(1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வரட்சி நிறைந்த சுழல் காற்று, தனக்கு எதிர்ப் பட்ட எல்லாப் பொருள்களையுமே வாரி இறைத்து நர்த் தனமாடியது. இந்த அண்டசராசரம் அனைத்தும் அதைப் படைத்த ஆண்டவனுக்கு முன் தூள், தூள் என்பது போல! கண்ணுக்கு எட்டிய தூரம் முழு வதும் ஒரே மணல் வெளி. பொட்டல் நிலம், ஈரப் பசுமை அற்ற தோற்றம், இரக்கமில்லாதவர்களின் இதயத்தைப் போல, மழையே காணாததால் நீர்வள மற்றுக் காய்ந்து கிடக்கும் சிறுச் சிறு குளம், குட்டை கள். பார்ப்பதற்குக் கொஞ்சமும் இரசனையற்ற காட்சி கள், ஆறுமுகம் வாத்தியார் விரித்த குடையுடன் வெயிலைப் பொருட்படுத்தாது ‘விறுவிறென்’று நடந்து கொண்டிருந்தார். அவர் மனதில்எத்தனையோ எண்ணங்கள்! இந்தப்பரந்த உலகிலே தாம் ஒரு தனிக்கட்டையாக வாழ வேண்டி வந்த துர்ப்பாக்கிய நிலை பற்றி, மாங்கலியத்துடன் பிள்ளை குட்டிகளுடன் வாழக்கொடுத்து வைக்காத நிலை வந்ததே என்று, காதல், காதல் என்று தவிக்கிற உலகிலே காதலிக்க ஒருவருமில்லாத கதி நேர்ந்ததே என்ற நெஞ்சேக்கத்துடன், அவர் உள்ளத்தின் உளைச்சல் அதிகரித்துக் கொண் டிருந்தது. சுடுமணலில் அவர் நடையும் வேகமாகிக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் ஆறுமுகம் வாத்தி யார் என்ன முற்றும் துறந்த முனிவரோ என்றால் இல்லவே இல்லை. அவருடைய சகாக்கள் என்ன நினைவுடன் அவரைத் ‘துறவி’ என்றழைக்கிறார்களோ தெரியாது. ஆனால் ஆறுமுகம் வாத்தியாருக்கு வாழ் வைச் சுவைக்க வேண்டும். மனைவி மக்களுடன் மகிழ்ச் சியாக வாழவேண்டும் என்ற ஆவல் – ஆசை மட்டும் அதிகம் என்பது முழு உண்மை. ஆனால் அப்படி அவரால் வாழ முடியவில்லை! வேண்டாத பட்டமாக அவர் கருதினாலும், அவரைத் ‘துறவி’ என்றழைப்பதிலே அவரையறிந்தவர்கள் ஏதோ மகிழ்ச்சியடை யத்தான் செய்தார்கள்! என்ன செய்வது, இதுதான் வாழ்வோ…? அவர் நடந்து கொண்டே இருந்தார்.!
பாடசாலை ஆரம்பமணி அடித்ததும் பிள்ளைகள் எல்லோரும் ஒருங்கே எழுந்து நிற்பார்கள். ஆறு முகம் வாத்தியார் ‘தேவாரம்’ பாடச் சொல்லிப் பள் ளியை ஆரம்பித்துவைப்பார். பின்னர் பிள்ளைகள் தத் தம் வகுப்புகளுக்குச் சென்று அமர்வார்கள். பாடங் கள் நடைபெறும். இத்தனைக்கும் அது பெரிய பாட சாலையல்ல! மொத்தம் தொண்ணூற்றாறு பிள்ளைகளும் நான்கு ஆசிரியர்களும் கொண்ட கல்விக்கூடம் அது! மழை பெய்தால் வகுப்பே நடைபெறமுடியாது. அத னாற்றான் அந்தப் பகுதியில் ம ழையே பெய்வதில்லையோ என்று கூட ஆறுமுகம் வாத்தியார் சில தடவைகள் சந்தே கித்திருக்கிறார். வீசுங்காற்றினால் அள்ளுப்பட்டு வரும் தூசியும், மணலும் பாடசாலை ஆசிரியர், மாணவர்க ளின் சுவாசக் குழல்களைத்தடவி நம் நாட்டு அரசாங்க சுகாதாரப் பகுதிக்கே பெரிய சவால் விடுத்துத்தான் செல்லும்! இந்த அழகில் ஆறுமுகம் அந்தப்பாட சாலைத் தலைமையாசிரியராக வந்து இரண்டு வருடங் களை ஒருவாறு நகர்த்திவிட்டார். எப்பொழுது மாற்றம் வருமோ என்று அவர் மனது எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணிக்கொண்டிருந்தது. ஆனால், அவர் ஆசைப்பட்டுக்கொண்டிருக்கும் அந்த ‘மாற்றம்’ மாத் திரம் அவரையணுக அஞ்சியது! ஆறுமுகம் வாத்தி யாரும் இப்பொழுது ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பண்டைத் தமிழன் பண்பாட்டைப் பின்பற்றி மாற்றத்தைப்பற்றி அவ்வளவாகச் சிந்திப்பதில்லை. காலம் ஒரு மாதிரியாக நகர்ந்து கொண்டிருந்தது. அவர் மன உளைச்சலும் அதிகரித்துக் கொண்டுதானி ருந்தது. ஆறுமுகம் வாத்தியாரைப் பற்றி அவருடைய சக ஆசிரியர்கள் அவ்வளவு சிரத்தை காட்டுவதில்லை. காரணம் ஆறுமுகம் வாத்தியார் விரும்பியோ விரும் பாமலோ துறவி’யாகிவிட்டார்! ஒருவரோடும் நன்கு மனம் விட்டுப் பழகுவதுமில்லை! பேசுவதுமில்லை. தானுந் தன் பாடுமாக இருந்துகொள்வார். இதைக் காரணமாகக் கொண்டு அவர் உண்மையி லேயே துறவியாகிவிட்டார். என்பதை அவர்கள் ‘நிச்சயப்படுத்தி’க் கொண்டார்கள். பாவம். மனிதர் அந்த ஓட்டைப் பாடசாலைக்கட்டிடத் தில் படுத்துக்கொண்டு சாப்பாட்டுக்கு மூன்றுவேளையும், நேரத்துக்கு மூன்றுமைல் நடந்துதீர்க்கிறாரே என்று மாத்திரம் அனுதாபப்படுவார்கள். தமக்குள் பேசிக்கொள்வார்கள். ஆனால் ஆறுமுகம் வாத்தி யாரோ அதையெல்லாம் சட்டைசெய்வதில்லை. இவர் களைவிட இன்பத்தின் மடியிலே கிடந்து கும்மாளம் டித்தவர் அவர். காலம் மாறிவிட்டது. ‘துறவியாகிவிட் டார்! அவ்வளவுதான்!!
திறந்துகிடந்த சாளரத்தின் வழியாக வீசிய வரட்சி யான காற்று அறைக்குள் கிடந்து வெதும்பிய ஆறு முகம் வாத்தியாருக்குச் சிறிது ஆறுதலளித்தது. அவர் மனதிலே மீண்டும் ‘பழைய நினைவுகள்’ தலைதூக்கின.
வானில் பவனிவரும் வெண்ணிலவின் ஒளிக்கதிர்களை உற்று நோக்கிய வண்ணம் அவர் படுக்கையில் கிடந் தபடியே சிந்தனையில் மூழ்கினார். பத்து ஆண்டுகளுக்கு முன்……!
வாத்தியார் அப்பொழுது ஆறுமுகம் இருபத்தைந்து வயது இளைஞன். ஆசிரிய கலாசாலை யிலிருந்து அப்போதுதான் வெளியேறினவர். இளமை யின் வாசற்படியில், அழகின் எடுத்துக்காட்டாக, இன்ப மயக்கத்துடன் காட்சியளித்த ஆறுமுகம் வாத் தியாரைச் சுற்றி வட்டமிட்ட ‘வண்ணாத்திப்பூச்சிகளை’ எண்ணமுடியாது! அப்போது ஒரு தமிழ் ஆசிரியர் என்றால் அவ்வளவு மதிப்பு, செல்வாக்கு. அவற்றுடன் அழகும், ஆட்களை மயக்கும் பேச்சும்கூட இருந்து விட்டால், கேட்கவா வேண்டும்?
ஆறுமுகம் வாத்தியார் ‘உம்…’ என்று ஒரு நீண்ட பெருமூச்சை வெளியே தள்ளினார். மனதின் பாரத்தை வெளியே தள்ளுவதுபோல! அந்த நேரத்தில் அவர் விரும்பியிருந்தால் நினைத்த மட்டும் இன்பத்தை உருசி பார்த்திருக்கலாம். முடியு மட்டும் அனுபவித்தபின் ‘அருணகிரிநாதராக’ மாறி யிருக்கலாம். ஒல்லியிடை மெல்லியலாரின் கொவ் வைக்கனியிதழ்களை, கொஞ்சும்வதனத்தை வஞ்ச நெஞ்சத்தை மலர் மெத்தையாக்கிச் சுவைத்தி ருக்கலாம். இன்பக் கடலாடியிருக்கலாம்! ஆனால் அவர் சிக்கிக் தவறிவிட்டார். காதல் என்ற வலையிலே கட்டுப்பட்டார். ‘ஒழுக்கம் உயர்விக்கும்’ என்ற நம்பிக் கையில் சந்தர்ப்பத்தை இழந்தார். இன்று இன்பமே காணாத ‘துறவி’ அவர். இத்தனைக்கும் காரணம்! சுவர்ணா… அவள் மாத்திரம் ஆறுமுகம் வாத்தியாரை அந்தக்காலத்தில் காதலிக்கிறவள் போலக்காட்டி யிராவிட்டால் இன்று அவர்… இன்பத்தின் சிகரத்திலே எல்லாப் போகபாக்கியங்களுடனும் வாழ்வார். ஆனால் அந்தச் சுவர்ணா…! ஆறுமுகம் வாத்தியாரை வட்டமிட்ட வண்ணாத்திப் பூச்சிகளில்’ சுவர்ணாவும் ஒருத்தி. நல்ல அழகி, ஆனால்…! ஆறுமுகம் அவளைத் தம் உயிரினும் மேலாகக் காதலித்தார். அந்த எண்ணத்திலே தம்மையே மறந்தார். அருமையான பெண்களை எல்லாம் ‘வேண் டாம்’ என்று நிராகரித்தார். எவ்வித பித்தல் பிடுங்கல் தொல்லையுமற்ற ஆறுமுகத்திற்கு சுவர்ணாவே உலகம், வாழ்வு,உய்விக்கும் தெய்வமாகத்தோன்றினாள். நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. கலாசாலையில் மலர்ந்த அவர்கள் காதல், ஆசிரியர்களாக அவர்கள் வெளியே றியதும் அம்பலத்திற்கு வந்தது. ஆறுமுகம் -சுவர்ணா அப்பொழுதைய உரோமியோ-யூலியத்து என்றால் கூட ஆச்சரியப்படுதற்கில்லை. அந்த அளவுக்கு அவர்கள் காதல் ‘சர்வவியாபி’யாகி விட்டது. ஆனால் இந்த உல கத்திலே எதுவுமே நிச்சயமில்லை என்ற தத்துவம் ஆறுமுகத்தின் வாழ்க்கையில் உண்டாகிவிட்டது. உயி ருக்கும் மேலாகத் தன்னைக்காதலிக்கிறவள் என்று யாரைக் கருதினாரோ, அந்த அவள் இப்பொழுது வேறொருவனைக் காதலிக்கிறாள் என்ற செய்தி ஆறுமு கத்தை ஒரு உலுக்கு, உலுக்கிவிட்டது.
நெஞ்சம் நிறைந்த வேதனையில் கிடந்து வெதும்பி னார் அவர். யாரோ தமது காதலில் பொறாமை கொண் டவர்கள் கட்டிவிட்ட கதையோ என்று கூடச் சந் ‘தேகித்தார். அப்படியிருந்தால் எவ்வளவு நலமாகும் என்று எண்ணினார். ஆனால் தெரிந்து கொண்ட உண்மை… அந்த இரவு ‘பிளாசா’ தியேட்டரில் அவர் கண்ட காட்சி…….அதை நினைக்கவே அவர் நெஞ் சம் வெடித்துவிடும் போலிருந்தது. அவர் அன்புக்கு ரியவள் வேறொருவனின் அணைப்பில் இருந்த நிலை, மோசமான அந்த ஆங்கிலப் படத்தின் முத்தமிடும் காட்சியையே தோற்கடிப்பது போல இருந்தது. படம் முடிவதற்கு முன்பே ஆறுமுகம் ‘தியேட்டரை’ விட்டு வெளியேறினார். அடுத்தநாள் அவளைச் சந்தித்துப் பேசி னார். ஆனால் அவள் கூறிய வார்த்தைகள்!..
ஆறுமுகம், நான் ஒருவரை விரும்புவதும், வெறுப்பதும் என்னுடைய சொந்த விடயம். அதில் தலையிட உங்க ளுக்கு உரிமைகிடையாது…” “என்ன! சுவர்ணாவா அப் படிச் சொல்கிறாள்? தம்மை உயிருக்குயிராகக் காதலிப் பதாகக் கூறிய சுவர்ணாவா அப்படிச் சொல்கிறாள்…” ஆறுமுகத்திற்கு இதய ஓட்டமே நின்றுவிடும் போலி ருந்தது. மௌனமாகத் தமது போக்கில் நடந்தார். அன்றிலிருந்து அவர் பெண்குலத்தையே – இல்லை, மனிதவர்க்கத்தையே தமது பரம சத்துருவாக எண் ணிக்கொண்டார். நெருங்கிய நண்பர்களுடன் கூட அதிகமாகப் பேசமாட்டார். தாங்கமுடியாத வேதனை- காதலில் ஏற்பட்ட ஏமாற்றம் அவரின் வாழ்வையே விரக்தி நிறைந்ததாக மாற்றிவிட்டது!
நினைவுத்தீயில் பொசுங்கிக் கொண்டிருந்த அவருக்கு அன்றைய தபாலில் வந்த இரு கடிதங்கள் ஞாபகத்திற்கு வந்தன. ஒரு கடிதம் அங்கு புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் ஒரு ஆசிரியையின் வருகை பற்றியது, மற்றது அவரது பழைய நண்பர் ஒருவர், அவரது சுகநலன் விசாரித்து எழுதியது, ஆனால் அடுத்த நாள் புதிதாக வரப்போ கும் ஆசியை’யார் என்பதுதான் அவரது மனதில் எண்ண அலைகளை அதிகம் மோதவிட்டது. ஒருவேளை சுவர்ணாவாக இருந்தால்…”சீ இப்பொழுதும் அந் தத் துரோகியின் நினைவா…?” தம்மைத்தாமே நொந்து கொண்டார்! “இல்லை, அவள் ஏன் இந்தப் பட்டிக்காட்டிற்கு வரப் போகிறாள்……? எவளாயிருந் தாற்றான் நமக்கென்ன? ஏன் விடிந்தால் தெரியுமே!” நித்திரை மயக்கம் கண்களைச் சொருகியது, அவர் தம்மை மறந்து தூங்கிவிட்டார்!
ஆறுமுகத்தின் கண்களை அவராலேயே நம்பமுடியவில்லை. அழகி சுவர்ணாவேதான் புதிதாக வந்திருந்த ஆசிரியை! அவள் தோற்றத்தில் ‘காலத்தின் கழிவு’ கோல மிட்டிருந்தாலும் பழையசுபாபமொன்றும் மாறியதாகத் தெரியவில்லை. ஆறுமுகம் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாதவராகத் தமது அலுவல்க ளைப் பார்த்துக்கொண்டிருந்தார். பாடசாலை விடும் நேர மாய்விட்டதை அறிவிக்கும் மணி ஒலித்தது. ஆசிரி யர்களும், மாணவர்களும் தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். ஆனால் ‘அவள்’ நின்று கொண் டிருந்தாள்! அவளுடன் பேசுவதா…விடுவதா…? ஏதோ கடமைக்கு இரண்டொரு வார்த்தைகள்…“எங்கே தங்குவதாக வேறு திசையில் முகத்தை முடிவு…?” திருப்பிக்கொண்டு மெதுவாக முணு முணுத்தார் ஆறுமுகம். “நான் நேற்றே ஒரு வீடு கிராமத்தில் வாடகைக்குப் பார்த்திருக்கிறேன்.” மெல்லிய புன் னகை, அரும்ப அவள் பதில் கூறினாள். “நல்லது கட்டமான அவரும் உங்களுடன் தானே… கொஞ்சம் சீவியந் தானிங்கே…! என்றாலும் கடமையைச் செய்யத்தானே வேண்டும்…” என்ன பேசுவதென்றே தெரி யாமல் ஆறுமுகம் பேசினார். பத்து வருட இடைவெளிக்குப்பின் மனம் விரும்பாத ஒருவருடன் பேசும் பேச்சு அது! ஆனால் அவளோ “கடமை… அதெல்லாம் முடிந்து விட்டது! நான் அவரை விவா கரத்துச் செய்து விட்டேன். வாழ்க்கை – அது என்ன என்றே தெரியாத மனிதர்களுடன் வாழ்வதைக் காட்டி லும்…” ஆறுமுகத்திற்கு அவளுடைய பேச்சொன் றும் தெரியவில்லை. தெரியாத நிலையில் அவர் நின்றார்!
“நீங்கள்…?” அவள் கேட்டாள்!
”நான் நானாகத் தானிருக்கிறேன்…” சட்டென்று பதில்சொன்னார் ஆறுமுகம்.
“அப்படியானால்…?”
“அப்படியானால்…!”
“நீங்கள் விரும்பினால்”
அவள் அதற்கு மேல் பேசத் தயங்கினாள். ஆனால் அவர் அவள் என்ன சொல்ல விரும்பினாள் என்ப தைத் தெரிந்து கொண்டார். “நான் இப்பொழுது ஒரு துறவி!” அவர் வார்த்தைகளில் இது நாள் வரை இல் லாத வைராக்கியம்-உறுதி பளிச்சிட்டது, குடையை எடுத்துக்கொண்டு திரும்பியும் பாராமல் வேகமாக நடந்தார் ஆறுமுகம் வாத்தியார்!
பாவம், அந்த விசித்திரமான ‘துறவியின் காதலி, என்ன செய்வாள்…? “சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தத் தெரியாத மனிதர். அன்றும் சந்தர்ப்பம் வாய்த்தது, இன்றும் வாய்த்தது. ஆனால் அந்த மனிதர் இரு தடவைகளிலும் தாமே பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கிறார், என்ன இருந்தாலும் அவர் அவர் தான். நான் நான் தான்! தனது மனதைச் சமாதானப் படுத்திக் கொண்டு வெளியுலகை நோக்கி நடந்தாள். அவள் கண்ணுக்கெட்டும் வெகு தொலைவில் ஆறுமுகம் வாத்தியார் விரித்த குடையுடன் வேகமாக நடந்து கொண்டிருந்தார்!
– வாழ்வு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1963, தமிழ்க்குரல் பதிப்பகம், ஏழாலை வடக்கு, சுன்னாகம் (இலங்கை