சில உறவுகளும் சில பிரிவுகளும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 21, 2018
பார்வையிட்டோர்: 14,861 
 
 

“என்னை மன்னிச்சுடு திவ்யா…
நாம நிரந்தரமா பிரிஞ்சுடலாம்…
எங்க வீட்டுல நம்ம காதலை ஒத்துக்க முடியாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க… என்னால எதுவும் செய்ய முடியல… இதுவே நாம சந்திக்கிற கடைசி சந்திப்பா இருக்கும்…” மனதில் இருந்ததையெல்லாம் கொட்டி விட்டு பதற்றத்துடன் திவ்யாவின் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தலை குனிந்தபடி நின்று கொண்டிருந்தான் குமார் .

“என்ன சொல்றே குமார் .. சீரியஸா தான் பேசறியா… என்ன ஆயிடுச்சி உனக்கு… நீயா இப்படி பேசுற என்னால நம்ப முடியல …”அதிர்ந்தபடி கேட்டாள் திவ்யா.

“சீரியஸாதான் சொல்றேன்…
ஐயம் சாரி…இத சொல்ல எனக்கும் கஷ்டமா தான் இருக்கு… ஆனா என்னோட சுச்சுவேஷன் அப்படி… எல்லாத்தையும் மறந்துட்டு நாம பிரிஞ்சுடலாம்…”

“ராஸ்கல்…நான் உன்னை எவ்வளவு நம்பினேன் ….கடைசியில் இப்படி பண்ணிட்டியே…இதுதான் காதலா.. உண்மையைச் சொல்லு உனக்கு எதாவது பெரிய இடதுல பொண்ணு பாக்குறாங்களா… இல்ல என்ன கயட்டிவிட்டு வேற யார் கூடயாவது டைம் பாஸ் பண்ணலாமுன்னு நினைக்கிறியா…”

“அப்படியெல்லாம் நிச்சயமா இல்ல திவ்யா … நான் உண்மைய தான்
சொல்றேன்…ஐயம் ரியலி சாரி… நாம் பிரிவதைத்தவிர வேறவழி இல்ல…”

“போடா… என் மூஞ்சியில் இனிமே நீ முழிக்காதே … தேங் காட் இப்பவாவது உன்னைப் பற்றி முழுசா தெரிஞ்சிக்கிட்டேன்… ஐ ஹேட் யு…”
முகத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி அங்கிருந்து வேகமாக வெளியேறினாள் திவ்யா.

திவ்யா சென்றபிறகும் அவள் சென்ற திசையிலேயே வெறித்துக்கொண்டிருந்தவன்… கதைகளில் வருவது போல் எதிர்பாராமல் தன் வாழ்வில் நடந்து விட்ட விஷயங்களை நினைத்துப் பார்த்தான்.

அன்று காலை விடிவதற்கு முன்பே எழுந்து விட்டிருந்தான் குமார். விடிகாலை நேர அமைதியில் தோட்டத்தில் உள்ள மரத்தில் அமர்ந்த ஏதோ ஒரு பறவையின் குரல் சத்தமாகவும் தெளிவாகவும் ஒலித்தது. இதுவே வேறு சமயமாய் இருந்திருந்தால் அது என்ன பறவை என்று பார்க்க அங்குச் சென்றிருப்பான்…

அன்றோ அவன் மனம் முழுவதும் அன்றைய தினம் அவன் செல்ல வேண்டிய இன்டர்வியூ பற்றிய நினைவு மட்டுமே இருந்தது..

எட்டு மணிக்குள் தயாராகி சரியாக ஒன்பது மணிக்கு அந்த அலுவலகத்தில் இருந்தான்… ஆனால் அங்கு நிறைய பேர் வர வில்லை. இரண்டு வேகன்சிக்காக நான்கு பேரை மட்டுமே அழைத்திருந்தனர். ஏற்கனவே எழுத்து தேர்வு நடத்தி அதன் மூலம் பலரை வடிகட்டிவிட்டு இறுதியாக நான்கு பேருக்கு மட்டும் நேர்முகத்தேர்வுக்கான அழைப்பு அனுப்பப் பட்டிருந்தது.

பட்டப் படிப்பு முடிந்து பல இடங்களில் வேலை தேடி, கிடைத்த ஓரிரு இடங்களில் குறைந்த சம்பளத்துக்குக் கடுமையாய் உழைத்து பின் அந்த வேலைகளிலிருந்து விலகி நல்ல வேலை தேடியே 28 வயதைத் தொட்டிருந்தான் குமார்.

வேலை கிடைக்காமல் அவன் சந்தித்த அவமானங்கள் தான் எத்தனை எத்தனை. ஒரு முறை திவ்யா கூட … “ஏய் சீக்கிரமே நல்ல வேலையை தேடிக்கோடா. எங்க வீட்ல கல்யாண பேச்சு எடுக்கறப்ப எல்லாம் என்னால சமாளிக்க முடியல. இந்த லட்சனத்தில வேலையில்லாத ஒருவனை காதலிக்கிறேனு சொன்னா அவ்வளவு தான்…” அவள் சாதாரணமாய் சொல்லி இருந்தாலும் அது அவனை மிகவும் பாதித்துவிட்டது. “வேலையில்லாதவனுக்குக் காதல் ஒரு கேடா..” .என்று யாரோ கேட்பது மாதிரி இருந்தது.

நீண்ட தேடலுக்குப் பின் இந்த வாய்ப்பு கிடைத்தது. அவன் எதிர்பார்த்த மாதிரியே இது நல்ல வேலை தான். அதுவும் ஒரு முன்னணி நிறுவனத்தில் கைநிறைய சம்பளம். வேலே கிடைத்தால் நிம்மதியாகச் செட்டில் ஆகிவிடலாம்.. இதுவே அவனுக்குக் கடைசி வாய்ப்பு…என்று நினைத்துக் கொண்டான்.

கடவுளே எனக்கு இந்த வேலை கிடச்சிடனும்.. என மனதில் வேண்டிக் கொண்டான். எப்படியாவது இந்த வேலையில் சேர்த்து விடவேண்டும் என்பதில் அவன் உறுதியாக இருந்தான்.

வந்திருந்த நான்கு பேரில் இரண்டு பேர் ஆண்கள் இரண்டு பேர் பெண்கள். முதல் பதவிக்காக அங்கு வந்திருந்த ஒரு ஆணும் பெண்ணும் அடுத்தடுத்து அழைக்கப்பட்டு இருவரில் ஒருவரைத் தேர்வு செய்ய இன்டர்வியூ நடந்து கொண்டிருந்தது.

இனி தானும் தன் எதிரே அமர்ந்திருந்த அந்தப் பெண் மட்டுமே…இருவருக்கும் இடையில் யாராவது ஒருவருக்கு மட்டுமே வேலை கிடைக்கும் என்கிற நிலைமை. அந்தப் பெண்ணை பார்த்தால் திருமணம் ஆனவர் மாதிரி இருந்தது . குமார் அவளைப்பார்த்து தயக்கத்துடன் சிரித்தான் .
அவளும் இவனைப் பார்த்து பதிலுக்குப் புன்னகைக்க அவளிடம்…

“ஐ யம் குமார் …” என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான் .

“ஐ யம் சுந்தரி…” என்றாள் அவள்..

“உங்களுக்கு இது தான் முதல் இன்டெர்வியூவா .. ரொம்ப நெர்வஸ் . ஆக இருக்கீங்க… “ அவள் கேட்டாள்.

“நோ மேடம் . எனக்கு இது எத்தனை யாவது இண்டெர்வியூனு எனக்கே ஞாபகம் இல்ல . சொல்லப் போன என் வாழ்க்கையே வெறும் இண்டெர்வியூலயே முடிஞ்சிடுமோனு கவலையா இருக்கு.”

உங்களுக்கு….என்றான்.

“உண்மையில் எனக்கு இது தான் முதல் இன்டெர்வியூ . நான் வேலைக்குப் போகணும் என்பது என் கணவரோட விருப்பம் . அது தான் அட்டென்ட் பண்றேன்.”

“மேடம்… இப்படி கேக்கிறேன்னு தப்பா நினச்சிடாதீங்க …எனக்கு வேறவழி தெரியலை. முடிஞ்சா உங்களால எனக்கு ஹெல்ப் பண்ணமுடியுமா…
நீங்க கொஞ்சம் விட்டுக் கொடுக்க முடியுமா … இது என் வாழ்க்கை பிரச்சனை, நீங்க மனசு வைச்சா …” என்று கெஞ்சாத குறையாகக் கேட்டுவிட்டான்…

சிறிது நேரம் யோசித்தவள் .. “குமார் நான் வேலைக்கு போக ஒத்துக்கிட்டது, கணவன் மனைவி ரெண்டு பேரும் சம்பாதிச்சா குடும்பத்துக்கு எஸ்ட்ரா வருமானம் வருமும்னு தான் … எப்படியும் நான் இன்னும் கொஞ்ச காலம் வெயிட் பண்ணி வேற வேலைக்குக் கூட போயிக்கலாம் …
உங்க நிலமை அப்படி இல்ல. இப்பவே 28 வயதை கடந்துட்டிங்க..உங்களுக்குத் தான் முதலில் வேலை கிடைக்கணும்… சமூகத்தில் ஒரு கெளரவத்தோடு நீங்க வாழனும்…கல்யாணம் பண்ணி லைப்ல செட்டில் ஆகனும்.. அதுக்கெல்லாம் இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும். உங்களுக்காக நான்விட்டுக்கொடுக்கிறேன் இண்டெர்வியூல சரியா பதில் சொல்லாமல் பேருக்கு அட்டென்ட் பண்றேன்.
ஆல் தி பெஸ்ட் டு யு குமார்…” என்றாள் .

குமாரால் இதை நம்ப முடியவில்லை. “மேடம் …இந்த உதவிய நான் ஜென்மத்துக்கும் மறக்க மாட்டேன் ..நீங்க ரொம்ப கிரேட் … ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மேடம்..”. மனம் உருக நன்றி கூறினான்.

அதன் பின் அந்த வேலை கிடைத்து வாழ்வில் செட்டில் ஆகி இருந்தான் குமார் . அடிக்கடி சுந்தரி மேடத்தை நன்றியுடன் நினைத்துக் கொள்வான் ..

அவனுக்கு வேலை கிடைத்ததும் அந்தச் சந்தோசத்தை திவ்யாவிடம் தான் முதலில் பகிர்ந்து கொண்டான் . ஆனால் சுந்தரி மேடத்துடன் பேசியவைகளை அவளிடம் சொல்லவில்லை. “திவ்யா…. இனிமே நாம காத்திருக்க வேண்டிய தில்லை. கூடியசீக்கிரமே நாம கல்யாணம் பண்ணிக்கலாம் ..டோன்ட் ஒர்ரி டார்லிங்…” என்றான்.

அந்த நிலையில் தான் ஒரு நாள் அவனுடன் வேலை பார்க்கும் நண்பன் மோகனுக்குப் பெண் பார்க்க ஏற்பாடு ஆகியிருந்தது .. கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக காலத்தை நீடித்து வந்தவன் மோகன். திடீரென்று ஒருநாள் அவன் தந்தையின் உடல் நலம்பாதிக்கப்பட தன் மகனுக்கு உடனடியாக திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்ற தந்தையின்
வற்புதலின் காரணமாக வேறு வழியின்றி திருமணத்திற்கு ஒத்துக் கொண்டிருந்தான் அவன்.

“குமார்…எனக்குப் பெண் பார்க்கப் போகும் போது நண்பனா நீயும் கூட வரனும் …” என்று வற்புறுத்தினான்.

நண்பனின் வேண்டுகோளுக்கு ஒத்துக் கொண்டு அன்று பெண் பார்க்க அந்த வீட்டுக்கு மோகனின் குடும்பத்தினருடன் குமாரும் சென்றிருந்தான் .

அந்தச் சம்பவம் தான் அவன் வாழ்க்கையில் எதிர்பாராத ஒரு திருப்பத்தை கொண்டு வருமென்று அவன் கனவிலும் நினைக்க வில்லை .

பெண் பார்க்கும் படலம் எல்லாம் முறையாகத் தான் துவங்கியது . அந்த வீட்டில் பெண்ணின் மூத்த சகோதரியாக வந்தவளைக் கண்டவுடன் ஆச்சர்யமாஇருந்தது குமாருக்கு. அவள் சுந்தரி தான் . அவனுக்காக வேலையை விட்டுக் கொடுத்த அவனின் கடவுள் அவள்.

குமார் சுந்தரியைப் பார்த்து மரியாதையுடன் புன்னகைத்தான்.
சுந்தரி குமாரை பார்த்து பதிலுக்கு புன்னகைத்ததோடு சரி . தன் சகோதரியை அலங்காரம் செய்து தயார் படுத்த சென்று விட்டாள் .

அவளின் சகோதரி ரம்யா பட்டுப்புடவையில் அலங்காரத்துடன் தலை நிறைய பூவைத்துக் கொண்டு அறையிலிருந்து வெளியே வந்தாள். கையில் காபி கப்புகள் நிரம்பிய டிரே இருந்தது.
பரிமாறப்பட்ட ரவா கேசரியும், கேரட் அல்வாவும் , பச்சியும் தனி சுவையுடன் இருந்து.

“எங்க பெண்ணைப் பத்தி நாங்களே சொல்லக்கூடாது தான். ரம்யா நல்ல சமைப்பா. குடுப்பத்தை நல்லா பாத்துக்குவா…அமைதியானவள்…” ரம்யாவின் தந்தை தன் மகளைப் பற்றி பெருமையாகப் பேசினார்.

குமாரும் ரம்யாவை பார்த்தான் . கறுப்பாய் இருந்தாலும் கலையான முகம் . அந்தப் பெண்ணின் முகத்தில் பக்குவமும் அமைதியும் நிறைந்த மாதிரி இருந்தது குமாருக்கு.

ஆனால் மோகனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது . அவனுக்கு அந்தப் பெண்ணை சுத்தமாகப் பிடிக்க வில்லை .

மோகன் மெல்ல தன் நண்பன் குமாரின் காதில் …”எனக்கு இந்தப் பெண்ணை பிடிக்கல… கறுப்பான பெண்ணை என் தலையில கட்டி வைக்க பாக்குறாங்க..” .என்றான்.

குமாருக்கு தன் நண்பனின் மேல் கோபமும் எரிச்சலுமாக வந்தது.

மோகன் தன் பெற்றோர் காதிலும் இதையேசொல்ல அவர்கள் பெண் வீட்டாரிடம் தங்கள் முடிவை பிறகு தெரிவிப்பதாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர் .

அப்போது கிடைத்த சிறு வாய்ப்பில் சுந்தரி மேடத்துடன் பேசி அவளிடம் செல் பேசி எண்ணைப் பெற்று கொண்டான் குமார்.

அதற்கு அடுத்த வாரம் பெண் பிடிக்க வில்லை என்று மோகனின் வீட்டார் சொல்லிவிட அதைக் கேட்டு சுந்தரியின் வீட்டார் மனவருத்தத்துடன் இருந்தனர் .

குமாரின் மனதை இந்தச் சம்பவம் வெகுவாக பாதித்து விட்டது. அதுவும் அவன் மிகவும் மதிக்கும் சுந்தரி மேடத்தின் சகோதரியை நிறத்திற்காக ஒருவரை நிராகரித்து விட்டதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஏனோ அவன் மனம் திவ்யாவையும் ரம்யாவையும் ஒப்பிட்டது.
திவ்யா நல்ல வேலையிருக்கிறாள் . எப்படியும் அவளுக்கு நல்ல வரன் கிடைத்து விடும்…ஆனால் ரம்யா வின் நிலை அப்படியல்ல. வயதும் கிட்டத்தட்ட அவன் வயதை அடைந்து விட்ட அவளின் வாழ்க்கை இனி…. அப்பாவியான ஒரு நல்ல பெண்ணை ஏன் யாரும் புரிந்து கொள்ளவில்லை…என நினைத்தான்.

அன்று இரவே சுந்தரியிடமிருந்து போன் வந்தது.
“என்ன குமார் உங்க பிரன்ட் இப்படி சொல்லிட்டாரு. கறுப்பா பிறந்தது என் தங்கையின் குற்றமா . பெண் நல்லவளா குடும்பத்துக்கு ஏத்தவளான்னு பாக்காம, நிறத்தை மட்டும்பாத்து முடிவுக்கு வராங்க… என்ன மனுஷங்க . உங்க நண்பர் மட்டும் என்ன வெள்ளையாவா இருக்கார், அவரும் மாநிறம்தானே?” …என்றாள்.

“சாரி மேடம். அன்னிக்கி நடந்ததுல எனக்குக் கொஞ்சமும் உடன் பாடில்லை. மோகன் செய்தது தப்பு தான். ஐயம் ரியலி சாரி.
மேடம் நான் உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும். நாளைக்கி ஈவினிங் சிவன் கோவிலுக்கு நீங்கவர முடியுமா?” என்றான் .

மறுநாள் கோயிலில் காத்திருந்தவன் சுந்தரி வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைத்தான் .
“மேடம்… நான் நேரடியா விஷயத்துக்கு வந்திடறேன்…
நீங்க தப்பா நினைக்கல்லேனா ஒண்ணு கேக்கலாமா…” என்றான்.

“எதுவாயிருந்தாலும் தயங்காமல் சொல்லுங்க குமார்.”

“நான் உங்க சிஸ்டர் ரம்யாவை கல்யாணம் பணிக்கலாமுன்னு நினைக்கிறன் . உங்களுக்கு இது சம்மதமா…” என்றான் .

மௌனமாக ஒரு நிமிடம் குமாரின் முகத்தை உற்றுப்பார்த்தாள் சுந்தரி.
“குமார்…நான் உங்களுக்குச் செய்த உதவிக்கு கை மாற நீங்க என் தங்கையை கல்யாணம் பண்ணிக்க வேண்டாம் . உங்களுக்கு அந்த மாதிரி எந்தக் கட்டாயமும் இல்லை . உங்க பிரென்ட் செய்த காரியத்துக்கு நான் உங்களைத் தப்பா நினைக்கலே . கல்யாணம் என்பது உதவிக்காக செய்யறது இல்ல .”

“எஸ் மேடம், எனக்கும் அது புரியுது ஆனா நான் உங்களை ரொம்ப மதிக்கிறேன். உங்களை மாதிரி ஒருத்தரோட சிஸ்டரை திருமணம் பண்ணிக்க நான் தான் கொடுத்து வச்சிருக்கணும். நிச்சயமா உங்க சிஸ்டரும் உங்களை மாதிரி இருப்பாங்கன்னு என்க்கு மனசுல தோணுது . அவங்க கறுப்பா இருந்தாலும் அவங்களுக்கும் தனி அழகு இருக்கு. ஒவ்வொரு பெண்ணும் ஒரு வகையில அழகு பாக்குறதுக்கு தான் கண்ணும் மனசும் வேணும் . வாழ்கை என்பது புரிஞ்சிக்கிட்டு விட்டுக்கொடுத்து வாழ்வது தானே . எனக்கு அவங்களை கல்யாணம் பண்ணிக்க பரிபூரண சம்மதம் . அவங்களுக்கு தான் என்னை புடிக்கணும் …” என்றான்

“நிச்சயமா என் சிஸ்டருக்கு உங்களைப் பிடிக்கும் . நீங்க உங்க வீட்டுல பேசி முறையா வந்து பெண் கேளுங்க …”என்றாள் .

சுந்தரியிடம் பேசிவிட்டுப் புறப்பட்டவன் மனதுக்குள் திவ்யாவிடம் இந்த விஷயத்தை எப்படிச் சொல்வது என்று கவலையாக இருந்தது. அவளிடம் நடந்ததை எல்லாம் சொல்லிவிட்டால் ஒரு வேளை அவள் புரிந்து கொள்வாளா…

அல்லது வேறு ஒரு பெண்ணுக்காக தான் நிராகரிக்கப்பட்டதாக நினைத்து வேதனைப் படுவாளா… ஆனால் அவள் மனதில் தன் மீதான காதல் இருக்கத்தான் செய்யும். அதனால் அவள் வேறு ஒருவனுடன் முழுமையான நேசத்துடன் வாழ முடியாமல் கூட போகலாம்.

தன்வீட்டில் காதலை உறுதியாக மறுத்துவிட்டதாக அவளிடம் கூறிவிடலாம். அப்படிச் சொன்னால் அவளே தன்னை வெறுத்துப் பிரிந்து விடுவாள். அதுவே மேல்… என அவன் நினைத்தான்.

இந்த நிலமையில் தான் மறுநாள் அவளைச் சந்தித்து பிரிந்து விடலாம் என்று சொல்லி மன்னிப்பு கேட்டிருந்தான் குமார்.
குமாரிடம் கோபித்துக் கொண்டு புறப்பட்ட திவ்யாவின் மனதுக்குள் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அவளுக்கு வெளி நாட்டில் வேலை பார்க்கும் ஒரு வரனுடன் திருமணம் ஏற்பாடு செய்திருந்தனர் அவளின் பெற்றோர் . திவ்யா அதை வேண்டாம் என்று எதிர்த்தாள்.
“திவ்யாமா…நீ எங்க பேச்ச மதிப்பேண்ணு நம்பித்தான் இந்த ஏற்பாட்டை நாங்க செஞ்சிட்டோம். உன்னுடைய எதிர் காலம் தான் எங்களோட பெரிய கவலை . இந்தப் பையன் நல்ல மாதிரி . மறுப்பு சொல்லாம நீ இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கணும் என்று உறுதியாகச் சொல்லி விட்டனர்.” அவளின் பெற்றோர்.

தன் காதலை இதுவரை சொல்லாமலிருந்தவள் இந்த நிலையில் தன் பெற்றோரை வேதனைப் படுத்த விருப்பமில்லாமல் இறுதியில் ஒத்துக்கொண்டாள். இதையெல்லாம் எப்படிச் சொல்லி
குமாருக்கு புரியவைப்பது என்ற எண்ணத்துடன் வந்திருந்தாள் அவள். குமார் தன் நிலைமையைச் சொல்ல … அவனுடன்கோபித்துக்கொண்டது போல் பேசிவிட்டு வந்துவிட்டாள் .

ஒரு வேளை அவனிடம் உண்மையைச் சொல்லி இருந்தால் இருவருமே சுமூகமாக பிரிந்திருக்கலாமே … என்று தோன்றியது அவளுக்கு .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *