சாமி போட்ட முடிச்சு

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 7, 2012
பார்வையிட்டோர்: 12,499 
 
 

குடிசைக்கு வெளியே கயிற்றுக் கட்டிலைப் போட்டுக் கொண்டு வானத்து நட்சத்திரங்களை பிரமிப்புடன் பார்த்தபடியே படுத்துக் கிடந்த சாமியாடிக்கு தெக்காலத் தோப்புப் பக்கமிருந்து வந்த நாய்க் குரைப்புச் சத்தம் சற்று உறுத்தலாகவே இருந்தது. “இதென்ன கருமமோ தெரியல இன்னிக்கு நாய்க இந்தக் கூப்பாடு போடுதுக…ஒருவேளை வெள்ளானப்பட்டியில் ப+ந்த மாதிரி…நம்மூர்ப்பக்கமும் முகமூடித் திருடனுக ப+ந்துட்டானுகளோ?” யோசனையுடன் எழுந்து கொய்யா மரத்தருகே சென்று தெக்காலத் தோப்புப்பக்கமாய்ப் பார்வையைச் செலுத்தினார். தூரத்தில் நேர்கோடாய்ப் படுத்துக் கிடந்த ரயில் தண்டவாளத்தின் மீது யாரோ இருவர் ஓடிக் கொண்டிருப்பது இருட்டில் நிழலுருவாய்த் தெரிய,

“யாரு…இந்த நேரத்துல?” தனக்குத் தானே கேட்டுக் கொண்டவர் பரபரப்பானார். ஒரு கையில் லாந்தர் விளக்கையும் இன்னொரு கையில் மூங்கிற் கழியையும் எடுத்துக் கொண்டு அந்த நிழலுருவங்களைத் துரத்திக் கொண்டு ஓடினார்.

சாமியாடிக்கு வயது அறுபதை நெருங்கி விட்டிருந்தாலும் திருமணம்…மனைவி…குழந்தை குட்டிகள் என்கிற இல்லற பந்தத்தில் மாட்டிக் கொள்ளாது பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து விட்ட காரணத்தால் அவரது உடம்பிலும் மனசிலும் இன்றுவரை வாலிப முறுக்கமே வற்றாது நிறைந்திருந்தது.

நாலு கால் பாய்ச்சலில் ஓடிய சாமியாடி அந்த இருவரையும் வெகு சுலபத்தில் நெருங்கினார். “அட..ரெண்டுல ஒண்ணு பொம்பளையாட்டம்ல இருக்கு”

சட்டென்று வேகத்தை அதிகப்படுத்தி அவர்களைத் தொட்டு வழிமறித்து நின்றார். கையிலிருந்த லாந்தரை உயரத் தூக்கி வெளிச்சத்தை அவர்கள் முகத்தில் பாய்ச்சியவர் “எலே மனோகரா..நீயா?..இது யாருல?..நம்ம சலூன்கடை சோமு பொண்ணாட்டமல்ல இருக்கு…ஏம்மா நீ சோமு பொண்ணுதானே?”

அவள் மேலும் கீழுமாய்த் தலையாட்ட,

“என்னலே..என்ன கூத்து நடக்குது இங்க?…அர்த்த ராத்திரில கண்ணாலமாகாத ஆம்பளைப் பையனும்..பொம்பளப் புள்ளையும் என்னலே பண்ணிட்டிருக்கீங்க?…அதுவும் நட்ட நடு தண்டவாளத்துல”

சரேலென்று அவர்கள் இருவரும் ஒருசேரக் கீழே அமர்ந்து சாமியாடியின் கால்களை இறுகப் பற்றிக் கொண்டு “அய்யா…எங்களைக் காட்டிக் குடுத்துடாதீங்க” என்று கெஞ்ச ஆரம்பித்தனர்.

தர்மசங்கடத்திற்குள்ளான சாமியாடி “சரிலே..காட்டிக் குடுக்க மாட்டேன்லே…போதுமா,” என்று சொல்லி விட்டு தூரத்தில் வெளிச்சப் புள்ளியாய்த்; தெரியம் ரயிலின் ஹெட்லைட்டைப் பார்த்து விட்டு “எலே…ரயில் வருதுலே..மொதல்ல கீழே எறங்குங்கலே.. எறங்கி அதா..அங்கிட்டுத்தான் ஏங் குழசையிருக்கு.. அங்கிட்டு போய்ப் பேசுவோம்லே”

சாமியாடி லாந்தருடன் முன்னே நடக்க அவர்களிருவரும் பின் தொடர்ந்தனர்.

குடிசைக்குள் ‘மினுக்…மினுக்’ கென்று எரிந்து கொண்டிருந்த சிம்னி விளக்கின் வெளிச்சத்தில் அந்த மனோகரனின் முகத்தை ஊடுருவிப் பார்த்தார் சாமியாடி. அவர் மனத்திரையில் சென்ற மாதம் பிரதோஷத்தி;ன் போது கோயிலில் நடந்த அந்த நிகழ்ச்சி ஓடியது.

“த பாருப்பா மனோகரா…நீ பகுத்தறிவுக் கட்சிக்காரனாயிருக்கலாம்… அதுக்காக பரம்பரை பரம்பரையா சாமியாடிக்கிட்டிருக்கற நம்ம சாமியாடியையும.;.அவர் தொழிலையும் “ஏமாத்து வேலை…ஃபிராடுத்தனம்”ன்னு கேவலப்படுத்திப் பேசுறது சரியில்லைப்பா” ஊர்ப்பெரியவரும் கோயில தர்மகர்த்தாவுமான பொன்னுரங்கம் சொல்ல,

“அய்யா..இது கம்ப்ய+ட்டர் காலமய்யா…அவனவன் நாளுக்கொரு சாட்டிலைட்…பொழுதுக்கொரு போயிங்’ விமானம்னு தயாரிச்சிட்டிருக்கான்…இந்தக் காலத்துல போய் சாமியாடியாம்…அருள் வாக்காம்….போதுங்கய்யா..இந்த மூடத்தனத்தையெல்லாம் இத்தோட மூட்டை கட்டி வெச்சுட்டு ஊரு முன்னேற ஏதாவது திட்டம் போட்டு…வழிமுறைகளை யோசிங்கய்யா” மனோகரன் அலட்சியமாக பதில் சொன்னான்.

அந்த பதில் தர்மகர்த்தா அய்யாவின் கோப நரம்பைச் சுண்டி விட “எதை..எதை மூடத்தனம்கறே,” கத்தலாய்க் கேட்டார்.

“ம்..சாமியாடி உளர்றதையெல்லாம் அருள் வாக்குன்னு எடுத்துக்கிட்டு..அதன்படியே நடக்கறீங்களே..அதைத்தான் சொல்றேன் மூடத்தனம்ன்னு” ஆணித்தரமாய்ச் சொன்னான் மனோகரன்.

“இருக்கட்டும்…அது மூடத்தனமாகவே இருக்கட்டும்ஃஆனா அதைக் கேட்டு நடந்ததினாலதான இந்த ஊர் இன்னிக்கு வரைக்கும் வெள்ளாமை செழிக்க…வெளை நிலங்க கொழிக்க சுபிட்சமா இருக்கு..உன்னைய மாதிரி அருள்வாக்கை மதிக்காம இருந்திருந்தா ஊர்ல பஞ்சம் வந்து அவனவன் கத்தாழையையும்..களிமண்ணையுந்தான் தின்னுட்டிருக்கோனும்”

“பச்..ம்ஹ_ம்…இதுக திருந்தாதுக” என்று ஏங்கோ பார்த்தபடி முணுமுணுத்த மனோகரனை நெருங்கி வந்து. அவன் தோளைத் தொட்டு திருப்பிய தர்மகர்த்தா “இப்ப..திருந்த வேணடியது நாங்க இல்ல…நீதான்…ஒண்ணு சொல்றேன் நல்லாக் கேட்டுக்க… இதா இந்த சாமியாடியோட அப்பன்..பாட்டன்…முப்பாட்டன் எல்லாருந்தான் காலம்காலமா இங்க சாமியாடி..அருள்வாக்கு சொல்லி ஊரைக் காப்பாத்திட்டு வர்றாங்க…அதனால நீ மட்டுமல்ல..எவன் வந்து சொன்னாலும் நாங்க இந்த வழக்கத்த மாத்திக்க மாட்டோம்…அருள்வாக்குப்படிதான் நடப்போம்..இஷ்டமிருந்தா இந்த ஊர்ல இருந்து பொழப்புத்தனம் பண்ணு…இல்லையா போயிடு…இந்த ஊரை விட்டே போயிடு” வெடுக்’கென்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தார்.

வெளியில் எங்கோ…ஏதோ…ஒரு பறவை விநோதமாய் அலற அந்த அலறல் சத்தத்தில் சுயநினைவக்கு வந்த சாமியாடி எதிரே உட்கார்ந்திருந்த மனோகரனிடம் “ம்…சொல்லுங்க..பேயும் பிசாசும் உலாத்தற இந்த சாமத்துல எங்கலே போறீங்க ரெண்டு பேரும்?”

“அய்யா..தெரிந்தோ…தெரியாமலோ..நாங்க ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் உசுருக்குசுரா பிரியம் வெச்சிட்டோம்…நான் வேற சாதி…இவ வேற சாதி…எனக்கு அதெல்லாம் பிரச்சினையில்லை…ஆனா இந்த ஊரு..அதை ஏத்துக்காதே…நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ விடாதே…அதனால…அதனால…”

“அதனால ரெண்டு பேரும் ஓடிப் போக முடிவ பண்ணிட்டீங்களாக்கும்”

“ஆமாம்”

“ஹா..ஹா…ஹா…”என்று வாய் விட்டுச் சிரித்த சாமியாடி “ஏலே…அன்னிக்கு கோயில் தர்மகர்த்தாகிட்ட அத்தன வித்தாரம் பேசுன…அப்புறம் ஏன்லே கோழை மாதிரி ஓடறே,…சாவுறேங்கறே…இங்கிட்டே இருந்து இவளைக் கண்ணாலங் கட்டிட்டு வாழ்ந்து காட்டுலே”

சாமியாடி தன்னைக் கிண்டல் செய்கிறாரா…இல்லை தனக்கு ஆதரவாப் பேசறாரா…என்பது புரியாமல் குழம்பிப் போன மனோகரன் “எப்படி…எப்படி முடியும்..அதான் இங்கிருக்கற ஜனங்கெல்லாம் மூடத்தனத்திலும்…முட்டாள்தனத்திலும் ஊறிப் போய்க் கெடக்கறாங்களே.. அவங்க கிட்டப் போயி “ஜாதி பேதம் கூடாது…”ன்னு சொன்னா ஏத்துக்கவா போறாங்க…மரமண்டைக…மண்ணாங்கட்டி ஜென்மங்க”

“அப்ப நீ சொல்லாததை நான் சொல்லவா?”

“ஆஹா…நீங்க சொன்னா மட்டும் கேட்டுக்குவாங்களாக்கும்,….“சாமியாடிக்கு புத்தி கெட்டுப் போச்சு…”ன்னு சொல்லி உங்களையும் ஒதுக்கி வெச்சுடுவாங்க…”

“சரிலே..நாஞ் சொன்னாத்தான்லே ஒதுக்குவானுக…சாமியே சொல்லுச்சின்னா..”

“எரிச்சல் பண்ணாதீங்கய்யா..சாமி எப்படிச் சொல்லும்.?.” பகுத்தறிவுவாதியான மனோகரன் கடுப்பானான்.

“சொல்லும்லே…அருள் வாக்கா சொல்லும்லே” சாமியாடி அர்த்தபுஷ்டியுடன் சிரிக்க

நெற்றியைச் சுருக்கிக் கொண்டு அவரைப் பார்த்தான் மனோகரன்.

“ஆமாம்லே வர்ற பௌர்ணமியன்னைக்கு மறக்காம ரெண்டு பேரும் கோயிலுக்கு வாங்கலே…வந்து அங்கிட்டு நடக்கப் போற அதிசயத்தப் பாருங்கலே”

“என்ன சாமி..நீங்க என்ன சொல்றீங்க?”

“எதுவும் கேக்காதலே..பௌர்ணமிக்கு கோயிலுக்கு வா…அவ்வளவுதான்”

“சரி”யென்று அரை மனதுடன் தலையாட்டினான் மனோகரன்.

அன்று பௌர்ணமி பச்சை நாயகி அம்மன் கோயிலில் வழக்கத்தை விட கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. தர்மகர்த்தா குடும்பம் சாமி கும்பிட்டு விட்டு;; வெளிப் பிரகாரத்தில் வந்தமர்ந்த போது சின்னப் ப+சாரி ஓடி வந்து “அய்யா…சாமியாடிக்கு அருள் வந்திருக்கு” என்று சொல்ல,

“ஆத்தா…”என்று வானத்தைப் பார்த்துக் கும்பிட்டுக் கொண்டே ஓடினார் தர்மகர்த்தா பொன்னுரங்கம்.

“அடேய்…நா அகிலங் காக்க வந்த அகிலாண்டேஸ்வரிடா…வையங் காக்க வந்த வெக்காளியம்மன்டா…உங்க பாவந் தீர்க்க வந்த பச்சை நாயகிடா…”

சாமியாடி தன் சடா முடியை விழித்துப் போட்டுக் கொண்டு கண்களை உருட்டிக் கொண்டு அடித் தொண்டையில் அலறிக் கொண்டிருந்தான்.

கூட்டம் ‘மள..மள’வென்று கூடியது. தர்மகர்த்தா கூட்டத்தின் முன்னால் வந்து “தாயே..பச்சை நாயகித் தாயே…சொல்லு தாயே…உன்னையே அண்டிக் கெடக்கற இந்த ஊர் மக்களுக்கு நல்லதொரு அருள் வாக்குச் சொல்லு தாயே” துண்டை இடுப்பில் கட்டியவாறே கேட்டார்.

“அடேய்..இந்த மண்ணுக்கு நல்லது செய்யத்தாண்டா இங்கியே அவதாரம் எடுத்து வந்திருக்கேன்.. இங்க முடிவெடுக்கறவன் நீயாயிருக்கலாம்…ஆனா முடியெடுக்கறவன் பொண்ணு நான்டா..முடியெடுக்கறவன் பொண்ணு நான்”

கண்களை மூடிக் கொண்டு சில விநாடிகள் யோசித்த தர்மகர்த்தாஃ “ஆஹா…சோமு பொண்ணு உன்னோட அவதாரமா தாயே?” நெகிழ்ந்து போய்க் கேட்டார்.

“ஆமாம்டா…என்னைய பழிச்சுப் பேசுற ஒரு நாத்திகப்பயலை…பழி தீர்க்க வந்திருக்கேன்டா…அவனைக் கட்டிட்டு அவனுக்குப் பாடம் புகட்ட அவதாரமெடுத்து வந்திருக்கேன்டா… எனக்கு அவனைக் கட்டி வையுங்கடா…சீக்கிரமே திருக்கல்யாண ஏற்பாடுகளை ஊர்ச்செலவுல பண்ணுங்கடா”

அருள் வாக்கின் விபரத்தைப் புரிந்து கொண்ட தர்மகர்த்;தா சலூன் கடை சோமுவை அழைத்து வர ஆளனுப்பி விட்டு. கூட்டத்தை நோக்கித் திரும்பி ‘அந்தப் பகுத்தறிவுப்பயல் இங்கியா இருக்கான்?,” கேட்டார்.

கூட்டம் மனோகரனை முன்னுக்குத் தள்ளி விட, ஆவேசமாய் வந்து அடக்கமாய் கை கட்டி நின்றான் அவன்.

அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்த தர்மகர்த்தா “பாத்தியாடா..அன்னிக்கு சாமியாடியப் பழிச்சுப் பேசினியல்ல..இன்னிக்கு அதே சாமியாடி மூலமா உனக்கு தூது அனுப்பியிருக்காடா பச்சை நாயகித்தாய்! ..த பாரு .மேல் சாதி…கீழ் சாதின்னுட்டு ஏதாவது தகராறு பண்ணினே ஊரை விட்டே ஒதுக்கி வெச்சிடுவோம்…ஒழுங்கா மரியாதையா சோமு பொண்ணைக் கல்யாணங் கட்டிட்டு புண்ணியந் தேடு!…என்ன…?”

பவ்யமாய்த் தலையாட்டினான் மனோகரன்.

அவன் பவ்யத்தைப் பார்த்து வியந்து போன தர்மகர்த்தா “ஆஹா…அன்னிக்கு அந்தப் பேச்சு பேசியவனை இன்னிக்கு பொட்டிப் பாம்பா அடக்கிட்ட ஆத்தாளொட மகிமையே மகிமை” வாய் விட்டுச் சொல்லி மகிழ்ந்தார்.

அருள் வாக்கு முடிந்து அயர்ந்து கிடந்த சாமியாடி மெல்லக் கண் திறந்து மனோகரனைப் பார்க்க அவன் தன் கண்களால் நன்றி எழுதினான்.

எந்தக் காலத்திலும்….எந்தச் சூழ்நிலையிலும் பொய்யே பேசியறியாத சாமியாடி ஒரு உண்மைக் காதலுக்காக…ஊரில் புரையோடிக் கிடந்த ஜாதி பேதங்களை ஒழிக்க…. பொய் நாடகம் ஒன்றை அரங்கேற்றி விட்டு. பச்சை நாயகியிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

– 26 ஆகஸ்ட், 2012

Print Friendly, PDF & Email

1 thought on “சாமி போட்ட முடிச்சு

  1. மூட நம்பிக்கையே உண்மை காதலுக்கு உயிர் குடுத்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *