காதல் ஒரு தூறல்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 11, 2024
பார்வையிட்டோர்: 2,542 
 
 

காதலுக்கு வயப்படாத ஒரு ஜென்மத்தையும் நான் இதுவரை கண்டதில்லை. இளசு, வயசு, சிவப்பு, கருப்பு, குண்டு, ஒல்லி, ஜிம் பாடி, காட்பாடி, இதெல்லாம் இந்தக் கணக்கில் வராது!

காதல் விஷயத்தில், கலியாணம் ஆனவர், ஆகாதவர், சிலம்பு, நெருப்பு, முறம், வெளக்குமாறு, செருப்பு, இதன் அபிமானிகளும், அனுதாபிகளும், பின்வழியாக படம் பார்க்க கும்பலோடு கும்பலாக நுழையும் ஜென்-ZEE யை சேர்ந்தவர்கள்தானாம்.

கெமிஸ்ட்ரியில் தொடங்கி, பிஸிக்ஸ், பயாலஜி வழியாக மீண்டும் கெமிஸ்ட்ரியாகவே பரிமாணம் எடுப்பது காதல் ஒன்றுதான்.

சிலருக்கு சுக்கிரன் எங்கேயோ இருப்பதால், இந்தக் காதல் அடிக்கடி வந்து தூத்தல் போடும். ஒரே சமயத்தில் பல தூத்தல்களும் வர வானிலை அறிக்கையுண்டு.

சென்னைக்கு ஒரு ரயில் பயணம் வந்தது!

காமா சோமான்னு பொட்டி, Back பேகைத் தூக்கிக் கொண்டு, பாபுவிடம் கெஞ்சிக்கேட்டு பழய பஸ் ஸ்டாண்டில் இறக்கி விடச் சொன்னேன். ரயில்வே ஸ்டேஷன் போக அங்கே பஸ் நிறையா கிடைக்கும். ஆட்டோ செலவு வேண்டாமே!

அன்னிக்குப் பாத்து, பஸ் வரும் ஆனா வராதுன்னு …. கடைசியில் வரவே இல்லை!

மனசில் ஆயிரம் குடைச்சல்கள்.

சண்டாளன் பாபு- நேரா ரயில் ஏத்தி விட வர வாண்டாமா? 200 க்கு பதில் 300 குடுத்திருக்கலாமே.

ஓகே! என்னதான் பண்ணலாம்? என்று யோசனை பண்ணினால் அதற்குள் போன் ஓமனாவிடமிருந்து,

“என்ன ரயில் ஏறிட்டீங்களா? உடனே போன் பண்ண மாட்டீங்களா? எனக்கு தூங்கற டைம் ஆயிடுச்சு”

“தூங்கறதுக்கு ஏன் இப்பிடி அவசரப் படறே? நான் இங்க பழய பஸ் ஸ்டாண்டு கிட்டதான் இன்னும் நிக்கிறேன் – நடு ரோட்டில!”

“ஓரு ஆட்டோ பிடிச்சு போயிருக்கலாமே? சரி! மெட்ராஸ் போயி போன் பண்ணுங்க. நான் படுக்கப் போறேன் லேட்டாயிடுச்சு”

இனி அவளிடம் சண்டை போட்டு பலனில்லை என்பதால் நான் ஆட்டோ இருக்கும் திசையில் கண்ணைத் திருப்பினேன்.

அப்பத்தான் ஒரு ஆட்டோ கிளம்பிக் கொண்டிருந்தது! ஆனால் உள்ளே ஒரு பெண் ஏற்கெனவே உட்கார்ந்திருந்தாள்.

இது ஷேர் ஆட்டோ இல்லையே! அவன் ஒத்துக்க மாட்டானே! அவன் ஓகே சொன்னாலும் அவள் ஒத்துக்கணுமே! இதுக்குள்ள டிரெயின் பட்டென பறந்து போயிடுமே!

“சாமி! ஏண்டா இப்பிடி?” கடவுளை ஒருமையில் அழைத்து திட்டினேன்.

“அங்கிள்! எந்த டிரெயின்ல போறீங்க?”

அழகா சிரித்துக் கொண்டு அவள் கேட்டாள். அவள், பல் டாக்டர்னு அப்புறம்தான் தெரிந்தது.

ஆட்டோ பாதி பணம் நான் கொடுத்தேன். அவள் முன்னே நடக்காமல் எனக்காக நிற்பது போல தோன்றியது (மனசுக்கு வேண்டியிருந்தது)

“எந்த பிளாட்பாரம்?” அவள்

“சில சமயம் மூணுல வரும். கேட்டுட்டு வரேன்!” உடனே உதவி கவுன்டரில் போர்டு பார்த்தேன்.

ஒண்ணுல வருதாம். ஆனால் 90 நிமிஷம் லேட்டாம்.

“ஆஹா! அப்போ என்ன பண்ணலாம் அங்கிள்?”

“நீ சாப்பிட்டியா?”

“இல்ல அங்கிள்”

பக்கத்தில் அவசர கதியில் இயங்கிக் கொண்டிருந்த சிற்றுண்டி சாலையில் இருவரும் சாப்பிட டோக்கன் வாங்க இருந்தது.

பூரி மசால் தான் இருந்தது.

அவள் பணம் எடுக்க, நான் வேகமாக ஜி பே போட்டு டோக்கன் வாங்கி விட்டேன்.

“தேங்க்ஸ்!”

90 நிமிஷ தாமதத்திற்கு வருந்தும் வண்டி 180 நிமிஷம் கழித்துத்தான் வந்தது. எனக்கு குஷிதான். “இன்னிக்குத் தூறல் இல்லை- மழையே பெய்யுது டோய்!” என்று உற்சாகப் படுத்திக் கொண்டேன்.

“அங்கிள் நாம அங்கே ஓரமா உக்காந்திடலாம்!” என் பெட்டியைக் கையில் வாங்கிக் கொண்டு முன்னால் நடக்க ஆரம்பித்தாள்-ஆஷிகா.

உதட்டில் பெயரை மீண்டும் வருடிப் பார்த்தேன். இனிமையாக இருந்தது. நல்ல பெண். பெட்டியைக் கூட எடுத்து ஹெல்ப் பண்ரா.

மனசில் சபலம். அவளிடம் நிறைய பேசலாம். கனிவாப் பேசறா!

தாமதத்திற்கு வருந்திக் கொண்டே இருந்த ரயில் நிலையம் திடீரென்று தூங்கிவிட்டது.

அப்புறம், ரயில் வர கிட்டத்தட்ட 2 ½ மணி நேரம் ஆனது.

எனக்கு மனசில் குதூகலம்தான். அவளும் ஹாப்பிதான்!

“அங்கிள் சூடா பால் சாப்பிடறீங்களா?” ஆஷிகா கேட்டாள்.

“டபுள் ஒகே”

அதற்குள் அவள் பால் கிளாஸைக் கையில் கொண்டு வந்து விட்டாள்.

“உனக்கு?”

“எனக்குப் பால் அலர்ஜி”

மனசு சந்தோஷப் பட்டாலும், “பாவம்! நமக்கும் ஒரு கரிசனம் காட்டுறாளே?” என்று தோன்றியது. இந்தக் கரிசனம் எனக்கு மிஸ்ஸிங்க்.

என்னென்னவோ பேசினோம்.

நடுவில் வந்த கால்களை அத்தனையும் கட் பண்ணினாள்.

“அங்கிள்! உங்களோட நிறைய பேசணும்னு தோணுது! யூ ஆர் வெரி வெர்ஸடைல் அண்ட் ஸ்வீட்!”

“ நீ மட்டும் என்ன? ஒரு பல் டாக்டர்! இவ்வளவு சிம்பிளா இருக்கே! எனக்கு ஹெல்ப் பண்ரே! …ஐ லைக் யூ ஸோ மச்!”

சிரித்தோம்.

“ஸெல்பி எடுக்கலாமா அங்கிள்?”

எடுத்தோம். சிலர் வினோதமாகப் பார்த்ததும் தெரிந்தது.

இன்னொன்றும் சொன்னாள், “அங்கிள்! நாம இப்போ பேசற மாதிரியே எப்பவும் பேச முடியுமா?”

எனக்குத் தெரிந்த விடையை அவளிடம் சொன்னேன்.

“இந்த ஒரு சந்தர்ப்பம் கடவுள் கொடுத்தது என்று நான் நினைக்கிறேன். முன் பின் தெரியாத நாம் முதல் சந்திப்பில் தடையின்றி எத்தனை விஷயங்களைப் பேசினோம்? ஒண்ணா சாப்பிட்டோம்! செல்பி எடுத்தோம். ஆனந்தமாக இருக்கு. உனக்கு எப்படி இருக்கு?

“லவ்லி!” கண்ணை அகல வைத்து ஆனந்தமாகச் சொன்னாள்.

“ஆஷிகா! வாழ்க்கையில் மேலும் நாம் சந்திக்க முடியலாம், முடியாமலும் போகலாம். ஆனா இன்னிக்கு நாம சேந்து உக்காந்து பேசுனது நம்ம ரெண்டு பேருக்கும் தேவை இருந்தது. வீ எஞ்ஜாய்டு.

ஆட்டோல வந்ததால நாம் நெருக்கம் ஆனோம்.

நம்மகிட்ட நிறைய நேரம் இருந்தது. ஆரம்பத்தில் எனக்கு உன் கம்பெனி கிளுகிளுப்பாக இருந்தது. நான் உன்னை, உன் குணத்தை, உன் பேச்சை ரசிக்கிறேன். இதுவும் ஒரு வகைக் காதல் தான். தப்பா நினைக்காதே!

“ஏன்? எனக்கும் உங்க கம்பெனி ரொம்ப சுகமா இருந்தது. எனக்கு ஒரு கம்ஃபர்ட் கிடைத்தது. ஐ லவ் யூ அங்கிள்!

நாம இதய பூர்வமா மகிழ்ந்தோம். தொட்டுப் பேசினோம். சிரிச்சோம். கிள்ளினோம்.

உங்களுக்கு உள்ள அறிவும் அனுபவமும் என்னால புரிஞ்சுக்க முடியுது!. உங்களை ஒரு உயர்ந்த நிலையில் வைத்து வழிபட மனசு சொல்லுது.

என் கண்கள் கலங்கின! மனசில் நெருடியது!

என்ன ஒரு தெளிவு! என்ன ஒரு பாசம்!

மெட்ராஸ் பயணம் முடிந்து ரொம்ப நாட்களுக்கு என்னை வாட்டியது ஆஷிகாவின் கலகலப்பும் நினைவும்.

ஆரம்பத்தில் வாட்ஸ் அப் போட்டு தொடர்பிலிருந்தாள்.

இப்போது தொடர்பு எல்லைக்கு வெளியே என்று தெரிகிறது. எங்கே என்று தெரியவில்லை. போனில் பேசக் கிடைக்கவில்லை.

ஒரு நாள் பேப்பர் பார்க்கும்போது தற்செயலாக ஆஷிகாவின் போட்டோவின் கீழ் செய்திக்குறிப்பு ஒன்று இருந்தது.

வய நாட்டில் ஏற்பட்ட நிலச் சரிவில் பலியான பெண் டாக்டர்!

மனசில் துக்கம் கவ்விக் கொண்டது!

சந்திரசேகரன் (நரசிம்மன்) அவர்கள் புகழ்பெற்ற தென்னிந்திய இந்து பிராமண வழக்கறிஞர்கள் குடும்பத்தில் அரியலூரில் பிறந்தார். மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம்(1976) பெற்று சமூக விஞ்ஞானி ஆவதற்குத் தொடர்ந்தார். கல்லூரியின் சிறந்த ஆல்ரவுண்ட் மாணவருக்கான டாக்டர்.எம்.நஞ்சுண்டராவ் தங்கப் பதக்கம் வென்றார். பார்வை: நான் என்னை ஒரு தலைவர், வழிகாட்டி, ஆலோசகர், வழி கண்டுபிடிப்பாளர், பிரச்சனை தீர்வு காண்பவர், பேச்சுவார்த்தை நடத்துபவர், ஆராய்ச்சியாளர், பொருளாதார…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *