அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18
அத்தியாயம்-13
அடைமானத்தில் இருந்த சொத்தை மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் ஓராண்டுகாலம் அவன் வழியில் முயற்சித்தான். அம்மா பாதுகாத்துவைத்திருந்த பொருட்களெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாகச் சூதாட்டத்தில் தொலைந்தன: வெண்கலத்தாலான புத்தர் சிலைகள், பித்தளை பொருட்கள், கட்டில்கள், அலமாரிகள், விரிப்புகள்… என்று சொல்லிக்கொண்டுபோகலாம். இனி சூதாட ஒன்றுமில்லை என்று ஒருநாள் ஆனது. தோளில் ஒரே ஒரு கோட் கிடந்தது, விரிப்போ, போர்வையோ வேறு துணிகள் கூட இல்லை. ஒற்றை மனிதனாக அவன் மாத்திரம் இருக்கிறான். அடுத்த ஒருவருடத்திற்கு யாருமற்ற அநாதையாகிறான். கதவுகள் அடைக்கப்படுகின்றன. பாரீஸிலிருந்த ஒன்றுவிட்ட சகோதரனுக்கு நிலைமையை விளக்கிக் கடிதம் எழுதுகிறான். அவர்கள் வீட்டில் மேல் மாடியில், அந்தக்காலத்தில் வேலைக்காரர்களின் உபயோகத்துக்கென இருந்த அறை, காலியாக இருக்க இவனுக்கு ஒதுக்கினார்கள். ஐம்பதுக்கு கூடுதலான வயதில் முதன்முறையாக அவனுக்கென்று வேலையும் கிடைக்கிறது, அவன் வாழ்க்கையிற் தொட்ட முதல் ஊதியம், கடல் தொடர்பான காப்புறுதி நிறுவனமொன்றில் ஏவலர் பணி. பதினைந்து ஆண்டுகள் அங்கே இருந்தான் என நினைக்கிறேன். அதன் பிறகு மருத்துவமனையில் சிலகாலம் இருந்தான். அங்கே இறக்கவில்லை. அவனுடைய அறையில் இறந்துபோனான்.
என் அம்மா, தனது மூத்தமகனைக் குறித்து பேசுவது குறைவு. அவனை பற்றிய புகார்களை அவள் சொன்னதில்லை. வீட்டு அலமாரிகளை குடைபவனைக் குறித்து ஒருவரிடமும் பேசியதில்லை. அவற்றையெல்லாம் குற்றமென்று கருதிய தாய்க்குலத்தின் ஆதரவில் இருந்தவன் அவன். அவற்றை மறைத்துவைக்க மிகவும் பாடுபட்டாள். தான் புரிந்துகொண்ட அளவிற்கு தனது மகனைப் பரிந்துவைத்திராத பிறரிடத்தில் அவனைப்பற்றிபேசுவது அறிவுடமை ஆகாதென்று அவள் நினைத்திருக்கக்கூடும். தனது மகனைப் பற்றி பேசுவதற்குரிய ஒரே நபர் கடவுள் என்பதில் தீர்மானமாக இருந்தாள். அவளுக்குக்கென்று கவைக்குதவாத சிலபுலம்பல்கள் இருந்தன, அதாவது அவன் மட்டும் நினைத்திருந்தால், மூன்று பிள்ளைகளில் அதிபுத்திசாலியாக இருந்திருக்கலாம். மிகப் பெரிய கலைஞனாக வந்திருப்பான், வியக்கத்தக்கவனாக விளக்கியிருப்பான் என்றெல்லாம் சொல்லித் திரிவாள். அவனும் தனது தரப்பில் அவள்மீது அன்புள்ளவனாக நடந்துகொண்டான். எங்கள் மூவரில், அம்மாவை அதிகம் நேசித்தவனென்றால் அது அவன்தான். அவளை இனி இல்லையென்று நன்கு புரிந்துவைத்திருந்தவனும் அவன் ஒருவன்தான். ஒர் ஆண்பிள்ளையிடத்தில் அதனை எதிர்பார்க்கலாம் என்றெல்லாம் எனக்குத் தெரியாது என்றவள், அந்த அளவிற்கு ஆழமான அன்பினை, ஓர் உள்ளுணர்வை அவன்மீது வைத்திருந்தாள்.
ஒருமுறை இருவரும் சந்திக்க நேர்ந்தது. இறந்துபோன சகோதரனைக் குறித்து பேச்சுவந்தது. அவன்: ” நம்முடைய தம்பி போலோவுக்கு நேர்ந்தது கொடூரமான மரணம், எத்தனை பயங்கரம்!” என்றான். கணத்தில், எங்கள் உறவின் சாட்சியாக, காட்சியொன்று கண்முன்னே விரிகிறது: சாடெக்கில் சாப்பிடும் காட்சி, உணவு உட்கொள்ளூம் அறையில் நாங்கள் மூவருமாக மேசையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். அவர்களுடய வயது அப்போது பதினெட்டும் பதினேழுமாக இருந்தது. அம்மா எங்களுடனில்லை. நானும், இளைய சகோதரனும் உணவருந்தப் பார்த்துக்கொண்டிருந்தவன், தனது கையிலிருந்த முற்கரண்டியை வைக்கிறான். எனது இளைய சகோதரனை மாத்திரம் வெகு நேரம் அவதானிக்கிறான். சட்டென்று ஆனால் மிகவும் நிதானமாக, நாகரீகமற்ற சொற்களை உபயோகித்து பேசுகிறான். பேச்சு சாப்பாட்டைப் பற்றி இருந்தது. உணவென்றால் அளவாய் சாப்பிடவேண்டும், இப்படிக் கொட்டிக் கொள்ளக்கூடாது என்கிறான். என் இளைய சகோதரனிடத்திலிருந்து பதிலேதுமில்லை. அவனது கவனம் உணவில் இருக்கிறது; தொடர்ந்து,” இருக்கிற பெரிய இறைச்சி துண்டுகளெல்லாம் யாருக்கென்று நினைக்கிறாய், எனக்கு, அதை மறரந்திடாதே”, என்கிறான். உடனே நான் குறுக்கிட்டு, “எதற்காக உனக்கு மட்டும்? எனக் கேட்கிறேன். அதற்கு அவனிடத்தில், “அது அப்படித்தான்”, என்று பதில் வருகிறது. கோபத்தில் நான், ” நீ செத்தொழியணும்”, அதுதான் என் விருப்பம் என்கிறேன். அதற்குப் பிறகு எனக்குச் சாப்பிட விருப்பமில்லை., எனது இளைய சகோதரனும் எழுந்துகொண்டான். அவன் கைவிரல்களை மடக்கியபடி காத்திருக்கிறான். இளைய சகோதரன் வாயைத் திறந்து ஒரே ஒரு வார்த்தை சொன்னாற்கூடப் போதும், அவனது மூடிய கை, இளைய சகோதரனுடைய முகத்தில் இறங்க மேசைக்குமேல் தயார் நிலையில் இருக்கிறது. ஆனால் அவன் வாய் திறக்கவில்லை. முகம் வெளுத்துப் போனது, இமைமயிர்களுக்கிடையில் அழுகைக்கான ஆரம்பம்.
அவன் இறந்த நாள் சோகமானது, ஏப்ரல் மாதம், ஒரு வசந்தகாலத்தில் நடந்தது. எனக்கு தொலைபேசியில் செய்தி கிடைத்தது: ‘அவனுடைய அறையில் தரையில் இறந்து கிடக்கிறான்’, வேறு வார்த்தைகள் இல்லை. அவனுடைய வரலாற்றின் கடைசி அத்தியாத்தில் மரணம் சற்று முன்பாகச் சம்பவித்துவிட்டதென நினைக்கிறேன். அவன் உயிரோடிருந்தபோதே, அதாவது எனது இளைய சகோதரன் என்றைக்கு இறந்தானோ அன்றையதினமே மரணத்தைத் தயார்படுத்தியாயிற்று, காலத்தை மேலும் கடத்தக்கூடதென்பதற்பாக இறந்திருக்கிறான்.’ ‘எல்லாம் முடிந்தது’ என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.
அவனை தன்னோடு புதைக்கவேண்டுமென்பது அவளுடைய ஆசை. அந்த இடத்தைப்பற்றியோ, அந்தக் கல்லறை பற்றியோ எனக்குத் தகவல்களில்லை, ஆனால் ‘லுவார்’ என்று ஞாபகம். ஆக, விருப்பப்படி ஒரே கல்லறையில் அங்குதானிருக்கிறார்கள். அவர்கள் இரண்டுபேர்மாத்திரம், அப்படித்தான் சொல்லவேண்டும். நம்மை போதுபோதுமென்று சொல்லவைக்கிற கோலாகலக்காட்சி.
வருடம் முழுக்க அந்தி சாய்வது மட்டும் குறித்த நேரத்தில் நடந்தது. வருவதே தெரியாது. சூரியன் சட்டென்று விழுந்ததுபோல இருக்கும். மழைக்காலங்களில், வாரக்கணக்கில், நிலவொளிகூட புகமுடியாதபடி, சீரான மேகமூட்டம் வானமெங்கும் பரவி ஆக்ரமித்திருக்க, அதனைப் பார்க்கவே முடியாது. அதற்கு நேர்மாறாக வறட்சிகாலத்தில் ஆகாயம் நிர்வாணமாக இருந்தது, முழுமையாக தன்னைக் காட்டிக்கொண்டது. அந்த நாட்களில், நிலவில்லாத நாட்களிலுங்கூட இரவுகள் பிரகாசமாகத் தெரிய, அதற்கு ஈடாக நிழல்கள் தரை, தண்ணீர், சாலைகள், சுவர்கள் என்று எங்கும் படிந்துக்கிடந்தன.
பகற்காலத்து வேதனைகள் இன்றைக்கும் நினைவில் இருக்கின்றன. சூரியஒளி, வண்ணங்களை சோபை இழக்கச் செய்தது, காலிலிட்டு மிதிக்க அவை நொறுங்கின. இரவுவேளைகளில், எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது, ஆகாயத்தைக்காட்டிலும், அதன் நீலம் வெகுதூரத்தில், அத்தனைப் படிமங்களுக்கும் பின்னே, உலகின் பின்புலத்தினை போர்த்தி பாதுகாத்தபடி இருந்தது. வானம், எனக்கு நீலத்தைக் கடக்கிற நிர்மலமான ஒளித்தடம், அத்தனை வண்ணங்களுக்கும் மேலாக நடைபெறுகிற கசப்பான சங்கமம். வின்லோனில் இருந்த நாட்களில், சோதனையான நேரங்களில், அம்மா குதிரைவண்டியில் கிராமப்புறங்கபகுதிக்குச் சென்று, வறட்சிகால இரவை பார்ப்பது வழக்கம். அவ்வாறான இரவுகளின் அனுபவங்களைப் பெற்றதும், அதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த பெண்மணியை அம்மாவாகபெற்றதும் அரியதொரு வாய்ப்பு. நிர்மலமான திரையில், அசைவற்ற, அமைதியான சுழலில், விண்ணிலிருந்து ஒளிஅருவி விழும். வெளியெங்கும் நிறைந்திருக்கும் நீலவண்ணத்தை கையில் ஏந்துவோம். நீ..லம். பரவிக்கிடக்கும் பிரகாசமான ஒளிவெள்ளத்தில் ஆகாயத்தைபார்க்க, அதனிடத்தில் ஒருவித அமைதியற்றத் தன்மையினை, படபடபப்பினை உணரலாம். பார்க்குமிடமெல்லாம் ஒளிவெள்ளம். நதியோரங்களில் ஆரம்பித்து, எங்கள் கண்ணுக்கெட்டியதூரம் எங்கும் பிரகாசம். ஒவ்வொரு இரவும் வித்தியாசமானது, அவை ஒவ்வொன்றும் ஒரு கால அளவீடு. இரவுகள் எழுப்பும் சத்தமிருக்கிறதே அது நாட்டுப்புறங்களில் திரிகிற நாய்களுடைய குரைப்பாக இருந்தது. ஒருவித புதிர்நிலை கர்ஜனை. இரவின் வெளியும், காலமும் முழுவதுமாக தீரும்வரை, இடைவிடாமற் கிராமங்கள் தோறும் அவை முறைவைத்து குரைத்துக்கொள்ளும்.
இலவங்கம் மற்றும் ஆப்பிள்மர நிழல்களின் காரணமாக கறுப்புமை வழியும் தடங்கள். ஆடுதல் அசைதலற்ற சலவைக்கல்போல தோட்டம். வீடுகூட, ஏதோ கல்லறையை நினைவுபடுத்தும்படி இருக்கும். என் கரத்தைப் பிடித்தபடி நடந்துவந்த என் இளைய சகோதரன் வெறிச்சோடிகிடந்த வீதிக்காய் திறந்துகிடந்த வெளிக்கதவை ஒருவித உந்துதலோடு பிரமை பிடித்தவன்போல பார்க்கிறான்.
அத்தியாயம்-14
ஒருமுறை, எனது காதலனுடைய கறுப்புவண்ண கார் பள்ளிக்கெதிரே வந்துநின்றபோது பார்க்கிறேன், அதில் அவனுடைய டிரைவர் மட்டுமே இருக்கிறான். தகப்பனாருக்கு சுகவீனமென்றும் அதனால் இளைஞன் சடெக்வரை சென்றுள்ளதாகவும் அறிகிறேன். அதுவரை சைகோனில் தங்கி, விடுதியிலிருந்து பள்ளிக்குக் கொண்டுபோய் விடவும், பிறகு அங்கிருந்து விடுதிக்கு அழைத்துவரவும் டிரைவருக்கு உத்தரவு பிறப்பிக்கபட்டிருக்கிறது; அடுத்த ஒரு சில நாட்களிலேயே சின்ன முதலாளியைக் காரில் பழையபடி பார்க்க முடிகிறது. கறுப்பு வாகனத்தின் பின்னிருக்கையில் வழக்கம்போல அமர்த்திருக்கிறான், பார்வைகளை தவிர்க்க நினைத்ததுபோல முகத்தைத் திரும்பிக்கொள்கிறான், காரணம் வேறொன்றுமில்லை, அவனுக்கு வழக்கம்போல அச்சம். இருவரும் தழுவிக்கொள்கிறோம், வார்த்தைகளேதுமில்லை, பள்ளிக்கெதிரே இருக்கிறோம் என்பதைக்கூட மறந்தவர்களாய் முத்தமிட்டுக்கொள்கிறோம், முத்தமிடுகையில் அழுகிறான். தகப்பனாருக்கு ஆயுள் கெட்டி, அத்தனை சீக்கிரம் இறப்பதாக இல்லை. எஞ்சியிருந்த ஒரே நம்பிக்கையும் இல்லையென்றாகிவிட்டது. அவரிடம் கேட்டிருக்கிறான். எனது சரீரத்தோடு இன்னும் கொஞ்ச காலம் இணைந்திருக்க தயவுசெய்யவேண்டுமென மன்றாடியிருக்கிறான், அவரிடத்தில் தான் என்ன சொல்லவருகிறேன் என்பதைப் கட்டாயம் புரிந்துகொள்ளவேண்டும் என்றிருக்கிறான், அம்மனிதருக்கும் தனது நீண்ட நாள் உயிர்வாழ்க்கையில் ஒருமுறையேனும் இதுபோன்ற காதல் அனுபவம் கிட்டியிருக்கவேண்டும், இல்லையென்று சொல்லமுடியாது, இப்போது அவருடைய மகனுக்கு நேர்ந்திருக்கிறது, மறுப்பேதுமின்றி அப்படியான வாய்ப்பொன்றினை அவனுக்கும் அனுமதிக்கவேண்டும் அதுதான் முறை, அதாவது அவருக்கு நேர்ந்த அதே அனுபவத்தை- பைத்தியக்காரத்தனத்தை- வெள்ளையரின சிறுமி பிரான்சுக்கு திரும்பும்வரை, அவள் மீதான முட்டாள்தனமான காதலைத் தொடர்வதற்கான கால அவகாசம் அநேகமாக இன்னும் ஓராண்டுகாலம் அவனுக்கு வேண்டும், அந்த ஓராண்டுகாலத்திற்கு அவளோடுதானிருப்பான், தடுக்கக்கூடாது, அவனது காதலும் ஆகப் புதிதாய், மிகுந்த வலி¨கொண்டதாய், ஒவ்வொருதடவையும் மிகுந்த ஆக்ரோஷமான அநுபவத்திற்குரியதாய் இருக்கிறது. அவன் சரீரத்தைத்பிரிவதென்பது மிகுந்த வேதனைதரக்கூடியதாக இருக்கிறது இனி அப்படியான வாய்ப்பு அமையாதென்பதை அவனும் சரி அவனது தகப்பனும் சரி அறிந்தே இருந்தார்கள். ‘நீ செத்துத் தொலைந்தால் நிம்மதி’யென’ அவனது தகப்பனார் பலமுறை வருந்தியதாகவும் அறிகிறேன்.
ஜாடிகளிலிருந்த புதுத்தண்ணீரை உபயோகித்து ஒன்றாக இருவரும் குளித்தோம், இறுகத் தழுவினோம், நிரந்தரப் பிரிவென்பதுபோல தழுவுகிறபோது மீண்டும் அழுதோம்., எங்கள் தழுவலில் வேதனைகளே மிஞ்சின. பிறகு, எனது முறை நான் பேசவேண்டும் பேசினேன், எதற்கும் வருந்தாதே என்றேன். ‘நான் ஓரிடமாக இருக்க முடியாதவள், எங்கு வேண்டுமானாலும் புறப்பட்டுப்போகலாம்’, என்றெல்லாம் ஏற்கனவே அவனிடத்தில் பல முறை நான் கூறியிருந்தத நினைவுபடுத்தினேன். எல்லாம் முடிந்தது, இனி அதைபற்றியெல்லாம் நினைவு படுத்தி என்ன ஆகப்போகிறது, என்றான் அவன். பிறகென்ன? எனக்கென்னவோ உனது தந்தையின் முடிவு சரியாகப் படுகிறதென்கிறேன். அவனோடு இங்கேயே தங்குவதென்பது என்னால் ஆகாது, அதையும் தெரிவித்தேன், ஆனால் அதற்கான காரணத்தைச் சொல்ல எனக்கு இயலவில்லை.
வேன்லொங்கின் நீண்ட வீதிகளிலொன்று, மீகாங் நதிக்கரையில் முடிந்திருந்தது. இரவு வேளைகளில் வெறிச்சோடிகிடக்கும் சாலைகளில் அதுவுமொன்று.. அன்றிரவும் வழக்கம்போல, மின்சாரம் தடைபட்டு, வீதி இருளில் மூழ்கிக் கிடக்கிறது. எல்லாவற்றிர்க்கும் அதுதான் ஆரம்பம்.. கேட் பின்புறம் மூடிக்கொள்ள சாலையில் கால்களை வைக்கிறேன், விளக்குகள் அணைகின்றன. ஓடுகிறேன், இருளென்றால் எனக்கு அப்படியொரு பயம் அதனால் ஓடுகிறேன். ஓட்டத்தின் வேகம் மேலும் மேலும் அதிகரிக்கிறது. அப்போதுதான் அதை உணர்கிறேன், யாரோ என்பின்னால் ஓடிவருகிறார்கள், ஆமாம், என்னால் உறுதியாகச் சொல்லமுடியும், யாரோ ஒருவர், நான் ஓடிவந்தப் பாதையைலிருந்து விலகாமல் என்பின்னால் ஓடிவருகிறார். நிற்க பயந்து, ஓடியபடி திரும்புகிறேன், பார்க்கிறேன். நல்ல உயரமான நடுத்தரவயது பெண்மணி, ஆனால் அநியாயத்திற்கு மெலிந்திருந்தாள் ஏதோ பிணத்தைப் பார்ப்பதுபோல இருக்கிறது. வெற்றுகால்கள். என்னை எப்படியும் பிடித்துவிடவேண்டும் என்பதுபோல ஓடிவருகிறாள். அவள் யாரென்று புரிந்துகொண்டேன். எங்கள் முகாம் பக்கம் இதற்கு முன்பு பார்த்திருக்கிறேன். வேன்லொங்கைச் சேர்ந்த பைத்தியக்காரி. அவள் பேசக் கேட்டதில்லை, இதுதான் முதல் முறை. இரவு நேரங்களில்மட்டுமே அவள் பேசுவாள் என்று கேள்வி, பகல்நேரங்களில், வீதியிலேயே உறக்கிக்கிடப்பாள். அதோ அந்தத் தோட்டத்துக்கு எதிரில் உறங்கப் பார்த்திருக்கிறேன். எனக்குப் புரியாத மொழியொன்றில் கூச்சலிட்டபடி ஓடி வருகிறாள். உதவிக்கு யாரையாவது கூப்பிடலாமா என்றால், அதற்கும் துணிச்சலில்லை, அப்படியொரு பயம். எனக்கு அப்போது எட்டு வயது இருக்கவேண்டும். அவளது பேய்ச்சிரிப்பும், சந்தோஷக் கூச்சலும் காதில் ஒலிக்கிறது, சந்தேகமில்லை, அவற்றுக்கு நான்தான் காரணம். எனது பயமும் ஓட்டமும், அவளுக்கு விளையாட்டாய் தெரிகிறது. அச்சமே பிரதானமாக இருப்பதுபோல நினைவு. எனது புரிதல், எனது பலம் ஆகியவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்ட நினைவென்று சொல்வதுகூட முழுமையானதாகாது. அப்பெண்மணி என்னை இலேசாகத் தொட்டிருந்தாலுங்கூட, ஒரு பிணத்தைப்போல என் பங்கிற்கு பைத்தியகாரத்தனமாய் அவளைத் தொட்டுவிளையாடியிருப்பேனென்று உறுதியாகச் சொல்லமுடியும், அந்தவகையில், இன்றைக்கும் அந்நினைவு சிதைவுறாமல் முழுமையாக என்னிடத்தில் இருக்கிறது. அருகிகிலிருந்த தோட்டத்துக்குள் புகுந்து ஓடி தோட்டத்துக்குச் சொந்தமான வீட்டின் படிகளைப்பிடித்து மேலே ஏறியதும், அந்த வீட்டின் நுழைவாயிலில் சுருண்டு விழுந்ததும் ஞாபகத்தில் இருக்கிறது. அதன் பிறகு என்ன நடந்ததென்று சொல்லத்தெரியாமலேயே நாட்கள் பல கழிந்தன.
எனது வாழ்க்கையின் கடைசிகாலத்தில் மறுபடியும் அப்படியொரு அச்சத்தினை நான் சந்திக்க நேர்கிறது. அது அம்மாவுடயை உடல்நிலை சீர்குலைந்திருந்த நாட்களில் ஏற்பட்டது. அவளது உடல் நிலைகுறித்தோ, அதன் காரணமாக அவளது பிள்ளைகளுக்கும் அவளுக்கும் ஏற்படவிருந்த பிரிவினைக்குறித்தோ இன்றைக்கும் நினைவில்லை. அம்மாவுக்கு ஏதேனும் நடந்தால் என்ன ஆகும், என்பதற்காக அவளது உடல்நிலையைப்பற்றி அன்றைக்கு தெரிந்துகொள்வது அவசியமென்று நினைக்கிறேன், அதுவும் தவிர அவளுடைய அன்றைய உடல் நிலையைக்குறித்து அபிப்ராயம் சொல்ல எனது சகோதரர்களுக்கும் போதாது.
நிரந்தரமாக நாங்கள் பிரிவதற்கு ஒரு சில மாதங்களே இருந்த காலம், பின்னிரவு நேரம், சைகோன் நகரத்தில், டெஸ்ட்டார் தெருவிலிருந்த எங்கள் வீட்டு வெளிதளத்தில் உட்கார்ந்திருந்திருக்கிறோம். தோ வும் எங்களோடு இருந்தாள். நான் அம்மாவைப் பார்க்கிறேன், மிகுந்த சிரமத்திற்குப்பிறகே அவளை அடையாளம் காண முடிந்தது. ஆனால் அடுத்தகணம், சட்டென்று, குழம்பிப்போகிறேன், அவள்தானா என்ற சந்தேகம், மறுகணம் என் அருகில், சற்றுமுன்புவரை அம்மா இருந்த இடத்தில் வேறொரு பெண்மணி. ஆனால் அவள் என் அம்மா அல்ல, சாடையில் அவளைபோல தோற்றமிருந்தாலும், ஒருபோதும் அவளாக இருந்தவளல்ல, இவள் சுகவீனமுற்றிருந்தாள். பார்வை பூங்காவின் திசைக்காய் இருந்தது. உடனடியாக நிகழவிருக்கும் சம்பவமொன்றை எதிர்பார்த்ததொரு பார்வை, அதை ஊகிக்க இயலாதவளாக நான் இருந்தேன். அம்மாவின் தோற்றத்திலும், பார்வையிலும் இளமையைக்காணலாம் , அடுத்தவர் அறியக்கூடாதென்பதுபோல வழக்கமாகப் பதுக்கிவைக்கும் சந்தோஷமும் உண்டு, மொத்தத்தில் அவள் தேவதை. தோ அருகில்தானிருந்தாள். எனினும், அவளுக்கு நான் கண்ட எதுவும் கண்களில்படவில்லை போலிருக்கிறது. அன்றைக்கு என் கண்களில் பட்ட பீடையிடத்தில், அம்மாவுக்கென்று நான் வர்ணித்த இளமையின் சாயலோ, தோற்றமோ, பிறர் அறியா சந்தோஷமோ இல்லை. எனக்கு நேர்ந்த இந்த அனுபவம், அநேகமாக அம்மா அமரும் இடத்தில் அவளும் வந்தமர்ந்த அதேநேரத்தில் ஏற்பட்டிருக்கலாம்., தவிர அம்மாவன்றி வேறொரு பெண்மணி, அம்மாவின் சாயலில் இருக்கமுடியாதென்றும் தெரியும். வேறொருவரால் நிரப்பமுடியாத அந்த அடையாளம் திடீரென்று எங்கோ தொலைந்துபோனது, அதை மீட்கும் வகையின்றி நானிருந்தேன், அவள் மீண்டும் எழுந்து வருகிறாள். அக்காட்சியைத் தக்கவைத்துகொள்வதற்கான வழிதெரியவில்லை. பைத்தியகாரிபோலானேன், கத்தி ஊரைகூட்டவேண்டும் போலிருக்கிறது, ஓலமிட்டேன், குரல் பலவீனமாய் ஒலிக்கிறது, விவரித்த அத்தனைக் காட்சியும் பனிப்பாளமாய் பரவிக்கிடக்க, அதில் பிணம்போல் உறைந்து கிடக்கிறேன், பனிப்பாளங்களை உடைத்து என்னை மீட்க யாரேனும் வரமாட்டார்களாவென்று அபயக் குரல் எழுப்பினேன். அம்மா திரும்பவும் வந்தாள்.
நகரத்திலிருந்த அத்தனைபேரையும் அந்தப் பிச்சைக்காரியாக மாற்றினேன், நகரத்தில், வயற்காடுகளில், சியாம் நதியை ஒட்டிய பாதைகளில், மீகாங் நதிக்கரைகளில் கண்ட பிச்சைகாரிகளெயெல்லாம் அவளாக மாறிப்போனார்கள். என்னை அச்சுறுத்தும் எவரும் அவள்தான், அப்படித்தான் உருவெடுத்தார்கள். எங்கிருந்தோவெல்லாம் வருகிறாள். கல்கத்தாவில் காணக்கூடியவள், அங்கிருந்தே வந்திருக்கவேண்டும். எங்கள் பள்ளிவிளையாட்டுத் திடலிலிருந்த ஆப்பிள் மற்றும் இலவங்க மர நிழலில் எந்நேரமும் உறங்கிக்கிடந்தாள். அந்நேரங்களில் அவள் அருகிலிருக்கும் அம்மா புழுக்கள் தின்ற, ஈக்கள் மொய்க்கும் அப்பெண்மணியின் பாதங்களுக்கு சிசுருட்ஷை பண்ணுகிறாள்
அவளருகிலேயே கதையின் நாயகியான சிறுமி, கடந்த இரண்டாயிரம் கி.மீட்டர்தூரம் அவளை சுமந்து வந்திருக்கிறாள். இனி அச்சிறுமி அவளுக்குவேண்டியதில்லை, அவளைத் தானம் செய்கிறாள், இந்தாப் பிடி, வாங்கிக்கொள். எனக்கு பிள்ளைகளில்லை, அப்படிச் சொல்லிக்கொண்டு எவரும் கண்ணிற்படக்கூடாது, செத்தொழிந்தவர்கள் அல்லது வேண்டாமென்று தூக்கி எறியப்பட்டவர்கள், வாழ்க்கையின் இறுதியில் பிண்டமாகிப்போகிறவர்கள். ஆப்பிள், இலவங்க மரநிழலில் உறங்கும் அவள் இன்னும் உயிரோடுதனிருக்கிறாள், அவளை அத்தனை சீக்கிரம் மரணம் கொண்டுபோகாது, ஆயுள் கெட்டி. ஆனால் பின்னல்வேலைபாடுகொண்ட கவுண் அணிந்த அவள் இறப்பாள், அது உறுதி. அவள் அழவும் நேரிடும்.
பாதையை ஒட்டியிருந்த நெல்வயல்களின் வரப்புகளில் அவளை பார்க்கமுடிகிறது, கூச்சலிடுகிறாள், தொண்டை கிழிய சிரிக்கிறாள், இறந்தவர்களை எழுப்ப நினைக்கிற பலவந்தச் சிரிப்பு, குழந்தைகளின் சிரிப்பினைக்கேட்டு பழகிய எவரையும் எழுப்பும் சிரிப்பு. நாட்கணக்கில் பங்களாவுக்கு முன்பாக நிற்கிறாள், பங்களாவுக்குள் வெள்ளைத்தோல் மனிதர்கள், அவர்கள் பிச்சைகாரர்களுக்கு சாப்பிட ஏதாவது கொடுப்பதைப் பார்த்த ஞாபகம். பிறகு ஒரு தடவை, அதிகாலை நேரம், கண்விழித்தவள் அவள் பாட்டுக்கு நடக்கிறாள். ஒரு நாள் அப்படித்தான் காரணமின்றி புறப்பட்டுவிட்டாள், மலையைத் தாண்டினாள், பிறகு காடுகள் அதையும் கடக்கிறாள். சியாம் நதி அணையொட்டியிருந்த பாதையைத் தொடர்ந்து ஓடுகிறாள். சமவெளியின் மறுபக்கமிருக்கும், மஞ்சள் அல்லது பச்சைநிற வானத்தை பார்க்கும் ஆவலாக இருக்கலாம், கடந்து செல்கிறாள். முடிவினை நெருங்கிவிட்டவள்போல இறங்கி கடலிருக்கும் திசைக்காய் நடக்கிறாள். தனது மெல்லிய நடையினை எட்டிவைத்து, நீண்டுச் சரிந்திருந்த பாதையூடாக காட்டினுள் புகுந்து செல்கிறாள், நடக்கிறாள், வெகுதூரம் நடக்கிறாள். துர்நாற்ரம் வீசும் காடு, வெப்பம் அனலாய்க் கொதிக்கிறது. கடற் திசையிலிருந்து வீசும் உப்பங்காற்றுகூட இல்லை. காது செவிடுபடுபடியான கொசுக்களின் ரீங்காரம், மரித்த குழந்தைகள், விடாமற் பெய்யும் மழை. ஆ, கழிமுகம் தெரிகிறது, செழிப்பான நிலப்பகுதி.. வெறெங்கும் இவ்வளவு பெரிய டெல்டா பிரதேசத்தைக் கண்டதில்லை. வணடல் மண் பிரதேசம். சிட்டகாங் வரைச் நீள்கிறது. பாதைகள், காடுகள், தேயிலைத் தோட்டத்து ஒற்றை வழிபாதைகள், சிவப்பு நிற சூரியன்கள் என எல்லாவற்றையும் கடந்தாயிற்று, இனி டெல்டாவில் இறங்கி நடக்கவேண்டும். எதிர்ப்படுவதையெல்லாம் வாரிசுருட்டியபடி, கிழக்கே வெகுதூரத்தில் முடியும் சூராவளியின் திசையைக் குறிவைத்து நடக்கிறாள். அவளும் கடலும் எதிரெதிராக நிற்கிற நாளும் வரக்கூடும். ஓலமிடுகிறாள், பறவைகலெழுப்பும் விநோதமான ஒருவகை கிறீச்சிட்ட குரலில் சிரிக்கிறாள். இவள் சிரிப்பின்காரணமாக பாய்மரப்படகொன்று சிட்டகாங்கில் இவளை நெருங்குகிறது. படகிலிருந்த மீனவர்கள், அழைத்து படகில் ஏற்றிக்கொள்கிறார்கள், அவர்களுடன் சேர்ந்து வங்காள விரிகுடாவை இப்போது கடக்கிறாள்
கல்கத்தாவைச் சேர்ந்த புற நகர்பகுதி, குப்பைகள் மலைபோல குவிந்துகிடக்க அங்கே அவளை மறுபடியும் பார்க்கிறோம். நொடியில் மறைந்துபோகிறாள். மீண்டும் கண்ணிற்படுகிறாள், இம்முறை அவளை கல்கத்தாவிலுள்ள பிரெஞ்சு தூதுவர் அலுவலகத்தின் பின்புறம் பார்க்கிறோம். பூங்காவொன்றில் படுத்திருக்கிறாள். முகத்தில் தனது தீராபசியை ஆற்றிக்கொண்ட நிம்மதி. இரவு முழுக்க அங்கேயே இருக்கிறாள், சூரியன் உதிக்கிற நேரத்தில் கங்கைக்கரையில் நிற்கிறாள். அவளிடத்தில் இன்னமும் சிரிப்பும், எள்ளலும் இருக்கின்றன. அங்கேயே தங்கிக்கொள்கிறாள், இங்கே உண்பதும் உறங்குவதுமாக இருக்கிறாள், அமைதியான இரவுவேளைகலை ரோஸ்-பே பூங்காவில் கழிக்கிறாள்.
ஒரு நாள் எதேச்சையாக நான் அங்கு வருகிறேன், எனக்கு அப்போது பதினேழு வயது. ஆங்கிலேயர்கள் குடியிருக்கும் பகுதி, வெளிநாட்டு தூதுவர் அலுவலகங்களுக்கான குட்டிப்பூங்காக்கள், வடகிழக்கு பருவக்காற்று மும்முரத்துடன் இயங்கும் காலம். டென்னிஸ் விளையாட ஆட்களில்லை. கங்கைக்கரையெங்கும் தொழுநோயாளிகள் சிரித்தபடி இருக்கிறார்கள். வழக்கமாக நாங்கள் பயணிக்கிற கப்பல் பழுந்தடைந்ததால், கல்கத்தாவில் இற,ங்கிக்கொள்ளவேண்டியிருந்தது. நேரத்தைப் போக்க நகரத்தை சுற்றிப்பார்க்கிறோம். மறுநாள் மாலை அங்கிருந்து புறப்படுகிறோம்.
அத்தியாயம்-15
பதினைந்தரை வருடங்கள். சாடெக் முகாமில் மளமளவென்று காரியங்கள் நடந்தன. அணிந்திருக்கிற ஆடைகள் போதும் எங்களுக்கு நேர்ந்த பொல்லாத நிலைமையை விளக்குவதற்கு. தாய்க்காரிக்கு அத்தனை விவேகமில்லை, ஒரு சின்னப் பெண்ணை எப்படி வளர்க்கவேண்டுமென்பது கூடப் போதாது. பரிதாபத்திற்குரிய பெண், உங்களுக்கு நம்பிக்கை இல்லை அப்படித்தானே? அவள் அணிந்த தொப்பிக்கு அர்த்தமில்லை என்று நினைக்காதீர்கள், அவள் உதட்டுச் சாயத்திற்குங்கூட பொருளிருக்கிறது, அதாவது அடுத்தவர் பார்வையை தன்பக்கம் திருப்பவேண்டும், பார்வைக்குப் பின்னே பணம் இருக்கிறது. உடன்பிறந்தவர்கள், குண்டர்களென எவரும் அதற்குப் பலியாகலாம். ஒரு சீனனென்று சொல்கிறார்கள், கோடீஸ்வரனின் மகனாம். நீலவண்ணப் பீங்கான் நிறத்தில் மேகோங் கரத்தில் ஒரு பெரிய வில்லாவும் அவனுக்கு உண்டு. கிழவனுக்கு தனது மரியாதையை காப்பாற்றிகொள்ள விருப்பமில்லை போலிருக்கிறது, போயும் போயும் வெள்ளைக்கார நாய்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தியையா தன் மகனுக்குக் கொண்டுவருவதென்று, மறுத்துவிட்டான்.
பெண்மணி என்று அழைக்கபட்ட அவள் சாவன்னாகேட்டைச் சேர்ந்தவள் அவளது கணவனுக்கு வேன்லோங்கில் உத்தியோகம் கிடைத்திருந்தது. ஒருவருடகாலம் வேன்லோங்கை அவள் எட்டிப்பார்க்கவில்லை. எல்லாம் அந்த இளைஞனால் வந்தது, அவனுக்கு சாவன்னாகேட்டில் துணை நிர்வாகியென்ற உத்தியோகம். இனியும் அவர்களிருவம் தொடர்ந்து நேசிக்க முடியாத நிலை. ஆக அவன் சிறிய துப்பாக்கியொன்றினால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டான், அது நடந்தது புதிய உத்தியோகத்திற்காக வேன்லோங் நகருக்கு புறப்படும் தினம், குண்டு அவனது மார்பில் பாய்ந்திருந்தது. சம்பவம் சூரியன் காட்டமாக இருந்த ஒருநாளில், ராணுவ முகாமிற்கு வெளியே நடந்தது. அவளுடைய இளவயது பெண்களுக்காகவும், தனது கணவன் வேன்லோங்கிற்கு மாற்றாலாகி இருப்பதாலும், எல்லாவற்றையும் இனி நிறுத்தியாக வேண்டுமென்று அவனிடத்தில் அவள் சொல்லியிருந்தாள்.
கொலென் நகரத்தில் மோசமான இடமென வர்ணிக்கப்பட்ட பகுதியில், ஒவ்வொரு இரவும் அது நடந்தது. ஒவ்வொரு இரவும், மோசமான நடத்தைக்கொண்ட அந்தப் பெண், தனது உடல் அரவணைப்புக்கென்று, பணக்கார சீன அய்யோக்கியன் ஒருவனிடம் போய்வருகிறாள். வெள்ளைச் சிறுமிகள் படிக்கும் பள்ளியில், பிறகு அவர்கள் நீந்தப்போகிற உடற்பயிற்சிகிளப்பின் நீச்சல் குளத்தில் என்று எல்லா இடங்களிலும் அவளைப் பார்க்க முடிகிறது. சாடெக் பள்ளி ஆசிரியை, அப்பெண்ணிடம் உரையாடுகிறவர்கள் தண்டிக்கபடுவார்களென ஒரு நாள் சுற்றறிக்கை அனுப்பினாள்.
பள்ளியின் இடைவேளையின் போது, ஒரு நாள் தனியொருத்தியாக, வெளிமுற்றத்திலிருந்த தூணொன்றில் சாய்ந்தபடி வீதியை வெகு நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறாள். தனது தாயிடம் அதுபற்றி எதுவும் சொல்லவில்லை. கொலென் நகரத்திலிருந்து சீனனின் கறுப்பு நிற சொகுசுக் காரில் பள்ளிக்கு வருவதுமட்டும் தொடர்கிறது. அவள் புறப்பட்டுச் செல்ல அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவளிடம் பேசுவதற்கு எவளுக்கும் தைரியமில்லை, ஒருத்திக்கூட முன் வரவில்லை. இந்தத் தனிமை, வேன்லொங் நகரத்துப் பெண்மணியைப் பற்றிய தூய நினைவுகளை அசைபோட உதவிற்று. அதைப்புரிந்துகொண்டதுபோல அவளும் வருகிறாள், முப்பத்தெட்டு வயதிருக்கவேண்டும். சிறுமிக்கு பத்துவயது, நினைவுகளை அசைபோடும் இந்த நேரத்தில் அவளுக்கு வயது பதினாறுவயது.
பெண்மணி அறைக்குவெளியே தளத்தில் நின்றவாறு மேக்கோங்கின் அகன்ற பெரிய வீதிகளை வேடிக்கைப் பார்க்கிறாள், கிருஸ்துவ சமய வகுப்பு முடிந்து எனது இளைய சகோதரனும் நானும் திரும்பிகொண்டிருக்கிறோம். மாளிகையின் மத்தியில் அந்த அறை, சுற்றிலும் திறந்த வெளிகள், மாளிகை ரோஸ்-பே யும், பணைகளுங்கொண்ட பூங்காவுக்கு மத்தியில் இருக்கிறது. ராணுவ முகாமிலிருந்த மற்ற மனிதர்களுக்கும் தொப்பியணிந்த சிறுமிக்கும் உள்ள இடைவெளி, இங்கே அந்தப் பெண்மணியிடத்திலும் உண்டு. எனினும் நதியை ஒட்டிய பெரிய வீதிகளை பார்க்கும்பார்வையில் இருவருக்கும் பேதங்களில்லை. இருவருமே தனிமைபடுத்தபட்டிருக்கிறார்கள். தன்னந்தனிகாட்டு ராணிகள், நல்லதற்கு மட்டுமல்ல கெட்டதற்குங்கூட. மானக்கேடான ஒரு விஷயத்தில் மட்டும் இயற்கையாய் இருவருக்குமிடையே ஒற்றுமை இருக்கிறது: தங்கள் உடல் தழுவப்படவும், முத்தமிடப்படவும், இனி அப்படியொருபரவசம் இல்லை என்பதுபோல அனுபவம் பெறவும், அப்படியொரு அனுபவத்தின் முடிவில் இறக்கவுங்கூட தாயாரென்று தங்கள் உடல்களை, உண்மையான அன்பற்ற காதலர்களிடம் ஒப்படைக்கிறார்கள். அதைச் சொல்லவும் செய்கிறார்கள். இப்போதுள்ள பிரச்சினை அப்படியொரு சந்தோஷமான மரணம் குறித்தது. அது அவர்களுக்கு வாய்க்கமாட்டேன் என்கிறது, வலிமை வாய்ந்த அந்த மரணம், அவர்களிடமிருந்தும் அவர்களுடைய அறைகளிலிருந்தும் தப்பி விடுகிறது, அதற்கான காரணமும், ராணுவமுகாம்களில், ஆரம்ப சுகாதார நிலையங்களில், பொதுவிடங்களில், வரவேற்பு கூடங்களில், ஏற்பாடு செய்யபடும் அரசு நிர்வாகத்தின் கூட்டு நடனங்களில், மொத்தத்தில் ஊரெங்கும் தெரிந்திருந்தது.
வழக்கம்போல அரசாங்கக் கொண்டாட்டகளில் கலந்துகொள்ளும் முஸ்தீபுடன் அப்பெண்மணி இருக்கிறாள். சாவன்னாகேட் இளைஞன் பற்றிய கதை எல்லோரும் மறந்திருப்பார்கள் என நினைக்கிறாள். அப்பெண்மணிக்குத் திரும்பவும் இரவு நேரகொண்டாட்டங்கள் வேண்டும், அதன்மூலம் அவ்வப்போது மனிதர்களைச் சந்திக்க முடியும், அதன்மூலம் நெல்வயல்கள், அச்சம், உன்மத்தம், காய்ச்சல்,மறதிக்கிடையே தொலைந்துபோன அவளது அலுவலகத்தின் கொடூரமான தனிமைச் சூழலிலிருந்து அவ்வப்போது விடுபடவும் முடியும்.
ஒரு நாள் மாலை நேரம் பள்ளியிலிருந்து வெளியே வருகிறாள். வழக்கம்போல கறுப்புநிற சொகுசுக் கார். வழக்கம்போல தலையில் அதே தொப்பி, வழக்கம்போல லாமேஓர் ஷ¥, அவள் வெளியில் செல்லவேண்டும், வழக்கம்போல பணக்கார சீனனின் உடலை அறியவேண்டும், அவன் இவளை நீராட்டுவான், வெகு நேரம் பிடிக்கும், அவளுடைய சொந்த வீட்டில் இவளுக்கென அம்மா புதுத் தண்ணீரை ஜாடியொன்றில் பத்திரமாக வைத்திருப்பாள், அதைப்போல அவனும் இவளுக்காக வைத்திருக்கிறான் பிறகு ஈர சரீரத்துடன் கட்டிலில் கொண்டுபோய் சேர்ப்பான், மின் விசிறியைச் சுழலவிடுவான், இவளைக் கட்டி அணைப்பான். மேலும் மேலும் தொடரும். இவளும் நிறுத்தாதே என்பாள். பிறகு தனது விடுதிக்குத் திரும்புவாள். அவளைத் தண்டிக்கவோ, அடிக்கவோ, தூற்றவோ, துன்புறுத்தவோ அங்கு ஒருவருமில்லை.
அன்றைக்கு என்னை மிகவும் வதைத்த இரவு முடிவுக்கு வந்திருந்த நேரம், ராணுவமுகாமின் பெரிய திடல் ஒளிவெள்ளத்தில் மூழ்கியிருந்தது. அவள் நடனமாடிக்கொண்டிருந்தாள், விடிந்தது. பகல் அவள் உடலைச் சுற்றியிருந்தது, நேரம் கடந்தது சூரியன் மெல்ல உதிக்கிறான், வடிவம் நொறுங்கிப்போகிறது. அவளை நெருங்க அச்சம். போலீஸ¤க்கு அச்சமில்லைபோலும். மதியம் பயணம்முடித்து பெரிய படகு கரையை அடைந்தற்குப்பின்னர், அந்த இடம் வெறிச்சோசிவிடும், ஒன்றுமிருக்காது.
விடுதியின் தலைமை வார்டன் பெண்மணியிடம் அம்மா கூறினாள்: அதனாலென்ன, அதையெல்லாம் பெரிதுபடுத்தவேண்டாம், நீங்கள் பார்த்தீர்கள் இல்லையா, சுருங்கிப்போன பழைய சட்டைகள், ரோஸ் நிற தொப்பி, தங்கநிற காலணி அத்தனையும் அவளுக்கு எவ்வளவு அழகாக இருக்கிறது பாருங்கள். தனது பிள்ளைகளைப் பற்றி பேசும்போது அம்மா சந்தோஷத்தில் மிதப்பாள், அந்நேரத்தில் அவள் மேலும் அழகாக இருப்பாள். விடுதியின் இளம் பெண் ஊழியர்கள் அனைவரும் அம்மாசொல்வதை ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். முகாமிலிருந்த அத்தனை ஆண்களும், மணமுடித்தவர்கள், முடிக்காதவர்கள் அத்தனைபேரும் ஒருவர் பாக்கியில்லை அவளைத்தான் மொய்க்கிறார்கள், இந்தப் சின்னப்பெண்தான் வேண்டும் என்கிறார்கள். நீங்களே பாருங்கள், இன்னமும் அவள் குழந்தைதான். வெட்கமற்ற செயலென்றா விமர்சிக்கிறார்கள்? நான் கேட்கிறேன், இவள் முகத்தைப் பாருங்கள், அப்பாவியான இவளா ஒழுக்கக்கேடான காரியத்தில் இறங்குவாள்?
அம்மா வெகுநேரம் நிறுத்தாமல் பேசிக்கொண்டிருக்கிறாள். பெருகி வரும் விபச்சாரம் பற்றி பேசுகிறாள், சிரிக்கிறாள். தொடர்ந்து அவள் பேசிய பேச்சில் ஊராரின் வம்புபேச்சு, ஏளனம், தொப்பி, ஆற்றைக் கடக்கும் சிறுமியின் சௌந்தர்யம் என எல்லாமிருக்கிறது இடைக்கிடை சிரிக்கிறாள். பிரெஞ்சு காலனியவாழ்க்கையில் தவிர்க்கமுடியாத யதார்த்தம், வெள்ளைத்தோல், நேற்றுவரை எங்கோ காலனிய அரசு கட்டிடங்களில் முகவரியற்று இருந்த பெண்ணை, சட்டென்று ஒரு பெருநாளில் கீழ்மையான பணக்கார சீனன் ஒருவனோடு சேர்த்துவைத்து பலரும் விமர்சிப்பது, வட்டிகடைகாரியென அச்சிறுமியை வசைபாடவைக்கக் காரணமான வைரமோதிரம் எனப் பேச்சை மறுபடியும் தொடர்ந்த அவள் கடைசியில் குமுறி அழுகிறாள்.
– தொடரும்…
– பதிவுகள் சஞ்சிகை , ஜூன் 2008, மூலம்: மார்கெரித் த்யூரா (1914-1996), தமிழில: நாகரத்தினம் கிருஷ்ணா.