கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 13,799 
 
 

நேற்றைய தூக்கத்தில் பால்ராஜுக்கு நான்கு கனவுகள் வந்தன. திட்டமிட்டே அந்தக் கனவுகளை அசைபோடத் தொடங்கினான். அதிக ஆள் நடமாட்டம் இல்லாத இந்தப் பின் மதிய நேரம் அதற்கு உகந்ததாக இருந்தது. நிதானமாக ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு, ஜெராக்ஸ் இயந்திரத்தின் மீது கிடந்த தாளை எடுத்து அதற்குரிய இடத்தில் பொருத்தினான். தொலைபேசிகளை ஒழுங்குசெய்துவிட்டு, கால்களில் புண் இருந்த பகுதி நாற்காலியில் படாதவாறு மடக்கி உள்ளே வைத்துக் கொண்டு சாவகாசமாக இரண்டாவது கனவுக்குள் தன்னைப் பொருத்திக்கொண்டான்.

நீண்டு விரிந்த நதி. உதிர்ந்த மஞ்சள் இலைகள் ஆற்றில் விழுந்து, நதிப்போக்கில் ஓடின. ஆற்றின் ஒரு முனையில் பால்ராஜ் குதித்திருந்தான். சற்றுத் தள்ளி மிதந்த கரும்பச்சை நிற இலை, அவனை வசீகரித்தது. அதை நோக்கி நீந்த முயன்றபோது பனிக்கட்டிக்குள் சிக்கிக்கொண்டதைப்போல உடம்பு சவட்டியது. மீன்கள் வந்து அவனை முத்தமிட்டன. கரும்பச்சை இலை, இவனை நோக்கி மிதந்து வந்தது. புன்னகைத்தபடி இலையை வருடினான். மீன்கள் அவனைத் தீண்டின.

இந்தக் கனவைப்பற்றி பால்ராஜ் நிறைய முறை யோசித்துப்பார்த்தான். இதே போன்றதொரு கனவு ஏற்கெனவே அவனுக்கு வந்திருக்கிறது. அப்போது அந்தக் கனவைப்பற்றி த்ரிஷாவுடன் நெடுநேரம் பேசினான். அவளும் இவ்விதமான கனவுகள் தனக்கும் வருவதாகவும் ஆனால், அவற்றில் அருவிகளே அதிகம் வருவதாகவும் சொன்னாள். உண்மையில் பால்ராஜின் இந்த 27 வருட வாழ்வு த்ரிஷாவின் வருகைக்கு முன் வேறொன்றானது.

இரண்டு கோடைகளுக்கு முன்பான இதே போன்றதொரு பின் மதிய வெம்மையில்தான் த்ரிஷாவைச் சந்தித்தான்.

“ஏங்க, ஒரு போன் பண்ணிக்கலாமா?”- கரகரத்த குரல் பால்ராஜை அரைத் தூக்கத்தில் இருந்து எழுப்பியது.

“ம்… லோக்கல்னா ஊதா கலர் போனு”- தூக்கம் கலைந்த குரலில் சொல்லியவனின் கண்கள் மூடியே இருந்தன.

“நான்தாங்க த்ரிஷா பேசுறேன்”பால்ராஜ் படாரென்று எழுந்தான். ‘த்ரிஷாவா?’

ரோமம் மழிக்கப்பட்ட தடித்த கை ஊதா தொலைபேசியை அழுந்தப் பிடித்திருந்தது. கைகளின் கண்ணாடி வளையல் எழுப்பிய சத்தம் சலனமற்ற மதிய நேரத்தை ஊடுருவியது. உடம்புக்குப் பொருந்தாத ஜாக்கெட்டும், செயற்கையான பாவனைகளுமாக த்ரிஷா பேசிக்கொண்டு இருந்தாள்.

“நான் கரைட்டா வந்துருவேன். ஒண்ணுக்கு ரெண்டு தடவையா சொல்லிருங்கண்ணே… ரெண்டு பேருக்கு மேல வேண்டாம்.”

”…………….”

”என் செல்போனுல காசு இல்லை. 50 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் பண்ணிவிடுங்க.”

”………….”

”ஆங்… அதெல்லாம் நேர்ல பார்த்துக்குங்க.”

அவள் சில்லறையைத் தேடிக்கொண்டு இருந்தபோது, நாற்காலிக்குள் அமுங்கிக்கிடந்த உடம்பை நிமிர்த்திவைத்துக்கொண்டு, ”உங்க பேரு த்ரிஷாவா?” கேட்டான் பால்ராஜ். லேசாகச் சிரித்தாள். அப்போதுதான் அவள் பால்ராஜை நன்றாகக் கவனித்தாள். சூம்பிய கால்களைப் பார்த்ததும் வெளியில் நின்றிருக்கும் வண்டி அவள் நினைவுக்கு வந்தது. மறுபடியும் புன்னகைத்தபடியே பேசிய போனுக்கான காசை எடுத்துக் கொடுத்தாள். காசை வாங்கியவன், “தண்ணி குடிக்கிறியளா?”என்றான். டம்ளரைக் கையில் வாங்கியபடியே, “ஏன், த்ரிஷாவுக்கு மட்டும்தான் தண்ணி குடுப்பியளா?”என்றாள். அவன் ஒரு மாதிரி மையமாகச் சிரித்தான். கொஞ்சம் தயக்கம் இருந்தது.

”இப்பதான் எல்லாரும் செல்போன் வெச்சிருக்குதுவோ. யாரு எஸ்.டீ.டி. பூத்ல வந்து போன் பண்றா?”அவள் பேச விரும்புவதான தொனி தென்பட்டது. கடையின் வாசலை ஒட்டி இருந்த பேருந்து நிறுத்தத்தில் பேருந்து ஒன்று ஆட்களை இறக்கிவிட்டுக் கிளம்பியது.

”ஆமாங்க.. இப்பல்லாம் யாரு வர்றா? உங்களை மாதிரி எப்பயாச்சுந்தான் ஆளு வருது.”

கர்ச்சீப்பால் தன் முகத்தில் அப்பியிருந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டாள். கொஞ்சம் மௌனத்துக்குப் பிறகு அவளாகவே பேசினாள்.

”த்ரிஷான்னு ஆயி, அப்பனா பேரு வெப்பான்? நானே வெச்சுக்கிட்டதுதான். வீட்டுல பாபுன்னு பேருவெச்சு, ‘நீ ஆம்பளை’ன்னு சொன்னானுவோ. ‘நான் ஆம்பள இல்லடா, பொம்பள’ன்னு சொல்லி த்ரிஷான்னு நானே பேரு வெச்சுக்கிட்டேன். எனக்கு த்ரிஷான்னா புடிக்கும். உனக்கு?”

அவளுக்கு நிச்சயம் அவனைவிட ஒன்றிரண்டு வயது கூடுதலாக இருக்கும் என்றே தோன்றியது. ஒருமைக்கு மாறியிருந்த பேச்சு பால்ராஜுக்குப் பிடித்திருந்தது. ‘நீ பொறந்ததுலேர்ந்து இப்படித்தானா?’ என்ற கேள்வியை பால்ராஜ் கேட்க யத்தனித்த நேரத்தில் “நீ பொறந்ததுலேர்ந்து இப்படித்தானா?”என்றாள் த்ரிஷா. ஒரே கேள்வி இருவருக்கும் பொருந்துவதும், ஏக நேரத்தில் கேட்க நேர்ந்ததுமான தருணத்தை பால்ராஜ் வியந்தான். சின்ன கழிவிரக்கம் பூனையைப்போல எட்டிப் பார்த்தது. ஃபேன் காற்றுக்கு ஜெராக்ஸ் இயந்திரத்தின் மீது இருந்த காகிதங்கள் படபடத்தன.

”பார்த்தா தெரியலையா? பொறப்பே அப்படித்தான். உடம்பை இழுத்துக்கிட்டுத் திரிய வேண்டியதுதான். வீட்டுல சோறு போடுவொ. இருந்தாலும் இந்த வயசுக்கு மேல உக்காந்து திங்க குறுகுறுங்குது. அதான் கடன் வாங்கி இந்தக் கடையைப் போட்டேன்.”

உடம்பு சிறுத்தும், கைகள் குறுகியும், இடுப்புக்குக் கீழே கால்கள் சதைப் பிண்டமாகச் சூம்பியும் பிளாஸ்டிக் நாற்காலிக்குள் அமுங்கி அமர்ந்திருக்கும் பால்ராஜை நெடுநேரம் பார்த்தாள் த்ரிஷா. அவளுக்கு ஏதேதோ நினைவுகள் வந்துபோயின. அநேகமாக, தனக்கான துன்பங்களையும் அவனுக்கான துயரங்களையும் அவள் ஒப்பிட்டுப் பார்த்திருக்கக்கூடும். ‘என் பொறப்புக்கு நீயே தேவலை’ என்ற வார்த்தையை அவள் சொல்லக்கூடுமாக இருக்கும். ஆனால், சொல்லவில்லை. பால்ராஜின் முகத்தில் மெலிதான சிநேகத்தை உணர்ந்தாள்.

”சரி வுடு… எல்லாம் நல்லா இருக்கவன் என்னாத்தக் கிழிச்சான்? இந்தா இப்ப அரண்மனை லாட்ஜுக்குப் போவணும். ரெண்டு ஆம்பளப் பய காத்திருக்கான், இந்தப் பொட்டைக்கு.”

”எதுக்கு?”

”ம்… இதுக்கு. ஆளப் பாரேன்…”அவள் உதட்டோரம் புன்னகையின் சாயலையத்த ஒன்று எட்டிப்பார்த்தது. பால்ராஜ் அவளையே குறுகுறுஎனப் பார்த்திருந்தான். அவளும் அவனையே பார்த்தாள்.

“நீயும் கொஞ்சம் த்ரிஷா மாதிரிதான் இருக்க”-ஒரு சிறிய பொய்யைச் சொல்லும் பாவனையுடன் அதைச் சொன்னான். அவனைத் தோளில் தட்டிச் சிரித்தாள் த்ரிஷா. இருவரும் சிரித்தனர்.

”நான் வேணா விஜய்னு பேரை மாத்திக்கிடவா?”

“ஏன், அஜீத்னு மாத்திக்கயேன். நல்லா செவப்பாயிரலாம்.”

பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையின் இடைப்பட்ட சிறு நகரம் ஒன்றில் வீற்றிருந்த அந்த எஸ்.டீ.டி. பூத்தை வாகனங்கள் கடந்து சென்றுகொண்டே இருந்தன. எதிர்த்த டைலர் கடையில் வேலை பார்க்கும் பக்கத்து வீட்டு அக்கா பால்ராஜுக்கு மதிய உணவைக் கொண்டுவந்து தந்துவிட்டுப் போனாள். அக்கா உதிர்த்துச் சென்ற த்ரிஷாவுக்கான ஒரு துளி உபரிப் பார்வை தரையில் விழுந்துகிடந்தது.

”இன்னமுமா சாப்புடல?”

“அம்மா கயிறு ஃபேக்டரிக்கு வேலைக்குப் போவுது. வந்துதான் உலைவெச்சு, சோறாக்கிக் குடுத்துடும்.”

“பேசாம ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கிட வேண்டியதுதான?”

பால்ராஜ் மௌனமாக இருந்தான். ஏறத் தொடங்கியிருந்த வெயில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வழியே வெப்பத்தை இறக்கியது.

“ஏன், பொண்ணு கெடைக்காதுன்னு நினைக்கிறியா? என்னையவே ஒருத்தன் கட்டிக்கிறேங்குறான். உனக்கென்ன குறைச்ச… ஆம்பளைதானே நீ?”

‘ஆம்பளைதானே நீ?’ ‘ஆம்பளைதானடா நீ?’ ‘நீ எல்லாம் ஓர் ஆம்பளையா?’ –

மனமும் உடலும் உதறித் துடித்தன. மணி அடித்த தொலைபேசிக்குப் பதில் சொன்னான்.

”என்ன பேசவே மாட்டேங்குற?”

அவன் பேசினான். அந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட விரும்பாதவனாகப் பேசினான். “நீ மட்டும் ஆம்பளை இல்லையா?”

அவள் பால்ராஜிடம் இருந்து இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. சுறுசுறுவென முகத்தில் கோபத்தின் நரம்புகள் புடைக்கத் தொடங்கின.

”நான் ஆம்பளைனு சொல்ல நீ யார்றா? பார்க்கப் பாவமா இருக்கானே… பாவம் நொண்டின்னு பேசுனா… மூஞ்சியும் ஆளும்…”

அறையின் வெப்பம் வியர்வைப் பெருக்கெடுக்கவைத்தது. கடந்து சென்ற வாகனங்கள் எதிரொலித்த ஒளிக் கற்றைகள் கடைக்குள் வந்து வந்து போயின. பால்ராஜ் அழுதுகொண்டு இருந்தான். அவளுக்குத் தன்னைப் புரியவைக்கும் முயற்சி ஒன்று எதிர்த் திசையில் பயணித்துத் தோல்வியில் முடிந்துவிட்டதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

“ஆம்பளைன்னா, பொம்பளையைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சட்டமா?”அழுகையின் ஈரத்துடனான சொற்கள்.

அவனது கண்களை உற்றுப் பார்த்தாள். த்ரிஷாவுக்கு எல்லாம் புரிந்தது. இப்போது கோபம் தணிந்து லேசான பதற்றம் வந்திருந்தது. என்ன சொல்வதுஎனத் தெரியவில்லை. அவனை அழ வேண்டாம் எனச் சொன்னாலும் மேற்கொண்டும் பேச்சை நீட்டிப்பதற்கான வாய்ப்பு இருக் கிறது. இந்த உரையாடல் எந்த இடத்தைச் சென்று சேரும் என்பதை த்ரிஷாவால் ஓரளவுக்கு அனுமானிக்கவும் முடிந்தது.

“லேட்டாயிருச்சு. நான் கௌம்புறேன். அப்புறமா பாப்போம்.”

அவள் போய்விட்டாள். அந்த அறை வெறுமையால் நிரப்பப்பட்டதைப்போன்று இருந்தது. ஒரு மணி நேரத்துக்கு முன், தான் எவ்வாறு இருந்தோம். இவள் யார், இவளிடம் தன்னை ஒப்பிக்கும் மன தைரியத்தைத் தந்தது எது? பால்ராஜ் ஆழ் துயருக்குள் அமிழ்ந்தான். ‘நொண்டி நாய்க்கு ஆம்பளை கேக்குதா’ என்ற வலிமிகு சொற்களை மீளவும் ஒரு முறை கேட்க நேர்ந்துவிடுமோ என்ற பதற்றம் வந்தது. மேசை மீது இருந்த சாப்பாட்டுப் பை ஒரு பூதத்தைப்போல உருமாறிப் பயமுறுத்தியது. தன் பிறப்பின் மீதும், தற்போதைய அவசரத்தின் மீதும் கடுப்பாகவும், வெறுப்பாகவும் வந்தது. தொண்டையை அடைத்த துக்கம் கண்களில் நீராக வெளிப்படத் தயாராக இருக்க, ஆற்றாமையின் நொடிஒன்றில் பால்ராஜ் தன் காலிடுக்கை நோக்கி காறித் துப்பத் தொடங்கினான்.

ஒரே சாவியால் பல கதவுகளைத் திறக்கும் வல்லமை படைத்த நினைவுகளை அவன் வியந்தான். நினைவுகள் ஒன்றை ஒன்று திறந்துகொண்டன. பெண்ணுடல் மீதான வெறுப்பையும் ஆணுடல் மீதான விருப்பையும் உணர்ந்துகொண்ட தினத்தை மட்டும் எந்தச் சாவியும் திறக்கவே இல்லை. தன்னைத்தானே உள்தாழிட்டுக்கொண்டது. தன்னையே கீறிக்கொள்ளும் அந்த நாட்களை பால்ராஜ் மறக்க விரும்பினான். இப்போது அவனது காயமும் மருந்துமாக இருப்பவள் த்ரிஷா மட்டுமே.

இரண்டு, மூன்று, நான்காவது முறை தொலைபேச வரும்போது எல்லாம், ”உடம்பு எப்படி இருக்குப்பா”என்பாள். வார்த்தைகளின் ஆதூரத்தை அவன் உள்மனம் உணர்ந்தது. ‘அவளுக்கு என் மீது கோபம் இல்லை’ என்பதே அவனுக்கு சகல மனத் தடைகளும் உடைபடப் போதுமானதாக இருந்தது. பாய்ந்து வரும் வெட்டாற்றுத் தண்ணீரென த்ரிஷாவுடன் பேச ஆயிரம் கதைகள் இருந்தன அவனிடம். பேசவும் செய்தான். முழுதாகப் பேச தோதாக வந்தது பங்குனி உத்திரம்.

பால் குடமும், காவடியும், பறையடியுமாக ஊரெங்கும் திருவிழா வண்ணம். ஆணென அழைக்கப்பட்ட யாவரும் போதையிலும், பெண்ணென அழைக்கப்பட்ட அனைவரும் உயர் ஒப்பனையிலும் இருக்க… பருதியப்பர் கோயில் நோக்கி நீண்டு ஊர்ந்தது கூட்டம். பால்ராஜ் அன்றைக்கு இரவு கடை திறந்திருந்தான். மனைவிக்குத் தெரியாமல் வேறொரு பெண்ணையும், வீட்டுக்குத் தெரியாமல் காதலனையும் சந்திக்க விரும்புபவர்கள் செல்போன்கள் விடுத்து எஸ்.டீ.டி. பூத்தையே அதிகமும் நாடுகின்றனர் என்ற உண்மையை திருவிழா தினத்தன்று மீளவும் ஒருமுறை பால்ராஜ் உறுதி செய்தான். காற்றில் கசிந்து வந்த ஆர்கெஸ்ட்ரா இசையை அவன் ரசித்துக்கொண்டு இருக்க, 11 மணிபோல தஞ்சாவூர் பேருந்தில் இருந்து இறங்கினாள் த்ரிஷா. பால்ராஜின் உதடுகள் புன்னகை தரித்தன.

”போவலையா? ஆர்கெஸ்ட்ரால்லாம் ஆரம்பிச்சிருச்சுபோலஇருக்கு.”

“போவணும்… கொஞ்சம் கதவச் சாத்திக்கட்டுமா?”

அவன் அனுமதிக்குக் காத்திராமல் கதவு சாத்தியவள், ஜெராக்ஸ் மெஷின் திரைக்கு அப்பால் நின்று சரசரவென ஆடை மாற்றினாள். கைப்பையில் இருந்து கண்ணாடி, பவுடரை வெளியில் எடுத்தபடி பால்ராஜுக்கு எதிரில் அமர்ந்தவள், “அப்புறம், இன்னிக்குக் கடை நல்லா ஓடுது போலிருக்கு”என்றாள். கைகள் முகத்தில் பவுடர் பூசின.

”என்னாத்த ஓடுது? பேசாம பூத்தை மூடிட்டு பொட்டிக்கடை போடலாமானு பாக்குறேன். உனக்குத்தான் நல்லா ஓடுது போலயே…”
அவள் சிரித்தாள். ”அப்பறமா வர்றேன். கடை வெச்சிருப்பேல்ல…”

த்ரிஷா பங்குனித் திருவிழா கூட்டத்துக்குள் கரைந்துபோனாள். பால்ராஜ்கூட போகலாம்தான். இந்த வீல்சேரை உருட்டிக்கொண்டு அவ்வளவு தூரம் போவதுகூடப் பிரச்னை இல்லை. ஆனால், அந்தக் கூட்டத்துக்குள் ரெண்டு காலும் நன்றாக இருப்பவனையே சவட்டி எடுப்பார்கள். எதற்கு அதெல்லாம்? கடை போட்டாலாவது நாலு காசு பார்க்கலாம்.

பௌர்ணமி ஒளியில் இரவு ஒண்ணரை மணிக்கு களைத்துத் திரும்பினாள் த்ரிஷா. அதற்குள் பால்ராஜ் கடையை உள்தாழிட்டு உறங்கிப்போனான். அவளது செல்போனில் இருந்து பூத் நம்பருக்கு நான்கைந்து முறை மிஸ்டுகால் கொடுக்க, கடை திறந்தது. கலைந்த தூக்கத்துடன் தரையில் இருந்து உடல் தூக்கி முகம் பார்த்தான். த்ரிஷா தன் கைப்பைக்குள் இருந்து படாரென இரண்டு குவார்ட்டர் பாட்டில்களை எடுத்து நீட்டியதும் அவன் முகமெல்லாம் புன்னகை.

அவித்த கடலையும் ஊறுகாயும் வீற்றிருக்க… பிளாஸ்டிக் டம்ளரின் முதல் ரவுண்ட் திரவத்தைக் குடித்து நிமிர்ந்து, “நான் குடிப்பேன்னு உனக்கு எப்படித் தெரியும்?”என்றான் பால்ராஜ்.

“குடிக்கலேன்னா விட்ரு. ஒண்ணும் பிரச்னை இல்ல.”

அடுத்த ரவுண்டை அவசரமாகக் குடித்தான்.

மர்மத்தின் குகைகளைப் போதை திறந்துவைக்க, ரகசியங்கள் ஆடை உரித்தன.

அந்த அறையில் பெருந்துயரத்தின் நதி ஒன்று பாய்ந்துகொண்டு இருந்தது. ஒதுக்கவும் நகைக்கவும் யாருமற்ற அந்த அறையில் பாலியல் விளிம்புகள் இருவர் பால்யத்தின் கதைகளைப் பகிரத் தொடங்கினர். அது அவ்விதம் உடல் மீறலில் முடியலாயிற்று!

த்ரிஷாவுடன் பேசும் நிமிடங்களில் தன் உடல் குறைகள் மாயமாகிவிடுவதை பால்ராஜ் உணர்ந்து இருக்கிறான். நகர்ந்து நகர்ந்து காய்த்துப்போயிருந்த கைகளுக்கும், தரையில் இழுபடும் கால்களுக்கும் த்ரிஷாதான் செருப்பு வாங்கிக் கொடுத்தாள். முதன் முதலாகச் செருப்பு அணிந்து தரையைத் தொட்டபோது பால்ராஜின் தேகம் குலுங்கி அதிர்ந்தது. ஒரு வாரமாக செருப்பு அறுந்துவிட்டது என்ற வுடன் கால்களும் கைகளும் தரையில் தேய்ந்து புண்ணாகிவிட்டன. அதன் மீது மொய்த்த ஈக்களை பால்ராஜ் விரட்ட விரட்ட… மறுபடியும் பறந்து வந்தன. ஈக்களை விரட்டுவது பெரிய துயரமாக இருந்தது. த்ரிஷாவைக் கடைசியாகச் சந்தித்து ஒரு வாரம் ஆகிவிட்டது. செல்லுக்குப் போட்டால் மணி அடித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், இப்படி, திடீர் திடீர் எனத் தொடர்ந்தாற்போல் சில நாட்கள் த்ரிஷா வரவே மாட்டாள். கேட்டாள் ‘கஸ்டமர்கூட குற்றாலம் போயிருந்தேன்’ என்பாள். சொல்லும்போது அவளிடம் மகிழ்ச்சி எதுவும் தென்படுகிறதா என்று பார்த்தால், அப்படி ஒன்றும் சொல்ல முடியாது.

”குற்றாலம் அருவி எப்படி இருக்கும்?” என்றான் ஒரு முறை. அவனுக்கு அருவியை எப்படிச் சொல்லி விளங்கவைப்பது என த்ரிஷாவுக்குப் புரியவில்லை. கடையின் பின் பக்கச் சுவரில் ஒட்டப்பட்டு இருந்த வால் பேப்பரில் நயாகரா நதி கொட்டிக்கொண்டு இருந்தது. ”இதேபோல சின்ன சைஸ்” என்றாள்.

அன்றைய ராத்திரி கனவில் பால்ராஜ் குற்றாலம் நதியைக் கண்டான். குறுகி, நீண்ட பாறையில் இருந்து அடித்து ஊற்றிய தண்ணீரின் ஜில்லிப்பு அவன் உடலை தீண்டிக்கொண்டே இருந்தது. கனவில் நதியைக் கண்டதை அடுத்த நாள் த்ரிஷாவிடம் சொல்ல முற்பட்டான். ஆனால், அவள் தனக்கு ஓர் அருவிக் கனவு வந்தது எனச் சொல்லத் தொடங்கினாள்!

– ஏப்ரல் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *