(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இரவு பத்து மணி இருக்கும். அன்று நல்ல நிலா வெளிச்சம். நான் ‘கல்யாணப் பரிசு’ படம் பார்த்து விட்டு வந்து கொண்டிருந்தேன். மணற் பரப்பில் அமர்ந்து நண்பன் வானவெளியை ஆராய்வது போலக் கூர்ந்து பார்த்துக் கொண்டேயிருந்தான். வழக்கம் போல் கேலியாக, ‘பரவெளிப் பயணம் செய்யும் குட்டிச் சந்திரனைத் தேடுகிறாயா?’ என்று கேட்டேன். குரல் கேட்டுத் திரும்பிய தோழனின் கண்கள் கலங்கியிருந்தன. நேரம் காலம் தெரியாமல் உளறிவிட்டோமே என்று வருந்திக் கொண்டே, ‘என்னப்பா சோகமாய் இருக் கிறாய்?’ என்று கேட்டேன். ‘வானத்தைப் பார்’ என்றான். புதுமையெதுவுமில்லையே என்றேன்.
ஓடுகின்ற நிலாவை மேகங்கள் சூழ்ந்து கவ்விக் கொள்ளப் பார்க்கின்றதைச் சிந்தித்துப் பார் என்றான்.
எனக்கொன்றும் புதிதாகப் படவில்லையே என்றேன்.
‘உட்கார் இப்படி. அதற்கு ஒரு கதையே இருக்கிற தப்பா… அதுவும் என் அனுபவக் கதை’ என்று சொன்னான் நண்பன்.
கதை கேட்பதென்றால்… அதிலும் அனுபவக் கதை யென்றால் எனக்கு வெல்லம் கிடைத்ததுபோல! சிகரெட்டொன்றைப் புகைத்துக் கொண்டு கதை கேட்க ஆயத்தமானேன். கன்னக் கதுப்புகளில் விழுந்திருந்த கண்ணீர் முத்துக்களைத் துடைத்துவிட்டுக் கதை சொன்னான். அது இது!
தமிழ் நாட்டுக் குடும்பத்தில் ‘பிள்ளை’யாகப் பிறந்த நான், ஒரு வைராக்கியத்தோடு மலாயாவுக்கு வந்தேன். ‘சீமைக்குப் போனால் சீமானாக வந்துவிடலாம்’ என் றெண்ணி, கங்கை கடந்து, காவிரி தாண்டிச் ‘சிங்கைச் சீமை’ வந்து சேர்ந்தேன். ‘காசு’க்கு ‘அணா’ கணக்கு பார்த்துச் செலவு செய்து பிழைப்பதோடு நேரம் காலம் பார்க்காது உழைத்தேன். உழைப்பின் பயன் ஊரிலிருந்து வந்த ‘வைராக்கியத்தைப் பூர்த்தி செய்வது. காலை முதல் பிற்பகல்வரை அரசாங்கத்தில் அன்றாடச் சம்பளத்துக்கு ‘ஏவலனாக’ வேலைசெய்தேன். இந்த வருமானத்தால் என் வைராக்கியம் பூர்த்தியடையும் நாளை ஆமை வேகத்தில்தான் காணமுடியும் என் றெண்ணி ‘சைடுபிஸினஸ்’ செய்ய ஆரம்பித்தேன். புல் அறுத்துப் போடுகிறேன் என்று ஒரு பால்காரர் குடும் பத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டேன். இதுதான் எனது ‘பிளாக் மார்க்கெட் வியாபாரம். காலம் ஓடியது.
மாதம் முடிந்ததும் சம்பளத்துக்கு வந்தேன். மாலையில் வரச் சொன்னார்கள்; மாலை வந்த போது ‘நாளை வா’ என்றார்கள். மாலை நாளையாகி, நாளை காலையாகி, காலை இரவாகி… இப்படியே இரண்டு மூன்று நாட்களாகிவிட்டன. ‘மாசம் முடிஞ்சு அஞ்சு நாளாச்சுங்க என்று அமைதியோடு சொன்னேன்.
உக்காருப்பா… கோப்பி குடிச்சிட்டு வாங்கிக் கிட்டுப் போகலாம்.. ? இது அந்த வீட்டுப் பாட்டியம்மாளின் உபசரிப்புக் குரல்.
காப்பி ஏந்திவந்தாள் காரிகை! என்னைச் சுற்றி வேறு யாருமில்லை. ஆமாம். உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தால் அவர்கள் வேலை என்னாவது? மாடு வைத்திருப்பவர்கள்தான் ‘மாடாய்’ உழைக்கவேண் டுமே .. ! காப்பியைக் கையில் வாங்கிக்கொண்டேன்.
சாப்பிடுங்க.; காப்பிகொண்டு வந்த அந்தப் பெண்ணின் அன்பு இழையோடிய மெல்லிய குரல்.
‘ரொம்ப உபகாரம்’-இது நான். மீண்டும் ஏறிட்டுப் பார்த்தேன். அவள் அங்கு இல்லை. கொஞ்ச நேரத்துக் குள் பாட்டியும் ஒரு அம்மாவும் என் முன்னே வந்து உட்கார்ந்து கொண்டு வெற்றிலை போட்டுக் கொண் டிருந்தார்கள். அந்தப் பெண் கதவோரம் நிலைக் காலில் தலையைச் சார்த்திக்கொண்டு ஒய்யாரமாக நின்று கொண்டிருந்தாள்.
வெத்திலை போட்டுக்கப்பா.. அந்த பாட்டிதான் சொன்னார்கன். ‘சரிங்க…!’ சங்கோஜத்துடன் வெற்றிலையை மடித்துக் குதப்பினேன்.
இந்தாங்க…! அந்தப் பால்கார அம்மா. என் ஒரு மாத ‘உழைப்பை’ நீட்டினார்கள். வாங்கிக்கொண்டேன்.
உடனே எழுந்து போகலாமா…? சேச்சே…’ஒரு மாதிரி நினைப்பார்கள். கொஞ்சம் பொறுத்துப் போகலாம் என்றெண்ணி உட்கார்ந்திருந்தேன் பாட்டி யம்மாள் ‘நாட்டு நடப்பு ‘ பேச ஆரம்பித்தார்கள். ‘ஊருதேசமெல்லாம் எப்படிப்பா இருக்கு… கடுதாசி அடிக்கடி வருதா? வெள்ளாமை விளைச்சலெல்லாம் எப்படி…?’ கேள்வி மேல் கேள்வி போட்டார்கள்.
நானும் பதில் சொன்னேன்.
ஆமா தம்பி, ஒனக்கு ஊரு எந்தப் பக்கம்…?
எனக்கு ‘திருச்சி’ங்க… என்றேன்.
‘ஒ… நமக்கு வேலூரு பக்கம்…’ என்று ‘சம்மன்’ இல்லாமல் ஆஜரானார்கள்.
கண்ணாலம் காட்சியெல்லாம் எப்ப . ? பாட்டியின் விசாரணை தொடர்ந்தது. வந்ததப்பா மோசம்! அதெல்லாம் இப்ப ஒண்ணுமில்லீங்க…; நான் தலையைச் சொறிந்து கொண்டேன். உடம்பு புல்லரித்தது.
காலா காலத்துல ‘ஒண்ண’கட்டிப்போட்டுடப்பா…! கஞ்சி தண்ணியைக் காச்சிஊத்துமில்ல !’ ‘அனுபவம் அலறியது.
பாட்டி…! பாட்டி !! அங்கே பார் பாட்டி!நிலா ஓடு கிறது. மேகம் அதைக் கவ்வுதற்குத் தாவுகிறது. திடீ ரென்று ‘கலீரென்று ஒலித்தது அந்தக் கன்னியின் சின்னக் குரல். நானும் வானத்தைப் பார்த்தேன்.
‘அது கிடக்குது போடி….! நீ சொல்லுப்பா… !? மூதாட்டி என் பக்கம் திரும்பி விட்டார்கள். பேச்சை வேறு பக்கம் திருப்ப வேண்டும் என்பதற்காக ‘நிலா ஓடுவதற்கும் மேகங்கள் துரத்துவதற்கும் ஒரு நல்ல காரணமிருக்குது பாட்டி. நான் புத்தகத்தில் படித்தேன். நிலா எனும் பெண்ணாள் தன் காதலனைத் தேடி ஓடுகிறாள். முகில் முரடர்கள் அவளைத் தம் வசப்படுத்தத் துரத்துகின்றனர் என்று எழுதி இருக்கிறது பாட்டி’ என்றேன்.
‘மேகம் என்ற பெண் நிலா என்னும் ஆணைத் துணைவராக ஏற்றுக் கொள்ளத் துடித்துச் செல்கிறது. நிலா தப்பி ஓடுகிறது….இப்படியும் ஒரு கதையில் இருக்குது பாட்டி?’ என்று எனக்குச் ‘சவால்’ கொடுத் தாள். இல்லை; இந்தச் ‘சாக்கில்’ தன்னுள்ளத்தைத் திறந்து காட்டினாள், நிலா நகர்ந்து கொண்டே யிருந்தது. நேரமும் நகர்ந்து கொண்டே இருந்தது. நான் விடைபெற்றேன்.
அன்று வழக்கம்போல் புல் அறுத்துக் கொண்டு வந்தேன். வரும் வழியில் இடி, மின்னல், மழை… பொழிந்து கொண்டிருந்தது. ‘தொப்பை’யாக நனைந்து கொண்டு புல் சுமந்து வந்தேன். மழை இன்னும் பெய்து’ கொண்டுதான் இருந்தது. எப்போதும்போல் வேலை முடிந்தவுடன் புறப்பட்டேன். ‘மழை பெய்து கொண்டே யிருக்கிறது. போகிறீர்களே…! மழை நின்றதும் போகலாமே… குளித்துவிட்டு உடைகள் மாற்றிக் கொண்டு சாப்பிடுங்கள்…!! என்று குனிந்து தலை நிமிராமல் கூறி முடித்தாள் அந்தப் பெண். ஏனோ நான் தூண்டில் மீனானேன். வேலிக்குட்பட்ட பயிரா னேன். குளித்து முடிந்ததும் எனது நனைந்த உடை களைத் தோய்க்கக் குனிந்தேன். துணிகள் எனது கையினின்றும் நழுவியது. வளையல்கள் கலகலத்தன. ஏறிட்டுப் பார்த்தேன். அவள்தான் சகுந்தலா…… ஆம்; அதுதான் அந்தப் பெண்ணின் பெயர்…நின்று கொண்டிருந்தாள். ‘நானே… நானே….’ என்று ஆரம்பித்தேன். நா தடுமாறியது. பிறை நெற்றியில் புரண்டு கிடந்த கேசத்தை ஒதுக்கியவாறு ஒரு பக்க மாகச் சாய்ந்து கொண்டு ஒய்யாரமாகப் பார்த்தாள். பார்வையில் பனிக் குளிர்ச்சி இருந்தது. பரவசமடைந்தேன்.
உணவு படைத்தாள். கூடவே அவளது அன்பு மொழியையும் வட்டித்தாள். ‘இன்னும் கொஞ்சம்’ ‘மேலும் ஒரு பிடி’ இப்படி அளவுக்கு அதிகமாகவே போட்டு அழுத்திவிட்டாள், சகுந்தலா! உணவு வயிற்றை நிரப்பியது. அவள் கனிவுமிகும் அன்பு என் வறண்டிருந்த பாலைவன நெஞ்சை நிறைத்தது. அன்று அவர்கள் வீட்டாரெல்லாரும் ஒரு ‘மணவினை’க்குப் போயிருந்தனர். இதுபோன்ற வாய்ப்பை எதிர் நோக்கிக் எல்லாப் ’பணிவிடைகளும் கொண்டிருந்ததுபோல. செய்து மகிழ்ந்தாள். இதையெல்லாவற்றையும்விட அவள் செய்த அந்த ‘ஒன்று’ என்னைத் திக்குமுக்காடச் செய்தது. இன்று நினைத்தால்கூட இனிக்கும் நிகழ்ச்சி அது. ‘பீடா’ மடித்துக்கொடுத்தாள். அதை வாங்கிய போது அவளுடைய காந்தக் கரங்கள் பட்டன. மெய் சிலிர்த்தது; மேனி படபடத்தது; உள்ளம் கிளுகிளுத்தது. இமைகொட்டாமல் இருவரும் பார்த்துக்கொண்டோம். அதைவிடக் கண்கள் ‘கண்ணாடி’யாயின என்று சொல் வதுதான் மிகப் பொருத்தம். அவ்வளவு நேரம் கண்கள் நிலைகுத்தி நின்றுவிட்டன. நாட்கள் ஒடி மறைந்தன. வாரமாகியது.
அன்று..! அந்திவானம் ‘செக்கச் செவேலென்று கொண்டிருந்தது. தங்கப்பாலம் காட்சியளித்துக் கொண்டுவந்த புல்லைக் போன்று தகதகத்தது. கொட்டகையில் போட்டுவிட்டுத் ‘துண்டை’ உதறித் தோளில் போட்டுக் கொண்டு ஆயாசப் பெருமூச்சோடு ‘காப்பி சாப்பிட்டுவிட்டுப் வந்துகொண்டிருந்தேன். போங்க…’ என்று காப்பியுடன் வந்தாள் சகுந்தலா காப்பித் ‘தம்ளரை’க் கையில் கொடுக்கும்போது ஒரு சிறு துண்டு மடலையும் ‘தம்ளரின்’ அடியில் வைத்து தன்னாசையைப் அழுத்திக்கொடுத்தாள். ‘பெண்ணே பேசுதல் உண்டோ?’ என்று வானொலிப் பெட்டி இசை வழங்கியது. சிரித்தாள்-சிரித்தேன்- சிரித்துக்கொண் டோம். விடைபெற்றுக்கொண்டு விரைந்து நடந்தேன்.
என் நடையின் வேகத்தை மிஞ்சியது என் நெஞ்சத் தின் வேகம். கொஞ்சும் குயிலாள் ‘கொஞ்சு தமிழில்’ என்ன எழுதியிருப்பாளோ…! வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாகக் கடிதத்தைப் படித்தேன். அதில் எழுதி யிருந்தது இது தான்.
‘அன்புள்ள… அவர்களுக்கு வணக்கம். ‘மலைநாட்டுப் பெண்களை நம்பக்கூடாது. நூற்றுக்குத் தொண்ணூறு பேர் மோசமான நாகரிகத்துக்கு அடிபணிந்து பண்பு கெட்டுவிடுகிறார்கள்…’ என்று அன்றொருநாள், நீங்கள் எனது வீட்டாரிடம் பேசிக் கொண்டிருந்தீர்கள். எஞ்சிய பத்தில் ‘ஒருத்தி’ என எண்ணி எனது எண்ணத்துக்கு ஆதரவு தருவீர்களா?
அன்புள்ள, சகுந்தலா.
கடிதத்தைப் படித்து முடித்தேன். எதிர்காலம் படக் காட்சியாகச் சிந்தனைக் கண்முன் விரிந்தது. அந்த இன்ப நினைப்பில் திளைத்தேன். உமிழ்நீர் பட்டு அவளது செம்பவள அதரங்கள் மின்னுவது தெரிந்தது. என்னையுமறியாமல் ஒரு முறை ‘உமிழ் நீரை’ உறிஞ்சிக் கொண்டேன்.
இனித்தது அது.
பருத்தி புடவையாகக் காய்த்தது என்பார்களே…! அது என் வரையில் பலித்தது! பழம் நழுவிப் பாலில் விழுந்தால்…! வளர்ப்பானேன் வளர்ந்தது காதல், வளர்ந்தது சந்திப்பும்.
எங்களது காதல் வளர, இயற்கையும் உதவி செய் தது. வேறு இடத்திற்கு வேலைக்குச் செல்லும்படி அரசாங்கம் ஆணைபிறப்பித்தது. அரசாங்கத்தின் ‘மாற்றலாணை’ எனக்கு நன்மையானதாகவே இருந்தது. சகுந்தலாவின் வீட்டுப் பக்கமாகவே வேலையிடம் அமைந்து விட்டது. வீடு தேடி அலைய வேண்டிய அவசியமில்லாமல் சகுந்தலா வீட்டாரே ‘அடைக்கலம்’ தந்தார்கள். ஒப்புக்காவது உறவினர்கள் என்று சொல்லிக் கொள்ள ஒருவரும் இல்லாமல் ‘ஒண்டிக் கட்டையாக’ வாழ்ந்த எனக்கு, அவர்களின் ஆதரவு ‘அடைக்கலமாக’வே பட்டது. நாட்கள் ஓடின!
இருட்டு நேரத்தில் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் எங்கள் காதலுக்கு ஓர் எல்லை காணவேண்டும் என்றெண்ணி மெதுவாகப் பேச்சுக் கொடுத்தேன் சகுந்தலாவிடம். நீங்கள் கேளுங்கள்…! நீ கேட்பது தானே…! இப்படியே இரண்டு மாதம் திரண்டு உருண்டு விட்டது. நாளை … நாளை…என்று காலம் கடந்து போனதற்கும் காரணமிருந்தது. சகுந்தலாவின் தந்தை யார் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்களின் மருந்து பலனளிக்கவில்லை. அவரும் ‘மண்டையைப் போட்டு விட்டார்.’
துக்கநாள் முடியும் ஓராண்டு காலத்தை உந்தித் தள்ளிக் கொண்டிருந்தோம். காலப் போக்கில் மனிதர் களின் நிலையும் மாறிவிடுகிறதல்லவா…! ‘பணம்’ புரண்ட எனது கையில் ‘காசு’ காண முடியாத நிலை உண்டாயிற்று. கூட்டுப்போட்ட ‘கூட்டாளிகள்’ கூட்டை எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். வட்டிக்குக் கொடுத்த நானே வட்டிக்கு வாங்கலானேன். கடன் பெருகியது. கேட்டால் பலிக்கும் என்ற பாட்டியம்மாள் கூடக் கேட்டும் பலனில்லை என்று அலற ஆரம்பித்து விட்டார்கள். சகுந்தலாவைத் தவிர அந்த வீட்டுத் ‘தூசும் துப்பும்’ கூட எனக்கு முரணாக இருந்தது. கேட்டுத் தீர்த்த எனக்கு வீட்டையே ‘காலி செய்’ என்ற பதில் கிடைத்தது.
தேட்டமில்லையே தெம்பு சொல்ல! ‘வீடு கிடைத்த தும் போய்விடுகிறேன்’ என்று சமாதானம் கூறிக்கொண் டிருந்தேன். ஒருநாள்…
‘உருசி கண்ட பூனை’ என்று ஏதோ பழமொழி சொல்வார்களே அதுபோல, (விலங்கு நிலை விலக்கி வழக்கமான இடத்துக்குச் சந்திக்க வந்தாள் சகுந்தலா! நான் மட்டுமென்ன…! வினாடியில் பார்த்துவிட்டு விரைந்துவிடலாம் என்றெண்ணி வந்த நாங்கள் விடை பெற முடியாத நிலையில் சோக முடிவு பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். உலகம் உறங்கியவேளையில்கூட. அந்த உறவு முறிப்போர் உறங்கவில்லை. ‘ஊடுமாத்திக் கப்பா.! ஊர் வம்பு எங்களுக்கு வேண்டாம்…! உபதேசம் முற்றியது. பெட்டியும் கட்டிலும் இடம் பெயர்த்தன. பிரிந்தேன்-பிரிந்தோம்-பிரிக்கப் பட்டோம்.
அனுபவத்தை அரைக்கதையாக்கிக் கூறினான். அனுதாபப்பட்டேன். அதைத் தவிர வேறென்னதான் செய்வது? அவன் கண்களில் நீர் துளிர்த்திருந்தது.
‘மீண்டும் ஏதேனும் முயற்சி செய்தாயா…’ என்று’ கேட்டேன். ‘ஊரிலுள்ள சொத்துக்களை எழுதிவைத் தால் கொடுப்பார்களாம்’ என்று முன்பொருநாள் சகுந்தலா சொன்னது நினைவிருந்தது. ‘தூது’ அனுப்பினேன். தோல்விதான் தொடர்ந்தது!’ துவண்டுபோன நெஞ்சத்துடன் கூறினான்.
உள்ளம் கலந்தவர்களுக்கு நல்ல முடிவுதர ஊரிலுள்ள சொத்து எதற்கு என்ற ஐயம் தோன்றியது எனக்கு…!
‘திருமணத்திற்குப் பிறகு ஊரில் உள்ளவர்கள் உதறி விட்டு ஓடிவிடுகிறார்களாம். அதற்காக உறுதிப்பத்திர மாகக் கேட்கிறார்கள்போலும், என்றான் நண்பன். அப்படியும் நாட்டில் நடந்துகொண்டுதானே இருக் கிறது. அவர்கள் கேட்பதிலும் நியாயமிருக்கிறது’ என்றேன். காற்றிலே கரியமில வாயு, பிராணவாயு என்று இரண்டுவகை இருக்கிறதல்லவா?’ உயிருடன் கலந்துறைந்துவிட்ட நெஞ்சம் என்பதற்கு உவமை கூறினான் போலும்…!
சிந்தை கலந்துவிட்டவர்களைச் சேர்த்துவைக்கும் சிந்தையில்லாத சிறுமதியாளர்கள் உறவுமுறிக்க ஏதோ ஒன்றைக் காரணமாகக் கொண்டுவிடுகிறார்கள். அந்த ஏதோதான் ஊர்ச் சொத்து கேட்கும் முறை என்று உள்ளுக்குள் நான் எண்ணினேன்.
காத்து கருப்பு கழிக்க கறுப்புக்கோழி கொண்டுவா; தோஷம் தீர்க்கத் தங்கங்தால் லிங்கம் செய்துகொடு; தீராத வியாதிக்கெல்லாம் ஆண்டவனின் தீர்த்தம்தான் மூலிகை என்றெல்லாம் சொல்லித் திரிகின்றவர்கள், காதல் நோயால் தொல்லைப்படுவோருக்கு மூலிகை யாக ஒன்றையும் சம்பிரதாயத்துக்காவது சொல்லி வைக்காமல் இருக்கின்றார்களே என்று ஆத்திரப்பட் டேன். பகுத்தறிவுக் கொவ்வாததாக இருந்தாலும்- பலனளிக்காவிட்டாலும் பாழும் நம்பிக்கையாவது அவனைத் தேற்றிக்கொண்டிருக்குமே!
மன நிம்மதியில்லை, மன நிம்மதியில்லை என்று அடிக்கடி சொல்லிக்கொண்டு வானத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் என் நண்பனின் இன்பப்பொழுது போக்காக இருக்கிறது. மன நிம்மதிக்கு ‘காதல் மூலிகை’ தேடுகிறானோ என்னவோ…!
– 10-7-1960, தமிழ் முரசு.
– சிந்தனைப் பூக்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதற்பதிப்பு: 1988, விஜயா சபரி பதிப்பகம், சென்னை.