அன்று ஒரு சனிக்கிழமை.
அவளை நான் முதன் முதலில் பார்த்தது தி.நகர் வெங்கட் நாராயணா தெருவில் உள்ள பெருமாள் கோயிலில். அவளைப் பார்த்தவுடனே அவள் அழகில் சொக்கிப்போய் விட்டேன். வட்டமான அழகிய முகத்தில், நீண்ட கூந்தலுடன், சிவந்த நிறத்தில் பார்ப்பதற்கு மிகவும் செளந்தர்யமாக இருந்தாள். நெற்றியின் மீது வட்ட வடிவில் குங்குமமும் அதன் மேல் தீற்றலாக விபூதியும் அழகாக வீற்றிருந்தன.
அதன் பிறகு, ஒவ்வொரு சனிக்கிழமையும் அவளைப் பார்க்கும் ஆவலில் தவறாது பெருமாள் கோயில் போனேன். அவள் என்னைத் தவிர்க்க முடியாதவாறு அவள் முன்னே போய் அடிக்கடி நின்றேன். இரண்டு வாரங்கள் கழித்து சற்று தைரியத்துடன் அவளைப் பார்த்து புன்னகைத்தேன்.
அவள் கண்கள் என்னைச் சந்தித்ததும் தலையைக் குனிந்து கொண்டன. அடுத்த சனிக்கிழமை அவளுடன் பேசினேன். அவளை அருகில் பார்த்துப் பேசியபோது அவளின் அபரிதமான அழகு என்னை மிரள வைத்தது நிஜம்.
பெருமாள் கோயிலில் ஆரம்பித்த பார்வைப் பரிமாற்றங்கள் பிறகு நட்புடன் கோயிலுக்கு வெளியிலும் தொடர்ந்தது. நாளடைவில் அந்த நட்பே காதலாக மலர்ந்தது.
எங்களிடம் ஈர்ப்பும் காதலும் தினமும் அதிகரித்தனவே தவிர, எங்களது காதல் திருமணத்தில் முடியும் என்பதில் எங்கள் இருவருக்குமே நம்பிக்கையில்லை. அதை நாங்கள் நன்றாகவே புரிந்து கொண்டிருந்தோம். அந்தப் புரிதலுக்கு ஏராளமான வலுவான காரணங்கள் உண்டு. முதலில் இருவர் வீட்டிலும் எங்கள் காதலை கண்டிப்பாக அங்கீகரிக்க மாட்டார்கள் என்பது ஒன்று.
நான் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவன்; அவள் மத்திய வர்க்கம். அவள் ஐயங்கார் வகுப்பைச் சேர்ந்தவள், நான் ஐயர் என்பதெல்லாம் கூட மிகச் சின்ன விஷயங்கள்தான்… அதற்கும்மேல் எவ்வளவோ வலுவான காரணங்கள். அதைப் பிறிதொரு சமயம் அதற்கான நேரம் வரும்போது சொல்கிறேன்.
நான் ஆர்க்கிடெக்ட் படித்த ஒரு இஞ்ஜினியர். தனியாக தொழில் செய்கிறேன். சென்னையின் பாலவாக்கத்தில் ஈஸிஆர் ரோடில் ஒரு பெரிய ஆர்க்கிடெக்ட் நிறுவனம் வைத்திருக்கிறேன். சென்னை, பெங்களூர் போன்ற பெரிய நகரங்களில் பெரிய பெரிய கமர்ஷியல் கட்டிடங்களை வடிவமைத்து பணத்தையும் புகழையும் ஈட்டியிருக்கிறேன். கையில் ஏராளமாக காசு புரளுகிறது. சொந்த வீடு, சொகுசுக் கார் என பந்தாவாக இருக்கிறேன். பார்ப்பதற்கு மாநிறத்தில் பொசுபொசுவென ஏராளமான மயிருடன் ஒரு பொதிகாளை மாதிரி இருப்பேன். சற்று அசிங்கமாக சொல்வதானால் தீவட்டித் தடியன் மாதிரி எனலாம்.
அவள் ஸி.ஏ படித்திருக்கிறாள். மவுண்ட் ரோடில் இருக்கும் ஒரு பிரபல கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் ஆபீசர். பெற்றோருக்கு அவள் ஒரே செல்லப் பெண். அவளின் வீடு தி.நகரில் அமைந்துள்ளது. வீட்டில் பாவம் அவளுக்கு கெடுபிடிகள் அதிகம். ரொம்பக் கண்ட்ரோல் ஜாஸ்தி. என்னிடம் அதைப்பற்றி அடிக்கடி புலம்புவாள். நான் அவளைச் சமாதானப் படுத்துவேன்.
ஆனால் எங்கள் காதல் மட்டும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்து கொண்டே இருந்தது. நாங்கள் எதைப் பற்றியும் அச்சப்படவில்லை. கை நிறைய சம்பாதிக்கிறோம், அதனால் எது வந்தாலும் எதிர் கொள்ளலாம் என்கிற தைரியம் எங்களுக்குள் அதிகரித்தது. எந்தவித மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்சப் போவதில்லை என்றும் முடிவு செய்து கொண்டோம்.
அது சரி, காதல் என்பது நன்கு யோசித்த பிறகா ஏற்படுகிறது? இல்லையே! பார்த்தவுடனே பற்றிக் கொள்வதுதானே காதல்?
காதலில் ஜாதி, மதம், நிறம், தேசம், வயது, செல்வம், ஏழ்மை, கல்வித் தகுதி என்று எதற்குமே முக்கியத்துவம் கிடையாது என்பது எவ்வளவு உண்மை?
சென்னையில் நாங்கள் சேர்ந்து சுற்றாத இடமே இல்லை எனலாம். குறிப்பாக அவளை அடிக்கடி பாலவாக்கம் பீச்சில் சந்தித்தேன். இருட்டும்வரை நாங்கள் பீச்சில் ஓடிப் பிடித்து விளையாடுவோம். அவளது புடவை முழங்கால் வரை ஈரமாகி விடும். அடிக்கடி காரணமே இல்லாமல் சிரித்துக் கொள்வோம். நிலாவை சேர்ந்து ரசிப்போம்.
நன்கு இருட்டியவுடன் என் காரில் வந்து ஈரப் புடவையுடன் ஏறி அமர்ந்து கொள்வாள். காருக்குள் பீச்சின் அரையிருட்டில் ஏராளமாக சில்மிஷங்கள் செய்து கொள்வோம். அவள் ரொம்ப ரொமான்டிக். எதிர்பாராத விதமாக அடிக்கடி எனக்கு இன்ப அதிர்ச்சிகளைக் கொடுப்பாள்.
அவளிடம் நெருங்கிப் பழக, பழக அவளைப் பற்றி நிறையப் புரிந்து கொண்டேன். அவளுக்கு ரசனை அதிகம். அவள் அணியும் ஆடைகள் எப்போதும் மிக நேர்த்தியாக, எடுப்பாக இருக்கும். எதைச் செய்தாலும் அதை முழு மனதுடன் செய்வாள். கர்நாடக சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவள். அவளின் குரல் இனிமையானது. ஆலாபனையுடன் ராகங்களைப் பாடுவாள். நான் அதை அடிக்கடி ரசித்துக் கேட்டிருக்கிறேன். சென்னையில் பாட்டுக் கச்சேரி எந்த சபாவில் நடந்தாலும் அங்கு தவறாது ஆஜராகி விடுவாள். விஜய் சிவா, சுதா ரகுநாதன் என்றால் அவ்வளவு ஈடுபாடு. நான்கு சமைப்பாள். அவள் விதவிதமாக சமைத்து அவைகளை நான் ருசித்துப் பார்த்ததுண்டு.
இவ்வளவு சிறப்பம்சங்களைக் கொண்டவளை ஏன் என்னால் தைரியமாக மனைவியாக்கிக் கொள்ள முடியவில்லை? காரணம் காலம் காலமாய் நமது சமுதாயத்தில் உள்ள அதீத நம்பிக்கைகளும் அதற்கான கட்டுப்பாடுகளும். அதை உடைத்துக்கொண்டு எங்களால் சேர்ந்து வாழ முடியாது. காதலிக்க மட்டுமே முடியும்.
இவ்வளவு ரசனைகளும், அபரிதமான அழகும் கொண்டவளுக்கு, அப்புண்டு மாதிரி ரசனையே இல்லாத மாநில அரசில் தேமேன்னு வேலை செய்துவிட்டு வீடு திரும்பும் ஒரு ஆத்துக்காரர்! எனக்கு கற்பனை வளமே இல்லாத சிரிப்பு நடிகை ஆர்த்தி மாதிரி ஒரு ஆத்துக்காரி!!
வேறு என்னத்த செய்ய? எங்களால் அவர்களுக்குத் தெரியாமல் காதலிக்க மட்டும்தான் முடியும்…