(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
போய்ப் பார்த்துவிட்டுத் தான் வரணும்” என்று இறுதி முடிவு எடுத்தாயிற்று. ஒரு வருடத்திற்கு முன்பிருந்தே மனதைக் குடையும் எண்ண அலைகள் தான். ‘எல்லாத்துக்கும் ஒரு நேர காலம் வர வேணாமா…..? செக் பொயின்ட்கள் இருக்கத்தான் செய்யும். நிலைமை சீரடைந்து சுதந்திரமாகப் பறந்து திரியும் காலம் வரும் வரைக்கும் காத்திருந்தா…….. அது எப்ப வரும்……..?’
நாட்டின் பல பாகங்களிலும் இரண்டு தஸாப்தங்களுக்கு மேலாக, ‘கஷ்டப் பிரதேச சேவை’ செய்த பின் தான் அந்த மீனவக் கிராமத்திற்கு வர முடிந்தது. ரம்மியமான கடற்கரைச் சூழல். ஆயினும் ஒரு புதிய ஆசிரிய இடமாற்றத் திட்டம் அமுலுக்கு வந்த போது அவனுக்கு தலை நகருக்கு மாற்றம் கிடைத்தது. –
கிராமத்தை விட்டுப் பிரிய மனமில்லாமல் அதனை ஏற்றுக் கொம்பனித் தெருவுக்கு வந்து இரண்டு நீண்ட வருடங்களாகி விட்டன. இதற்கிடையில் ஒரேயொரு முறை தான் ஓர் இனிமையான சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
மாறி வந்த புதிதில் சிறகில்லாத கடிதங்கள் பறந்தன. ரயில் பயணங்கள் அப்படி, ரயில் பயணங்கள் இப்படி என்றெல்லாம் செய்திகளைச் சுமந்த வண்ணம்! அதுவும் திடீரென்று நின்றுவிட்டது. ஆயினும் கொழும்பிலிருந்து நீர்கொழும்பு வரைக்கும் தண்டவாளங்கள் அன்று போல் இன்றும் சமாந்தரக் கோடுகளாகவே ஓடிக் கொண்டிருக்கின்றன.
சுதந்திரமாகப் பறந்து திரிந்து அவன் நெஞ்சுக் கூட்டுக்குள் கூடுகட்டிக் கொண்டிருந்த அந்த அற்புதமான சமாதான வெண்புறா அண்மையில் தன் அழகிய சிறகுகளை இழந்து கீழே விழுந்து விட்டது போல் அவன் ஒருகனவு கண்டான். அது கனவா….? பிரமையா…..? அல்லது ஓர் உள்ளுணர்வா…….?
சிந்தனையில் மூழ்கியிருந்த சில்மி அந்த முகவரியைத் தேடினான். சற்று நேரத்தில் புத்தகங்கள் – பைல்கள் எல்லாம் காடாகி விட்டன. ‘இங்கிலிஸ் டீச்சிங் போரம் சஞ்சிகைக் கட்டுடன் நசுங்கிப் போயிருந்த அந்தப் பைலை இழுத்தெடுத்தான். அவை அவன் கைககளில் பரிதாபமாகத் தவழ்ந்தன.மிக அவசரமாகத் தேடினான். அந்த ரயில் பயணங்கள் என்றென்றும் பசுமையாக இருக்கும்….. என்ற முத்து முத்தான எழுத்துக்கள் அடங்கிய அந்தக் கடிதத்தின் வலது மூலையில் அவன் தேடிய முகவரி நீல நிற எழுத்துக்களில் கசிந்து உருகிக் கொண்டிருந்தது.
ஆழ்ந்த அன்பின் ஊற்றுக்களாய், நட்புப் பாராட்டி, அறிவுரை கூறி, ஆயிரத்தொரு, முறையாக, இனிய தண்டவாளப் பயணங்களை ஞாபகப்படுத்தின. புத்தாண்டு. கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் கூறி…… குவிந்து கிடந்த மடல்கள் வாழ்த்தட்டைகளை எல்லாம் மீண்டும் ஒரு முறை மனனம் செய்து…… வெளியேறினான்.
கொம்பனி வீதி வழியாக நடந்து புறக்கோட்டை பஸ்ஸில் தாவி ஏறிக் கொண்டான். அங்கிருந்து தான் அவன் அந்தப் புனிதமான நீர்கொழும்பு நகரத்திற்கு பஸ் எடுக்க வேண்டும்.
நீர்கொழும்பு என்றாலே அவன் உள்ளத்தில் ஒரு கிளு கிளுப்பு.
அது அவள் பிறந்த மண். பிரபல பாடகி ருக்மணி தேவி ஞாபகார்த்த மண்டபம் அமைந்துள்ள அமைதியான சூழல்.
ஆனால் அவன் கடமையாற்றியது இன்னும் இருபத்தைந்து கிலோ மீற்றர் தூரம். ஒரு கடலோரக் கிராமத்தில்.
எப்படிப் பார்த்தாலும் தலை நகரிலிருந்து கடலோரக் கிராமம் வரைக்கும் அன்புப் பாலம் கட்டியவள் அவள் தான். சந்தேகமில்லை . ஒரு சமாதான வெண்புறாவாக இருந்து……
பேருந்து புறப்பட்டது.
சற்றுக் களைத்திருந்தாலும் மிக உற்சாகமாக் காணப்பட்டான்.
அவளைச் சந்திக்கும் ஆவலில் அவன் நெஞ்சம் படபடத்துக் கொண்டிருந்தது.
அவனுக்குச் சட்டென்று ஒரு மின்சார அதிர்ச்சி.
கொழும்பு கொம்பனித் தெருவுக்கு மாறி வந்த புதிதில் ஒரேயொரு முறை அந்த அழைப்பை ஏற்று ஒரு டிசம்பர் இருபத்தைந்தில் அவன் அவளைச் சந்தித்தான். சில மணித்தியாலங்கள் அளவளாவி கிறிஸ்மஸ் விருந்துண்டு, தமது ஆசிரிய சேவை மூலம் மாநிலம் சிறப்புறப் பிரார்த்தித்து வந்தது இன்றும் நெஞ்சத்தின் ஆழத்தில் பசுமையாகி நெகிழ வைக்கிறது. வா
அன்று போய் வந்த பிறகும் கடித உறவு நீடித்தது தான். அப்புறம் ஏனோ மறு பதில் வரையக் கூட மறுப்பு, என்ன அப்படியொரு மௌன விரதம்? அது அவர்களது தடைக் கல்லாயிற்றே!
இந்த முப்பத்து நான்காவது வயதில் அவனுக்கு ஒரு புதுப் பழக்கம்.
அந்த ஆதர்சத் துணை மௌனமாகிப் போனதும் அலை அலையாக மனதை அரிக்கும் சஞ்சலங்களுக்கு மாற்று மருந்தாக சிகரட்டில் மோகம் பிறந்தது.
அன்றைய தினம் துயிலெழுந்ததிலிருந்து நான்காவதாக, பாக்கெட்டிலிலுந்து ஒன்றை உருவி உதடுகளில் செருகிப் பற்ற வைத்தான். அது எரிந்து புகை கக்கியது. சிந்தனை மீண்டும் தடம் புரண்டது.
அவனுக்கும் அவளுக்கும் நடந்த சந்திப்பே ஒரு ரம்மியமான நிகழ்வு தான். ஆசிரியப் பயிற்சி முடிந்ததும் சில்மி அந்த மீனவக் கடலோரக் கிராமத்திற்கு மாற்றம் பெற்று வந்தான்.
சிலாபம் (முத்து) நகரிலிருந்து ஐந்து மைல் தூரத்தில் அமைந்திருக்கும் அந்தக் கடலோரக் கிராமப் பாடசாலையில் அவன் கடமையேற்றான். அது முற்றிலும் ஒரு புதிய அனுபவம்.
நகரிலிருந்து ஒற்றை பஸ் போக்குவரத்து. பிரயாணிகளையும் பொதிகளையும் ஏற்றிச் சென்று திரும்பவும் கிராமத்திலிருந்து நகருக்குப் பிரயாணிகளைக் கொண்டு வரும். இரவு எட்டு மணி வரைக்கும் நாளொன்றுக்குப் பல தடவைகள் அதன் சேவை.
கிராமத்தில் அவனுக்குத் தங்கு வசதிகள் திருபதியாக இல்லாததால் இந்த பஸ் சேவை தான் அவனுக்குத் தஞ்சம். நகரத்தில் ஒரு பிரதான வீதியில் வாடகைக்கு அறை எடுத்திருந்தான்.
விடியலில் முதல் பஸ் எடுத்துப் போய் பின்னேரம் திரும்பக் கூடியதாக அமைந்திருந்தது. சில மாதங்களில் அவனுக்கு அந்தக் கடலோரக் கிராமம் மிகவும் பிடித்துப் போய்விட்டிருந்தது
இக்கால கட்டத்தில் தான் ஆங்கிலக் கல்வியதிகாரி வட்டாரத்திலுள்ள சகல ஆங்கில ஆசிரியர்களுக்கென இரண்டு நாள் கருத்தரங்கு ஒன்றை நகரத்தின் பிரதான பாடசாலை ஒன்றில் ஒழுங்கு செய்திருந்தார். தமது வட்டாரத்தில் கடமை புரியும் சகலரையும் சந்திக்க வேண்டும் என்பதும், சகலரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி இனங்கண்டு கொள்ள வேண்டும் என்பதும் அவரது நோக்கம். அத்துடன் கற்பித்தல் சம்பந்தமான விரிவுரைகள். ‘ஒரு மாதிரி கற்பித்தல் வகுப்பு…….. இப்படி அவரது நிகழ்ச்சி நிரல் நீண்டது. பங்கு பற்றும் ஆசிரியர்களுக்கு ‘கடமை லீவு
சில்மியைப் பொறுத்தவரையில் தனது அறையிலிருந்து கருத்தரங்கு மண்டபத்திற்குச் செல்லப் பத்து நிமிடப் பொடி நடை தான்!
முதல் நாள் காலை எட்டரை மணிக்கே சென்றுவிட்டான். அவன் தான் முதல் ஆள். நிகழ்வுகள் தொடங்க ஒன்பது மணியாகும் என்பதை ஊகித்துக் கொண்டு அன்றைய ஆங்கிலப் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்து விட்டு, ‘இன்னும் ஒருவரையும் காணவில்லையே………’ என்ற எண்ணம் தலை தூக்க, மண்டபத்திற்கு வெளியே வந்த போது தான்…
அவள் நின்று கொண்டிருந்தாள்.
முப்பதுக்கு மேல் மதிப்பிட முடியாத இளந்தோற்றம். மெல்லிய நீல நிறச் சேலை அவளது சிவந்த நிறத்திற்கு எடுப்பாய் இருந்தது. இந்த எளிமையான உடை அலங்காரமும், தோளில் தொங்கும் கபில நிற ஹேண்ட் பேக்கும்’ அவள் ஒரு ஆசிரியை என்பதை உரித்து வைத்தாற் போல் கோடி காட்டின.
சில்மியை உற்றுப் பார்த்ததும் அவளுக்கும் அந்த எண்ணம் முகிழ்ந்திருக்குமோ…..!
அவள் இவனை நோட்டமிட்டாள். அவள் இதயத்தில் இவனைப் பற்றி ஒரு நல்லபிப்பிராயம் முதல் இம்ப்ரெஷன்’ மிக நன்றாக அமைந்திருக்க வேண்டும்.
அவளது சுபாவத்தில் துணிச்சலும் சுறுசுறுப்பும் இழையோடியது. மிகுந்த ஆர்வத்துடன் கேட்டாள்.
“எக்ஸ்கியூஸ் மி….. ஹெப் யூ கம் போர் த செமினார்….?” குரலில் பிரதேசத்திற்கேயுரிய சங்கீத இனிமை. முகத்தில் வசீகரமான முறுவல். –
“யெஸ் பிளீஸ்…..” என்று கூறியதோடு ஐ ஆம்…….. சில்மி முஹமட்…. யூ…. ஆர்…..?”
“ஸ்டெல்லா ராணி”
இப்படித்தான் அந்த முதல் அறிமுகம்.
அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் மண்டபத்துள் நுழைந்து இருக்கைகளில் அமர்ந்து உரையாடினர். கருத்தரங்கிலிருந்து கடமையாற்றும் பாடசாலைகள் வரை சுய விபரங்களைப் பரிமாறிக் கொண்டனர். இதற்கிடையில் ஒரு கும்பல் பிரவேசித்தது. புதிய முகங்கள். சற்று நேரத்தில் அவனும் அவளும் கன்ரீனில் தேநீர் அருந்த எழுந்து வெளியே உலா வந்தனர். மேலும் சில ஆசிரியைகள் இணைந்தனர்.
“ஸ்டெல்லா ராணி உங்கள் தாய் மொழி…?” அவன் ஆங்கிலத்தில் கேட்டான்.
“தமிழ்தான்……… ஏன் சந்தேகம்………?” முதன் முதலில் தமிழில் மறுமொழி கூறினாள்.
அதைத் தொடர்ந்து அவர்கள் தமிழும் ஆங்கிலமும் கலந்து உரையாடினர். ஆங்கில மொழி மூலம் கற்றிருந்தாலும், தமிழ் நாவல்கள் சிறுகதைகள் படித்து விமர்சிக்கும் அளவுக்கு அவளது தமிழறிவு ஆழமாக இருந்தது.
பஸ் இருபத்தைந்து கிலோ மீற்றர் வேகத்தில் போய்க் கொண்டிருந்தது. பஸ் தரிப்பிடங்களில் நின்று நின்று போகாமல் இருந்ததால் இன்னும் அரைமணி நேரத்திற்குள் நீர்கொழும்பை அடைந்து விடலாம்.
சிலிமியின் சிகரட் பக்கட் காலியாகிவிட்டிருந்தது.
அன்று அந்தக் கல்லூரியின் கன்ரீனில் தேநீர் அருந்திய பின் அவசரமாக மீண்டும் கருத்தரங்கு மண்டபத்துள் நுழைந்த போது, ஆங்கிலக் கல்வியதிகாரியைச் சூழ்ந்து கொண்டு பல ஆசிரியர்களும் வந்தனர்.
எல்லாமாக முப்பத்தைந்து ஆசிரியர்கள். கல்வியதிகாரிக்கு ஆசிரியர்களின் வருகை பூரண திருப்தி.
நேரம் காலை ஒன்பது இருபது.
அனைவரும் இருக்கைகளில் அமர்ந்த பின்னர் அமைதி நிலவியது.
நிகழ்ச்சி நிரலின் படி ஒவ்வொருவரும் எழுந்து நின்று தத்தமது பெயரையும், பாடசாலையையும், சொந்த ஊரையும் பகிரங்கப் படுத்திக் கொண்டனர்.
“நான் ஊவா மாகாணத்தைச் சேர்ந்தவன் தற்பொழுது கொழும்பில் வசிக்கிறேன். படிப்பிக்கும் பாடசாலைக் கடலோரக் கிராமத்தில் ஆர். சி. ரி. எம்”
சில்மி முஹம்மட் தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.
ஸ்டெல்லா ராணியின் சொந்த ஊரே நீர்கொழும்பு தான் வீட்டிலிருந்து ஒவ்வொரு நாளும் காலையில் புகைவண்டி மூலம் பிரயாணம் செய்கிறாள்.
ஆசிரிய அறிமுகத்தைத் தொடர்ந்து, கல்வியதிகாரி சிசில் பெர்னான்டோ ஆரம்ப உரை நிகழ்த்தும் போது குறிப்பிட்டார்
“….. நீங்கள் ஒன்றைக் கவனித்தீர்களா……..? கருத்தரங்குகளுக்கு ஆங்கில ஆசிரியர்கள் ஒன்று சேரும் போது. அங்கு சிங்கள, தமிழ். முஸ்லிம் என்று எவ்வித வேறுபாடும் இல்லாமல் ஒன்றிணைந்து செயற்படுகிறோம்…. இது ஏனைய பாடநெறிகளுக்கு இல்லாத சிறப்பு. அதுதான் எமது பாடநெறிக்குள்ள விஷேசம்….. கற்பித்தல் தொழிலில் சர்வதேச மொழியை மாணவர்களுக்குச் சரியான முறையில் கற்பித்து. எமது நாட்டின் ஒருமைப் பாட்டிற்கு அடிகோலுகிறோம். என்பதை நாம் மறந்துவிடக் கூடாது……” என்று அடுக்கிக் கொண்டே போனார்.
சில்மி முஹம்மதுவும். ஸ்டெல்லா ராணியும் மெய் சிலிர்த்துப் போனார்கள்.
அவர்களது கற்பித்தல் கொள்கையும் அதுதானே! அவர்கள் இருவருக்குமே அது ஓர் இனிய சந்திப்பு. அதிகாரியின் உரையைத் தொடர்ந்து, விரிவுரையும், கலந்துரையாடலும் இடம் பெற்றன.
சில்மி தனது கருத்துக்களை ஆங்கிலத்தில் சரளமாக வெளியிட்டான். பலரும் கருத்துக்களை வெளியிட்டனர். ஸ்டெல்லா ஐயங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றாள்.
இடைவேளை வந்ததும் கல்லூரி அதிபர் தேநீர் வழங்கினார். மீண்டும் மண்டபம் சலசலத்தது.
நிகழ்வுகள் தொடர்ந்தன.
மதிய போசனத்திற்கு அவன் வெளியே சென்றான். ஸ்டெல்லா பார்சல் கொண்டு வந்திருந்தாள்.
பஸ் வண்டி சனப் புழக்கமுள்ள ஒரு சிற்றூர் சந்தியில் நின்றதும் அங்காடி வியாபாரிகள் ஏறினர். இதை எதிர் பார்த்துக் கொண்டிருந்த சில்மி சட்டென்று ஒரு சிகரட்டைக் கௌவிக் கொண்டான்.
பஸ் புறப்படுவதற்குள் புகைத் தாகம் தீர்ந்தது. புதிய உத்வேகத்துடன் அந்தப் பசுமையான அலைகள் உயிர் பெற்றுக் கொண்டிருந்தன.
சாயந்தர நிகழ்வுகளுக்குப் பின் அவள் அவனிடம் பவ்வியமாகக் கேட்டுக் கொண்டாள்.
“சில்மி, ஒரு உதவி செய்ய முடியுமா? தயவு செய்து பஸ் நிலையம் வரைக்கும் வந்து…..”
“ஓ அதுக்கென்ன…? அவன் பரந்த மனப் பான்மையுடன் ஒப்புக் கொண்டான்.
அவர்கள் இருவரும் மண்டபத்தை விட்டு வெளியேறிய போது, சில்மிக்கு கல்வியதிகாரியின் அன்பான வேண்டுகோள் ஒன்று காத்திருந்தது.
“…. நீங்கள் நாளைக்கு ஒரு மொடல் கிளாஸ் செய்ய வேண்டும்… இந்தக் கல்லூரியின் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு….. ஆயத்தம் செய்து கொண்டு வாருங்கள்….”
கற்பித்தலுக்கான விடயத்தை அதிகாரி வழங்கினார். அது சம்பந்தமாக மீண்டும் அவனும் அவளும் சற்றுத் தாமதித்து, கலந்தாலோசித்து விட்டு தேவையான குறிப்புகளை எழுதிக் கொண்டனர்.
நேரம் மாலை நான்கு மணி அவர்கள் உரையாடிக் கொண்டே பஸ் நிலையத்தை நோக்கி நடந்தனர்.
“ஸ்டெல்லா நீர்கொழும்பு என்றதும் இனி உங்கள் ஞாபகம் தான் வரும்…..”
அவர்கள் சிரித்தனர்.
சில்மி வாரத்திற்கு ஒரு முறை வெள்ளிக் கிழமை பிற்பகல் கொழும்புக்குச் சென்று ஞாயிறு இரவு அல்லது திங்கள் காலையில் சரியான நேரத்திற்குக் கடமைக்கு வந்துவிடுவான்.
ஸ்டெல்லா அதிர்ஷ்டசாலி, ஒவ்வொரு நாளும் வீட்டிலிருந்து பாடசாலைக்கு புகைவண்டிப் பயணம். சீசன் டிக்கட். ஒவ்வொரு நாளும் அந்தச் சிறிய புகை வண்டி நிலையத்தில் இறங்கி சிறிது தூரம் பாடசாலைக்கு நடப்பது காலைச் சூரியனில் ஒரு தேகப்பயிற்சி. பின்னேரத்தில் திரும்புவதற்கு ஒரு ஸ்லோ கோச். மீன் வண்டி என்று அதற்கு ஒரு சிறப்புப் பெயர். எப்பொழுதும் மூன்றாவது பயணிகள் இணைப்பில் ஒரு வலது புற ஜன்னலோர இருக்கையில் தான் பிரயாணம் செய்வாள்.
சிந்தனைக் குதிரையைக் கட்டவிழ்த்து விடவும், புத்தகங்கள் படிப்பதற்கும் பல்லின மக்களுடன் இணைந்து பழகுவதற்கும் அது அவளுக்கு வசதியாகும். விரல் விட்டு எண்ணக் கூடிய பிரயாணிகள் ஒவ்வொரு தரிப்பிலும் ஏறுவதும் இறங்குவதுமாக இருப்பார்கள்.
“சில்மி நீங்க என்னை சந்திப்பதாயிருந்தா இங்கிருந்து இரண்டு மணிக்கு புறப்படும் மீன் வண்டியில் வாங்க. அந்தச் சிறிய ஸ்டேஷனில் எனக்காகவும் இரண்டொரு மீனவர்களுக்காகவும் தான் அது நிற்கும்…….”
“அந்த ரயில் கொழும்புக்கு எத்தனை மணிக்குப் போகும்……?”
“ஐந்து மணிக்குள் வீட்டுக்குப் போய்விடுவீங்க..
“அப்ப பஸ்ஸிலே போவது குவிக் ஜர்னி….”
இதைக் கேட்டதும் அவளது முகம் தொட்டாற் சுருங்கியாகிவிட்டது.
“சரி பஸ்ஸிலே போங்க…..”
அவள் குரலில் கோபம் தொனித்தது.
“ஐ ஜஸ்ட் டீஸ்ட் யூ…..” என்றான் அவன் அவள் மௌனம் சாதித்தாள்.
“சில்மி நீர்கொழும்பு பஸ் வருகுது……”
அவன் ஓடிச் சென்று ஏறி சீற்பிடித்தான்.
சற்று நேரத்தில் பஸ் புறப்பட ஆயத்தமாகியது.
“தேங்யூ….. சில்மி…… குட்பை … .”
பஸ் அசைந்து பிரியாவிடை பெற்றுக் கொண்டது.
அவன் விடுதியை நோக்கி நடந்தான்.
அன்றைய அனுபவம் அவனுக்குப் புதுமையாக இருந்தது. அன்றைய இரவு அவன் கிரகித்துக் கொண்ட குறிப்புகளை அடிப்படையாக வைத்து நாற்பது நிமிட மாதிரி வகுப்பொன்றை படிப்பித்துக் காட்ட, தயாரித்துக் கொண்டான். ஸ்டெல்லாவின் ஆலோசனைகள் பக்கத்துணையாகவும். உற்சாகமாகவும் இருந்தன.
இரண்டாம் நாள் கருத்தரங்கு தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே அவர்கள் மண்டபத்தில் சந்தித்தனர். மீண்டும் ‘மாதிரி வகுப்பு சம்பந்தமாக கருத்துக்கள் பரிமாறத் தொடங்கியிருந்தனர். இடைக்கிடை சுயவிபரங்கள் புரிந்துணர்வுகளுக்கு அடித்தளமிட்டு நெருக்கமான நட்பை மலரச் செய்தது.
கருத்தரங்கின் இறுதி அம்சமாக சிலிமியின் மொடல் கிளாஸ்’ ஒரு கலக்கு கலக்கியது. அதற்குச் சமமாக ஸ்டெல்லாவின் விமர்சனக் கருத்துக்கள் அல்லது மதிப்பீடு. மனம் நிறைந்த பாராட்டுக்களாகவே அமைந்தன. அவன் புல்லரித்துப் போனான்.
அன்று தான் அவனுக்கு மறக்கவே முடியாத அந்தச் சம்பவம் இடம் பெற்றது. ப
அனைவரும் அவனது மாதிரி வகுப்பை பாராட்டிக் கொண்டிருந்த அவ்வேளையில் அவனது இருக்கைக்கு நேராக அமைந்த பக்கத்து வாசலில் ஒரு சிறுவன் சைக்கிளில் வந்து ஓயாது -மணியோசை எழுப்பிக் கொண்டிருந்தான்
அவசரமாக எவரும் எழுந்து செல்லாததால் சற்றுப் பொறுத்துச் சில்மி தான் விரைந்து சென்று, அந்தச் சிறுவன் நீட்டிக் கொண்டிருந்த ஒரு கடிதத்துண்டை பெற்றுக் கொண்டான். அது கல்வியதிகாரிக்கு முகவரியிடப் பட்டிருந்தது. அதன் உள்ளடக்கத்தைப் படித்த அதிகாரி ஸ்டெல்லா ராணியை அழைத்து
“உங்கள் தாயார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்…… நீங்கள் உடனடியாகப் போய்ப் பாருங்கள்”
கலவரமடைந்த ஸ்டெல்லா பதறிப்போனாள். வாசலருகே சென்று தயங்கித் தயங்கி நின்று கொண்டிருந்தாள். அவள் நிலைமையைப் புரிந்து கொண்ட அதிகாரி மீண்டும் சில்மியை அழைத்து…
“மிஸ்டர் சில்மி……. நீங்கள் தான் அவளுடன் சிநேகபூர்வமாகப் பழகுகிறீர்கள்… இப் யூ டோன்ட் மைன்ட் பிளீஸ் ஹெல்ப்ஹேர்… அவளை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல முடியுமா…..?”
சில்மியும் ஸ்டெல்லாவும் பறந்தனர். அங்கே வாசலை ஒட்டிய படுக்கையைச் சுற்றி ஒரு சிறு கூட்டம்.
பரபரப்பாக ஓடி வந்த ஸ்டெல்லா
“மொக த மேரி அக்கே….. ரஞ்சி மல்லி அம்மாட்ட மொனவாத. உனே………? என்று கேட்டவாறே உள்ளே நுழைந்தாள். பக்கத்திலிருந்த வயதான பெண்மணி…….. கரதர வென்ன தெயக் நே……… மம மிஸித்தெக்க கத்தாகரா……” என்ற பதில் அவளை ஓரளவு ஆசுவாசப் படுத்தியது. தாதிமார் இருவரும் – 1
“தெங் ஒக்கொம கருனாகரலா எளியட்ட யன்ன..”
கூட்டம் விலகிச் செல்ல, ஸ்டெல்லா தாயின் பக்கம் நின்று விசாரித்துக் கொண்டிருந்தாள்.
குளியலறையில் விழுந்து தலையில் பலமாக அடிபட்டிருப்பதால் இரத்தப் பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. தலையில் பலமான ஒரு கட்டுக் காணப்பட்டது.
வெளிறிய முகம். வாழ்க்கைக் கவலைகளால் நலிந்த வரிகள் இழையோடிய தோற்றம்.
இதே வேளை தாயின் பக்கம் பார்வையைச் செலுத்திய சில்மி மறுகணம் வார்டுக்குப் பொறுப்பாயிருந்த வைத்தியரிடம் ஏதோ கதைத்துக் கொண்டிருந்தான்.
“பலவீனம் தான். சீரியஸாக ஒன்றும் இல்லை . இரண்டொரு நாள்ல டிஸ்சார்ஜ் பண்ணி விடலாம். என்று டாக்டர் சொன்னார்……” என்றான் சில்மி.
அப்புறம் சில்மியும் ஸ்டெல்லாவும் விறாந்தையில் கூடி நின்றவர்களிடம் வந்தார்கள். ஸ்டெல்லா மீண்டும் ஒரு முறை வீட்டில் நடந்தவற்றை விசாரித்தறிந்து கொண்டாள். ஸ்டெல்லா பொறுப்பான ஒரு பெண்மணியை அம்மாவின் பக்கத்தில் துணையாக வைத்துவிட்டு தான் வீட்டிற்குச் சென்று மீண்டும் திரும்புவதாகக் கூறி விடை பெற்றுக் கொண்டாள்.
அனைவரும் உரையாடிக் கொண்டே விறாந்தையை விட்டு வெளியேறினர்.
ஸ்டெல்லா சில்மியை அறிமுகப் படுத்தினாள். “ஜேன் நோனா ஆட்டாட்ட கீயத…..?” என்று கேட்டாள்.
“…… ஏக்க மொனவாத நங்கி… மே வெலாவட்ட எஹெமத் நெத்தங் அபி மொக்கட்டத………?” என்று மறுத்தாள்
அவர்களிடையே காணப்பட்ட இன நெருக்கத்தைக் கண்டு சில்மியின் நெஞ்சம் நெகிழ்ந்தது.
‘என்ன அற்புதமான மக்கள்…….. இப்படியான ஒரு புரிந்துணர்வும் நெருக்கமும் நாட்டின் எல்லாப் பாகங்களிலும் இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்……..!’ என்று அவன் மனம் அவாவியது.
வீட்டை அடைந்ததும் சில்மியும் ஸ்டெல்லாவும் பல்வேறு சிந்தனைகளுடன் முன் அறையில் அமர்ந்தனர்.
இனி ஆகவேண்டிய கருமங்களைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தாள் ஸ்டெல்லா.
“ஆ… புத்தே…….! பொண்ண……..” ஒரு சிங்களப் பெண்மணி தேநீர் தயாரித்துக் கொண்டு வந்து நீட்டினாள்.
“துவெ…….. ஒயத் பொண்ண… தெங் இத்திங் கலபொல வென்ன தெயக் நே……… அபித் இன்னவாதே மெஹே…” என்று குறிப்பிட்டு உள்ளே சென்றாள்.
“ஸ்டெல்லா……. இவள் உங்கள் உறவினரா?” என்ற அவன் கேட்டான்.
“எங்களுக்குச் சொந்தக்காரர் இங்கே ஒருவரும் இல்லை….. இவர்கள் எல்லாம் அக்கம் பக்கத்தவர்கள்……
தனது வீடு மாதிரியே நினைத்து, வீட்டினுள் நுழைந்து தேநீர் தயாரித்துக் கொண்டு வந்து, வந்தவர்களை உபசரிக்கும் அளவுக்கு அந்த மக்களிடம் இருந்த அந்நியோன்ய உறவை எண்ணி அவன் உள்ளம் வியந்தது.
அன்று மாலை ஸ்டெல்லாவிடமிருந்து விடை பெற்றுக் கொண்ட சில்மி கல்வியதிகாரியை அவர் இல்லத்தில் சந்தித்த போது தகவல்கள் பரிமாறிக் கொண்டான்.
அதற்குப் பிறகு அவன் அந்த வெள்ளிக் கிழமை ரயிலில் சந்தித்து தாயின் சேமங்களை விசாரித்தறிந்தான். கருத்தரங்கில் எடுத்த முடிவுகளைப் பற்றிக் கலந்துரையாடினான்.
ஆங்கிலம் கற்பித்தல் சம்பந்தமாக ஒரு வேலைத் திட்டம் உருவாக்கப் பட்டு குழுக்கள் பிரிக்கப் பட்டிருக்கின்றன. அவனும் அவளும் ஒரே குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
அநுராதபுர மாவட்டத்தில் பயிற்றப்படாத புதிய நியமனம் பெற்ற ஆங்கில உதவி ஆசிரியர்களுக்கு நடைபெறவிருக்கும் பயிற்சிக் கருத்தரங்கில் ஒரு மாதிரி வகுப்பு நடத்திக் காட்டிக் கருத்துக்கள் கூற அவனும் அவளும் தெரிவு செய்யப் பட்டிருக்கின்றனர்.
இப்படியான அவர்களுடைய சந்திப்புக்கள் காரண காரியங்களுக்காக நீண்டு கொண்டே இருந்தன.
கல்வியதிகாரி ஒப்படைத்த பாரிய பொறுப்புக்களை கூட்டாக ஆற அமர இருந்து திட்டமிட்டு நிறைவேற்ற மட்டும் அவள் இல்லத்திற்கு அவன் ஐந்தாறு தடவைகளாவது போய்ப் பல மணித்தியாலங்களைச் செலவு செய்திருக்கிறான்.
அது ஒரு அழகான வீடு. எஸ்பஸ்டஸ் சீட் கூரை. மல்லிகை மணம் கமழும் சிறு பூந்தோட்டம். ஆங்காங்கே செவ்வரத்தம் பூஞ்செடிகள். சட்டிகளில் துளசிச் செடிகள்.
போனாலே போதும். பாச மேலீட்டால் ராஜ மரியாதை. நல்லுபசரணைகள்.
சில்மிக்கு ஒரு சந்தேகம். வெளிப்படையாகவே கேட்டு விட்டான்.
“ஸ்டெல்லா ப்ளீஸ் டோன்ட் மிஸ் அன்டர்ஸ்டான்ட்…. இந்தத் துளசியும், மல்லிகையும் செவ்வரத்தம் பூவும்…… இந்துக்கள் தானே அதிகம் விரும்புவார்கள்…?”
“நீங்க மிக நுணுக்கமாக அவதானிக்கிறீங்க….யுவர் ஒப்சர்வேசன் பவர் இஸ் கிரேட், உண்மையை சொல்லட்டா..?”
“விரும்பினாச் சொல்லுங்க…”
“எங்க அம்மா முந்தி…இந்து சமயம்..இப்ப ஆர்.சி…ஆனால், துளசியை முற்றத்தில் நட்டிருப்பதற்குக் காரணம் விஷ ஜந்துக்கள் வராதாம்.”
அவன் சிரித்து விட்டான்.
“ஏன்?’ அவள் கேட்டாள்.
“ஒண்ணுமில்ல…விஷ மனிதர்களும் உட்படவா?” என்று….
அவர்கள் இருவருமே சிரித்தார்கள்.
“எப்படியோ அம்மாவிடமோ அக்கம் பக்கத்தவர்களிடமோ…இன வேற்றுமை இல்லை என்பதை நான் அன்றே புரிந்து கொண்டேன்…” என்றான் சில்மி.
“எங்களைப் போலவா..?” என்றவள் சில்மியின் முகத்தைக் கூர்ந்து கவனித்தாள்.
“எங்களைப் போல்…. என்றால்..?”
ஒரு நிமிடம் மௌனம். அவள் தொடர்ந்தாள்.
“…ஐ லவ் யுவர் மோரல்ஸ்…”
அவன் ஒரு கணம் அசந்து போனான். பிரபஞ்சத்தை ஒருமைப் படுத்தும் சர்வதேச மொழியை மாணவ சமுதாயத்திற்கு ஊட்டும் பாரிய பொறுப்பில் சில்மியும் ஸ்டெல்லாவும் கைகோர்த்து நின்றனர்.
கருத்தரங்கில் அவன் நடத்திக் காட்டிய ‘மொடல் வகுப்புக்கு அவள் நிகழ்த்திய மதிப்பீட்டுரையை எண்ணியெண்ணி அடிக்க, அவன் உள்ளம் புளகாங்கித மடைந்தது. உண்மையில் பாராட்டுக்கள் உற்சாகம் தரும் ஔடதம் என்பதில் ஐயமில்லை .
வெள்ளிக் கிழமை மீன் வண்டிச் சந்திப்புகள் அலாதியானவை. அடிக்கடி ஆங்கில தமிழ் சிங்கள நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் பரிமாற்றம் தவறாது. வெள்ளிக் கிழமை புகைவண்டி சந்திப்புகள் தவிர்க்க முடியாத காரணங்களால் தடைபடும் போதும், நீண்ட விடுமுறை காலங்களிலும் கடிதங்கள் தொடரும். அவளது கையெழுத்து உருண்டையானது. தமிழ் எழுத்துக்களில் தொடங்கி, ஆங்கிலம் கலந்து எழுதும் நீண்ட நிருபங்கள் விமர்சனங்களாகவும் தொழில் சம்பந்தப் பட்டவையாகவும், அடிமனதில் ஊறும் அன்பின் ஊற்றுக்களாகவும் தான் இருக்கும்.
சர்வதேச மொழியை மாணவர்களுக்குக் கற்பித்துச் சர்வதேச மட்டத்திற்கு அவர்களை வழிகாட்டும் இலட்சிய நோக்குடன் ஈடுபட்டு உழைக்கும் ஒருவருக்கு அதே மொழியில் ஊறிப் போய் பக்குவமடைந்த இன்னொருவரின் சந்திப்பும் ஆலோசனைகளும், கருத்துக்களும் அரவணைப்பும் தூண்டுகோலாய் அமைவது அபூர்வமானதொன்று.
வெள்ளிக் கிழமை மீன் வண்டியை அவர்கள் வீடு’ போல் நினைத்து உரையாடிக் களிப்பதை அந்தப் புகைவண்டிக்கே பிடிக்கவில்லையோ…….? அல்லது பொறாமையோ? வழக்கத்திற்கு மாறாகச் சற்று வேகத்தைக் கூட்டி… ப்ரேக் போட்டபோது ‘தடங்’ என்றொரு பெரிய இரைச்சலுடன் குலுங்கி நின்றது. அதற்குள் ‘பிளாஸ்’கிலிருந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தவர்க்ள ஆளுக்காள் மோதி, அவளது கோப்பையிலிருந்து தேநீர் சிந்திச் சிதறி எதிரே இருந்து கொண்டிருந்த அவனது டிரௌசரின் வலது கால் பகுதியை நன்றாக நனைத்து விட்டிருந்தது.
அந்தத் தவறுதலுக்காக அவள் மிகவும் மனம் வருந்தினாள். அவளது முகம் வாட்டமுற்றிருந்தது.
“இது ஒரு சின்ன விசயம். தற்செயலாக நடந்தது. சின்ன விசயங்களை சீரியஸாக எடுக்க வேண்டாம்.” என்று அவன் எவ்வளவு கூறியும் தனது கைக்குட்டையைக் குழாய் நீரில் நனைத்துக் கொண்டு வந்து கொடுத்தாள். அவன் தேநீர்க் கறையை அழுத்தித் துடைத்துக் கொண்டான்.
சில்மியுடன் நெருங்கிப் பழகிய பின் –
திங்கள் தொடக்கம் வியாழன் வரைக்கும் தனித்துப் போக்குவரத்து செய்வது அவளுக்குப் பெரிய அலுப்பு.
எவ்வளவு தான் நூல்களை வாசிப்பது?
அவனுக்கும் அவளுக்குமாகத் தேவையான பாடத்திட்டம், பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள் முதலியவற்றை மிகவும் அற்புதமாகத் தயாரிப்பதற்கும் இந்தப் புகை வண்டிப் பயணங்கள் அனுகூலமாக இருக்கும். ‘உறுதியான அத்திவாரமில்லாமல் வீடு கட்ட முடியாதது போல, விரிவான பாடத் திட்டம் இல்லாமல் கற்பிக்க முடியாது என்று ஆணித்தரமாக வாதிப்பவள் ஸ்டெல்லா. ‘யூ மஸ்ட் பிரிபேர் யுவர் லெசன் வெல்’ என்பது அவளது படிப்பித்தல் கொள்கை.
எப்படியோ வெள்ளிக்கிழமை நாட்கள் அவனுக்கும் அவளுக்கும் சுவாரஸ்யமான பயணங்கள். சாதாரண விடயங்களிலிருந்து சர்வதேச விவகாரங்கள் வரைக்கும் கருத்துக்கள் பரிமாறுவார்கள்.
ஒரு சமயம் “உங்களுக்கு ‘நியுமொரொலொஜியில் நம்பிக்கை இருக்கிறதா…?” என்று அவள் கேட்டு விட்டாள்.
“இல்லை …” என்றான் சில்மி. அவனுக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும், ஒன்றுலிருந்து ஒன்பது வரைக்கும் உள்ள எண்களின் தன்மைகளைப் பற்றி அவள் ஆற்றிய விரிவுரை சுவையாக இருந்தது.
பிறப்பெண், கூட்டெண், பெயரெண் என்று என்னென்னவோ, கூட்டிக் கழித்துப் பெருக்கிய போது –
அவளது முகத்தில் சோகம் இழையோடியது..”என்ன…” என்று அவன் கேட்டான்.
“எண் சோதிடக் கணிப்பின் படி எங்கள் சிநேகம் நீடிக்காது.”
அவன் சிரித்தான்.
“அதுதான் எனக்கு நம்பிக்கை இல்லை என்று முதலிலேயே சொல்லி விட்டேனே. எல்லாமே விதிப்படி, அல்லது தலையெழுத்துப்படி தான் நடக்கும்… அதிலிருந்து தப்ப முடியாது…” என்று சில்மி வாதாடினான்.
சில்மி சென்று கொண்டிருந்த பேருந்து நீர்கொழும்பை அடைந்த போது நண்பகல். ஆனால், வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது.
நிலையத்திலிருந்து வலது பக்கம் திரும்பி நேராக நடந்தான். அந்தத் தெருவே அவனுக்குப் புதுவிதமாக இருந்தது. எதற்கும் ஒரு கடையின் பெயர் பலகையைப் பார்த்துத் தெருவின் பெயரை உறுதிப் படுத்திக் கொண்டான். நல்ல வேளை முகவரியைத் தேடி எடுத்துக் கொண்டு வந்தது.
நீண்ட தூரம் நடந்து கடைகள் கட்டிடங்கள் இல்லாத ஒரு சந்தியில் திரும்பி மீண்டும் சஞ்சலப் பட்டான். அதிர்ஷ்ட வசமாக வந்த பாதசாரியிடம் விசாரித்துச் சரியான பாதையில் நடையைத் தொடர்ந்தான். இனி வீட்டின் இலக்கத்தைக் கண்டுபிடித்தால் சரி…எத்தனையோ முறை நடந்த பாதைதான். இருந்தும் இப்படி ஒரு சிக்கலா!
சற்று நேரத்தில் தெளிவடைந்து விட்டவன் போல் இனி.. வீடு தெரியும்…தெரியும்…என்று மகிழ்ச்சி பொங்க முணுமுணுத்தான்.
அவனுக்கு எல்லாமே ஞாபகத்திற்கு வந்தன. உற்சாகமாக முன்னேறினான்.
ஆ…! அது என்ன அவன் பார்ப்பது…? மீண்டும் இடத்தையும் இலக்கத்தையும் உறுதிப் படுத்திக் கொண்டான்.
ஆம்! அவன் பார்த்து விழித்துக் கொண்டிருப்பது அந்த வீட்டைத் தான். சந்தேகமில்லை .
ஆனால், எஸ்பஸ்டஸ் கூரையைக் காணவில்லையே! முன் கதவு உடைபட்ட நிலையில், சிதிலமடைந்த சுவர்கள்.
துளசியும் மல்லிகையும் பூந்தோட்டமும் தரை மட்டம்.
தூரத்தூர அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள். யாரிடம் விசாரிப்பது…?
சே! என்ன நடந்தது…? என்ன நடந்தது..?
அவன் உள்ளத்தில் ஆயிரம் கேள்விகள். மிகுந்த அதிருப்தியுடனும், கவலையுடனும் திரும்பி நடந்தான். சற்று முன் தனக்கு வழிகாட்டிய வயது முதிர்ந்த மனிதர் திரும்பிக் கொண்டிருந்தார். அந்த ஏரியா ஆள் தான்.
துணிச்சலை வரவழைத்துக் கொண்டு, அவன் மீண்டும் ஆங்கிலத்தில் கேட்டான். அந்த வீட்டைப் பற்றியும், குடியிருந்தவர்களைப் பற்றியும்.
பெரியவர் வெறுப்புடன் நடந்து கொண்டிருந்தார். அவன் தளர்ந்து விடவில்லை. மீண்டும் கேட்டான்.
‘இனியும் அவன் எதையும் கேட்கக் கூடாது என்று நினைத்து விட்டாரோ…?
நடையில் சற்று வேகத்தைக் கூட்டி விறுவிறுவென்று நடந்து கொண்டே வார்த்தைகளை உதிர்த்தார்.
“ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்று ஜூலை கலவரம்…” – பெரியவர் கூறத் தொடங்கினார்…
அவனுக்குத் தலையைச் சுற்றியது. பயங்கர நினைவுகள் அவன் உடலை ஆட்டியது!
மீண்டும் கடைத் தெருவுக்கு எப்படி நடந்து வந்தானோ – ஒரு தேநீர்க் கடைக்குள் புகுந்து சூடாகத் தேநீர் அருந்தினான். இரண்டு பக்கட் சிகரட்டுக்களை வாங்கிக் கொண்டு, பஸ் நிலையத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தான். நடைப்பிணமாய்.
– மல்லிகை – 35 -வது ஆண்டு மலர். ஜனவரி – 2000.
– நாம் பயணித்த புகைவண்டி (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: 2003, மல்லிகைப் பந்தல் வெளியீடு, கொழும்பு.