் உயிருக்கு மரியாதை இல்லாம இருக்கலாம்.. எனக்கு அப்படி இல்லை”

“லதா.. அது வந்து”

“நிறுத்துடா இடியட். போன வாரம் கூட உன்னை புத்திசாலின்னுதான் நினைச்சேன்.. ஒருவேளை மனசுகூட மாறி இருக்கலாம். இப்ப சான்ஸே இல்லை. சாதாரண விஷயத்துக்கு மாத்திரை வரைக்கும் போற ஒரு அடிமுட்டாளோட எனக்கு எந்த ரிலேஷன்ஷிப்பும் எந்தக் காலத்துலேயும் வராது.”

“..” சுந்தருக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் வாயடைத்துதான் போய்விட்டது. மூன்றாம் நம்பர் பெட் இருமல்கூட நின்றுவிட்டது. ஆஸ்பத்திரியில் அதுவும் நள்ளிரவில் யாரும் இப்படி ஒரு சுவாரஸ்யத்தை எதிர்பார்க்கவில்லை. சுந்தர் கை நடுங்கியது முன்பிருந்தேவா இப்போதுதான் ஆரம்பித்ததா தெரியவில்லை.

“நான் பலமுறை சொல்லிட்டேன்.. உன்ன மாதிரி ஒரு ஃபூலோட என் லைபை கமிட் பண்ணிக்க நான் தயாரா இல்லை.. இதுக்கு மேலே செத்தா சாவு போ!”

“கோபி, என்னை ட்ராப் பண்ணிடறீங்களா?”

நல்லவேளையாக சுந்தரமூர்த்தி அதற்குப்பிறகு எந்த முயற்சியும் செய்யவில்லை.

லதா பத்ரகாளியாக மாறியது எனக்கென்னவோ குழப்பமாகவே இருந்தது. நிஜமாகவே கோபமா அல்லது சுந்தர் திருந்துவதற்காக கொடுத்த அதிர்ச்சி வைத்தியமா.. ரொம்ப நாட்களுக்கு இதற்கு விடை தெரியவே இல்லை.

போன முறை ஊருக்குப் போனபோது பொருட்காட்சியில் லதாவைப் பார்த்தேன். ஹாய் ஹல்லோ எல்லாம் முடிந்தபின்.. “கல்யாணம் ஆயிருச்சா? எத்தனை குழந்தைங்க?”

“சரிதான் போ.. உனக்கு விஷயமே தெரியாதா? காலேஜ் முடிச்ச அடுத்த வருஷமே நாங்க கல்யாணம் பண்ணிகிட்டோமே? ரெண்டு குழந்தைங்க.. அதோ வராரு பாரு உன் பிரண்டு.”

ரெண்டு குழந்தைகளுக்கும் பஞ்சுமிட்டாய் வாங்கிக் கொடுத்து கைகொள்ளாமல் டெல்லி அப்பளங்களுடன் எங்கள் பக்கம் வந்துகொண்டிருந்தான் கோபி.

– மார்ச் 2009
பி கு: பெயர்கள் மாற்றப்பட்ட நிஜக்கதை. “சுந்தரமூர்த்தி” இன்று ஒரு தொழிற்சாலையில் ப்ரொடக்‌ஷன் ப்ளானிங் மேனேஜர். “கோபி” உள்ளூரிலேயே பொட்டிதட்டும் கடை வைத்திருக்கிறான். “லதா” அவனுக்கு ஆக்கிப் போட்டுக்கொண்டு இருக்கிறாள்.

சங்கமம் போட்டிக்காக எழுதியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *