கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 30, 2024
பார்வையிட்டோர்: 1,645 
 
 

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

எழுத்தாளர் மார்கெரித் த்யுரா

எழுத்தாளர் மார்கெரித் த்யுரா(Marguerite Duras) இறந்து இன்றைக்குப் பதினோரு ஆண்டுகள் ஓடிவிட்டன. அவரது படைப்புகள் உலகெங்கும் அநேகப் பல்கலைகலைகழகங்களில், பிரெஞ்சு மொழி படிப்பவர்களின் பாடத்திட்டத்தில் உள்ளது. பிரெஞ்சு மொழியின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரென ஏற்கப்பட்டு, ஆவரது ஆளுமை மிக்க எழுத்துகள் இன்று நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அவருடைய, ‘காதலன்'(L’Amant – The Lover)) என்ற நூலின் வெற்றி அளவிடற்கு அரியது. 1984ல் பிரசுரமான இந்நாவலுக்கு, பிரான்சின் மிகப்பெரிய இலக்கிய பரிசான கொன்க்கூர் (Le Prix Goncourt) பரிசு கிடைத்தது. நாற்பது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திரைப்படமாகவும் வெளிவந்தது. அவரது எழுத்துக்கள் அனைத்துமே அவரது சுயவரலாறுகள் எனச் சொல்லப்பட்டாலும், அச் சுயவரலாற்றை சொல்லுவதற்கு அவர் தேர்வு செய்திருக்கும் மொழியின் நேர்த்தியும் அதன் வசீகரமும், அவற்றில் இடம்பெறும் பாத்திரப் படைப்புகளும், வாசகர்களை முற்றிலும் வேறான உலகத்திற்கு அழைத்துச் செல்ல வல்லவை, மாயா உலகத்தில் சஞ்சரிக்க வைப்பவை. வாழ்க்கையின் இறுதி நாட்கள்வரை கனவுக்கும் நனவுக்குமான இடைப்பட்டப் புள்ளியில் தன்னை நிறுத்தி குழம்பியவரென விமர்சனத்திற்கு உள்ளாகியவர். அவரது எழுத்து ஒருவகைப் பாவமன்னிப்புகோரலாகவும், கழிவிரக்கம்போலவும் வாசிப்பவர்களால் உணரப்படும். தனது உறவுகளை ஆவேசத்துடன் எழுத்தில் குதறி இருக்கிறார். முன்னாள் பிரெஞ்சு நாட்டு ஜனாதிபதி பிரான்சுவா மித்தரானுக்கு நெருக்கமான தோழி. நாற்பதுக்கு மேற்பட்ட இவரது படைப்புகளில் நாவல்கள், நாடகங்கள் இரண்டும் உள்ளன. இவரது பல படைப்புகள், இவரது இயக்கத்திலேயே திரைக்கும் வந்துள்ளன.


அத்தியாயம்-1

ஒரு நாள், நான் வளர்ந்த பெண்ணாக மாறி இருந்த நேரம், வெளியில் பொது இடமொன்றில் நின்று கொண்டிருக்கிறேன். என்னை நோக்கி ஒருவன் வந்தான், தன்னை அறிமுகப் படுத்திக்கொண்ட பின்,” வெகு நாட்களாக உங்களை அறிவேன். பலரும், நீங்கள் இளம்வயதில் அழகாய் இருந்ததாகச் சொல்கிறார்கள், இப்போதுதான் உங்கள் அழகு கூடி இருக்கிறது என்பதைச் சொல்லவே உங்களை நெருங்கினேன், உங்கள் இளம் வயது முகத்தினும் பார்க்க, சோபை அற்றிருக்கும் இம் முகத்தை, நான் விரும்புகிறேன்”- என்றான்.

இதுவரை அச் சம்பவத்தைப் பற்றி எவரிடமும் பேசாத நிலையில், ஒவ்வொருநாளும் இன்றைக்கும் தனிமையில் இருக்கிறபோதெல்லாம் அக்காட்சியை நினைவுபடுத்திக் கொள்கிறேன். அன்று கண்டது போலவே அதே மௌனத்துடன், பிரம்மித்தவளாக நிற்கிறாள், அவளைச் சுற்றிலும். என்னை மகிழ்விக்கக்கூடிய அத்தனை தனிமங்களுக்கும் இருக்கின்றன, அதாவது என்னை நினைவுபடுத்தும், என்னை குதூகலத்தில் ஆழ்த்தும் பண்புகளோடு.

எனது வாழ்க்கையில் வெகு சீக்கிரம் பல விஷயங்கள் காலம் கடந்தவையாக இருக்கின்றன. ஏன் பதினெட்டுவயதேகூட அநேக பிரச்சினைகளில் காலம் கடந்ததாகத்தான் இருந்தது. பதினெட்டிற்கும் இருபத்தைந்து வயதிற்குமான இடைபட்ட காலத்தில் இன்னதென்று விவரிக்கமுடியாத திசைக்கு எனது முகம் பயணப்பட்டிருந்தது. பதினெட்டு வயதிலேயே, முதுமை அடைந்தவள்போலத் தோற்றம். பலருக்கும் இப்படித்தானா? விசாரித்ததில்லை. இளமைக் காலத்திலும், புகழின் உச்சியில் இருக்கிறபோதும், வயது இப்படித் திடுமென்று அதிகரித்ததுபோலத் தோன்றும், என்று சொல்லக் கேள்வி. ஆனால் இத்தனைக் கடுமையாக இருக்குமென்று நினத்ததில்லை. அடுத்தடுத்து முகத்தில் விழுந்த கோடுகளும், அவைகளுக்கு இடையேயான புதிய உறவுகளும், பெரிதாகிப் போன எனது கண்களும், பார்வையில் தெரிந்த கூடுதலான சோகமும்; இனி மாற்றமில்லை என்றாகிய வாயும், அதரங்களும்; நெற்றியில் கண்ட மேடு பள்ளங்களும் எனது முதுமையை அறிவிக்கப் போதுமானதாக இருந்தன. எனினும் கலக்கமின்றி முதுமையின் அக் காரியத்தினை, ஒரு வாசிப்பு நிகழ்வாகக் கருதி ஆர்வத்தோடு கவனித்து வந்தேன். இக் கருத்தில் பூரண உடன்பாடிருந்தது, நான் தவறுவதற்கு வாய்ப்பில்லை, காரணம் ஒருநாள் முதுமையின் செயல்பாடுகள் நிதானத்துக்கு வரக்கூடும், வாசிப்பில் அன்றைக்கிருந்த அவசரம், தொடர்ந்து இருக்கமுடியாது. பதினேழுவயதில், பிரான்சில் நான் பயணம் செய்தபோது என்னை அறிந்திருந்த பலருக்கும், இரண்டாண்டுகள் கழித்து பத்தொன்பது வயதில் என்னை மறுபடியும் பார்த்தபோது வியப்பு. நீங்கள் என்னிடத்தில் இப்போது பார்ப்பது அம் முகத்தைத்தான், முதுமை அதிகரித்துக் கொண்டிருப்பது உண்மை என்றாலும், வழக்கமான வேகம் அதற்கில்லை. சுருக்கம் கண்ட முகம், உலர்ந்தும் வரிவரியாய்ப் பிரிந்தும் இருக்கிறது. சில மெலிதான முகங்களைப்போல ஒடுங்கிப்போகவில்லை, அதன் பொருண்மைகள் சிதைவுற்றபோதிலும், அதன் எல்லைக்கோடுகள் அப்படியே காக்கப்பட்டன. உண்மை, எனது முகம் சேதம் உற்றிருக்கிறது.

உங்களிடம் சொல்வதற்கு நிறைய தகவல்கள் இருக்கின்றன. எனக்கு பதினைந்து வயது ஆறுமாதங்கள். உயர்நிலைப்பள்ளிக் கல்விக்கென்று மீகாங் நதிக்கருகே ஒரு பள்ளியில் சேர்ந்து படித்துக்கொண்டிருக்கிறேன். மீகாங் நதியை படகில் கடக்கிறபோது ஏற்பட்ட பயணத் தொடர்பானக் காட்சி. பிரான்சைப்போல அந்த நாட்டில் காலங்களைப் பிரித்துப்பார்க்க இயலாது. பூமியின் வெப்பமண்டலப் பிரதேசத்தில் நாங்கள் இருக்கிறோம். காலம் என்று சொன்னால், ஒன்றேயொன்று, கடுமையாக வெப்பம் நிலவுகிற கோடைகாலம். எறிச்சலூட்டக் கூடியது. வசந்தகாலம், புத்தாக்கம் அல்லது மறுபடியும் உயிர்ப்பு என்று எதுவுமில்லை. சைகோன் நகரில் உள்ளூர் அரசாங்கத்துக்குச் சொந்தமான விடுதியொன்றில் தங்கி இருக்கிறேன். அங்கே உறங்கவும், உண்ணவும் செய்கிறேன். படிப்புக்குப் பிரான்சு அரசுக்குத் சொந்தமான பள்ளிக்கென்று வெளியிற் செல்லவேண்டும். அம்மா ஆரம்பப்பள்ளி ஆசிரியை, அவளுக்கு நிறைவைத் தந்த ஆரம்பப்பள்ளி ஆசிரியை வேலை அவள் மகள் விஷயத்தில் கசக்கிறது, உயர்நிலைப்பள்ளி ஆசிரியையாக நான் வரவேண்டுமென்று அவளுக்கு ஆசை. ‘உனக்கான இடம் ஆரம்பப் பள்ளி அல்ல, ஞாபகத்தில் வைத்துக்கொண்டு படி, கணக்கில் ஒரு பட்டயமும், உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாகவும் வரணும்’, என்கிறாள். என்றைக்குப் பள்ளிக்கூடமென்று சேர்க்கபட்டேனோ அன்றையிலிருந்து இந்தப் பாட்டைக் கேட்டுப்பழகி இருக்கிறேன். எனவே கணக்கிலிருந்து நான் தப்பிக்கமுடியும் என்கிற கனவுகள் இருந்ததில்லை. அம்மாவை அப்படியானதொரு நம்பிக்கையில் வைத்திருக்க முடிகிறதே என்கிற சந்தோஷமும் எனக்கு இருந்தது. அம்மாவுக்கு எதிர்காலம் முக்கியம், தனக்காகவும் தன் பிள்ளைகளுக்காகவும் ஒவ்வொருநாளும் அதன் பொருட்டு ஏதாவது செய்தாகவேண்டும். அப்படிப்பட்ட காரியங்களில் இறங்குகையில், இனிச் செய்வதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் சோர்ந்திடாமல், புதிதாக ஒன்றைத் தொடங்குவாள், எதிர்காலம் என்பது நமது கைகளில் இருக்கிறதென்று நினைப்பவள். பிள்ளைகளும் தங்கள் பங்குக்குக் கடனே என்று, காலத்தை வீணாக்கக் கூடாது என்பதுபோல எதையோ செய்தார்கள். எனது இளைய சகோதரன் சென்றுவந்த அக்கவுண்டன்சி வகுப்புகள் நினைவுக்கு வருகின்றன. யூனிவர்செல் பள்ளியிலிருந்தே பிரச்சினைதான், ஒவ்வொரு வருடமும், தொடக்கநிலை அக்கவுண்டன்ஸி வகுப்பிலிருந்து, இறுதிநிலை அக்கவுண்டன்ஸிவரை அத்தனையையும் கற்றாகவேண்டும், என்பாள். மிஞ்சிப்போனால் மூன்று நாட்கள் அந்தக் கூத்துத் தொடரும். வேலை மாற்றல் வருகிறபோதெல்லாம், யூனிவர்செல் பள்ளிகளும் மாறும், புதியபள்ளியிலும் இதுதான் நிலைமை. பத்து ஆண்டுகள் அம்மாவால் பிடிவாதமாக இருக்க முடிந்தது. பலன் என்னவோ பூஜ்யம். கடைசியில், எனது இளைய சகோதரன் சைகோன் நகரிலேயே கணக்கெழுதும் பணியில் அமர்ந்ததுதான் சாதனை. வியோலே(1) மாதிரியான கல்லூரியைக் காலணி நாடுகளில் எதிர்பார்க்க முடியாத நிலையில், மூத்த சகோதரனை பிரான்சுக்கு அனுப்பிவைத்தோம். அவனும் அந்தப் பள்ளியில் சேர்ந்துவிடுவதென்று பாரீஸில் சில ஆண்டுகள் தங்கினான். எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை. அம்மாவுக்குத் தனது பெரியமகன் ஏமாற்றிவிட்டானே என்றகோபம். அம்மா அவன் உறவு கூடாது என்று நினைத்தாள். ஒரு சில ஆண்டுகள் அவனுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்தது. எங்களோடு அவன் இல்லாத சமயத்தில்தான் சொந்தமாக நிலமொன்று வாங்கினாள். மிக மோசமான அனுபவம் என்றாலும், இரவுநேரங்களில் பிள்ளைகளுக்காக வீதிகளில் அலைகிற கொலைகாரர்கள்? வேட்டைக்காரர்கள் போன்ற கதைகளைக் கேட்டிருந்த எங்களுக்கு அச்சம் அவ்வளவாக இல்லை.

சூரியனின் கடுமை, சிறுவயதில்தான் அதிகமாக உணரப்படும் என்று சொல்ல கேட்டதுண்டு. ஆனால் நான் அவற்றை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. வறுமை பிள்ளைகளை சிந்தனையாளர்களாக மாற்றக்கூடும் என்று கூறவும், கேட்டிருக்கிறேன். இதுவும் சரி அல்ல. பசிப்பிணி சிறியவர்களை முதியவர்கள்போல நடந்துகொள்ளவைக்கிறது என்பது உண்மையாகக்கூட இருக்கலாம். ஆனால் எங்கள் நிலைமை வேறு: சொல்லிக் கொள்ளும்படி எங்கள் வாழ்க்கை இல்லை என்பதும், சில வேளைகளில் வீட்டில் உள்ள தளவாடங்களை விற்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இருந்ததென்பதும் உண்மை. ஆனால் பசி நாங்கள் அறியாதது. ஐரோப்பிய பிள்ளைகள் நாங்கள், எங்கள் தோலின் நிறம் வெள்ளை. வீட்டு வேலைகளுக்கென்று உள்ளூர் பையன் ஒருவன் இருந்தான், நேரந்தவறாமல் சாப்பிட்டோம். என்ன சாப்பிட்டோம் என்று கேட்டுவிடாதீர்கள். சில நேரங்களில் இதுதான் என்றில்லை கொக்கு நாரை, சின்னச்சின்ன முதலைகள் என கிடைத்ததெல்லாம் உணவாயிற்று; இதில் நீங்கள் கவனத்திற்கொள்ளவேண்டியது, அவைகளை சமைப்பதற்காகவும், சமைத்தபின் பரிமாறவும் ஒரு வேலைக்காரப் பையனை வீட்டில் வைத்திருந்தது, பிறகு சில சமயங்களில் படாடோபத்துடன் சமைத்த உணவை வேண்டாமென்று சொல்ல முடிந்தது. எனது முகத்தில் ஏற்பட்ட இந்த மாற்றத்துக்கு பதினெட்டு வயதில் எனக்கேற்பட்ட சம்பவம் முக்கியம். அது இரவில் நடந்தது. என்னிடத்தில் எனக்கு அச்சம் இருந்தது. கடவுளுக்கும் பயந்தேன். பகலென்றால் பரவாயில்லை போலிருந்தது, இரவு அளவிற்குப் பயமில்லை. மரண பயமும் அப்படியே. என்னையே சுற்றிவந்தது. கொல்ல விரும்பினேன். அவன் என் மூத்தச் சகோதரன் அவனைத்தான் கொல்ல விரும்பினேன், ஒரே ஒரு முறை என் தரப்பில் உள்ள நியாயத்தை அவனுக்கு உணர்த்த முடிந்தால் போதும், அதன்பிறகு அவன் மரணிப்பதை நான் பார்க்க வேண்டும், அதுவன்றி. வேறு ஆசைகள் இல்லை. இதிலாவது அம்மாவை நான் முந்திக்கொள்ளவேண்டும், அதன் மூலம் அவளிடமிருந்து பிரியத்திற்கு உகந்த அவளது பொருளை -மகனைப் பிரித்து – அவன்மீது கொண்டிருந்த மோசமான பாசத்தினைத் தண்டிக்க வேண்டும், எனது சிறிய சகோதரனைக் காப்பாற்ற அதைச் செய்தாகவேண்டும். என் இளைய சகோதரன்; எனக்கு மகன்போல, அப்படித்தான் அவனை நடத்தினேன், பகலை மறைத்திருக்கும் இரவுபோல இளைய சகோதரனுடைய உயிர்வாழ்க்கையின் மீது, என் பெரிய சகோதரன் ஆக்ரமித்திருந்தான். அதற்கான சட்டத்தை வகுத்தவனும் அவன், சட்டமாக நடந்து கொண்டவனும் அவன். ஆறறிவு மனிதன், ஆனால் அவனுடைய விதிகள் விலங்குத்தனமானவை. அவ்விதி எனது இளைய சகோதரனுடைய ஒவ்வொரு நாளையும், அதன் ஒவ்வொரு தருணத்தையும் பயமுறுத்திக்கொண்டிருந்தது. அவ் அச்சம் பூதாகரமாக வளர்ந்து ஒருமுறை சகோதரனுடைய இதயத்தையும் தாக்கி அவன் மூச்சையும் நிறுத்தியது.

எனது குடும்பத்தைப் பற்றி நான் ஏற்கனவே எழுதினவள்தான். என் தாயும், சகோதரர்களும் உயிரோடு இருந்த காலம் அது. அவர்களை வலம் வந்தும் இருக்கிறேன், வாசல்வரை சென்றும் இருக்கிறேன் ஆனால் உள்ளே சென்றதில்லை.

எனக்கென்று வாழ்க்கை வரலாறு இல்லை. இருந்தால்தானே சொல்ல. மையம் என்ற ஒன்றை ஒருபோதும் கண்டதில்லை. வழியும் இல்லை, தடமும் இல்லை. எவரேனும் ஒருவர் இருக்கக்கூடும் என்று நம்பிக்கை ஊட்டுவதுபோல பெருவெளிகள். அது உண்மை அல்ல. அப்படி ஒருவரும் அங்கில்லை. எனது இளமைக்காலத்தின் மிகச்சிறியபகுதியை ஓரளவு ஏற்கனவே எழுதி இருக்கிறேன். இப்போது இதுவரை நான் சொல்லாதவற்றை, இளமைக்காலத்திய எனது உணர்வுகளைச் சொல்லப் போகிறேன். குறிப்பாக நதியொன்றினை கடக்கும்போது ஏற்பட்ட அனுபவங்கள். நான் சொல்ல இருக்கும் இக்கதையை ஏதோ ஏற்கனவே கேட்டதுபோலத் தோன்றலாம். ஆனால் இதுவேறு. முற்றிலும் மாறுபட்டது. முன்பு எனது நிர்மலமான இளமைக் காலத்தையும், ஒளியூட்டப்பட்ட சந்தோஷக் காட்சிகளையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தினேன், இப்போது எனது இளமை வாழ்க்கையின் நிழற்பகுதியையும், அதன் மர்மங்களையும் திறந்துகாட்டபோகிறேன், ஒருசில சம்பவங்கள் அடிப்படையில், ஒருசில உணர்வுகள் அடிப்படையில், சில உண்மைகள் அடிப்படையில் ரகசியமாக புதைக்கபட்டவை அவை. பிறந்துவளர்ந்த குடும்பச் சூழ்நிலை காரணமாக எனது எழுத்தில் சில நெறிகளை கடைபிடிக்க வேண்டியதாயிற்று. அதுவும் தவிர, எழுத்தென்பது அவர்களுக்கு நீதியைச் சொல்வது, ஒழுக்கங்களைப் பேசுவது. அந்த நிலைமை இனி இல்லை, எதையும் எழுதலாம், எதையும் எழுதலாமென்றால் செருக்கு, காற்று என்று எதையும் தொடலாம். எதையும் எழுதலாம் என்றால், இதுதான் சொல்லப்பட்டிருக்கிறது என்று திட்டவட்டமாக அறிவிக்க முடியாதபடி எதையும் எழுதலாம், விளம்பரம் தேடிக்கொள்ளலாம். ஆனால் பெரும்பாலான நேரங்களில் இம் மாதிரியான முடிவுகளிலிருந்தும் நான் மாறுபடுவதை உணருகிறேன். இப்போது எனது எழுத்துவெளிக்கு எல்லைகள் இல்லை, பிறர் அறியாமல் தன்னை ஒளிக்கவும், காரியம் ஆற்றவும், வாசிக்கப்படவும் அதற்கு இயலாது அதை மறைத்து வைக்கவென்று ரகசிய அறைகள் இல்லை, அதன் பாதகங்கள் குறித்து கவலைகொள்ள எவருமில்லை. இதுபோன்ற எண்ணங்கள் இதற்கு முன்பு எனக்குத் தோன்றவும் இல்லை.

எனது பதின்பருவத்துக் காலங்களான பதினெட்டும், பதினைந்தும் என் கண்முன்னே விரிகின்றன. தெரிகிற முகம் பின்னர் (அதாவது எனது நடுத்தர வயதில்) குடித்துச் சீரழியவிருந்த எனது முகத்தை ஓரளவு முன்கூட்டியே தெரிவிக்கும் முகம். கடவுளால் நிறைவேற்ற இயலாத பணியினை மது முடிக்க வேண்டியிருந்தது, என்னை கொல்லும் பணியையும் மதுவிடமே ஒப்படைக்கப் பட்டிருந்தது. ஆனால் நான் குறிப்பிடுகிற இந்த மதுவின் முகம் மதுவுக்கு முந்தைய முகம். பின்னர் எனக்கேற்பட்ட மதுப்பழக்கம் அதை உறுதிசெய்தது. இதற்கெல்லாம் எனது வாழ்க்கையில் இடம் ஒதுக்கியிருந்தேன், பிறரைபோலவே அவற்றின் அறிமுகம் எனக்குக் கிடைத்ததென்றாலும், முரண்பாடாக நான் பிஞ்சிலே பழுத்திருந்தேன். எனது வாழ்க்கையில் இச்சைகள் இடம் பிடித்ததும் அவ் வகையில்தான். கிளர்ச்சி இன்பம் என்றால் என்ன என்பதை அறியாமலேயே, பதினைந்து வயதில் கிளர்ச்சி இன்பத்துக்குறிய முகம் என்னிடத்தில் இருந்தது. அம்முகத்தை கடுமையாகத்தான் பிறர் கண்டார்கள். எனது தாயார் கூட அப்படித்தான் கண்டாள். எனது உடன்பிறந்த சகோதரர்களும் அவ்வாறே பார்த்தார்கள். ஆக எனது வாழ்க்கை, செய்முறைகளமாக – களைத்த, கால அளவில் முந்திக்கொண்ட கருவளையங்களிட்ட கண்கள் கொண்ட முகத்தின் ஊடாகத் தொடங்கியது.

பதினைந்து வயது ஆறுமாதங்கள். நதியொன்றில் பயணம் செய்த நேரம். சைகோனுக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறேன், இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால் பேருந்து ஒன்றில் நதியைக் கடந்து செல்லும் நேரம். அன்றைய தினம் காலை எனது தாய் பணிபுரிகிற மகளிர் பள்ளி இருக்கிற சாடெக் என்ற ஊரில் பேருந்தில் ஏறினேன். பள்ளிகளுக்கான விடுமுறைக்காலம் எனபது மட்டும் நினைவில் இருக்கிறது. ஆனால் எந்த விடுமுறையின்போது என்பது நினைவில் இல்லை. சைகோனில் அரசுப் பணியில் இருப்பவர்களுக்கென்று வீடுகளை ஒதுக்கி இருந்தார்கள். அதிலொரு சிறிய இருப்பிடம் எனது தாய்க்கும் கிடைத்திருந்தது. எனவே விடுமுறைக்கு அங்கே சென்று கழிப்பதென்று முடிவுசெய்திருந்தேன். உள்ளூர் வாசிகளுக்கான அந்தப் பேருந்து, சாதக் நகரத்தில் சந்தைகூடும் இடத்திலிருந்து புறப்பட்டது. முன்னதாக எப்போதும்போல அம்மா சந்தைவரை உடன் வந்து, பேருந்து ஓட்டுனரிடம் என்னை பத்திரமாக ஒப்படைத்துவிட்டுச் சென்றாள். சாலை விபத்து, தீ விபத்து, வன்புணர்ச்சி, எதிர்பாராமல் குறுக்கிடும் கொள்ளையர் கும்பல், நதியைக்கடக்கும் படகுக்கு ஏற்படுகிற ஆபத்தான கோளாறுகள் என அவள் அச்சங்கொள்ள காரணங்கள் இருந்ததால் பேருந்து ஓட்டுனரின் பொறுப்பில் என்னை விட்டுவிட்டுச் செல்வாள். வழக்கம்போல ஓட்டுனரும் வாகனத்தின் முன் இருக்கையில், அவர் அருகிலேயே இருக்கை ஒதுக்கித் தந்தார்.

ஆற்றைக் கடக்கிறபோதுதான் காட்சி பெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். தவிர அக்காட்சி முழுமையாகப் பிடுங்கப்பட்டிருக்கவேண்டும் அங்கேயே இருந்திருக்கவேண்டும். மற்றுமொரு சந்தர்ப்பத்தில் பிரிதொரு காட்சியை எடுக்கக்கூடிய வகையில் அதை நிழற்படமாக எடுத்திருக்கவேண்டும். அப்படி ஏதும் நடைபெறவில்லை. அக்காட்சி மென்மையானது அப்படியானச் சம்பவத்தை எதிர்க்கும் துணிச்சல் அதற்கில்லை. இப்படியெல்லாம் ஆகுமென்று யாருக்குத் தெரியும்? எனது வாழ்க்கையில் அக்காட்சிக்கான முக்கியத்துவம் முன்னதாக உணரப்பட்டிருந்தால் ஒருவேளை அவ்வாறு செய்திருக்கலாம். அச்சம்பவ நிகழ்வின்போது அக்காட்சியின் இருப்பையே ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லையோ என்னவோ? உண்மை என்னவென்று கடவுளுக்கு மட்டுமே தெரியும். ஆகையால்தான், வேறுவகையாக உருவகிக்க முடியாத அக்காட்சி, இல்லை என்றாகிறது. விடுபட்டுவிட்டது. மறக்கப்பட்டிருக்கிறது. அக்காட்சி, பிரித்தெடுத்தது இல்லை. பிடுங்கப்பட்டது. எதைச் செய்யவேண்டுமோ அதைச் செய்யாததற்கு, அதன் பண்பை அல்லது தனித்தன்மைக் காரணமென்று சொல்லலாம், ஏன் அனைத்திற்கும் மூலப்பொருளாய் இருப்பதுகூட காரணமாக இருக்கலாம்.

ஆக மீகாங் நதியின் ஒருகரையிலிருந்து மற்றொரு கரைக்குப் படகில் பயணம் செய்கிறேன். அதாவது ‘வின்லோங்'(Vinhkong)கிற்கும் ‘சாடெக்'(Sadec)கிற்குமான பயணம். சுற்றிலும் ‘கொஷன்ஷின்’ன்னுடைய தென்பகுதி, பறவைகளும், சேரும், நெல்வயல்களுமாக கண்ணுக்கெட்டியவரை விரிந்திருக்கிறது.

நான் பேருந்துலிருந்து இறங்கிக்கொள்கிறேன். படகின் ஓரமாகச்சென்று பிடிமானத்தில் சாய்ந்தபடி நதியைப் பார்க்கிறேன். அம்மா பலமுறை அதைக் கூடாது என்றிருக்கிறாள். எனது வாழ்க்கையில், அதன் பிறகு ஒருபோதும் அவ்வளவு வனப்புடனும் அத்தனை பெரிய, ஆவேசங்கொண்ட நதியை பார்க்க நேர்ந்தது இல்லை. மீகாங் நதி அதன் நீண்ட கைகளுடன், சமுத்திரத்தை நோக்கிப் பாய்கிறது, நதியின் நீர்ப்பரப்பினை சமுத்திரப் பள்ளம் வாங்கிக்கொள்ள இருக்கிறது. நீர்வெளியைப் பார்த்துக்கொண்டிருக்க பார்வையின் விளிம்பில் நதியின் வேகம் கூடி, ஏதோ பூமி தாழ்ந்திருப்பதுபோல வெள்ளம் பாய்வதும் விழுவதும் தெரிகிறது. எப்போது படகில் போனாலும் பேருந்துவிலிருந்து இறங்கிக் கொள்வேன். இரவென்றாலும் அப்படித்தான். ஏனெனில் எனக்கு அச்சம், எங்கே படகின் இரும்புக் கயிறுகள் அறுபட்டு கடலில் இழுத்துச் செல்லப்படுவோமோ என்ற அச்சம். பயங்கரமாய் சுழித்துக்கொண்டுப் பாயும் வெள்ளத்தில், எனது வாழ்வின் இறுதி நிமிடங்களைப் பார்ப்பதைப்போல உணருகிறேன். நீரோட்டம் மிகவும் திறன்வாய்ந்ததாக இருக்கிறது. அனைத்தையும் அடித்துச் செல்லலாம்: கற்கள், தேவாலயம், ஏன் நகரங்கூட அதனிடமிருந்து தப்பமுடியாது போலிருக்கிறது. நதி நீருக்க்கடியில் புயல் வீசுகிறதென்று நினக்கிறேன். காற்றும் ஏதோ பிரச்சினைபண்ணிக்கொண்டிருக்கிறது.

இயற்கைப் பட்டினால் நெய்யப்பட்ட கவுன் ஒன்று அணிந்திருக்கிறேன். மிகவும் பழையது. தெளிவாகக் காட்டக்கூடியதாக இருக்கிறது. ஏற்கனவே அம்மா உடுத்திய கவுன், அணிந்தால் பளிச்சென்று உடல் தெரிகிறதென்று நினைத்த நாள்முதல் அவள் அணிவதில்லை, என்னிடம் கொடுத்துவிட்டாள். அது ஒரு கைகளற்ற கவுன். கழுத்து மிகவும் இறங்கி இருக்கிறது. வருடக்கணக்கில் பட்டினை உபயோகிக்க ஒரு நிறம் வருமே அவ்வாறான நிறத்திற்கு வந்திருந்தது. அந்த கவுனை என்னால் நன்கு நினவுபடுத்த முடியும். எனக்கு நன்றாக இருந்தது. அதற்குப் பொருத்தமாக இடுப்பில் தோற் பட்டையொன்றை அணிந்திருந்தேன். அந்த வருடத்தில் அணிந்த ஷ¥க்கள் பற்றிய நினைவுகள் எனக்கு இல்லை, ஆனால் அணிந்த சில கவுன்கள் குறித்த ஞாபகம் இருக்கிறது. பெரும்பாலான நாட்களில் வெற்றுக் கால்களில் சப்பாத்து அணிந்திருப்பேன். அதாவது சைகோன் நகரில் நடுநிலை வகுப்புகளில் இருந்தக் காலத்தைப்பற்றி சொல்கிறேன். ஆனால் அதன் பிறகு எப்போதும் ஷ¥க்கள் அணிந்திருக்கிறேன். அன்றைக்கு என்னிடம் இருந்த பிரசித்தி பெற்ற, குதி உயர்ந்த லாமே ஓர்(Lame or), காலணிகளை அணிந்திருக்கவேண்டும். அதைத் தவிர அன்றைக்கு வேறு எதையும் அணிந்திருக்க சாத்தியமில்லை, எனவே அவற்றை அணிந்திருக்கிறேன். பள்ளிக்கு மாலை நிகழ்ச்சிகளில் அணியக்கூடிய சிறுசிறு அலங்காரங்களைக் கொண்ட காலணிகளை அணிந்து போகிறேன். எனது விருப்பம். என்னால் அந்த ஜோடி காலணிகளை மட்டுமே சகித்துக்க்கொள்ள முடியும், இன்றைக்கும் எனக்கு அவைதான் வேண்டும். குதி உயர்ந்த காலணிகளைப் போடத்தொடங்கியது எனது வாழ்வில் அதுவே முதன் முறை. அவை மிக அழகாக இருக்கின்றன, இதுவரை ஓடவும், விளையாடவும், தட்டையாகவும், நாடாகொண்டும் எனது உபயோகித்திலிருந்த மற்ற காலணிகளை அவை தகுதி இழக்கச்செய்திருக்கின்றன.

ஆனால் அன்றையதினம் வேறொருப் பொருள் அப்பெண்ணை பிறர் வியந்துபார்க்கவும், அதிசயிக்கவும் காரணமாக இருந்தது, அது செம்மரம் நிறத்தில், கறுப்புப் பட்டையுடன் மடியக்கூடியதாகவும், தட்டையான ஓரத்துடனும் தலையில் அணிந்திருந்த அவளது தொப்பி. அன்றி நீங்கள் நினைப்பதுபோல, அவள் அணிந்திருந்த ஷ¥ அல்ல. ஆக அவளிடத்தில் முரண்பட்டத் தோற்றத்தை ஏற்படுத்திய பெருமைக்குக் காரணமாகத் தொப்பி இருந்தது.

என்னிடத்தில் அத்தொப்பி எப்படி வந்திருக்கும்?

அத்தியாயம்-2

அத் தொப்பி எப்படி என்னிடத்தில் வந்தது? நினைவில்லை. யார் எனக்குக் கொடுத்திருக்கக்கூடுமென எண்ணிப்பார்க்கவும் அரிதாக இருந்தது. அநேகமாக, நான் கேட்டு, அம்மா வாங்கிக்கொடுத்திருக்கக் கூடும். விலைகுறைத்து போட்டிருந்த நேரத்தில், அதையும் பேரம்பேசி வாங்கி இருப்போம் என்பது மட்டும் உறுதி. வாங்கியதற்கான காரணமென்று எதைச் சொல்ல? ஆண்களுக்கான தொப்பியொன்றை அணிந்த, வேறொரு சிறுமியையோ, பெண்மணியையோ அக் காலனி நாட்டில் அந்த நேரத்தில் நான் கண்டதில்லை. அவ்வளவு ஏன், உள்ளூர்ப் பெண்களில்கூட ஒருத்தியும் என்னப்போல ஆண்களுக்கான தொப்பியை அணிந்து பார்த்ததில்லை. என்ன நட,ந்திருக்கும்? தொப்பியைக் கடையிற் கண்டதும், எடுத்து வேடிக்கையாக தலையிலணிந்து, கடையிலிருந்த கண்ணாடியிற் பார்த்திருப்பேன். அத்தொப்பி சிறு வயதில் மெலிந்திருந்த எனது உடற் குறையை மறைக்க உதவியிருக்கக்கூடும், நான் வேறொருத்தியாக தெரிந்திருப்பேன். பிறந்ததிலிருந்து கொண்டிருந்த அருவருப்புத் தோற்றமும், சகிக்கவியலாத கோலமும் முடிவுக்குக் வந்திருக்கும். இப்போதைய நிலைமைக்கு நேரெதிரான காரணம். அது மனதின் தேர்வு. இதைத்தான் மற்றவர்கள் என்னிடத்தில் எதிர்பார்க்கின்றனர். திடீரென்று வேறொருத்தியாக, பிறர் பார்வைக்கு வேறொருத்தியாக, பொது இடத்தில், பிறரருக்கென்று என்னை அர்ப்பணித்தவளாக, பிறர் காட்சிப்பொருளாக – எங்கெல்லாம் முடியுமோ அங்கு, அதாவது நகரத்தில் வலம் வருகிறபோதும், சாலைகளில் பயணிக்கிறபோதும், அவரவர் இச்சைக்கு ஈடுகொடுத்து நடந்துகொள்கிறேன். ஆக அணிந்த தொப்பியை எடுப்பதில்லை. அல்லும் பகலும் என்னுடன்தான் இருக்கிறது, பிரிவதில்லை. என் வாழ்வே தொப்பி என்பதுபோல, அதைவிட்டு விலகாமல் இருக்கிறேன். நான் அணிந்திருக்கும் இக் காலணிகளையும் அப்படித்தான், பிரிவதில்லை, ஆனாலும் தொப்பியோடு ஒப்பிடுகிறபோது, அவை இரண்டாம் பட்சம்- தவிர்க்கக்கூடியவை. காலணிகள் தொப்பிக்கு உதவுகின்றன, அதாவது தொப்பி எனது நோஞ்சான் உடலின் குறையை மறைக்க உதவியதைப்போல, எனவே இரண்டுமே எனக்குத் தேவலாம் போலிருந்தன. தொப்பி இல்லாமற் வெளியிற் செல்வதில்லை, அத்தனை நிகழ்ச்சிகளுக்கும் இந்தக் காலணிகளையும், தொப்பியையும் அணிந்து செல்கிறேன், நகரத்தின் இதயப்பகுதிக்குச் செல்லும்போதுகூட.

என் மகனுடைய இருபது வயது நிழற்படத்தைத் திரும்பவும் பார்ப்பதுபோல உணருகிறேன். அவன் கலிபோர்னியாவில் தனது பெண் நண்பர்கள் ‘எரிக்கா’ மற்றும் ‘எலிசபெத் லென்னார்’ உடன் இருக்கிறான். அவனுக்கும் மெலிந்தத் தோற்றம், அவனது ஒல்லியான உடல்வாகைப்பார்த்து, உகாண்டா நாட்டிலிருந்து வந்த வெள்ளைக்காரனோ என்று பிறர் வியக்கக் கூடும். அடுத்தவரை கேலிசெய்வதுபோன்ற விவஸ்தையற்ற ஒரு சிரிப்பை அவனிடத்தில் காணலாம். ஊற்சுற்றும் இளைஞனொருவனைப் போல பார்க்க தப்பாகத் தெரிவான். ஈர்க்குச்சிமாதிரியான தனது மோசமானத் தோற்றத்தினைக் காண அவனுக்கு மகிழ்ச்சி. உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பெண்ணும் கிட்டத்தட்ட அவனைபோலவே இருந்தாளென்று சொல்ல வேண்டும்.

கறுப்புநிறத்திலானா நாடா சுற்றப்பட்டு தட்டையான விளிம்புடனிருந்த அத் தொப்பியை வாங்கியவள் வேறொரு நிழற்படத்திற் இருக்கிறவள் – எனது அம்மா. சமீபத்தில் அவள் எடுத்துக்கொண்ட நிழற்படங்களைக் காட்டிலும் நான் கண்ட நிழற்படத்தில் மிகச்சுலபமாக என்னால் அவளை அடையாளப்படுத்த முடிகிறது. ஹனாய் நகரில் சிற்றேரிப் பகுதியிலிருந்த வீடொன்றின் கூடம் – எல்லோரும் ஒன்றாக வசித்த காலம், எல்லோருமென்று சொன்னால் அவளும் அவளுடைய பிள்ளைகளும், அதவது நாங்கள்- ஒன்றாக வாழ்ந்து வந்த வீட்டின் கூடம்- எனக்கு நான்கு வயது, நடுவில் அம்மா. முகத்தை ‘உம்’மென்று வைத்துக்கொண்டு, சீக்கிரம் படத்தை எடுத்துத் தொலையுங்களேன் என்பதுபோல எங்கள் மத்தியில் அவள் இருந்தவிதம், இன்றைக்கும் அவளை படத்தில் அடையாளப்படுத்த உதவுகிறது. முகத்திற் பார்க்கிற சுருக்கங்கள், ஏனோதானோவென்று அவள் உடுத்தியிருந்த விதம், கண்களிற் தெரிந்த சோர்வு ஆகியவற்றிற்கு காய்ந்த வெயிலும், அதனால் அவளுக்கேற்பட்ட அசதியும், உற்ற எரிச்சலும் காரணங்கள். பிறகு நாங்கள் அதாவது சாபக்கேடான வாழ்க்கையை உற்ற அவளுடைய பிள்ளைகள், நிழற்படத்தில் அணிந்திருக்கும் விதத்தினைவைத்து, எங்கள் தோற்றத்தினை வைத்து, அந்த வயதில் எங்களைச் சீராட்டவும், நன்கு உடுத்தவும் அவளுக்கு இயலாமற்போனதையும், சிலவேளைகளில் நாங்கள் பட்டினிகிடக்க நேரிட்டதையும் உணரமுடிகிறது. இனி படுவதற்கு ஒன்றுமில்லை என்ற நிலைமையில், ஒவ்வொரு நாளையும் அம்மா சிரமத்துடன் கடந்த காலம். சிலசமயங்களில் தொடர்ந்து எங்களை நாட்கணக்கில் வாட்டி இருக்கிறது. சில வேளைகளில் முதல் நாள் இரவோடு முடிந்திருக்கிறது. எப்போதாவது அடிக்கின்ற சந்தோஷக் காற்றினால்கூட முற்றிலும் விலக்க முடியாத துயரசுமைகளோடு, முழுக்க முழுக்க விரக்தியின் விளிம்பிலிருந்த தாயொருத்தியை அந்த நேரம் பெற்றிருந்தேன். ஏதேனும் ஒன்றுமாற்றி ஒன்று எங்கள்வீட்டில் சிக்கல்கள் தொடர்ந்திருந்ததால், எந்த ஒன்றையும் குறிப்பிட்டுச் சொல்ல எனக்கு இயலாது. நிழற்படத்தில் தெரிகிற வீடு, எனது மூத்த சகோதரன் பாரீஸில் இருந்த காலத்தில் அம்மா நிலமொன்று வாங்கியதாகக் குறிப்பிட்டு இருந்தேனில்லையா, அதில் கட்டியிருந்த வீடு, வழக்கமாக அம்மா செய்த தவறுகளில் ஒன்று அந்த நிலத்தையும் வீட்டையும் வாங்கியது. ஒரு சில மாதங்களில் அப்பா மரணிக்க இருக்கிறார் என்ற நிலையில் அவ்வீட்டினை வாங்க வேண்டிய எந்த அவசியமும் அவளுக்கு இல்லை. ஒருவேளை அதற்காகத்தான் வாங்கினாளோ என்னவோ? அல்லது அவ் வீட்டை வாங்கியற்குக் காரணம், எந்த நோய் காரணமாக அப்பா பலியாக இருந்தாரோ அந்நோய் தன்னிடத்திலும் பரவியிருக்கிறது என்ற உண்மையை அறியவந்ததாலா? எது எப்படியோ ஆனால் சம்பவங்கள் ஒத்து போகின்றன. அவ்வாறான உண்மைகள் வெளிப்படையாக தம்மை அவளிடத்தில் அடையாளப்படுத்திக்கொண்டிருப்பது நிழற்படத்தில் தெரிகிறது, எனினும் அவற்றை அறிந்தவளாக அம்மா காட்டிக்கொள்வதில்லை. நானும் அவளைப்போலவே அவைகளுக்குப் பழகி இருந்தேன். நிழற்படம் எடுத்த தினத்துக்கான அவளது கவலை எதுவோ? முன்னதாகவே தனது வரவை அடையாளப்படுத்திக்கொண்ட, அல்லது எந்த நேரமும் நிகழலாம் என்றிருந்த அப்பாவின் மரணமா? கேள்விக்கு உட்படுத்தி இருந்த அவர்களது திருமண பந்தமா? அவளது கணவனா? பிள்ளைகளாகிய நாங்களா? அல்லது இவை அனைத்துமேகூட காரணமாக இருக்கலாமா?

ஒவ்வொரு நாளும் அப்படித்தான் இருந்தது. பிரச்சினைகளில்லாத நாட்களே இல்லையென்று உறுதியாகச் சொல்ல முடியும். நித்தமும் வீட்டில் ரகளைதான். ஒவ்வொரு கணமும் விரக்தியின் விளிம்பினை நோக்கித் தள்ளப்பட்டோம். இருந்தும் தொடர்ச்சியாய் அனைத்தும் நடந்தது, அதாவது இனி செய்ய ஒன்றும் இல்லை என்பது மாதிரியான நெருக்கடி, உறக்கம், சில நாட்கள் எதிலும் நாட்டமின்றி முடங்கிக் கிடப்பது, மாறாக சில நாட்களில் சொந்தமாக வீடுகள் வாங்குதல், அவற்றில் குடியேறுதல், நிழற்படம் எடுத்துக்கொண்ட சந்தோஷ நொடிகளும் அவற்றில் சேர்த்தி, அச் சந்தோஷநொடிகள் நிழற்படம் எடுத்துக்கொண்டதற்கு மட்டுமே சொந்தமானது, மனச்சோர்வு, சில நேரங்களில் காணிக்கை பெறவும், யாசிப்பவர்க்குப் பரிசில்கள் அளிக்கவும் முடிந்த மகாராணிபோல அம்மா நடந்துகொண்டவிதம்- சிற்றேரிக் கரையில் வாங்கப்பட்ட வீடும் அப்படியானதுதான். அதை வாங்க நேர்ந்ததற்குக் குறிப்பிடுபடியான காரணங்களில்லை, தவிர அப்பா இறக்கும்தறுவாயில் இருந்தார், பிறகு தட்டையான விளிம்பினைக் கொண்ட தொப்பியை வாங்க நேர்ந்ததும் அந்த வகையில்தான், சிறுமி ஒருத்தி அதை விரும்பினாள் என்பதைத் தவிர, சொல்வதற்கு வேறு காரணங்களில்லை. ‘லாமே ஓர்’ காலணியும் அப்படி வாங்கப்பட்டதே. பிறகு… சில நேரங்களில் இல்லை.. எதுவும் இல்லை, அப்படியான நேரங்களில் இருக்கவே இருக்கிறது உறக்கமும், மரணமும்.

பின்னிய சடைகள் முன்புறம் விழுந்திருக்க, தட்டையான ஓரங்களைக் கொண்ட தொப்பிகளை தலையில் அணிந்து செவ்விந்திய பெண்கள் நடித்த திரைப்படங்களை என் வாழ்நாளில் இதுவரை பார்த்ததில்லை. பொதுவாகப் பின்னலிட்டச் சடைகளை மடித்துக் கட்டுவது என் வழக்கம், ஆனால் அன்றைய தினம் நான் பார்த்திராத திரைப்படங்களில் வருகிற பெண்களைப்போல அவற்றை முன்புறம் போட்டிருந்தேன், இரண்டு பெரிய சடைகளும், பெரியவர்களுடையதைப்போல அல்லாமல் இளம்பெண்ணொருத்திக்கு உரியதாக இரண்டுமிருந்தன. தொப்பியை என்றைக்கு வாங்கினேனோ அன்றிலிருந்து சடைகளை மடித்துக் கட்டுவதில்லை. சில நாட்களாக, எனது மயிரைப் பின்னுக்குத் தள்ளி படிய சீவுவது வழக்கம். தலைமுடி தூக்கல் இல்லாமல் பாந்தமாக தலையில் படிந்து அடுத்தவர் கண்களுக்கு உறுத்தாமல் இருக்கும்படி பார்த்துக்கொண்டேன். ஒவ்வொரு இரவும் அம்மா எனக்கு சொல்லிக்கொடுத்தபடி, தலையை வாரி, பின்னலை மடித்துக் கட்டிக்கொண்டே பிறகே உறங்கச் செல்வது வழக்கம். நெளிநெளியாய், அடர்த்தியாகவும், பாரத்துடனும் இருந்த எனது தலைமயிர் இடுப்புவரை நீண்டிருந்தது. பார்த்தவர்கள் அத்தனைபேரும் எனது கூந்தல் எவ்வளவு அழகு! எனப் புகழ்ந்தார்கள். தலைமுடியைத் தவிர அழகென்று சொல்ல என்னிடத்தில் வேறு எதுவும் இல்லை என்பதாக அதனைப் புரிந்துகொண்டேன். அத்தனை பாராட்டுதலுக்கும் உரிய அந்தக் கூந்தலை எனது இருபத்து மூன்றாம் வாயதில் அதாவது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அம்மாவைப் பிரிந்திருந்தபோது, பாரீஸ் நகரில், முடி திருத்தும் நிலையமொன்றில் வெட்டச் சொல்லிவிட்டேன். நான் ‘வெட்டுங்கள்’ என்றேன். அவன் வெட்டினான். கண்சிமிட்டும் நேரம், தலைபாரத்தினை குறைக்க முனைந்ததுபோல கத்தரிக்கோல் செயல்பட்டு கழுத்தை உரச, தரையில் விழுந்தது. வீட்டிற்கு எடுத்துசெல்ல விரும்பினால், பொட்டலம் கட்டித்தருவதாகச் சொன்னார்கள். வேண்டாமென்று சொன்னேன். அச்சம்பவத்திற்குப் பிறகு ஒருவரும் எனது தலைமயிரைப்பற்றி பேசுவதில்லை, அதாவது நீண்ட தலைமயிர் இருக்கையில்-வெட்டப்படுவதற்கு முன்னால் என்னபொருளில் அதைக்குறிப்பிட்டுப் பேசினார்களோ அது இல்லை என்றாகிவிட்டது. அதன்பிறகு எனது பார்வையையும், சிரிப்பினையும் புகழ்ந்தார்கள். எனக்கும் அது பரவாயில்லை போலிருந்தது.

படகில் அன்றையதினம் எனக்கு பதினைந்தரை வயது. ஆக எனது பின்னிய நீளமான சடைகளிரண்டும் வெட்டப்படாமல் இருந்தகாலம். அப்போதே ஒப்பனை செய்யப் பழகி இருக்கிறேன். கன்னத்தின் மேற்பகுதியிலும், கண்களுக்கு கீழேயும் தெரிந்த சிவப்புப்புள்ளிகளை மறைக்க தொக்கலோன் (Tokalon) முகப் பூச்சு இட்டிருக்கிறேன். அதற்குமேலாக எனது தோலின் நிறத்திற்குத் தோதாக ஊபிகான் (Houbigan) மாவுப் போட்டிருக்கிறேன். இந்த மாவு எனது அம்மாவுடையது. அவளது அலுவலக நிர்வாகம் ஏற்பாடு செய்யும் விழாக்களுக்குச் செல்கிறபோதெல்லாம் இந்த மாவினைத்தான் முகத்திற்குப் போட்டுக்கொண்டு அவள் செல்வாள். அன்றைய தினம், இருண்ட சிவப்பில், செரீஸ் பழத்தின் நிறத்தினையொத்து உதட்டுச் சாயம் பூசிக்கொண்டிருக்கிறேன். எவரிடத்திலிருந்து அதைக் கேட்டுவாங்கினேன் என்று ஞாபகமில்லை, ஒருவேளை ஹெலென் லாகொனெல், தனது தாயாரிடமிருந்து திருடிக் கொடுத்திருப்பாளா? நினைவில்லை. வாசனை திரவியமென்று என்னிடத்தில் எதுவுமில்லை. கொலோன் தண்ணியும், பாமாலிவ் சோப்புகட்டியும் அன்றி அம்மாவிடத்தில் வேறு பொருட்கள் இல்லை.

படகில், எங்கள் பேருந்துக்கு அருகில், முக்கியஸ்தர்களுக்கே உரிய ஒரு சொகுசு மோட்டார் வாகனம், அதன் வாகனஓட்டி வெள்ளை சீருடையில் இருந்தான். எனது புத்தகங்களில் இடம்பெறுகிற அதே பெரிய வாகனம்-துயரச் சின்னம்- புகழ்பெற்ற மோரீஸ்-லெயோன்-போல்லே மாடல். கல்கத்தாவில் உள்ள பிரெஞ்சு தூதரகத்திற்குச் சொந்தமான கறுப்பு நிற லான்சியா ரகக் கார்கள், இலக்கிய எழுத்துக்களில் அறிமுகமாகாமல் இருந்த நேரம்.

வாகன ஓட்டிகளுக்கும், அவர்கள் எஜமானர்களையும் பிரிப்பதுபோன்று தள்ளக்கூடிய கண்ணாடிக்கதவுகள். பயணிகள் தலையை இருத்திக்கொள்ளவும், அவற்றின் உயரத்தைக் கூட்டவும் குறைக்கவும் வசதி செய்யப்பட்டிருந்த இருக்கைகள். வீட்டிலுள்ள அறைமாதிரி வாகனம் அத்தனைப் பெரிதாக இருக்கிறது. வாகனத்திற்குள் மிடுக்கான தோற்றத்துடன் அமர்த்திருக்கும் மனிதனின் கவனம் என்மீது இருக்கிறது. ஐரோப்பியர்களைப்போல உடுத்தி இருந்தபோதிலும், அவன் ஐரோப்பியன் அல்லன், சைகோன் நாட்டு வங்கியாளர்கள் உடுத்தும் வெளிர் நிற இந்தியப் பட்டில் ‘சூட்’ அணிந்திருக்கிறான். என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். இப்படியான பார்வைகள் எனக்குப் பழகி இருந்தன. காலணி நாடுகளில் ஐரோப்பியப் பெண்களைப் பேதமின்றி அனைவரும் பார்க்கிறார்கள், அவ்வாறு அவதானிக்கப்படுபவர்களில் பன்னிரண்டுவயது நிறைந்திருக்கும் இளம் ஐரோப்பிய சிறுமிகளும் அடக்கம். கடந்த மூன்று ஆண்டுகளாக, வீதிகளில் நான் போகிறபோதெல்லாம் வெள்ளையர் கண்களும் என் மீது மொய்ப்பதைக் கவனித்து இருக்கிறேன், அம்மாவுடைய ஆண் நண்பர்கள் தங்கள் மனைவிமார்கள், ‘மனமகிழ் மன்றத்தில்’ டென்னிஸ் விளையாட சென்றிருக்கும் நேரமாகப் பார்த்து, தங்கள் வீட்டில், ஏதேனும் உண்டுவிட்டு போகலாமே என்று அன்பாக அழைக்கிறார்கள்.

எனது அழகும் பிறபெண்களின் அழகிற்கு அதாவது பிறரை வசீகரிக்க முடிந்த பெண்களுக்கு எந்தவிதத்திலும் குறைந்ததல்ல என்றுதான் நினைக்கிறேன், ஏனெனில் நிறையபேர் என்னைத் திரும்பிப்பார்க்கிறார்கள். எனது கணிப்பு தவறாகக் கூட இருக்கலாம். ஏனெனில், அழகு மாத்திரம் அதற்குப் பொறுப்பல்ல, வேறு எதோவொன்றும் இருக்கவேண்டும், உதாரணத்திற்கு நாம் நடந்துகொள்ளும்விதம். பிறர் பார்வைக்கு உகந்தவளாக என்னை மாற்றிக்கொள்கிறேன். பிறர் அழகியென்று என்னை நினைத்தால் நான் அழகிதான், மறுக்கவா முடியும், அதுபோலவே எனது குடும்பத்திற்கு(குடும்பத்தினருக்கு மட்டும்) நான் மிகவும் விருப்பமானவள்-வசீகரி. யார் எப்படி என்னை வேண்டுகிறார்களோ அப்படி என்னை வைத்துக்கொள்கிறேன், அதை நம்பவும் செய்கிறேன். அத்துடன் நானொரு வசீகரி என்ற நினைப்பும் சேர்ந்துகொள்கிறது. இவை அனைத்தையும் நம்புகிறபோதெல்லாம், அது உண்மை யாகவும் இருக்கிறது. எனவே என்னை ஒருவர் விருப்பத்தோடு பார்க்கிறபோது அவ்விருப்பத்திற்கு உகந்தவளாக நடந்துகொள்கிறேன் என்பதையும் உணருகிறேன். எனது சகோதரனை கொல்லவேண்டும் என்ற வெறித்தனத்தில் இருந்தபோதும், மனமறிந்து பிறரை மயக்கும் கலையில் தேர்ந்தவளாக இருக்கிறேன். இங்கே மரணம் என்ற சொல்லை உச்சரிக்கிறபோது ஒருவகையில் அம்மா ஒருத்திக்கு மாத்திரம் அதனோடு தொடர்பு இருக்கிறது, ஆனால் ‘விருப்பத்திற்கு உகந்த’ – ‘வசீகரமான’ என்ற சொல்லுக்கு எங்கள் வீட்டில் நான் உட்பட, பிள்ளைகள் அனைவருக்கும் அதில் பங்குண்டு.

இதுகுறித்த எச்சரிக்கையை எனது மனம் உணர்த்தி இருக்கிறது. பெண்ணொருத்திக்கு அழகென்பது, அவள் உடுத்துகிற ஆடைகள்மூலமோ, உபயோகிக்கிற அழகு சாதனங்களோ, களிம்புகளுக்குக் கொடுக்கப்படும் விலையோ, பிறரிடம் இல்லாதவற்றை பெற்றிருப்பதாலோ, அலங்காரப் பொருட்களாலோ கிடைப்பதில்லை. இவைகள் அனைத்துக்கும் மேலானதாக ஏதோவொன்று இருக்கிறது. எது? எங்கே? என்பதை நான் அறியேன். ஆனால் பெரும்பாலான பெண்கள் நம்பிக்கொண்டிருக்கிற இடத்தில்மட்டும் அது இல்லையென்று திட்டவட்டமாகச் சொல்லமுடியும். சைகோனில் உள்ள சுகாதார நிலையங்களிலும், வீதியிலும் பெண்களைப் பார்க்கிறேன். அவர்களில் பலர் மிக அழகாக இருக்கிறார்கள், மிகச் சிவப்பாக இருக்கிறார்கள், இங்கே தங்கள் அழகை அதீதக் கவனமெடுத்து பராமரிக்கிறார்கள், அவர்களில் சுகாதார நிலையங்களில் பணிபுரிகிற பெண்களைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அவர்களுக்கு அழகைப் பராமரிப்பதைத் தவிர வேறுவேலைகள் இருப்பதாகத் தோன்றவில்லை. அழகை அவர்கள் கட்டிக்காப்பதன் நோக்கம் அவர்களது காதலர்களுக்காக, இத்தாலியில் கழிக்க இருக்கும் விடுமுறைக்காக, ஐரோப்பிய பயணத்திற்காக, மூன்று ஆண்டுகளுக்கொருமுறை கிடைக்கும் ஆறுமாத நீண்ட விடுமுறையின்போது, விநோதமான இக் காலனி நாட்டுத் தகவல்களை, அதாவது இங்கே இவர்கள் ஆற்றும் பணிகள் குறித்து, அவரவர் வீட்டுப் வேலைக்காரர்கள் குறித்து, பணியில் அவர்களிடமுள்ள ஒழுங்கு குறித்து, உள்ளூர் தாவரங்கள் குறித்து, கலந்துகொண்ட ஆட்டபாட்டங்கள் குறித்து, வெள்ளை மனிதர்களின் மாளிகைபோன்ற வீடுகள் குறித்து, அங்கே தங்கி வெகு தூரங்களில் பணியாற்றுகிற அரசு அலுவலகர்கள் குறித்து, பேசுவதற்காக அன்றி வேறுகாரணங்கள் இல்லையென நினைக்கிறேன். காரணங்களின்றி இப்பெண்கள் உடுத்துவதும், மாளிகை போன்ற அவர்களது வீடுகளில், இருட்டில் தங்களை ஒளித்தபடி, பார்ப்பதும், காத்திருப்பதும் உண்டு. இலக்கிய புதினங்களில் வாழ்கிறோம் என்ற நினைப்பு இவர்களுக்கு, நாட் கனக்கில் காத்திருக்கவென்றே விசாலமான ஒரு பெரிய அறை, அலமாரிகளில் உபயோகித்திராத ஏராளமான கவுன்கள். சில பெண்களுக்குப் புத்திகூடபேதலித்திருக்கிறது. ரகசியம் காப்பாற்றக்கூடிய இளம் வேலைக்காரிகள் கிடைக்கிறபோது இவர்கள் மறக்கப்படுவதும், அதனால் எழும் கூச்சலும், கன்னத்தில் விழும் அறைகளும், தொடரும் மரணமும் பலரும் அறிந்தது.

இப்படி, பெண்களே தங்களுக்கு எதிரானச் செயல்களில் இறங்குவதென்பதை தவறாகவே நான் பார்க்கிறேன். மோகங்கொள்ளவைக்கிற சங்கதியென்று அப்போது எதுவுமில்லை. பிறரைக் கவர அல்லது அவர்களது இச்சையைத் தூண்டுவதுபோல நடந்துகொண்டிருக்கலாம், அதற்கென்று புறம்பாக வசியபொருளேதும் அவள் வசமில்லை. அப்படியொன்று இருக்குமென்றால், முதற்பார்வையைச் சொல்லலாம், இல்லையென்றால் இல்லை. அது உடலுறவிற்கு கையாளுகிற உடனடியான உத்தி, தவறினால் பின்னர் எதுவுமில்லை. இவற்றையெல்லாம் அனுபவப்படுவதற்கு முன்பே நான் தெரிந்துவைத்திருந்தேன்.

ஹெலென் லகொனெல் மட்டுமே இதுபோன்ற தவறுகளுக்கு உட்பட்டவள் அல்லவென்று நினைக்கிறேன். அவள் மனத்தளவில் இன்னமும் சிறுமியாக இருப்பது காரணமென்று நினைக்கிறேன். வெகுகாலம் எனக்கென்று கவுன்கள் இல்லாமலிருந்தேன். அவை பெரும்பாலும் லொடலொடவென்று பெரிதாக இருந்தன. அம்மா உபயோகித்து அலுத்துப்போன பழைய கவுன்களிலிருந்து வெட்டித் தைத்தது. அம்மாவின் கவுன்களும் அப்படித்தான் அளவின்றி தைத்ததுபோல இருந்தன. எனது தாயாரின் கட்டளைப்படி அம்மாவின் எடுபிடியான ‘தோ’ என்பவள் எனக்காக தைத்துத் தனியாக வைத்திருப்பாள். அம்மா பிரான்சுக்குப் போகும் போதும் சரி, சடெக் நகரிலிருந்த அம்மாவின் அலுவலகவீட்டில் அவளை எனது மூத்த சகோதரன் வன்புணர்ச்சிக்கு முயன்றபோதும் சரி, அவளுக்கான ஊதியத்தை எங்களால் கொடுக்கமுடியாத நிலையிலும் சரி, எனது தாயாரைவிட்டு பிரியாமல் எப்போதும் ஒட்டிக்கொண்டிருப்பவள். ‘தோ’ அவளது சகோதரி வீட்டில் வசித்துவந்தாள். அவளுக்குத் துணிகளில் நெளிநெளியாய் மடிப்புவேலைகள் செய்யவும், பூவேலைகள் செய்யவும் தெரியும். தைத்து வெகுகாலம் ஆனதுபோல, மயிரிழைமாதிரியான ஊசிகளை வைத்துக் கொண்டு கைத்தையல் போட்டுக் கொண்டிருப்பாள். அவள் துணிகளில் பூவேலைசெய்கிறபோது அம்மா அவளிடம், கட்டில் விரிப்புகளைக் கொடுத்து பூப்போடச்சொல்வாள். மடிப்புவேலைகளில் அவள் ஆர்வமாயிருக்கிறபொழுது வீட்டிலுள்ள கவுன்கள் முழுக்க ‘தோ’விடம் சேர்க்கப்படும், அவ்வாறே காற்றில் பறக்கக்கூடிய குட்டைக் கவுன்களும், அவற்றை அணிய ஏதோ பெரிய உறைகளை மாட்டிக்கொண்டதுபோல தெரிவேன், முன்பாக இரண்டுமடிப்புகளும், குளோதின் கழுத்தும் கவுனுக்கு, ஸ்கர்ட் என்றால், தைப்பதற்கு வசதியாக அடியில் துணி கொடுக்கப்பட்டு, சுற்றளவு ஆகப் பெரிதாக வைத்து, காலத்துக்குக் பொருந்தா உடை, சிறுபிள்ளைத்தனமாக இருக்கும். ஆக அதுபோன்ற பெரிய கவுனும், அதற்கு ஏறுமாறாக ஒரு பெல்ட்டும் என்று எனக்கு விதிக்கப்பட்டிருந்த காலம்.

பதினைந்தரை வயது, மெலிந்தவள், விட்டால் ஒடிந்துவிடுவதுமாதிரியான உடல், சிறுகுழந்தைக்குரிய மார்புகள். பிறகு நான் மேலே குறிப்பிட்டிருந்ததைப்போல பலரின் கேலிக்கும் உள்ளாகக் கூடிய கவுன், ஆனால் அப்படி ஒருவரும் கேலிசெய்யவில்லை. எல்லாக் காரணிகளும் பொருந்தி இருந்தன. ஆனால் அதுவரை எதுவும் நடக்கவில்லை. எனது கவனம் கண்களில் இருக்கிறது. கண்களிற்தான் அனைத்தும் செயல்படவென்று காத்திருக்கின்றன. எழுத விரும்புகிறேன். எனது விருப்பம் அதை எழுத்தில் வடிப்பது. அம்மாவிடம் அதுபற்றி தெரிவித்திருந்தேன். முதன்முறை தெரிவிததபோது அவளிடமிருந்து மௌனம், பின்னர் சட்டென்று: ‘என்ன எழுதப்போகிறாய்?’, என்று கேட்டாள். நான் ‘புத்தகங்கள், அதாவது நாவல்கள்’ என்றேன். முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு, தடித்தகுரலில், ‘ முதலில் கணக்கில் பட்டயத்தினை பெற்றாகணும், பிறகு உனது விருப்பம்போல எதையாவது எழுதித் தொலை, என்னைக் கேட்காதே!’, என்றாள். அவளுக்கு அதில் விருப்பமில்லை, எழுத்தை யார் மதிக்கிறார்கள், அதை ஒரு வேலையென்று மெனக்கெட்டுக்கொண்டு..- நேரம் கிடைக்கும்போது,” உன்னுடய எண்ணம் சிறுபிள்ளைத்தனமானது” என்று சொல்லக்கூடும்.

அத்தியாயம்-3

ஆற்றின் வண்டல், ஒளியாக எங்கும் படிந்திருக்க, தோணிப் பாலத்தின் பிடிமானத்தில் கைகளை மடித்து சாய்ந்தபடி, வழக்கம்போல மிருதுவான தொப்பி தலையை அலங்கரிக்க, தன்னந்தனியே சிறுமி நிற்கிறாள். காட்சியை நிரப்பவென்று ரோசாவண்ணத்தில் ஆண்களுக்கான ஒரு தொப்பி. அதுவன்றி வேறு வண்ணங்கள் அங்கில்லை. கடுமையான வெப்பத்துக்கேயுரிய சூரியன், அதன் ஒளியில் நதி ஏற்படுத்தியிருக்கிற மூடுபனி மாதிரியான தெளிவற்றச் சூழல், கரைகளைக்கூட தேடவேண்டி இருக்கிறது. தொடுவானத்தில் நதி சங்கமிப்பதுபோல பிரமை, சத்தமிடாமல் ஓடிக்கொண்டிருக்கிறது, சின்னதாய் ஒரு ‘களக்’ இல்லை, உடலின் இரத்த ஓட்டம்போல அத்தனை அமைதி. நீர் பரப்பினைத் தவிர்த்து பிறபகுதிகளில் காற்றும் அசைவின்றி இருக்கிறது. சம்பவத்தின் சத்தமென்று சொன்னால், அது தோணியின் மூப்படைந்த எந்திரம் எழுப்பும் ‘தடக் தடக்’ என்ற ஓசை. அவ்வப்போது, எதிர்பாராதவிதமாக வீசும் காற்றும்; மனிதக் குரல்களின் இரைச்சலும்; தெளிவற்ற புகைபரப்பிற்குப் பின்புறமிருந்தும், கிராமங்களிலிருந்தும் நாய்களின் குரைப்பும் கேட்கின்றன. தோணி ஓட்டுபவனை, தனது குழந்தைப் பருவத்திருந்தே சிறுமி அறிவாள். அவளைப் பார்த்ததும், புன்னகைத்தவன், “மதாம் தலைமை ஆசிரியை, நலமா?” என விசாரித்தான், கூடவே, இரவு நேரங்களில் தோணியில் அவர் அடிக்கடி பயணம் செய்யத் தான் பார்க்கிறேன், என்றான். சமீபத்தில் கம்போடியாவில் வாங்கியிருந்த நிலத்தைப் பார்க்கவென்று அவள் செல்வதுண்டு. சிறுமி அவனிடத்தில், “அம்மாவுக்கென்ன, நலமாகத்தான் இருக்கிறார்கள்”, என்றாள். படகைச்சுற்றி நீரளவு கரை அளவிற்கு உயர்ந்து, பின்னர் நெல்வயல்களில் தேங்கிக்கிடக்கிற நீருடாக வழிந்து சென்றாலும், கலப்பதில்லை. கம்போடியாவின் ‘தோன்லெசாப்'(Tonlesap) வனப்பகுதியிலிருந்து எதிர்பட்டதையெல்லாம், நதி வாரிக்கொண்டு வந்திருக்கிறது. குடிசைகள்; மரங்கள்; அணைந்த தீ; இறந்த பறவைகள், நாய்கள், புலிகள், எருமைகள், நீரில் மூழ்கிய மனிதர்கள், அழுகிய உடல்கள், குவியல் குவியலாய் நீலோற்பல மலர்கள் என அனைத்தும் சுழன்று பாயும் ஆழ் நதி நீரோட்டத்தின் காரணமாக, நீரில் அமிழ்ந்துவிடாமல், மிதந்தபடி வேகமாய்ப் பசிபிக் பெருங்கடலை நோக்கி அடித்துச் செல்லப்படுகின்றன.

“தற்போதைக்கு நான் செய்யவேண்டியதென்று சொன்னால், எழுதுவதைத் தவிர வேறொன்றுமில்லை”, என்று அம்மாவிடத்தில் சொன்னேன். அவளுக்குப் பொறாமை. அதன்பின்னர் அவள் பதிலின்றி இருந்ததும், சாடையாக பார்த்ததும், சட்டென்று திரும்பிக்கொண்டதும், அளவாய் ஒரு முறை தோளைக் குலுக்கிக்கொண்டதும், நினைவில் இருக்கிறது. அவளை முதலிற் பிரிவது நானாகத்தான் இருக்கும். என்னை, அதாவது இந்தக் குழந்தையை இழக்க ஒரு சில ஆண்டுகள் கட்டாயம் அவள் காத்திருக்க வேண்டியிருக்கும், தவிர்க்க முடியாது. பையன்கள் விஷயத்தில் அஞ்சுவதற்கு ஏதுமில்லை. என்றேனும் ஒருநாள், இப்பெண் தன்னை விட்டுப் பிரிந்துசெல்லக்கூடும் என்பதும், அதற்கான வழிமுறைகள் அவளுக்குத் தெரியும் என்பதும் அம்மா புரிந்திருந்தாள். பிரெஞ்சு பாடத்தில் முதலாவதாக வந்திருக்கிறேன். எனது ஆசிரியர் அம்மாவிடம், ” மதாம், உங்கள் மகள் பிரெஞ்சு பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்றிருக்கிறாள்”, என்கிறார். அம்மா, அமைதியாக இருக்கிறாள். ஒரே ஒரு சொல் ம்… இல்லை. அவளுக்கு அதனாற் மகிழ்ச்சி இல்லை, பிரெஞ்சு பாடத்தில் முதலாவதாக வந்திருப்பது அவளுடைய ஆண்பிள்ளைகள் அல்லவே, பெட்டை பிள்ளைதானே, பின் எதற்காக அவளுக்கு மகிழ்ச்சி? எனது அன்பிற்கும், பாசத்திற்கும் உரிய அம்மா என்ன கேட்கிறாள் தெரியுமா?, “சரி கணக்கில் எப்படி? அதற்கு “இன்னமும் போதிய அளவிற்கு இல்லை, ஆனால் அதிலும் திறமையைக் காட்டுவாள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது”, என்று பதில் வர, அம்மா தொடர்ந்து, “என்றைக்கு? இன்றைய தேதியில் ஒன்றுமில்லையே”, என்கிறாள். மீண்டும், “உங்கள் மகள் விரும்பினால் கூடிய சீக்கிரம் அதற்கும் சாத்தியம்”, என்று பதில் வருகிறது.

எனது தாய், எனது பிரியத்திற்கு உகந்தவள், வெப்ப மண்டலபிரதேசமாக இருப்பினும் ஒரு பள்ளிக்குத் தலைமை ஆசிரியையாக இருப்பவள் கண்டிப்பாக காலுறைகள் அணிவது அவசியம் என்கிற நினைப்புடன், வேலைக்காரி ‘தோ’வால், தைத்து சரி செய்யப்பட்ட காலுறைகளை மாட்டிக்கொண்டு, அவள் நடப்பதைப் பார்க்கவேண்டுமே, ஐய்யோ சகிக்காது. போதாதற்கு நைந்து, பரிதாபமாகக் காட்சியளிக்கும் அவளுடைய கவுன்கள், அவைகளும் பெரும்பாலும் வேலைக்காரி ‘தோ’வால் தைத்து சரிசெய்யபட்டவைகளாக இருந்தன. அவளுக்கு இன்னமும், தனது அத்தை மகள்கள், மாமன் மகள்களுடன் தான் வசித்த பிக்கார்டி(1) பண்ணைவீட்டிலிருந்து நேராக புறப்பட்டு வந்ததுபோல எண்ணம், எல்லாப் பொருட்களையும் கடைசிவரை உபயோகித்திடவேண்டும், அதை அவசியமென்றும் நினக்கிறாள், அதற்கான தகுதிகள், அப்பொருள்களுக்கு உண்டென்பதும் அவளது முடிவு. அவள் அணிகிற காலணிகள் கூட மோசமாக தேய்ந்திருக்கும், நேராக நடக்க முடியாமல், சிரமப்படுகிறாள். தலைமுடியைச் சீனப்பெண்களைப்போல கழுத்துக்குமேலே இழுத்து முடிந்திருக்கிறாள், அவளால் எங்களுக்கு அவமானம், குறிப்பாக உயர்நிலைப்பள்ளி வழியாக வீதியில் அவள் போகிறபோது எனக்குப் பெருத்த அவமானம், B.12ல், பள்ளிக்கு முன்னால் அவள் இறங்குகிறபோது அத்தனைபேரும் அவளை பார்க்கிறார்கள், ஆனாலும் அவள் அதை ஒருபோதும் பொருட்படுத்துவதில்லை, அவள் பூட்டிவைக்கப்படவேண்டியவள், அடக்கிவைக்கப்படவேண்டியவள், செத்தொழிந்தாலும் நிம்மதி. என்னைப் பார்த்துக்கொண்டிருந்தவள், “பார்ப்போம், எனக்கென்னவோ, அம்மாதிரியான எண்ணங்களிலிருந்து நீ விடுபடுவாய் என்றுதான் நினைக்கிறேன்”, என்கிறாள். ஒருவகையில் அவள் சொல்வதும் சரியென்றே தோன்றுகிறது, இப்படியான வாழ்க்கையிலிருந்து எப்படி விடுபடுவது என்பது குறித்த ஒரே சிந்தனையில்தான் இரவும் பகலும் இருந்தேனே அன்றி, ஏதாவது நடந்தாகவேண்டுமென்ற எதிர்பார்ப்புகள் இல்லை.

மகிழ்ச்சியான தருணங்களில், அம்மா அவநம்பிக்கைகளிலிருந்து விடுபடுவதைப் பார்க்க முடிகிறது, அப்படியான நேரங்களில், நான் அணிந்திருக்கும், ஆண்களுக்கான தொப்பியும், ‘லாமே ஓர்’ காலணியும், அவளுடைய கவனத்தை ஈர்க்கும் போலிருக்கிறது. என்னிடத்தில், “என்ன விஷயம்?”, என்கிறாள். நான்,”ஒன்றுமில்லை”, என்கிறேன். தொடர்ந்து சிலகணங்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தவள், புன்னகைக்கிறாள், அவளுக்கு அந்தக் கோலத்தில் என்னைப் பார்க்கச் சந்தோஷம். “பரவாயில்லையே, உனக்குப் பொருத்தமாக அமைந்திருப்பதோடு, உன்னை நன்கு மாற்றியிருக்கிறது”, என்றாள். அவைகளை வாங்கியது தான் என்பதை அவள் உணர்ந்திருந்ததால், யார் வாங்கியது? என்று அவள் கேட்கவில்லை. அவளால் சாதிக்க முடிந்த நேரங்களும் உண்டு, விரும்பியவற்றை வாங்கிக்கொள்ளலாம் என்பதுபோல அன்றைய தினம் அவள் எங்களோடு சுமுகமாக இருந்தாள், என்கிறேன். “தவிர வருந்தவேண்டாம், அவைகளுக்குக் கொடுத்த விலையும் அப்படியொன்றும் அதிகமல்ல என சமாதானப்படுத்துகிறேன். “எங்கே வாங்கினோம்? நினைவிருக்கிறதா?”, என்று கேட்கிறாள். ‘கத்தீனா வீதி’, மலிவு விலையில் போட்டிருந்ததை, மீண்டும் விலைகுறைத்து வைத்திருந்தார்கள், என்கிறேன். என்னை பரிவுடன் பார்க்கிறாள். சின்னப்பெண், தன்னுள் கற்பனையை வளர்த்துக்கொள்வதும், அதற்கேற்ப தனது ஆடை அணிகலன்களில் கவனம் செலுத்துவதும், பரவாயில்லை இவள் பிழைத்துவிடுவாள் என்ற எண்ணத்தை அவளிடம் ஏற்படுத்தி இருக்கவேண்டும். அவள் வரையில், பலரின் நகைப்பிற்கும் இடமளிப்பதோடு, சங்கடங்களுக்கும் உட்பட்டு வாழ்வை நடத்துகிறாள். விதவையாக ஒதுங்கிக்கொண்டு, மடத்துப்பெண்மணிகளைபோல சாம்பல்வண்ண பெரிய கவுன்களை அணிவதும், அதில் மகிழ்ச்சி அடைவதையும் பார்க்கிறேன்.

வீட்டில் வறுமை, என்னிடமிருந்த ஆண்களுக்கான தொப்பி மூலம் பிறர் அதனை அறிய முடிகிறது. இந்த நேரம் எங்களுக்குத் தேவை பணம் அது எப்படிவேண்டுமானாலும் வரட்டும். அம்மாவைச் சுற்றி இருப்பதெல்லாம் வரட்சியும், பாலையும். அவளது பிள்ளைகளுங்கூட பாலை நிலமே. அவர்களால் எந்த உதவியும் இல்லை, இருக்கிற பூமி கூட உவர் நிலங்களே. அதிற்போட்டிருந்த அத்தனை பணமும் வீண், எல்லாம் முடிந்தது. எஞ்சியிருப்பது வளர்ந்த இச்சிறுமி மட்டுமே. அநேகமாக பணத்தை எப்படிச் சம்பாதிக்கலாம் என்பது என்றேனும் ஒரு நாள் இவளுக்குத் தெரியவரக்கூடும். ஒருவேளை அதற்காகத்தான் அம்மா தனது மகளை, வேசிச் சிறுமியைப்போல உடையணிந்து வெளியில் செல்ல அனுமதிக்கிறாளோ என்னவோ, புரியவில்லை. அதை உணர்ந்தே, அதாவது பிறரின் கவனத்தை தம் பக்கம் ஈர்க்கமுடிகிற அலங்காரங்களோடு, பணத்தின் தேவையும் சம்பந்தப்பட்டிருக்கிறது, என்பதை உணர்ந்தே தனது ஆடை அலங்காரங்களை முன்னமேயே மாற்றிக்கொள்ள அச்சிறுமிக்கும் தெரிந்திருந்தது. நினைத்துப் பார்க்க அம்மாவுக்கு மகிழ்ச்சி, அதனை வெளிக்காட்டும் வகையிற் புன்னகைக்கிறாள்.

பணத்திற்காக ஏதேனும் அவள் செய்கிறாளெனில் அம்மா தடுக்கப்போவதில்லை. “பிரான்சுக்குத் திரும்பப்போகணும், ஐந்நூறு பியாஸ்த்ரு(2) அவனிடம் கேட்டேன்”, என்று சிறுமி கூறலாம். அதற்கு அம்மா, “நல்லது, பாரீஸில் குடியிருக்கவேண்டுமெனில் அவ்வளவு பணம் தேவைப்படலாம், என்று சொல்லக்கூடும், பிறகு இவள், “ஐந்நூறு இருந்தால் போதுமா”, என்று கேட்கக்கூடும்.. என்ன செய்யவேண்டுமென்றும் சிறுமிக்குத் தெரியும், அதிலும் அன்றாடம் சோதனைகளைச் சந்தித்து அலுத்துப்போயிருக்கும் அம்மா, துணிச்சலும், பலமும் இருந்தால், தனது மகளை எதைச் செய்ய அனுமதித்திருக்கக்கூடும் என்பதையும் அறிவாள்.

எனது சிறுவயது அனுபவங்களைச் சொல்லும் புத்தகங்களில், சடாரென்று எதைச் சொல்லாமல் தவிர்த்தேன், எதைச் சொன்னேன் என்று நினைவில்லை, அம்மாவிடம் எங்களிடத்திலிருந்த பாசத்தினை சொல்லியிருந்தேனேயொழிய, எங்கள் குடும்பத்தின் அழிவு, இழப்பு என்கிற பொதுவான கதைக்குக் காரணாக இருந்த, அம்மாமீதான எங்கள் கசப்பினையும், எங்களுக்கிடையேயான அன்பினையும், பேதங்களையும் அவற்றில் பேசினேனா என்று ஞாபகமில்லை, பரஸ்பர அன்பினைப்போலவே, எங்களுக்கிடையே நிலவிய வெறுப்புணர்வும், விழிகள் மூடிய பிரசவித்த சிசுபோல, எனது தேடுதலுக்குத் தப்பித்து, இன்றைக்கும் எனது உடலுக்குள் எங்கோ ஒளிந்துகொண்டிருக்கின்றன.

அனைத்து சலனமின்மைக்கும் அவளே மூலம், மௌனம் அன்றி வேறு செயல்பாடுகளில்லை. ஆறப்போடுதல் எனது வாழ்க்கையாகிவிட்டது. இன்றைக்கும் அப்படியே இருக்கிறேன், எதிரில் மந்திர சக்திக்குக் கட்டுண்ட பிள்ளைகள், அவர்களுக்கும் எனக்குமான புதிரான இடைவெளியிற்கூட மாற்றமில்லை. நினைத்ததுபோல ஒருபோதும் எழுதியவளில்லை, ஆனால் எழுதுவதற்கான நம்பிக்கை இருக்கிறது, ஒருபோதும் நேசித்ததில்லை, ஆனால் நேசிக்கமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது, தாழிட்ட கதவுக்கு முன்னால் காத்திருந்ததை அன்றி வேறு செயல்களை அறியேன்.

மீகாங்நதியில், தோணியில் காத்திருந்த அன்றைக்கு அதாவது சொகுசு மோட்டார் வாகனத்தைக் காண நேர்ந்த காலத்தில், அணைக்கருகே பெற்றிருந்த நிலம் எங்களிடத்தில்தான் இருந்தது. அடிக்கடி மூவரும் இரவில் பயணம் செய்வதும், ஒரு சிலநாட்கள் அங்கு தங்கி இளைப்பாறுவதும் வழக்கம். முன் தாழ்வாரத்தில் அமர்ந்தபடி சியாம் மலையை பார்த்துக்கொண்டிருப்போம். பிறகு புறப்பட்டு வருவோம். அவளுக்கு அங்கு வேலைகள் எதுவுமில்லை. ஆனாலும் திரும்பவும் எங்களை அழைத்துக்கொண்டு அங்கு போவாள். எனது இளைய சகோதரனும் நானும் முன் தாழ்வாரத்தில் அமர்ந்தபடி காடுகளை பார்த்தபடி இருப்போம். இப்போது நாங்கள் வளர்ந்தவர்கள். ஏரியில் குளிப்பதும்,, கருஞ்சிறுத்தைகளை வேட்டையாடவென்று முகத்துவாரத்திலுள்ள சதுப்புநிலபகுதிகளுக்கு செல்வதும், காடுகளைப் பார்ப்பதும், மிளகு விளையும் கிராமங்களுக்குப் சென்றுவருவதும் இனி இல்லையென்றாகிவிட்டது. எங்களைச் சுற்றிலும் எல்லோரும் வளர்ந்திருந்தனர். இளம்பிராயத்து பிள்ளைகளே இல்லை என்பதுபோல. எருமைகள், பிற இடங்களிற்கூட அப்படியானவை இல்லை. முற்றிலும் வேறானவர்களாக நாங்கள் மாறி இருந்தோம். அம்மாவைப் பீடித்திருந்ததுபோலவே எங்களிடமும் சுணக்கம் குடிகொண்டிருந்தது. நாள் முழுக்க காட்டினைப் பார்த்தபடி இருப்பது, எதற்காகவாவது காத்திருப்பது அல்லது, அழுதுகொண்டிருப்பது, இதைத் தவிர எங்களுக்குத் தெரிந்ததென்று எதுவுமில்லை. கீழ்ப் பகுதியிலிருந்த நிலங்கள் சாகுபடிக்கு ஏற்றதல்ல என்ற நிலையில், மேற்பகுதியில் இருந்த துண்டு நிலங்களை, ஊதியத்திற்குப் பதிலாக சொந்த நெல் சாகுபடிக்கென்று வீட்டு வேலைக்காரர்களுக்கு ஒதுக்கினோம். அவர்களுக்கு ஓரளவு வசதியான குடிசைகளும் அம்மா, கட்டிக்கொடுத்திருக்கிறாள். தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதி, எங்களை அவர்கள் மிகவும் நேசித்தார்கள். எங்கள் பங்களாவைப் காப்பதுபோல நினைத்துக்கொண்டு, காவலிருந்தார்கள். அத்தனை வேலைகளும் குறை இல்லாமல் நடந்தேறின. மழையினாற் சேதமடைந்திருந்த கூரை தொடர்ந்து காணாமற்போனது. வீட்டிலிருந்த தளவாடங்களை துடைத்து மெருகேற்றுவது தவறாமல் நடந்தது. சாலையிலிருந்து பார்க்க எங்கள் பங்களா ஓவியம்போல அத்தனைக் கச்சிதமாக தெரியும். உள்ளிருக்கும் மரத்தாலான உத்திரங்கள், தூண்கள் காற்றில் உலர்த்தபடவேண்டுமென்பதற்காகவே பகலில் கதவினைத் திறந்து வைப்பதும், மாலையானால் தெரு நாய்களுக்கும், மலைப்பகுதிகளில் நடமாடும் கடத்தல்காரர்களுக்கும் பயந்து அவற்றை மூடிவைப்பதும் உண்டு.

ஆக சொகுசுகாருக்குச் சொந்தக்காரனான பணக்காரனை சத்திந்த இடம் ரெயாம்(3) நகரிலிருந்த எங்கள் பள்ளி உணவு விடுதி அல்ல, நான் விவரித்ததுபோல கடுமையான வெப்பத்துடனும், நதிநீரால் ஏற்படுத்தப்பட்டிருந்த மூடுபனி மாதிரியான தெளிவற்றச் சூழலிலும் தோணியில் சந்தித்தபோது மேலே குறிப்பிட்ட நிலத்தையும் பங்களாவையும் விட்டு வெளியேறி இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கடந்திருந்தன.

சரியாக அச் சந்திப்புக்கு ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அம்மாவும் நாங்களும் பிரான்சுக்குத் திரும்பினோம். வீட்டிலிருந்த அத்தனை தளவாடங்களையும் விற்க அப்போது தீர்மானிக்கிறாள். பிறகு கடைசிதடவையாக எங்கள் பங்களா இருந்த அணைப்பகுதிக்குச் செல்வதென்றும், அங்கு முன் தாழ்வாரத்தில் மலைகளைப் பார்த்தபடி சிறிது நேரம் உட்காருவதென்றும் முடிவெடுக்கிறாள். அவ்வாறே மீண்டும் ஒருமுறை அங்கிருந்து சியாமைப் (Siam) பார்க்க இருந்தோம், அதுதான் கடைசி, மறுமுறை அதற்கான வாய்ப்பில்லை, ஏனெனில் எண்ணத்தை மாற்றிக்கொண்டு, தனது ஓய்வுக் காலத்தைக் கம்போடியாவில் கழிப்பதென்று மீண்டும் குடியேறியபோதும் அவள் ஒருபோதும் அம்மலைகளையோ, அங்கிருந்த வனப் பிரதேசங்களுக்கு மேலாகப் பசுஞ்மஞ்சள் வண்ணத்தில் தெரிந்த வானத்தையோ காண விரும்பியவளல்ல.

இதற்கிடையில் மற்றுமொன்றை மறக்காமல் நான் சொல்லவேண்டும். வாழ்க்கையின் இறுதிக்கட்டத்திற்கூட வழக்கம்போல சும்மா இராமல், பிரெஞ்சுமொழி கற்றுகொடுப்பதென்று பள்ளியொன்றை ஆரம்பித்தாள், பெயர் ‘புதிய பிரெஞ்சு மொழி பள்ளி’, அவள் உயிரோடு இருந்தவரை அப்பள்ளியின் மூலம் கிடைத்தப் பணம், எனது படிப்பிற்கான செலவின் ஒருபகுதியையும், என் மூத்த சகோதரனை பராமரிக்க ஆன செலவையும் சமாளிக்க உதவிற்று.

எனது சிறிய சகோதரன் ‘பிராங்கோ நிமோனியாவால்'(5) பாதிக்கப்பட்டு, இதயம் இயங்க மறுத்ததால் மூன்றாம் நாள் இறந்து போனான். அம்மாவைவிட்டு நான் விலகிப்போக நேரந்தது அந்த நேரத்தில்தான். கம்போடியா ஜப்பானியரால் பிடிக்கப்பட்டிருந்த நேரம். இனி எதுவுமில்லை என்று ஆன நாள். எங்கள் குழந்தைப் பருவத்தைப் பற்றியோ அல்லது அவளைப் பற்றியோ ஒருபோதும் நான் கேள்விகள் எழுப்பியதில்லை. என்றைக்கு எனது இளைய சகோதரன் இறந்தானோ அன்றைக்கே அவளும் என்னைப் பொறுத்தவரையில் மரணித்துவிட்டாள். அவ்வாறே என் மூத்த சகோதரனும் என்வரையில் இறந்து போனவன். சம்பவத்திற்குப் பிறகு, சடாரென்று அவர்கள் என்னிடத்தில் ஏற்படுத்திய அச்சுறல்களிலிருந்து மீள முடியாமற் தவித்தேன். இருவருமே எனது மதிப்பீட்டில் தாழ்ந்துபோனார்கள். அதற்குப் பிறகு அவர்களைப்பற்றி எதுவும் நினைவில் இல்லை. செட்டிமார்களிடத்தில் வாங்கிய கடனையெல்லாம் அவளால் எப்படி அடைக்க முடிந்தது என்பது இன்றளவும் வியப்புக்குரியது. கடன் கேட்டுத் தினமும் நடந்தவர்கள், திடீரென்று ஒருநாள் வருவதை நிறுத்திக் கொண்டார்கள். அவர்கள் கண்முன்னே நிற்கிறார்கள். ‘சாடெக்’ நகரிலிருந்த எங்கள் வீட்டு சிறிய வரவேற்பறையில் வெள்ளைத் துணியை இடுப்பில் சுற்றிக்கொண்டு அவர்கள் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறேன். வாய்திறவாமல் காத்திருக்கிறார்கள் ஒரு நாளல்ல, இருநாளல்ல, மாதக்கணக்கில், வருடக்கணக்கில். அம்மா அழுவதும், வந்தவர்களைத் திட்டுவதும் காதில் விழுகிறது. அனைத்தும் அவள் அறையில் இருந்தபடியே அரங்கேறுகிறது, வெளியில்வர அவளுக்கு விருப்பமில்லை. அவர்களை வெளியிற் போகச்சொல்லி சத்தம்போடுகிறாள், அவர்கள் ஊமைகள்போல எதையும் காதில் வாங்குவதுமில்லை, பதில் சொல்லிக் கொண்டிருப்பதுமில்லை, அனைத்தையும் புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருப்பார்கள். உட்கார்ந்த இடத்திலிருந்து அசையமாட்டார்கள். ஒரு நாள் இவைகள் எதுவும் இல்லையென்று ஆகிவிட்டது. அம்மாவும் இரண்டு சகோதரர்களும், இறந்துவிட்டனர். அவர்களைப் பற்றிய நினைவுகளுக்குக்கூட காலம் கடந்திருக்கிறது. அவர்களை விரும்பும் மனநிலையில் நானில்லை. உண்மையில் அவர்களை நேசித்தேனா? தெரியாது. அவர்களை உதறிவிட்டு வந்தேன், என்பது மட்டும் உண்மை. அவர்களது தோலுக்கான மணம் என்ன? மறந்திருக்கிறேன், அல்லது அவர்களது கண்களுக்கான நிறமாவது எனது கண்களில் இருக்கிறதா என்றால், இல்லை. குரலைக்கூட மறந்திருந்தேன், ஆனால் இரவுநேரங்களில் அலுப்புடன் ஒலிக்கும் மென்மையான குரலை ஞாபகப்படுத்த முடிகிறது. சிரிப்பும் காதில் ஒலிப்பதில்லை, சிரிப்புமட்டுமல்ல, உரத்துக்கேட்ட குரலும் இல்லை யென்றாகிவிட்டது. எல்லாம் முடிந்தது. எதுவும் ஞாபகத்தில் இல்லை, விளைவு, எனது எழுத்தில் அடிக்கடி அவள் இடம்பெறுகிறாள், இன்றைக்கு வெகு எளிதாக, எத்தனை பக்கம் வேண்டுமானாலும், மிகவும் விபரமாக அவளைப்பற்றி எழுத முடிகிறது.

– தொடரும்…

  1. Piccardie -பிரான்சு நாட்டின் வடபகுதியைச் சேர்ந்த பிரதேசம், மூன்று மாநிலங்களைத் தன்னுள் கொண்டது.
  2. பிரெஞ்சு காலணிநாடுகளில் உபயோகத்திலிருந்த நாணயம்
  3. கம்போடியாவைச் சேர்ந்த நகரம்
  4. Siam – Thailand
  5. Bronco Pneumonia

– பதிவுகள் சஞ்சிகை , ஜூன் 2008, மூலம்: மார்கெரித் த்யூரா (1914-1996), தமிழில: நாகரத்தினம் கிருஷ்ணா.

நாகரத்தினம் கிருஷ்ணா ஒரு தமிழக எழுத்தாளர். புலம்பெயர்ந்து பிரான்சில் வசித்து வருகிறார். இவர் எழுதிய "நீலக்கடல்" மற்றும் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி இரண்டு நாவல்களும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 மற்றும் 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கின்றன வாழ்க்கைச் சுருக்கம் இவர் தமிழ்நாடு, விழுப்புரம், கொழுவாரி என்ற ஊரைச் சேர்ந்தவர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பிரான்சில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *