‘வர்நிகா’ அழகான பெயர் என்று நீ சொன்னபோது அதை நான் ஏற்றுக்கொண்டு சிறு புன்னகை செய்வேன். எனக்கோ அந்த பெயர் அரவே பிடிக்கவில்லை என்பதுதான் நிஜம். இருந்தும் இதுவரை யாரிடமும் வெளிபடுத்தியது கிடையாது. உன்னிடமும் தான் அகிலன். உன்னுடனான சம்பவங்களும் உன்னிடம் நான் சொல்லாத விசயங்களும் இந்த கதையில் நீ படிக்கலாம். அகிலன் நீ இலக்கியம் வாசிப்பவன் என்பது எனக்கு தெரியும். என் நினைவு தெரிந்த நிலையிலிருந்து வெறுத்துப்போன வாழ்க்கையில் பெயரும் இருப்பது உனக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். என் பெயர் எனக்கு பிடிக்காமல் போனதற்கு காரணம் எனது அம்மாவை பிடிக்காமல் போனது தான். அவள் எனக்கு இட்ட பெயர்தான் வர்நிகா. என் அம்மா என்னிடம் அவ்வப்போது வந்து நேசமாக நடந்துக்கொள்ளும் போதெல்லாம். அது வெறும் நாடகம் என்கிற எண்ணமே என் மனசுக்குள் ஓடியது. என் அப்பாவின் இறப்பிற்கு பின்னும் நான் அவரை… அவரை மட்டுமே நேசித்திருந்தேன். என் அம்மாவை விட்டு ஒதுங்கி என் சித்தப்பாவின் வீட்டில் அப்போது இருந்தேன். நமது ஆரம்ப பழக்கத்திலேயே இவையெல்லாம் நீ அறிந்தவிசயம் தான். என் சித்தப்பாவின் குடும்பமாக சித்தி மற்றும் சித்தப்பாவின் ஒரே மகனான விவேக் மற்றும் நானும் ஒரே வீட்டில் வசித்தபோதும் அவர்களுடனும் என்னால் இயல்பான உறவில் இனைந்து வாழமுடியவில்லை. எனக்கும் என் அப்பாவிற்குமான உறவை போல் பிணைப்பு வேருயாருடனும் எனக்கு ஏற்படவில்லை. எனக்கென்ற தனியறை. கல்லூரிக்கு செல்வதும் வருவதுமாக இருப்பேன். கல்லூரியிலும் நான் யாருடனும் நெருங்கி பழகுவதில்லை கீதா அடிக்கடி சொல்வாள். கீதா எனக்கு நேர்மாறானவள், எப்போதும் அவள் முகத்தில் புன்னகை இருக்கும். அவளது அந்த புன்னகையே எனக்கு ஒருவித ஆறுதலாய் தோன்றும். அவளுடன் சகஜமாக பழகும் ஆண் நண்பர்கள் நிறைய இருந்தனர். ஆனால் நான் எந்த ஆண்களுடனும் நட்பு கொண்டிருக்கவில்லை. ராஜேஷை சந்திக்கும் வரை. கீதா ஆண்களை பற்றியும், காதலை பற்றியும் தான் பெரும்பாலும் பேசிக்கொண்டிருப்பாள். பெண்கள் திருமணம் முடிந்து கணவனுடன் சென்றவுடன். என்னவெல்லாம் செய்து கணவனை கைக்குள் வைக்கவேண்டும் என்று தனி வகுப்புதான் நடத்துவாள். “பக்கத்து எதிர் வீட்ல வயசு பொண்ணுங்க, யாரும் ‘விடோ’ இருந்தால் ஜாக்ரதையாக இருக்கனும் இல்லேன்னா உன்னவிட்டு ஓடிபோய்டுவான்” என்று சொல்லி சத்தமாக சிரிப்பாள்.
ராஜேஷ் அப்போது எனக்கு சீனியராக எம். ஏ. ஹிஸ்டரி முதலாம் ஆண்டு படித்துகொண்டிருந்தான் கல்லூரிக்குள் எழும் பல சண்டைகளுக்கு காரணகர்தாவாக இருப்பது அவனே, அவன் மீது எனக்கு எந்த விதமான ஈர்ப்பும் ஏற்படவில்லை… என்றபோதும் ஏதோ ஒருவித பரிவு. ஏதோ ஒரு நாள் கல்லூரியிலிருந்து பேருந்து நிலையத்தில் “இப்போ என்ன லவ் பண்ணபோறியா இல்ல இந்த பஸ்ஸுக்கு முன்னாடி விழுந்து உன் கண்முன்னாடியே சாகட்டுமா?” என்று மிரட்டி விழச்சென்றுவிட்டான். கீதாவிற்கு எங்கள் காதலில் விருப்பம்மில்லை. எனக்கு ஏனோ காதலும் கசந்தது அகிலன். உன்னுடன் நான் இருந்த பல சமயம் அழுதிருப்பேன் எந்த சந்தோசமும் உனக்கில்லை மன்னித்துவிடு அகிலன்.
பின் என் வாழ்வின் நான் மிகவும் முன்னுரிமை கொடுத்து… அன்பு செலுத்தி வளர்த்த நாய் ப்ரௌனி. விவேக் பள்ளியில் படித்து கொண்டிருந்த சமயம் அதை எடுத்து வந்தான். எனக்கு தெரிந்த வரையில் அவன் அந்த நாய்க்குட்டிக்காக பன்னிரெண்டு ரூபாய் குடுத்திருக்கிறான் என்பது மட்டுமே. அது சாக்லேட் நிறம் மற்றும் வெள்ளை கலந்து அழுகுடனே இருந்தது அதனால் ப்ரௌனி என்று பெயர் வைத்தேன். விவேக் பள்ளி முடித்து கல்லூரிக்கு செல்வதற்கு முன்பே பிரௌனியிடமிருந்து விலகியே நடந்துகொண்டான். ப்ரௌனி மிகவும் நேசமாய் இருந்தது என்னுடன் மட்டும்தான். என் அறையில் என்னுடன்தான் எப்போதும் இருக்கும். கல்லூரியிலிருந்து நான் வரும் நேரம் அறிந்து தினம் எனக்காக வாயிலில் அமர்ந்தபடி காத்துகொண்டிருக்கும், கண்டவுடன் வாலினை அசைத்து குதித்து முகத்தை எச்சில் படுத்திவிட்டுத்தான் ஆசுவாசம் அடையும். சிரிப்புதான்… இரவில் என்னுடன் படுத்து உறங்கும். நான் என் வொவ்வொரு நாளினையும் அதற்காக கொஞ்சம் செலவிட்டேன். ப்ரௌனி எனக்கு மிகவும் ஆறுதலாய் இருந்தது உண்மை. அதற்கு தினம் இரண்டு வேளை பால் மற்றும் உணவாக பிஸ்கட்டுகள் தருவேன், வீட்டில் அசைவஉணவு சமைக்கும் வேளைகளில் அது சமையலறை விட்டு நகராது. சித்தி அதற்கு குறைந்த அளவில்தான் மாமிசம் வைப்பாள். என் அறையில் அதற்கு என் உணவு மாமிசத்தையும் பாதிக்குமேல் தந்துவிடுவேன். விடுமுறை நாட்களில் ப்ரௌனியுடன் ஏதாவது மனதிற்கு வந்தபடி பேசிகொண்டிருப்பேன். ப்ரௌனி என் வார்த்தைகளை புரிந்து கொள்ளும்… என்று நம்பினேன். அந்நாட்களில் இரண்டுமுறை ப்ரௌனியை வீதிகளில் கூட்டி செல்வேன், சற்று தொலைவில் இருக்கும் நீரோடை வரை கூட்டிசென்று நீரை அதன் மேல் தெளித்து விளையாடுவேன்… அது உடலை சிலிர்பி கொள்ளும். எல்லா நாய்களுக்கும் நீச்சல் தெரியுமா? என்பதில் எனக்கு ஒருவித சந்தேகம் இருந்தது.
நான் ஒன்றும் எழுத்தாளர் இல்லை. வளவள என்று எழுதிவிட்டேனா அகிலன்? உன்னுடன் இருந்த நாட்களில் நீ புத்தகம் படிப்பேனா என்று கேட்டிருக்கிறாய். “பாரதியை படித்திருக்கிறாயா?” என்பாய் “’படி” என்பாய். ஆனால் திடீரென எழுத தூண்டியது உனது நினைவுகள்தான் அகிலன். உன்னைபற்றிய நினைவுகள் இப்போதெல்லாம் அடிக்கடி ஏற்படுகிறது. நினைவில் வருவது… வழக்கத்திற்கு மாறாக அப்போது தினம்தோறும் ஐஸ்கிரீம் சாப்பிடும் ஒருவித அகச்சூழலில் இருந்தேன். நீ அப்போது என்னை மொபைலில் அழைத்தாய். காத்திருந்தேன். நீ தூரத்தில் வருவது அறிந்த போதே என்னுள் புதிதாய் உணர்ந்தேன். உன்னை முதல் முறை சந்தித்ததை காட்டிலும் மேலான… “இப்போ எப்படி இருக்கீங்க வர்நிகா? “கீதாகிட்ட தான் உங்க நம்பர் வாங்குனேன். உங்க முகம் இப்பவும் கவலையில்தான் இருக்கு. என்னை பாருங்கள். என்னை போல இருங்க” என்று சிரித்து கொண்டாய். எனக்கு உன் கண்கள் இப்போதும் வியப்பை தருகிறது… குழந்தைகளின் கண்களை போல. பின் உனது குரல் அது ஒரு பெண் ஆணின் குரலில் எதிர்பார்க்கும் அன்பு நிறைந்திருக்கும் குரல்.
அன்று கீதா சொன்னவுடன் லாவகமாய் கத்தரித்த முடியுடன், முகத்திற்கு அளவான தாடி மீசையுடன் குழந்தை குணம் குறையாத கண்களுடன் இருந்த உன்னை முதன் முதலில் சந்திப்பேன் என நினைக்கவில்லை. கீதா சொன்ன பெயர் நீயாகதான் இருப்பாய். “ஆமாம்..நீங்க?” “நான் வர்நிகா, கீதா பிரெண்ட். அவ வர கொஞ்சம் லேட் ஆகுமாம், உங்கள என் வீட்டுக்கு அழச்சிக்க சொன்னா. அதான் வீடு. அவ ஆன் தி வே…” நீ வீட்டிற்குள் நுழைந்தவுடனே யார் புதிதாய் வந்தாலும் குறைக்கும் ப்ரௌனி உன்னை கண்டவுடன் வாலினை அசைந்து கொடுத்து உன் கைகளை நக்கியது. “இது கடிக்குமா?” என்றாய் தடவிகொடுத்தபடி. சித்தி என்ன நினைத்திருப்பாள். நீ என் ப்ரௌனியுடன் மிகநெருக்கமாகிவிட்டாய், அது வால் அசைப்பதை நிறுத்தவில்லை. “நாய் குட்டிங்க எதையுமே எதிர்பார்க்காம அன்பு செலுத்துதில்ல? இது பேர் என்ன?” இரண்டு முறை பெயர் சொல்லி அழைத்து சிரித்துகொண்டாய், பொலிவான உன் முகத்தில் ஏற்பட்ட புன்னகை… மறக்க முடியாதது.
கல்லூரியிலிருந்து மாலை வரும் வழியில் இரண்டு தெருநாய்களுக்கு ‘பிஸ்கட்’ வாங்கி உடைத்து போட்டேன்.. சாலையில் அழுதுவிட கூடாது என்றெண்ணி நடந்து வந்தேன். சாலையின் ஓர டீ கடை ஒன்றில் நீ யாரோ ஒரு ஆணுடன் பேசிகொண்டிருந்தாய். ஆனால் நான் உன்னிடம் அதை சொல்லவேண்டும். “ஹலோ வர்நிகா.. எப்படி இருக்கீங்க? பாத்திங்களா? உங்கபெயர மறக்கல…” சிரித்தாய். “என்னாச்சு?” நான் உன்னிடம் ப்ரௌனி இறந்து விட்டதாய் கூறி அழுதேன். என்னுடைய ஒரே ஆன்ம உறவு. அன்று என்னையே பார்த்தபடி அமர்ந்திருந்தாய் நான் அழுதபடியே இருந்தேன்… கண்ணீரினை கைகளை கொண்டு துடைத்தபடியே இருந்தேன்… இப்பொது அதை எழுதுகையில் கூட எனக்கு அழுகை வருகிறது அகிலன். நீ அன்று எதுவுமே பேசவில்லை என்னை பார்த்தபடியே இருந்தாய். மனம் நிலைகொள்ளவில்லை அதிகமாக ஐஸ்கிரீம் சப்பிட்டுகொண்டிருந்தேன் அப்போது. என் நிலைபுரிந்து, நீ மூன்றாம் முறையாக வந்தாய் இதுவரை அனுபவபடாத ஒன்றில் மனதை செலுத்த சொன்னாய். ஆல் இந்தியன்ஸ் வுமன்ஸ் ஹெல்ப் லைன் என்று நம்பர் ஒன்றை குறித்துக்கொள்ள சொன்னாய். இதுவரை அனுபவபடாத ஒன்று… என் அப்பாவிற்கு பிறகு முதன்முறையாக உன்னுடன் தான் ஐஸ்கிரீம் சாப்பிட்டேன். “என்ன செய்கிறேன் என்றால்?” “படிப்பேன் ஆனால் உன்னைப்போல காலேஜில் இல்ல” நீ எதுவும் என்னிடம் சொல்ல விரும்பவில்லை. உனக்கு காபி குடிக்க பிடிக்கும். மறுநாள் கல்லூரி முடிந்ததும் நான் உனக்கு மெஸ்சேஜ் செய்தேன் “ஐ வான்ட் டு ட்ரின்க் எ காபி வித் யு அகிலா J”.
வாரத்தில் ஒருமுறை அப்பாவுடன் ஒரு நாள் முழுவதும் இருப்பேன். அப்போது அவர் அந்த சாக்லேட்டுடன் வெண்மைநிறத்தில் இருக்கும் ஐஸ்கிரீம் ஒன்றை எனக்கு வாங்கி தந்து அவரும் ஒன்று சாப்பிடுவார். அப்போதெல்லாம் அவர் சொல்லும் ஓர் வார்த்தை அந்த ஐஸ்கிரீமை அவர் தன் தனிமைக்கு மருந்து என்பார். இந்த ஐஸ்கிரீம்மினை என்னுடன் சாப்பிடவே வாரம்முழுவதும் தான் காத்திருப்பதாக சொல்வார். இதை என் சிறுவயதில் ஏற்பட்ட எலெக்ட்ரா காம்ப்ளெக்ஸின் பாதிப்பு என்றாய். முதன் முதலாக உன் தோளில் சாய்ந்து அழுதேன். ஐஸ்கிரீம்களை சாப்பிடும் பழக்கம் எனக்கு அப்போதிலிருந்து நின்றுபோனது ஒருவித அதிசயம் தான். கீதாவை போல என் வாழ்விலும் புன்னகைகள் மலர தொடங்கிருந்தது, ராஜேஷினை பற்றிய நினைவுகளும் இல்லை. உன்னுடன்னான உறவு எப்படி தொடர்ந்து கொண்டிருந்தது என்ற நினைவுகளும் தற்போது இல்லை. உன்னை சந்திக்கவேண்டும் உன்னுடன் ஒவ்வொரு நாளின் சிறுபொழுதேனும் கழிக்கவேண்டும். அகிலன். உனக்கு புடிச்ச ஹீரோ லகான்.
யாரு?.
“வர்னி.. நீ என்ன தினமும் கூப்பிடற.. நாம கைகோத்துகுறோம்.. நீ என் தோள்ல சாஞ்சி அழுகுற.. என்னவிட்டு பிரிஞ்சி இருக்கமுடியலனு சொல்ற புரியுதா? நீ கண்டிப்பாக சகித்துக்கொண்டுதான் இருந்திருப்பாய் அகிலன். “உங்க அம்மா மேல உனக்கு கோவம் வேண்டாம் வர்னி.. அது அவங்க வாழ்க்கை…முடிவு” நான் இப்போது அம்மாவுடன் இருக்கிறேன். அம்மா என்னிடம் அன்பாக இருக்கிறாள். உன்னை தொடர்புகொள்ள விரும்பி உன் நம்பரினை அழைத்தேன் நீண்ட நாட்களாக ‘சுவிட்ச் ஆப்’ல் உள்ளது. கீதாவை அழைத்தேன். “ஏன்?” அவளது அண்ணன் ஹெராயின் பழக்கத்தில் அடிமை பட்டுகிடந்த போது ஹெல்ப் லைன் நம்பரில் கவுன்சிலிங் செய்ய நீ வந்தாய் என்றாள். என்னிடம் இருந்த உனது மொபைலின் அதே நம்பரை சொன்னாள், மேலும் இப்படி பட்டவர்களின் பெயர் உண்மையாக இருக்குமா என்றுகூட சொல்ல முடியாது. அப்படியா அகிலன்?… அகிலன்… அகிலன்… நீ என் அகிலன். அம்மா என்னிடம் ஒருநாள் கைபிடித்து மன்னிப்பு கேட்டு அழுதாள், மன்னித்துவிட்டேன். என்னிடம் யாரையேனும் விரும்புகிறாயா சொல்? என்றாள். அகிலன் இதுவரை நீ என்னை தொடர்புகொள்ளவில்லையே ஏன்?
அன்று நீ “வர்னி… இன்னைக்கு சொல்லிடறேன் நான் உன்ன காதலிக்கிறேன்.. நாம சேர்ந்து வாழணும்னு ஆசபட்றேன்” என் கைகளை இறுக்கமாக பிடித்திருந்தாய். நான் உன் வார்த்தைகளை ஏற்றுகொள்ளமுடியாமல் மௌனமாக அழுதேன், கண்டிப்பாக என் அழுகை உனக்கு அழுத்துத்தான் போயிருக்கும். ஏதோ ஒன்றை உனக்குள் முடிவெடுத்தவனாய் அன்று கோபத்தோடும் வெறுப்போடும் நீ அங்கிருந்து சென்றாய்.
நீ என் பார்வைக்கு தூரமாகி… புள்ளியாகி மறையும் வரை நான் அந்த சாலையினையே பார்த்துகொண்டிருந்தேன்.