கொய்யாப் பழமும் கொய்யும் பழமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 14, 2022
பார்வையிட்டோர்: 7,181 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகிய திருநீலகண்டநாயனார் என்பவர், சிறிது காலம் தம் மனைவியைத் தொட்டுப் பழகியும், பின்னர் அவர் அவ்வம்மையாரை நெடுங்காலமாகத் தொடாமலேயே பழகியும் வந்தாராம். ஆனால் உதயசூரியன் அப்படி யல்ல. அது, தாமரைப் பூக்களைத் தொடாமலேயே பழகி வரும் ஒரு நெருப்பு நாயகன்.

அது, தன் வெளிச்சத்தால், ஆண்களையும் பெண் களையும் அடையாளம் காட்டும். அவர்களின் ஆயுட் காலத்தையும் அது அன்றாடம் அளந்து காட்டும்.

சளி பிடித்த சந்திரன் இருக்கிறதே அது சூரியனைப் பார்த்து, “என் உடன் பிறப்பே” என்று அழைக்க முடியாது. ஏனென்றால், சந்திரனும் சூரியனும் சேர்ந்து பிறக்கவில்லை.

தான் பெற்ற குழந்தையைப் பார்த்து தாயொருத்தி தான் “என் ரத்தத்தின் ரத்தமே” என்று அழைக்க முடியுமேயன்றி, மாற்றாந்தாய் அவ்வாறு அழைக்க முடியாது. அதுபோலவே, தன் வயிற்றிலிருந்து பிதுங்கிப் பிறந்த பூமியைப் பார்த்து “என் ரத்தத்தின் ரத்தமே” என்று சூரியன் தான் அழைக்க. முடியுமே யன்றி, சுக்கிரனோ, செவ்வாயோ ராகுவோ கேதுவோ அவ்வாறு அழைக்க முடியாது. அழைக்கவும் கூடாது.

வெற்றி பெற்ற வீரனொருவன் உடம்பில் விழுப் புண்ணொடு தோன்றுவான். வீட்டில் நாம் ஏற்றி வைக் கும் ஓர் எண்ணெய் விளக்கு புகையொடு தோன்றும். உதயசூரியனோ, அவ்வாறு உடம்பில் புண்ணொடும், உச்சியில் புகையொடும் தோன்றுவதில்லை. தோண்டப்படாத கருங்கடலில் அன்றாடம் அது தோன்றும் போதெல்லாம், புகழொடு தோன்றும்:

தோன்றும் போதெல்லாம் புகழொடு தோன்றும் அந்தச் சூரியன், அப்போது மேற்கு வானத்தில் மிதந்து கொண்டிருந்தது. நான்மணிமாலை என்பவளோ, 1891ஆம் ஆண்டில் வெளிவந்த ‘பெண்மதி போதினி’ என்னும் திங்களிதழொன்றின் பத்தாவது பக்கத்தைப் படித்துக் கொண்டிருந்தாள். அவள் வளர்த்துவரும் பூனையோ அவள் பக்கத்தில் படுத்துக்கொண்டிருந்தது. வெளியூருக்குச் சென்றிருந்த அவள் கணவன் அப்போதுதான் வீட்டுக்கு திரும்பி வந்தான். அவனைக் கண்டவுடன் அவளது முகம் மலர்ந்தது. அவனது முகமும் மலர்ந்தது. ஒருவார காலமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அவனது உதடுகளும் அப்போது மலர்ந்தன.

அவள் அவனைப் பார்த்து, “ஊரில் எல்லோரும் நலமாக இருக்கின்றார்களா?” என்று கேட்டாள்.

“எல்லோரும் நலமாகவே இருக்கிறார்கள்” என்றான் அவன்.

“அத்தை வீட்டுக்குச் சென்றீர்களா?” என்று கேட்டாள் அவள்.

“அத்தை வீட்டுக்கும் சென்றேன். பக்கத்திலுள்ள ஒரு மெத்தை வீட்டுக்கும் சென்றேன்” என்றான் அவன்.

“மெத்தை வீட்டுக்கா? அங்கெதற்குச் சென்றீர்கள்?” என்று கேட்டாள் அவள்.

“அவர்கள் வீட்டில் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்குப் பெயரிட வேண்டுமென என்னைக் கேட்டுக் கொண்டார்கள். அதற்காகச் சென்றேன்” என்றான் அவன்.

“அக் குழந்தைக்கு நீங்கள் என்ன பெயரிட்டீர்கள்?” என்று கேட்டாள் அவள்.

“ஒரு குழந்தைக்குக் ‘குநாலன்’ என்று பெயர் வைத்தேன், மற்றொரு குழந்தைக்குத் ‘திண்ணன்’ என்று பெயர் வைத்தேன்” என்றான் அவன்.

“என்ன குநாலனா?”

“ஆமாம்! மாமன்னன் அசோகனுடைய மகன் ஒருவனுக்குக் குநாலன் என்று பெயர். அவனுடைய கண்கள் ‘குநாலம்’ என்னும் பறவையின் கண்களைப் போன்று மிக்க ஒளியுடைய தாகவும் கருமையாகவும் இருந்த காரணத்தால் அவனுக்குக் குநாலன் என்று பெயரிட்டார்களாம். அந்த மெத்தை வீட்டு ஆண் குழந்தையின் கண்களும் அவ்வாறே இருந்ததால் அக் குழந்தைக்கு நான் குநாலன் என்று பெயரிட்டேன். கண்ணப்பநாயனார் மற்ற குழந்தைகளைக் காட்டி னும், பிறந்தவுடன் அதிக கனமாக, அதாவது திண்ணென் றிருந்தாராம். அதனால் அவருக்குத் திண்ணன் என்று பெயரிட்டார்களாம். அவ்வாறே அவர்கள் வீட்டில் பிறந்துள்ள மற்றொரு ஆண்குழந்தையும் திண்ணென் றிருந்த காரணத்தால் அக்குழந்தைக்கு நான் திண்ணன் என்று பெயரிட்டேன்” என்று சொல்லிக் கொண்டே, ஊரிலிருந்து தான் கொண்டுவந்த புதிய புத்தகங் களையும் பொருட்களையும் எடுத்து ஓரிடத்தில் வைத்துக் கொண்டிருந்தான். அவன் மனைவி அப்போது உள்ளே சென்று தேனீரைக் கொண்டுவந்து அவனிடம் கொடுத்தாள். அவன் அதனைப் பருகிய பிறகு, அவளைப் பார்த்து “நீயும் நானும், 1964 – ஆம் ஆண்டில் ஓர் ஆற்றங்கரை ஓரத்தில் முதன் முதலாக அறிமுகமானோம். தேனீர் தயாரிப்பதற்கும் தேயிலையோ, இந்தியாவில் முதல் முதலாக 1604 – ஆம் ஆண்டில் அக்பரின் ஆட்சிக் காலத்தில் அறிமுகமாயிற்றாம்” என்று கூறியபடி தான் வாங்கி வந்த கொய்யாப் பழங்களை அவளிடம் கொடுத்தான். அவள் அப்பழங்களை வாங்கிக் கொண்டு, “இந்தப் பழத்திற்கு வைக்கப்பட்ட பெயரை நினைக்கும்போது எனக்குச் சிரிப்பு வருகிறது” என்றாள்.

“ஏன்?” என்று கேட்டான் அவன்.

“கொய்யக் கூடிய பழத்தைக் கொய்யாப் பழ மென்றும், பொல்லாத பாம்பை நல்லபாம்பென்றும், அழைக்கின்றார்களே என்பதை நினைத்தால் சிரிப்பு வராதா?” என்றாள் அவள்.

அவள் வளர்த்துவரும் பூனை அப்போது அவன ருகில் வந்து மியாவ் மியாவ் என்று கத்திக் கொண்டிருந்தது. அவன் அப்பூனையின் வாலைப் பிடித்திழுத்தான். அவள் அவனைப் பார்த்து,

“இது ஓர் பூனை என்பதால் நீங்கள் இதன் வாலைப் பிடித்து இழுத்தீர்கள். இதுவே ஒரு புலியாக இருந்தால் அப்போது இதன் வாலைப் பிடித்து நீங்கள் இழுத்திருப்பீர்களா” என்று கேட்டாள்.

“பூனையின் வாலைத்தான் யாரும் பிடித்திழுக்க முடியும். புலியின் வாலை யாருமே பிடித்திழுக்க முடியாது?” என்றான் அவன்.

“உங்களால் முடியாதென்றால் வேறு யாராலும் முடியாதென்று ஏன் சொல்லுகிறீர்கள். மாவீரன் மருது. பாண்டியன் புலியின் வாலைப் பிடித்து பரபரவென்றிழுத்து, பின்னங்கால்களைப்பற்றிச் சுழற்றித் தரையில் அடித்துக் கொன்று விடுவானாம்” என்று கூறினாள் அவள்.

அதைக் கேட்டு வியப்படைந்து, “அப்படிப்பட்ட மாவீரனா அவன்? இருக்கட்டும் விரைவில் நானும் ஒரு புலியின் வாலை இழுத்துக் காட்டுகிறேனா இல்லையா என்பதைப் பார்” என்றான் அவன்.

உடனே அவள் அவனைப் பார்த்து, “வேண்டாம் வேண்டாம்! நீங்கள் ஒரு புலியின் வாலையும் பிடித்திழுக்க வேண்டாம். நம் வீட்டு எலியின் வாலையும் பிடித்திழுக்க வேண்டாம். நீங்கள் சும்மா இருந்தால் அதுவே போதும்” என்றாள்.

“‘சும்மா இரு’ என்று உபதேசம் செய்த துறவிகளாலேயே சும்மா இருக்க முடியவில்லையே என்னால் எப்படி சும்மா இருக்க முடியும்” என்றான் அவன்.

“அதிருக்கட்டும் புலவர் ஏழுமலை என்பவர் உங்களுக்கு எழுபது ரூபாய் தரவேண்டுமே அக்கடன் தொகையை இப்போதாவது கொடுத்தாரா?” என்று கேட்டாள்.

“அவன் பன்னிரண்டு ரூபாய்தான் கொடுத்தான்”, என்றான் அவன்.

“அப்படியென்றால் மீதி ஐம்பத்தெட்டு ரூபாயை இனி எப்போது கொடுப்பாராம்” என்று கேட்டாள் அவள்.

“இனிமேல் அவன் எங்கே அதைக் கொடுக்கப் போகிறான். ஒட்டக் கூத்தர் இயற்றிய ‘எழுப்பெழுபது’ என்னும் நூலிலுள்ள எழுபது பாடல்களுள், பன்னிரண்டு பாடல்களே கிடைத்திருக்கின்றன. எவ்வளவு முயன்றாலும் இனி ஐம்பத்தெட்டுப் பாடல்களும் கிடைக்க போவதில்லை. புலவர் ஏழுமலையிடமிருந்து இனி ஐம்பத்தெட்டு ரூபாயும் நமக்குக் கிடைக்கப் போவதில்லை” என்றான்.

“உங்கள் நண்பர்கள் எல்லோரும் இப்படித்தானே! யார் நாணய முள்ளவர்கள்? உங்களிடம் வாங்கிய கடனை யார் இதுவரையில் ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள்? இப்படி கொடுத்துக் கொடுத்தே நீங்கள் இதுவரை மூவாயிரத்தை நூறு ரூபாய் இழந்திருக்கிறீர்கள்” என்றாள் அவள்.

“நண்பர்கள் கேட்கின்றார்களே என்று கொடுத்தேன் அவர்கள் இப்படி என்னை ஏமாற்றுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நானாவது மூவாயிரத்தைர் நூறு ரூபாயை இழந்திருக்கிறேன். காலஞ்சென்ற பேராசிரியர் கா.நமச்சிவாய முதலியார் அவர்கள் முப்பத்தையாயிரம் ரூபாய்க்கு மேல் இழந்திருக்கிறார். புலவர்பலருக்கு அவர் கடனாகத்தந்த ரூபாய் முப்பத்தை யாயிரத்திற்கு மேற்பட்ட புரோ நோட்டுப்பத்திரங்களை இனி வசூலிக்க முடியாதெனத் தெரிந்து கிழித்தெறிந்து விட்டாராம்” என்று கூறினான் அவன்.

“இனிமேலாவது உங்கள் நண்பர்களிடத்தில் எச்சரிக்கையாக இருங்கள்” என்றாள் அவள்.

“இனி எச்சரிக்கையாக இல்லாவிட்டால்-நிச்சயம் நாம் பிச்சை யெடுக்க மேண்டியதுதான்” என்றான் அவன்.

மாலை அணியாத மாலைப் பொழுது,

மது அருந்தாமலேயே மயங்கிக் கொண்டிருந்தது.

பிறந்த தேதியை மறந்து விட்ட சூரியன், அப் போது மேற்கு வானத்தை விட்டு மெதுவாகக் கீழிறங்கி நீலக் கடலில் நீராடிக் கொண்டிருந்தது.

அந்தி என்று அழைக்கப்படும் அந்த நேரத்தில், அவனும் அவளும் வீட்டை விட்டு வெளியே புறப்பட்டனர். புறப்பட்டுச் செல்லும் வழியில், ஓர் ஏழையின் குடிசை தீப்பற்றி எரியும் செய்தியைக் கேள்வியுற்று, ஆங்கே இருவரும் விரைந்து சென்று, மற்றவர்களோடு தாங்களும் நின்று, அத்தீயை அணைத்தபின் அவ்விடத்தை விட்டுப் புறப்படும்போது அவன் அவளைப் பார்த்து

“இப்படித்தான் மேலைநாட்டுப் பேரறிஞர் எமர்சன் என்பவரின் வீடும் 24.7.1872 ஆம் ஆண்டில் தீப் பிடித்து எரிந்து விட்டதாம். அவ்வாறு எரிந்து போகவே, பொதுமக்கள் அனைவரும் உடனே நிதி திரட்டி, அவருக்குப் புதிய வீடொன்று கட்டிக் கொடுத்தார்களாம்” என்று கூறினான்.

“அப்படியா! அந்நாட்டு மக்கள் அப்படிச் செய் தார்கள். இந்நாட்டு மக்கள் அப்படிச் செய்வார்களா? பாவம்! இந்த ஏழைக்கு இரங்குபவர்கள் இவவூரில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. இவனுக்காக இவனே அழுது கொள்ள வேண்டியதுதான்” என்று கூறினாள்.

பிறகு அவர்களிருவரும் ஒரு குளக்கரைக்கு வந்து, ஆங்கிருந்த படிக்கட்டுகளின் மீதமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

“இதுதான் திம்மராஜன் குளம்” என்று அவன் அவளிடம் கூறினான்.

“இந்தக் குளம், போரூர் தெப்பக் குளத்தை விடப் பெரிதாக இருக்கிறது” என்றாள் அவள்.

“அரசன் ஒருவன் வெட்டிய குளமாயிற்றே, பெரிதாக இல்லாமல் சிறிதாகவா இருக்கும்” என்றான் அவன்.

“அரசன் வெட்டிய குளமா இது?” என்று அவள் கேட்டாள்.

“ஆமாம். கி. பி. 1515- ஆம் ஆண்டில் விஜய நகர சமஸ்தானத்தில் ஓர் அமைச்சனாயிருந்து, பிறகு அவ்வரசனின் கட்டளைப்படி செங்கற்பட்டை அரசாண்ட திம்மராஜன் என்பவனால் வெட்டப்பட்ட குளந்தான் இந்தக் குளம். கலிங்கத்தில் அன்று சிந்திய ரத்தம், நம் நாட்டின் வீரத்தை நமக்கு நினைவூட்டுகிறது. திம்மராஜன் அன்று வெட்டிய இந்தக் குளம், அவனது நற்செயலை நமக்கு நினைவூட்டுகிறது. அவனைப் பற்றி நம் நாடும் பேசுகிறது; நாமும் இப்போது பேசுகிறோம். இக் குளத்தில் இருக்கும் தாமரைப் பூவுக்கு நாக் கிருந்தால், நம்மைப்போல் இதுவும் அவனது பெருமைகளை எடுத்துரைக்கும்” என்று கூறினான் அவன்.

அப்போது அவன் மனைவியோ, தண்ணீர்ப் புடவை கட்டிய தாமரைப் பூக்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனோ அவளை உற்றுப் பார்த்தான்.

“அத்தான்! நான், அந்த அம்மராஜன் குளத்தில் நீராடியிருக்கிறேன். ஆனால் இதுவரை இத் திம்மராஜன் குளத்தில் நீராடியதில்லை. இப்போது இக்குளத்தில் நான் நீராடட்டுமா?” என்று கேட்டாள்.

“வேண்டாம். தாமரைக் குளத்தில் நீராடினால் அடிக்கடி தாகமெடுப்பதோடு, வாதபித்தமும் அதிகரிக்கும். அல்லிக் குளத்தில் நீராடினாலும் அஜீர்ண பேதி உண்டாகும்” என்று கூறினான்.

“அப்படியென்றால், நான், ஆற்று நீரிலும் ஊற்று நீரிலுந்தான் குளிக்க வேண்டுமா?” என்று கேட்டாள்.

“பகலில் நீ ஊற்று நீரிலும்; இரவில் என் உதட்டு நீரிலும் குளிப்பதுதான் நல்லது” என்று கூறினான்.

அப்போது, அக்குளத்திலிருந்த கவலையில்லாத தவளைகள் சத்தமிடத் தொடங்கின.

“அத்தான்! நம் இன்ப உரையாடலுக்கு இடையூறு விளைவிக்கும் இத் தவளைகளைக் கல்லால் அடித்துக் கொல்லுங்கள்” என்று கூறினாள்.

“பரிச்சித்து மகாராஜனைப் போல என்னையும் நீ ஒரு பைத்தியக்காரன் என்று எண்ணிவிட்டாயா?” என்று கேட்டான்.

“அப்படியென்றால், அந்தப் பரிச்சித்து மகாராஜன் உண்மையிலேயே ஒரு பைத்தியக்காரன் தானா? அவன் அப்படி என்ன பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டான்?” என்று அவள் கேட்டாள்.

“சூரிய குலத்தவனாகிய அந்தப் பரிச்சித்து மகாராஜன், ஆயுத மகாராஜனின் மகள் சோபனை என்பவளைக் காட்டில் மணந்து அவளோடு ஒரு தடாகத்தில் நீராடும்போது அவள் நீரில் மறைய அவ்விடமிருந்த தவளைகள் அவளை விழுங்கி விட்டன என்று கருதி அவன் அக்குளத்திலிருந்த தவளைகளை யெல்லாம் கொலை புரியச் செய்தானாம்! அவன் ஒரு பைத்தியக்காரனாக இல்லாவிட்டால் அவ்வாறு செய்திருப்பானா?” என்று அவன் அவளைப் பார்த்துக் கேட்டான்.

“அத்தான்! அவன் எவ்வளவு பெரிய பைத்தியக்காரன் என்பது, எனக்கு இப்போதுதான் புரிகிறது. அந்தப் பைத்தியக்காரனை ஒரு நாட்டின் மன்னனாக ஏற்றுக்கொண்ட மண்ணின் மைந்தர்களும், அவனுக்குப் பெண் கொடுத்த ஆயுத மகாராஜனும் பைத்தியக்காரர்களாகத்தான் இருக்க வேண்டும்” என்று கூறினாள்.

“சில நேரங்களில் சில பெரிய மனிதர்கள், அயோக் கியர்களை ஆட்சி பீடத்தில் அமர்த்தி விடுகிறார்கள் மடையர்களையும் மேதாவிகளாகக் கருதி விடுகிறார்கள்” என்று கூறியபடி அவன் அவ்விடத்தை விட்டு எழுந்தான். அவளும் எழுந்தாள். வெண்ணிலவும் வானத்தில் எழுந்தது.

அன்றிரவு குளிர் மிகவும் அதிகமாக இருந்தது.

அவளுக்கு அப்போது ஒரு போர்வை தேவைப்பட்டது.

அவனுக்கு அவளுடைய பார்வை தேவைப்பட்டது. பருவசுகமும் தேவைப்பட்டது.

அன்றிரவை,

அன்றில் இரவாக்க வேண்டும் என விரும்பிய அவன் அவளிடம் நெருங்கினான். அவளோ சற்று விலகினாள். அவளது மேலாடை அப்போது அவளது மார்பை விட்டு விலகியது. பளிச்சென்று வெளியில் தெரிந்த அவளது பால் கலசங்களைப் பார்த்தவுடனே அவன் தன் கண்களை மூடிக் கொண்டான். அப்போது அவள் அவனைப் பார்த்து “அத்தான்! ஏன் கண்ணை மூடிக் கொண்டீர்கள்?” என்று கேட்டாள்.

அப்போது அவன் அவளைப் பார்த்து “ஊர்வசி என்பவள் தேவலோகத்தில் ஒருநாள் இந்திரன் சபையில் நடனமாடிய போது, அவளது மேலாடை மார்பகத்தை விட்டு விலகி விட்டதாம். அதனைக் கண்டவுடன் இந்திரனும் அம்மன்றத்தில் இருந்த மற்றவர்களும் அவரவர் கண்களை மூடிக்கொண்டு அவளுடைய மானத்தைக் காத்தார்களாம். அந்த நிகழ்ச்சி இப்போது என் நினைவுக்கு வந்ததால், உன் மேலாடை விலகியதும் நானும் என் கண்களை மூடிக்கொண்டேன்” என்று கூறினான்.

அவள் அப்போது அவனைப் பார்த்து “ஒருசிலர், வீட்டில் இருக்கும்போது இப்படி நல்லவர்கள் போல நடிப்பார்கள். இதே காட்சியை வெளியில் அவர்கள் கண்டால், வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்” என்று கூறினாள்.

அதைக் கேட்டவுடன், அவன் தன் சொந்தச் சிரிப்பைச் சினமாக மாற்றினான். அவனது பழுத்த கோபத்தை அவள் பதமாக மாற்றினாள். பின்னர், அவனது கோபம் குறைந்தது. குறைந்த கோபம், அவளது புன் சிரிப்பைக் கண்டு கரைந்தது. மணலில் வீழ்ந்த மழைத்துளிகளைப் போல முடிவில் அது பறைந்தது.

“அத்தான்” என்றாள்.

“நான் உனக்குத்தான்” என்றான்.

“நீர் வேண்டுமா?” என்று கேட்டாள்.

“நீர் வேண்டாம். இப்போது நீதான் வேண்டும்” என்றான்.

அவள் புன்னகை காட்டினாள்.

“புன்னகை, பல விஷயங்களை நேராக்கும் ஒரு சிறிய வளைவு” என்று கூறியபடி அவளுடைய கண்களில் முத்தமிட்டான்.

“என்னங்க இது! என் கன்னத்தில் முத்தமிடாமல் என் கண்களில் முத்தமிடுகிறீர்கள். சங்ககாலத்தில் வாழ்ந்த தமிழர்கள், குழந்தையின் கண்களில்தான் முத்தமிடுவார்களாம். என்னையும் ஒரு குழந்தை என்று நீங்கள் எண்ணி விட்டீர்களா?” என்று கேட்டாள்.

“நீ, கண்களைப் போல் சிறந்தவள். அதனால் தான் நான் உன் கண்களில் முத்தமிட்டேன்” என்று கூறினான்.

“மனோன்மணீயம் என்னும் நாடகநூலின் ஆசிரியர் * ராவ்பகதூர் சுந்தரம் பிள்ளையவர்கள், ஆண்டுதோறும் வரும் கோடை விடுமுறை காலங்களில் பெரும்பாலும் பாடல் பெற்ற திருக் கோயில்களுக்குச் சென்று அக் கோயிற் சுவர்களில் எழுதப்பட்டிருக்கும் கல்வெட்டுக்களை ஆரச்ய்ச்சி செய்வாராம் நீங்களோ என் கண் வெட்டுக்களை அடிக்கடி ஆராய்ச்சி செய்கிறீர்கள்” என்று அவள் கூறினாள்.

“கலந்துறவாடும் வேளையில் கண்வெட்டு ஆராய்ச்சி தான் செய்ய வேண்டும்” என்று அவன் கூறினான்.

அப்போது அங்கே,

இரண்டாவது கட்ட வாக்குப் பதிவு நடைபெறவில்லை ;

இரண்டாவது கட்ட ‘வாய்ப்பதிவு’ நடைபெற்றது.

அது முடிந்தபின்,

அறைக்குள் அவள் சென்றாள்.

அவன் அவளோடு
பாதி நாடகம் நடத்தினான்.
வௌவால் அடித்துத் தின்னும்,
அணில் கடித்துத் தின்னும்,
அவனோ அவளைப் பிடித்துத் தின்றான்
பின்னர் இடித்து நின்றான்.
ராஷ்ட்ரபதி ஆகமுடியாத அவன்,
‘ராத்திரிபதி’ ஆனான்.
நன்னீர் நதியாக இருந்த அவள்,
வெந்நீர் நதியானாள்.
பளிச்சென்று முத்தமிட்ட போது,
அங்கே பல்லவி பிறந்தது.
ஆர்வத்தோடு தழுவிய போது,
அங்கே அநுபல்லவி பிறந்தது.
சரச மாடிய போது,
அங்கே சரணம் பிறந்தது.
விளிம்பு தேயாத வெண்ணிலவை
அவள் பார்த்தாள்.
மேடு கட்டிய இடத்தில் வேடு கட்டிய
அந்தப் பெண்ணிலவை
அவன் பார்த்தான்
சுகக் கதவைத் திறப்பதற்கு முன்
அவள் தன் முகக் கதவைத் திறந்தாள்.
முத்த மிடுவதற்காக,
அவளை முற்றத்திற்கு அழைத்தான்.
அணைத்து மகிழ்ந்திட வேண்டி,
‘அன்பே ! அருகில் வா !
இந்த அறைக்கு வா!”
என்று அவளை அழைத்தான்.
“நீங்கள் எதைச் செய்தாலும்
எதுகை மோனை என்னும்
பொருத்தம் பார்த்தல்லவா செய்வீர்கள்”
என்று சொல்லிக் கொண்டே,
முதலில் அவள், முற்றத்திற்கு வந்தாள்.
அவன் அவளை முத்தமிட்டான்.
அவள் அதன் பிறகு, ஓர் அறைக்குள் சென்றாள்.
அவன் அவளை அணைத்து மகிழ்ந்தான்.
அந்த வீட்டுப் பூனை,
கண்களை மூடிக் கொண்டிருந்தது.
இரவு நேரம்,
மறுநாள் ஓரத்திற்கு ஓடிக் கொண்டிருந்தது.

– எச்சில் இரவு, முதற் பதிப்பு: ஜனவரி 1980, சுரதா பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *