கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 13, 2024
பார்வையிட்டோர்: 4,646 
 
 

(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

அத்தியாயம்-1

“வேல் வேல் வடிவேல்… வேதசந்த வடிவேல்
நாதரத்த முடிவேல் நான் மறைகள் போற்றும் வேல்
தேவியருள் தந்தவேல், தேவர் மூவர் போற்றும் வேல்
குழந்தை குமரன் வேல் குன்று தோறும் நின்ற வேல்!” 

பூஜையறையில் கண்மூடி, கைகள் சேவித்து, கணீரென்று பாடிக் கொண்டிருந்தாள் சீதாலட்சுமி, 

அறுபதை நெருங்கும் வயது. கவலையும், தோயும், ஆறேழு வயதை கூட்டிக்காண்பித்தது. கறுப்பும், வெள்ளையுமான ஈரக்கூந்தலை நுனியில் முடித்திருந்தாள். 

நெற்றியில் பட்டையாய் திருநீறு. காதில் சின்னதாய் அந்த காலத்து இட்லி சம்மல், எழுக்கற்கள் பதித்த மூக்குத்தி, இரண்டு பவுனில் செயின்.

முருகனை உள்ளம் உருகி பாடிக் கொண்டிருந்த சீதாலட்சுமியின் கண்களில் கண்ணீர். இடையிடையே இருமல். உள்நோக்கி எரிந்த காமாட்சி அம்மன் விளக்கின் திரியை குச்சியை எடுத்து ஒழுங்குப்படுத்தினாள். 

அவந்திகா குளித்து முடித்து சல்வாரை அணிந்துக் கொண்டு கிச்சனிற்குள் ஓடினாள். 

துப்பட்டாவின் இரு பக்கமும் இணைந்து பின்பக்கமாய் முடிச்சிட்டாள். வெங்காயத்தையும், கத்தியையும் வைத்துக் கொண்டு மளமளவென்று வேலையில் இறங்கினாள். 

நறுக்கியவைகளை ஓரமாக வைத்துவிட்டு ரவையை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுக்க ஆரம்பித்தாள். 

பரமேஷ்வர் இடுப்பில் டவலுடன் பாத்ரூமிலிருந்து வெளிப்பட்டவன், தன்னறைக்கு சென்று அவசரமாய் துடைத்து லுங்கியோடு வெளியே வந்தாள். 

“என்ன டிபன் அவந்தி?” 

“உப்புமாண்ணா!” 

“உனக்கு அது மட்டும் தான் சமைக்கத் தெரியுங்கறதை மூணு நாளா அதையே பண்ணி நிரூபிக்கணுமா?” 

வெங்காயம் வதக்கியபடி அண்ணனை செல்லமாய் முறைத்தாள். 

“நல்லாயிருக்குன்னு அன்னைக்கு ஒரு பேச்சுக்குத் தானே சொன்னேன்?” 

“அண்…ணா!” சினுங்கினாள். 

“சரி… சரி… சீக்கிரம் முடி…சாப்பிட்டுக் கிளம்பணும். உப்புமாக்கு சைட்டிஷ் என்ன பண்ணே?” 

“என்ன பண்ணலாம்?” 

“இதிலே உலகமகா குழப்பம் வேறயா? மூணு நாளா தேங்காய் சட்னி தானே பண்ணினே? அதையே பண்ணு” 

“ரொம்ப கிண்டல் பண்றேண்ணா! எனக்கு மட்டும் விதவிதமா சமைச்சு சாப்பிடக்கூடாதுன்னு விரதமா என்ன? எகிறிப்போன விலைவாசியால.. நம்ம குடும்ப பட்ஜெட் ரெண்டு மடங்கா ஏறிடுச்சு, அதனால் நாக்கை கட்டுப்படுத்த வேண்டியிருக்கு. உனக்கு பூரிமசாலான்னா ரொம்ப புடிக்கும். கோதுமை மாவையும், எண்ணெய் விலையையும் நினைச்சப் பார்க்கிறப்ப பல்ஸ் ரேட் எகிறுதே!” 

“கிழவி மாதிரி பேசாதே! ஆபீஸ் நேரம் போக பார்ட் டைமா இன்னொரு வேலைக்கும் சொல்லி வச்சிருக்கேன். சமாளிச்சுக்கலாம். என்னென்ன மளிகை சாமான் வேணுமோ, அத்தனையும் லிஸ்ட் போட்டு வை, வாங்கித் தர்றேன். சீக்கிரம் ரெடி பண்ணு, சாப்பிட்டுக் கிளம்பணும்” 

“இதோ அஞ்சு நிமிஷத்துல சட்னி அரைச்சிடறேன்” வேகமாய் தேங்காயை துருவ ஆரம்பித்தவளிள் கண்கள் ஜன்னலில் பதிய ஆச்சரியமாய் அலறினாள். 

“அண்ணா… அண்ணா… இங்கே வாயேன்!”

வெளியேறியவின் மறுபடி ஓடிவந்தான் பதற்றமாய்…

“என்ன, என்ன அவந்தி?” 

“ஷ்…அந்தபக்கம் போகாதே. ஜன்னல்ல பார்!”

“என்ன இருக்கு?” 

“தெரியலே? மூணு சிட்டுக்குருவிங்க உங்கார்ந்திட்டிருக்கே?”

“இதென்ன உலக அதிசயமா?” 

“பின்னென்ன? சிட்டுக்குருவிங்களை காட்டிடு பார்ப்போம்!”

“அதானே? முன்னேயெல்லாம்…கீச் கீச்சுன்னு சுத்தி சுத்தி வரும். நம்ம வீட்டு போட்டோ பின்னாடி கூடு கட்டி குஞ்சுப் பொரிக்கும். இப்பல்லாம் கண்லயே படறதில்லே. ஏன்?” வியப்பாய் கேட்டான். 

“தெரியலே.. பட், செல்போன் டவர்ல இருந்து வெளிப்படற கதிர் வீச்சு சிட்டுக்குருவி இனத்தையே அழிச்சிடுதாம்.” 

“ப்ச்.. அநியாயம் இல்லே? மனுஷங்க தங்களோட வசதியை பெருக்கிக்கறதுக்காக கண்டுபிடிச்ச விஞ்ஞானம், இந்த மாதிரி வாயில்லா ஜீவனுங்க உயிரை அழிக்கறதுக்கும் பயன் படணுமா?” வருத்தப்பட்டான். 

“இன்னைக்கு எல்லாமே அப்படித்தானே ஆகிப்போச்சு, இதோ இன்னும் அரைமணி நேரத்துல கரன்ட் போகப்போகுது. மணிக்கணக்குல கரன்ட் இல்லாம அவஸ்தைப்படறோம். கேட்டா மின்சாரப் பற்றாக்குறைங்கறாங்க. அடிமட்டக் காரணம் என்ன? வெளிநாட்லேர்ந்து நிறைய பேர் இங்கே வந்து தொழிற்சாலை அமைச்சிருக்காங்க. அதுக்கு தேவைப்படுது. வரவேற்க வேண்டிய விஷயம் தான். நிறைய பேருக்கு வேலை கிடைச்சிருக்கு தான். ஆனா, அஞ்சுமணி நேரம் கரன்ட் இல்லாததால் நம்ம நாட்லே எத்தனையெத்தனை தொழில்கள் நலிவடைஞ்சு போச்சு? பல ஆயிரக்கணக்காள தொழிலாளர்களுக்கு வேலையில்லாம போயிடுச்சே? எத்தனை குடும்பம் பட்டினியால சாகுது? இதைப்பார்க்கும் போது பெரிய தொழிற்சாலைகள் அவசியமான்னு தோணலே?”

“வெரிகுட் அவந்தி, பரவாயில்லையே, இந்தளவுக்கு யோசிக்கறியே..” 

“என்னை என்ன மரமண்டைன்னு நினைச்சியா?”

“நிஜம்தான், அப்படித்தான் நினைச்சிட்டிருந்தேன்!” 

“அ..ண்..ணா!” சிணுங்கலுடன் முகத்தை சுருக்க…சிரித்துக் கொண்டே பூஜையறைக்கு வந்த பரமேஷ்வர் இருபத்தொன்பது வயது இளைஞன் குறை சொல்ல முடியாத வசீகரம். மென்மையான குணமுடையவன் என்பதை சொல்லும் முகம், தனியார் வங்கியில் கேஷியர். 

அப்பா இல்லாத குடும்பத்தை சுமக்கும் பொறுப்பான ஆண்.

சீதாலஷ்மி இன்னும் பாடிக் கொண்டிருந்தாள், குரல் கம்மிப்போயிருந்தது. 

“அம்மா” 

“ஏறு மயிலே நியே நீ வா…வா..ஷண்முகா…”

“அம்மா….” 

“ஐங்கரத்து இளையவனே வா… வா… ஷண்முகா…”

“அம்மா.. உன்னைத்தான்!” தோள் தொட்டு அசைத்தான்.

“அ.. என்னப்பா?” 

“என்னம்மா இது? நீ பண்றது உனக்கே நல்லாயிருக்கா? உடம்புக்கு முடியலே… எல்லா நோயும் போர்ஷன் பிரிச்சு உட்கார்ந்திருக்கு, ரெண்டு நாளா சளி, இருமல் வேற! ஈரத்தலையோட மணிக்கணக்குல உட்கார்ந்து பாடி பூஜை பண்ணித்தான்.ஆகணுமா?” 

“என் ஒரே நம்பிக்கை இந்த முருகன் தானப்பா?” 

“சரி.. எந்திரி. நீயும் தான் நாள் தவறாம பத்துப்பாட்டு பாடி கூப்பிடறே. வந்தாரா உன் வடிவேலன்?” 

“கிண்டல் பண்ணாதே பரமு!” 

“இது கிண்டல் இல்லேம்மா, வருத்தம். எனக்கு உன் ஹெல்த் கண்டிஷன் முக்கியம். உன்னை வருந்திக்கிட்டு சாமி கும்பிடறதிலே எனக்கு நம்பிக்கையும் இல்லே. பிடிக்கவுமில்லே. வாம்மா. நேரமாச்சு. உட்காரு. அவந்திகா ரெண்டு பேருக்கும் தட்டுப்போடு.” 

“கேஸ் ஜெயிச்சிடுச்சின்னா எனக்கு வேறென்னப்பா கவலை? உங்கப்பாவுக்கு கிடைக்க வேண்டிய சொத்து கிடைச்சாலே போதுமே. அவந்திகாவை நல்ல இடத்துவ கல்யாணம் பண்ணிக் கொடுத்திடலாம். சொந்தமா நமக்குன்னு ஒரு வீடு வாங்கி நிம்மதியா, மருமகள், பேரக்குழந்தைகள்னு காலத்தை ஓட்டிடுவேன்!” என்றார் சீதாலஷ்மி. 

அத்தியாயம்-2

பரமேஷ்வர் அம்மாவை பரிதாபமாய் பார்த்தான். எந்த நம்பிக்கை இவளிடம் இத்தனை எதிர்பார்ப்புகளை விதைத்திருக்கிறது? சட்டத்தின் கண்களுக்கு தெரியும் நியாயம் எதிராளியிடம் இருக்கும்போது, ஏன் பணத்தையும், நேரத்தையும், உடம்பையும் விரயமாக்கி வேதனைப்பட வேண்டும்?. 

சீதாலஷ்மியின் நம்பிக்கை எதிர்காலத்தின் மீதான பயம், தன் நிலையை நினைத்து கோபம், எல்லாமாக சேர்த்து பிடிவாதமாக கேஸ் போட வைத்தது. 

சீதாலஷ்மியின் கணவர் வேணுரங்கள், அவர் தகப்பனாரின் அறிவிக்கப்படாக இரண்டாந்தாரத்து மகன். முதல் மனைவிக்கு மூன்று பையன். ஒரு பெண். எந்த விசேஷத்திலும், காரியத்திலும் வேணுரங்கனின் தாயாருக்கு அழைப்பில்லை. கும்மிடிப்பூண்டியில் முக்கால் கிரவுண்டில் ஒரு வீடெடுத்து அவர்களை அமர்த்தியதோடு, அவ்வப்போது சென்னையிலிருந்து வந்துப்போவார் வேணுவின் தகப்பனார் குமரகுரு. அவர் குடும்பத்திலும் சரி, உறவினர்கள் மத்தியிலும் சரி, “அந்த சரஸ்வதிய குரு வைச்சிருக்கார்” என்று தான் சொல்வார்களே ஒழிய… சின்ன வீடு என்றோ, ரெண்டாந்தாரம் என்றோ வாய் தவறியும் அந்த உரிமையைச் சொல்வதில்லை. 

சென்னையில் திருவல்லிக்கேணியில் குமரகுருவுக்கு நான்கைந்து வீடுகள் உண்டு. அதில் ஒன்றை வேணுரங்கன் பெயருக்கோ, அல்லது சரஸ்வதி பெயருக்கோ எழுதி வைப்பதாக சொன்னது நிஜம். ஆனால் அதை செயல்படுத்துவதற்கு முன் திடீரென வந்த அட்டாக்கில் பொசுக்கென போய் சேர்ந்து விட்டார் குமரகுரு. 

சாவில் கூட அவர்களை சேர்க்கவில்லை. சரஸ்வதி துடித்துப்போனாள். 

சிரமப்பட்டு மகன் வேணுரங்கனை ஆளாக்கி சீதாலஷ்மிக்கு திருமணம் செய்து வைத்து பேரன் பரமேஷ்வரனை பார்த்துவிட்டு மேலே போய் சேர்ந்தாள். 

வேணுரங்கன் நல்லவர். ஆனால் சொத்துக்கு ஆசைப்படாதவர். அதனால் தனக்குரிய உரிமைக்கான முயற்சியில் அவர் ஈடுபடவில்லை. ஒரு நாள் காய்ச்சலில் வேணுரங்கள் இறந்துவிட சீதாலஷ்மி தவித்துப் போனாள். நல்லவேளை, பரமேஷ்வர் படித்து முடித்து வேலைக்குப் போக துவங்கியிருந்ததால் குடும்பம் நடத்த சீதாலஷ்மி சிரமப்படவில்லை. 

ஆனால் சேமிப்பென்று எதுவும் இல்லாமல், வளர்ந்து வரும் அவந்திகாவை பார்க்கும்போது அடிவயிற்றில் அடுப்பெரிந்தது. 

நியாயமாய் அந்த சொத்தில் நமக்கும் பங்கிருக்கும் போது ஏன் பெறக்கூடாது? யோசித்து, யோசித்து எண்ணங்களை மெருகேற்றி வக்கீலை கலந்தாலோசித்து விட்டு வந்த போது தான் பரமேஷ்வர் அறிவுரைத்தான். 

“நீ நினைக்கிறமாதிரி இது அவ்வளவு எளிதான விஷயமில்லைம்மா, நம்மக்கிட்ட சட்டப்பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை. எதுக்கு நமக்கு?” 

“உனக்கு தெரியாது பரமு. தாத்தாவோட சொத்து பேரன்களுக்குத்தான். நீங்களும் குமாகுருவோட பேரன், பேத்தி தானே? எனக்கு தெரிஞ்சு என் மாமனார் இன்னாருக்கு இதுன்னு யாருக்கும் உயில் எழுதிவைக்கலை!” 

“எல்லாம் சரிம்மா, சட்டத்தோட சந்து பொந்தை எல்லாம் அவங்க பணம் வச்சி அடைச்சிடுவாங்க, கேஸ் நடத்தறது சாதாரண விஷயமா? வக்கீலுக்கு எவ்ளோ பீஸ் ஆகும் தெரியுமா? வாய்தம் வாங்கியே நாள் கடத்தி பணம் பறிப்பாங்க.” 

“நான் பார்த்திருக்கிற வக்கீல் அப்படியில்லே. நாம கண்டிப்பா ஜெயிப்போம். குறைஞ்சது மூணு நாலு கோடி சொத்து நமக்கு வரணும். அதுக்காக கொஞ்சம் செலவு ஆகும் தான், கும்மிடிப்பூண்டி வீட்டை விக்கிறதா முடிவுப்பண்ணிட்டேன்” என்றபோது தான் ஆடிப்போனான் பரமேஷ்வர்.. 

ஆனாலும், அவன் எத்தனை தடுத்தும் அம்மாவின் பிடிவாதம் தான் வென்றது. 

மூணு வருடமாய் கேஸ் நடக்கிறது. முடிகிற பாடாய் தெரியவில்லை. 

“உங்கப்பா அப்பவே விவரமா கேட்டு வாங்கி இருக்கணும்!” சீதா சாப்பிட்டுக் கொண்டே மறுபடி கேஸ் பற்றிப்பேச… 

மென்மையாய் அவன் தோளைப்பற்றினாள். 

”எப்பவும் இதைப்பத்தியே யோசிச்சிட்டிருக்காதம்மா. உலகத்தைப் பத்தி உனக்கு தெரியலே. இங்கே ஒருத்தன்கிட்டே பணமிருக்கும். இன்னொருவன் கிட்டே பணப்பை இருக்கும். இதுதான்ம்மா உலகம். நம்மக்கிட்டே பணப்பை இருக்கு. என் கிட்டே உழைப்பிருக்கு போதாதா அதை நிரப்ப? கேஸ் ஜெயிச்சா ஜெயிக்கட்டும். இல்லேன்னாலும் கவலையில்லை. நானில்லையா உங்களை காப்பாற்ற?” என்கிறான். 

“மனசு கேக்கலை பரமு!” 

“இந்த வயசுல இத்தனை கவலை, யோசனை, டென்ஷன் ஆகாதும்மா. நீ நல்லாயிருந்தா அது போதும்.” 

“என் பிள்ளைங்க நல்லாயிருந்தா போதும்னு நினைக்கறது. தப்பா?” 

”இல்லே…சாப்பிடு!”

அம்மாவிடம் மேலும் வாதம் செய்ய விரும்பாமல் முற்றுப்புள்ளி வைத்தான். 

அடுத்த பத்து நிமிடத்தில் பைக் சாவியை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். 

“அம்மா… வர்றேம்மா!” 

“போய் வாப்பா”

“அண்ணா ஒரு நிமிஷம்” 

“என்ன?”

ஹேண்ட்பேக்குடன் ஓடிவந்தாள். 

“டி.வி.எஸ். ல என்னை டிராப் பண்ணிடேன்”

“ஏய்.. ஏற்கனவே எனக்கு லேட்டாயிடுச்சு!” 

“பிளீஸ்ண்ணா ஆன் த வே ராயப்பேட்டை. என்னை இறக்கி விட்டுட்டு போய்ட்டின்னா… ஜெமினிக்கு ஷேர் ஆட்டோல போய்டுவேன். இதியே உன் டைம் வேஸ்ட்டாகாது.” 

“பேசிட்டிருக்காதே. ஏறு!”

“அம்மா. வர்றேன்.” 

அம்மாவிடம் சொல்லிக் கொண்டு பரமேஷ்வரின் பின்னால் அமர்ந்துக் கொண்டாள் அவந்திகா. 

“பார்த்துப்போ…துப்பட்டாவை இழுத்து பிடிச்சுக்கோ”, பைக் புறப்பட்டது. 

பரமேஷ்வர் பணிபுரியும் வங்கி ராயப்பேட்டையில் இருந்தது. அவந்திகா பணிபுரியும் அலுவலகம் ஜெமினியில்! ஒரு பத்திரிகை அலுவலகத்தில் டி.டி.பி. ஆபரேட்டராக பணிபுரிகிறாள். 

நல்ல வேளை சிக்னல் விழாததால் விரைந்து செல்ல முடிந்தது. 

பரபரப்பான சென்னை சாலைகளில் அதே பரபரப்பை சுமந்த முகங்களுடன் வாகன ஓட்டிகள். 

“அவந்தி” 

“என்னண்ணா?” காற்றில் அலைபாய்ந்த கோத்தை ஒதுக்கியபடி அவன் கழுத்தருகே குனிந்தாள். 

“நீ ஏன் மேற்கொண்டு படிக்கக்கூடாது?”

“என்னது?” 

“இதுக்கேன் அலர்றே? நீ படிச்ச பி.ஏ. எக்னாமிக்ஸ் இந்த காலத்திலே எடுபடாது. பி.சி.ஏ. ஜாயின் பண்ணு எதிர்காலத்துக்கு கைகொடுக்கும்.” 

”இப்ப என்ன படிச்சு ஒரு வேலைக்குப் போகணும். அதான் டி.டி.பி. படிச்சுட்டு வேலைக்குப் போய்க்கிட்டிருக்கேனே! ஆரம்பத்திலேயே படிப்பும் ஆவரேஜ் ஸ்டூடன்ட் நான். ஒரு டிகிரி முடிக்கணுமேன்னு ஈஸியான கோர்ஸா எடுத்துப்படிச்சேன். பி.சி.ஏ படிக்கறதுக்கெல்லாம் பெரிய மண்டை வேணும். எனக்கது இல்லே”. 

“நான் விளையாட்டுக்கு சொல்லலே அவந்தி, இப்போதைய வாழ்க்கை முறைக்கு தொழில் கல்வி அவசியம், உலகத்தைப் பத்தி உனக்கு புரியலே. யோசி. உடனே பதில் சொல்லாதே” 

“இன்ட்ரஸ்ட் இல்லேண்ணா!” 

“பச்…உடனே பதில் சொல்லாதேன்னு சொன்னேன்” 

“நீ எப்பக் கேட்டாலும் இதே பதிலைத்தான் சொல்லப்போறேன்.” முணுமுணுத்தாள் அவந்திகா. 


மேலும் பத்து நிமிடங்கள் காக்க வைத்த பின்பு தான் வந்தான் கவுசிக். 

அவனைப் பார்த்ததும் மலர்ந்த முகத்தை வலுக்கட்டாயமாய் சீரியஸாக்கிக் கொண்டு முறைத்தாள் அவந்திகா. 

“முறைக்கக்கூட தெரியலியே என் செல்லத்துக்கு அசடுதான் வழியுது. ஏறு ” பைக் உறும, கிண்டலாய் சொன்னான். 

“எவ்ளோ நேரம் வெய்ட் பண்றதாம்? வர்ற பஸ்சை எல்லாம் மிஸ் பண்ணிட்டு நிக்கறப்ப… பார்க்கறவங்க தப்பா நினைச்சுக்க மாட்டாங்களா?” 

“யார் தப்பா நினைச்சா நமக்கென்ன அவிக்குட்டி? லவ்வருக்காக வெய்ட் பண்றதுன்னா சும்மாவா?” 

“அச்சோ… அதை ஏன் இவ்ளோ சத்தமாப் பேசறீங்க?”

“மொதல்ல ஏறு. எங்கே போகலாம்?” 

“எங்கேயாவது!” 

“இப்படியெல்லாம் உசுப்பேத்திவிட்டா ஹோட்டலுக்கு போய் ரூம் போட்டுடுவேன்”. 

“ச்சீ… ரொம்ப அசிங்கமா பேசறீங்க… ” முகம் சுளித்தாள்.

“இருபது, முப்பது வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்த காதலி மாதிரியே பேசறே அவிக்குட்டி, நீ தேற மாட்டே. ஏறு!” 

பில்லியனில் அமர்ந்தாள். 

அத்தியாயம்-3

“உனக்கு போரே அடிக்கலியா அவிக்குட்டி?” 

மாங்காய் சீவலுடன் மணத்த கார சுண்டலை சுவைத்தபடி கவுசிக் கேட்டபோது… அலை உயர்ந்தெழுந்து ஆர்ப்பரித்தது. 

“மொதல்ல ஒரு ரிக்வெஸ்ட், நானும் எத்தனையோ முறை சொல்லியாச்சு. அதென்ன அவிக்குட்டி? புளிக்குட்டி, பூனைக்குட்டி மாதிரி. நல்லாவேயில்லே” 

“அதுக்கு நான் என்ன பண்ணட்டும்? இருபத்திமுணு வருஷத்துக்கு முன்னாடியே உங்கம்மா அப்பா யோசிச்சி நல்லப்பேரா வச்சிருக்கணும்” 

“அவந்திகான்றது அசிங்கமான பேரா என்ன? அழகா அவந்திகான்னு கூப்பிடலாமே!” 

“எந்த லவ்வராவது காதலி பேரை முழுசா சொல்லி கூப்பிடுவானா? மண்டு…” 

“அதுக்காக…?” 

“அப்படித்தான் கூப்பிடுவேன். எனக்கு பிடிச்சிருக்கு. கல்யாணத்துக்கு பிறகு வேணும்னா மாத்திக்கலாம். இதை விடு. நான் கேட்டதுக்கு பதில்! உனக்கு போர் அடிக்கலியா?” 

“எதுக்கு?” 

“வாரத்துல மூணு நாள் மீட் பண்றோம். அந்த மூணு நாளும் இதே பீச்ல தான்! இதே சுண்டல் முறுக்கு தான். அலுக்கலையா உனக்கு? எனக்கு அலுத்துப்போச்சு” என்றான் சலிப்பாக. 

அவந்திகா பதில் சொல்வதற்குள்… கவுசிக் பற்றி! 

வசீகரமான ஆறடி இளைஞன். டி.வி. சீரியலில் கதாநாயகனாக முயற்சிக்கலாம். அம்மா, தங்கை மட்டுமே. சிரமப்பட்டு லஞ்சம் கொடுத்து மத்திய அரசுப்பணியில் அமர்ந்து விட்டான், நடுத்தரக்குடும்பம். 

“அதுக்காக நீங்க கூப்பிடற இடத்துக்கெல்லாம் வந்துட முடியுமா?”. 

“எந்த லவ்வர்தான் சினிமாவுக்குப் போகலே?” 

”சினிமான்னா ஆபீகக்கு லீவு போடணும். லீவு போட்டா சம்பளத்துவ பிடிப்பாங்க. லாஸ் ஆப் பேன்னா வீட்லத் தெரிஞ்சுடாதா? அதுவும் அம்மாவும், நானும் ஜாய்ண்ட் அக்கவுண்ட்!” 

“அதைக்கூடசமாளிக்க முடியாதா? சரி… சினிமா வேணாம். ஒரு பீட்ஸா கார்னர், காபி ஷாப்… அல்ஸாமால்… இப்படி எங்கேயும் வரமாட்டேங்கறே! கேட்டா அங்க வர்றப்பொண்ஹங்க ஜீன்ஸ், மிடி, டாப்ஸ்ன்னு டிரஸ் பண்ணிக்கிட்டு ஸ்டைலா இங்லிஷ் பேசுவாங்க. எனக்கு படபடன்னு வேகமா இங்லீஸ் பேச வாரது. அந்த மாதிரி டிரஸ் பண்ணவும் தெரியாதுன்னு ஒதுங்கிப்போறே. பிராக்டிகலா இரு அவிக்குட்டி. அணியற உடை மனசோட வெளிப்பாடு-தான். எனக்கு உன் மனசு பிடிச்சிருக்கு. உன் உடையும் பிடிச்சிருக்கு. நான் குடும்பம் நடத்தப்போற பொண்டாடி சேலையும், சல்வாரும் அணியறதேப் போதும். இங்கிஷ் நாலெட்ஜ் இருந்தா… எப்ப வேணாலும் சரளமாப் பேசலாம். ஸோ நீ குறையா நினைக்கிற எதுவும் எனக்குக் குறையா தெரியலே. ஓகே?” 

“தாங்க்ஸ் கவுசிக், நீங்க என்னை புரிஞ்சுவச்சிருக்கறதுக்கு. அப்புறம் இன்னைக்கு காலைல அம்மா…” 

“அழகாப்பேச்சை மாத்தறது மட்டும் கைவந்த கலை உனக்கு!”

“அதெல்லாமில்லே. நான் சொல்றதை கேளுங்கனேன்” என்றபடி கேஸ் புற்றி அம்மா கவலைப்பட்டதையும், அதீத தீவிரம் காட்டுவதையும் சொன்னாள். 

“அண்ணா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் எப்பவும் அதே நினைப்பு அம்மாவுக்கு” 

“இருக்கட்டுமே அவிக்குட்டி, அவங்களுக்கு சேரவேண்டியதை உங்களுக்காக வாங்கிக் கொடுக்க போராடறது நல்லதுதானே? சட்டங்கள் புதுபுதுசா வந்துக்கிட்டேயிருக்கு, கண்டிப்பா உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் பாரு”

“அப்படியா சொல்றீங்க?” என்றாள் வியப்புடன்.

“பார்க்கத்தானே போறே?” 

“அப்ப அண்ணன் ஏன் எப்பவும் நம்பிக்கையில்லாமலே பேசறார்!” 

“பயந்தாங்கொள்ளிப்போல…” 

“சேச்சே… அண்ணள் ரொம்ப ஸாப்ட் நேச்சர். சுய உழைப்பில உயரணும்னு நினைக்கிறவர். என்னைக்கூட மேற்கொண்டு படிக்க சொல்லி வற்புறுத்தறார்.” 

”அதெல்லாம் ஒண்ணும் படிக்க வேண்டாம். இப்போதைக்கு ஜாலியா லவ் பண்ண நேரம் ஒதுக்கு. 

அப்புறம் என் பேரப்பிள்ளைகளுக்கு நல்ல பாட்டியா, என் குழந்தைங்களுக்கு நல்ல அம்மாவா, என் அம்மாவுக்கு அடக்கமான மருமகளா நல்லா சமைச்சுப்போட்டு, நான் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைஞ்சுக் கொடுக்கற பொண்டாட்டியா, வீட்டோட இருக்கறதுக்கு இந்த படிப்பே போதும், ஆமா, இதென்ன ஸ்ப்ரே புதுசா?” அவள் கழுத்தருகே வாசம் பிடித்தபடி கேட்டான். 

“ஏன் கேட்கறிங்க?”

“வழக்கமா யூஸ் பண்ற மாக்ஸி ஸ்பிரே இல்லே, புது வாசனையா இருக்கு. இங்கே நிறைய அடிச்சியோ கும்முனு வாசனை தூக்குது.” கழுத்திற்கு கீழே மூக்கை வைத்து உரசினான். 

அவந்திகா சட்டென விலகி அமர்ந்தாள், 

“ம்ஹூம்… இதெல்லாம் வேண்டாம்.” 

“ஏய்..இப்ப என்ன பண்ணிட்டேன்? கிஸ் பண்ணினேனா? இல்லே இங்கே தொட்டேனா? இல்லே…இதோ இங்கே தான் தொட்டேனா?”

“அய்யோ யாராவது பார்க்கப் போறாங்க. இப்படியெல்லாம் விளையாடாதீங்க… டைமாய்டுச்சு, புறப்படலாம்.” 

“இதிலே மட்டும் தெளிவா இரு. தெரியாமதான் கேட்கிறேன். உண்மையைச் சொல்லணும்.” 

“என்ன?” என்றாள் எழுந்து நின்று பின்பக்க மணலை தட்டிக் கொண்டே. 

“நீ வயசுக்கு வந்துட்டியா, இல்லையா?”

“ச்சீ… எவ்ளோ அசிங்கமாப் பேசறிங்க?” 

“பின்னே என்ன? ஒரு பீலிங்குமில்லே மண்ணாங்கட்டியுமில்லே. மரக்கட்டையா நீ? உஷாரா இருக்க வேண்டியது தான். அது நம்ம ரெண்டு பேருக்கும் நல்லது தான், ஆனா நீ கொஞ்சம் ஒவர் இல்லே?” 

“இல்லே கவுசிக்! எனக்குள்ளும் ஆசை இருக்கு. அதுக்கு கொஞ்சமே கொஞ்சம் இடம் கொடுத்தால் சாம்பலாகிவிடும். நெருப்பு கூட இருக்கிற பொருளையும் நெருப்பாக்கிடும். என்னைப் புரிஞ்சுக்குங்க!” 

“பாரேன் பேச்சுக்கூட பழங்காலத்துப் பொண்ணுங்க மாதிரியே! உடனே கிணத்து தண்ணிய ஆத்து வெள்ளமா அடிச்சிட்டு போய்டும்னு வசனம் பேசிடாதே தாயி. தாங்க மாட்டேன்.” கையெடுத்து கும்பீட்டான். 

“கிண்டலா?” பட்டென்று அவன் பின்புறத்தில் அடித்தாள்.

“மை காட்… இன்னொரு முறை அடி!” இனிய அதிர்ச்சி அவனுக்கு. 

பைக்ல உட்கார்ந்தாக்கூட பேலன்சுக்கு என்னை பிடிச்சுக்காத பைங்கிளி. என் பின் பக்கத்துல அடிக்குறதுன்னா சும்மாவா? அடி ப்ளீஸ்!” 

“ஐயோ தெரியாம அடிச்சிட்டேன் கௌசிக்… விடுங்களேன்!”  சிணுங்கினாள்.

“விட்றதா? எவ்ளோ பெரிய ஸர்ப்ரைஸ்… இதுக்கே இன்னைக்கு என் பிரண்டஸ் அத்தனை பேருக்கும் டிரீட் தரப் போறேன்!”

அவன் பேசப்பேச வெட்கத்தில் கூசிப் போனாள்.


அவந்திகாவை வழக்கப்படியே இறக்கி விடற இடத்தில் டிராப் பண்ணி விட்டு அன்றயை சம்பவங்களை அசை போட்டபடி பைக்கை செலுத்திக் கொண்டிருந்தான். 

அவனறியாமல் வாய் விட்டு சிரித்தான், 

கிண்டல் பண்ணுகிறாளே ஒழிய… அவந்திகாவிடம் அவனுக்குப் பிடித்ததே பழமைத்தனம் தான். அவளின் சிணுங்கலும், நழுவலும், ஒதுங்கலும், அவள் மீதான ஆசையை, காதலை அதிகரிக்கவே செய்தது. 

பாக்கெட்டிலிருந்த செல்போன் கூப்பிட, பைக்கை ஓரமாய் நிறுத்தி, எடுத்து ‘ஹலோ’ என்றான். 

“கௌசிக் நான்தான்” 

“சொல்லு கேசவ்… தெரியுது!” 

”எங்கேடா இருக்கே?” 

“ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு போய்ட்டிருக்கேன்!” 

“நான் உன் வீட்டுக்கு தான் வந்தேன். நீ வந்திருப்பேன்னு!”

“கொஞ்சம் வேலை அதிகம், லேட்டாயிடுச்சு. பத்து நிமிஷத்துல வீட்ல இருப்பேன். அங்கேயே இரு..” 

“சரி” 

கேசவ் பத்து வருட நண்பன். அவசியமில்லாமல் வீடு தேடிவர மாட்டான். 

“என்னவாயிருக்கும்?-” 

காத்திருந்தவன் முகத்தில் சிரிப்பைத் தாண்டிய பதட்டமும். கவலையும் இருந்தது. 

“இரு மச்சான் டிரஸ் மாத்திட்டு வந்திடறேன்.” 

முகம் கழுவி லுங்கிக்கு மாறியவன், மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றான். 

கௌசிக்கின் தங்கை பிரார்த்தனா காப்பியுடன் வந்தாள். 

அவள் போன பின்பு கேட்டான். 

“என்ன கேசவ் டென்ஷனாயிருக்கே?” 

“ஒரு ஹெல்ப் வேணும்டா!” 

“என்ன சொல்லு?” 

“அவசரமா ஒரு மூவாயிரம் வேணும்”

“மூவாயிரமா எதுக்கு?”

ஆச்சரியத்துடன் கேட்டான்.

– தொடரும்…

– காதல் தேரினிலே… (நாவல்), மார்ச் 2009, தேவியின் கண்மணி மாத இதழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *