சவீதாவும் அவளது இரு அக்காக்களும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 18,170 
 
 

“அந்த அளவு திறமை உள்ள மாணவர் நம் செயராமன். இன்னும் சிறிது முயன்றால், மாநில அளவில் ஏதேனும் ரேங்க் பெற வாய்ப்பு இருப்பதாக நானும் சக ஆசிரியர்களும் பேசிக்கொண்டோம். படிப்பில் மட்டுமின்றி; ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கியவர் செயராமன். அவரது அகால மரணம்…”

– தலைமை ஆசிரியர் உருகிக்கொண்டு இருந்தார். சில மாணவ-மாணவியர் கண்ணீரைத் துடைத்துக் கொண்டனர். ‘ஒரு கணித மேதையை, கம்ப்யூட் டர் நிபுணரை, ஐ.ஏ.எஸ். அதிகாரியை நாடு இழந்துவிட்டது. இப்போது நாம் கண் மூடி, அவருடைய ஆத்மா…”

நானும் சுப்புணியும் கண்களை மூட ஆயத்தமானபோது உடற்கல்வி ஆசிரியர் த.ஆசிரியரின் காதில் ஏதோ முணுமுணுத்தார்.

சவீதாவும் அவளது இரு அக்காக்களும்அடுத்த கணம் தலைமை ஆசிரியரின் கண்கள் சிவந்தன. ”அவருடைய ஆத்மா… ஏல! எவம்ல எங்கிட்ட வந்து செயராமன் மருந்துன்னு நினைச்சு, தவறுதலா விஷத்தைக் குடிச்சுட்டான்னு சொன்னது? அத நம்பி, நானும் ஸ்கூலுக்கு லீவ் விடப் பாத்தேனே… அவன் ஏதோ பொட்டப் புள்ளகிட்ட லவ் லெட்டர் குடுத்து, அந்தப் புள்ள காதலை ஏத்துக்காததால மனம் உடைஞ்சு தற்கொலை பண்ணியிருக் கானாம்ல. இதுக்கெல்லாம் லீவு விட்டா, பள்ளிக்கூட மானம் வெளங்கிரும். என் மேலதி காரி ஓலை கொடுத்து அனுப்புவான். சத்தம் போடாம அவங்கவங்க கிளாஸுக்குப் போங்க…”

கண்ணீர் அஞ்சலி செலுத்தத் துடித்துக்கொண்டு இருந்த மாணவ-மாணவியர்களும், ஆசிரியர் கூட்டமும் ஒருநாள் விடுமுறை சட்டென்று பறிபோன துயரைத் தாங்க முடியாமல், செயராமனின் ஆத்மாவை அதோகதியாக விட்டுவிட்டு அவரவர் வகுப்பறைக்குச் சென்றனர்.

”எனக்குத் தெரியும்… இந்த செயராமன் ஒரு யூஸ்லெஸ் ஃபெலோனு. ஆமாம், அந்தப் பொண்ணு யாராம்?”- த.ஆ.

”அந்த மூணுல கடைசி” என்றார் உ.ஆ.

”நெனைச்சேன்.”

சாருலதா, சாரதா, சவீதா.

சாருலதாவை மட்டும் பார்க்கும்போது ஒருவன், இவள்தான் உலகிலேயே அழகி என்பான். சாரதாவுடன் சேர்த்துப் பார்த்தால் அவளா, இவளா என்று குழம்புவான். சவீதாவையும் சேர்த்துப் பார்த்தால், உச்சகட்டக் குழப்பத்தில் பைத்தியம் பிடித்து ஓடுவான்.

இவர்களில் ஒருத்தியின் காதல் மறுக்கப்பட்ட பிறகு, ஒருவன் சாவது அதிகபட்சம். பார்த்த அடுத்த நொடியே வாழ்வில் இனி என்ன இருக்கிறது என்ற தன்னிறைவிலேயே தன்னைத்தானே முடித்துக்கொள்வதுதான் நியாயம்.

அதிர்ச்சி அடையவைக்கும் அதீத அழகிகளால் நானும் சுப்புணியும் மட்டும் அல்ல; தோப்பூரில் ஏறக்குறைய எல்லா ஆண்களுமே நடைப்பிணங்களாகவும் பைத்தியங்களாகவுமே வாழ்ந்துவந்தோம். எனினும், மற்றவர்களுக்கு இல்லாத சிக்கல் எங்களுக்கு இருந்தது. இந்த அற்புதங்களின் பெற்றோரான பெரியசாமியும் மங்களமும் பாதுகாப்பான நாட்களைத் தவறுதலாகக் கணக்கிட்டதால், தேவதைகளுக்கு அப்புறம் பிறந்த ஒரு மகனும் இருந்தான். நம்பிராஜன். எங்களது க்ளாஸ்மேட். அழகான பெண்களுக்குச் சகோதர னாக இருப்பவனுடன் ஏற்படும் நட்பு வெகு தர்மசங்கடமானது. நாகரிகமும் நட்பும் கருதி ரசிக்கவும் முடியாது; புலன்களை வென்ற மாதிரி நடிக்கவும் முடியாது. ஒரு கட்டத்தில் இரட்டை வேடத்தைத் தொடர முடியாமல், நம்பியை விரோதிப் பட்டியலில் சேர்த்துவிட நாங்கள் யோசித்துக்கொண்டு இருந்தபோதுதான், பெரியசாமி நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார்.

பூமி வாழ் தேவதைகளுக்குப் பசிக்கும் அல்லவா? எனவே, அவை ஒரு டாக்டரிடமும் ஃபேன்ஸி கடையிலும் ஜெராக்ஸ் கடையிலும் பணிபுரியச் சென்றன. நம்பியும் பத்தாம் வகுப்பைப் பாதியிலேயே துறந்து, ஜோசப் விறகுக் கடையில் எடுபிடி அல்லது ஊழியன் அல்லது இரண்டாம் நிலை ஆளானான். எங்களை எப்போதாவது பார்த்தால், படிப்பைப் பற்றி விசாரிப்பான்.

அந்த டாக்டரிடம் திடீரெனப் புறநோயாளிகள் அதிகரித்தார்கள். ”பிரேசில்ல பறவைக் காய்ச்சல்னு பேப்பர்ல போட்டிருக்கான். எதுக்கும் நாமளும் ஒரு தடவை செக் பண்ணிக்கலாம்னு… சாருலதா, தங்கச்சிங்க நல்லா இருக்காங்களா?” தங்கள் பாட்டிகளுடன் சென்று இளைஞர்கள் ஃபேன்ஸி நகைகள் வாங்கவும் பஸ் டிக்கெட்டை ஜெராக்ஸ் எடுக்கத் தலைப்பட்டார் கள். ”இந்த மூலம், பௌத்திரம் நோட்டீஸ் பஸ்ல கொடுத்தாங்க சவீதா. தெரிஞ்சவங்களுக்குக் கொடுக்கலாமேனு… ஒரு பத்து காப்பி…”

ஆனால், தோப்பூரின் முதலாளிகள் ஊதியம் வழங்கும் நாளன்று எதையோ பறிகொடுப்பதுபோல ஆகிவிடுவார்கள். காரணமின்றி கோபப்படுவார் கள். வியாபாரமே இல்லை; கடையை மூடப் போகிறேன் என்றெல்லாம் அறிவிப்பார்கள். சம்பளம் கேட்பவருக்கு சம்பளம் கேட்பது பெரும் பாவமோ என்ற எண்ணமும் ‘பாஸ் இவ்வளவு கஷ்டப்படுகிறாரே; நம்மால் முடிந்த தைக் கொடுத்துவிட்டுப் போவோம்’ என்ற மனநிலையும் ஏற்படும் அளவுக்கு வார்த்தைகளால் அழுவார்கள். கடைசியில் ஊதியம் என்ற ஒன்றை வேறு வழி இல்லாமல் வழங்கிவிட்டு, தாராளமாக வழங்கிவிட்டதாகப் பேசிக்கொள்வார்கள். அந்த ஊதியம் எப்படி இருக்கும் என்றால், ஒரு ஜீவன் இன்று மட்டும் பாதி வயிறு சாப்பிட்டு, பசி மயக்கத்தில் தூங்கி, அடுத்த நாள் வேலைக்கு வர, உடம்பு உயிரைத் தக்கவைத்துக்கொள்ளும் அளவு மட்டுமே இருக்கும்.

எனவே, அக்காக்களும் தம்பியும் பொருளீட்டி வந்தாலும், குடும்பத்தில் பெரும் பொருளாதார மந்தம் நிலவியது. ஐந்து பேருக்கும் மூன்று வேளைச் சாப்பாடு, துணிமணிகள், வீட்டு வாடகை, திடீர் – அன்றாடச் செலவுகள், பெரியசாமியின் நோயினால் ஏற்பட்ட கடன்கள்… இவற்றுக்கு மத்தியில் பெண் களுக்குக் கல்யாணமும் செய்ய வேண்டும்.

இந்த நிலையிலும், தோப்பூர் இளைஞர்களின், அங்கிள்களின், பெரிசுகளின் காதல் உணர்வுகள் பல்கிப் பெருகிக்கொண்டே இருந்தன. என்றாலும், 99.9 சதவிகித காதலர்களின் உத்தேசம், சிக்கிய அழகியுடன் தனி இடம் தேடுவதாகவே இருந்தது.

இந்தப் பெண்களோ யாரையும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. குனிந்த தலையுடன் பணிக்குக் கிளம்பும். காதல் கடிதங்களைக் கிழித்தெறியும். மன்மத அம்புகளை ஆக்கர் கடைக்கு அனுப்பும். ”நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்ல” என்று அழும். செயராமன் போன்ற மென் இதயத்தின ரைத் தற்கொலை செய்துகொள்ளவைக்கும். செரிமானத்துக்கு இயற்கை படைத்திருக்கும் உமிழ் நீரை ஆண்களை அவமானப்படுத்தப் பயன்படுத்தும். வீடு திரும்பும்!

ஏழ்மையிலும் உழைப்பிலும் அழகிகளின் அழகு ஒரு சொல்லுக்குக் குறைந்தாலும், அழகிகளுக் கான அழைப்புகள் சூடுபிடித்துக்கொண்டே இருந்தன. சொல்லப்போனால், இப்போதுதான் அவர்கள் இன்னும் அழகாக இருக்கிறார்கள்; தேவையற்ற சதைகள் கரைந்துவருவதால், விஜய் மல்லையாவின் காலண்டர் தயாரிக்கும் ஆட்களிடம் இருந்து இந்தப் பெண்களைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பும் கடமையும் நம்மைச் சூழ்ந்துள்ளது என்று சொன்னவர்களும் இருந்தார்கள். அழகிகளோ, தங்களது நான்வகைக் குணங்களை அதிகரித் துக்கொண்டே இருந்தனர்.

குடும்பத்தின் நிலையோ மீட்பர் எவரும் இல்லாத நிலையில், அது இன்னும் வீழ்ச்சியை நோக்கிச் செல்வதற்கான அறிகுறிகள் அல்ல – பெரும் பாதைகளே தெரிந்தன. யாருக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஒரு முறை குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் திட்டம்கூடப் பரிசீலனையில் இருப்பதாக நம்பி சொன்னான்.

அந்த வறுமையை எப்படி நாங்கள் இன்னும் புரிந்துகொண்டோம் என்றால், நானும் சுப்புணியும் பி.இ. சேர்ந்திருந்த புதிதில் நம்பியோடு சேர்ந்து பார்சல் வரவழைத்து சப்பாத்தி சாப்பிட்டோம். மூன்று பார்சல்களில் சப்பாத்திகள், மூன்று பாலித்தீன் பைகளில் குருமாக்கள். இரண்டு பார்சல் குருமா மட்டுமே எங்களுக்குத் தேவைப்பட்டது. அவிழ்க்கப்படாமல் இருந்த மீதி ஒரு பார்சல் குருமாவை அப்படியே விட்டுவிட்டு நடந்தோம். எதையோ மறந்துவிட்டேன் என்று நான் திரும்ப அதே இடத்துக்கு வந்தபோது நம்பி அவிழ்க்கப்படாமல் இருந்த குருமா பார்சலை எடுத்துக்கொண்டு இருந்தான். என்னைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து, ”வீட்டுக்குடா… சாப்ப£ட்டுக்கு யூஸ் பண்ண…” முகத்தைத் திருப்பிக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டான்.

தொடர்ந்து அவன் வீட்டுக்குச் செல்லும்போது வாடகை பாக்கி, மளிகை பாக்கி, அக்கம் பக்கம் மற்றும் உறவினர்களிடம் சொற்பக் கடன் பாக்கி எனப் பல பொருளாதார யுத்தங் களைப் பார்த்திருக்கிறோம். முத்தாய்ப்பாக, வட்டி ஆறுமுகம் மங்களத்திடம் இரண்டு முடிவுகளை அறிவித்தான். ஒரு வாரத்தில் வட்டி உட்பட 1,000 ரூபாயைத் திருப்பித் தர வேண்டும். இல்லை, மூத்த பெண்ணை அவனோடு அனுப்பிவைக்க வேண்டும். இல்லை, கடைசிப் பெண்ணை… வேண்டாம், நடுவில் உள்ளவளை… இல்லை, முதலில் சொன்ன மாதிரி.

எல்லோரும் வேடிக்கை பார்த்ததோடு சரி. கதறி அழும் குடும்பத்தின் துயர் துடைக்க வழி தெரியவில்லை எவருக்கும். கீழே விழுந்துகிடந்த மங்களத்தைக் கடைசிப் பெண் கூட்டிச்சென்றபோது, அவளுடைய தாவணியில் ஒட்டுப்போட்ட இடங்களையும் ஒட்டுப் போடாத இடங்களையும் பார்த்தேன்.

அன்று இரவுதான் மங்களமும் அவளுடைய நான்கு வாரிசுகளும் ஊரைவிட்டே ஓடிப்போனார்கள்.

இவ்வளவு சம்பவங்களும் எங்கள் நினைவுக்கு வந்தன. ஊர் எல்லையில் இருந்த பாலத்தில் அமர்ந்து எதிர்ப்புற கைப்பிடிச் சுவரில் செயராமனின் நான்காம் வருடக் கண்ணீர் அஞ்சலி விளம்பரத்தைப் பார்த்த பிறகு.

”இப்ப எங்கடா இருப்பான் நம்பி?”

”பாவம், சவீதா எப்படி இருக்காளோ… எப்படிலாம் கஷ்டப்படறாளோ?”

எங்கே, எப்படி அந்த அழகான பெண்களும் நம்பி யும் கஷ்டப்படுகிறார்களோ என்று வருந்தினோம். நெருக்கடிகள், போட்டிகள், பேராசைகள் நிறைந்த உலகில் ஒரு கையாலாகாத குடும்பம் எப்படிப் பிழைத்திருக்கும்? சோகம் பீறிட்டது.

”தெரியாத ஒரு ஊர்ல ஒரு குடும்பம் பசியாறதுனா, சும்மாவா?” கணக்கிட்டேன். நாங்கள் பி.இ. இரண்டாம் வருடம் படிக்கும்போது ஓடிப்போன குடும்பம். படிப்பு முடிந்து இரண்டு வருடங்கள். ஆக, நான்கு வருடங்கள்.

”வாழ்றதுன்னா சும்மாவா? பொண்ணுங்க ஏழு, எட்டோட நின்னுருச்சு. நம்பியும் டென்த்கூட முடிக்கல. படிப்பு ஒரு மேட்டர், இல்லேன்னாலும்கூட, வேற திறமைகளும் யாருக்கும் இருக்கிற மாதிரி தெரியல. பி.இ. முடிச்ச நாமளே வேலை இல்லாம இருக்கோம். அதனால, என்னைப் பொறுத்தவரை…” தயங்கினேன்.

”…எனவே, எப்படிப் பார்த்தாலும் அந்தக் குடும்பம்… செத்த இடத்தில் அழகான புற்கள்…” வார்த்தைகளை முடிக்கும் முன் இரண்டு கார்கள் எங்களைக் கடந்தன.

இரண்டாவது கார் சிறிது தூரம் சென்று, நின்று, பின்னால் வந்து எங்கள் அருகில் நின்றது.

காரில் இருந்து நவநாகரிக இளைஞன் ஒருவன் இறங்கினான். நெருங்க நெருங்க… சென்ட் வாசனை. அமெரிக்க வாழ் கணிப் பொறி மேதையோ, தொழிலதிபரோ… என்னவோ?

”எப்படிடா இருக்கீங்க?” என்றான் அந்த இளைஞன்.

எங்களையா? சந்தேகத்தில் திரும்பிப்பார்த்தோம்.

”சார்…”

”டேய், நான் நம்பிடா! மறந்துட்டீங்களா?”

”ந… ந…” மெள்ள கண்கள் இருண்டு…

”சுடலைமாடன் கோயிலுக்கு வந்தோம். அம்மா, அக்கால்லாம் முன்னாடி போறாங்க…”

நெஞ்சை அடைத்து ஏதோ மயக்கம்…

”கார்ல ஏறுங்க. ஆக்சுவலி, என் டிரைவர் லீவுடா…” நம்பியின் காரில் ஏறினோம். அவன் பேசியது எதுவுமே மண்டைக்குள் ஏறவில்லை. கோயில் வந்ததும் அவன்தான் தட்டி எழுப்பினான். தூங்கிவிட்டோம் என்று நினைத்திருப்பான்.

கோயில் அருகே நின்றிருந்த கார் அருகே தன்னுடைய காரை நிறுத்தினான் நம்பி. முதலில் நாங்கள் மங்களத்தைத்தான் பார்த்தோம். பணக்கார எளிமை. நான்கு வருட மூப்பை பணம் ‘ஓடுடா’ என்றிருந்தது.

”நல்லாதாம்பா இருக்கேன். நீங்க நல்லா இருக்கீங்களா?”

”அக்காக்கள் எங்கேம்மா?”

பார்க்கத் துடித்தோம்; உறைந்துபோக ஆயத்தமானோம். அவள் பதில் சொல்லு முன், அவர்களே கோயிலின் ஒருபுறச் சுவரின் மறைவில் இருந்து வெளிப்பட் டார்கள். ஏதோ சிரித்துப் பேசியபடி நடந்து வந்தார்கள். வத்தல், தொத்தல்களையும், சில இலுப்பைப் பூக்களையும்தானே இந்த உலகில் கடந்த நான்கு வருடங்களாகப் பார்த்து நொந்துவந்தீர்கள்..? ‘வீ ஆர் பேக்’ என்பதுபோல் நடந்துவந்தார்கள். அந்த இடத்துக்கு வெளிச்சத்தையும் பரவசத்தை யும் ஏற்படுத்திவந்தார்கள்.

ஏற்கெனவே அழகு. இப்போது பணமும் சேர்ந்து மேலும் பொலிவாக, வாளிப்பாக… எளிய நகைகள், விலை உயர்ந்த சேலை. எங்களுக்குப் பெருமையாக இருந்தது. அழகிகளின் வருகையை முதன்முதலில் நாங்கள் பார்த்துவிட்டோம். கூடவே கவலை. கடவுளின் துகள்கள் உலவுகிற சேதி கேட்டு கூட்டம் கூடிவிட்டால்?

எங்களிடம் ஏதோ கேட்டார்கள். இன்றைக்குப் போய் இப்படி ஒரு மட்டரகமான லுங்கியுடன் நிற்கிறோமே?!

நங்கைகள் கோயிலுள் நுழையும்போது காரில் இருந்த இரு வாட்ட சாட்டர்கள் இறங்கி, மூத்த இரு பெண்கள் அருகே வெகு உரிமை யோடு சென்றார்கள். ஓ, கணவர்கள்! சென்ற பிறவியில் ஏதோ பவர் ஃபுல் யாகங்கள் செய்த வர்களாக இருக்கும். தேவதைகளை அல்ப மானிடர்கள் திருமணம் செய்ய வேறு எந்தக் காரணம் இருக்கக் கூடும்?

கடைசிப் பெண்ணும் எங்களைப் பார்த்துச் சிரித்து, துள்ளி கோயிலுக்குள் ஓடினாள். உலகம் அழியும்போது நவீன நோவாவின் நவீன பேழையில் இதே தாவணி காற்றில் அசையக்கூடும்.

நாங்கள் எத்தனை தடவைதான் ஐ.சி. யூனிட் டில் கிடப்பது; சாவது? ஒட்டுப்போட்ட தாவணி, குருமா பாக்கெட், கடன்காரர்களின் காட்டுக் கத்தல்… எப்படி? ஒருவேளை, அதெல்லாம் நடக்கவே இல்லையா? இல்லை, இது மாயையா?

சுடலைமாடன்கூட அதிர்ச்சியுடன் பார்ப்ப தாகவே பட்டது.

”உங்ககிட்டகூடச் சொல்லாம ராவோடு ராவா ஓடிப்போய்ட்டோம். தப்புதான் மன்னிச் சிருங்க…” என்றான் நம்பி.

கோயிலுக்கு வெளியே கார்களுக்கு அருகே நின்றிருந்தோம். ”நடுவுல உங்களை கான்டாக்ட் பண்ண நினைப்பேன். இந்த ஊர்ல பட்ட அவமானம் தடுக்கும். மறுபடியும் இங்க வரும் போது, நல்ல நிலைமைலதான் வரணும்னு ஒரே வெறி!” ஒரு கணம் எங்கேயோ வெறித்துப்பார்த்துவிட்டு… ”இந்தப் பணம்கிற ஒண்ணை எவன்டா கண்டுபிடிச்சான்?”

”…………”

”வெல்! டேய், ஒரு உதவி பண்ணுடா. இந்த ஊர்ல ஒரு வீட்டை விலைக்கு வாங்கறதா இருக்கேன். கொஞ்சம் பெரிய வீடா பாரு… இது மாதிரி எப்பவாவது வந்து போறதுக்கு வேணுமே. சொந்த ஊர்ல ஒரு வீடு இல்லாம இருக்கறது நல்லாவா இருக்கு?”

தோப்பூரில் நில உரிமையாளர்கள் கூலி தரும் விஷயத்தில்தான் ஏழை நாடுகளைப் பார்ப்பார் களே தவிர, ரியல் எஸ்டேட் பிசினஸின்போது நியூயார்க், டோக்கியோ, மும்பை போன்ற நகரங்களில் தங்களது உடைமை இருப்பதாக எண்ணிக்கொள்வார்கள்.

”இங்க போன வருஷமே வீடு வாங்கியிருப்போம். ரெண்டு மேட்டர்ல மாட்டிக்கிட்டேன். பணம் லாக் ஆகிப்போச்சு. ஒண்ணு, சென்னைல ஃப்ளாட் வாங்கினோம். ரெண்டு – ரெண்டாவது அக்கா கல்யாணம். மூத்த அக்காவுக்கு 50 பவுன் போட்டோம்னா, இவளுக்கு 60 பவுன் போட வேண்டியதாப்போச்சு.”

நானும் சுப்புணியும் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டோம்.

நடுநடுவே நம்பி அவனுடைய செல்லுக்கும் பதில் அளித்தான்.

”நாங்க டூ டேஸ்ல வந்துருவோம்… நான் வர்றதுக்குள்ள முடிச்சிருக்கணும்… இதுக்குத்தான் எனக்கு எரிச்சல் வருது… முதல்லயே சொல்றதுக்குஎன்ன…” எங்களைப் பார்த்து, ”லாரிக்கு டயர் மாத்தணுமாம். தெரியாத்தனமா பழைய லாரி வாங்கி சீரழிஞ்சு… இப்பதான் புது லாரி ரெண்டு வாங்கினேன். டேய், உங்களுக்கு ஒண்ணு சொல்றேன்டா… என்னோட எக்ஸ்பீரியன்ஸ்ல இருந்து சொல்றேன்… பழைய லாரி வாங்கும்போது பாத்து வாங்குங்க…”

நாங்கள் ஏன் பழைய லாரி வாங்கப்போகிறோம்? தவிர, லாரி வாங்கக் கூடிய நிலையிலா நாங்கள் இருக்கிறோம்? நம்பி, எங்களால இந்த நொடியில லாரியில தொங்குற எலுமிச்சம்பழத்தைக்கூட… இன்னொன்றையும் கவனித்தேன் – இவ்வளவு வசதி யோடு இருக்கிறேன் என்று பெருமையடிக்கிற தன்மை எதுவும் அவனிடம் இல்லை. இயல்பாகவும் உண்மையாகவும் பேசுகிற மாதிரிதான் பேசினான்.

”… இப்ப பேக்கேஜ் வாட்டர் கம்பெனி வாங்கிஇருக்கேன். ஆமாம், நீங்க என்னடா பண்றீங்க?”

ஓடிவிட்டால் என்ன? புற்றீசல் போலக் கிளம்பிய கல்வித் தந்தை ஒருவரின் கல்லூரியில் கிடைத்த பொறியியல் பட்டத்தை என்ன செய்வது என்று தெரியவில்லை. அதில் படித்தும் ஜெயிக்கிற அளவு எங்களுக்குப் புத்தியும் இல்லை. அல்ப சம்பளத்தில் வேலை பார்க்க விருப்பம் இல்லாமல், கிடைத்த வேலையை விட்டுவிட்டு சும்மாதான் இருக்கிறோம் என்று எப்படிச் சொல்வது? அன்று இரவு இவனுடன் சேர்ந்து ஓடியிருந்தால்கூட, இன்று நம்ப முடியாத நிலையில் திரும்பி இருக்கலாம் போலிருக்கிறது.

”ஹு… ஹு…”

”லாஸ்ட் வீக்லதான் டி.சி.எஸ்-ல இருந்து ரிசைன் பண்ணினேன். விவசாயத்துல ஈடுபடலாம்னு…” குரலின் சுருதி குறைந்தது. திடீரென ஏன் இவன் இங்கு முளைத்து, எங்களை அவமானப்படுத்திக்கொண்டு இருக்கிறான்.

”வெல், இருட்டுதுடா… நாளைக்கு நான் திரும்பி வந்து பழைய சில்லறைக் கடன்களை அடைக்கணும். இங்க எங்க தங்கறது? கிளம்பறோம்…”

”ஏன், உன்னோட ரிலேஷன்ஸ் இந்த ஊர்ல இருக்காங்களே… அங்க தங்கலாமே…” -சொல்லாமலே இருந்திருக்கலாம்.

”சேச்சே… அங்க சூட் ஆகாது. திருநெல் வேலியில ஆர்.ஆர்.இன்-ல ரூம் போட்டு இருக்கோம்.”

நம்பி அவனுடைய குடும்பத்தினரிடம் செல்ல, நாங்கள் ஆயிரம் கேள்விகளோடு அலைந்தோம். எப்படி இவை எல்லாம் நான்கே வருடங்களில் சாத்தியம்? இரண்டு அக்காக்களின் திருமணம்; 50, 60 பவுன்கள்; ஃப்ளாட், குடிநீர் கம்பெனி, பழைய லாரி, புது லாரி, நட்சத்திர ஹோட்டல் வாசம்…

கதியற்று இரவோடு இரவாக ஓடிப்போன குடும்பம். படிப்போ வேறு எந்தத் திறமை களோ, உறவுகளின் உதவியோ இல்லாத குடும்பம். அப்படியே ஏதாவது இருந்தாலும், நான்கே வருடங்களில் இவ்வளவு முன்னேற முடியுமா? யதார்த்தத்தில் வாழ்வதே சாதனை என்னும்போது, வாழ்வில் இத்தனை சாதனை களா? நான்கு வருடத்தின் அத்தனை நொடிகளிலும் உழைத்தாலும், இது எப்படிச் சாத்தியம்?

உலக அதிசயமாக, கண்கட்டு வித்தையாக, அலாவுதீனின் பூதத்தையே அலறவைப்பதாக… நானும் சுப்புணியும் எங்கள் திகைப்புகளையும் வியப்புகளையும் கேள்விக்குறி களையும் பகிர்ந்துகொண்டோம்.

அக்காக்களிடம் உரையாடலை முடித்துவிட்டு, நம்பி மீண்டும் எங்களிடம் வந்தான். ”வெல், கிளம்பறோம்.”

ஒரு கணம் தயங்கிய சுப்புணி ”நம்பி, கொஞ்சம் நில்லுடா. ஒரு சந்தேகம்” என்றான்.

”நல்ல நிலைமைல நீ இருக்கறதைப் பாத்தா, சந்தோஷமாத்தான் இருக்கு. ஆனா, எப்படிடா இதெல்லாம்..?”

”…………..”

”இங்கே இருந்து போய் எங்க தங்கினீங்க? எப்படி… எப்படிடா முன்னேறினீங்க..? கேக்கறேன்னு தப்பா நினைக்காத…”

நம்பி புன்னகைத்தான்.

”என்னதான் உழைச்சாலும்… எப்படிடா… ஏதாவது பணக்காரன் உங்க குடும்பத்தைத் தத்து எடுத்துக்கிட்டானா?” என்றான் சுப்புணி.

”எடுப்பான்… எடுப்பான்…” என்றான் நம்பி.

”ஏதாவது புதையல் கிதையல்..?”

”ஏன், கள்ள நோட்டு, வழிப்பறி, திருட்டு, மோசடி… இதை எல்லாம் ஏன் வுட்டுட்டே? கேளுடா…” என்றான் நம்பி, சிரித்துக்கொண்டே.

”பணக்கார மாப்பிள்ளை ஏதாவது…”

”அது மாதிரி இல்லியே…” என்றேன் நான்.

நம்பி திடீரென சீரியஸாகி ”வாழ்க்கை யாரை, எப்போ டாப்-அப் செய்யும்னு யாருக்குடா தெரியும்?” என்றான்.

”இருந்தாலும், எப்படிங்குற ரகசியத்தை உங்ககிட்ட சொல்றேன். யார்ட்டயும் சொல்லக் கூடாது.”

”என்னடா, எங்களைப் போயி…”

”டேய், உங்கள நம்பித்தான்…”

”சொல்லுடா…”

”கடும் உழைப்புடா…” என்றான் நம்பி.

”சென்னைக்கு வந்தா, வாங்கப்பா” என்றது குடும்பம். சவீதா பால் வடியும் முகத்துடன் காரில் ஏறி டாட்டா காட்டினாள். நம்பியின் காரும் எங்களிடம் இருந்து மறைந்தது.

சட்டென வெறுமை. மௌனமாக நடக்கத் துவங்கினோம். சுப்புணி திடீரென நின்று எதையோ சொல்ல வந்தவன், வார்த்தைகளின் திசையை மாற்றி ”எப்படிடா, இது சாத்தியம்?” என்றான் முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு.

நான் வேறு திசை பார்த்தேன்.

சிறிது மௌனத்துக்குப் பிறகு, ”இதுதான் நம்மிடம் உள்ள பிரச்னை. நேர்மையாக எந்த விஷயத்தையுமே யோசிப்பது இல்லை. பிழைக்கப் போன ஊரில் இந்தக் குடும்பம் இட்லிக் கடை போடுகிறது; ஊதுவத்தி உருட்டுகிறது, சோப்பு விற்கிறது, ஜாக்கெட்டுகளுக்கு ஊக்குவைக்கிறது, ஆயுத பூஜை நேரத்தில் பொரியும் கோடைக் காலத்தில் விசிறியும் விற்கிறது… அதிக உழைப்பு; ஆச்சர்ய முன்னேற்றம். இது ஒரு அதீதத் தன்னம்பிக்கைக் கதையாக இருந்துவிட்டுப் போகட்டுமே” என்றேன் நம்பிக்கையுடன்!

– நவம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *