தழலினிலே…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 19, 2020
பார்வையிட்டோர்: 14,493 
 
 

காலையிலிருந்தே களைக் கட்டியது மண்டபம். நழுவி விடுமோ என்ற அச்சத்தில் பட்டு வேட்டியை பிடித்து கொண்டு ஆண்களும், தழைய தழைய பதிய டிசைன் புடவைகளில் ஜோதிகாவாகவும் திரிட்ஷாவாக பெண்மணிகளும் பரபரப்புடன் இயங்கினர். இளம் பெண்கள் ஹன்சிகாவாகவும், சமந்தாவாகவும் வலம் வந்தனர். குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடி திரிந்தன. கொஞ்சம் வயதானவர்கள் ஆயாசமாக அமர்ந்து பழைய கதைகளை கதைத்துக் கொண்டிருக்கின்றனர். இளசுகள் குனிந்த தலை நிமிராது போனில் மூழ்கி அவ்வப்போது தலை தூக்கி ஓரக்கண்ணால் அழகா ஸ்மார்ட் ஆக யாராவது தெரிய மாட்டார்களா என்று தேடினர்.

மணப்பெண் மகிதா முகமெல்லாம் மேக்கப் போட்டு உருமாறி இருந்தாலும் அதையும் தாண்டி அவளது வெட்கம் வெளிக்காட்டியது. மாப்பிள்ளை வினோத் எவ்வித சலனமின்றி அமைதியாக புன்முறுவலுடன் மகிதாவை ஒட்டி நின்றான். நல்ல வளர்த்தி. கொஞ்சம் அதிகமாகவே சினிமா ஹீரோ ஆர்யாவை நினைவுப்படுத்தினான். அவனது வசீகர புன்னகை மகிதாவின் தோழிகளையும் சொக்க வைத்தது. செல்ஃபி எடுத்து கொள்கிறோம் என்ற சாக்கில் ஏகத்துக்கும் அவனை இடிச்சிக்கிட்டு எடுத்தது மகிதாவிற்கு பொறாமையின்றி பெருமிதமாக இருந்து. தனக்கே தனக்குரியவன் என்ற கர்வமும் இன்னும் சில மணி நேரங்களில் தன்னை வீழ்த்தி ஆட்க்கொள்ளப் போகிறான் என்று நினைக்கும்போது மூளையிலிருந்து எக்கச்சக்கமாய் டோபோமைன் சுரந்து முகம் மேலும் சிவந்தது.

மணமக்களை வாழ்த்தி பரிசளிக்க மலைப்பாதைப் போல வளைந்து வளைந்து செல்லும் நீண்ட வரிசையில் மக்கள். சிலர் சீக்கிரம் பார்த்துவிட்டு சாப்பிட்டு கிளம்ப வேண்டும் என்கிற பரபரப்பில் நிற்கின்றனர். படம் எடுத்தோமா நகருவோமா என்றில்லாமல் இப்பதான் ஒவ்வொருத்தரும் விலாவரியா பேசறது. இதுல புகைப்படக்காரர் போதாதுன்னு ஆளாளுக்கு அவங்க போன்ல வேற எடுத்துக்கனும். சாப்பிடாதவர்கள் சபிச்சிக்கிட்டு நிக்க உள்ள நுழைஞ்சவுடன நேராக போய் சாப்பிட்டுவிட்டு வரிசையில் நிற்பவர்கள் தங்களது சாமர்த்தியத்தை மெச்சிக்கிட்டு சுற்றுப்புறத்தில நடக்கறத இரசிக்கிறாங்க. (“போதுமே உங்க சாமர்த்தியம். திங்கறதுலதான் காட்டுவீங்க. என் மானமே போச்சி – இது சில பேருக்கு அவங்கபக்கத்தில நிக்கற அவங்க வீட்டு அம்மாகிட்டே இடி)

மேடையில் மகிதாவும் வினோத்தும் வருபவர்களை வரவேற்பதும் பரிசுகளை பெறுவதும் கைகொடுப்பதும் நான்கு வார்த்தை பேசுவதுமாக கிட்டத்தட்ட ரோபோ மாதிரி செயல்பட்டனர். ஆசுவாசப்படுத்திக் கொள்ள நேரமில்லை. இடையில் இருவருக்கும் குடிக்க பாயசம் கொடுத்தனர். மகிதா சற்று விலகி துணியில்பட்டுவிடக் கூடாது என்று எச்சரிக்கையோடு தலையைத்தூக்கி குடித்தாள். டம்ப்ளரை திருப்பித் தரும் போது தற்செயலாக அவனை கவனித்தாள். திடுக்கிட்டாள். திரும்ப ஒருமுறை பார்த்தாள். சந்தேகமில்லை. அவனேதான். அய்யோ, எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு நினைச்சோமே, அடப்பாவி இப்ப எதுக்கு இங்க‌ வரான். இவனுக்கு எப்படி தெரிஞ்சுது. மகிதா பதறத் தொடங்கினாள். அதற்கு பிறகு, வரவேற்பில் கவனம் செலுத்த முடியவில்லை. அவன் அவளை குரூரமாக பார்ப்பது தெரிந்தது. கையில் பரிசு ஒன்றும் காணோம். அப்படியானால் சொன்னது மாதிரி ‘நீ எழுதின கடிதங்கள், அனுப்பிய இமெயில்கள், உன் திருமணத்தில் பரிசாக‌ தரட்டுமா?’ சொன்ன மாதிரியே செஞ்சுட்டானே. அப்ப எல்லாமே அவ்வளவுதானா? தலை சுற்றியது. குளிரூட்டப்பட்ட மண்டபத்தில் அவளுக்கு எக்கச்சக்கமாக வியர்த்தது.

சிக்காகோ

அது ஒரு இனிமையான கோடைக்காலம். பனியும் குளிருமாக ஆண்டில் பெரும்பகுதி ஒடுங்கி குறுகிப்போன உடம்பிற்கு சுள்ளென்று எப்போதோ அடிக்கும் வெயில் ஆனந்தமே. குளிரை விரட்ட அதுவும் மைனஸ் 35க்கு கீழே

கார் ஓட்ட லைசென்ஸ் வாங்கிய ஒரே வாரத்தில் அந்த சம்பவம் நடந்தது. தெற்கு பேரிங்டனிலிருக்கும் தன் குடியிருப்பிலிருந்து வெளியே வந்து சாலை வழியாக சில மைல்கள் செல்வதற்குள் போலீஸ் கார் ஒன்று ஃப்ளாஷ் விளக்குகள் ஒலிக்க பின்னால் வந்தது. மகிதாவிற்கு ஒன்றும் புரியவில்லை. வேறு ஏதோ அவசரமாகப் போகிறார்கள் போல என்று நினைத்தாள். வண்டியின் வேகத்தை குறைக்கவில்லை. இப்போது சைரன் ஒலித்தது. பயந்து விட்டாள். பிரேக்கை அழுத்தி வேகத்தை குறைத்தாள். போலீஸ் வண்டி அவள் அருகே வந்தது. உள்ளிருந்ந காவலர் வண்டியை ஓரம் நிறுத்தும்படி சைகை செய்தார். கைகள் நடுங்கத் தொடங்கின. ஏதோ தவறு நடந்துள்ளது என்பதை உணர்ந்தாள். எதுவானாலும் சமாளிப்போம் என்று வண்டியை நிறுத்தி கதவைத் திறந்து இறங்கப் போனாள்.

போலீஸ்காரர் சத்தமாக ஃப்ரீஸ் (அசையாதே) அப்படியே கையை உயர்த்து என்றார். மகிதாவிற்கு இதயமே நின்றது போல உணர்வு. அருகில் வந்த, ஆப்பிரிக்கஅமெரிக்க இனத்தை சார்ந்த அந்த காவலர், அவளிடம் “ஆயுதங்கள் ஏதாவது உள்ளதா” என்று கேட்டார். அழுத்தமான அவரின் உச்சரிப்பு அவளுக்கு சுத்தமாக விளங்கவில்லை.

‘பார்டன், மீண்டும் சொல்லுங்கள்” என்றாள்.

பொறுமையாக, புன்முறுவலோடு, கம்பீர குரலில் மீண்டும் கேட்டார். “ஆயுதங்கள் ஏதேனும் உள்ளதா. எதற்காக தப்பி ஓட பார்த்தாய். என்ன தவறு செய்தாய் அல்லது செய்யப் போகிறாய்” என்று‌ கேள்விகளை அடுக்கினார்.

மகிதாவிற்கு வார்த்தகளே வரவில்லை. திணறினாள். கண்களில் கண்ணீர். ‘ஓ’வென அழத் தொடங்கினாள். காவலருக்கு சங்கடமாகி விட்டது. அவரது அனுபவத்தில், இது அப்பாவி என்று விளங்கி விட்டது ஆசியா, குறிப்பாக இந்தியா அல்லது பாகிஸ்தான் நாட்டினைச் சார்ந்த பெண்னாக இருக்க வேண்டும்.

“சரி உங்க கடவு சீட்டு, ஓட்டுநர் உரிமம் காட்டுங்க” என்றார்.

மகிதா தொடந்ந்து அழுதாள். இயல்புக்கு வரும் நிலையில் இல்லை. இது என்னடா காலங்கார்த்தாலே உயிர் வாங்குது என்று தலையில் கைவைத்துக் கொண்டார். அப்போது அவர் அருகில் வண்டி ஒன்று நின்றது. அதிலிருந்த இளைஞன் கண்ணாடியை இறக்கி,

“காலை வணக்கம், ஏதேனும் உதவி வேண்டுமா? அந்த‌ பெண்னை எனக்குத் தெரியும். என்னோட குடியிருப்புல தான் இருக்காங்க”.

ஒரு நொடி யோசித்த காவலர், “சரி இறங்கி வாங்க” என்றார்.

வண்டியை சாலையின் வலதுப்பக்கம் ஓரம் நிறுத்திவிட்டு அந்த இளைஞன் இறங்கிவந்தான்.

‘இவங்க என்ன குற்றம் செஞ்சாங்க’?

“ஒன்று இரண்டல்ல. மொத்தம் நான்கு. முதலில் வேக கட்டுப்பாட்டை மீறினாங்க. இரண்டாவது, நிறுத்த சொல்லி செய்கை செய்தால், நிறுத்தாமல் ஓட்டிக்கொண்டே போனார்கள். பின்னால் பிளாஷ் லைட் போட்டுக்கிட்டு நான் வருவதை பார்த்தும் நிற்காமல் போனது. வண்டிய நிறுத்த சொன்னவுடனே, வண்டிய விட்டு இறங்கனது, போதுமா? பயங்கரவாதின்னு சந்தேகப்படக்கூடிய அத்தனையும் செஞ்சுட்டாங்க”.

மகிதா இடைமறித்து, “மன்னிக்கணும் ஆஃபீஸ்ர். பதட்டத்தில விதிகளை மீறிட்டேன். எனக்கு உரிய டிக்கெட் கொடுத்துடுங்க. பணம் கட்டிடறேன்”.

‘அதை செய்யலாமென்றுதான் முடிவு செய்தேன். ஆனால், இப்ப ஒரு எச்சரிக்கையோடு விட்டுடலாம்னு இருக்கேன். சாலையிலே நீங்க செய்யற சின்னத் தப்பு பல பேருக்கு ஆபத்தை விளைவிக்கும். அதனாலே இனிமே எச்சரிக்கையாகவும், விதிகளுக்கு உட்பட்டு ஓட்டுங்க. அப்படிப்பட்ட மனநிலை இல்லைன்னா உங்களோட அழகான நண்பரை ஓட்ட சொல்லி பக்கத்தில உட்கார்ந்து சிக்காகோ நகரின் எழிலை ரசிங்க”. என்றார். அவர்

அழகான நண்பன், என்று சொன்னவுடன், அருகில் இருந்த அவனை அப்போதுதான் ஒழுங்காக கவனித்தாள். தக்க சமயத்தில் வந்து உதவியதால் நன்றியுணர்ச்சி பெருகியது.

“ஹாய். அய் ஹம் கதிரவன்” என்றான்.

“ஹலோ, நான் மகிதா” என்று அறிமுகம் செய்துக்கொண்டார்கள்.

காரில் திரும்பி செல்லும்போது அந்த இளைஞன் ஏகத்துக்கு மனதை ஆக்கிரமித்திருந்தான். அந்த காவலர், பேசாமல் உங்கள் அழகான நண்பரை ஓட்ட சொல்லி பக்கத்தில் அமர்ந்து செல்லுங்கள் என்று சொன்னது ஒருவேளை அவனைத்தான் இருக்குமோ. அவனுடைய அந்த உறுதியான தோள்களும், தலையை ஒருபக்கம் சாய்த்து பேசியதும் கிறங்கி அடிச்சுதே. சே, என்ன இது. இப்படியெல்லாம் சிந்தனை ஓடுது. வலுக்கட்டாயமாக அச்சிந்தனையை விரட்டி, சாலையில் கவனம் செலுத்த தொடங்கினாள்.

ஒருவாரத்திற்குள் அவனை மீண்டும் சந்திப்போம் என்று எதிர்ப்பார்க்கவில்லை. சனிக்கிழமை வால் மார்ட் ஸ்டோரில் அந்த வாரத்திற்கான பொருட்களை வாங்க வந்தபோது, அவனை அங்கு பார்த்தாள். சிரித்துவிட்டு,

“என்ன கதிரவன் ஏதாவது வாங்க வந்திருக்கீங்களா”, என்றாள்.

“இங்கெல்லாம் எளிதா திருட முடியாது. அதனால, வாங்கிட்டு போகலாம்னு பார்க்கிறேன்.”

“ஒ, அய்யா, திருட கூட செய்வீர்களா?”

“இதுவரைக்கும் இல்லை, இனிமே திருடலாம்னு பார்க்கிறேன்” என்று கூறிவிட்டு, தனது தலையை கொஞ்சமாக வலப்பக்கமாக சாய்த்து அவளைப்பார்த்து முறுவலித்துக் கொண்டே நகர்ந்தான்.

மாதத்தின் முதல் சனிக்கிழமையானதால், கூட்டம் அலைமோதியது. பில் போடும் இடத்திற்கு நெருங்கும்போது, கைப்பையில் உள்ளே வைத்திருக்கும் சிறிய பை, கடன் அட்டைகள், மற்றும் பணம் வைத்திருக்குமொன்று இல்லை என்பதை உணர்ந்தாள். புறப்படுவதற்கு முன் அதை எடுத்து உள்ளே வைக்காமல் விட்டது நினைவுக்கு வந்தது. திரும்பப் போய் வருவது என்றால், முடிந்தது இந்த சனிக்கிழமை. என்ன செய்வது. கதிரவன் நினைவுக்கு வந்தான். அவனை தேடினாள். மாமிசங்கள் வைத்திருக்கும் பகுதியில் ஏதோ எடுத்துக் கொண்டிருந்தான்.

இவள் வருவதை பார்த்து, என்னங்க, ஏதாவது உதவி வேண்டுமா?” என்றான்.

“ஆமாங்க, என்னோட பர்ஸ் வீட்டிலேயே வச்சிட்டு வந்துட்டேன். கொஞ்சம் உதவி பண்ண முடியுமா? நான் இப்பவே உங்க கணக்குக்கு பணம் ட்ரான்ஸ்பர் பண்ணிடறேன்” என்றாள்.

“அதெல்லாம் ஒன்றும் பிரச்சினை இல்லைங்க. பிறகு கொடுங்க. அய்ந்து நிமிடங்கள் காத்திருக்க முடியுமா, இல்லை இப்பொழுதே வரவேண்டுமா” என்றான்.

காத்திருந்தாள்.

பொருட்களை வாங்கிவிட்டு காருக்கு திரும்பும்போது, இயல்பாக கேட்டான், “காபி குடிக்கலாமா” என்று.

இருவரும் அருகாமையிலிருந்த ஸ்டார் பக்ஸ் கடைக்கு சென்றனர். அவன் அங்கு கணனித்துறையில் மென்பொருள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை சிறிய அளவில் நடத்திவருவதாகவும், அவனின் தாய் தந்தை இந்நாட்டு குடியுரிமை பெற்றவர்கள், தற்போது இந்தியாவில் இருப்பதாகவும், தனக்கு கூடப்பிறந்தவர்கள் இருவர் எனவும் அவர்களில் சகோதரன் பெங்களூரில் பொறியியல் படிப்பதாகவும், சகோதரி எத்திராஜ் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிப்பதாகவும் கூறினான். தாங்கள் அனைவரும் பிறந்தது அமெரிக்காவானாலும் படிப்பு எல்லாம் இந்தியாவில்தான் என்று தன் வரலாறை சுருங்க கூறினான். அவனே பேசிக்கொண்டிருந்தான். அவன் பேச்சில் அவள் கரைந்தாள், சனிக்கிழமை காணாமல் போவதை உணரவில்லை. அவனோடு இருப்பது பிடித்தது. அவன் தலையை சாய்த்து பேசும் அந்த பாங்கினை இரசித்தாள். ஆலன் பீஸ் எழுதிய “பாடி லாங்குவெஜ்” (உடல் மொழி) நினைவுக்கு வந்தது. நம்மிடம் பேசும் ஒருவர் தலையை ஒருபக்கம் சாய்த்துக் கொண்டு பேசினாலோ அல்லது நாம் பேசும்போது அப்படி சாய்த்துக் கொண்டிருந்தாலோ, அதன் அர்த்தம், அவர் நம்மீது கொண்டுள்ள விருப்பத்தை வெளிப்படுத்துகிறார் என்பதாகும். இவன் நம்ம கிட்ட மட்டும்தான் இப்படி தலையை சாய்ச்சு பேசுவானா, இல்லை எல்லார்கிட்டயும் இப்படி பேசுவானா என்று யோசித்தாள்.

பிறகு அன்று சாலையில் நடந்த சம்பவத்தை பேசினார்கள். “ஆமாங்க, கதிரவன், நான் கார்ஐ நிறுத்திட்டு இறங்கினவுடனே போலீஸ்காரர், ஹன்ட்ஸ் அப், அசையாதே நில்லுன்னு சொன்னாரே, ஏங்க அப்படி, என்னைப் பார்த்தா பயங்கரவாதி மாதிரியா தெரியுது”.

“ஆமாம், நீங்க ஒரு வகையில பயங்கரவாதிதான்”.

“அய்யோ, ஏன்?”

“பின்ன, என்னை பயங்கரமா வீழ்த்திட்டீங்களே”.

“என்ன சொல்லறீங்க”, என்று கோபத்தோடு கேட்டாலும், அவளுக்கு வெட்கம் பிடுங்கி கொண்டது.

“நான் பயங்கரவாதின்னா, நீங்க திருடன்”.

“அப்படியா, நான் இன்னும் உங்க இதயத்தை திருடலியே” என்றான்.

“ஹாஹா”, வாய்விட்டு சிரித்தாள். “நான் அப்படி சொல்லவரலீங்க. இன்னைக்கு நிறைய வேலைகள் வச்சிருந்தேன். என் நேரத்தை இப்படி திருடுவீங்கன்னு நினைக்கலை”.

நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டே இருந்தார்கள். இவ்வுலகிற்கு தாங்கள் வந்ததே அந்த தருணத்திற்காக என்பது போல ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து கொண்டாடினர். மாலை நான்கு மணிக்குதான் இருவருக்கும் கிளம்ப வேண்டும் என்று தோன்றியது.

விடைப்பெற்று கிளம்பி தன் வாகனத்திற்குள் அமர்ந்து வண்டியை இயக்கத் தொடங்கும்போது, அவன் அவளை நோக்கி நடந்து வந்தான். அவளுக்கு நெஞ்சு படபடத்தது. காருக்குள் குனிந்து, (அவனது வாசனை அவளை சொக்கியது)

“மகிதா, அடுத்த முறை போலீஸ் வண்டியைநிறுத்த சொன்னா, நிறுத்திட்டு, என்ஜினை ஆஃப் பண்ணிட்டு, கண்ணாடியை முழுதாக இறக்கிவிட்டு, இரண்டு கைகளால ஸ்ட்டீயரிங்க பிடிச்சிக்கிட்டு தலை குனிந்து உட்கார வேண்டும். அப்படி செய்தால், நீ அவர்களை தாக்க தயாராக இல்லை என்று அர்த்தம். வண்டியை விட்டு இறங்கினால், நீ சுடப் போகிறாய் என்று தவறாக நினைத்து உன்னை சுட்டுவிடும் அபாயமும் உள்ளது”.

“ஆனால், அவர் என்னை சுட முயற்ச்சிக்கலியே”.

“எப்படி சுடுவாரு? உன்னைப் போன்ற அழகான பெண்ணை பார்த்தா எப்படி மனசு வரும்”.

மீண்டும் மகிதா அநியாயத்துக்கு வெட்கினாள். அவர்கள் சந்திப்பது தொடர்ந்தது. அவள் படிக்கும் ஹாப்பர் கல்லூரிக்கு அவ்வப்போது அவளை கொண்டு விடுவதும் வகுப்புகள் முடிந்ததும் அவளை அழைத்துக்கொண்டு வருவதும் அவனுக்கு வாடிக்கையாகிவிட்டது.

“என்னமா, வர ஞாயிற்றுக்கிழமை எங்க வீட்டுக்கு ரெண்டு பேரும் சாப்பிட வாங்கன்னு சொன்னா, முழிக்கற”, மிரட்டல் குரல் கேட்டு மகிதா மீண்டும் மண்டபத்திற்கு திரும்பினாள். அவளது அத்தை சரளா, வயதுக்கு மீறிய அலங்காரத்துடன், நெருக்கத்தில் வந்து மிரட்டினாள். “என்ன அத்தை, சொல்லுங்க, சரி”, என்று ஏதோ சொல்லி மழுப்பினாள். அத்தை, இந்த தடவை வினோத்தை பார்த்து “மாப்பிள்ள ரெண்டுபேரும் இந்த ஞாயிறு நம்ம வீட்டுக்கு சாப்பிட வாங்க”, “சரிங்க ஆன்ட்டி, நான் பார்த்துட்டு சொல்லறேன்” என்று பம்மினான். கூட்டம் இன்னும் குறையவில்லை. மகிதாவுக்கு இன்னும் நடுக்கம் குறையவில்லை. கதிரவனை எப்படி சமாளிக்கிறது. இவர் எப்படி எடுத்துப்பாரு. சொன்னா புரிஞ்சிப்பாரா? மீண்டும் கண்கள் வரிசையை நோக்கி சென்றது. அவன் வரிசையில் சற்று முன்னேறி அருகே வந்திருந்தான். அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்படியே இருக்கிறான், அன்றைக்கு பார்த்தது மாதிரியே. கடைசியாக பார்த்தது எங்கே, எப்போது?

அது ஒரு இளவேனில்காலம். குளிர்க்காலம் முடிந்து மீண்டும் மலர்கள் பூக்கும் பருவம். குளிர்காலத்தில் சூரியனே பார்க்க முடியாது. பனி வேறு கொட்டும். மரங்களும் செடிகளும் ஒளிச்சேர்க்கை செய்ய முடியாதே. எப்படியாவது தங்கள் உயிரை அடுத்த நான்கு மாதங்களுக்கு பிடித்து வைத்துக்கொள்ள வேண்டுமே. சுயநலத்துடன், தாங்கள் வாழவேண்டும் என்கிற நோக்கில், இலையுதிர்காலத்தில் முன்னெச்சரிக்கையாக இலைகளையெல்லாம் உதிர்த்துவிட்டு குளிர்காலத்தில் மொட்டை மொட்டையாக நிற்கும் காலம். இளவேனிற்காலத்தில் மீண்டும் வெட்கமே இல்லாமல் புதிய இலைகளை துளிர்க்கச் செய்யும். பூ விடும். காய், கனி என்று தொடரும். அப்படியொரு பருவத்தில், மாலை நேரத்தில் மிச்சிகன் ஏரியின் அருகில் மில்லினியம் பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது திடுப்பென்று, “மகிதா, அய் திங்க் அய் ம் இன் லவ் வித் யு” என்றான். ஏரியிலிருந்து வீசிய சில்லென்ற குளிர்ந்த காற்று அவளை தழுவியது. உடலெங்கும் ஜிவ்வென்று ஏதோ ஒன்று தலையிலிருந்து கால் வரை செல்வதை போல உணர்ந்தாள். காற்றில் அலையும் அவளது கூந்தல், சூரிய ஒளியில் பொன்னிறமாக மின்னியது. கடல்தானோ என்று சந்தேகிக்க வைக்கும் பிரம்மாண்டமான மிச்சிகன் ஏரி, மௌனமாய் அரங்கேறும் காதல் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தது. இருவரும் டௌன்டவுன் சிக்காகோவில் அமைதியாக நடந்து சென்றார்கள். வானத்திற்கும் தரைக்கும் பாலம் கட்டியது போல உயர்ந்த கட்டிடங்கள், வண்ணமயமாக ஜொலித்தன. மக்கள் அவசரமின்றி எதையோ கொறித்துக் கொண்டு நடந்தனர். ஆங்காங்கே இசைக்கருவிகளோடு இளைஞர்கள் சிலர் காற்றை அலங்கரித்துக் கொண்டிருந்தனர். அவர்களை சுற்றி நின்றுக் கொண்டு சிலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். உணவு விடுதிகளில் கூட்டம், உற்சாக குரல்கள். இவைகள் எதுவும் மகிதாவின் கவனத்திற்கு வரவவில்லை. கதிரவன் அவளது எண்ணங்களை முழுமையாக ஆக்கிரமித்து இருந்தான். அவளுக்குள் விதவிதமான உணர்ச்சிகள் பொங்கி எழுந்தன. பள்ளிக்கூட இறுதி நாட்களில் வகுப்பு தோழன் ஒருவன் அய் லவ் யூ என்று வாழ்த்து அட்டை கொடுத்த போது அன்றைக்கு அதிர்ச்சியும் அச்சமும்தான் மேலோங்கி இருந்தது. தற்பொழுது என்ன உணர்வு என்று விவரிக்க முடியாத நிலை. ஆனால், மனதுக்கு ஏனோ பிடித்து இருந்தது. தெற்கு மிச்சிகன் அவின்யூவில் கிள்வின்ஸில் ஐஸ் கிரீம் சாப்பிட அழைத்துச் சென்றான். தனக்கு இப்போது சாப்பிடவேண்டும் என்பதை இவன் எப்படி உணர்ந்திருப்பான். ஒருவேளை நாம் இவனிடம் கேட்டோமா என்று மகிதவிற்கு தன்மேலேயே சந்தேகம் வந்தது. அவனே இருவருக்கும், அவனுக்கு பனானா பட்ஜ், அவளுக்கு சாக்லெட் சிப் குக்கி ஐஸ் கிரீம் வாங்கினான். ஐஸ் கிரீமோடு சேர்ந்து அவளும் கரைந்தாள்.

“நான் சொன்னதுக்கு நீ ஒன்னுமே சொல்லவில்லையே, தவறுதலாக சொல்லிட்டேனா?”

ஐஸ்கிரீம்ல் மும்முரமாக இருந்த மகிதா தலையை நிமிர்த்தி, அவனை பார்த்தாள். அவனது பார்வை கண்களின் வழியாக அவளின் உள்ளே ஊடுருவியது. அவன் கைகளை மெதுவாக பற்றி, மெல்லியதாக புன்னகைத்தாள். அவளுக்குள்ளும் ஒரு வசந்தகாலம் உருவாகியது.

சந்திப்புகள் தொடர்ந்தன. வாரநாட்களில் பெரும்பகுதி அவன் அலுவலக வேலைகளிலும், அவள் படிப்பிலும் கவனம் செலுத்துவதில் தீவிரமாக இருந்தனர், வாரயிறுதி நாட்களில் சேர்ந்தே இருந்தனர். இப்பொழுதெல்லாம் மகிதாதான் நிறைய பேசினாள். அப்பா ஆடிட்டர், அம்மா மருத்துவர். ஒரே பெண். இருவர் துறையையும் தவிர்த்து, வணிக மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற இந்நாட்டிற்கு வந்துள்ளதாகவும், அவளை பிரியவே மனசு இல்லாத பெற்றோருடன் நடந்த வாக்குவாதங்கள், சண்டை போட்டு படிக்க வந்தது, விசா வாங்கிய கதை, நான்கு வருடங்களுக்குமுன்பு அப்பாவுக்கு அட்டாக் வந்தது, அப்போல்லோவில் ஆஞ்சியோ பண்ணியது, அம்மாவுக்கு மூட்டுவலி, தனக்கு பிடித்த உணவுகள், உடைகள், படித்த புத்தகங்கள், பார்த்த இடங்கள், பேசிய மனிதர்கள் என்று ஒன்று விடாமல் தன்னைப் பற்றி சொல்லி தீர்த்தாள். வீட்டின் பின்பகுதியில் தான் விதைத்து, வளர்ந்து பூத்து குலுங்கும் மல்லிகை செடி யைக் கூட விடவில்லை.

நாட்கள் வேகமாக அதே நேரத்தில் இனிமையாகவும் கழிந்தன. அவளது படிப்பு முடியும் காலம் நெருங்கிவிட்டது. தேர்வு எழுதிவிட்டு அந்த பிற்பகல் கல்லூரியிலிருந்து புறப்பட்டு டண்டீ சாலையிலுள்ள ஸ்டார்பக்ஸ் காபி கடையில் கதிரவனை சந்தித்தாள். அதுவே அவர்களது கடைசி சந்திப்பாக இருக்கும் என்று இருவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

படிப்பும் முடிந்து விசா காலமும் முடிவடைவதால், அவள் நாடு திரும்பும் சூழ்நிலை. இருவரும் மணம் செய்துக்கொள்ள வேண்டுமானால், இருவரில் ஒருவர் புலம் பெற வேண்டும். இத்தனை வருடங்கள், நேரமும் உழைப்பும் கொடுத்து உருவாக்கிய நிறுவனத்தை விட்டுவிட்டுவர அவனுக்கு மனமில்லை. அது மட்டுமின்றி, அமெரிக்கா என்கிற மதுவில் விழுந்த வண்டு அவன். இந்தியா, சென்னை, வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்கமுடியாத சூழல் அவனுக்கு. அவளுக்கோ, அப்பா, அம்மாவை விட்டு தனியே இங்கு இந்த ஊரில் வாழ விருப்பமில்லை.

“அதான் ஏன்னு கேட்கிறேன். இங்கே வரமாட்டோமோ, தங்கி வாழ மாட்டோமோ என்று எத்தனையோ பேர் ஏங்கி தவிக்கின்றனர். உனக்கு என்ன பிரச்சினை இந்நாட்டில் வாழ?”

“இல்லை கதிரவன் இது பெரிய சிறைச்சாலை”.

சிரித்தான் கதிரவன். “உலகத்திலே மிக பெரிய மக்களாட்சி செழுமையாக நடைமுறையில் இருக்கும் நாடு இது. இங்கு பேச்சு, எழுத்து, கருத்து சுதந்திரம் அதிகம். இதைப்போய் சிறைச்சாலை என்று சொல்லிட்டியே மகி”.

“உண்மைதான் கதிர். தனிமனித வாழ்க்கைக்கு இது சிறந்த இடமாக இருக்கலாம். ஆனால் சமூகத்தோடு, குறிப்பாக, உறவுகளோடு, நண்பர்களோடு ஒட்டி வாழத் தகுதியில்லை”.

“இது என்ன புது கதை, மகிதா?”

“ஆமாம் கதிர், நினைத்தால், நினைத்தபடி யாரையாவது போய் பார்க்கிறதுக்கு, திருமணம் போன்ற விழாக்களில் கலந்துக் கொள்வது, தேவைப்பட்டால் ஆஃபீஸ்ல லீவு சொல்லிட்டு நண்பர்களோடு ஊர் சுற்ற, இல்லை வீட்டில் ஓய்வெடுக்க எதற்கும் வழியில்லை. திங்கள் கிழமை காலையிலே பரப்பரப்பு தொடங்கி, வாரம் முழுக்க ஓடுது. தினம் காலையில் எழுந்து, ரொட்டி, கார்ன்பிளக்ஸ் என்று எதையாவது அவசர அவசரமாக வாயில போட்டுகிட்டு, மதியத்திற்கு வறண்டு போன சப்பாத்தியக் கட்டிக்கிட்டு ஓடி, நாள் முழுக்க வேலை பார்த்து மாலை வந்தவுடன், மீதி இருக்கும் வீட்டு வேலை, கொஞ்சம் டிவி, கடைசியாக களைப்பில கட்டிலில் விழ வார நாட்கள் இப்படி ஓடுகின்றன. சனி, ஞாயிறுகளில் துணி துவைக்கறது, கடைக்கு போய் பொருட்கள் வாங்குவது, குப்பைகளை சுத்தம் செய்வது, புல்வெளியை சீரமைப்பது, ஊருக்கு போன் பண்ணி அம்மா, அப்பா என ஒரு ரவுண்டு குசலம் விசாரிக்கிறது, வரும் வாரத்திற்கான உணவை தயாரிப்பது என்பதற்குள், ஞாயிற்று கிழமை ஓடிவிடுகிறது. குளிர்காலம் வந்தால், சுத்தம். மனிதர்களையே பார்க்கமுடியாது. கடும் குளிர்ல அலுவலகம், கார், வீடு இதுல ஏதாவது ஒன்னுல முடங்கிகிடனும். இதற்கிடையில், குழந்தை பிறந்துவிட்டால், கவனித்துக் கொள்ள இருவரின் பெற்றோர்களை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாறிமாறி வரச்செய்வது. இதில் குளிர்காலத்தில் வரும் பெற்றோர் நிலைமை, அய்யோ பாவம். இதெல்லாம் வேண்டாம் கதிரவன். இந்த நாடு படிக்கறதுக்கும், சுற்றிப்பார்பதற்கும்தான். தயவுசெஞ்சி எல்லாத்தையும் வைண்ட் அஃப் பண்ணிட்டு சென்னைக்கு வந்துடுங்க”. அவள் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

“இல்லை மகி. நீ யாரையோ பார்த்து தவறுதலான புரிதல்ல இருக்கே. இங்கும் ஒரு பெரிய உலகம் இருக்கு. நாமும் இங்கு நண்பர்களையும் சுற்றத்தார்களையும் உருவாக்கிக்கொள்ள முடியும். இங்கு தமிழ் சங்கம், ரோட்டரி போன்ற அமைப்புகள் உள்ளன. நம்முடைய நேரத்தை செம்மையாக பயன்படுத்திக்க முடியும். இந்தியாவிலேயும் தான், தனக்கு, தன் குடும்பம், வேலை, வீடுன்னு சுருக்கிக் கிட்டு வாழறவங்களும் இருக்காங்க. இங்கேயும் விரும்பறமாதிரி ஊரு சுற்றிப்பார்க்கவும், உல்லாசமாகவும் இருக்கறவங்க நிறைய பேரு இருக்காங்க. தங்கள் வாழ்க்கையை அமைச்சிக்கிறது எப்படிங்கறத, அவங்கவங்க மனசை பொறுத்தது.”. தொடர்ந்து அவன் பக்கத்து நியாங்களை அடுக்கினான்.

ஒருக்கட்டத்தில், மகிதா, “கதிர் அப்பா அம்மாவுக்கு நான் ஒரே மகள், அவங்கள அங்கே தனியா தவிக்கவிட்டுட்டு நான் எப்படி இங்கே நிம்மதியாக இருக்க முடியும்”.

“மகி, அப்பா அம்மா நம்ம வாழ்க்கையில மிக முக்கியமானவங்க. ஆனால் அவர்கள் மட்டுமல்ல நமது வாழக்கை. அவர்கள் நம்மோடு ரொம்ப நாளைக்குப் பயணிக்கப் போகறதில்லை. அவர்கள் போன பிறகும் நமது வாழக்கை தொடரனும், நமக்கு அடுத்தது சந்ததி தொடரும். இதான் வாழக்கை” என்று தத்துவம் பேசினான்.

ஏனோ மகிக்கு அவனது லாஜிக் பிடிக்கவில்லை. அதுவும் அவர்கள் நம்மோடு ரொம்ப நாளைக்கு பயணிக்கப் போவதில்லை என்று சொன்னது அவளை காயப்படுத்திவிட்டது. அவன் பொதுவான உலக நடப்பினை சொன்னாலும், அது தன்னை, தனது தந்தையின் உடல் நலத்தினை சுட்டிக் காட்டுவதாக கருதினாள். அவளுக்கு திடீரென்று அப்பா நினைவு வந்தது. அவரை பார்க்கவேண்டும் என்று தோன்றியது.

“மகி, நீ ரொம்ப குழம்பி போய் இருக்கிற. தெளிவு பிறக்கும்போது நான் சொல்லறது உனக்கு புரியும்” என்றான்.

அவள் இப்பொழுது தான் ரொம்ப தெளிவடைந்து இருப்பதாக உணர்ந்தாள்”

“மேடம், கொஞ்சம் ஸ்மைல் பண்ணுங்க, என்று புகைப்படக்காரர் கத்தினார். அருகில் நின்றிருந்த ரம்யா, “மகி, சிரிடி, ஏன் உம்முனு இருக்கே” என்றாள். என்ன சொல்வது. தனது வாழ்க்கையின் மிகவும் சோதனையான கட்டம் இது என உணர்ந்தாள். எப்படியாவது இதை கடந்துவிட வேண்டும் என்று தவித்தாள். தனது உடைக்குள் வியர்வை காட்டாறாக ஓடி மேலும் சிரமத்தை ஏற்படுத்தியது. ஒரு பக்கம் பயம், இன்னொரு பக்கம் அப்பாவிற்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று கவலை, வரிசையை கவனித்தாள். படியேறி மேடையில் மூன்றாவதாக கதிரவன் நின்றுக்கொண்டிருந்தான்.

அமெரிக்காவிலிருந்து புறப்படும் அன்று அவனிடம் போனில் பேசினாள். அது கூட ஏதோ சம்பிரதாயம் போல் தான் இருந்தது. கடைசியாக காஃபி கடையில் சந்தித்ததுதான். அதற்கு பிறகு அவர்கள் சந்திக்கவேயில்லை. அவள் சரியாகி, எப்படியாவது தன் வழிக்கு வந்துவிடுவாள் என்று கதிரவன் எதிர்பார்த்தான். அவன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு தன்னுடன் வந்தால் சரி, இல்லையென்றாலும் சரி, என்கிற மனநிலைக்கு மகி வந்துவிட்டாள். அவசரமாக அட்லாண்டா பயணிக்கவேண்டி இருந்ததால் விமானநிலையம் வரமுடியாத இயலாமையை வெளிப்படுத்தினான். ஏமாற்றமாக இருந்தாலும், இதுவும் கடந்து போகும் என்கிற நிலையில் மகி இருந்தாள்.

“கதிர் நான் உங்ககிட்ட ஒன்னு கேட்பேன், தப்ப நினைச்சுக்கக் கூடாது. உண்மைய சொல்லணும்”.

“சொல்லு மகி”.

“ஒருவேளை, எனக்கு சென்னையில வேறு ஒருத்தரோட திருமணம் அப்படின்னு கேள்விப்பட்டா என்ன பண்ணுவே”.

“ஹூம். ஸியர்ஸ் டவர்ல இருந்து குதிச்சிடட்டுமா” என்றான்.

“விளையாடாத கதிர், சீரியஸாக கேட்கிறேன்”.

“நான் என்ன பண்ணட்டும் மகி? வேணும்னா, நீ எழுதின காதல் கடிதங்கள், அனுப்பின ஈமெயில் இதெல்லாம் உன் கல்யாணத்துல பரிசா கொடுத்திடட்டுமா?”.

“டேய், நீ அதெல்லாம் செய்ய மாட்டேடா. நீ ரொம்ப நல்லவன். ஏன்டா என்ன புரிஞ்சுக்க மாட்டேங்கற. உன்னோட வேலை, எதிர்காலம், அமெரிக்க வாழ்க்கை இதுதான் உனக்கு பெரிசு. காதல் எல்லாம் உனக்கு பொழுதுபோக்கு, விளையாட்டு அப்படித்தானே” என்று சொல்லும்போதே ஒ வென்று கதறி அழுதாள்.

“ஏய் மகி, என்ன இது, புறப்படும்போது அழுதுகிட்டு. நாம எதையுமே முடிச்சுக்கல. விவாதிப்போம். விரைவில ரெண்டு பேருக்கும் ஏத்த மாதிரி முடிவு எடுப்போம். நானும் பிளைட் போர்ட் பண்ணனும். பத்திரமா போயிட்டு வா. வாட்ஸப்ல பேசலாம்”

சென்னை வந்த பிறகு, போனில் அய்ந்தாறு தடவை பேசியபோதும் உகந்த முடிவுக்கு வரமுடியவில்லை. அவனும் வேலை பளு காரணமாக தொடர்ந்து பயணத்தில் இருந்ததாலும், இரவு-பகல் வித்தியாசத்தாலும், தொடர்புகள் விட்டு போயின. இரண்டாண்டுகள் உருண்டு ஓடிவிட்டது.

இன்றைக்கு காலை அவளுக்கு திருமணம். இதோ இப்போது வரவேற்பு. அவர்களை நோக்கி கதிரவன் நடந்து வந்துக் கொண்டிருக்கிறான்.

கதிரவன் அவர்களிடம் வந்து நின்றான். இருவரையும் பார்த்தான். மகிதா உறைந்து நின்றாள். வினோத், “ஹாய் கதிரவன், என்ன ஆச்சிரியம். எதிர்பார்க்கவே இல்லைடா, நீ வருவேன்னு”.

“முடியாதுன்னுதான் போன வாரம் வரைக்கும் நினச்சேன். அடுத்த ப்ராஜெக்ட் கொஞ்சம் தாமதமாகறதுனால சின்ன பிரேக் கிடைச்சுது. கிளம்பி வந்துட்டேன். வாழ்துகள்டா”

வினோத் மகிதாவிடம், “மகி இவன் என்னோட பள்ளித் தோழன். நெருங்கிய நண்பன், கதிரவன். யுஎஸ்ல இருக்கான். பெரிய ஆளு. உன்னை பற்றி இவன்கிட்டதான் கேட்டேன். உன்னை தெரியும்னான், ஒரே குடியிருப்பாமே. நீ பார்த்திருக்கியா அவனை” விக்கித்து போனாள் மகிதா, அச்சத்தோடு மான் போன்ற மருண்டவிழிகளை சுழற்றினாள்.

அவளைப் பார்த்து, நிமிர்ந்து நேராக, “வணக்கங்க. வாழ்த்துகள்”, என்றான், தன் நடுங்கும் கைகளை சரியாக கூட தூக்கமுடியாமல் அவனை பார்த்தும் பார்க்காமலேயே மிரண்டு நின்றாள்.

“மகி, இவன் உன்னை பற்றி ரொம்ப உயர்வாக சொன்னான். உன்னை கலியாணம் பண்ணிக்க நான் குடுத்து வச்சிருக்கனுமாம். அப்ப என்னை கலியாணம் பண்ணிக்க இவங்க கொடுத்து வச்சிருக்க வேண்டாமாடா” சிரித்துக் கொண்டே வினோத் கேட்டான்.

“அதிலென்ன சந்தேகம், நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்காக இனொருவர் படைக்கப்பட்டவங்க, எப்போதும் சிரிச்சிக்கிட்டு மகிழ்ச்சியாக இருங்க”. என்று வாழ்த்தி, தன் காற்சட்டை பையிலிருந்து ஒரு சிறிய பெட்டியை எடுத்தான். அது அழகான, விலைமதிப்பு மிக்க ரோலெக்ஸ் கைக்கடிகாரம். அதை வினோத்திற்கு பரிசளித்துவிட்டு, நகர முயற்சிதான். வினோத் அவனை வலுக்கட்டாயமாக இழுத்து ஒளிப்படம் எடுத்துக்கொண்டான். ”

நீ ஊருக்கு போவதற்குள் நாம் மீண்டும் சந்திப்போம்”

“இல்லைடா, சாரி. நாளைக்கு காலங்கார்த்தாலே பிரிட்டிஷ் ஏர்வேஸ்ல கிளம்பறேன். அடுத்தமுறை சந்திப்போம். நீங்களும் யுஎஸ் வாங்க” என்று கூறிவிட்டு திரும்பி நடக்கத் தொடங்கினான்.

வரிசையில் அடுத்தடுத்து வாழ்த்த வந்தனர். அவர்களோடு புன்னகைத்துப் பேசினாலும், ஓரக்கண்ணால் அவன் மேடையிலிருந்து இறங்கி நடந்து செல்வதை பார்த்தாள். தான் அவனிடம் சரியாக முகம் கொடுத்து பேசவில்லை என்பது வருத்தமாக இருந்தது. போகும்போதாவது ஒழுங்காக வழி அனுப்பியிருக்கலாம். அவன் எப்படியும் ஒருமுறையாவது திரும்பி பார்ப்பான் என்று நினைத்தாள். ஒருவேளை அப்படி பார்த்தால், புன்னகைத்து வழியனுப்ப வேண்டும் என்றெண்ணினாள். கண்கள் தேடின. வாசலை நோக்கி சென்றுக் கொண்டிருந்தான். திரும்பவில்லை. அவன் போய்விட்டான். கண்களின் ஓரத்தில் நீர் கோர்த்தது. உருண்டு விழுமோ என்ற அச்சத்தில் தனது கைக்குட்டையால் துடைத்தாள். கண்ணிலிட்டிருந்த மையின் கறை கைக்குட்டையின் ஓரத்தில் கருப்புத் திட்டாய் மிச்சமிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *