இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் இளம் பரிதியும் தேன் மொழியும் செங்கந்தன் கந்தையின் (செங்கடகல) அடுத்தடுத்த வீடுகளில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் அடுத்தடுத்த வீடுகளில் வாழ்ந்து வந்தாலும் இரண்டு வீடுகளும் உயர்ந்த கெட்டியான செங்கற் சுவர்களால் சுற்றுச் சுவர் கட்டி பிரிக்கப்பட்டிருந்தன. இளம்பரிதி உலகெங்கும் வியக்கும் கட்டிளங்காளையாவான். தேன் மொழி அழகுக்கே அரசியான யுவதியாவாள். அவர்கள் இருவரும் அயல் அயல் வீடுகளில் வசித்த படியால் ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்து கொண்டிருந்தனர். எனவே விரைவிலேயே காதல் வசப்பட்டு விட்டனர்.
அவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பினர். எனினும் அதற்கு அவர்களின் பெற்றோர் தடை விதித்து விட்டனர். அவர்களின் காதலை யாராலும் தடை செய்ய முடியவில்லை. அது முன்னெப்போதும் இல்லாத படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது. அவர்கள் மனங்களின் இரகசிய காதலுக்கு உதவி புரிய யாரும் இருக்கவில்லை என்றாலும் அவர்கள் சைகைகளாலும் தலையசைப்புக்களாலும் கண்களின் பாசையாலும் மட்டுமே பேசிக் கொண்டனர். அவர்களின் உணர்வுகளைத் தடுக்கத் தடுக்க உள்ளுணர்வுகள் மேலும் மேலும் பீறிட்டு எழுந்ததால் எந்த சக்தியாலும் அவர்களைப் பிரிக்க முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர்.
அவர்கள் வீட்டைச்சுற்றி இறுக்கமான தடித்த சுவர்கள் கட்டப்பட்டிருந்த போதும் பின்புறத்தில் ஓரிடத்தில் சுவரில் ஒரு சிறு இடைவெளி அடைக்கப்படாமல் விடப்பட்டிருந்தது. இந்த இடைவெளி நீண்ட காலமாக அவ்விடத்தில் இருந்து வந்த போதும் அதனை யாரும் கவனித்திருக்கவில்லை. ஆனால் காதல் உறவைத் தேடிய அவ்விரு காதல் பறவைகளுக்கும் அந்த சிறு இடைவெளி பெரும் பாலமாகத் தெரிந்தது. அவர்கள் யாருக்கும் தெரியாமல் அவ்விடைவெளியூடாக காதல் மொழிகளைப் பேசிக் கொண்டனர். கனவுகளை ஒருவருக்கொருவர் கூறிக் கொண்டனர்.
அந்த சுவர் அவர்கள் காதல் உறவுக்கு புஷ்பக விமானமாக இருந்து தாலாட்டியது. சில நேரம் அவர்கள் அந்த சுவரை கோபித்துக் கொண்டனர். இன்னுங்கொஞ்சம் இடைவெளி விட்டிருந்தால் தாம் ஒருவரை ஒருவர் ஸ்பரிசித்துக்கொள்ளலாமே என்று அங்கலாய்த்தனர். ஒரு புறம் இளம்பரிதியும் மறுபுறம் தேன்மொழியும் அந்த சுவற்றில் ஒட்டி உரசி அந்த ஓட்டைக்கூடாக பேசிக் கொள்ளும் போது அவர்கள் மூச்சுக்காற்றுகள் அவர்கள் உதடுகளில் பட்டுத்தெறிக்கும். அப்போது அவர்கள் தம் இருவருக்கிடையில் பெருந்தடையாக இருந்த அச்சுவரை ராட்சசி என சபித்தனர். ஆனால் அந்தச்சுவரிடம் தாம் அதிகமாக எதிர்பார்த்தது சுவரே நீ விலகிக்கொள் என்று கேட்பது பேராசை என்று நினைத்தனர். இருந்தாலும் இன்னும் கொஞ்சம் விலகியிருந்தால் தாம் முத்தங்களையாவது பரிமாறிக் கொள்ளலாமே என்று ஆதங்கப்பட்டனர். ஆனால் உண்மையில் அந்த சுவருக்கு அவர்கள் பெரிதும் நன்றியுடையவர்களாக இருந்தனர். அந்தச் சுவரால் தானே தாம் காதல் மொழிகளை பேசிக் கொள்ள முடிகிறது என்று மகிழ்ந்தனர்.
இப்படி அந்த சுவருக்கருகில் அந்த இடைவெளியூடாக மணிக்கணக்கில் அவர்கள் பேசிக் கொள்வார்கள். பின்பு இரவு நெருங்கியதும் பிரிய மனமின்றி பிரிந்து செல்வார்கள். அவர்கள் பிரிந்து செல்லும் போது இறுதியாக ஒருவருக்கொருவர் முத்தமிடுவதாக நினைத்து அந்த சுவரில் தம் உதடுகளைப் பதித்துக் கொள்வர்.
இப்படி சந்திக்காமல் சந்தித்துப் பேசிப் பேசி அலுத்துப் போய் விட்ட அவர்கள், ஒரு நாள் சூரியன் மறைந்த பின்பு இரவு வந்ததும் வெண்நிலாவின் அரவணைப்பில் வீட்டுக்கு வெளியில் சந்திக்க நினைத்தனர். இதற்கென ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த சிற்றோடைக்கரையைத் தேர்ந்தெடுத்தனர். அந்த ஓடைக்கரையில் யாரோ, எப்போதோ நட்டு வைத்த கொடி மல்லிகை பெரும் புதராக வளர்ந்து விசாலமான பந்தலாக விசாலித்திருந்தது. இந்த பந்தலுக்குள் யார் இருந்தாலும் வெளியில் தெரியாதபடி கொடி அடர்ந்து பரந்திருந்தது. தாம் சந்திப்பதற்கு இதுவே பொருத்தமான இடம் என அவர்கள் தீர்மானித்தனர். அன்றைய பகல் பொழுது அவர்களுக்கு மிக நீண்டதாக இருந்தது. இறுதியில் பகலவன் மெல்ல நீங்கி இரவுச் சாமத்தின் கதவுகளுக்கு அப்பால் ஒளிந்து கொண்டு விட்டான்.
இரவானதும் ஊரடங்கிய வேளையில் தேன்மொழி வீட்டின் பின் கதவு வழியாக மெல்ல வெளியேறிச் சென்றாள். நடந்து வந்த பாதையில் யாரும் அவளை பார்க்கா விட்டாலும் கூட தன்னை யார் பார்த்தாலும் அடையாளம் தெரியாதவாறு வெண்பட்டு சால்வை கொண்டு முக்காடு போட்டுக் கொண்டாள். அவள் விரைந்து நடந்து வந்து அவர்கள் திட்டமிட்டிருந்த படி ஓடைக்கரையோரம் விரிந்து பரந்திருந்த மல்லிகைப் பந்தலுக்குள் நுழைந்து அங்கிருந்த திட்டியில் அமர்ந்து கொண்டாள். அந்த நள்ளிரவில் அவள் அப்படிச் செய்வதற்கு அவள் கொஞ்சமும் அச்சம் கொள்ளவில்லை. இளம் பரிதியின் மேல் அவள் கொண்டிருந்த சொல்லவொண்ணாக் காதல் அவளுக்கு மிகுந்த துணிச்சலைக் கொடுத்திருந்தது.
அவள் அங்கு வந்த சில நொடிகளில் பந்தலுக்கு வெளியில் இலையுதிர்ந்து காய்ந்த சருகுகள் மிதிபடும் ஓசை கேட்டது. அவள் தன் காதலன் வந்து விட்டானோ என்று ஆவலுடன் வெளியில் எட்டிப்பார்த்தாள். அங்கே சற்று தூரத்தில் அவளுக்கு பேரச்சம் ஏற்படுத்தும் விதத்தில் ஒரு சிங்கம் நடந்து வந்து கொண்டிருந்தது. அதன் வாயில் ஆட்டையோ மாட்டையோ கடித்துத் தின்றதால் செங்குருதி வடிந்து கொண்டிருந்தமையை அந்த பால் நிலவில் அவள் தெளிவாகப் பார்த்தாள். அச்சத்தால் அவளுக்கு தன் குருதியும் உறைந்து விடும் போல் தோன்றியது. அவள் பயத்தால் நடு நடுங்கி விரைந்தோடி அருகிலிருந்த இருளான குகை ஒன்றுக்குள் ஒளிந்து கொண்டாள். அவள் விரைந்தோடும் போது தான் போர்த்தியிருந்த வெண்பட்டுச் சால்வை கழுத்திலிருந்து விழுந்து போய் விட்டதை கவனிக்கவில்லை.
நன்கு கொழுத்து வளர்ந்திருந்த அந்த கொடூரத்தோற்றம் கொண்ட சிங்கம் மாமிசத்தை வயிறு நிறைய தின்றதால் ஏற்பட்ட தாகத்தை தீர்த்துக் கொள்ள நேராக ஓடைக்குச் சென்றது. அங்கே நீரைக் குடித்த பின் காட்டுக்குத் திரும்பும் வழியில் மல்லிகைப்பந்தல் அருகே தேன்மொழியின் வெண்பட்டுச் சால்வையைக் கண்டது. அதில் இருந்த மனித வாடையை நுகர்ந்த அச்சிங்கம் வெறியுடன் அச்சால்வையை தன் நகங்களாலும் பல்லாலும் நார் நாராகக் கிழித்துத் துண்டாக்கியது. சிங்கத்தின் வாயிலும் தாடையிலும் காணப்பட்ட இரத்தம் வெண் பட்டாடையில் தோய்ந்து அதனை சிவப்பாக்கியது.
சிறிது நேரத்தில் இளம்பரிதி அங்கு வந்து சேர்ந்தான்.மல்லிகைப் பந்தலை அண்மிய போது அங்கே மணற்தரையில் கொடுஞ்சிங்கத்தின் வலிய பாதத்தின் அடிச்சுவடுகளைக் கண்டான். அவன் நெஞ்சில் நடுக்கம் ஏற்பட்டது. முகம் வெளிறிப் போய் விட்டது. உடம்பின் இரத்த நாளங்கள் அனைத்தும் செயலற்றுப்போய் விட்டன. இரத்தம் தோய்ந்த தேன்மொழியின் வெண் பட்டாடைச் சால்வையை இனம் காண அவனுக்கு நீண்ட நேரம் தேவைப்படவில்லை.
“”ஐயோ! நானே என் அன்பரசியின் சாவுக்கு காரணமாக இருந்து விட்டேனே” என்று அலறினான் பிதற்றினான். “”எம் அருங்காதல் இப்படியா முடிவுற வேண்டும். உன்னை இந்த ஆபத்தான இடத்துக்கு நள்ளிரவு நேரத்தில் வரச் சொன்னது எவ்வளவு பெரிய தவறு. வரச் சொன்ன நான் அல்லவா முதலில் வந்திருக்க வேண்டும். அப்போது என்னையல்லவா அந்த கொடுஞ்சிங்கம் கொன்றிருக்கும். நீ நீண்ட காலம் வாழ்ந்திருப்பாயே நம் காதலுக்காக நான் என்னுயிரை ஈந்திருப்பேனே! ஓ இந்த காட்டில் வாழும் கொடுஞ்சிங்கங்களே! வாருங்கள் என்னுடலையும் குதறியெறியுங்கள் என்னுயிர் என் காதலி இருக்குமிடம் போய் விடட்டும். ஆனால் கோழைகள் அல்லவா மரணத்தை தீர்வாகக் கேட்பார்கள் நான் என்ன செய்வேன்” என அவன் பைத்தியக்காரன் போல் அரற்றினான்.
பின்னர் அவன் இரத்தம் தோய்ந்த தேன்மொழியின் அந்த வெண்பட்டு சால்வையை மிகுந்த கவனமுடன் பட்டுப்போல் எடுத்தான். அதனை தன் தோளில் போட்டு தழுவிக் கொண்டான். கையால் தடவி முத்தங்கள் பொழிந்தான். பின் அவன் அந்த சால்வையைப் பார்த்துக்கூறினான் “”நீ என் காதலியின் இரத்ததைக் குடித்தது போல் என் இரத்தத்தையும் குடித்து விடு” அவன் தன் இடையில் கட்டி இருந்த உடை வாளை உருவியெடுத்தான். அதனை தன் நெஞ்சுக்கு நேரே உயர்த்தி வலுவுடன் நெஞ்சை ஊடுருவச் செருகி பின் மீண்டும் இதே வேகத்தில் வாளை உருவி எடுத்து அப்பால் எறிந்தான். அடுத்த கணத்தில் அவன் மல்லாந்தபடி வெற்றுடம்பாய் நிலத்தில் வீழ்ந்தான். அவன் உயிர் அவனைவிட்டு பிரிந்து விட்டது. அவன் நெஞ்சில் ஏற்பட்ட துளையில் இருந்து பீறிட்ட இரத்தம் உயர வீசி விசிறியடித்தது. சுற்றுப்புறம் எங்கும் சிவப்பானது. மல்லிகைப்பந்தலில் வெண்மையாகப்பூத்திருந்த பூக்களும் சிவப்பு நிறமாயின. மல்லிகைச் செடியின் வேர்களும் அவன் இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டன.
இருண்ட குகைக்குள் அச்சம் மேலிட ஒளிந்து கொண்டிருந்த தேன்மொழிக்கு இப்போது மற்றுமொரு பயம் தோன்றியது. தன்னைத் தேடி வரும் தன் காதலன் சிங்கத்திடம் சிக்கி விட்டால்! அவனை எப்படி எச்சரிப்பது என்று நினைத்தாள். உடனே அங்கிருந்து வெளியேறி தான் அந்த பேராபத்தில் இருந்து எவ்வாறு தப்பினேன் என்று கூறி அவன் தோளில் சாய்ந்து ஆறுதல் தேட வேண்டும் என்று ஆவல் கொண்டாள். அவள் மெதுவாக மல்லிகைப்பந்தல் இருக்கும் இடத்துக்கு வந்தாள்.
அங்கே சூழ்நிலையில் ஏற்பட்டிருந்த மாற்றத்தை கண்டு துணுக்குற்றாள். அந்த மல்லிகைப்பந்தலை அவள் சிறு பருவம் முதல் நன்கறிவாள். அது எப்போ பார்த்தாலும் வெண் குடை விரித்திருப்பது போல் அடர்ந்து பரந்திருக்கும். இப்போது என்ன சிவப்பாக நிறம் மாறி இருக்கிறதே? ஒரு கணம் இடம்மாறி வந்து விட்டேனோ என்று சந்தேகம் கொண்டாள். அவள் சுற்றும் முற்றும் பார்த்த போது ஒரு மனிதனின் உடல் கீழே வீழ்ந்து கிடப்பதை நிலவொளியில் கண்டாள். அவள் மனம் பதைத்தது. அவள் கால்கள் இரண்டடிகள் பின் நோக்கி நகர்ந்தன. அவள் முகம் வெளுத்தாள். கண்கள் இருண்டன. பின் நோக்கிச் செருகி இருண்டன. அங்கே வெற்றுடலாய் வீழ்ந்து கிடப்பவன் தன் காதலனே என்பதை புரிந்து கொள்ள அவளுக்கு கன நேரம் பிடிக்கவில்லை. அவள் பேதை மனம் அப்படியே துவண்டு போய் விட்டது.
“”அன்பே! எந்த சக்தி உன்னை என்னிடம் இருந்து பிரித்தது? நீ எழுந்து வர மாட்டாயா? எழுந்திரு என் அன்பே! எழுந்திரு! நான் உன் அன்பான தேன்மொழி அழைக்கிறேன். உன் மூடிய கண்களை திறந்து ஒரு முறை பார்க்க மாட்டாயா?” அவள் ஏக்கத்துடன் பிதற்றினாள்.
தேன்மொழி மண்டியிட்டு அவனுடலைத் தழுவிக் கொண்டாள். அவள் வடித்த கண்ணீர் அவன் காயத்தை கழுவியது. அவள் அவன் கன்னங்களில் முத்தமிட்டாள். அவன் தன் நெஞ்சுடன் அவளின் பட்டுச் சால்வையை அணைத்துக் கொண்டிருப்பதை கண்ணுற்றாள். அவனது இடை வாள் அதன் உறையில் இல்லாததையும் கண்ணுற்றாள். இப்போது அவளுக்கு எல்லாம் புரிந்தது. எப்படி இளம்பரிதி தன் உயிரை மாய்த்துக் கொண்டான் என்பதும் தெரிந்தது. அவள் மீது அவன் கொண்ட மேலான காதலே அவனுக்கு எமனாக வந்து விட்டது.
என் மீது கொண்ட காதல் உன் உயிரைத் துறக்குமளவுக்கு சக்தியைத் தருமானால் அதே காதல் எனக்கும் அதே சக்தியை கொடுக்கட்டும் நானும் உன்னுடனேயே வந்து விடுகிறேன். நான் தான் உன் சாவுக்கு காரணமாக இருந்து விட்டேன் என்று மக்கள் தூற்றக்கூடாது நாம் சாவிலும் இணை பிரியாதிருந்துள்ளோம் என்று அவர்கள் கருதட்டும் நாம் ஒருவேளை ஒன்று சேர்ந்திருந்தால் சாவுக்கு மட்டுமே நம்மை பிரிக்கும் சக்தி இருந்திருக்கும். ஆனால் இப்போது அந்தச் சாவால் கூட நம்மைப் பிரிக்க முடியாது என்ற நிலை தோன்றி விட்டது. எங்களை பிரித்து வைக்கப்பார்த்த மகிழ்ச்சியற்ற உன் பெற்றோருக்கும் என் பெற்றோருக்கும் ஒன்று சொல்கிறேன். நாங்கள் மரணத்தில் ஒன்று சேர்ந்து விட்டோம் என்பதை உங்களால் மறுக்க முடியாது. அதே போல் எங்கள் உடல்களையும் பிரித்து விடாதீர்கள். அவை ஒரு கல்லறையில் உறங்கட்டும். இந்த மல்லிகைப்பந்தலில் வெண்மையாகப்பூத்திருந்த மல்லிகை மலர்கள் எங்கள் இரத்தத்தில் இனி சிவப்பாக பூக்கட்டும் அவை என்றென்றும் எங்களை உங்களுக்கு ஞாபகப்படுத்தட்டும்.
அவள் இதைக்கூறி விட்டு இளம் பரிதியின் இரத்தம் தோய்ந்திருந்த அந்த கூரான வாளை தன் மார்புக்குக்கீழே பொருத்தினாள். பின் வாளின் பின்புறம் நிலத்தில் ஊன்றும் படி அதன் மீது வீழ்ந்து வாளை நெஞ்சில் ஊடுருவச் செய்தாள். அவளது உயிரற்ற உடல் இளம்பரிதியின் உடலுக்கு இடப்புறமாக வீழ்ந்தது.
தேன்மொழியின் இறுதிப் பிரார்த்தனைகள் உலகத்தோர் மனதைத் தொட்டது. அவர்களின் பெற்றோர்களும் மனமிளகி வருந்தினர். இப்போதும் கண்டிக்கருகாமையில் செங்கந்தன் கந்தை என்ற இடத்தில் அந்த ஓடைக்கருகாமையில் இருக்கும் அந்த மல்லிகைக் கொடியில் சிவப்பு நிறப்பூக்களே பூக்கின்றன. அங்கே அவர்களுக்கு ஒரு கல்லறையும் காணப்படுகின்றது.
Nice story ……