காதலும் கற்று மற…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 6, 2019
பார்வையிட்டோர்: 37,833 
 
 

ராஜன் எங்கள் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தபோது அவனுக்கு இருபது வயதுதான்; சென்னை ஆசாமி அல்ல. திருநெல்வேலிக்கு அருகில் இருந்த ஒரு சிறு நகரின் ‘பாலிடெக்னிக்’கில் கம்ப்யூட்டர் பயின்று இரண்டு மாசங்கள் ஏதோவொரு நிறுவனத்தில் வேலை பார்த்தபின் ‘ஹார்ட்வேர்’ இஞ்சினியராக எங்களிடம் வந்தவன். ஏ.எம்.ஸி. எனப்படும் ஆண்டு முழுவதுமான சேவைக்கான ஒப்பந்தத்தில் அவனை இங்கு அனுப்பி இருந்தது.

அவனுக்குக் கணினி பற்றிய பல விஷயங்கள் அப்போது தெரியாது. அந்தப் பகுதியில் வேலை செய்பவர்களிடம் இணைந்துதான் அவன் அலுவல்; நிறுவனத்தின் பல பகுதிகளுக்கும் அவன் சென்று அவர்களின் குறைகளைத் தீர்க்க வேண்டும். புது ஆள்; இருந்தவர்கள் எல்லாம் பெரிய பதவிகளிலும், அனுபவத்திலும் மூத்தவர்கள் என்பதால் அவனைக் கண்டபடி விரட்டுவார்கள். அவனும் மிரண்டு விடுவான். அவனை அதிகம் மிரட்டி, உருட்டாதது நான்தான். இருந்தாலும் நானும் அவ்வப்போது அவன் காலை வாருவதுண்டு.

என்னுடன் அவன் கொஞ்சம் சுலபமாக ஒட்டிக் கொண்டான். அதனால் நான் சொல்வதை அவ்வளவாகப்பொருட்படுத்தமாட்டான். ஊரில் அவன் அம்மாவும், அப்பாவும் இருந்தனர். அவன் தந்தை மிகுந்த கோபக்காரர் என்று கூறியிருக்கிறான்.

இந்த அழகில் இவன் கொஞ்ச நாளாக யாரிடமோ ‘மொபைலி’ல் சிரித்து, சிரித்து ரகசியமாகப் பேசிக் கொண்டிருப்பதை நான் கவனிக்க நேர்ந்தது.

ஒருநாள் நான் விளையாட்டாகக் கேட்டேன்.

“என்ன ராஜன், யார்கிட்ட இப்படி வழியற… ‘லவ்’வா?”

ராஜன் அசட்டுச் சிரிப்பு சிரித்தான், பதில் சொல்லாமல்.

“ஓ… அப்படியா, யார் அது?” என்றேன்.

ஒரு விநாடி தயங்கியவன் பின் ரகசியமான குரலில் சொன்னான்.

“நான் உங்ககிட்ட மாத்திரம்தான் சொல்றேன். நீங்க யார்கிட்டயும் சொல்லிடக்கூடாது.” என்றான்.

எனக்கு வியப்பாக இருந்தது; முளைத்து மூன்று இலை விடவில்லை, அதற்குள் ஊர் விட்டு ஊர் வந்து… காதலா?

“சொல்லு, சொல்ல மாட்டேன்” என்றேன்.

“விமலாவைத் தெரியுமில்ல உங்களுக்கு..?” என்றான் நாணிக் கோணிக்கொண்டு.

புருவத்தைச் சுருக்கிக் கொண்டு யோசித்தேன்.

‘விமலாவா?’ அந்தப் பெயரில் எங்கள் ஆபீஸில் யாருமே கிடையாதே? அப்புறம் சட்டென்று நினைவு வந்தது. அவன் வேலை பார்க்கும் கம்பெனியிலேயே கறுப்பாக, பரட்டைத் தலையை ஒரு மாதிரி ‘பம்’மென்று ‘கிளிப்’ போட்டுக்கொண்டு ஒரு பெண் வந்திருக்கிறாள் ஓரிரண்டு முறை. அவள் ‘அகௌண்டிங்கி’ல் வேலை பார்ப்பதாக இவன் சொல்லியிருக்கிறான்.

“அந்தப் பரட்டைத் தலையா?” என்றேன் நான் சட்டென்று.

ராஜனின் முகம் ஒரு விநாடி சுருங்கிய போதும், அவனது வழக்கமான சிரிப்பு உடனே வந்தது.

“அதுதான், நீங்க என்ன ஸார் அதைப் பரட்டைத் தலைன்னு நக்கல் பண்றீங்க?” என்றான்.

“நிசம்தானே…?”

“போங்க ஸார். அவளுக்கு ‘ஃபிரிஸ்ஸி ஹேர்’. சுருட்டைத்தலை. அதுவே ஒரு அழகு தெரியுங்களா?” என்றான்.

“அடடா, பேஷ், பேஷ்…” என்றேன் நான் தொடர்ந்து.

“எத்தனை நாளாக… அவளுக்குத் தெரியமா உன் ‘லவ்’?” என்று கேட்டேன்.

“ஒரு மாதிரி தெரியும் ஸார். ஆனால், இதில் பல சிக்கல்கள் இருக்கிறது” என்றான் கவலையுடன்.

“ஹ்ம்… அது வேறயா? என்ன அது?”

“அவ தாயில்லாப் பெண் ஸார். அப்பா இருக்காரு. ஆனா மகா முரடனாம்.”

“உங்க மதமா, ஜாதியா?” என்றேன்.

“ரண்டும் இல்லை.”

“அப்ப உனக்கு இன்னும் பிரச்சினைதானே?”

“அது பார்த்துக்கலாம் ஸார். ஆனா அவ அப்பாவைவிட இன்னும் பெரிய ஒரு பிரச்சினை இருக்கு.”

“அது என்னது?”

“அவளோட அத்தை பையன் ஒருத்தன் இருக்கான். அவனும் கம்ப்யூட்டரில்தான் வேலை பார்க்கிறான். ஆனா இங்க இல்ல, சிங்கப்பூரில்… அவனும் இவளை விரும்புகிறானாம்.”

“அடடே, அப்ப அவன் உன்னைவிட ‘பெட்டர் சாய்ஸ்’ ஆச்சே ராஜன்” என்றேன் நான்.

ராஜனின் முகம் சோகத்தால் வாடியது. பின் சட்டென்று ஒருவிதமான தீவிரம் அடைந்தது.

“அவன் இவள ஏமாத்தறான் ஸார். உண்மையா ‘லவ்’ பண்ணலை…” என்றான்.

“அது எப்படி உனக்குத் தெரியும்?” என்றேன்.

“தெரியும்… அவன் மூஞ்சியப் பார்த்தாலே தெரியுது… அவன நம்பக்கூடாது. ஆனா, விமலா சில விஷயங்கள்ள அவன ரொம்ப நம்புது” என்றான்.

“உன்னைவிட நல்ல ‘பொஸிஷன்’… ஆனா பார்க்க எப்படி இருப்பான்?”

“என்ன மாதிரி கறுப்பாத்தான் இருப்பான் அவனும். என்னைவிட கொஞ்சம் ‘ஹைட்’…” என்றான் வெறுப்போடு.

“சரி விடு, அந்தப் பொண்ணு அவனை விரும்புதா, அதுதானே ‘பாய்ன்ட்’…?” என்றேன்.

ராஜன் யோசனை செய்தான். “அதான் ஸார் புரியலை… என்கிட்ட ரொம்ப பாசமா, பிரியமா இருக்கு. ஆனா, அவன்கிட்டயும் அதேமாதிரி இருக்காப்பல… எனக்கென்னமோ அவன் இவளை ஏமாத்தற மாதிரி தோணறது” என்றான்.

“எத வச்சு நீ அவன் அவள ஏமாத்தறாங்கற?” என்றேன்.

“பணத்தைக் காமிச்சுத்தான். சிங்கப்பூர்ல சம்பாதிக்கிறான் இல்ல..?” அவன் குரலில் குரோதமும், பொறாமையும் தெளிவாகவே தெரிந்தது.

நான் ராஜனைத் தட்டிக் கொடுத்தேன்.

“சரி, நிசமான அன்பு இருந்தா, அது தானே ஜெயிக்கும்… விடு…”

“அது சரி” என்று அமைதியானான்.

“நான் ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே?” என்றேன்.

“சொல்லுங்க ஸார்.”

“உனக்கு இப்ப இந்தக் காதல், கத்திரிக்காய் எல்லாம் வேண்டாம். உனக்குக் கத்துக்க வேண்டியதும், வாழ்க்கையில் முன்னேறுவதும்தான் இப்ப முக்கியம். தவிர இந்த ஜாதி, மதம் வேற குறுக்கே வரும்…” என்றேன்.

ராஜன் சிரித்தான். “நீங்க சொல்றது சரிதான் சார். இருந்தாலும்… உங்களுக்குத் தெரியாது ஸார்… எனக்குச் சொல்லிப் புரிய வைக்கத் தெரியலை.” என்றான்.

நான் பதில் சொல்லவில்லை.

***

அடுத்த இரு மாதங்களில் ராஜனை அவன் கம்பெனி வேறொரு கம்பெனிக்கு அனுப்பி விட்டது. ராஜன் கம்ப்யூட்டர் தொடர்பாக ஓர் அஞ்சல் வழிக் கல்வியில் சேர்ந்திருந்தான். அதற்கான பாட நூல்களை என் வீட்டு விலாசத்திற்கு அனுப்பும்படி சொல்லி இருந்தான். ஆதனால், அதை வாங்க அவ்வப்போது வருவான். எங்கள் நட்பு தொடர்ந்தது.

அதேபோன்று ஒருநாள் அவன் மிகத் தாமதமாக வந்தான். இரவு நேரமாகி விட்டது என்பதாலும், நான் தனியாகத்தான் வீட்டில் இருந்தேன் என்பதாலும் அவனை சாப்பிட்டு விட்டு இரவு தங்கிவிட்டுக் காலையில் போகச் சொன்னேன்.

சாப்பிட்டு முடித்தபின் பேச்சு எங்கெல்லாமோ சுற்றிக் கடைசியில் விமலாவிடம் வந்து நின்றது.

“என்ன ராஜன்… இன்னும் சுருட்டைத் தலை தொடர்பு இருக்கிறதா?” என்று கேட்டேன்.

அவன் முகம் சட்டென்று வாடியது.

“அவ்வளவா இல்ல ஸார்.”

“ஏன், என்ன ஆச்சு?”

“அவ என்னத்தான் நிஜமா விரும்பினா. ஆனா அந்தச் சிங்கப்பூர்காரன்தான் அவ மனச மாத்திட்டான்…” என்றான் கோபமாக.

“என்ன விளையாடற… எதை வச்சு சொல்ற?”

“ஆமா ஸார், இப்பல்லாம் நான் ‘ஃபோன்’ பண்ணா சுருக்கமா ரண்டு வார்த்தைதான் பேசறா. பலசமயம் ‘கட்’ பண்ணிடறா… அப்ப என்ன அர்த்தம்?”

“உன்னோட பேச இஷ்டமில்லன்னு அர்த்தம்?”

“அப்படியில்ல ஸார். அவன் போன வாரம் சென்னை வந்திருக்கான். அவனோட வெளில எல்லாம் போயிருக்கா. அவங்க வீட்டில அவனக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி வற்புறுத்தறாங்கன்னு எங்கிட்ட சொன்னா.”

“உண்மையா இருக்கலாமே?” என்றேன் நான்.

“இல்ல ஸார், அவன்தான் அவள அப்படி சொல்ல வச்சிருக்கான்.”

“ஏன்… அவளுக்கேகூட அவனப் பிடிச்சிருந்திருக்கலாம்…”

“சான்ஸே இல்ல.”

“ஏன்…? எதை வச்சு நீ இந்த முடிவுக்கு வந்த…?”

“என்கிட்ட ஒரு மாசம் முன்னால் பத்தாயிரம் ரூபா கடன் கேட்டா. என்கிட்ட பத்தாயிரம் இல்ல, ஐயாயிரம்தான் இருக்குன்னு குடுத்தேன்… அவன் பணம் கொடுத்து சரிகட்டியிருப்பான்…”

“பணத்துக்காகக் காதலா? அப்படின்னா அவ உங்க இரண்டு பேரையுமே ஏமாத்தறாள்னு அர்த்தம்…” என்றேன் சற்றுக் கோபமாக.

ராஜனின் முகம் சட்டென்று மாறியது. சோகமா, துக்கமா, கோபமா என்று புரிந்துகொள்ள முடியாத ஓர் உணர்ச்சி முகத்தில் தெரிந்தது. ஒரு நிமிஷம் ஒன்றும் பேசாமல் இருந்தவன் திடீரென்று விசித்து விசித்து அழ ஆரம்பித்தான்.

நான் அதிர்ச்சி அடைந்தேன்.

“ராஜன்… ராஜன்… என்ன ஆச்சு உனக்கு. ஏன் இப்படி அழற… நான் உன்ன ஒண்ணும் சொல்லலையே..?” என்றேன் பதட்டமாக.

“என்ன என்ன வேணுமானாலும் சொல்லுங்க ஸார்… ஆனா, அவளைப் பத்தித் தப்பாப் பேசாதீங்க. அவ ரொம்ப நல்ல பொண்ணு ஸார்…” என்றான் அழுகையினூடே.

எனக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது.

“ஏமாத்தறாள்னு சொல்லிட்டீங்களே ஸார்… அவ பணத்தைப் பெரிசா நினைக்கிறவ இல்ல ஸார்.”

“ஓ… ஸாரி…” என்று நான் மௌனமானேன்.

நான் காதல் வயப்பட்டதில்லை; ஒருவேளை இதுதான் உண்மையான காதலோ? மேற்கொண்டுபேச்சு தொடரவில்லை.

ராஜன் ஹாலில் இருந்த சோபாவில் படுத்துக் கொண்டான். நான் என் ‘பெட்ரூமி’ல் சென்று படுத்துக் கொண்டேன். எனக்கு தூக்கம் வரவில்லை. பாவம், இந்தப் பிள்ளை, யார் பெற்ற பிள்ளையோ? அவன் மனசைக் காயப்படுத்தி அழ வைத்து விட்டோமோ என்று மனது உறுத்தியது.

திடீரென்று எழுந்து வந்து சோபாவில் படுத்திருந்த ராஜனைப் பார்த்தேன். கண்ணீர்க் கறை கன்னத்தில்; ஆனால் குழந்தை போல் உறங்கிக் கொண்டிருந்தான்.

எனக்கு வேதனை உண்டானது.

மறுநாள் காலை எழுந்ததும், அவன் எந்தவித வித்தியாசமும் காட்டாமல் எப்போதும் போல் சகஜமாகப் பேசினான். நானே பேசினேன்.

“ஐ’ம் ஸாரி ராஜன்… உன் ‘பர்ஸனல் மேட்டரி’ல் நான் புகுந்து அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது. தப்புத்தான். என்னை மன்னித்து விடு…” என்றேன் நிசமான வருத்தத்துடன்.

ராஜன் சிரித்தான்.

“பரவால்ல ஸார்… நீங்கதானே பேசினீங்க. உங்கள நான் வேறு மனுஷனா பார்க்கலை… ‘ஸாரி’ எல்லாம் வேண்டாம்” என்றான்.

***

இதெல்லாம் நடந்தது கிட்டத்தட்ட பதினைந்து வருஷங்களுக்கு முன்னால்.

ராஜன்-விமலா காதல் என்ன ஆயிற்று என்கிறீர்களா?

விமலா அந்த சிங்கப்பூர் அத்தை மகனைத் திருமணம் செய்து கொண்டு சிங்கப்பூர் போய்விட்டாள். அது நடந்தது ராஜன் அவளுக்காகப் பரிந்து பேசி அழுத மூன்றாவது மாதத்திலேயே; அந்தச் செய்தியைக் கொண்டு வந்ததும் அவன்தான்.

நான் ஏதும் சொல்லவில்லை.

ராஜன் என்ன செய்தான் என்கிறீர்களா?

அவன் அப்பா-அம்மா பார்த்துப் பேசிய பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு, பல வேலைகள் மாறி, கம்ப்யூட்டர் துறையில் மிகுந்த தேர்ச்சி பெற்று ஒரு பெரிய நிறுவனத்தில் டோக்கியோ, ஜப்பானில் இருக்கிறான். அவன் கல்யாணப் பத்திரிகை கொடுக்க வந்தபோதுதான் நான் கேட்டேன்.

“உன் பரட்டை… ஸாரி… சுருட்டைத் தலை ‘ஃப்ரண்ட்’ பற்றி ஏதாவது தெரியுமா?” என்றேன்.

“நல்லா இருக்கா ஸார்… சிங்கப்பூர்ல… என்றவன், “நான் மறந்தாலும் நீங்க மறக்க மாட்டீங்க போல…” என்றான் சிரித்தபடி.

தொடர்ந்து “தமிழ்ல ஒண்ணு சொல்வாங்களே… ‘களவும் கற்று மற’ன்னு. அதே போலத்தான் எனக்கும். நானும் காதலைக் கற்று மறந்து விட்டேன்…” என்றான்.

நான் வியப்புடன் ராஜனைப் பார்த்தேன்.

நிச்சயமாக இன்றைய இளைஞர்கள் அதி புத்திசாலிகள்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *