காதலிக்கணும் சார்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 14,304 
 
 

என்ன கேட்கறீங்க? என் பெயரா? குமார் சார். வயசு 21. உயரம் ஐந்தடி ஐந்தங்குலம். நல்ல வெள்ளை. படிப்பு? பி.ஏ. எகனாமிக்ஸ், செகண்ட் ‘அட்டம்ப்ட்’தான். இப்போது காலைப் பத்திரிகையில் ‘வான்ட்டட்’ காலம் பார்த்து, ‘பீயிங் கிவன் டு அண்டர்ஸ்டாண்ட்’ எழுதி, பின் அது கிடைக்காமல் அலுத்துப் போய் ‘மேட்ரிமோனியலை’ப் பொழுது போக்காய்ப் படித்துக்கொண்டிருக்கிறேன். நான் வேலை பார்த்துத்தான் ஆகவேண்டும் என்பதில்லை. அப்பா நிறைய சம்பாதிக்கிறார். மேலே படிக்கவும் இஷ்டமில்லை. வெளியே சுற்றும் நேரம் போக, வீட்டில் விவிதபாரதி கேட்டுக்கொண்டிருக்கிறேன். நடுநடுவே யாருக் கும் தெரியாமல் மொட்டை மாடியில் போய் சிகரெட் குடித்துவிட்டு வருகிறேன். வேலை கிடைக்காமல் வீட்டில் இருப்பது இருக்கிறதே, சம்திங் ஹாரிபிள் சார்! உங்கள் வீட்டில் யாராவது அப்படி இருந்தால் ஒழிய, இதன் கஷ்டம் உங்களுக்குப் புரியாது. நீங்களே இருந்தால், பெட்டர்! இன்னும் நன்றாகப் புரிந்துகொள்வீர்கள்.

என்னிடம் ஒரு வீக்னெஸ் உண்டு. (என்னிடம் மட்டும்தானா?) பெண்கள்! அழகான எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் மனசுக்குள் கொஞ்சம் (நிறையவே) ஆடிப் போய்விடுவேன். உடம்பில் ஒரு தெம்பு வந்ததைப் போல உணர்வேன். கதையில் ஓர் அழகான பெண் வந்துவிட்டாலே தெம்பு வருகிறதே, நேரிலே வந்தால் வராதா? இது என்னோட பலவீனமா, அல்லது பலமா? புரியவில்லை.

நான் இப்போது கொஞ்சம் தெளிந்திருக்கிறேன். முன்னே மாதிரியில்லை. அப்பா சொல்லுவார், ”இன்னும் உனக்கு மென்டல் மெச்சூரிடி வரவில்லை. ஏன் இப்படிப் பொறுப்பில்லாமல் சுற்றுகிறாய்?” என்று. அப்பாவுக்கு என்னைக் கண்டாலே பிடிக்காது. அவர் என்னை அளவுக்கு அதிகமாக விரும்பினதுதான் இதற்குக் காரணம்.

விஷயம் ஒன்றும் பெரிசில்லை. ஒரு பெண்ணுக்கு லவ் லெட்டர் எழுதினேன். அவளுடைய அப்பா, எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டார். வெற்றிலைப் பாக்கு மாற்றிக் கொள்ளும் பொருட்டல்ல; ‘உங்க பிள்ளையைக் கண்டிச்சு வைங்க’ என்று சொல்ல! இதைச் சொல்வ தற்காக மந்தைவெளியிலிருந்து தன்னுடைய காரின் ஒரு லிட்டர் பெட்ரோலைச் செலவாக்கிக் கொண்டு வந்திருந்தார். அப்பா தன் பெல்ட்டை, முதன்முதலாய் என் மேல் உபயோகித்தார். முது கெல்லாம் சிவப்புக் கோடுகள்.

அன்று இரவு ஒரு வைராக்கியத் துடன் சென்ட்ரலில் ரயில் ஏறி னேன். பாதி தூரம் போவதற்குள் அம்மாவின் ஞாபகம் திரும்பத் திரும்ப வந்து, தொந்தரவு பண்ணி யது. அம்மா என் மேல் உயிரையே வைத்திருக்கிறாளே! தினமும் ராத்திரி என்னை எழுப்பி, எனக்கு ஹார்லிக்ஸ் தருவாளே! அவளை விட்டுவிட்டா? அவளையா? மறு நாள், மறு ரயிலில் சென்னைக்குத் திரும்பிவிட்டேன். அதற்குப் பின் அப்பா என்னைத் தொடுவது இல்லை.

கீழே கார் ஹாரன் சத்தம் கேட்கிறது. அப்பா ஆபீஸூக்குக் கிளம்பிப் போய்விட்டால், அவ்வளவு பெரிய வீட்டுக்கும் நான்தான் எஜமானன் என்ற எண்ணம் தோன்றி, என்னை ரொம்ப கர்வப்படுத்தும். அந்தத் தாற்காலிகமான கர்வம் கொடுக்கிற தெம்பில் வேலைக்காரனை, தோட்டக்காரனை அதட்டிக் கொண்டிருப்பேன். அவர்கள் அதைச் சட்டை பண்ணுவதில்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால், நான் கொடுக்கும் டிப்ஸூக்காக, ரொட்டித் துண்டு நாயாக அலைவார்கள். அவர் களை அப்படி அலைய வைத்துப் பார்ப்பதில் ஒரு சந்தோஷம்; அவர்களது அலட்சியத்திற்குப் பழி வாங்கிவிட்ட சந்தோஷம்.

அவர்களுக்கு நான் ஏன் மதிப் பில்லை என்று யோசித்திருக் கிறேன். என் கோளாறு அவர்களுக் குத் தெரிந்திருப்பதுதான் காரணம் என்ற முடிவுக்குதான் என்னால் வர முடிந்தது. என்னை மதிப்பதற் குப் பதிலாகப் பரிதாபப்படு கிறார்கள். யாரும் என்னிடம் பரிதாபப்படுவது எனக்குப் பிடிக் காது. அதை அவர்களிடமிருந்து விரட்டியடிக்க, என் சுப்பீரியா ரிட்டியைக் காட்ட அடிக்கடி அதட்டிப் பார்த்தேன். ஒருத்த னாவது லட்சியம் பண்ணப் போகிறான்கள்? கூப்பிட்ட ஐந்து நிமிஷங்களுக்குப் பிறகு ஓடி வந்து (நிதானமாக, ஆனால் ஓடி வருகிற மாதிரி) ‘கூப்பிட்டீங்களா, இதோ செய்யறேன்’ என்று போலியாகப் பல்லைக் காட்டி என்னைச் சமா தானப்படுத்துகிற மாதிரி அடக்கி விட்டுப் போவான்கள். இடியட்ஸ்… ஹெல் வித் தெம்! ஹெல் வித் மை டிஸீஸ்!

என் கோளாறையும் சொல்லி விடுகிறேனே! எப்போதாவது திடீர்னு வலிப்பு வந்து, பல்லெல் லாம் இறுகி, வாய் கோணிப் போய், கை கால் எல்லாம் உதறிக் கொண்டு அப்படியே நடு ரோட்டில் விழுந்துவிடுவேன்.

இது என்னிடம் இருப்பது நிறையப் பேருக்குத் தெரியாது. அப்பா எவ்வளவோ டாக்டரிடம் அழைத்துக்கொண்டு போய்க் காண்பித்தார். ஒன்றும் பயன் இல்லை. ஒரே ஒரு டாக்டர் மட்டும் ‘இன்ட்ரெஸ்டிங்’கா ஒரு கேள்விக் கேட்டார்…

”நீ யாரையாவது லவ் பண்றியா?’

நான் சிரித்தேன்.

”ஏன் சிரிக்கிறே?” என்றார்.

”லவ் பண்ணினா வலிப்பு வருமா சார்?” என்று கேட்டேன். அவரும் சிரித்தார். அப்புறம் ஏதேதோ கேள்விகள் எல்லாம் கேட்டார். ”உங்க பையனுக்கு இந்த வியாதி…” என்று வாயில் நுழையாத ஒரு பெயரை அப்பா விடம் சொன்னார். அப்பா, ‘உன்னைப் போய்ப் பெற்றேனே!’ என்கிற மாதிரி ஒரு பார்வை பார்த்தார். அவ்வளவுதான்… என் வலிப்பு என்னோடு நிரந்தரமாய்த் தங்கிவிட்டது.

அந்த டாக்டர் கேட்டது உண் மையோ என்று கூடத் தோன்று கிறது. எனக்கு முதன்முதலில் இந்த வலிப்பு அப்படித்தான் ஆரம்பித்தது. பி.யூ.சி படிக்கிற போது ஹேமாவை அடிக்கடி பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தேன். ஹேமா ரொம்ப நல்லவள். சாது. குனிந்த தலை நிமிரமாட்டாள். நான் நிமிர வைத்தேன். (என் உருவத்தைப் பற்றித்தான் முதலில் சொல்லியிருக்கிறேனே?) என் னைப் பார்த்து அடிக்கடி சிரித் தாள். ஒரு நாள் டிரைவ்-இன்னில் தனியாகப் பார்த்தேன். அவளு டைய சிநேகிதிகளுக்காக வெயிட் பண்ணுவதாகச் சொன்னாள். அவள் அன்று எனக்குப் பிடித்த நீலத்தில் வந்திருந்தாள். அவள் உட்கார்ந்திருந்த விதம் என்னை மிகவும் கவர்ந்தது. ராணி மாதிரி… அவள் ராணிதான்! ஆனால், என் னால் ராஜாவாக முடியலையே!

காபி வரவழைத்துச் சாப்பிட் டோம். நான் அவளையே பார்த் துக்கொண்டிருந்தேன். திடீர்னு உடம்பை என்னவோ பண்ணுவது போலிருந்தது. பல்லெல்லாம் இறுக ஆரம்பித்தது. வாய் கோண லாகி, கை கால் உதறலெடுத்து… அவள் ‘வீல்’ என்று கத்தினாள். கூட்டம் எங்களைச் சூழ்ந்து கொண்டுவிட்டது. என்னைச் சரிப்படுத்தி எப்படியோ வீட்டில் கொண்டு போய்ச்சேர்த்தார்கள்.

அதற்குப் பின் ஹேமாவை நான் பார்க்கும்போதெல்லாம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். தனியாய்ப் போவதைத் தவிர்த் தாள். நான் பேசிவிடுவேனோ என்று பயம். அவள் அப்பாவுக்கு மாற்றல் ஆனதால், பெங்களூர் போய்விட்டாள்.

எனக்குக் கொஞ்ச நாள் தனிமையாய் இருப்பதுபோல் ஓர் உணர்வு ஏற்பட்டது. பின் அது பழகிப் போய்விட்டது. எந்த கஷ்டமும் பழகிப் போச்சுன்னா, கஷ்டமே இல்லை.

காலியாய் இருந்த பக்கத்து வீட்டுக்கு ஒரு புதுக் குடித்தனம் வந்தது. வசந்தியும் வந்தாள். அவள் நன்றாகப் பாடுவாள். லதா மங்கேஷ்கர் மாதிரி குரல். நானும் கிஷோர்குமார் மாதிரி என் வீட்டு மாடியில் நின்று பாட முயற்சித்தேன். முடியவில்லை. வசந்திக்கும் என்னைப் பிடித் திருந்தது. வீட்டுக்கு அடிக்கடி வர ஆரம்பித்தாள். ‘வசந்தி… வசந்தி’ என்று அடிக்கடி உருக ஆரம்பித் தேன். பேனா கையில் இருக்கும் போதெல்லாம், அவள் பெயரை பேப்பரில் கிறுக்க ஆரம்பித்தேன். அவள் என் பக்கம் சாய்கிறாள் என்பதைக் கூட மறைமுகமாய்த் தெரிந்துகொண்டேன்.

ஒரு நாள், அவள் என் வீட்டுக்கு வந்தாள். ரெக்கார்ட் பிளேயரில் ‘பீ மை பேபி’ சுற்றிக் கொண்டு இருந்தது. நான் அர்த் தத்தோடு அவளைப் பார்த்தேன். அவள் தலையைக் குனிந்து கொண்டுவிட்டாள். கொஞ்ச நேரம் மௌனமாய்ப் பாட்டை ரசித்தோம்.

”இந்தப் பாட்டு உனக்குப் பிடிக்குமா?”

”ஓ… எஸ்!” – கண்களைப் பெரி தாக உருட்டி, அழகாகச் சிரித் தாள்.

‘என்னை?’ – தொண்டை வரைக் கும் வரும் இந்தக் கேள்வி, ஏன் வெளியே வர மறுக்கிறது?

நான் அதைக் கேட்கவேயில்லை. கேட்கமுடியாதபடி ஆகிவிட்டது.

வலிப்பு வந்துவிட்டது. எது நடக்கக்கூடாது என்று நினைத் தேனோ, அது நடந்துவிட்டது. பதறிய அவளிடம் என் அம்மா, என் வலிப்பு பற்றி, நான் விழுவது பற்றி, டாக்டர் சொன்னது பற்றி – எல்லாவற்றையும் ஆதியோடு அந்தமாய்ச் சொல்லிவிட்டாள்.

இனியும் வசந்தி என் பக்கம் திரும்புவாள் என்று நான் நினைக்க வில்லை. அவளைப் பார்த்து ஏதாவது பேச எனக்குப் பயமாக இருந்தது. ஒரு நாள், ‘தேவி’யில் அவளை யாரோ ஒருவனோடு பார்த்ததும், நான் படம் பார்க்கா மலேயே திரும்பிவிட்டேன். அதற்குப் பின், அவள் வீட்டுப் பக்கம் பார்ப்பதைக் கூட நிறுத்திக் கொண்டுவிட்டேன்.

திடீரென்று என் மேலேயே எனக்கு வெறுப்பு வளர ஆரம்பித் தது. இப்படி இருப்பதைவிடச் சாகலாம் என்று நினைத்தேன். ராத்திரி, யாருக்கும் தெரியாமல் டிக்-20-ஐ தண்ணீரில் கலந்தேன். ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு, ‘இது என் கடைசி சிகரெட்’ என்று சொல்லிக் கொண்டேன்.

அம்மாவின் ஞாபகம் வந்தது. அம்மா மட்டும் என்னை நினைத்து அடிக்கடி அழுவாள். வசந்தியும் அழுவாள். ஹேமாவுக்குத் தெரிஞ்சா அவளும் அழுவாள். அப்பாவும் மனசுக்குள் அழுவார். வேலைக் காரர்களும், தோட்டக்காரர்களும் கூட அழுவார்கள். என் சாவு சிலரை அழ வைக்கும் என்கிற கற்பனை மிகவும் சந்தோஷமாய் இருந்தது. எதிரே கண்ணாடித் தம்ளரில் டிக்-20 கலந்த தண் ணீர்! ஒரே ஒரு தம்ளர் தண்ணீர்… நான் குடித்து, என்னைக் குடிக்கப் போகும் தண்ணீர்… எங்கோ கார்ப்ப ரேஷனில் யாரோ சில தொழிலாளி களால் சுத்தம் செய்து அனுப்பப் படும் தண்ணீர், இதோ என் வயிற்றில் விஷமாக இறங்கப் போகிறது.

நான் சிரித்துக் கொண்டேன். என்னால் சாகும்போது கூட நன்றாக யோசிக்க முடிகிறது! ஆனால், நான் சாகவில்லை. சாகவேயில்லை. தம்ளரை வாய் அருகே கொண்டு போனேன். அந்த பாழாய்ப்போன வலிப்பு அப்போது வந்தது. பற்கள் இறுகி, கைகால்கள் உதறல் எடுத்துத் தம்ளர் கீழே உருண்டு… என்னைக் கொல்லத் தூண்டிய அதே வலிப்பு என்னை மீட்டும் விட்டது. நான் மீண்ட பின், ஒரு முடிவுக்கு வந்தேன். ‘என்ன ஆனாலும் சரி, வாழ்ந்தே தீருவது. அழக்கூடாது. சாகக்கூடாது. நான் கோழை இல்லை’ என்று என்னைத் தேற்றிக் கொண்டேன். வேலை விஷயமாகச் சிலரைப் போய்ப் பார்த்துவிட்டு வந்தேன்.

எனக்கு வேறு ஒன்றும் ஆசையில்லை சார்… காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கணும். ஒரு பெண்ணை முன்னாலேயே தெரிஞ்சுக்காம எப்படி சார் கல்யாணம் பண்ணிக்க முடியும்? ஆனா ஒண்ணு சத்தியம், என்னை ‘தார் பாலைவனத்தில் போய் இரு’ என்று சொன்னாலும், போய் இருப்பேன். ஆனால் பஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிட்டுவிட்டுக் கல்யாணம் பண்ணிக் கொள்ள மாட்டேன். காதலிச்சால் என்ன சார் தப்பு? ஒரு பெண்ணிடம் பழகி, அவளைப் புரிந்துகொண்டு கல்யாணம் பண்ணிக் கொள்வதில் உள்ள சௌகரியம் அப்பாவுக்கு ஏன் புரியமாட்டேன் என்கிறது? நான் காதலிப்பேன். என்ன ஆனாலும் சரி, காதலிப்பேன். கஜினி முகம்மது பற்றி எப்போதோ படிச்சது ஞாபகத்துக்கு வந்து கொஞ்சம் தைரியமும், நம்பிக் கையும் கூட வருகிறது.

மணி என்ன, ஒன்பதரையா? அடுத்த தெருவில் இருக்கும் கவிதா, காலேஜுக்குக் கிளம்பி யிருப்பாள். பஸ் ஸ்டாண்ட் போவதற்குள் அவளைப் பிடித் தாகணும். இது ரொம்ப அவசரம். ப்ளீஸ், மீதியை அப்புறம் வந்து எழுதறேனே? கொஞ்சம் பொறுத் துக் கொள்ளுங்களேன் சார்!

– 18-03-1973

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *