தோழனா நீ காதலனா?

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 17,112 
 
 

”ரிஷி, அஞ்சாம் தேதி நான் லண்டன் போறேன். நாலு நாள் ஸ்டே இருக்கும். இந்தியாவிலேயே செல்போன் தயாரிக்கிற ஃபேக்டரி ஆரம்பிக்கப் போறேன்னு சொல்லிட்டு இருந்தேன்ல… அதுக்கான ஒப்பந்தத்துல கையெழுத்துப் போடப் போறேன்.”

”கங்கிராட்ஸ் சந்தியா, உன்கூட யாரு வர்றா?”

”யாரும் வரல. அப்பாவுக்கு உடம்பு சரியில்ல. அதனால அம்மாவும் அவர்கூட இருந்தாகணும். இது எங்களுக்கு இயர் எண்ட் சமயம். எல்லாம் ரொம்ப பிஸியா இருக்காங்க. அதனால நான் மட்டும்தான் தனியாப் போறேன்.”

”…………………..”

”ஏன் ரிஷி, நான் தனியாப் போனா என்ன?”

”இல்ல சந்தியா… அதைப்பத்தி ஒண்ணும் இல்ல. டேக் கேர்.”

”ஓ.கே.”

”இப்போ நான் ஒரு குட் நியூஸ் சொல்லட்டுமா? நம்ம காதல் விஷயத்தை அப்பாகிட்ட சொல்லிட்டேன். யோசிச்சுச் சொல் றேன்னு சொல்லியிருக்காரு. அநேகமா அடுத்த வாரம் யெஸ் சொல்லிடுவார். அதுக்கப்புறம் என்ன… உன்னைப் பொண்ணு பார்க்க வரவேண்டியதுதான்; நிச்சயம் பண்ண வேண்டியதுதான்; தாலி கட்ட வேண்டியதுதான்; ஃபர்ஸ்ட் நைட்தான்…”

சில நூறு கோடிகள் வியாபாரம் செய்யும் நிறுவனத்தின் தலைவி சந்தியா வெட்கப்பட்டு முகம் சிவந்ததைப் பார்க்க ரிஷிக்குச் சந்தோஷமாக இருந்தது.

ரிஷியின் கையை மென்மையாகத் தொட்டுத் தூக்கி முத்தம் கொடுத்தாள் சந்தியா.

சந்தியா, தொழிலதிபர் ராமலிங்கத்தின் ஒரே மகள். ஐந்து வருடங்களுக்கு முன் திடீரென்று அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்ததிலிருந்து, கம்பெனியின் நிர்வாகப் பொறுப்புகளை முழுமை யாக ஏற்றுக்கொண்டாள்.

அழகிலும் அந்தஸ்திலும் தனக்கு எந்த வகையிலும் குறை இல்லாத ரிஷியை சந்தியா காதலிக்க ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிறது. அவர்கள் நிறுவனம் சந்தியாவுடையதைப் போலப் பத்து மடங்கு பெரியது. ரிஷியின் தந்தை தொழிலதிபர்களுக்கெல்லாம் சிம்ம சொப்பனமாக இருப்பவர். அவர் இந்தக் காதலை ஏற்றுக் கொள்வாரா என்று சந்தியாவுக்குப் பயம் இருக்கத்தான் செய்தது. ரிஷிக்காக சந்தியா எதையும் செய்யத் தயாராக இருந்தாள்.

சென்னையில் இருந்து கிளம்பிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தின் முதல் டெர்மினலில் இறங்கியபோது, சந்தியாவின் ரோலக்ஸ் கடிகாரம் மணி காலை ஒன்பதரை காட்டியது. அப்போது லண்டன் நேரம் அதிகாலை நான்கு மணி என்று அறிவித்தார்கள்.

குடியுரிமைச் சோதனை முடிந்து, தனது சாமான்கள் இருந்த டிராலியைத் தள்ளிக்கொண்டு வந்தபோது…

”மிஸ்.சந்தியா ரகுராமன், வெல்கம்!”

கம்பீரமான ஆண் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த் தாள் சந்தியா. ஆறடிக்கு மேல் உயரம், அதற்கேற்ற பருமன், கோதுமை நிறம், கருகருவென்று தலை முடி, மழு மழுவென்று சவரம் செய்யப்பட்ட முகம், அரும்பும் புன்னகையுடன் நின்றிருந்தான் அவன்.

”வரவேற்புக்கு நன்றி. ஆனால், நீங்கள் யார் என்று தெரியவில்லையே?”

”நான் ரித்விக். என்னை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. ஆனால், எனக்கு உங்களை நன்றாகத் தெரியும். அவர்கள் எனக்குக் கொடுத்த புகைப் படத்தைவிட நேரில் இன்னும் அழகாக இருக்கிறீர்கள். உங்களுக்குத் துணையாக இருப்பதற்காக, உங்களுடைய கம்பெனி யுடன் வர்த்தகம் வைத்துக்கொள்ளப்போகும் ஃபின்லாண்ட் கம்பெனி என்னை இங்கே அனுப்பியிருக்கிறது.”

”அப்படியென்றால், நீங்கள் அந்தக் கம்பெனியின் ஊழியரா?”

”இல்லை மிஸ்.சந்தியா. நான் லண்டனில் உள்ள ஒரு எஸ்கார்ட் ஏஜென்சியில் மேல் எஸ்கார்ட்டாகப் பணிபுரிகிறேன். உங்களுக்கு உதவி புரிவதற்காக நான் பணியமர்த்தப்பட்டு இருக்கிறேன். நீங்கள் லண்டனில் இருக்கும் நான்கு நாட்களும் நான் உங்கள்கூடவே இருப்பேன். குறித்த காலத்தில், உங்களைக் குறித்த இடங்களுக்கு அழைத்துச் செல்வது, நீங்கள் லண்டனைச் சுற்றிப் பார்க்க விரும்பினால் ஒரு வழிகாட்டியாக, நல்ல துணையாக கூடவே வருவது, முக்கியமாக உங்களைத் தனிமை வாட்டாமல் பார்த்துக்கொள்வது – இதுதான் என் வேலை. பாக்கி விவரங்களை காரில் போகும்போது பேசுவோமா?”

சொல்லியபடி சுவாதீனமாக சந்தியாவின் சாமான் கள் இருந்த டிராலியைத் தள்ள ஆரம்பித்தான் ரித்விக். எனக்குத் தனிமை வாட்டாமல் இவன் பார்த்துக் கொள்ளப் போகிறானா? அதிகப்பிரசங்கி. என்றாலும், எந்தத் துணையும் இல்லாத இந்தக் குளிர்ப் பிரதேசத்தில் விவரம் தெரிந்த உள்ளூர் ஆண் துணை அவசியம்தான் என நினைத்தாள் சந்தியா.

சந்தியா இந்த மாதிரி எஸ்கார்ட் சர்வீஸ் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறாள். குறிப்பாக, நடுவயது ஆண் தொழிலதிபர்கள் தனியாக வெளிநாடு போகும் போது, அழகான இளம்பெண் ஒருத்தி கூடவே இருப்பாள். அவர்கள் போகும் இடத்துக்கு அழைத்துச் செல்வது, அவர்களுக்கு பி.ஏ. மாதிரி செயல்படுவது, தேவைப்பட்டால் படுக்கையைப் பகிர்ந்துகொள்வது உள்பட எல்லாவற்றையும் அந்தப் பெண்கள் செய்வார் கள். அதற்காக எக்கச்சக்கப் பணத்தையும் கறந்துவிடு வார்கள்.

‘இப்போது அதே போல் ஆண் எஸ்கார்ட் டுகள் வந்துவிட்டார்களா? உலகம் முன்னேறித்தான் விட்டது. இப்படி ஓர் அழகான ஆண் உடன் இருக்கும்போது உற்சாகமாகத்தான் இருக்கிறது. ச்சே! என் புத்தி ஏன் இப்படி நினைக்கிறது? ரிஷிக்குத் துரோகமா? நிச்சயமாக இல்லை.’

ஏதோ பாட்டை முணுமுணுத்தபடி வண்டி ஓட்டிக்கொண்டு இருந்த ரித்விக்கைப் பார்த்தாள். இவன் இந்தியன். அதனால்தான் முகம் இவ்வளவு தீர்க்கமாக இருக்கிறது. அகன்ற மார்பையும் கொஞ்சம்கூட தொந்தி இல்லாமல் ஒட்டி இறுகிக்கிடந்த வயிற்றை யும் பார்க்கும்போது, இவன் பஞ்சாபியாகத் தான் இருக்க வேண்டும் என்று ஊகித் தாள்.

முக்கால் மணி நேரம் பயணித்த பின் அவள் தங்க வேண்டிய ஓட்டலை அடைந் தார்கள். ரித்விக் அவளிடம் இருந்து பாஸ்போர்ட், கிரெடிட் கார்ட் உள்ளிட்டவற்றை வாங்கி, சில காகிதங்களையும் பதிவேடுகளையும் நிரப்பி, ரிசப்ஷன் பெண் மணியிடம் ஜோக் சொல்லிச் சிரிக்க வைத்து, சந்தியா தங்குவதற்கான அறையை வாங்கிக் கொடுத்தான்.

அவளது அறை வரை அவனும் வந்தான்.

”உங்கள் அறை வசதியாக இருக்கிறதா, மிஸ் சந்தியா? உங்களுக்கு வேறு ஏதாவது வேண்டுமா?”

”வேறு எதுவும் வேண்டாம். நாம் எப்போது கிளம்பு கிறோம்?”

”காலை பத்து மணிக்கு உங்களுக்கு மீட்டிங். நான் சரியாக ஒன்பதரைக்கு வருகிறேன். அதுவரை நன்றாக ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்.”

”தேங்க்ஸ் ரித்விக்.”

தன் உடைகளை மாற்றிக்கொண்டு படுக்கையில் விழுந்த சந்தியாவால் ரித்விக்கைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. ‘எவ்வளவு நன்றாகப் பேசு கிறான், எவ்வளவு திறமையாகச் செயல்படுகிறான். பார்க்க எவ்வளவு கம்பீரமாக, அழகாக இருக்கிறான். ச்சே, என்ன மனம் இது? என்னதான் இருந்தாலும் ரித்விக் ஒரு எஸ்கார்ட்! அவனது பெண் வாடிக்கை யாளர் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால், ரித்விக் சம்மதிக்கத்தான் வேண்டும். இதுவரை எத்தனை வாடிக்கையாளர்களிடம் உறவு கொண்டானோ, யாருக்குத் தெரியும்! ச்சே, என்ன தொழில் இது… ஆண் விபசாரம்!’

சரியாக 9.25-க்கு ரித்விக் மென்மையாக சந்தியாவின் அறைக் கதவைத் தட்டினான். சந்தியா தனது லேப்டாப் கணினியுடன் அறையைப் பூட்டிக்கொண்டு வெளியே வந்தாள்.

”உங்கள் லேப்டாப்பை நான் தூக்கிக்கொள்கிறேன்” அவள் பதிலுக்குக்கூடக் காத்திருக்காமல் வாங்கிக்கொண்டான்.

காரில் அவர்கள் சென்றபோது, லண்டனை வர்ணித்தபடி வந்தான். அவர்கள் போக வேண்டிய இடம் வந்தது.

”உள்ளே செல்லுங்கள் மிஸ்.சந்தியா, உங்களுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். நான் மாலை ஆறு மணிக்கு உங்களைச் சந்திக்கிறேன். பெஸ்ட் ஆஃப் லக்!”

புன்னகையுடன் நன்றி சொல்லிவிட்டு, உள்ளே சென்றாள் சந்தியா.

மாலை ஐந்தே முக்காலுக்கு சந்தியா வெற்றிக் களைப்பில் வெளியே வந்தபோது, புன்னகையுடன் ரித்விக் காத்திருந்தான்.

”என் வேலை முடிந்துவிட்டது ரித்விக். இரண்டு மூன்று நாட்கள் ஆகும் என்று நினைத்த வேலை இன்றே முடிந்துவிட்டது. எனவே, அடுத்த மூன்று நாட்களுக்கு நான் என்ன செய்வது என்று திட்டமிட வேண்டும்.”

”கவலையை விடுங்கள், சந்தியா. மூன்று நாட்களுக்கு லண்டனையும், சுற்றியுள்ள இடங்களையும் உங்களுக் குக் காட்டுகிறேன். உங்கள் கூடவே இருந்து உங்களைப் பார்த்துக்கொள்கிறேன். சரியா?”

சந்தியாவுக்கு என்ன சொல்வது என்று தெரிய வில்லை. ‘ரித்விக்கைவிடச் சிறந்த வழிகாட்டி கிடைப்பது கஷ்டம். ஆனால், இவனுடன் மூன்று நாட்கள் ஊர் சுற்றுவது என்றால்… நான் நெருப்புதான். எனக்கு என் எல்லைகள் நன்றாகத் தெரியும். ஆனாலும் நான் உப்பு, புளி காரம் சாப்பிடும் சாதாரண மானுடப் பெண்தானே. லண்டனின் உறையவைக்கும் குளிரில் மூன்று நாட்கள் இவன் கூடவே சுற்றினால், என்னையும் மீறி நான் எல்லையைத் தாண்டிவிட்டால்… ச்சே, ச்சே! அப்படி எல்லாம் நடக்காது.’

”ஆல்ரைட்! இப்போது எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. எனவே, ஸ்டிராங்காக ஒரு காபி சாப்பிட்டுவிட்டு நாம் லண்டனைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பலாம். சரிதானே?”

”மிஸ்.சந்தியா, இப்போது லண்டன் நேரம் ஆறு மணி. ஆனால், உங்கள் உடல் இன்னும் இந்திய நேரத் தில்தான் இயங்கிக்கொண்டு இருக்கிறது. இந்திய நேரம் இரவு பதினொன்றரை மணி ஆகிறது. அதனால் உங்க ளுக்கு ஓய்வு தேவை. நீங்கள் உங்கள் அறைக்குச் சென்று நன்றாக ஓய்வெடுங்கள். காலை எட்டரை மணிக்கு நான் உங்களைச் சந்திக்கிறேன்.”

”எட்டு மணிக்கே வந்துவிடுங்களேன், ரித்விக். காலை உணவு உங்களுக்கு என்னுடன்தான்.”

”நன்றி மிஸ் சந்தியா. நிச்சயம் வருகிறேன்.”

மறுநாள் காலை, அறைக் கதவைத் தட்டிய ரித்விக்கைப் பார்த்து அசந்துபோனாள் சந்தியா. முதல் நாள் கோட் சூட் என்று பதவிசாக வந்தவன், அன்று ஜீன்ஸ் பேன்ட் ஸ்வெட்டருடன் இன்னும் அழகாக வந்திருந்தான்.

எப்போதும் போல் லண்டனில் விட்டுவிட்டு மழை பெய்துகொண்டு இருந்தது. ”லண்டனில் எப்போது மழை வரும், எப்போது வெயில் அடிக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. ‘லண்டனின் சீதோஷ்ண நிலையைப் போல’ என்ற சொலவடையே இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.”

ட்ராஃபால்கர் சதுக்கம், பிக்காடல்லி சதுக்கம், ஹைட் பார்க், லண்டன் பாலம், பக்கிங்ஹாம் அரண்மனை, விண்ட்சர் அரண்மணை, மெழுகுப் பொம்மை அருங்காட்சியகம் என்று அவர்கள் சுற்றினார்கள். ஒவ்வொரு இடத்திலும் அதன் வரலாற்றுப் பெருமை, அதன் தற்போதைய நிலைமை என்று சுவையான விவரங்களுடன் ரித்விக் விளக்கினான்.

”சந்தியா, இது வழக்கமாக எல்லா சுற்றுலாப் பயணிகளும் பார்க்கும் இடங்கள். நாளை பாருங்கள், வித்தியாசமான இடங்களைக் காட்டுகிறேன்.”

மறுநாள், உலகில் ஜனநாயகக் குடியுரிமைக்கு வித்திட்ட மேக்ன கார்ட்டா கையெழுத்திடப்பட்ட இடத்தைக் காட்டி, அதன் மகத்துவத்தை விளக்கினான். பின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக வளாகத்துள் அவளை அழைத்துச் சென்று, பல நூற்றாண்டுகளைக் கடந்த அந்தக் கலாசார, கல்விச் சின்னத்தின் பெருமை களைப் பட்டியலிட்டான். சந்தியாவுக்கு ஏற்பட்ட பிரமிப்பு அடங்கவே இல்லை. இவ்வளவு அழகான, அறிவுள்ள, மென்மையாக நடந்துகொள்ளும் ஒருவனை இப்போதுதான் சந்திப்பதாக நினைத்தாள். ‘ஒருவேளை ரிஷியைப் பார்ப்பதற்கு முன்னால் இந்த லண்டன் விஜயம் ஏற்பட்டிருந்தால், ரிஷியின் இடத்தில் இந்த ரித்விக்… ச்சே, இந்த ரித்விக் போயும் போயும் ஓர் ஆண் விபசாரி, இவனையும் என் ரிஷியையும் ஒரே மூச்சில் நினைப்பதே நான் ரிஷிக்குச் செய்யும் துரோ கம்’ என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டாள்.

அதே எண்ணத்தில், அடுத்த இரண்டு நாட்களும் அவனிடம் சற்றுக் கடுமையாகவே நடந்துகொண்டாள். எடுத்ததற்கெல்லாம் எரிந்து விழுந்தாள். அவன் வர லாற்று விவரங்கள் சொல்ல வந்தால், ‘நான் மாணவியும் இல்லை, நீ என் ஆசிரியனும் இல்லை. இந்த அதிகப் பிரசங்கித்தனத்தை நிறுத்து’ என்று சீறினாள். ‘அங்கி ருக்கும் என் பையை எடுத்து வா’, ‘அந்தக் கடையில் ஒரு கோக் வாங்கி வா’ என்று சிறு சிறு வேலைகளாக அதிகாரத்துடன் ஏவினாள்.

ரித்விக் எல்லாவற்றையும் முகம் சுளிக்காமல் மென் சிரிப்புடன் தாங்கிக்கொண்டான். அடம்பிடிக்கும் சிறு பெண்ணைப் போல அவளை நடத்தினான். ‘இவனை இப்படிக் கேவலமாக நடத்தினாலும், சிரித்து மழுப் பிக்கொண்டு இருக்கிறானே, அதில் இருந்தே தெரிகி றதே இவன் ஒரு விபசாரி என்று’ இந்த நினைப்பு வந்ததும் அவளது எரிச்சல் இன்னும் அதிகமாகியது.

”என்ன பேசி என்ன, நீ பார்ப்பது எஸ்கார்ட் வேலைதானே?” என்று சீறினாள் ஒரு கட்டத்தில்.

”ஆம் மிஸ்.சந்தியா. ஆனால், நான் என் வேலையைக் காதலிக்கிறேன். இந்த வேலையில் பல பெண்களைச் சந்தித்திருக்கிறேன். பல பெண்களுடன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க உறவுகொண்டு இருக்கிறேன். ஆனால், இதுவரை நீங்கள் உள்பட எந்தப் பெண்ணையும் காதலிக்கவில்லை; காதலிக்க வேண்டும் என்று தோன்றவும் இல்லை.”

சந்தியா கிளம்பும் நாள். அவளை ஹீத்ரோ விமான நிலையத்தில் இறக்கிவிட்டு விடைபெறத் தயாரானான் ரித்விக். இரண்டு நூறு பவுண்டு நோட்டுக்களை – இந்திய மதிப்பில் ஏறக்குறைய 16 ஆயிரம் ரூபாய் – அவன் கையில் திணித்து மழுப்பலாக நன்றி சொன்னாள்.

”இவ்வளவு தாரளமாக டிப்ஸ் கொடுத்ததற்கு நன்றி! இனிமேல் நாம் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளப் போவதில்லை. உங்களைப் பற்றிச் சிலவற்றைச் சொல் வதற்கான உரிமையைக் கொடுப்பீர்களா?”

கேள்விக்குறியுடன் தலையசைத்தாள்.

”மிஸ்.சந்தியா, நீங்கள் இந்தியாவில் யாரையோ காதலிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அதே சமயத் தில் இந்த நான்கு நாட்களில் நானும் உங்களை வெகு வாக ஈர்த்திருக்கிறேன். இதே சூழ்நிலையில் ஒரு பிரெஞ்சுப் பெண்ணோ, ஜெர்மன் பெண்ணோ இருந் திருந்தால், என்னிடம் ஒரு முறை உறவு வைத்துக் கொண்டு, அதன் பின் என்னை அடியோடு மறந்து விட்டுத் தன் காதலனிடம் போயிருப்பாள். உங்களால் அப்படிச் செய்ய முடியவில்லை. அந்த இயலாமை உங்கள் மனதை எவ்வளவு வதைத்திருக்கிறது என்று நேற்றும் இன்றும் நீங்கள் நடந்துகொண்ட முறை யிலேயே நான் தெரிந்துகொண்டேன். தேவையில்லாமல் எரிந்து விழுந்தீர்கள்; கோபப்பட்டீர்கள். ஏன் இப்படி உங்களை நீங்களே ரணப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். மிஸ்.சந்தியா, உங்கள் பயணம் இனிதாக அமையட்டும். உங்கள் காதல் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!”

ரித்விக் கம்பீரமாக நடந்து போய்க்கொண்டு இருந்த தைப் பார்த்துக்கொண்டே இருந்தாள் சந்தியா. பின் அதீத தொய்வுடன் விமான நிலையத்துக்குள் நடக்க ஆரம்பித்தாள்.

– 27-05-09

1 thought on “தோழனா நீ காதலனா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *