‘என்னடா கண்ணா, இந்தியாவுக்கு வருவேன் என்று இதுவரையும் ஒரு வார்த்தையும சொல்லாமல்; சட்டென்று வந்து குதிக்கிறேன் என்கிறாய், இந்தியாவில யாரும் சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு வர்றியா?’
‘அப்படி ஒண்ணும் கிடையாது. ஹொலிடேயில எங்காவதுபோகலாம் என்று யோசித்தேன்,இந்தியாவுக்கு வந்தால் உன்னைப் பார்த்ததுமாயிற்று’
‘அப்படி ஏன் சட்டென்று வர்ர?’ சென்னையில் வாழும் அரவிந்த் லண்டனிலிருந்து (வடக்கு லண்டனிலிருந்து) வரப்போகும் தனது நண்பனை,மிகவும் ஆச்சரியமான குரலில் பல கேள்விகளால் டெலிபோனிற் துளைத்துக் கொண்டிருந்தான்.
‘ஏன் யாரும் இந்தியாவுக்கு லண்டனிலிருந்து சட்டென்று வந்து இறங்கக் கூடாது என்ற சட்டம் உங்கள் நாட்டில்; அமுலாக்கப் பட்டிருக்கிறதா?’கண்ணன் பதிலுக்குக் கேள்வி கேட்டான்.
‘அப்படி ஒண்ணுமில்ல’ அரவிந்தின் குரலில் இன்னும் ஆச்சரியம் தொடர்கிறது.
‘அரவிந்துக்கு உண்மையான காரணத்தைச் சொல்லலாமா?
இந்தியாவில் போய் இறங்கவேண்டும் என்ற கண்ணனின் அவசர துடிப்புக் காரணம்.அவனது மனதில் பல குழப்பமான சிந்தனைகளைத் தந்துகொண்டிருக்கும் கவிதா என்றொரு கோயம்புத்துர்ப் பசும்கிளிக்கு ஒன்று விரைவில் திருமண நிச்சயார்த்தம் நடக்கப் போகிறது என்று தெரிந்துகொண்டதால் வந்த பதட்டம்தான் என்பதை அவன் அரவிந்துக்குச் சொல்லமுடியாது.
அரவிந்துக்குக் கவிதாவைத் தெரியாது.அவள் பற்றி கண்ணன் சொன்னதும் கிடையாது.
அவளைப் பற்றிச் சொல்லுமளவுக்கு கண்ணனுக்குக் கவிதாவைப் பற்றி நிறையத் தெரியுமா என்று கண்ணன் தன்னைத்தான் கேட்டுக் கொண்டால் அதற்கும் அவன் சரியாகப் பதிலும் தெரியவில்லை.
கண்ணனின் தங்கை சாலினியின் சினேகிதி கவிதா. இந்தியாவிலிருந்து மேற்படிப்புக்காக வந்திருந்த கவிதாவின் கயல் விழிகளில் தன்னைப் பறிகொடுத்து விட்டுத் தவிப்பதும் அரவிந்தனுக்குத் தெரியாது. இந்த விடயம் கடந்த வருடம்; நடந்தது. அரவிந்தோடு,தங்கை சாலினியைப் பற்றிப் பேசும்போது தமிழ்நாட்டிலிருந்து லண்டனுக்குப் படிக்க வந்த ஒரு இந்தியப் பெண்ணை சாலினி அடிக்கடி வீட்டுக்கு அழைத்து வருவது பற்றிக் கண்ணன் அரவிந்துக்குச் சொல்லவில்லை.
ஏனென்றால் சாலினிக்கு நிறையச் சினேகிதிகள். அவளின் சினேகிதிகளால் வந்தால் அவர்கள் வீடு அல்லோல கல்லோலப் படும். சாலினியின் சினேகிதிகளுக்குக் கண்ணனின் அம்மா செய்யும் உறைப்பு வடையிலிருந்து இனிப்பு லட்டு வரை எல்லாமே பிடிக்கம். சாலினியின் சினேகிதிகளுக்கும் கண்ணனுக்குமிடையில் பெரிதாக எந்த உறவும் கிடையாது. வீட்;டில் செல்லப் பிள்ளையான சாலினி தனது சினேகிதிகளுடன் வானரங் கூட்டங்கள் மாதிரிக் கும்மாளம் போடுவதாக் கண்ணன் தனது தாய் தகப்பனிடம் முறையிடுவான். அடிக்கடி சாலினி தனது சினேகிதிகளுடன் போடும் சப்தம் அவனுக்குத் தலையிடி தரும் விடயம்.
‘அவளின்ர சினேகிதிகள் வந்தால் நீ உன்ர அறையைப் பூட்டிக்கொண்டு இரு மகன். நாளைக்குக் கல்யாணமாகிப் புருஷன் வீட்டுக்குப் போனால் அவள் இப்படிக் கூத்தடிப்பாளோ என்னவோ” சாலினிக்காக அம்மா பரிந்து பேசினாள் அப்படியான அந்த இளம் பெண்கள் கூட்டம் வந்தால் கண்ணன் தனது அறையைப் பூட்டிவிட்டுக் கொண்டு தன் விடயங்களில் ஈடுபடுவது வழக்கம்.
சாலினியின் பல தரப்பட்ட சினேகிதிகள் பற்றிக் கண்ணன் அரவிந்துக்கு விசேடமாக எதுவும் சொன்னது கிடையாது. டெலிபோனிற் பேசும்போது,பேச்சோடு பேச்சாக@ ‘ம்,சாலினியின் வானரப் படை சமயலறையில் அம்மாவுடன் சேர்ந்து லட்டு செய்கிறார்கள்,அல்லது, சாலினியின் வானரப் படை தோட்டத்தில் பிக்னிப் போடுகிறார்கள்’ என்ற எழுந்தமானமாக அரவிந்துக்குச் சொன்னதுண்டு. அதற்கு அப்பால் வேறு எதுவும் சொல்லவில்லை.
அரவிந்தனின் தகப்பனார் பல வருடங்களுக்கு முதல், இந்திய அரசால் மேற்படிப்புக்கு லண்டனுக்கு அனுப்பப்பட்ட ஒரு மேலதிகாரி.அவர் தனது ஒரேயொரு மகனுடனும் மனைவியுடனும் லண்டனுக்கு வந்திருந்தார். அரவிந்துக்கும் கண்ணனுக்கும் அப்போது பன்னிரெண்டு வயது.
அரவிந்தின் தகப்பனின் மூன்று வருட மேற்படிப்பு லண்டனில் முடியவிட்டு இந்தியாவுக்குத் திரும்பியதும் அன்றிலிருந்து கடந்த பதின்மூன்று வருடங்களாகக் கண்ணனும், அரவிந்தும் முகநூhல்,இமெயில்,வட்ஸ்அப், ஸ்கைப் என்று எத்தனையோ சமுகவலைத் தளங்களின் உதவிகளுடன் நீண்ட தொடர்பிலிருக்கிறார்கள்.
கண்ணன் அவனது குடும்பத்துடன் சுமார் பத்துவருடங்களுக்கு முன் தமிழ்நாடு கோயில்களுக்குத் தங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்ற சமயம் அரவிந்த் குடும்பத்தினர் அவர்களின் உறவினர் திருமணத்திற்கு சிங்கப்பூர் சென்றிருந்ததால் கண்ணனும் அரவிந்தும் சந்தித்துக் கொள்ளவில்லை.
அரவிந்துக்கு விரைவில் திருமணம் நடக்கலாம் என்று சொல்லியிருந்தான். வேலையில் சந்தித்து உறவாகி அவனுக்குப் பிடித்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் தாய் தகப்பன் தனது முடிவுக்கு ஆசிர்வாதம் சொன்னதாகவும் சொன்னான்.அரவிந்தின்; குரலிருந்த சந்தோசத்தொனி அரவிந்த் எவ்வளவு துரம் தனது காதலில் மூழ்கியிருக்கிறான் என்பதைத் தௌ;ளெனக் காட்டியது.
கண்ணனுக்கும் அரவிந்துக்கும் இருபத்தியெட்டு வயது. கண்ணன் ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை அல்லது எந்த உறவுக்கும் தன்னை உட்படுத்திக் கொள்ளவில்லை என்று அரவிந் கேட்கவில்லை.;கண்ணனுக்குக் காதல் ஏதும் இருந்தால் தனக்குச் சொல்லியிருப்பான் என்ற அரவிந்துக்குத் தெரியும்.
அரவிந்த அவனது சிறுவயதில் ஒருசில வருட காலம்தான் லண்டனிலிருந்தாலும்,’மற்றவர்களின் தனி விடயங்களில் தேவையற்ற கேள்வி கேட்கும் தன்மையானது மிகவும் அநாகரிகமானது’ என்ற பிரித்தானியக் கோட்பாட்டைத்; தெரிந்து வைத்திருந்தான்.அதனால் கண்ணனுக்குக்; ‘காதல்’ விவகாரம் ஏதும் இருக்கிறதா என்று எதுவும் கேட்கவில்லை.
அரவிந்துடன் பேசி முடித்த சில வினாடிகளில் கண்ணன் தனது அறையிலிருந்து கொம்பியுட்டரில் கண்களைப் பதித்திருந்தான். இன்னும் இரு நாட்களில் இந்தியா போகப் போகிறான்.
அரவிந்தின் கல்யாண நிச்சய விழாவுக்குப் போவதாகத் தாய் தகப்பனுக்குப் பொய் சொல்லியிருக்கிறான். அவர்கள் மிகவும் சந்தோசத்துடன் அரவிந்துக்குப் பரிசும் வாங்கிக் கண்ணனிடம் கொடுத்திருக்கிறார்கள்.சாலினி விழுந்தடித்துக் கொண்டு, தனது சினேகிதி கவிதாவின் திருமண நிச்சயார்த்தப் பரிசாகக் கவிதாவுக்கு நிறையப் பரிசுகளை அள்ளிக் கொடுத்திருக்கிறாள்.
ஹீத்ரோ விமானநிலையம் ஜன சமுத்திரத்தால் திரண்டு பொங்கிக்கொண்டிருக்கிறது.
இதில் எத்தனைபேர் குழம்பிய மனநிலையிலுள்ள என்னைப்போல தங்கள் காதல் உணர்வின் உந்துதலால் இந்தியாவுக்கோ அல்லது ஏதொ ஒரு இடத்திற்குத் தங்களின் மனதில் காதலையுண்டாக்கிய பெண்ணைத் தேடிப்;; போய்க் கொண்டிருப்பார்கள்?
கண்ணனுக்கு மறுமொழி தெரியாது. கவிதாவுக்குக் கல்யாண நிச்சயார்த்தம் நடக்கப்போகிறது என்றால் அவள் விரும்பித்தானே இந்த ஏற்பாடெல்லாம் நடக்கிறது? அப்படி என்றால் நான் பூசை வேளையில் கரடிமாதிரி அங்கு போய்க் குதிக்கவேண்டும’?
தங்கை சாலினியைப் பார்க்க அவர்கள் வீட்டுக்கு வந்துகொண்டிருந்த கவிதாவைப் பார்த்துப் பேசிய ஒருசில தடவைகள் அவன்மனதில் நிழலாடுகின்றன.
தங்கையின் சினேகிதிகள் வந்தால் தனது அறையும் தானுமாக இருப்பவனை ஏனோ ஒருநாள் சாலினி கூப்பிட்டாள். அவர்களின் தாய் தகப்பன் இருவரும் சொந்தக்காரர் வீட்டுக்கு விசிட் போய்விட்டார்கள்.
‘என்ன கூப்பிட்டாய்?’ என்று தங்கையின் அறைக்குள் நுழைந்தவனைச் சாடையாகப் பார்த்துவிட்டுத் தலை திருப்பிய கவிதாவின் அழகிய முகம் ஒருகணம் அவனில் பட்டுத் திரும்பியது.ஜன்னலால் எகிறிவந்த மதிய சூரியனின் ஒளிவெள்ளத்தில் கவிதாவின் கண்கள் கூசியது.
‘எனது காரில் ஏதோ பிரச்சினை, நேற்று வேலையால் வரும்போது தலையிடி தந்தது,நாங்கள் இன்று ஹாம்ஸ்ரெட் ஹீத் போவதாகத் திட்டம் போட்டிருந்தோம், தயவு செய்து கூட்டிப்போவாயா?’
தங்கை சாலினி தமயன் கண்ணனிடம்’தயவு'(பிளிஸ்) என்ற வார்த்தையைப் பாவிப்பது மிக அருமை. சாலினி அந்த வீட்டு இளவரசி, அவ்வீட்டில் இருப்பவர்களெல்லாம் அவளின் உத்தரவை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற எதிர்பார்ப்பவள். கண்ணன் பெரும்பாலும் அவளுக்கு விட்டுக்கொடுப்பது கிடையாது.
தனது சினேகிதிக்கு முன்னால் தங்கையின் ‘கௌரவ’ நடிப்பு கண்ணனைச் சிரிக்கப் பண்ணியது. தான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் தன்னைக் குறும்புத்தனமாக எடைபோடும் தமயனில் வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு ‘கவிதா இன்னும் கொஞ்ச நாளில் லண்டனை விட்டு ஊர் திரும்பப் போகிறாள்,லண்டனில் எனக்குப் பிடித்த ஒரு சில இடங்களுக்கு அவளைக் கூட்டிக்கொண்டு போவதாக இருந்தேன்’
தங்கை சாலினியின் குரலில் இருந்த உண்மையான கெஞ்சல் கண்ணனை இரங்கப் பண்ணியது. ஆனாலும், ‘நான் இன்று எனது சினேகிதன் டாரனுடன் வெளியில் போவதாக இருந்தேன்–‘ என்று இழுத்தான்.
‘டாரன் என்ன இந்த நாட்டைவிட்டு எங்கேயோ போகப் போகிறானா,இன்றைக்கு அவனுடன் போகாவிட்டால் இன்னொரு நாளைக்குப் போகலாம்தானே?’ சாலினி அழுது விடுவாள்போலிருந்தது.
தமயனும் தங்கையும் தனக்காகத் தர்க்கம் செய்வது கவிதாவுக்குத் தர்ம சங்கடமாகவிருந்தது.
‘வேண்டாம் சாலினி, ஹாம்ஸ்ரெட்ஹீத் பார்க்காவிட்டால் என்ன குறையப் போகிறது?’ கவிதாவின்; அழகிய முகத்தைப்போல், காந்தமான கண்களைப்போல் அவள் குரலும் இனிமையாகவிருந்தது.
அந்த இனிய குரல் கண்ணனைச் சம்மதிக்க வைத்தது.
‘ம்ம் சரி நான் அங்கே நீண்ட நேரம் செலவழிக்க மாட்டன்’ கண்ணன் தனது மிகவும் பதிந்த குரலில் அறிவித்தான்.
காரைப் பார்க் பண்ணி விட்டு மிகவும் பிரமாண்டமான பரந்த வெளிப் பார்க்கான ஹாம்ஸ்ரெட் ஹீத்நோக்கிப் போய்க் கொண்டிருந்தபோது அந்த இடத்தைப் பற்றி சாலினி தனது சினேகிதிக்கு விளக்கம் சொல்லிக்கொண்டு வந்தாள்.
அன்று அவன் முதல் முறையாகக் கவிதாவை ‘முழுமையாக’ பார்த்தான்,அளவிட்டான்.ரசித்தான்.அவளில் தெரிந்த ஏதோ ஒன்று,அவனின் இருபத்தி ஏழு வயது வரைக்கும் எட்டிப் பார்க்காத ஒரு ஏக்கத்தைச் சட்டென்று நினைவு படுத்தியது.
அழகிய சூழ்நிலையில் அன்று அவன் கவிதாவுடனும் தங்கையுடனும் முதற்தரம், நீண்ட நேரத்தைக் கழித்தபோது இதுவரையும் அவன் அனுபவிக்காத ஒரு இனிய உணர்வு மனதில் இழையோடியது.
இருபத்தியொருவயதில் கண்ணனின் முதற்கட்டப் பட்டப் படிப்பு முடிந்ததும்,அடுத்த கட்ட மேற்படிப்பைத் தொடங்கியபோது, ‘உனது படிப்பு முடிய.. என்று அம்மா தொடங்கிய வார்த்தையை அவனின் ஆழமானபார்வை மேலே தொடராமற் தடை செய்தது.
‘அவர்கள் படிப்பு முடிந்ததும் தங்களுக்குப் பிடித்தமானவர்களைத் தேடிக்கொள்வார்கள். நீ சேலைக் கடையிற்போய் ஒரு நல்ல காஞ்சிபுரச் சேலையை வாங்கிக் கொள்வது போல் அவர்களுக்கும் உனக்குப் பிடித்தவர்களைக் கூட்டிக்கொண்டு வந்து சம்பந்தம் பேசாதே’ என்று அவனின் அப்பா சொல்லி விட்டார்.
‘கவலைப்படாதே அவன் கண்ணன் நல்ல பையன், காலமும் நேரமும் வந்தால் யாரோ ஒரு தேவதை அவனிடம் வந்து சேர்வாள்’ அப்பா அம்மாவிடம் கண்ணனைப் பற்றிக் குறும்புத் தனமாகச் சொன்னது ஞாபகமிருக்கிறது.
அவனின் அப்பா தனது தங்கைகளுக்கான எதிர்கால நல்வாழ்க்கைக்கு நல்ல சீதனம் வாங்கிக்கொண்டு,கல்யாண சந்தையில் தன்னை ‘விற்றுக் கொண்டவர்’.அதற்காக அம்மாவை அவர் வேண்டா வெறுப்பாக நடத்தவில்லை. கல்யாணத்திற்குப்பின் தனது துணையைக் காதலிக்கப் பழகிக் கொண்டவர்.
அம்மா அடிக்கடி சொந்தக்கார வீடுகளில் நடக்கும் கல்யாண வீடுகளைப் பற்றிப் பேசும்போது அவள் மனதின் ஆதங்கத்தை அவளின் குழந்தைகளும் கணவரும் நன்று புரிந்துகொண்டார்கள்.
சாலினிக்கு இருபத்தி ஐந்து வயதாகப்போகிறது. இருபத்தெட்டு வயது வரைக்கும் ‘சுதந்திரமாக’ இருக்கப் போவதாகச் சொல்லி விட்டாள்.
மகனுக்கு இருபத்தெட்டு வயது. பார்வைக்குப் பரவாயில்லாத, கண்ணிய தோற்றமுள்ள படித்த இளைஞன். அவனுக்கு யாரும் கேர்ள் ப்ரண்ட இரு;கிறார்களா என்று அம்மா துப்பறிந்து பார்த்து விட்டாள். ம்ம் அப்படி ஒன்றும் இல்லை என்று தெரிந்ததும் தனிமையிலிருந்து பெருமூச்சு விடுவதைத் தவிர அவளால் ஒன்றும் செய்யமுடியாது என்பதும் கண்ணனுக்குத் தெரியும்.
அவனின் மனதில் உண்டாகிய மாற்றங்களோ அவன் மனதைக் கவர்ந்த பச்சைக் கிளி இந்தியாவுக்குப் பறந்து விட்டது என்பதோ வீட்டில் யாருக்குத் தெரியும்?
ஏயார்போர்ட் விடயங்கள் ஆமை வேகத்தில் ஊர்வதாக அவன் எண்ணினான்.
ஹீத்ரோவிலிருந்து இலங்கைக்குப்போய் அங்கிருந்து சென்னைக்கு விமானம் புறப்படும் வரையும் அவன் மனம் எதையெல்லாமோ சிந்தித்துத் தவித்துக் கொண்டிருந்தது. அரவிந்துக்குத் திருமண நிச்சயார்த்தம் என்று பொய் சொல்வி விட்டு வருகிறான். ‘ஹொலிடேய்க்கு இந்தியா வருகிறேன்’ என்று அரவிந்துக்குப் பொய்சொல்லி விட்டு கண்ணன் தனது வாழ்க்கையில் ஒரு குழப்பமான பிரயாணத்தைத் தொடர்கிறான்.
அவனது ஞாபகம்,அவன் கவிதாவுடன் முதற்தரம் பார்க்குக்குப் போனதை நினைத்துக் கொண்டது. அன்று கவிதா அவனுடன் அதிகம் பேசிக் கொள்ளவில்லை.சினேகிதிகள் இருவரும் பார்க்கின் உயர்ந்த இடமான பார்லியமென்ட் ஹில் என்ற இடத்தில் போயிருந்து தங்களைச் சுற்றிக் கிடந்த பிரமாண்டமான லண்டன் மாநகரத்தை ரசித்தார்கள். படங்கள் எடுத்தார்கள்.
பார்க்கிலிருந்த சிறு தடாகத்தில் கால் பதித்து மகிழ்ந்தார்கள். சாலினி லண்டனில் பிறந்து வளர்ந்தவள் எதையும் சட்டென்றும் பட்டென்றும் நேர்மையுடன் சொல்பவள் கவிதாவோ ஒவ்வொர வார்த்தையையும் கவனமாகச் சொல்பவள். வாழ்க்கையையே ஒரு குறிப்பிட்ட வலயத்துக்கு அப்பாற் தெரிந்து கொள்ளவோ,தெரிந்து கொள்ளத் தேவையிருப்பதாகவோ நினக்காதவள் என்று அவன் புரிந்து கொண்டான்.
கோயம்புத்தூரில் ஒரு ஆசிரியரின் ஒரே மகள் கவிதா,அவளுக்கு இரு தமயன்கள் இருக்கிறார்கள் என்று சாலினி பேச்சுவாக்கில் சொல்லியிருக்கிறாள்.கவிதாவின் அடக்கமான பாவத்தைக் கண்டதும்,தகப்பன்,தமயன்கள் கட்டுப்பாட்டில் கவிதா வளர்ந்திருக்கிறாள் என்று கண்ணன் தனக்குள் நினைத்துக்கொண்டான்.
கவிதா,சாலினியுடன் சேர்ந்து பார்க்குக்குப் போன சிலவாரங்களுக்குப் பின்,சாலினி லண்டனில் நடக்கவிருக்கும் சைனா நாட்டாரின் கலைவிழாவுக்குக் கவிதாவுடன் செல்ல டிக்கட் எடுத்திருந்தாள். கவிதா தனது படிப்பு முடிந்து இந்தியா செல்ல சில மாதங்களேயிருந்ததால் சாலினி தனது சினேகிதிக்கு இந்தியாவில் பார்க்கமுடியாத சில கலை நிகழ்ச்சிகள் லண்டனில் நடக்கும்போது,அவைகளுக்குக் கவிதாவை அழைத்துச் செல்ல முடிவு கட்டியிருந்தாள்.
அன்று லண்டன் சூரியனின் தாராளத்தில் பளிச்சென்று சிரித்துக் கொண்டிருந்தது. ஆனால் அன்று,சாலினி தாங்கமுடியாத வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்தாள். அத்துடன் வயிற்றுக் குமட்டலும் வாந்தியும் சேர்ந்து சாலினியைத் துன்பப் படுத்திக் கொண்டிருந்தது.
‘இவ்வளவு செலவு பண்ணி வாங்கிய டிக்கட் அநியாயமாகிறதே என்பதை விட,கவிதாவுக்கு இந்த கலைநிகழச்சியைக் காணமுடியாதே என்பதுதான் பாவமாக இருக்கிறது’ சாலினி கண்கள் குளமாகச் சிணுங்கிக்கொண்டிருந்தாள்.
‘உனது வேறு சினேகிதியாரையும் கூட்டிக்கொண்டு போகச் சொல்லேன்’ அம்மா ஆறுதல் சொன்னாள்.
‘ம்ம், நாளைக்கு புறொக்கிராம் நடக்கப்போகுது, இப்போ யாரைத் தேடுவதாம்?’ சாலினி அம்மாவைப் பரிதாபத்துடன் பார்த்தாள்.
‘மகன்..’ என்று அம்மா கண்ணனைப் பார்த்தாள் அவளின் பார்வையிற் கெஞ்சல்.சாலினியின் சினேகிதிகளைத் தன் குழந்தைகள் மாதிரி கவனித்துக்கொள்பவள் அம்மா.
‘ம ம்,அவளுக்கு.. கவிதாவுக்கு என்னோட வரச் சம்மதமெண்டால்..’ அவன் அம்மாவைப் பார்க்காமல் இழுத்தான்.
கவிதாவுக்கு சாலினி தன்னால் ஷோவுக்கு வரமுடியாது,அண்ணாவுடன் போகச் சொன்னதும் கவிதா என்ன மறுமொழி சொன்னாள் என்பதோ, தன்னுடன் வரமறுதிருப்பாளோ என்பதெல்லாம் கண்ணனுக்குத் தெரியாது.’அண்ணா,கவிதா உன்னை வாட்டர்லூ ஸ்டேசனுக்கு வந்து சந்திக்கச் சொன்னாள்’ என்று சாலினி சொன்னபோது அவன் மனம் துள்ளிக் குதித்தது.
அவனின் தகப்பன் அவருக்கு லண்டனில்; பிடித்த இடங்களில் ஒன்று அடிக்கடி சொல்லுமிடமான சவுத்பாங்க் என்ற இடத்தில் கலை நிகழ்ச்சி நடக்கிறது. வாட்டார்லு ஸ்டேசனால் கவிதா இறங்கி வருவாள் என்று சாலினி சொல்லியிருந்ததால் கண்ணன் அங்கு காத்திருந்தான். உலகத்து மக்களின் பிரதிபலிப்பைக்காண வேண்டுமானால் லண்டனிலுள்ள ஒருசில பிரமாண்டமான ஸ்ரேசன்களிலுந்து அவதானித்தால் அதுபுரியும்.
கவிதா வந்துகொண்டிருந்தாள். மேல் நாட்டு நாகரிகத்தின் அழகுகளைத் தாண்டிய ஒரு கலைத்துவம் அவள் தோற்றத்தில்.அவன் தனக்காக எங்கு காதிதிருக்கிறான் என்பதைத் தேடிய பார்வையின் குறிப்பு ‘தனக்கானது’ என்ற நினைவு தட்டியதும் அவனின் உணர்வில் ஒரு பொறி.
தங்கையின் சினேகிதியாகப் பழகத் தொடங்கிய நாளிலிருந்து அவனின் உள்ளுணர்வைச் சீண்டியெடுக்கும் அவளின் நினைவுக்கு அர்த்தம் என்னவென்று அந்தக் கணம் அவனுக்கு விளங்கியது. அவனின் வாழ்க்கை ஒரு திருப்பு முனையத் தீண்டி விட்டதான தெளிவு அவனுக்கு வந்தது.
அன்று அவர்கள் பார்த்தது, மிகவும் அதிக செலவில், மேற்கத்திய கலாச்சாரத்திற்குச் சவால்விடும் பணக் கொளிப்பு நிறைந்த சைனாநாட்டின் பிரமாண்டமான கலைப் படைப்பு.
அவள் அவன் அருகில் இருக்கிறாள் அவளுக்குத்; தெரியாத வேறோர நாட்டுக் கலை நிகழ்ச்சியை அவள் மிகக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
அவன் மனம் எங்கேயிருந்தது என்று அவனுக்குத் தெரியாது.
யதார்த்தையிழந்த இன்னுமொரு உலகுக்கு உணர்வையிழுத்துச் செல்வதுதான் காதலா?
கலை நிகழ்ச்சியின் இடைநேரத்தில் அவன் அவளுக்குக் குளிர்பானம் வாங்கி வந்தான்.இருவரும் கலை நிகழ்ச்சி பற்றி ஒன்றிரண்டு வார்த்தைகள் பரிமாறிக் கொண்டார்கள்.
கலைநிகழ்ச்சி முடிந்ததும் கவிதா கண்ணனுக்கு நன்றி சொன்னாள்.அவன் தனக்குள் சிரித்துக் கொண்டான்.
‘நன்றியா? எதற்கு? என்னருகில் இரண்டு மணித்தியாலங்கள் நீயிருந்தாய், என்னுணர்வை இழக்கச் செய்தாய், காதலுக்கு அர்த்தம் செய்தாய், கண்ணோடு கண்களைப் பின்னிக் கொள்ளாமல் எனது கருத்துக்களைத் தெளிவு படுத்திவிட்டாய். ஆனால் அதை நான் உனக்குச் சொல்லத் தைரியமில்லை.எனது கோழைத்தனத்தை மறைத்துக் கொளவதற்காகவா நன்றி சொல்கிறாய்?’ என்று பல கேள்விகள் அவன் மனதில் நடமாடின. ஆனால் மெல்லிய புன்னகையுடன் அவள் நன்றியை அங்கிகரித்தான்.
அவள் நேரத்தைப் பார்த்தாள். அவள் தெற்கு லண்டனில் இருப்பவள். ட்ரெயினில் போகவேண்டிய அவசரம் அவள் கண்களில் தெரிந்தது.
‘சாலினி வந்திருந்தால் உங்களை வீட்டுக்குக் கூட்டிக்கொண்டுபோய் விட்டிருப்பாள் இல்லையா?’ அவன் கேட்டதன் அர்த்தம் நான் உங்களைக் கூட்டிக் கொண்டு போக முடியாதா என்பதாகும் என அவள் புரிந்து கொண்டாள்.
அவள் பதில் சொல்லாமல் மௌனமானாள்.வானத்தில் வெண்ணிலவு. அதைச்சுற்றிப் பல்லாயிரம் நட்சத்திரங்கள் லண்டன் செயற்கை வெளிச்சங்களுடன் போட்டிபோட்டுக் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன. தேம்ஸ் நதி செல்ல நடை போட்டுக்கொண்டிருந்தது.அதில் உல்லாசப் படகுகளும் அதிலுள்ளவர்களின் கேளிக்கைக் குரல்களும் உலகத்தில் எங்களைப்போல் சந்தோசமானவர்களைக் காணமுடியாது என்பதைச் சொல்வதுபோலிருந்தது.
வாழ்க்கை முழுதும் அவளுடன் தனது வாழ்க்கையைத் தொடர முடிந்தால் நான் எவ்வளவு அதிர்ஷ்சாலியாயிருப்பேன் என்று தன்னைத் தானே கேள்வி கேட்டுக்கொண்டான்.
அவன் தனது காருக்குப் போகும்போது அவள் அவனைத் தொடர்ந்தாள். எங்கேயோவிருந்து ஜாஸ் இசை மெல்ல வந்து உணர்வுகளைத் தடவியது. தேம்ஸ்நதிக்கப்பால் பிரித்தானியப் பாராளுமன்றம் திமிருடன் இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தது.
‘எனக்கு ஜாஸ் இசை பிடிக்கும்’ ஏதாவது பேசவேண்டும் என்பதற்காகச் சொன்னானா அல்லது’ உனக்கு என்ன பிடிக்கும் என்பதைச் சொல், அல்லது என்னுடன் எதையாவது பேசு’ என்பதற்காகச் சொன்னானா என்பது அவனுக்கே தெரியாது.
கவிதா பதில் சொல்லாமல் அவனைத் தொடர்ந்து கொண்டிருந்தாள். அவர்கள் அவனின் காரை நெருங்கியபோது,’மன நிம்மதி தரும் இசை எல்லாமே பிடிக்கும்- மேற்கத்திய இசையில் அவ்வளவு பரிச்சயமில்லை’ என்றாள்,அவள் குரல் மிக மிக மென்மையாகவிருந்து.
அவனுக்கும் அவளுக்குமிடையிலுள்ள கலாச்சார அல்லது கருத்துணர்வு அல்லது வித்தியாசமான வாழ்க்கையமைப்பின் தொலைவை அல்லது வித்தியாசங்களைச் சிலவார்த்தைகளில் சொல்லி முடித்து விட்டாளா?
அல்லது இதுவரை எனக்குப் புரியாதவற்றைப் புரிந்துகொள்ள யோசிக்கிறேன்.கால அவகாசம் தாருங்கள்’ என்பதை மறைமுகமாகச் சொல்கிறாளா?
அவள் அந்த நேரத்தில் அவனை ஊடுருவிப் பார்த்தபடி சொன்னபோது அவன் நிலை தடுமாறிப் போனான்.
ஏதோ ஒரு உந்துதல் அவன் மனதில்.’ஐ லவ் யு கவிதா என்று அவளிடம் சொல்லவேண்டும் போன்ற திடீர் பரபரப்ப. அடக்கிக் கொண்டான்.அவன் லண்டனில் பிறந்து வளர்ந்தவன். ஒளிவு மறைவின்றிப் பேசுவது உத்தமமான பண்பு என்று நினைப்பவன். ஆனால் அவள்?
அவள் ஒரு இந்தியப் பெண். அவனைப் புரிந்துகொள்ளாமல் அவனைத் திட்டினால் அவனால் அதைத் தாங்கமுடியாது.
அவனின் மனப் போராட்டத்தை எப்படிச்; சொல்வது என்று அவனுக்குத் தெரியவில்லை.
அவன் அவளை வீட்டுக்கு அழைத்துக் கொண்டுபோய்த் திரும்பியபோது சாலினி விழித்திருந்தாள்.
‘நன்றி அண்ணா..அவளை வீட்டுக்குக்கொண்டு போய்விட்டதற்கு நன்றி ‘ சாலினியின் குரலில் உண்மையான நன்றித் தொனி பரவிக் கிடந்தது.
அதன்பின் சிலதடவை சாலினியைப் பார்க்கவந்தபோது கண்ணன்,’ஹலோ’ மட்டும் சொல்லாமல் ஏதோ சாட்டுக்களை வைத்துக்கொண்டு கவிதாவுடன் பேசினான்.அவள் லண்டனை விட்டுச் செல்லப் போகிறாள் என்ற துயர் அவனை நெருஞ்சி முள்ளாய்க் குத்திக்கொண்டிருந்தது.
அவள் அவனைப் பிரிந்து சென்று விட்டாள்.சாலினி எப்போதாவது ஒரு தடவை கவிதா பற்றிச் சொல்வாள். அதாவது, கவிதாவக்கு வேலை கிடைத்து விட்டது போன்ற தகவல்கள். எப்போதாவது கவிதா,’ உன் அண்ணா எப்படி இருக்கிறார் என்று கேட்டதாகச் சாலினி சொல்ல மாட்டாளா எனக் கண்ணன் மனம் தவியாயத் தவித்தது.
கடைசியாக, ‘சாலினிக்குக் கல்யாண சம்பந்தம் வந்ததாம். நிச்சயார்த்தம் நடக்கும் போலிருக்கிறதாம்’ என்று சாலினி சொன்னபோது அவனாற் தாங்கமுடியவில்லை.
இப்போது,சென்னையில் விமானம் வந்து விட்டது. அரவிந்தன் கண்ணனை அன்புடன் வரவேற்றான்.
சென்னைக்கே உரித்தான பல்வகை ஒலிகள்,பல்வகை மணங்கள் கண்ணனை வரவேற்றன.
‘சாரி கண்ணன்,அம்மாவின் உறவினர்களைப் பார்க்க இரண்டு நாளில் மதுரை போகவேண்டியிருக்கிறது. உன்னுடன் அதிக நேரம் சென்னையில் செலவழிக்கமுடியாது’அரவிந்த் குரலில் சோகம்
‘பரவாயில்லை,சிறுவயதில் அம்மா அப்பாவுடன் சில தடவைகள் சென்னை வந்திருக்கிறேன்.அம்மா சேலைக்கடைகளை முற்றுறகையிடுவாள், தங்கை சினிமா நடிகர்கள் நடிகைகளைப் பார்க்கவேண்டும் என்று அடம் பிடிப்பாள்,அப்பா நிறையப் புத்தகங்கள் வாங்குவார். இவைதான் எனது சென்னை ஞாபகங்கள்’ கண்ணன் பழைய ஞாபகங்களை நண்பனுடன் பகிர்ந்து கொண்டான்.
‘நீ மதுரை போவதாகவிருந்தால் பிரச்சினையில்லை. நான் ஒன்றிரண்டு நாட்கள் சென்னை சுற்றிப் பார்த்துவிட்டு கோவை செல்கிறேன்’ என்றான் கண்ணன்.
‘அய்யோ, நீ தனியாக ஒன்றும் திரியவேண்டாம். எங்களுடன் மதுரைக்கு வா அப்புறமா எனது வேலைகள் முடியவிட்டு இருவருமாகக் கோவை போகலாம்’ என்றான் அரவிந்த்.
அரவிந்தனுக்காக இந்தியா செல்வதாகப் பொய் சொல்லி விட்டு வந்திருக்கிறான். அரவிந்தனுடன் சில நாட்கள் சென்னையில் தங்காமல்,உடனடியாகக் கோவை சென்றால் வீட்டில் சந்தேகிப்பார்கள் என்று கண்ணனுக்குத் தெரியும்.
ஆனால்,இப்போது அரவிந்த் தன்னுடன் கோவை வருவதாகச் சொல்கிறான்.கண்ணனுக்குத் தர்மசங்கடமாகிவிட்டது. கவிதாவுக்கு அவனின் தங்கை கொடுத்தனுப்பிய பரிசுப் பொருட்களை மட்டும் கொடுத்து விட்டு சட்டென்று திரும்ப அவன் விரும்பவில்லை. கோவையில் சில நாட்கள் தங்கமுடிந்தால்,கவிதாவுடன் பேசமுடிந்தால் அவன் சந்தோசப் படுவான் என்று தனக்குள் யோசித்தான். ஆனால் அரவிந்துடன் கோவை சென்றால் கவிதாவுடன் தனியாகப் பேசவும் முடியாமல் போகலாம்.
மதுரைக்குச் சென்றதும் வழக்கம்போல் மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றான்.சிறுவயதில் அவன் அந்தக் கோயிலுக்கு வந்தபோது அவனுக்கு அந்தக் கோயில் பிடித்துக்கொண்டது. அவனது தாய் சமய விடயங்களில் மிகவும் நம்பிக்கை கொண்டவள்.
அரவிந்தனும் அவனுடன் கோயிலுக்கு வருவதாகவிருந்தான் ஆனால் கடைசி நேரத்தில் அவனுக்கு வேறு ஏதோ வேலையிருந்ததால் அவன் வரவில்லை.
கோயில் பூசை முடியவிட்டு, மண்டபத்தில் உட்கார்ந்தவனின் மனதில் பட்டென்று ஒரு கேள்வியை யாரோ கேட்பதுபோலிருந்தது.
‘கவிதாவுக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டது. நீ ஏன் அவளைப் பார்க்க வேண்டும்? அவளைப் பார்க்கவேண்டுமென்பதற்காக என்று ஏன் பல பொய்களைச் சொல்லிக் கொண்டு அலைகிறாய், அவள் உன்னை விரும்புவதாக எப்போதாவது சொன்னாளா அல்லது உனது தங்கையிடமாவது சாடையாகச் சொன்னாளா, ஏன் வெறும் காதற் கற்பனையில் காலத்தை வீணாக்குகிறாய்’?
அவன் திடுக்கிட்டான்.அவன் பலமுறை தனக்குத்தானே கேட்டுக்கொண்ட கேள்விதான். ஆனால் இப்போது யாரோ கேட்பதுபோலிருந்தது.
தனக்குத் தானே இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டபோது கிடைக்காத பதிலை இப்போது எங்கே தேடப்போகிறான்?
கவிதா லண்டனிலிருந்து இந்தியா திரும்பி வந்து ஆறுமாதங்களாகி விட்டன. ‘ என்னைக் கலை நிகழ்சிச்சி;க்குக் கூட்டிச் சென்றதற்கு உனது அண்ணாவுக்கு நன்றி சொல்’ என்று கவிதா சொன்னதாகசச் சாலினி சொன்னாளே தவிர, ‘உனது அண்ணாவுக்கு எனது அன்பைச் சொல் என்றோ அல்லது வேறு எந்தவிதமாகவோ கவிதா கண்ணனைப் பிரிந்து ஏதும் மன உளைச்சல் படுவதாக வெளிக்காட்டிக்கொள்ளவில்லையே?
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மண்டபத்தில் ஒரு மாலை நேரம் தனியேயிருந்து சிந்தித்தபோது,சட்டென்று பல கேள்விகள் அவனைத் திக்கு முக்காடப் பண்ணின.
‘ ஏன் வந்தேன் இந்தியாவுக்கு?’ அவனால் தனது குழப்பதிற்கு விளக்கம் தெரியவில்லை.கவிதாவில் அவனுக்குள்ள ஈர்ப்பை கவிதா புரிந்துகொண்டிருப்பாளா? புரிந்திருந்தாலும் அவளால் என்ன செய்யமுடியும்? பெரும்பாலான பெண்கள் தங்கள் குடும்பத்தின் விருப்பு வெறுப்புக்களை முன்படுத்தித்தானே திருமணம் செய்து கொள்கிறார்கள்?
கவிதா போன்ற பெண்கள் காதலிக்க உரிமையற்றவர்கள். தங்களின் உள்ளத்தின் உயிர்த்துடிப்பை மறைத்துவிட்டு சமுதாயத்திற்காக வேடம் போடுபவர்கள்.அவளிடம் போய் தனது காதலைச் சொல்லி விட்டு அவளை ஏன் குழப்பவேண்டும்?
அவளுக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டிருந்தால் ஏன் முட்டாள்மாதிரி அவள்முன்போய் நிற்கவேண்டும்? இந்தியாவுக்கு வந்து சிலநாட்கள்தான் ஆனாலும் இந்திய வாழ்க்கைமுறை அவனைப் பல கேள்விகளைக் கேட்கப் பண்ணின.
வெறும் உணர்ச்சி வசப்பட்டு இந்தியாவுக்கு வந்தது முட்டாள்த்தனம் என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டான்.
கவிதாவுக்காகச் சாலினி தந்த பரிசுப்பொருட்களைப் பாhசலில் அனுப்பிட்டு உடனடியாக ஊருக்குத் திரும்ப வேண்டும்போலிருந்தது.
அதைவிட வேறு எதுவும் அவனுக்குப் புரியவில்லை.
அரவிந்த பிஸியாக இருப்பதால்,கவிதாவின் பரிசை கோவைக்கு நேரே சென்று கொடுக்கமுடியவில்லை என்றும் பார்ஸலில் அனுப்புவதாகவும் சாலினிக்கு செய்தி; அனுப்பினான்.
அடுத்த இருநாட்களும் எப்படிக் கழிந்தன என்று அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. தேவையில்லாமல் இந்தியா ஓடிவந்தது பற்றித் தன்னைத் தானே பல தடவைகள் நொந்துகொண்டான்.
இருபத்தி எட்டு வயது வரைக்கும் வராத ஏதோ ஒரு ஆழமான துயர் இன்று ஏனோ அவன் இதயத்தைச் சீண்டியது.
அவன் ஒரு தன்னிலை நிறைவு கொண்ட மனிதனாகத்தான் அவனை இதுவரை நினைத்துக்கொண்டிருந்தான். எனக்கு என்ன நடந்தது, லண்டனில் கிடைக்காத காதலைக் கோவையில் தேடிக்கொண்டிருக்கிறேனா?
மனம் மிகவும் சோர்ந்துபோன உணர்வு. தனது மனநிலையை யாரிடமாவது சொல்லியழவேண்டுமென்ற தவிப்பு,ஆனால் கடந்த சிலநாட்களாக அரவிந்த் மிகவும் பிஸியாகவிருக்கிறான்.
அவர்களின் உறவினரின் பெண்ணின் கல்யாண விடயமாக அவனது குடும்பமே பிஸியாகவிருக்கிறது.
இன்னும் கவிதாவின் பரிசுப் பொருட்களை அவளுக்குப் பார்ஸல் பண்ணவில்லை.
தனது சூழ்நிலைகடந்து வந்து எங்கோயோ ஒரு பெருங்காற்றின் மத்தியில் அகப்பட்ட தவிப்பு அவனை அழுத்திக் கொண்டிருந்தது.கால் போன போக்கில் மதுரை எங்கும் சுற்றித் திரிவதைவிடக் கோயிலுக்கு வந்து சிந்தனையைச் சீராக்குவது அவனுக்குப் பிடித்திருக்கிறது.
அன்றும் வந்தான். கடந்த இருநாட்களாக இருக்குமிடத்தில் உட்கார்ந்து தன்னைச் சுற்றிய பக்தியான மனிதர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.இவர்களெல்லாம் ஏதோ தேவைக்குத்தானே கடவுளிடம் வருகிறார்கள்?
அவன் ஒன்றும் பெரிய பக்திமானில்லை,ஆனால் இந்த மண்டபத்தில் உட்கார்ந்து சிந்திப்பது நிம்மதியாயிருக்கிறது. எனது எதிர்காலம் எப்படியிருக்கப் போகிறது? கவிதாவில் எனக்கிருந்த ஈர்ப்பை நான் அவளிடம் மனம் விட்டுச் சொல்லாமல் விட்டேன்? அவனுக்கு அவனில் கழிவிரக்கம் வந்தது. யோசித்து அலுத்து விட்டான்.நேரம் போய்க் கொண்டிருந்தது.
புறப்படத் தயாரானபோது அவனின் மோபைல் கிணுகிணுத்தது.
இந்திய நம்பர்,அனால் அது அவனின் சினேகிதன் அரவிந்த்தின் நம்பரில்லை.
‘ஹலோ’ என்றான்
அடுத்த பக்கத்திலிருந்து ஒரு வினாடி ஒரு பதிலும் இல்லை. ஏதோ ஒரு தவறுதலான நம்பராக இருக்கலாம் என்று யோசித்த அவன் ஓவ் பண்ண நினைத்தபோது,’ கண்ணன், கவிதா பேசறேன்’
கவிதா?
அவன் அந்தக் கோயிலிலிருக்கும் சிலைகளில் ஒன்றாகப் பிரமைபிடித்து உட்கார்ந்திருந்தான்.
தன்னைச் சுதாகரித்துக்கொண்டு,’ஹலோ கவிதா’ என்றான்.
அவளின் குரலை டெலிபோனில் இன்றுதான் முதன்முறை கேட்கிறான்.அது அவனின் இருதயத்தைப் பிழப்பது போலிருந்தது.
‘சாலினி நீங்க மதுரையில நிக்கறதா சொன்னாள்’
‘என் சினேகிதனோட மதுரை வந்தேன். உங்கள் பார்ஸலை மெயிலில அனுப்பி வைக்கிறன்’
அவளின் கல்யாண நிச்சயார்த்தத்திற்கு வாழ்த்துச் சொல்ல மறந்தது ஞாபகம் வந்தது.
அவன் அதைச் சொல்ல வாயெடுத்தபோது,
‘ வேண்டாம் பார்ஸலை நானே வந்து வாங்கிக்கிறன்’ என்றாள் கவிதா.
‘ ஏன் உங்களுக்குச் சிரமம்’ அவன் முணுமுணுத்தான். அவனின் மனத்தைக் கொள்ளை கொண்ட கவிதா இன்னொருத்தனுக்கு நிச்சயிக்கப் பட்டிருக்கிறாள். அவளை இன்னொருதரம்பார்த்து துயரப் படத்தான்வேண்டுமா?
‘சிரமம் ஒண்ணும் கிடையாது.’ அவள் குரலில் ஆணித்தரம்.
அவனுக்கு மறுமொழி சொல்லத் தெரியவில்லை. அரவிந்த் பிஸியாகவிருக்கிறான்.எப்போது அவனுக்கு நேரம் கிடைத்து கோவைக்குச் செல்ல முடியுமோ தெரியாது.
அவன் மௌனமானான்.
‘நாளைக்குச் சந்திக்க முடியுமா?’ கவிதாவின் குரலில் ஒரு அவசரம்.
அய்யோ என்னால் இப்போ உடனடியாகக் கோவைக்குப் புறப்பட முடியாது.என் சினேகிதன் அவனின் உறவினர் கல்யாண விடயமாக பிஸியாகவிருக்கிறான்’ அவன் படபடவென்று சொல்லி முடித்தான்.
‘நீங்க கோவை வரவேணாம், நான் மதுரைக்கு இன்னிக்கு வந்தன்’
‘வாட்’ அவன் குரலில் ஆச்சரியம்.
‘ஆமா சாலினி நீங்க மதுரையில் நிக்கிறதாச் சொன்னதும் புறப்பட்டு வந்தேன்’
‘கவிதா, ஏன் இந்தக் கஷ்டம். சாலினி கொடுத்த பரிசுகளை நான் பார்ஸலில அனுப்பி வைத்தால் போகிறது’ அவன் அவளைப் புரிந்து கொள்ளாமல் முனகினான். இன்னொருத்தனுக்கு நிச்சயமானவள் இவனை ஏன் பார்க்க வருகிறாள்?
அவன் தடுமாறுவது தெரிந்ததும்,’மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில சந்திக்கலாமா?’ அவள் அப்படிக் கேட்டபோது அவன் உறைந்துபோனான். அவனின் மன உளைச்சல்களைக் கொட்டித்தீர்க்க அவன் மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் தடாகத்தையண்டியிருந்த மண்டபத்திலமர்ந்;திருந்து தனது வாழ்க்கையை அலசுவது அவளுக்குத் தெரியுமா?அவனின் மறுமொழியை எதிர்பாராமல் அவள் போனை வைத்து விட்டாள்.
அதாவது ‘நான் அங்கு வரத்தான் செய்வேன் நீயும் என்னைச் சந்திதக்கவேண்டும்’ என்கிறாளா? ஏன்?
அவன் அன்றிரவு தூக்கம் வராமற் தவித்தான்.
அவளைப் பார்த்து அவன் துயர் படத் தயாரில்லை என்று தனக்குத் தானே பல தடவை சொன்னாலும், ஒவ்வொர தடவையும் அவளைப் பற்றி நினைக்கும்போது அவளைப் பார்த்தேயாகவேண்டும் என அவன் மனம் ஆணையிட்டுக் கொண்டிருந்தது.
ஆறுமாதங்களுக்கு முன் லண்டனில் அவனை விட்டுப் பிரிந்தவள் இன்று இந்தியாவின் ஒரு முக்கிய பெண் தெய்வத்தின் கோயில் சன்னிதானத்தில் நீல நிறப் பருத்திச் சேலையில் பவித்திரமாக வந்து கொண்டிருந்தாள்.
லண்டனில் அவனுக்குத் தெரிந்த கவிதாவுக்கும் இன்று அவன் பார்க்கும் கவிதாவுக்கும் ஏதோ ஒரு பிரமாண்டான வித்தியாசம். அது என்னவேன்று அவனுக்குத் தெரியவில்லை. புரிந்துகொள்ளுமளவுக்கு மனத் தெளிவுமிருக்கவில்லை.
அவன் இருதயத்தில் பிரளயம். தங்கை சாலினி கவிதாவுக்குக் கொடுத்தனுப்பிய பரிசுப் பொதிகையைக் கையிற் தாங்கிக் கொண்டு. அவன் கருத்தில் கவிதாவில் அவனுக்குள்ள காதலைச் சுமந்துகொண்டு அவள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் அவனின் எதிர்கால சோகத்திற்கான அடிகள் என்று தனக்குள் பொருமிக் கொண்டான்.
இரண்டு மூன்று நாட்கள் சரியான நித்திரையன்றி அவன் சோர்ந்திருந்தான். லண்டனில் இரு பட்டப் படிப்புக்களைப் படித்து முடித்தவன் இன்று அவளைக் கண்டதும்,தனது மூளையில் எந்த சிந்தனையும் உருப்படியாகச் செயற்படவில்லை என்பதன் மர்மத்தையுணராது தவித்தான்.
அவள் யாருடனும் வரவில்லை. தனியாக வந்திருந்தாள்.
அவன்’ ஹலோ கவிதா’
அவள்’ ஹலோ கண்ணன்’
அவன் தங்கை கொடுத்தனுப்பிய பரிசுப் பொதியை அவளிடம் நீட்டினான்.
அவள் அதை வாங்கிக் கொள்ளவில்லை.
‘கோவைக்கு வந்து எனது பெற்றோரிடம் கொடுத்தால் மிகவும் சந்தோசப்படுவார்கள்’ அவள் குரலில் எனது வேண்டுகொளை மறுக்காதே என்று தொனி அப்பட்டமாகத் தெரிந்தது.
அவன் குழம்பி விட்டான். நேற்றுத்தானே சொன்னாள் அவள் நேரில் வந்து பரிசுப் பொருட்களை வாங்கிக் கொள்வதாக, இப்போது என்ன சொல்கிறாள்.
‘லண்டனிலிருந்து பரிசுப் பொருட்களைப் பார்ஸலில் அனுப்பியிருக்கலாம். ஆனால் நீங்கள் இவ்வளவு தூரம் வந்து விட்டு என் வீட்டுக்கு வராமல் போகப் போகிறீர்களா’?
‘உங்கள் குடும்பத்திற்கு என் நான் பிரச்சினை கொடுக்கவேணும்..’அவன் தொடரமுதல் அவள் சொன்னாள்,
‘அது ஒன்றும் பிரச்சினையில்லை. நீங்கள் எனது அன்பான சினேகிதியின் தமயன் என்ற சொன்னேன். அவர்களும் உங்களைப் பார்க்க ஆசைப் படுகிறார்கள்’
அவன் தயங்கினான்.
‘உங்கள் நண்பர் மிகவும் பிஸியாக இருப்பதாச் சொன்னீர்கள்,மதுரை சுற்றிப்பார்க்கலாமா?’ அவனை நேரே பார்த்தபடி அவள் சொன்னாள்.
அவன் தர்மசங்கடத்துடன் முறுவலித்துக்கொண்டான்;.
‘எங்கள் வாழ்க்கையில் சிலவேளைகளில் சிலநேரங்களைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ளவேணும்,அது வாழ்க்கையின் ஒரு முக்கிய பரீட்சையாகவும் இருக்கலாம்’
அவள் குரலில் என்ன கிண்டலா அல்லது தத்துவப் போதனையா?
‘எங்களையறிந்து கொள்வதற்கும் எங்களை மற்றவர்கள் புரிந்து கொள்வதற்கும் கிடைக்கும் அற்புத இடைவெளிதான் தற்செயல் சந்திப்புக்கள்’ அவள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவன் இப்போது அவளைப் பார்த்து முகம் மலர முறுவலித்தான். அவள் அவனை இறுகப் பார்த்தாள். அவள் கண்கள் அவனின் முகத்தில் வளைய வந்தன.
இப்படிப் பேசும் கவிதாவை அவன் லண்டனில் சந்திக்கவில்லை.
ஓரு வலயத்தைத் தாண்டாத பெண்ணாக அவன் எடைபோட்டிருந்த கவிதாவா இவள்?
அன்று பின்னேரம் அவள் அவனை மதுரை மாநகரைச் சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்றாள்.
திருமலைநாயக்கர் மண்டபம், பக்கம் சென்றபோது இருளத் தொடங்கிவிட்டது.
அந்த நேரத்திலும் சூட்டின் வெக்கை அவனை வறுத்துக் கொட்டிக் கொண்டிருந்தது.
‘மன்னிக்கவும் நீங்கள் என்னைத் தேம்ஸ் நதியோரத்தில் கிட்டத் தட்ட நடு நிசியில் அழைத்துக் கொண்டுபோய் எனக்கு ஜாஸ் இசை பிடிக்கும் என்று சொன்னது போல் நான் உங்களைப் பொங்கும் காவிரிக் கரைக்குக் கூட்டிக் கொண்டுபோய் எனக்குப் பிடித்த இசைபற்றி உங்களுடன் முணுமுணுக்க முடியாது,ஏனென்றால் காவேரி வரண்டு கிடக்கிறது’.அவள் சிரித்தபடி சொன்னாள்.
கண்ணன் எங்கேயோ தனக்குத் தெரியாத ஒரு உலகில் பிரயாணம் செய்வதுபோல் உணர்ந்தான். இவள் ஏதோ பூடகமாகப் பேசுகிறார்கள் என்ற புரிந்தது. ஆனால் அவளிடம் நேரடியாகக் கேட்கத் தயக்கம்.
இன்னொருத்தனுக்கு நிச்சயிக்கப்பட்டதாகச் சொல்பவள் ஏன் இவனுடன் தேம்ஸ் நதிக்கரையில் இரவில் நடந்ததை ஞாபகப் படுத்துகிறாள்?
கண்ணன் ஏதும் கேட்பான் அல்லது சொல்வான் என்று எதிர்பார்த்த ஏமாற்றம் கவிதாவின் கண்களில் நிழலாடியதை கண்ணன் அவதானிக்கவில்லை.
அடுத்தநாள் காலையில் அவனிருந்து ஹோட்டெலுக்குக் காருடன் வந்திருந்தாள்.
‘இங்கிருந்து கோவை போகும்வரையும் பேசிக் கொண்டு போகலாம்’ அவள் சொன்னாள்
எதைப் பற்றிப் பேசுவதாம்?கார் புறப்பட்டு மதுரை இடி நெரிசல்களைத் தாண்டி அழகிய பிரதேசங்களுக்களை ஊடறுத்துச் செல்வது மனதுக்கு ரம்மியமாகவிருந்தது.
அந்த இனிய காட்சிகளை கவிதாவுடன் ரசிப்பது அவனுக்குப் பிடித்திருந்தது.
அவள் சாலினி பற்றி அவனிடம்; கேட்டாள். சாலினியும் கவிதாவும் மிகவும் நெருக்கமான சினேகிதிகள் என்பதும் அவர்கள் ஒருத்தருக்கொருத்தர் மனம் விட்டு எதையும் பகிர்ந்து கொள்பவர்கள் என்றும் அவனுக்குத் தெரியும் ஆனாலும் அவனுடன் பேச்சைத் தொடரத்தான் கவிதா பேசிக் கொண்டிருக்கிறாள் என்ற தெரியும்.
‘எனக்கு நிச்சயிக்கப் பட்டிருப்பவரைப் பற்றி நீங்கள் கேட்கவில்லையே’
அவன் மறுமொழி சொல்லாமல் அவளைத் திரும்பிப் பார்த்தான்.அவன் கண்களில் சோகம்.
இது என்ன கொடுமை?
என்னுடையவளாக இருக்கவேண்டும் என்ற அவன் மனமாரக் காதலிக்கும் ஒருத்தி அவளின் எதிர்காலக் கணவனைப் பற்றிப் பேசச் சொல்லிக் கேட்கிறாள்.
அவன் மறுமொழி சொல்லாமல் முகத்தை ஜன்னற் பக்கம் திருப்பினான். அவன் அவளின் கேள்விக்கு மறுமொழி ஏதும் சொல்லாததால் அவளுக்குக் கோபம் வந்தது.
‘ யு பிளடி இங்கிலிஷ்,’ அவள் தன் குரலையுயர்த்திக் கத்தினாள். கண்ணன்; அதிர்ந்து விட்டான்.
‘எதையும் நேரடியாகச் சொல்லத் தெரியாது, எல்லாவற்றிலும் ஒரு போலிக் கவுரவும், தன்னைத்தானே மறைத்துக் கொள்ளும் தந்திரப்புத்தி’ அவள் அவனைப் பார்த்துச் சட்டென்று வெடித்தாள்
அவன் அவளின் கோபத்திற்குக் காரணம் தெரியாமல் அவளை ஏறிட்டுப் பார்த்தான். அவளின் குரல் உடைந்து கேவியழத் தொடங்கி விட்டாள்.
கவிதாவின் கண்கள் குளமாகி அவள் கன்னத்தை நனைத்துக் கொண்டிருந்தது. அவன் பதறி விட்டான்.
‘கவிதா ஐ ஆம் சாரி, நீ இப்படித் திட்டுவதற்கு நான் உனக்கு என்ன சொல்லி விட்டேன்’
‘நீங்கள் மனம் விட்டு ஒன்றும் சொல்லாததுதான் காரணம் கண்ணன்’
அவன் இன்னொருதரம் அவளைக் குழப்பத்துடன் பார்த்தான்.
அவள் கண்ணீர் அவனைத் துடிக்கப் பண்ணியது. அவளின் அழுகையின் காரணம் புரிந்தது.
‘கவிதா ஐ லவ் யு ஆனால் அதை நீ ஏற்றுக் கொள்வாயோ என்றுதான்..’ அவன் சொல்லி முடிக்க முதல் அவள் அவனது வாயைப் பொத்தினாள்.
‘எனக்கு எந்தக் கல்யாணத்தையும் யாரையம் நிச்சயிக்கவில்லை. நான் உனது தங்கையின் சினேகிதி,அவளிடமிருந்து நான் படித்துக் கொண்டது எதைச் செய்தாலும் உனக்குப் பிடிக்காதவர்களிடம் பழகாதே என்பதுதான். அப்படியான நான் முன்பின் தெரியாத ஒருத்தனுக்க மௌனமாகக் கழுத்தை நீட்டுவேன் என்று நினைத்தீர்களா, ஐ லவ் யு கண்ணன், ஐ நோ யு லவ் மீ டு? அவள் கண்ணீருடன் புன்சிரிப்பையும் கலந்து புலம்பிக் கொண்டிருந்தாள்.
‘எனக்குத் தெரியும் நீ என்னைத் தேடி வருவாயென்று’ அவள் குரலில் குதுகலம்
அவனை அவளுக்குத்; தெரிந்த அளவு அவனுக்குத் தெரியவில்லையா?அவன் வழக்கம்போல் தலையைச் சொறிந்துகொள்ளவில்லை.
கவிதாவை அணைத்துக்கொண்டான். அவன் காலம் காலமாகக் காத்துக் கிடந்த அற்புத ஸ்பரிசம் அவனை இன்னொரு உலகுக்கு இழுத்துச் சென்றது.
கோவை நகரின் ஆரவாரம் காதைப் பிழந்து கொண்டிருந்தது. தனது வாழ்க்கையின் திருப்பத்தில் காலடி எடுத்து வைப்பதை கண்ணன் உணர்ந்தான்.
கவிதாவின் வீட்டை அடைந்தபோது கவிதாவின் அம்மா அவனை ஆராத்தி சுற்றி வரவேற்றாள். மகள் தேர்ந்தெடுத்த மருமகனை அன்புடன் அவள் பெற்றோர்கள் வரவேற்றார்கள். கவிதாவின் தமயன்கள் குடும்பம் குழந்தைகள் ஆரவாரத்துடன் கண்ணனைச் சுற்றி வந்தனர்.
கவிதாவுக்கு யாரும் எந்த வரனையும் பார்க்கவுமில்லை,நிச்சயார்த்தம் செய்யவுமில்லை, தன்னிடம் கண்ணனுக்குள்ள காதலைப் புரிந்து கொண்டதும் அவனைக் கோவைக்கு அழைக்கவும்,தனது குடும்பத்தாருக்கு அறிமுகப்படுத்தவும் கவிதா போட்ட நாடகம்தான் அந்த நிச்சயார்த்த நாடகம் என்று கண்ணனுக்கு இப்போது தெளிவாகத் தெரிந்தது.
‘அப்பா,அம்மா இவர்தான் என்னை விரும்புவர்..நான் விரும்புகிறவர்.. லண்டனில் வாழ்பவர், நீங்கள் சம்மதித்தால் மிகவும் சந்தோசப் படுவேன்;’ கவிதாவின் குரலில் ஒரு பூரிப்பு. ஆணித்தரம்,பெருமை,அளவிடமுடியாத காதல்.
‘நான் இவளையடைய என்ன தவம் செய்தேன்?’@ கண்ணன் தனக்குள் பெருமையுடன் சொல்லிக்கொண்டான்..னிடம் கண்ணனுக்குள்ள காதலைப் புரிந்து கொண்டதும் அவனைக் கோவைக்கு அழைக்கவும்,தனது குடும்பத்தாருக்கு அறிமுகப்படுத்தவும் கவிதா போட்ட நாடகம்தான் அந்த நிச்சயார்த்த நாடகம் என்று கண்ணனுக்கு இப்போது தெளிவாகத் தெரிந்தது.
‘அப்பா,அம்மா இவர்தான் என்னை விரும்புவர்..நான் விரும்புகிறவர்.. லண்டனில் வாழ்பவர், நீங்கள் சம்மதித்தால் மிகவும் சந்தோசப் படுவேன்;’ கவிதாவின் குரலில் ஒரு பூரிப்பு. ஆணித்தரம்,பெருமை,அளவிடமுடியாத காதல்.
‘நான் இவளையடைய என்ன தவம் செய்தேன்?’, கண்ணன் தனக்குள் பெருமையுடன் சொல்லிக்கொண்டான்..