நேரம் இரவு 11.45 மணி
புதன் கிழமை
2011.10.12
அன்புள்ள டயரி……..இன்றைய தினம் என்னை மிகவும் காயப்படுத்தி விட்டது. நான் எதைச் செய்து இதை மறக்கவென்று தெரியவில்லை. வாழ்க்கை என்றால் இன்னது தான் என்று இன்பத்தை மட்டும் அனுபவித்துக் கொண்டிருக்கும் என்னைப்போன்றவர்களைத் தாண்டியும் நிகழும் சில விடயங்கள் மிக துயரம் சுமப்பவையே…..என் வாழ்நாளில் சில விடயங்களை நினைத்துப் பார்க்கவே முடியாதபடி கஷ்டமாக இருக்கும். இனிமேல் இப்படி யாருக்கும் நடந்து விடக் கூடாது என்ற பரிதாபமும், கவலையும் மேலெழும். வழமையாக 9 மணிக்கெல்லாம் உறக்கம் என்னை அரவணைத்து விடும். ஆனால் இன்று தலையணைக்கடியிலும் போர்வைக்குள்ளும் முகம் புதைத்து தேடித்தேடி அலைந்தும் உறக்கம் என்னை அண்டி விடாதபடி என் மனதை அரட்டிக் கொண்டிருக்கும் விடயம் என்னைப் பொருத்தவரை ஏற்றுக் கொள்ள கடினமானது தான்.
காலையில் பழைய பள்ளித்தோழி வீட்டுக்கு வந்திருந்தாள். ஏதொவொரு எழுத்து ரீதியான உதவி தேடி வந்திருந்தாள். பாடசாலை ஒன்றில் ஆரம்ப வகுப்பு ஆசிரியராக இருக்கும் அவள் கொண்டு வந்த செய்தி தான் என்னை கொஞ்சம் அதிகமாகவே வதைத்துக் கொண்டிருக்கிறது. உயர்தர மாணவிகளின் அன்றாடத் தோழியான அவள் தெரிந்து கொண்ட ஒரு மாணவியின் கதை தான் அது………
அவள் சொன்ன விபரங்கள் எனக்குள் அந்த மாணவி பற்றிய ஒரு விம்பத்தை ஏற்படுத்தியது. இந்தக் காலத்திலும் இப்படியெல்லாம் மனிதர்கள் இருப்பார்களா என்று எண்ணத் தோன்றியது. வழமையாக சந்திக்க வரும் தோழிகளுடன் குறித்த அந்த மாணவி (பெயர் கேட்க வில்லை) சில நாட்களாக வராதது குறித்து விசாரித்த போது அவளது நண்பிகள் சொல்லிய விபரங்கள் அவளையும் அந்த இடத்தில் அமைதியடையச் செய்திருக்கிறது தான். ஆனால் அத்தனை இலகுவில் அவள் அதனை மறந்து விட்டாள். ஒருவேளை அவளுக்கு அது புதிதான விடயமாக இல்லாமல் இருக்கலாம், அல்லது அடுத்த தடவை அந்த(மாணவி) நண்பியை சந்திக்கும் போது பரிதாபத்தை அளித்து அவள் வலிகளை அதிகரிக்கச் செய்து விடுவோமோ என்ற ஐயத்தினால் இருக்கலாம்.
எதுவாக இருந்தாலும் என் கற்பனையில் தோன்றிய அந்தப் பெண்ணை சந்திக்க நேர்ந்திடாமல் இருக்க வேண்டும் என்று இந்த நிமிடம் பிரார்த்திக்கிறேன்.
அன்புள்ள டயரி………….. என் உள்ளத்தை உள்ளபடி பதிவு செய்யும் வெறுமையான காகிதமல்ல நீ, என் துன்பங்களையும் இன்பங்களையும் தாங்கி என்னை ஆறுதலடையச் செய்யும் நானே நீயாக இருக்கிறாய்…………..
‘சில நாட்கள் பாடசாலைக்கு வராத அந்த மாணவியின் உடன் பிறந்தோர் இரண்டு பெண்கள். இருவரும் திருமணமானவர்கள். அவளது இரண்டு மச்சான்களும் உணர்வுகளைக் கொல்லும் உயிர்கொல்லிகள், பாடசாலை வராத அவளை விசாரிக்கவென்று போன் செய்யவோ வீடு செல்லவோ முடியாத அளவில் தடுப்புக்காவல் செய்யும் சிப்பாய்கள், வாசல் பெருக்கிய இடத்தில் கால்தடம் படக்கூடாது என்ற விதிமுறைகளை கையாளும் காவல் துறையினர், வீட்டுப்படி இறங்கவும் அனுமதித்திடாத சிறைக்காவலர்கள். இந்தக் காரணங்கள் போதாதா, அவளைச் சந்திக்க நண்பிகள் வீடு செல்லாமல் இருந்து விட……
அதிஷ்ட வசமாக அவள் பின்னேர வகுப்புக்கு வருகிறாள், உயர் தரமல்லவா…. ஆனால் முச்சக்கர வண்டியில் தான் நிமிடம் தவறாத அவளது வருகையும் போக்கும். பாடத்தில் இருக்கும் போது, இரண்டு மச்சான்களும் நான்கைந்து தடவைகள் அவளை வேவு பார்க்க வந்து விடுவார்களாம். அந்த இரண்டு மோட்டார் வண்டிகளும் ஒன்றன்பின் ஒன்றாக நேரம் பார்த்து வந்து செல்வதை சுட்டிக்காட்டிப் பேசும் அவள், அது தான் தனக்கு விதிக்கப்பட்டது என ஏற்றுக்கொண்டு விட்டாள் போலும். மற்ற மாணவிகள் போல எந்தவித உடையலங்காரமும் இன்றி வெகுசாதாரணமாக வரும் அவளிடம் இல்லாத அலங்காரப் பொருட்களே இல்லை என்றும் கடிகாரத்தில் கூட பல வண்ணங்களில் வைத்திருக்கிறாள் என்றும் அறிந்திருந்தேன். ஆனால் அதில் எதையும் அவள் அணிந்து வர அனுமதி இல்லை. வெளியேறும் போது அவற்றையெல்லாம் வெறுமனே பார்த்து விட்டு வருவது தான் அவள் வழக்கமாம், இவற்றையெல்லாம் பார்க்கும் போதும் தடவும் போதும் பெரும் உஷ்ணக்காற்றுடன் கூடிய பெருமூச்சொன்றை உதித்திருப்பாளோ என்னவோ….
வாழ்க்கை ரீதியில் எந்த சுதந்திரத்தையும் எந்த இன்பத்தையும் அனுபவித்து உணர்ந்திருப்பாளா என்பது மிகுந்த சந்தேகம் தான். அவள் தொடர்பான எந்த விடயமும் அவளது விருப்பமின்றியே நடக்கிறது, எந்தத் தவறையும் அறியாதவளாக இருந்தும் சந்தேகம் கொள்ளப்படுகிறாள். இதற்கு அவர்களின் வீட்டிலுள்ளவர்கள் முன் காரணம் கேட்டு ‘மைக் ஐ நீட்டினால்’ , ‘வருமுன் காக்கிறோம், எச்சரிக்கை செய்கிறோம்’ என்று ஒய்யாரமாக அமர்ந்து பேசிக்கொள்வார்கள் போலும். எந்த நாள் தனக்கு பாடசாலை நாள், எந்த நாள் விடுமுறை நாள் என்று முடிவு செய்பவள் அவளல்ல’.
என்னைப் பொருத்தவரை ‘அவள் ஒரு பூதம்’ அலாவுதீனின் விளக்கிலிருந்து வெளிப்பட்ட பூதம் அவள். அவர்கள் சொல்வது போல் கேட்காவிட்டால் அவளது தலை வெடித்து சுக்குநூறாகி விடும். அவள் எப்போது வெள்யேற வேண்டும், வெளிவரக்கூடாது என்பதை எத்தனை அலாவுதீன்கள் தீர்மானிக்கிறார்கள்…..???
அவளுக்காகவும் சேர்த்து நான் கவலைப்படுவதாகத் தோன்றியது. உண்மைதான், அது அவளுக்கு பழக்கமாகவும் வழக்கமாகவும் ஏன் கடமையாகக்கூட ஆகியிருக்கலாம். நேரம் 12.30 ஐ தாண்டுகிறது…….. தூக்கம் வராவிட்டாலும் கட்டிலில் விழப் போகிறேன்……
நேரம் இரவு 10.00 மணி
செவ்வாய்க்கிழமை
2011.11.2
அன்புள்ள டயரி……. கனநாட்களுக்குப்பிறகு, அன்றன்றைய விடயங்கள் மட்டும் பதியப்பட்டுக் கொண்டிருந்தது தவிர்த்து இன்றைய தினம் என்னால் என்னை கஷ்டப்படுத்துவதற்கென்றே துருவித்துருவி விசாரிக்கப்பட்ட ஒரு விடயத்தை எழுத ஆரம்பிக்கிறேன்.
ஒரு அழகான காலைப் பொழுதில் தூரத்து ஊரொன்றில் திருமணம் செய்திருந்த என் சகோதரி குடும்பத்துடன் வந்து சேர்ந்தாள். விடுமுறைக் காலங்களில் அவள் அவ்வாறு வருவது வழக்கமான ஒன்று. அவளது சுட்டிப்பையன்கள் இரண்டு பேருடன் அவள் கணவரும் அடங்கியிருந்த அவளது குடும்பத்தில் ஐந்தாவதாக ஒரு புது அங்கத்தினருடன் இந்த விடுமுறைக்காக அவள் வந்திருந்தாள். அனேகமான நேரங்களில் அந்தப்புதிய அங்கத்தினரான 14 வயது மதிக்கத்தக்க அந்தப்பெண் என் சகோதரியுடனேயே இருந்ததால் அவள் பற்றி விசாரிக்கும் தருணம் எனக்குக்கிடைக்கவில்லை.
இன்றுடன் என் சகோதரி வந்து இரண்டு தினங்களாகிறது. முகத்தில் ஒரு வித முதிர்ச்சியுடனும், தயக்கத்துடனும் (புது இடம் என்ற) பயத்துடனும் சுட்டிப் பையன்களுடனேயே மிக அவதானமாகத் திரிந்த அவள் மீது எனக்கு இனம் புரியாத ஆர்வம் ஏற்பட்டிருந்தது. அவளையும், அவள் செய்கைகளையும் கவனித்தபடி தான் என் பொழுதுகள் கழிந்தன. அவள் பற்றி அறிய வேண்டும் என்ற எண்ணமே என்னுள் மேலோங்கியிருந்தது. அதற்கான சந்தர்ப்பம் இன்று காலையில் எனக்கு ஏற்பட்டது. நானும் அக்காவும் பேசிக் கொண்டிருந்தோம்…… அந்தப்பெண் என் அக்காவின் பையன்களுடன் முன்வராந்தாவில் இருந்தாள். ‘அக்கா அவளை வேலைக்கு வைத்திருக்கிறாள்’ என்ற என் உள்ளுணர்வை வெளிப்படையாக விசாரித்தேன். ஆனால் அப்படியல்ல, அவளது கதை மிக சோகமானது போல் எனக்குத் தோன்றிற்று.
அக்கா தங்கியிருந்த வீட்டுக்கு நான்கு வீடுகள் தள்ளி அந்தப்பெண் அவளது தந்தையின் சகோதரியுடனும் அவரது கணவனுடனும் வசித்திருந்தாள். வழக்கமான கதைகளில் வரும் எந்தக் கொடுமையும் அவர்கள் மூலம் அந்த அநாதைப் பெண்ணுக்கு இல்லாதது எனக்கு அதிர்ச்சியளித்தது போல் அந்த குடியிருப்பில் இருந்தவர்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. ஆனால் அந்தக்குட்டிப் பெண் இரண்டு வருடங்களுக்கும் மேலாக மனரீதியில் பாதிக்கப் பட்டிருக்கிறாள்.
தன் மாமி நல்லவளாக இருந்தாலும், ‘மாமா’ என்ற உறவுக்குரியவனின் கீழ்த்தரமான செயல் சொல்லி விளக்க முடியாதது.
“உறவினர்களால் தான் அதிகமான சிறுவர்,சிறுமியர்கள் பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகின்றனர்” என்கிறது என்கிறது அண்மைய ஆய்வொன்று. பெற்ற பிள்ளை போல் கருதப்பட வேண்டிய அந்தப் பெண் துன்புருத்தப்பட்டிருக்கிறாள். ‘இது இன்னது தான்’ எனத்தெரியாத அந்த வயதில் அவளுக்கு நிகழ்ந்த இந்த கொடூரம் சகிக்கப்பட முடியாதது. அடிக்கடி அக்காவின் வீட்டுக்கு வந்து செல்லும் அவளுக்கு நேர்ந்த இந்தக்கொடுமை வெளிச்சமாகியபோது அவளை தங்களுடனேயே வைத்துக் கொள்வோம் என நினைத்தார்கள் என் அக்காவும், மச்சானும். அதன்பின்தான் கன நாட்களாக நினைத்திருந்த அவர்களது இடமாற்றமும் நிகழ்ந்திருக்கிறது. இப்போது அந்தப்பெண் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறாள் இருப்பினும் அவள் மனதில் ஒரு வடு இருந்து கொண்டுதான் இருக்கும்.
அன்புள்ள டயரி……. அந்தப்பெண் மீது எனக்கேற்பட்டுள்ள அனுதாபம் மிகையானதல்ல. இன்னும் எத்தனை கேவலமான அவலங்களை இந்த உலகம் தன்னுள் வைத்திருக்கிறதோ என நினைக்கையில் என் மனதை எங்கே புதைப்பதென்ற விரக்தியுடன் இன்றைய தினத்தின் மனப்பதிவை முடிக்கிறேன். இங்கே கழியப்போகும் இந்த ஒரு மாத விடுமுறையை அவள் வாழ்வில் மேலும் இன்பகரமானதொன்றாக மாற்ற வேண்டும் என்ற ஆவல் என்னுள் பூக்கிறது………..
நேரம் இரவு 8.30 மணி
திங்கட்கிழமை
2012.01.02
பழைய நினைவுகளை மீட்டிப்பார்ப்பதென்பது இன்பத்தை அள்ளி இதயத்துள் ஊற்றி விடுவது போன்றது. புதிய வருடமொன்றை வரவேற்ற சந்தோஷம் எல்லோர் முகத்திலும் தெரிந்தது. ‘இந்த வருடத்திலிருந்து வாழ்க்கையை சரியான முறையில் திட்டமிட வேண்டும்’ என்ற முன்மொழிவை எண்ணத்தில் நிறைவேற்றி அதை கவனமாக கடைப்பிடிக்காமல் விடும் அனேக புது வருடங்கள் போல் இது இருந்து விடக்கூடாது எனற எச்சரிக்கை எனக்குள் இருந்தது.
எனது பல இன்பமான பகற்பொழுதுகள் சமயலறையில் இருக்கும் அம்மாவுடன் பேசியபடி கழிவது எனக்கு மிகவும் விருப்பமானது. எங்கள் சுவாரஷ்யமான பேச்சு பல விடயங்களை அலசி ஆராய்ந்தவாறு நீண்டு செல்லும். இன்று காலை அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்த போது அம்மாவின் பழைய நினைவுகள் பற்றி பேசியவாறு பேச்சு நீண்டது. பள்ளிக்காலம், பருவகாலம், ஒவ்வொரு பிள்ளை பிறந்த பின்னரான அனுபவம் என ஒவ்வொரு விடயம் பற்றி பேசிக்கொண்டிருக்கையில் அம்மாவின் தூரத்து உறவுக்காரப்பெண் பற்றிய பேச்சும் எழுந்தது. அவர் அம்மாவுக்கு சகோதரி முறையானவர். மென்மையான சுபாவமுள்ள அவர், குடும்பத்தில் மூத்தபெண். அவரது தங்கையும் அம்மாவும் உறவினர்கள் என்பதையும் தாண்டி நல்ல நண்பர்கள். ஒன்றாகப் படித்தவர்கள்.
நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் என்னவெல்லாம் பேசிக்கொள்வார்கள் என்பது விபரம் சொல்லத் தேவையில்லாத விடயம். அப்போதெல்லாம் அதிகமாக அவர்களது பேச்சு அந்த அக்கா பற்றியதாகவே அமையும். அதன் சாராம்சம் தான் – அவ்வப்போது என் அம்மா மூலம் நான் அறிந்து கொண்டவை.
அவரது கணவர் ஒரு சந்தேகப்பேர்வழி, கோபக்காரர் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். அது எத்தகைய கொடிய சம்பவங்களினால் வெளிப்படும் என்பது பற்றிய அறிவுருத்தல்கள் அறிந்த பின் மனது இலேசாக வலிக்கத்தான் செய்கிறது. அவருக்கு இரண்டாவது கரு உருவான போது ஏற்பட்ட சிறு உபாதையினால் அது தங்காமல் போனது. அது எதனால் என்ற காரணம் அறிந்த ஐந்தாவது நபராக நான் பதிவாகியிருந்தேன். ஏதோவொரு விடயத்துக்காக கைமுஷ்டியால் கர்ப்பிணியின் வயிற்றில் ஓங்கிக்குத்திய அந்தக்கல் நெஞ்சக்காரருக்க மனைவியான அவர் அனுபவித்தது புள்ளிவிபரமிட்டு சொல்லுமளவுக்கு மிக நீண்ட பட்டியல். பெற்ற மகனையே அம்மாவை வேவு பார்க்க வைத்த சந்தேகம் மிக்க கதைகள் ஏராளம். உயிர் நாடிகளையெல்லாம் உலுக்கிப் பார்க்கும் சம்பவங்கள் எண்ணிலடங்காதவை.
அன்புள்ள டயரி…….. எந்தவொரு வார்த்தைகளைக் கொண்டும் விபரிக்க முடியாத வலிகளையும் வேதனைகளையும் தாங்கிய கதை அந்தப் பெண்ணுடையது. ஆனால் என் எழுத்துக்களுக்கும் அத்தனை தைரியம் இல்லை என்பதே உண்மை.
எத்தனையோ தேவதைகள் சிறகொடிந்து கிடப்பதற்கு காரணம் காலமாற்றமோ என நினைத்திருந்தேன். ஆனால் இல்லை……..எல்லாக் காலத்திலும் இது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஏதோவொரு விதத்தில் மனதாலும் உடலாலும் சித்ரவதையை அனுபவிக்கும் எழுதப்பட்ட விதியை ஏற்றுக் கொள்கிறார்கள், அதற்கு இசைந்து கொடுக்கிறார்கள். போராட நினைப்பதுமில்லை, கேள்வி கேட்கத் துணிவுமில்லை. எப்போதும் பெண்கள் ஒரே வேடத்தை தான் அணிந்து கொள்கிறார்கள். மரணம் வரை நரகத்தில் புதைக்கப் படுகிறார்கள், அதற்கு அவர்களே ஏதொவொரு விதத்தில் காரணமாகிறார்கள் என்பது தான் கவலை தரும் விடயம். காலம் மாறினாலும் சில விடயங்கள் மாறுவதுமில்லை, யாரும் மாற்ற நினைப்பதுமில்லை.
அன்புள்ள டயரி……….. யதார்த்தத்தை பதிவு செய்த இந்த நாட்களையும் அது தந்த வலிகளின் ரணங்களையும் இந்தப்புது வருடத்துடன் முற்றுப்புள்ளி வைக்க முனைகிறேன்….. மாற்றம் ஒன்றே மாறாதது.