கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 37,674 
 
 

சுந்தரம் அவசரமாக ஆபீஸுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார். வைதேகி அவரது டிபன் பாக்ஸை துடைத்து அவசரமாக பையில் வைத்தாள்!

“சீக்கிரம் கொண்டா! ஏற்கெனவே அரை மணி நேரம் லேட்! செல்போன், ஐடிகார்ட் எல்லாத்தையும் எடுத்து வச்சியா? பர்ஸ்ல பணம் இருக்கா?’

“இருக்குங்க! நேரமாச்சுனு பைக்கை ரொம்ப வேகமா ஓட்டாதீங்க! அரை நாள் லீவு போட்டுட்டு நிதானமா போங்க!’

சம்மதமா

“லீவு இல்லை, வைதேகி! மீரா சீக்கிரமா போயிட்டாளா?’ கேட்டபடி வெளியே வந்து பைக்கை உதைத்தார்.
அது இடக்கு பண்ணியது!
“இது வேற! இந்த மாசமே மூணாவது ரிப்பேரா? வாங்கற சம்பளம் இதுக்கே போகுது!’
“சரிங்க! பத்து வருஷமா இதே வண்டி, தாங்குமா? புதுசு வாங்கணும்!’
“எழுபதாயிரம் ரூபாய்க்கு எங்கே போறது? இருக்கற கடனை அடைக்கவே வழி தெரியலை. ஒரு வருமானத்துல பொண்ணை இன்ஜினீயரிங் படிக்க வைக்கவே முழி பிதுங்குது! அவ வேலைக்கு வந்தாத்தான் மூச்சு விட்டுக்க முடியும்!’
“வேலை கிடைச்சதும், அவளை கட்டிக் குடுக்கணும்! அவ பணம் நமக்கு சொந்தமில்லை’
“கல்யாணமா? பணத்துக்கு நான் எங்கே போவேன்?’
“ஒரு அப்பா கேக்கிற கேள்வியா இது? உங்களுக்கு வெக்கமாயில்லை? பொண்ணைப் பெத்துட்டா போதுமா? அதைப் படிக்க வச்சு ஒருத்தன் கைல ஒப்படைக்கற வரைக்கும் நாமதான் பொறுப்பேத்துக்கணும்!’
“சரி விடு, நம்ம புலம்பலை ராத்திரி வச்சுக்கலாம்! நேரமாச்சு! கடவுள் கண் திறக்கட்டும்!’
மறுபடியும் பைக்கை ஆவேசமாக உதைக்க, அது உயிர் பெற்று சீறியது!
எதிரே ஒரு வெளிநாட்டு படகு கார் மெதுவாக ஊர்ந்து வந்தது!
ஷட்டர் இறக்கி டிரைவர் பார்த்தான்!
“இங்கே சுந்தரம்னு…?’
“நான்தான் நீங்க யாரு? என்ன வேணும்?’
“நீங்கதான் வேணும்!’ கார் நின்றது.
கதவு திறந்து கோட் சூட் சகிதம் ஒரு மனிதரும், பட்டுப் புடவை சரசரக்க, நகை மூட்டையாக ஒரு பெண்மணியும் இறங்கினார்கள்.
“மிஸ்டர் சுந்தரம்! மீராவோட அப்பா நீங்கதானா?’
“ஆமாம்!’
“உங்ககிட்ட பேசணும்! உள்ளே வரலாமா?’
வைதேகி பதறி விட்டாள்!
“எதுக்கு எங்க பொண்ணு பேரைக் கேக்கறீங்க?’
“சம்பந்தம் பேச வந்திருக்கோம்?’
“சம்பந்தமா?’
“ஆமாம்! எங்க பையன் அர்விந்த் பல ஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரன். எங்களுக்கு ஒரே வாரிசு! நிறைய படிச்சிருக்கான்! அழகா இருப்பான்! அவன் பஸ் ஸ்டாப்புல உங்க மகள் மீராவை தொடர்ச்சியா மூணு நாளைக்கு பார்த்திருக்கான்! ரொம்ப பிடிச்சுப் போச்சு!’
“மீரா எங்க கிட்ட சொல்லவே இல்லையே?’
“என் பிள்ளை அவளைப் பாக்கறது அவளுக்கே தெரியாது! இவனும் அவகிட்ட போய்ப் பேசறது அநாகரிகம்னு பேசலை. எங்கிட்ட வந்து சொன்னான்! இந்த நாலு நாள்ல உங்க மீராவை, உங்க குடும்பத்தைப் பற்றின எல்லா தகவல்களையும் சேகரிச்சுட்டேன்! ரொம்ப சந்தோஷம்! எங்களுக்கு திருப்தி! என் பையனும் பிடிவாதமா இருக்கான்! அதான் சம்பந்தம் பேச வந்திருக்கோம்!’
“சார்… நாங்க…?’
“மிடில் கிளாஸ்னு சொல்லுவீங்க. எங்களுக்கே அது தெரியும். உங்க மகள், எங்க வீட்டு மருமகள் ஆயிட்டா, பல கோடிகளுக்கு அவ சொந்தக்காரி! அப்புறமா உங்களுக்கு கஷ்டம்னா என்னான்னே தெரியாது!’
“சார்! அவ இப்பதான் கடைசி வருஷ இன்ஜினீயரிங் படிக்கறா!’
“படிக்கட்டும்! நாங்க யாரும் தடுக்கலை! கல்யாணத்தை முடிச்சிடலாம்! தொடர்ந்து படிப்பை முடிக்கட்டும்! டிகிரி வந்திடுமே!’
“என்ன சுந்தரம்? சொல்லுங்க!’
“ஸாரி! உங்க பையனை நாங்க பாக்கணும்! எங்க மீரா இதுக்கு சம்மதிக்கணும்!’
“எல்லாமே நடக்கும்! என்ன சந்தேகம்? முதல்ல உங்களை சந்திச்சு நாங்க பேசி விவரத்தைச் சொல்லிட்டா, அப்புறமா எல்லாமே முறைப்படி நடக்கும்!’
மிஸ்டர் சுந்தரம் மீராவை படிக்க வைக்க, நீங்க நாலஞ்சு லட்சம் செலவு பண்ணியிருக்கீங்க அதுக்கு லோன் போட்டு கடன் கட்டறீங்க, தவிர குடும்ப செலவு பற்றாக்குறை எல்லாமே இருக்கும். எங்க சம்பந்தம் அமைஞ்சா, கல்யாணச் செலவுகள் முழுமையா எங்களோடது தவிர உங்க கடன் மொத்தத்தையும் நான் அடைக்கிறேன். எங்க சம்பந்தி யாருக்கும் கடனாளியா இருக்கக் கூடாது. எங்களுக்கு அது அவமனம். தவிர, உங்க குடும்பத்தையும் சேர்த்து நாங்க பராமரிக்கிறோம். உங்க கஷ்டங்கள் எல்லாம் இன்னியோட ஒரு முடிவுக்கு வருது. சுந்தரம் ஆடிப்போனார். நாங்க புறப்படறோம். இன்னிக்கு மீரா காலேஜ் விட்டு வீட்டுக்கு வந்ததும் சொல்லுங்க.
சரி சார்.
நாளைக்கு நீங்க எனக்கு போன் பண்ணுங்க நாளை மறு நாள் எங்கே எப்படி என் பிள்ளை உங்க மகளை முறையா பார்க்க போறோன்னு நாங்க தீர்மானிக்கிறோம் சரியா?
இருவரும் எழுந்து விட்டார்கள்.
இருங்க காபி தர்றேன்.
மன்னிச்சிடுங்கம்மா நாங்க எங்க வீட்டை தவிர வெளியே எதுவுமே சாப்பிடறதில்லை. இந்திய அளவுல பிரமாதமான சைவ, அசைவ சமையல் நிபுணர்கள் எங்க வீட்டோட இருக்காங்க எங்க வீட்டு சாப்பாட்டை சாப்பிட்டவங்க வெளிய கை நனைக்க மாட்டாங்க வர்றோம்.
கார் அந்த தெருவில் திரும்புவதற்கு திணறியது.
அன்று மாலை கல்லூரி முடிந்து மீரா வந்தாள். அரைமணிநேரம் கழித்து வைதேகி மெதுவாக பேச்சை ஆரம்பித்து ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள்.
சுந்தரம் மகளை பெருமிதத்துடன் பார்த்தார். நீ எங்களை உச்சில கொண்டு போய் நிறுத்துவேனு நாங்க நினைக்கவேயில்லை.
அப்பா, நான் படிப்பை முடிக்கலியே
அதுக்கு அவங்க தடை சொல்லலமா நான் வேலைக்கு போக முடியாதா?
ஒரு கம்பெனிக்கு ஜாயிண்ட் மேனேஜிங் டைரக்டரா ஆக போறே உனக்கு கீழே பல ஆயிரம் ஊழியர்கள்,யாருக்கும்மா கிடைக்கும் இது மாதிரி.
அரவிந்தை எனக்கு புடிக்கணுமே
பார்த்து பேசின பிறகுதானேமா அதை நீ முடிவு செய்ய முடியும்?
சரிம்மா அவங்க கிட்ட அப்பா பேசட்டும்.
சுந்தரம் உற்சாகமாக டயல் செய்தார்
ராஜேந்தரன் எடுத்தார்.
நான் சுந்தரம் பேசறேன். எங்க மீரா கிட்ட பேசிட்டோம் நீங்க வரலாம்.
நாங்க வர்றது கஷ்டம்
அந்த தெருவுல காரை திருப்பவே முடியலை நான் வண்டி அனுப்பறேன் நீங்க ரெண்டு பேரம் உங்க மீராவை கூட்டிட்டுவந்துடுங்க.
எங்கே சார்.
எங்க பங்களாவுக்கு தான் காலைல ஒன்பதுக்கு இங்கே இருங்க. எட்டுக்கெல்லாம் சின்ன வண்டி உங்க வீட்டு வாசல்ல நிக்கும்.
சரி சார்.
மறு நாள் காலை எட்ட மணிக்கு சொன்னபடி வீட்டுவாசலில் சின்ன கார் தயாராக இருந்தது.
மூன்று பேரும் புறப்பட்டார்கள்.
அப்பா கோயிலுக்கு போயிட்டு அந்த பிரசாதத்தை எடுத்துட்டு போகலாம்.
சரிம்மா
கோயிலை முடித்துக் கொண்டு இவரகள் பங்களா வாசலை அடையும் போது ஒன்பதே கால்
ராஜேந்திரன் வெளிப்பட்டார்.
என்ன சுந்தரம்? பதினைஞ்சு நிமிஷ லேட். என் பிள்ளைக்கு தாமதமானா பிடிக்காது இனிமே நேரத்தை பராமரியுங்க
சரி சார்
மீரா முகம் மாறியது.
சில நொடிகளில் அம்மாவும், பிள்ளையும் வந்தார்கள்.
அரவிந்த் அத்தனை அம்சங்களும் நிறைந்தவனாக இருந்தான் ஒரு குறை சொல்ல முடியாது.
முகம் முழுக்க சிரிப்பு.
சரி வாங்க முதல்ல டிபனை சாப்டுட்டு பேசலாம். சுந்தரம் எழுந்து நிற்க.
அப்பா முதல்ல பேசிடலாம். மற்றதெல்லாம் அப்புறமா. மீரா சொல்ல
பேசும்மா உன் மேல என் பிள்ளை உயிரையே வச்சிருக்கான். அவளை உள்ளே கூட்டிட்டு போய் பேசுடா
வா மீரா
இல்லை மிஸ்டர் அரவிந்த் தனியா பேச எதுவும் இல்லை. இங்கேயே பேசிடலாம்.
ராஜேந்திரன், மனைவியை பார்த்தார்.
சார், வந்ததுமே இது மாதிரி லேட்டானா என் பிள்ளைக்கு பிடிக்காதுனு சொன்னீங்க அங்கே ஒரு மாமாவை நான் பார்க்கலை கம்பெனி முதலாளியைதான் பார்த்தேன்.
மீரா….
இருங்கப்பா அவங்க நம்ம வீட்டுக்கு வரிசை தட்டுகளோட வந்தாங்க. ஆனா கை நனைக்கலை காரணம் அவங்க வெளியே சாப்பிடமாட்டாங்க.
அவங்ககிட்ட எல்லாமே இருக்கு. என் சம்பந்தி கடனாளியா இருக்கறதை நான் விரும்பலைனு சொன்னப்ப, அதுல பாசம் தெரியல பணத்திமிர்தான் தெரிஞ்சது. இங்கே வந்ததும் சாப்பிட்டு பேசுங்கனு சொன்னதுல பரிவு தெரியலை. படாடோபம் தான் நிக்குது.
திரும்பினாள்.
நான் பாதி படிக்கும்போது கல்யாணம் செஞ்சுகிட்டா, படிப்புல கவனம் சிதறும். அப்புறம் வேலைக்கு போகவிடமாட்டீங்க. காரணம் அந்தஸ்து. எங்க குடும்ப நிர்வாகத்தை நீங்க நடத்த முன் வந்தா, எங்கப்பா, அம்மாவும் உங்களுக்கு வேலைக்காரங்க தான்.
மீரா….
இருங்கப்பா, நான் முடிக்கலை. வேண்டாம் சார். தங்க கூண்டுல அடைப்பட்ட பட்டுக்கிளியா இருக்கறதுல எனக்கு உடன்பாடு இல்லை. எங்கப்பா கடனாளியா இருந்தாலும் இன்னிக்கு யாருக்கும் அடிமை இல்லை. எங்க வீட்டுக்கு வந்தவங்க ஒரு மோராவது குடிச்சாத்தான் எங்களுக்கு அது கௌரவம். மேலும் நான் என் கால்ல நிக்க விரும்பறேன். நீட்டின இடத்துல கையெழுத்து போடற ரப்பர் ஸ்டாம்ப் முதலாளியா இருக்க விரும்பல. மிடில் க்ளாஸோட யதார்த்த காற்றை சுவாசிச்சு பழகின எனக்கு கோடீஸ்வர வாழ்க்கை ஒட்டாது. எங்க தெருவுல படகு கார் வர முடியாது. சாதாரண பைக் ஓட்டிட்டு வர்ற ஒரு ஆள் என் புருஷன் ஆனாப்போதும். தரைல ஒக்காந்து சாப்பிட்டு, பாய்ல படுக்கற மனுஷங்கதான் எங்க குடும்பத்துக்கு சரிப்படும். மாச கடைசில கஷ்டப்படற, வலிகள் தெரிஞ்ச ஒரு குடும்பம் தான். எனக்கு புகுந்த வீடாக முடியும்.
மீரா கம்பீரமாக வாசலை நோக்கி நடந்தாள். எல்லா இடத்திலும் கரன்சிகள் எப்போதும் ஜெயிப்பதில்லை.

– ஜூலை 2013

2 thoughts on “சம்மதமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *