மணி ஐந்தேமுக்கால் ஆகி விட்டது. இன்னும் தேவு வரவில்லை. வானம் வெளுத்துக் கொண்டு வந்தது. நான் ஐந்தரை மணிக்கே வாக்கிங் கிளம்பி விடுவேன். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்று என் கூட வருவதாக என் நண்பன் தேவு சொல்லியிருந்தான்.
வரவில்லை, தூங்கியிருப்பான். இனிமேல் அவன் வர மாட்டான் என்று நான் கிளம்பினேன். இப்போதே நான் லேட்டுதான். வழக்கமாக இந்த நேரத்தில் நான் ஒரு முறை பதினேழாம் கிராஸிலிருந்து ஐந்தாம் கிராஸ் வரை போய், மறுபடியும் பதினேழாம் கிராஸ் வந்து ஒரு ரவுண்டு வந்திருப்பேன்.
அதே மாதிரி இன்னும் மூன்று முறை வழக்கமாக ரவுண்டை முடித்து விட்டு ஆறரை மணிக்கு மல்லேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனை நான் நெருங்கும் போது அவள் வருவாள்.
இன்று விடுமுறை தினம் என்பதால் அவள் நீல நிற சல்வார் கமீஸில் வருவாள் என்று நினைத்தபடி நடந்தேன். நீல தேவதை. அவள் என்று எந்த உடையில் வருவாள் என்று கற்பனை செய்து அதில் வெற்றியும் தோல்வியும் அடைவது ஒரு பரபரப்பை ஏற்படுத்துவதாக இருந்தது.
அவள் வீடு மார்க்கெட் அருகில் இருந்தது என்று பார்த்து வைத்திருந்தேன். இது வரை பேச வாய்ப்பு கூடவில்லை. ஆனால் பார்வைப் பரிச்சயம் இருந்தது. அதாவது நான் பார்ப்பேன். அவள் பார்த்தும் பார்க்காதது போல் ஒரு பார்வையை வீசி விட்டு அலட்சியமாகக் கடந்து போவாள்.
ஒரு முறை அவளைப் பார்த்துப் புன்னகை செய்ய முயன்றேன். பதில் புன்னகை கிடைக்கவில்லை. அவள் என்னைச் சரியாகப் பார்க்க வில்லை என்று சமாதானம் செய்து கொண்டேன்.
அவள் பார்ப்பதற்கு அழகாக இருப்பாள் என்று சர்வ சாதாரணமாகச் சொல்வது அவள் அழகுக்கு செய்யும் துரோகம். நல்ல உயரம். சற்று சதைப் பிடிப்பான உடல். அது அவளது உயரத்துக்கு ஈடு கொடுத்து அவளை மேலும் அழகியாகக் காட்டியது. பளீரென்று நெற்றி வலது பக்க நாசியில் டாலடிக்கும் ஒரு சிறிய மூக்குத்தி. காதில் அதே மாதிரி டாலடிக்கும் தோடு. சிறிய குவிந்த உதடுகள் சிவப்பும் இல்லாமல் கறுப்பும் இல்லாமல் காந்தத்தின் திறன் கொண்ட ஒரு நிறம். பளிச்சென்ற தோற்றம்.
அவள் பெயர் என்னவென்று இன்னும் எனக்குத் தெரியவில்லை. யாராவது அவள் கூட வந்தால், அவர்கள் பேசிக் கொண்டு போனால் அறிய வாய்ப்புக் கிட்டியிருக்கும். ஆனால் எப்போதும் தனியாக வருவாள். அதுவும் நல்லதுக்கு என்று நினைத்துக் கொள்வேன். தனியாக வருபவளை அழுத்தம் திருத்தமாகப் பார்க்க முடியும். அப்படி நான் பார்ப்பது சரியல்ல என்று உள் மனது சொன்னாலும், கண்கள் கேட்டதில்லை.
உள் மனதோடு ஒத்துப் போகாத இன்னொரு போக்கிரி மனமும் என்னுள் இருந்து என்னை ஊக்குவித்துக் கொண்டு இருந்தது.
அவளுக்குக் கல்யாணமாகி இருக்குமோ என்று சந்தேகம் வருவதுண்டு. கழுத்தில் ஒரு செயின் போட்டிருந்தாள். அதை வைத்து எதையும் கண்டு பிடிக்க முடியாது என்றாலும் அது தாலிக்குப் பதில் என்றுதான் தோன்றிற்று. ஒரு முறை அவள் வீட்டைக் கடந்து போகும் போது, வீட்டிலிருந்து ஒருவர் வெளியே வந்து கொண்டிருந்தார். உயரமான மனிதர்.
அவளுடைய அண்ணாவாயிருக்கும் என்று மனம் முந்திக் கொண்டு பதில் சொல்லியது. அந்தப் பதில் எனக்கு உவப்பாக இருந்தது.
இன்று நான்கு சுற்றுகள் கிடையாது, மூன்றுதான் என்று தீர்மானித்து விட்டேன். அப்போதுதான் அவளை வழக்கமான இடத்தில் நான் பார்க்க முடியும். தினமும் மனதில் ஏற்படும் எதிர்பார்ப்பு இன்றும் தோன்றியது. ஒருவேளை இன்று என்னைப் பார்த்து அவள் புன்சிரிப்பு சிந்தக் கூடுமோ அல்லது அட்லீஸ்ட் அவள் நட்புடன் ஒரு பார்வையைச் செலுத்தினால்…
மனது ஒரு விவஸ்தை கெட்ட ஜன்மம். தினமும் ஏமாந்து கொண்டே இருந்தாலும், அடுத்த தடவையாவது என்று சப்புக் கொட்டிக் கொண்டே எதிர்பார்க்கும் விசித்திர ஜந்து.
நான் ஒன்பதாவது கிராஸிசில் இடப் பக்கம் திரும்பி எட்டாவது மெயினைத் தாண்டி நடந்தேன். ஆஞ்சநேயர் கோயிலை நெருங்கிய சமயம், தூரத்தில் அவள் தெரிந்தாள். ஆனால் என்ன இது? அவளுடன் கூட யாரோ ஒருவன் நடந்து வருகிறான். யார் அது அவள் வழியில் பார்த்து விட்ட ஆசாமியோ? நான் அவள் வரும் சாலையின் பக்கமே நடந்து சென்றேன். போகிறவர்களும், வருகிறவர்களும் எதிரெதிர் பக்கங்களில் நடப்பது தான் வழக்கம் என்றாலும், நான் எப்போதும் அவள் வரும் பக்கமே தினமும் நடந்து செல்வேன். அவளிடமிருந்து கிளம்பி வரும் மேனி வாசனை, நெருக்கத்தில் அவளைப் பார்க்கும் வாய்ப்பு என்று அதற்கு ஏகப்பட்ட காரணங்கள் இருந்தன.
இப்போது அவள் சற்று நெருக்கத்தில் நடந்து வந்து கொண்டிருந்தாள். நீல நிற உடை. என் மனம் துள்ளிக் குதித்திருக்க வேண்டும். ஆனால் அவள் கூட வரும் ஆள் கெடுத்து விட்டான். இப்போது அவனையும் பார்க்க முடிந்தது. “மை காட் இவர் அன்றொரு நாள் அவள் வீட்டிலிருந்து வெளியே போய்க் கொண்டிருந்த மனிதர் அல்லவா? அவளுடைய அண்ணா.
நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவர் அவளது வலது கையைத் தனது இடது கையால் பற்றிக் கொண்டார். இருவரும் ஜோடியாக நடந்து வந்தனர். நான் அவரைப் பார்த்தேன்.
அவர்கள் அருகே நெருங்கினர். அவர் என்னைப் பார்த்து, “ஹலோ குட் மார்னிங்” என்றார்.
நான் திகைத்துப் போய் என்னை அறியாமலே “ஹலோ” என்றேன் பதிலுக்கு.
அவர் புன்னகையுடன், “ஹாவ் எ குட் டே” என்றபடி அவளுடன் மேலே நடந்தார்.
சற்று தூரம் என் வழியில் நடந்து போகும்போது, அவருடைய வாழ்த்துக்கு நன்றி கூறவில்லையே என்று நினைத்தேன். அமெரிக்காவில்தான் இம்மாதிரி வாக்கிங் போகும் போது முன்பின் தெரியாதவர்களைக் கூட வாழ்த்துவார்கள் என்று தேவு ஒரு தடவை என்னிடம் சொல்லியிருக்கிறான். எதற்காக அந்த மனிதர் என்னை வாழ்த்தினார்? அவள் அவரிடம் – அவளுடைய கணவன் போல்தான் இருக்கிறார் – நான் தினமும் அவளைப் பார்த்து ஜொள்ளு விடுவதை சொல்லியிருப்பாளோ, அப்படி இருந்தால் வாழ்த்துவது எப்படி?
நான் குழம்பிக் கொண்டே சென்றேன். மனதுக்குள் படு ஏமாற்றமான உணர்வு இருந்தது. அந்த மனிதர் மீது கோபம் வந்தது. அவர் எதற்காக என்னிடம் பேசினார் என்று இருந்தது.
மறு நாள் வழக்கம் போல ஐந்தரைக்கு வாக்கிங் கிளம்பி விட்டேன். இன்று அவள் தனியாக வருவாளா அல்லது…குடைச்சலாகத்தான் இருந்தது. நான் ரயில்வே ஸ்டேஷனைக் கிராஸ் செய்யும் போது அவள் எதிர்ப்பட்டாள். கூடவே அவரும். அவர்கள் என்னை நெருங்கும் போது அவரைப் பார்த்தேன். புன்னகையுடன் கையை அசைத்தார்.
“குட் மார்னிங். ஹாவ் எ குட் டே” என்றபடி கடந்து சென்றேன். அவளை ஒரு கணமும் ஏறிட்டு என்னால் பார்க்க முடியவில்லை.
அவள் சிரித்துக் கொண்டே சென்றது எனக்குக் கேட்டது.
– ஜூன் 2016