விவரம் தெரிந்த பிறகு வாழ்ந்த கல்லூரி வாழ்க்கை கூட இதயத்தில் தூரமாய் உள்ளது, ஆனால், விவரம் தெரியாமல் அனுபவித்த, அந்த பள்ளி வாழ்க்கை இதயத்தில் இன்னமும் நெருக்கமாய், அழியாத சுவடாய் உள்ளது..
*எதுவும் கடந்து கடந்துபோகவில்லை*
இதற்கு, நிறைய காரணங்கள் இருக்கலாம்.. எனக்கு, என்னோட முதல் காதல்.(பள்ளிக்கூடத்துல வர்றது காதலே இல்லைனு நிறையபேரு சண்டைக்கே வருவாங்க. எனக்கு பள்ளிக்கூடத்துக் காதல் உண்மையா? பொய்யான்னு தெரியலை. ஆனா, பிரிஞ்ச வலி மட்டும் உண்மை) ஏன்னா முதல் காதல் தோல்விதான் பலருக்கு வாழ்க்கை-ல பெரிய அடியா இருந்திருக்கும்.. வாழ்க்கையோட அர்த்தத்த தேட தூண்டிவிட்டுருக்கும்.. ஆனா, இந்த வாழ்க்கைல நான் பல நேரங்கள்ல நினைச்சது உண்டு, “நிம்மதி கிடைச்ச இடமும், நிம்மதியை தொலைச்ச இடமும் பள்ளிக்கூடம் தான்” இன்னைக்கு அந்த தொலைஞ்சு போன நிம்மதிய தேடி தான் வந்துருக்கேன். இந்த பள்ளிக்கூடத்த இடிக்கப் போறதா பேசிட்டு இருக்காங்க.. பயமா இருக்கு.. நான் வாழ்ந்ததுக்கான சுவடே அழிஞ்சு போற மாதிரி பயமா இருக்கு.. பள்ளிக்கூடத்தோட வாசல்-ல நின்னு அதோட அழக ரசிச்சுக்கிட்டு இருக்கேன்.. (படிக்கும் போது இந்த அழகு யாருக்குமே தெரியுறது இல்ல) இந்த அழகு இன்னும் கொஞ்ச நேரத்துல தரை மட்டமா ஆகப் போகுதுனு நினைக்கும் போது உயிரே கலங்குது.. பள்ளிக்கூடம் முடிஞ்சு, கடைசியா நடந்து போன அந்த இடத்த, வெறிச்சுப் பார்த்துக்கிட்டே இருக்கேன். மறுபடியும் நாங்க எல்லாம் ஒன்னா, நடந்து போகமாட்டோமானு ஏங்கிட்டு இருக்கேன். மறுபடியும் இந்த பள்ளி வாழ்க்கை கிடைக்காதானு தவிச்சுகிட்டு இருக்கேன்..
என்னோட முதல் காதல் கதை முழுசா தெரிஞ்ச ஒரே ஜீவன் இந்த பள்ளிக்கூட சுவர்கள் தான்.. காதலி நடந்து போகும் போது, அவள ஒழிஞ்சு நிண்ணு பார்பேன்.. அத இந்த சுவர்கள் நிச்சயம் மறந்திருக்காது.. இந்த சுவர இப்போ நான் தொட்டுப் பாக்குறேன். (இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த சுவர இடிக்கப் போறத நினைச்சா கண் கலங்குது. இந்த சுவர்க்கு, தான் சாகப்போறோது தெரியாதுனு நினைக்கும் போது, அந்த வலி என் நெஞ்ச இன்னும் அதிகமா அழுத்துது) என்னோட கண்ணத்த, இந்த சுவர்கள்-ல புதைச்சு வைக்குறேன்.. ஜில்லுனு இருக்கு. தாய் மடில சாய்ந்த மாதிரி ஒரு சொர்க்க உணர்வு. இந்த சுவர் என்னோட இரகசியத்த என் காதுக்குள்ள கிசுகிசுக்குது. சிரிக்குது.. என்ன பிரிஞ்ச சோகத்த சொல்லி கலங்குது. என் காதலுக்கு இன்னும் சாட்சியா இருக்குறே ஒரே ஜீவன் இந்த பள்ளிக்கூடம் தான்.. (அதனாலயே அழியக்கூடாதுனு தோணுது) சில நேரங்கள்ல தோணும், பள்ளிக்கூடத்துக்கும் உயிர் இருக்குதுன்னு.. நான் அத கடந்து போகுறப்பல்லாம், உள்ள வந்து என்ன பாத்துட்டு போ-னு ஏங்குற மாதிரியே இருக்கும் அந்த பள்ளிக்கூட சுவர்கள்.. ஆனா, அதால தான் பேச முடியாதே.. பள்ளிக்கூட சுவர்களும், தன்னால பேச முடியலயேனு ஏங்கிட்டு தான் இருக்கும்னு தோணுது.. பள்ளி வாழ்க்கை முடிஞ்சு, எல்லாரும் கடைசி நாள்-ல, கண்ணீராலயும், வலியான வார்த்தையாலையும் நம்ம துக்கத்த, பிரிவ வெளிப்படுத்தி ஆறுதல் தேடி இருப்போம். ஆனா, பாவம் அந்த சுவர்கள், பிரிவின் வலிய வெளிப்படுத்த முடியாம கதறிறுக்கும்.. நானும் உங்கள miss பண்றேன்னு சொல்ல முடியாம ஏங்கியிருக்கும்.. “ஒரு எழுதத் தெரியாத ஊமையின் கவிதை மாதிரி..”
வகுப்பறைக்கு உள்ள போகுறேன்.. மெளனமா இருக்கு.. ஏன் என்னப் பார்க்க இப்போ யாருமே வர்ரது இல்லைனு சொல்லி கலங்குது.. தூசி படிஞ்சு அதோட சோகத்த வெளிக்காட்டுது.. (ஏன் இப்படி, சோகமா அழுக்கா இருக்கனு எனக்கு கேக்க தோணுது.) வகுப்பறைய நாங்க தான் சாயங்காலம் சுத்தம் செய்வோம்.. அத நினைக்கும் போது வலிக்குது.. நீங்க போனப்பிறகு யாருமே இங்க வந்து என்ன சுத்தம் செய்யுறது இல்லைனு சொல்லி கலங்குது.
என்னோட வகுப்பறையில, என் காதலியோட வாசத்த இன்னும் உணருறேன்.. (அந்த வாசத்த இன்னும் எனக்காக தாங்கி நிக்குது) என் நண்பர்களோட சத்தம் இன்னமும் கேக்குது.. பெஞ்ச்ல உக்கார்ந்து அழலாம்னு தோணுது.. வகுப்பறையோட கரும்பலகை மட்டும் இன்னும் அழகா பவுடர் போட்டு சிச்சுக்கிட்டே இருக்குது.. அங்க நின்னு பின்னாடி பெஞ்ச்-ச பாக்குறேன். என் குறும்புத்தனம், ரவுடித்தனம், குழ்ந்தைத்தனம் எல்லாம் அந்த பெஞ்சோட சேர்ந்து அழியப் போறத நினைச்சா அழுகைய நிப்பாட்ட முடியல.. என் இடத்துல உட்கார்ந்து, என் காதலி உட்கார்ந்த பெஞ்ச்-ச பார்க்குறேன்.. ஒரு வலியான சந்தோஷம். இப்பக் கூட சாகலாம்னு தோணுது.. இனி இதே இடத்துல அவளப் பார்க்க முடியாதுன்னு நினைக்கும் போது, மரண வலி வலிக்குது.. இந்த சுவர்களுக்கும் என்னோட உணர்ச்சிகள் புரிஞ்சி மெளனமா இருக்கு. ஆனா இந்த மெளனம் இனிமே இந்த உலகம் அழியுற வரை நிலைக்கப் போகுதுனு நினைக்கும் போது ஏண்டா இந்த பள்ளிக்கூடத்த இடிக்குறீங்கனு சட்டைய பிடிச்சு கேக்கனும் போல இருக்கு.. நான் என் குழந்தைக்கிட்ட, என் மனைவி கிட்டலாம் நான் படிச்ச school-னு சொல்ல நீ இல்லையே நினைக்கும் போது இந்த பள்ளிக்கூடத்தோட சேர்ந்து நானும் அழிஞ்சு போய்ருலாம் போல இருக்கு.. என் நண்பன் என்ன கூப்புடுறான்.. தேடிப் பாக்குறேன்.. என் காதலி என்னை பொய்யான கோபத்துல பாக்குறா. அந்த நினைவுகள இன்னும் ஆழமா தேடிப் பாக்குறேன்.. என்ன ஒரு அற்ப்புதமான உணர்வு.
ஆனா, நிஜத்துல யாருமே இல்லாத தனிமை என் மனச கீறிட்டு போகுது.. கத்தி அழனும் போல இருக்கு.. என் கண்ணீர், நான் உட்கார்ந்திருந்த பெஞ்சுக்கு அஞ்சலி செலுத்துது.. அத பிரிய மனசு வரமா, தடவிக்கிட்டே என் கண்ண துடச்சுக்கிட்டு அந்த வகுப்பறைய விட்டு வெளிய வர்ரேன்.. திடீருனு, என் காதலி கூப்பிடுற மாதிரி ஒரு சத்தம்.. மறுபடியும் வேகமா உள்ள போறேன்.. ஏமாற்றம் என் நெஞ்ச இரணமாக்குது.. பள்ளிக்கூட சுவர்கள்-ல நாங்க கிறுக்கி வச்ச, கல்வெட்டுகள பார்க்கும் போது, அந்த அழகான நேரம் மறுபடியும் வராதானு ஏங்கிப் புலம்புறேன்.. ஆனா இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த கல்வெட்டு எல்லாம், உயிரில்லாம போகப் போகுது. என்னோட வரலாறு அதோட சேர்ந்து அழியப் போகுது..
இந்த பூமில நாமெல்லாம் ஒரு சின்ன புள்ளி தான்.. ஆனா அந்த புள்ளியா கூட நான் இல்லாம போய்ருவனோனு பயமா இருக்கு.. காற்று பலமா அடிக்குது. மரங்கள் போடுற சத்தம் கேக்குது. என்ன பார்க்காம போய்ராதனு ஏங்குறமாதிரி இருக்கு அந்த சத்தங்கள்.. இன்னும் எனக்காகவே காத்துக்கிட்டு இருக்குற அந்த நிழல்கள்.. அந்த நிழல பார்க்க வச்சு தான், நாங்க தினமும் சாப்பிடுவோம்.. சாப்பிட்டு மீதிய தான் அதுக்கு போடுவோம்.. (இப்போ மன்னிப்பு கேட்கனும்னு தோனுது) மறுபடியும், எல்லாரும் உட்கார்ந்து ஒன்னா, இந்த நிழலுல சாப்பிடனும் போல இருக்கு.. மரத்துக்குப் பின்னாடி ஒழிஞ்சு நின்னு, அந்த இறந்து போன நண்பன் கூப்பிடுறான்.. போய் பாத்தா ஏமாறுவேனு தெரியும்.. ஆனா, வாழ்க்கைல சில ஏமாற்றங்கள் கூட ஆறுதலான வலிகளைக் குடுக்கும்.. என்னோட வரலாறத் தாங்கி நிக்கிற இந்த மரம், என்னோட பிரிவின் வலியத் தாங்கி நிக்குற இந்த மரம் இன்னும் கொஞ்ச நேரத்துல, பள்ளிக்கூடம் இடியப் போற, உச்சக்கட்ட கொடுமையப் பாத்து, தற்க்கொலை பண்ணிக்கப் போகுதே.. எனக்கு ஆறுதல் சொல்லவே இந்த உலக்கத்துல யாரும் இல்ல.. இணை பிரியாத இந்த மரத்துக்கு நான் எப்படி ஆறுதல் சொல்ல போறேனோ??
Football ground-ல என் நண்பர்கள் இப்பவும் விளையாடிட்டு இருக்குற மாதிரி பிம்பங்கள் வந்து வந்து மறையுது. காதலிய பார்த்துக்கிட்டே விளையாடுற சுகம் சொர்க்கத்துலையும் கிடைக்காது. சந்தோஷமும், துக்கமும் மாத்தி மாத்தி என்ன வாட்டுது. அந்த மைதானத்துல மதிய நேர உச்சி வெயிலு-ல, குட்டி புழுதி சூறாவளி ஒன்னு உருவாகும்.. கத்தி, ஆரவாரம் பண்ணி இரசிப்போம்.. எங்க சத்தத்தை கேட்டு மறைஞ்சு போகும்.. மறுபடியும் உருவாகும்.. (ஒழிஞ்சு, பிடிச்சு விளையாடும்) அந்த சத்தங்கள், ஆரவாரங்கள் என்ன இப்போ குழந்தை பருவத்துக்கே கூட்டிட்டு போகுது.. P.E.T period-அ, P.T period-னு தான் உச்சரிப்போம். அந்த பீரியட் வந்தாவே போதும், கும்மாளம் தான்.. இப்போலாம் அந்த பீரியட் யாருக்கும் கிடைக்குறது இல்லைனு கேள்விபடுறேன் (வருத்தப்படுறேன்).. அந்த பீரியட்க்கு முன்னாடி maths பீரியட் இருக்கும்.. அடுத்து என்ன பீரியட்னு கேட்டா, physics னு பொய் சொல்லுவோம்.. P.T பீரியட்னு தெரிஞ்சா இவங்களே எடுத்துக்குவாங்க.. (சிலர், chemistry-னு வேணும்னே கூட்டத்துல மாத்தி சொல்லி, அந்த குழப்பத்த இரசிப்பாங்க). இனிலாம் அந்த வாழ்க்கை கிடைக்காது.. அந்த football கோல் கம்பி, யாராவது பந்த உள்ள அடிக்க மாட்டாங்களானு, உயிர கைல பிடிச்சுக்கிட்டு ஏங்கிட்டு இருக்கு.. Sports day நாயகன் இந்த மைதானம் தான்.. அலங்காரம் பண்ணி புதுப் பொண்ணு மாதிரி பாத்துக்குவோம்.. ஆனா, நாங்க இல்லாத சோகத்த தாடி வளர்த்து வெளிக்காட்டுது. (புல், நெறிஞ்ச முள் அதிகம் இருக்கு) நாங்க எல்லாம் வெயிலுல, முட்டி போட்ட இடம் என்ன கலங்க வைக்குது. (அப்போலாம் கலங்குனது இல்லை). சில நேரம் செருப்ப கீழ போட்டு அதுக்கு மேல முட்டி போடுவோம். ஆனா, இந்த இடம் அத சார் கிட்ட சொல்லி மாட்டிவிட்டது இல்லை..(நன்றி)
கலையரங்கம் நாங்க போனப்பிறகு கலையிழந்து போய் கிடக்குது.. என்ன பார்த்து சோகமா சிரிக்குது.. அதுக்கிட்ட, உண்மைய சொல்லிறலாமா?? இல்ல, இன்னைக்கு நடக்கப் போறது (பள்ளிகூடம் இடியப் போறது) வெறும் நாடகம் தான்-னு சொல்லி அத ஏமாத்தலாமா?னு யோசிக்கிறேன்.. இன்னைக்கு ஒரு உண்மையான நாடகம் நிகழ்ப்போகுது-னு மட்டும் அந்த கலையரங்கத்துல கத்தி சொன்னேன். பதிலுக்கு, அதுவும் நான் சொன்னதையே திருப்பி சொல்லி (echo) ஆரவாரம் பண்ணுது. (பாவம், இந்த ஆரவாரம் மொத்தமா அடங்கப் போறது அதுக்கு தெரியாது) என் காதுக்குள்ள இரகசியமா, கலைக்காக என் உயிரையும் குடுப்பேன்னு சொல்லி ஆனந்த கண்ணீர்ல சிரிக்குது.. (மேல் சுவர் விரிசல் வழியா, தேங்கி இருக்குற தண்ணி வழியுது). இந்த கலையரங்கம் எவ்வளோவோ, கைத்தட்டல்கள பார்த்து இரசிச்சிருக்கும்.. இன்னைக்கு இதோட பரிதாபமான, தனிமைய பார்க்கும் போது, கலைக்காகவே இன்னும் உயிர கைல பிடிச்சுட்டு இருக்குற மாதிரி இருக்கு.. ஒரே ஒரு நாடகம், இல்லனா, ஒரே ஒரு நடனமாச்சும் அரங்கேராதானு துடிச்சுட்டு இருக்கு..
அவளோ தான் எல்லாம் முடியப் போகுது.. இந்த கலையரங்கத்தோட மூச்சு அடங்கப் போகுது.. மக்கள் எல்லாம் கூட்டமா பள்ளிக்கூடத்துக்குள்ள வர்ராங்க.. இப்போ கூட இந்த சுவர்களுக்கு, மரங்களுக்குத் தெரியாது இன்னும் கொஞ்ச நேரத்துல அழியப் போறோங்கிறது.. மக்கள் கூட்டத்தைப் பாத்து சந்தோஷப்படுது.. இருந்தாலும், ஏன் எல்லாரும் இவ்வளோ சோகமா இருக்காங்கன்னு சந்தேகப்படுது.. இப்போ இந்த பள்ளிக்கூடத்த இடிக்கப் போறாங்கனு காற்றுக்கு மட்டும் தெரிஞ்சிருச்சு.. பலமா காற்று அடிக்க, மரங்களுக்கும் இப்போ விஷயம் தெரிஞ்சு கூச்சல் போடுது.. ஆனா, இந்த பள்ளிக்கூட சுவர்களுக்கு இன்னமும் கூட தான் சாகப்போறோங்கிற விஷயம் தெரியல.. எல்லாரையும் பாத்த சந்தோஷத்துல இருக்கு.. மக்கள் கூட்டத்த இரசிச்சுட்டு இருக்கு.. என்னோட காதலியும் இப்போ அந்த கூட்டத்துல தான் இருக்குறா. நான் அவள பாத்துட்டேன்.. அவளும் என்னைய பாத்துட்டா. என் கண்ணீரையும் பாத்துட்டா.. இந்த பள்ளிக்கூட சுவர்கள் எங்க இரண்டு பேரையும் பாக்குது.. வருத்தப்படும்னு நினைக்குறேன்.. ஏன்னா, அவளுக்கு கல்யாணம் ஆகி இப்போ ஒரு குழ்ந்தை இருக்குது.. இந்த சுவர்கள், மரங்களுக்கு நிச்சயம் அதிச்சியா தான் இருக்கும்.. தன்னோட குழந்தைய தோள்-லுல தூங்க வைக்க முயற்சி பண்ணுறா.
அவளால நிச்சியம் இத தாங்கிக்க முடியாது.. அவகிட்ட இந்த நிலைமையப் பத்தி, சோகமான பார்வையால கேக்குறேன். அவளும், மெளனமா, சோகத்தையே பதிலா குடுக்குறா. எங்களோட காதல் கதைய தினமும் நினைச்சு சந்தோஷப்பட்டுட்டு இருந்த இந்த சுவர்கள் இனி இருக்கப் போறது இல்ல.. முழுமை பெறாத எங்களோட காதல், இனி அதோட கனவுல கூட முழுமை பெறப்போறது இல்லை. கஷ்டமா இருக்கு. உடம்புல வலி எங்க இருந்து பிறக்குனு தெரியல.. ஆனா வலிக்குது..
மக்கள் கூட்டத்த விலக்கிக்கிட்டு இரண்டு JCB(எமன்) வருது. JCB யையும், கூட்டத்தோட அமைதியையும் பார்த்தப் பிறகு தான், இந்த அப்பாவி சுவர்களுக்கு விஷயம் தெரியுது.. என் காதலி அழுகிற மாதிரி தெரியுது.. இந்த சுவர்கள் என்னை ரொம்ப சோகமா பாக்குற மாதிரி இருக்குது. இப்போ என் முகத்தை மறுபடியும் அந்த சுவர்கள்ல புதைச்சு வைக்குறேன். அந்த சுவர்கள் மெளனமா அழுகுற சத்தம் கேக்குது. என்னால தாங்கிக்க முடியல.. என் கிட்ட ஏன் முதல்லையே சொல்ல-லனு, அந்த சுவர்கள் கதறுற மாதிரி இருக்கு..
“இந்த உலகத்துல நம்ம யாரு மேலயாவது அதிகமா அன்பு வச்சா, பிரிவு தான் இறுதியில மிஞ்சும்-னு, முதல்ல உன்னோட காதல பாத்து தெரிஞ்சுக்கிட்டேன். இப்போ, நானே அந்த நிரந்தரப் பிரிவ அனுபவிக்கப் போறேனு” இந்த சுவர்கள் என்கிட்ட சொல்லி அழுகுது.
பள்ளிக்கூடத்தோட prayer நடக்குற இடத்துல நின்னு இப்போ முதல் முறையா உண்மையா prayer பண்றேன், இந்த பள்ளிக்கூடத்த காப்பாத்துங்க கடவுளேனு.. சத்தம் போட்டு அழக்கூடாதுனு என்ன நானே மனசுக்குள்ள திட்டிக்குறேன்..
நானும் இப்போ கூட்டத்தோட கூட்டமா நிக்குறேன்.. என் பக்கத்துல என் பழைய காதலி, அவ கூட அவளோட குழந்தை.. அவ பக்கத்துல நின்னு அவ கண்ணப் பாக்க முயற்சி பண்றேன். என் முதல் காதல் உண்மையானு தெரிஞ்சுக்க try பண்றேன்.. அவ கலங்குறா.. நிச்சயம் உண்மை தான். வாழ்க்கைல முதல் காதல் நிச்சயமா பிரிஞ்சு தான் போகனும். அப்போதான், ஒரு பொண்ணு எவ்வளோ முக்கியமானவள், காதல் எப்படிப்பட்ட ஒரு உணர்வு, வாழ்க்கை எப்படிப்பட்ட ஒரு போராட்டம்னு புரியும்.. இப்போ எல்லாம் புரியுது. என் கண்ணீர அவ பாக்கும் போதும், அவ கண்ணீர நான் பாக்கும் போதும் தெரியுது, எங்களுக்குள்ள இருந்த அந்த கடந்த காலத்துக் காதல் எவ்வளோ ஆத்மார்த்தமானதுன்னு.. இப்போதான் புரியுது, “தோற்றுப்போவது ஆசைகள் மட்டுமே.. காதல் அல்ல”
நான் ஒழிஞ்சு நின்னு அவள காதலிச்ச அந்த சுவர்கள இப்போ JCB நெருங்குது.. என்னோட இரகசியமான அந்த பார்வைகள் இப்போ பார்வையிழந்து அழியப் போகுதுனு தெரிஞ்சதும் இதயம் நொருங்குது..
சுவர்கள் இடியும் சத்தமல்ல அது.. அந்த சுவரின் வலியின் கதறல்.. அதோட சத்தம் என்ன பலவீனமாக்குது.. என் கண்ணு முன்னாடியே இடிக்குறத பாக்கும் போது, ஒரு காதலன் முன்னாடியே காதலிய கொலை பண்ணுற மாதிரி கோபம், துக்கம் எல்லாம் சேர்ந்து வருது.. என் காதலியோட தோளுல அவ குழந்தையோட, நானும் ஒரு குழந்தையா மாறி சாய்ந்து அழனும் போல இருக்கு.. ஆனா, இந்த உலகம் அத தப்பா தான் பாக்கும்.. அவளோட கண்ணு வழியா இந்த பள்ளிக்கூடம் இடியுறதப் பாக்குறேன்.. அது என் இதயத்த இன்னும் பலவீனமாக்குது..
“ஏன், இந்த உண்மையான காதல் எல்லாம் பிரிஞ்சு போகுது?” அவக்கிட்ட கேட்டேன்..
அவளோட பதில், “அது தான் இந்த பூமிக்கு கிடைச்ச சாபம்”.
இந்த பதில் என்னோட காதல் பிரிஞ்ச நாட்களுக்கு, என்ன கூட்டிட்டு போகுது..
” ஏன் என்ன விட்டுட்டு போன??” இப்போ அவ கேக்குறா
“நீ ஏன், என்ன மறந்துருன்னு சொல்லி அன்னைக்கு அழுத?” நான் அவகிட்ட கேட்டேன்.
“என் நேரம், தலைவிதி அப்படி அழுதேன், அப்படி சொன்னேன். ஆனா நீ என்ன போக விட்டுருக்க கூடாது” அவ கலங்குறா..
“என் நேரம், தலைவிதி.. நீ அழுகுறத என்னால தாங்கிக்க முடியல. அதான் போ-னு விட்டுட்டேன்”
அவளும், நானும் ஒருத்தர ஒருத்தர் பாத்து, விதிய நினைச்சு நொந்து போகுறோம்.. இப்போ இந்த பள்ளிக்கூடம் இடியுறது எங்களோட வேதனைய அதிகமாக்குது..
எங்களுக்குள்ள இருந்த ஒரே ஆறுதல், இந்த பள்ளிக்கூட நினைவுகள், எங்களோட காதல சுமந்துக்கிட்டு இருந்த வகுப்பறைகள்.. ஆனா இப்போ எல்லாமே அழிஞ்சு போச்சு. இனி இந்த நினைவுகள நாங்க மட்டும் தான் சுமக்கப்போறோம்னு நினைக்கும் போது ரொம்பவே பயமா இருக்கு. வாழ்க்கையோட சுமையில, இப்போ இந்த காதல் நினைவுகளும், பள்ளிக்கூடத்தோட அழிவுகளும் சேர்ந்துருச்சு.. இனி எப்படி வாழ்க்கைய நகர்த்தப் போறோம்??
அந்த இறந்து போன நண்பன் இனி எப்படி என்னோட அந்த மரத்தடி நிழலுல ஒழிஞ்சு பிடிச்சு விளையாடுவான்?? அந்த மரங்கள் என் கண்ணு முன்னாடி உயிரிழந்து வெறும் கட்டையா விழுது..
என் காதலி சொன்னது உண்மைதானு எனக்கு தோணுது.. “உண்மையான காதல் பிரிஞ்சு தான் போகும்.. ஏன்னா, அது தான் இந்த பூமிக்கு கிடைச்ச சாபம்..”
இனி இங்க ஒரு பள்ளிக்கூடம் இருந்ததுக்கான அடையாளம் இருக்கப் போவதில்லை, என் வாழ்க்கையின் இறந்த கால வரலாறுகள் அழிக்கப்பட்டு விட்டது, என் காதல் முதலில் பிரிந்தது, இப்போது அதன் சுவடுகளும் சேர்ந்து அழிந்து விட்டது.. என் இறந்து போன நண்பனின் ஆன்மா, நிம்மதியற்று அலை(ழி)யப்போகிறது. துன்பங்கள் இனி துரத்தப் போகிறது..
“இந்த இடிபாட்டுக்குள் இந்த பள்ளியின் ஆன்மா உயிரற்று கிடக்கிறது.. பல ஆயிரம் மாணவர்களை சுமந்த இந்த பள்ளிக்கூடம், சுமக்க நாதியற்று இந்த இடிபாட்டுக்குள் புதைந்து கிடக்கிறது”
இனி என்னால் நிற்க்க முடியாது..
என் காதலியைப் பார்த்து, “பார்க்கலாம்” அழுகின்ற விழிகளுடன் சொன்னேன்..
“எப்போ?” அழுகின்ற தொனியில் கேட்டாள்.
மெதுவாக திரும்பி, பொய்யான சின்ன சிரிப்பில்,
“அடுத்த ஜென்மத்தில், …….(மெளனம்)……. இதே பள்ளிக்கூடத்தில்” கண்ணீரைத் துடைத்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தேன், வாழ்க்கையில் ஒரு நாள் புன்னகை பூக்கும் என்ற நம்பிக்கையில்..
மறுபடியும், மனசுக்குள்ள அந்த வரிகள் மட்டும் வந்துட்டுப் போகுது.. “தோற்றுப் போவது ஆசைகள் மட்டுமே. காதல் அல்ல”
-காதல் தொடரும். ஆசைகள் அல்ல..