திருவிளையாடல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 16, 2019
பார்வையிட்டோர்: 33,263 
 

வெங்கடேசுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம் என்பது பள்ளியின் புல் பூண்டுக்கு கூடத்தெரியும். இருந்தும் இரண்டு பேரும் எப்போதும் ஒரே ஜமாவில் கும்மியடிப்பது பலருக்கு ஆச்சரியம். என்னைப் பொறுத்தவரை கருத்து வேறு, நட்பு வேறு. அவனுக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்.

எங்கள் பள்ளியையும், பக்கத்தில் இருக்கும் மகளிர் மேல்நிலைப் பள்ளியையும் பிரிப்பது ஒரு ஐந்தடி உயர சுவர் மட்டுமே. சுவற்றுக்கு கீழே நான்கைந்து செங்கல்களை போட்டு உயரம் கூட்டி பக்கத்து கிரவுண்டில் விளையாடும் சிட்டுக்குருவிகளை பார்த்து ரசிப்பது எங்கள் பொழுதுபோக்கு. நீலநிற தாவணி, வெள்ளை ஜாக்கெட், இரட்டைப் பின்னல் என்று Auspicious ஆக அந்த காலத்தில் இருந்த மாதிரியான பிகர்களை இப்போதெல்லாம் காணமுடியாது.

நான் ஒன்பதாம் வகுப்பு அனுவை சைட்டு அடித்துக் கொண்டிருந்தாலும் (அது என் மாமா பொண்ணாக்கும்) அவ்வப்போது +1 படிக்கும் தேன்மொழியையும் ஜூட்டு விட்டுக் கொண்டிருந்தேன். காரணம் தேனு வெங்கடேசின் ஆளு. அவனை வெறுப்பேற்றவே பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு செல்லும் தேனுவை வேண்டுமென்றே சைக்கிளில் பாலோ செய்வேன். அனுவைப் பொறுத்தவரை என்னுடைய மாமா பெண் என்பதால் மட்டுமே எனக்கு ஈர்ப்பு இருந்தது என்று நினைக்கிறேன். அவளுக்கும் என் மீது பெரிய ஈர்ப்பு எதுவும் இருந்ததாக தெரியவில்லை. எனக்கும் ஒரு பிகர் இருக்கிறது என்று சொல்லிக் கொள்ளவே “அனு என்னோட ஆளு” என்று ஜமாவில் சொல்லி வைத்திருந்தேன்.

அது ஒரு சுபயோகத் திருநாளாக இருந்திருக்கக் கூடும். வழக்கம்போல செங்கல் போட்டு பக்கத்து கிரவுண்டில் ஸ்கிப்பிங் விளையாடும் பிகர்களின் அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தோம். எதற்கெடுத்தாலும் “என்ன பெட்டு” என்று கேட்பதை வழக்கமாகக் கொண்ட வெங்கடேசுக்கு தான் அந்த யோசனை வந்தது.

“தில்லு இருக்கிற எவனாவது ஸ்கூல் டைம்லே பக்கத்து கிரவுண்டை ஒரு சுத்து சுத்தி வரணும். எவனாவது அதை சாதிச்சி காட்டினா, அவனை நான் பீராலேயே குளிப்பாட்டுறண்டா. பெட்டு ஓகேவா?”

அவன் கீரி என்றால், நான் பாம்பு. மசால் வடையை வைக்க வேண்டிய இடத்தில் வைத்தால் எலி மாட்டும் என்றும் அவனுக்கு தெரியும். அவன் பெட் கட்டினால் சும்மாவாச்சுக்கும் அவனை வெறுப்பேற்றவாவது நான் சிலிர்த்துக் கொண்டு வருவது வழக்கம். ஆனால் இந்த முறை அவன் வைத்திருப்பது அக்னிப் பரிட்சை. கரணம் தப்பினாலும் கருகிவிடுவோம். இருந்தாலும் சவால் விட்டிருப்பது என் பிரியத்துக்குரிய எதிரி ஆயிற்றே? ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். லேடிஸ் ஸ்கூல் ஹெட்மாஸ்டரை நினைத்தால் தான் கொஞ்சம் பயமாக இருந்தது. காதலன் படத்தில் வரும் பெண் போலிஸ் அதிகாரி மாதிரி இருப்பார். எங்கள் ஹெட் மாஸ்டரிடம் போட்டுக் கொடுத்து விட்டால் முதுகுத்தோல் உறிந்துவிடும்.

சிவா உசுப்பி விட்டான். “கிச்சா இருக்கறப்பவே பெட்டு கட்டறியா வெங்கடேசு? திருப்பதிக்கே லட்டா, சிவகாசிக்கே பட்டாசா?”

“டேய்.. டேய்.. நிறுத்துரா. தில்லு இருக்கறவன், ஆம்பளைன்னு சொல்லிக்குறவன் எவனா இருந்தாலும் என் பந்தயத்தை ஒத்துக்கலாம். முடியலன்னா சொல்லிடுங்க. எனக்கொண்ணும் நஷ்டம் இல்லே. நீங்க ஓடினாலும் சரி, ஓடாம பாதியிலே திரும்பிட்டாலும் சரி. எனக்கெதுவும் கொடுக்க வேண்டியதில்ல. ஜெயிச்சுட்டா மட்டும் ஜெயிச்சவனுக்கு மட்டுமில்லே, நம்ம ஜமா மொத்தத்துக்கும் பீரோட பிரியாணி!” லேடிஸ் ஸ்கூல் க்ரவுண்டை சுற்றி வருவது ஏதோ உலகத்தை சுற்றி வருவது மாதிரியான பில்டப் கொடுத்து வெங்கடேஷ் பேசினான்.

எனக்கு சுர்ரென்று ஏறியது. ”நாளைக்கு ஈவ்னிங் மூணரை மணிக்கு நான் சுத்தறேண்டா. ஈவ்னிங் ஏழு மணிக்கு ரம்பா ஒயின்ஸ்லே பீரு, எட்டரை மணிக்கு பாய் கடையிலே பிரியாணி. ஓகேவா மச்சி?”

எலி கரெக்டாக மசால் வடைக்கு மாட்டியதை நினைத்து சந்தோஷப்பட்ட வெங்கடேஷ், “ஆல் த பெஸ்ட் மச்சான்!” என்று சொல்லிவிட்டு சபையை களைத்தான்.

சிவாவோடு சேர்ந்து ப்ளான் போட்டேன். மூணரை மணிக்கு எங்களுக்கு பி.டி. பீரியடு. கிரிக்கெட் விளையாடுவது போல பாவ்லா காட்டி பந்தை பக்கத்து கிரவுண்டில் எறிந்துவிட்டு, பந்தெடுக்கப் போவது போல போய் க்ரவுண்டை ஒரு முறை சுற்றி வந்துவிடலாம். ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் பந்தெடுக்க வந்தேன் என்று சொல்லி தப்பித்துக் கொள்ளலாம்.

மூன்றரை மணி என்பதால் ரெண்டு ஸ்கூல் ஹெட்மாஸ்டர்களும் சாப்பிட்டு விட்டு லைட்டாக கிரக்கத்தில் இருப்பார்கள். சரியான நேரம். ஹெட்மாஸ்டர் ரூமுக்கு அருகில் ஒரு ஸ்பையை தற்காலிகமாக நிறுத்தி மாஸ்டர் ரவுண்ட்ஸுக்கு வருகிறாரா என்று கண்காணிப்பதாக ஏற்பாடு. செந்தில் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.

மூன்று மணிக்கெல்லாம் எங்கள் செட் க்ரவுண்டை முற்றுகையிட ஆரம்பித்தது. ஸ்டெம்பு நட்டு பவுலிங் செய்து கொண்டிருந்தேன். சிவா பேட்டிங், வெங்கடேஷை காணவில்லை. பெட்டு கட்டிவிட்டு இந்த நாய் எங்கே போய்விட்டான்?

அவன் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி. சாட்சிகளின் முன்னிலையில் இன்று சாதித்தே தீருவது என்று முடிவெடுத்துவிட்டேன். பெட்டுக்காக மட்டுமில்லாமல் எல்லோரது கவனத்தையும் கவரும் அட்வென்ச்சர் ஆகவும் அது இருக்கும் என்று என் மனதுக்கு பட்டது. க்ரவுண்டை சுற்றி வருகையில் ஒருவேளை தேன்மொழியோ, அனுவோ என்னை கவனிக்கக்கூடும். “ஹீரோ” அந்தஸ்தை மிக சுலபமாக பெரும் வழியாகவும் அந்த திட்டத்தை நினைத்தேன்.

மற்ற பசங்க கொஞ்சம் சுரத்து குறைந்துபோயே இருந்தார்கள். எப்போதும் காட்டான் போல ஆடும் சிவா கூட டொக்கு வைத்து ஆடிக் கொண்டிருந்தான். மாட்டினால் மொத்த டீமுக்கும் ஆப்பு என்று அவர்கள் பயந்ததாக பட்டது. ”அப்படியே மாட்டிக்கிட்டாலும் ஒரு பய பேரை கூட சொல்லமாட்டேன். நீங்க என் கூட விளையாடினதா கூட சொல்லமாட்டேன். போதுமா?” என்று சொல்லி தைரியப் படுத்தினேன்.

மூன்றரை மணியாக இன்னமும் ஐந்து நிமிஷங்கள் என்று மணியின் வாட்சில் நேரம் பார்த்தோம். அப்போது மணி மட்டும் தான் கைக்கடிகாரம் அணிவான். எங்கேயோ இருந்து வெங்கடேஷும் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டான். பந்தை கையில் எடுத்தவன் சுற்றும் முற்றும் பார்த்தேன். மாஸ்டர்கள் யாரும் கண்ணில் படவில்லை. ஹெட்மாஸ்டர் நாலு மணிக்கு மேல் தான் ரவுண்ட்ஸுக்கு வருவார். அவர் அப்படியே சீக்கிரம் கிளம்பிவிட்டால் கூட நம்ம கண்காணி செந்தில் ஓடிவந்து சொல்லிவிடுவான்.

ஹய்ட் த்ரோவாக இல்லாமல் ஸ்லோப்பாக லேடீஸ் க்ரவுண்ட் நோக்கி முழுபலத்தையும் திரட்டி பந்தை வீசினேன். அப்போது தான் பந்து மைதானத்தின் அந்த முனைக்கு போய் சேரும். ஒரு ரவுண்ட் அடிக்க வாகாக நேரம் கிடைக்கும். பந்தை எறிந்தவுடன் எந்த திசையில் போய் விழுந்தது என்று கூட பார்க்கவில்லை. சுவரை நோக்கி ஓட ஆரம்பித்தேன். ஓடிவந்த வேகத்தை பயன்படுத்தி கையை சுவர் மீது அழுத்தி ஒரே ஜம்ப்…

பின்னால் பசங்க ஓடிவரும் சத்தம் கேட்டது. நான் நினைத்ததற்கு மாறாக மறுபுறம் மைதானம் மேடாக இல்லாமல் கொஞ்சம் பள்ளமாக இருந்ததால் பேலன்ஸ் செய்யமுடியாமல் குப்புற விழுந்தேன். கை முட்டி இரண்டிலும் சிராய்ப்பு. இரத்தம் எட்டிப் பார்த்தது. கால் கொஞ்சம் சுளுக்கிக் கொண்டதைப் போல வலி. நிமிர்ந்து மைதானத்தைப் பார்த்தேன். நூற்றுக்கும் மேற்பட்ட நீலநிற பட்டாம்பூச்சிகள் ஸ்கிப்பிங், கோகோ, ரிங்க் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இந்த மைதானத்தை சுற்றி ஓடிவர குறைந்தது மூன்று நிமிடங்கள் ஆகும். அதற்குள்ளாக ஆசிரியர்கள் யாரும் பார்த்துவிடக்கூடாது. முதல்முறையாக பயம்…

காக்கி பேண்டும், வெள்ளைச் சட்டையுமாக திடீரென்று ஒருவன் தங்கள் மத்தியில் ஓடுவதை கண்டதுமே சில பெண்கள் அவசரமாக ஒதுங்கினார்கள். சில பேர் கூச்சலிட்டார்கள். மைதானத்தின் இடதுப்பக்கமாக ஓட ஆரம்பித்தேன். திரும்பிப் பார்த்தேன், கண்களில் உற்சாகமும், ஆச்சரியமுமாக என் நண்பர்கள்.. சத்தமாக கத்தி என்னை உற்சாகப்படுத்துவதாக நினைத்து எல்லோர் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருந்தார்கள். வெங்கடேஷின் முகத்தில் மட்டும் குரோதம்!

ஓடு.. ஓடு.. ஓடிக்கொண்டேயிரு என்று உள்மனசு சொல்ல மாராத்தான் வீரனின் மன உறுதியோடு பாதி மைதானத்தை தாண்டி ஓடிக்கொண்டிருந்தேன். பந்து எங்கே போய் விழுந்தது என்று தெரியவில்லை. பந்தை விட்டு விட்டு ஓடவேண்டியது தான். தேடிக்கொண்டிருந்தால் மாட்டிக் கொள்வோம். இன்னும் கொஞ்ச தூரத்தில் பள்ளிக் கட்டடம் வந்துவிடும். உள்ளே வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் யாரும் பார்த்துவிடக்கூடாது என்று மனசுக்குள் வேண்டியபடி ஓட…

அய்யகோ! ஆண்டி க்ளைமேக்ஸ் ஆகிவிட்டதே?

பள்ளிக் கட்டடத்துக்கு அருகில் வந்தபோது ரெண்டு பள்ளியின் ஹெட்மாஸ்டர்களும் என் வருகையை எதிர்பார்த்து நிற்பது போல நின்று கொண்டிருந்தார்கள். ”இந்த ஆளு எப்படி இங்கே வந்தான்? இந்த ஆளு வெளியே வந்திருந்தாலே செந்தில் ஓடிவந்து சொல்லியிருப்பானே? அவனுக்கு என்ன ஆச்சி?” என்று நினைத்தேன்.

“சார் பந்து விழுந்திடிச்சி.. எடுக்க வந்தேன்!”

காதைப் பிடித்து திருகி, “மானத்தை வாங்குறதுக்குன்னே மடிப்பாக்கத்துலே இருந்து வந்து சேர்ந்திருக்கானுங்க! சாரி மேடம்! ஐ அபாலஜைஸ் ஃபார் தி இன்கண்வீனியன்ஸ்” என்று அந்த ஹெ.எம்.மிடம் சொல்லிவிட்டு “என் பின்னாலேயே வாடா!” என்று சொல்லிவிட்டு முன்னால் போனார்.

மாலை போட்ட ஆடு மாதிரி அவர் பின்னாலேயே போனேன். என் கெட்ட நேரம். என் மாமா பொண்ணு அனு வேறு எதிரில் வந்தாள். நேராக என்னை நோக்கி வந்தவள் என் காதில் கிசுகிசுத்துவிட்டு ஹெட்மாஸ்டரிடம் சென்று ஏதோ சொன்னாள். தூரத்தில் திரும்பிப் பார்த்தேன். ஏற்கனவே நம்பியார் மாதிரி என்னைப் பார்த்துக் கொண்டிருந்த வெங்கடேஷ் பாதி நம்பியாராகவும், பாதி வீரப்பாவாகவும் மாறி கொடூர புன்னகை புரிந்து கொண்டிருந்தது போல தெரிந்தது.

ஹெட்மாஸ்டர் ரூமுக்கு வெளியே செந்தில் வேறு முட்டிப் போட்டுக் கொண்டிருந்தான். அவனருகில் சென்று முட்டி போடுமாறு சொன்ன ஹெச்.எம். ரூமுக்குள் போய்விட்டார். இன்னமும் ஒரு மணி நேரத்துக்கு முட்டி போட்ட பின்னர் “பூஜை” வேறு செய்வார். நினைக்கும் போதே முட்டியும், முதுகும் வலித்தது போல இருந்தது.

“மச்சான்! வெங்கடேஷ் துரோகம் பண்ணிட்டாண்டா!” – செந்தில்

“என்னடா ஆச்சி?”

“மேத்ஸ் மாஸ்டர் கிட்டே மேட்டரை சொல்லி ஹெச்.எம். வரைக்கும் பிரச்சினையை எடுத்து வந்துட்டான். நாயி என்னை வேற போட்டுக் கொடுத்துட்டான்”

மேத்ஸ் மாஸ்டருக்கும், எனக்கும் ஆகவே ஆகாது. அந்த ஆளு நடத்தும் ட்யூஷனில் வீராப்பாக நான் சேராமல் இருந்தேன். ”சந்தர்ப்பம் பார்த்து போட்டு கொடுத்துட்டானே அந்தாளு?” என்று உறுமினேன்.

“செந்திலு நாம ரெண்டு பேரும் அடிபடப்போறது உறுதி. அதே நேரத்துலே நம்ம அக்ரிமெண்டை மீறுன வெங்கடேஷையும் போட்டுடணும்” சொல்லிவிட்டு எழுந்து நேராக ஹெச்.எம். ரூமுக்கு போனேன். நடந்ததெல்லாம் தப்பு என்று சொல்லி, வெங்கடேஷ் தான் என்னை அதுபோல லேடிஸ் க்ரவுண்டில் ஓட சொன்னான் என்றும் உண்மையை ஒப்புக் கொண்டேன். ப்யூனை விட்டு வெங்கடேஷை பிடித்து வரச் சொன்னார் ஹெச்.எம்.

சிறிது நேரத்திலேயே காட்சி மாறியது.

நானும், செந்திலும் மாட்டிக் கொண்டதை பார்த்து கொக்கரித்து சிரித்துக் கொண்டிருந்த வெங்கடேசும் இப்போது எங்களோடு சேர்ந்து முட்டிப் போட்டுக் கொண்டிருந்தான்.

“வெங்கடேசு! ஆனாலும் உன்னை லைப்லே மறக்க மாட்டேண்டா!”

“எதுக்குடா?” வெறுப்போடு கேட்டான்.

“உன்னால தாண்டா அனு எனக்கு கிடைச்சா!”

”!!!!???????”

“எப்படின்னு கேளேன். நான் மாட்டிக்கிட்டதுமே நேரா என் காதுலே வந்து ‘இவ்ளோ தைரியசாலியா நீ இருப்பேன்னு நினைக்கலை. ஐ லவ் யூ!’ன்னு சொல்லிட்டுப் போயிட்டா மச்சான். நீ மட்டும் ஹெச்.எம். கிட்டே போட்டு கொடுக்கலைன்னு வெச்சிக்கோ, அனு எனக்கு கிடைச்சிருக்க மாட்டாடா.”

ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த நெருப்பில் எண்ணையை ஊற்ற வெங்கடேஷின் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது. நான் சொன்னதை கேட்டதுமே செந்திலுக்கு மகிழ்ச்சி பொங்கியது.

“எப்படியோ வெங்கடேஷ் புண்ணியத்துலே கிச்சா செட்டில் ஆகிட்டான். ஃபிகரு ஒர்க் அவுட் ஆயிடிச்சி. நடக்குறதெல்லாம் நல்லதுக்கு தாண்டா!”

“டேய் பந்தயத்துலே ஜெயிச்சிருந்தா தானேடா வெங்கடேஷ் பீர் வாங்கி கொடுத்திருப்பான். இதோ இப்போ தோத்தவன் சொல்றேன். இன்னைக்கு எல்லாருக்கும் பார்ட்டிடா! நான் பந்தயத்துலே தோத்திருந்தாலும் லைஃப்லே ஜெயிச்சுடேண்டா! ஐ யாம் வெரி ஹாப்பியஸ்ட் மேன் இன் த வோர்ல்ட்”

(சுபம்)

கதையை அப்படியே சுபம் போட்டு விட்டுவிட ஆசை தான். ஆனாலும் உண்மையில் நடந்தது என்னவென்று சொல்லுவது தானே தர்மம்! ஒரு சின்ன ப்ளாஷ்பேக்!

காதைப் பிடித்து திருகி, “மானத்தை வாங்குறதுக்குன்னே மடிப்பாக்கத்துலே இருந்து வந்து சேர்ந்திருக்கானுங்க! சாரி மேடம்! ஐ அபாலஜைஸ் ஃபார் தி இன்கண்வீனியன்ஸ்” என்று அந்த எச்.எம்.மிடம் சொல்லிவிட்டு “என் பின்னாலேயே வாடா!” என்று சொல்லிவிட்டு முன்னால் போனார்.

மாலை போட்ட ஆடு மாதிரி அவர் பின்னாலேயே போனேன். என் கெட்ட நேரம். என் மாமா பொண்ணு அனு வேறு எதிரில் வந்தாள். நேராக என்னை நோக்கி வந்தவள் என்னிடம் மெதுவாக,

“பொறுக்கி, நல்லா மாட்டிக்கிட்டியா? ஸ்கூல் விட்டு போறப்போ சைக்கிள்லே வந்து கட் அடிச்சி தொல்லை கொடுக்குறே இல்லே, உங்க ஹெச்.எம். கிட்டே நல்லா போட்டு விடறேன்”

ஹெட்மாஸ்டரிடம் சென்று, “சார் இந்த பொறுக்கி அடிக்கடி எங்களையெல்லாம் டிஸ்டர்ப் பண்றான் சார். ஸ்கூல் விட்டு போறப்போ ரோட்ல வந்து லவ் லெட்டர் கொடுக்கிறான் சார்!”

“அவனை தோலை உரிச்சி தான் இன்னிக்கு வீட்டுக்கு அனுப்பப் போறேன். நீங்க பயப்படாதீங்கம்மா. இனிமேல உங்களையெல்லாம் டிஸ்டர்ப் பண்ணமாட்டான்” ஹெச்.எம்.

தூரத்தில் திரும்பிப் பார்த்தேன். ஏற்கனவே நம்பியார் மாதிரி என்னைப் பார்த்துக் கொண்டிருந்த வெங்கடேஷ் பாதி நம்பியாராகவும், பாதி வீரப்பாவாகவும் மாறி கொடூர புன்னகை புரிந்து கொண்டிருந்தது போல தெரிந்தது.

– ஜூலை 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *