கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 4, 2024
பார்வையிட்டோர்: 4,867 
 
 

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம்-7

எங்கள் இருவருக்குமான சத்திப்பு காலம் முழுவதும் அதாவது ஒன்றரை ஆண்டுகாலம், இப்படித்தான் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தோமேயன்றி, இருவருக்குமான வாழ்வொன்றைப் பற்றிய நினைப்போ, அது தொடர்பான உரையாடலோ இல்லை. எங்களிருவருக்கும் பொதுவான வாழ்க்கையொன்றை கற்பனை செய்வதற்கில்லை என்பது முதல்நாளே விளங்கிவிட்டது, எனவே நடக்கும் உரையாடல்கள் இருவருக்குமான வாழ்க்கைப்பற்றிய அக்கறையின்றி சஞ்சிகைக்குறிய கருப்பொருள் தன்மையுடனோ, விவாதத்திகுறியதாகவோ, பேச்சில் ஒருவரொருக்கொருவர் ச¨ளைத்தவரல்ல என்பதை நீருபிக்கின்ற வகையிலோ இருந்தது.

” பாவம்! உனது பிரான்சு அனுபவம் மோசமாக அமைந்துவிட்டது”, என்கிறேன். அதை ஆமோதித்தான். பெண்கள், கல்வி, ஞானம் அனைத்தையும் பாரீஸில் பணம் கொடுத்து வாங்க முடிந்தது என்கிறான். என்னை விட பன்னிரண்டு ஆண்டுகள் வயதில் கூடுதலாக இருப்பது அவனை பயமுறுத்துகிறது. ஏமாற்று வார்த்தைகளோ, காதல் மொழிகளோ, எதுவென்றாலும், அப்பேச்சில் நாடக அனுபவத்தின் இணக்கமும், நேர்மையும் இருக்க, அக்கறையுடன் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

எனது குடும்பத்தை அறிமுகப்படுத்த இருக்கிறேனென்று சொல்ல, ஐயோ வேண்டாமே என்கிறான். நான் சிரிக்கிறேன்.

அவனது உணர்வுகளை வேடிக்கையாக வெளிப்படுத்த தெரிந்துவைத்திருக்கிறான். அவனது தந்தையைப் பகைத்துக்கொண்டு, என்னை விரும்பவோ, கைப்பிடிக்கவோ, அவனோடு அழைத்துக்கொள்ளவோ முடியாதென்பதும் புரிகிறது. தனக்குள்ள அச்சத்திலிருந்து விடுபட்டு என்னை நேசிப்பதற்குறிய துணிச்சல் அவனிடத்தில் துளியுமில்லை. என்னை அவனது பிடியில் சிக்கவைக்க முடிந்த கதாநாயகத் தன்மை ஒருபக்கம், தனது தந்தையின் பணம் ஏற்படுத்தியிருக்கும் கோழைகுணம் மறுபக்கம், இரண்டும் அவனிடத்தில் இருக்கின்றன. எனது சகோதரர்களைப் பற்றிப் பேச நான் வாய் திறந்ததால்போதும்? முகம் வெளுத்துபோகிறது. அத்தனை பயம். ஏதோ எனது குடுப்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும், தங்கள் வீட்டுப்பெண்ணை திருமணம் செய்துக்கொண்டே ஆகவேண்டும், என்றிவனைக் கெஞ்சுவதுபோல நினைக்கிறான். எனது குடும்பத்தவர்களுக்கு எப்போதோ அவன் அர்த்தமற்றவனாக ஆகி இருப்பனாம், இனி அவளுக்கென்று கூடுதலாக மதிப்பற்றுப்போய், அதன்பொருட்டு அவளையும் ஒருநாள் இழப்பதன்றி, வேறு எதுவும் நடப்பதற்கு வாய்ப்பில்லையாம், கூறுகிறான்.

பாரீஸ¤க்குத் தான் போன நோக்கம் வணிகத்துறையில் கல்விகற்பதற்காகவென்றும், அவன் அதைத் தவிர பிறவற்றில் அக்கறைகாட்டியதால் கோபமுற்ற அவனது தந்தை, செலவுக்கென்று அனுப்பிய பணத்தைச் சுத்தமாக நிறுத்தியதோடு, சொந்த நாட்டிற்குத் திரும்புவதற்கானப் பயணச் சீட்டையும் அனுப்பியிருந்ததால், பாரீஸைவிட்டு புறப்டவேண்டிய அவசியம் வந்ததாகக் கடைசியில் உண்மையைக் கூறினான். தனது படிப்பைத் தொடரமுடியாமல் திரும்பிவந்தற்காக வருந்துகிறானாம். தொலைதூர கல்விதிட்டத்தின் மூலம் பாதியில் விட்டக் கல்வியை முடிக்கவிருப்பதாகக் கூறுகிறான்.

எங்கள் குடுபத்துடனானச் சந்திப்பு ஷோலென் விடுதியொன்றில் ஏற்பாடு செய்யபட்ட விருந்துடன் தொடங்கியது. அம்மாவும் எனது சகோதரர்களும் சைகோனுக்கு வருகிறபோது நகரத்திலுள்ள அவர்கள் அறிந்திராத, இதுவரை நுழைந்திராத எதோவதொரு பெரிய சீன உணவுவிடுதிக்கு அழைத்துச் செல்லவேண்டுமென்று கூறுகிறேன். ஏற்பாடு செய்த, பெரும்பாலான மாலை நேர விருந்துகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகக் கழிந்தன. எனது சகோதரர்கள் அவனிடம் உரையாடுவதுமில்லை, ஏறெடுத்துப் பார்ப்பதுமில்லை, அவர்கள் கவனம் முழுதும் பரிமாறப்படும் உணவிலிருக்கிறது. அவர்களால் அவனைக் கவனிக்கப் போதவும் போதாது, அது நடக்கக்கூடியதென்றால், ஒழுங்காகக் கல்வி கற்கவும், சமுதாயத்தின் ஆரம்ப வாழ்வியல் விதிகளுக்கு இணங்கிப்போகவும் அவர்களால் முடிந்திருக்கும். உண்கிறபோது அம்மா மாத்திரம் கொஞ்சநேரம், தொடக்கத்தில், பறிமாறப்படும் உணவைக்குறித்தோ, அதிகபடியான அதன் விலைகள் குறித்தோ ஒரு சில வார்த்தைகள் கூறுவாள், பிறகு வாயைமூடிக்கொள்வாள். இரண்டுமுறை வீணாகத் அவன் முயற்சித்தான், முதலின் தனது பாரீஸ் அனுபவத்தைச் சுருக்கமாகச் சொல்ல முயன்றான், முடியவில்லை. சில சமயங்களில் அவன் எதையாவது சொல்லிக்கொண்டிருக்க, நாங்கள் ஏதோ கேட்டோமென்று பேர்பண்ணிகொண்டிருப்போம், அவ்வளவுதான். எல்லோருடைய கவனமும் உணவிலிருக்க, அவனது முயற்சிகள், நிலவிய அமைதியில் கரைந்துபோகின்றன. என் சகோதரர்ககளோ இத்தனை நாட்களாகப் பட்டினிகிடந்தவர்களைப்போல உண்கிறார்கள், இதற்குமுன், அவர்களைப்போல உண்பவர்களை வேறெங்கும் கண்டதில்லை.

உண்ட உணவிற்கான பணத்தினைச் சிறிய பீங்கான் தட்டொன்றில் எண்ணி வைக்கிறான். நாங்கள் அனைவரும் வியப்புடன் பார்க்கிறோம். முதன்முதலாக எழுபத்தெட்டு பியாஸ்தர் பணத்தை தட்டில் அடுக்கி இருக்க, மூர்ச்சை ஆகாதகுறை. அம்மாவிடம் சந்தோஷம் தாண்டவமாடுகிறது. எல்லோரும் புறப்பட தயாரானோம். ‘நன்றி’ என்ற சொல்லை மறந்துங்கூட ஒருவரும் வாய்திறந்து உச்சரிக்கவில்லை. இப்படியான உபசரிப்புக்காகவாவது நன்றி என்று சொல்லி இருக்கலாம். ‘இல்லை’, ‘வணக்கம்’, ‘பிறகு சந்திப்போம்’, ‘நலமா’? போன்றவை நாங்கள் அறிந்திராத சொற்கள்.

குறிப்பாக என் இரு சகோதரர்களும் ஒரு வார்த்தைகூட அவனிடத்தில் பேசவில்லை. அவர்கள் தொட்டுணரவும், பார்க்கவும், கேட்கவும் வாய்ப்பினை அளிக்கவல்ல ஸ்தூல உடம்புடன் அவன் வரவில்லைபோலிருக்கிறது. அவர்களால் அது முடியவும்முடியாது என்பதற்கு அடுக்கடுக்காகக் காரனங்களைச் சொல்லலாம், முதலாவது என் காலடியில் அவன் கிடப்பதும், என் அன்பினைப் பெறுவதற்கான தகுதி அவனுக்கு இல்லையென்று அவர்கள் நினைப்பதும். அடுத்து பணத்திற்காக அவனுடன் இருக்கும் நம் சகோதரி, உண்மையாக அவனை நேசிக்கமாட்டாள் என்றும் அவர்கள் கருத இடமுண்டு. காதலை முறித்துக்கொள்ளும் நிலைக்குச் செல்லக்கூடியவன் இல்லை என்பதால், என்னால் நேர்படும் எந்த இடர்பாட்டையும் சகித்துக்கொள்ளக்கூடியவன் என்பதுகூட ஒரு காரணம். பிறகு அவன் ஒரு சீனன் என்பதும், நான் ஒரு ஐரோப்பிய பெண் என்பதும் அவற்றுள் மிகமுக்கியமானது. எனது மூத்த சகோதரன், அவனை ஒருபொருட்டாகவே மதிப்பதில்லை என்ற வகையிலும், அவனிடம் பேச விருப்பமில்லாமல் இருப்பதும், அவளை அப்படியொரு முன் மாதிரியான முடிவொன்றிற்கு இட்டுச் செல்கிறது. எனது காதலனுக்கு எதிரான எல்லா நடவடிக்கைகளுக்கும் எனது சகோதரனையே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். நான் மட்டு விதிவிலக்கா என்ன? எனது குடும்பத்தார் சார்பாக எதையாவது பேசவேண்டும் என்கிறபோது மட்டும் வாய்திறப்பதோடு சரி மற்ற நேரங்களில் நானும் மௌனமாகவே இருக்கிறேன், எனது குடும்பத்தை வைத்துக்கொண்டு அவனிடம் என்ன பேசமுடியும். உதாரணமாக எனது சகோதரர்கள் இரவு உணவை உண்டு முடித்தபிறகு ‘சூர்சு’க்குச்(Source) சென்று குடிக்கவும், ஆடவும் விருப்பமென்று என்னிடம் தெரிவிக்க்கிறபோது, எங்கள் அனைவருக்கும் குடிக்கவும், ஆடவும் விருப்பமென்று அவனிடம் சொல்வது நானாகத்தான் இருக்கும். நான் சொல்வது எதையும் காதில் வாங்காதவன்போல நடந்துகொள்கிறான். சொன்னதைத் திரும்பச் சொல்வதோ, எனது வேண்டுகோளை மறுபடி அவனிடம் கொண்டுபோவதோ நல்லதல்ல என்பது என் மூத்த சகோதரனின் தீர்மானம், அவனுடைய பொருமலுக்கும் நான் பணிந்து ஆகவேண்டும். கடைசியில் அவனும் மனமிறங்குகிறான். எனது கெஞ்சலை முடிவுக்குக் கொண்டுவர நினைத்தவன்போல தாழ்ந்தகுரலில், ஒருசில விநாடிகள் என்னோடு தனித்திருக்க விருப்பமென்ற தனது அந்தரங்க ஆசையைத் தெரிவிக்கிறான். இப்பொழுது என் முறை, எனக்கு அவன் சொல்வது எதுவும் காதில் விழாதாதுபோல நடந்துகொள்ளவேண்டும். அவனை பழி தீர்த்துக்கொள்ளும் கூட்டத்தில் இப்போது நானும் ஒருத்தி, ஒருவகையில் எங்கள் காரியத்தினைக் குறைசொல்ல, குறிப்பாக எனது மூத்தசகோதரனின் நடத்தைக்குப் பாடம்கற்பிக்க ஒரு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தித் தருவதற்காகவாவது அவனுக்குப் பதிலிறுக்கக்கூடாது. அவன் தொடர்ந்து, ” உங்களூடைய அம்மா எவ்வளவு சோர்வாக இருக்கிறார்கள் என்று பார்”, என்கிறான். உண்மையில் ஷோலென் சீனவிடுதியில் தடபுடலாகச் சாப்பிட்டதின் காரணமாக கண்களில் நித்திரை தெரிகிறது. என்னிடத்தில் பதிலில்லை. என்னுடைய மூத்தச்கோதரன் வாயிலிருந்து மோசமான வார்த்தையொன்று கேட்கிறது. அம்மா, ‘எனது மூன்று பிள்ளைகளில் பெரியவனுக்கு மட்டும் ஒழுங்காக பேசவரும்’ எனச் சொல்லக் கேட்டிருக்கிறேன். திடீரென்று அங்கே அமைதி; எனது காதலனின் பயத்தினை அறிந்தவள், அவ்வாறே எனது இளைய சகோதரனும் பயப்படக்கூடியவன் என்பதை அறிந்திருக்கிறேன். மறுவார்த்தையில்லை. அடங்கிப்போகிறான். எல்லோரும் ‘சூர்சு’க்குப்(Source) போகிறோம். அம்மாவும் வருகிறாள். கூடிய சீக்கிரம் உறங்கிவிடுவாள் என்று நி¨னைக்கிறேன்.

எனது மூத்த சகோதரனுக்கு முன்பாக, காதலன்போல அவன் நடந்துகொள்வதில்லை. அவனது இருப்பைத் தெரிவித்துக்கொள்வதற்கான சமிக்ஞைகள் இருந்தபோதிலும், எனக்கு அவன் இருப்பு வெற்றிடமாக, புல் பூண்டற்றுப் போனதாக உணர்த்தப்படுகிறது. எனது இச்சை மூத்த சகோதரனுக்குக் கீழ்ப்படிகிறது, அவன் என் காதலனை நிராகரிக்கிறான். இருவரையும் சேர்ந்து பார்க்கிறபோதெல்லாம், அப்படியொரு காட்சியை இனி என்னால் சகித்துக்கொள்ளகூடாதென்று நினைக்கிறேன். அவனுக்கேற்படும் இழிவுக்கு அவனது நோஞ்சான் உடலே காரணம், ஆனாலந்த நலிந்த உடலே என்னைத் திருப்திபடுத்துகிறதென்பதை எப்படி புரியவைக்க. எனது சகோதரனுக்கு அவன் ஒரு வெளியிற்சொல்லமுடியாத வெட்கக்கேடான விஷயம், பெருமைக்குரியவனல்ல. கமுக்கமாகப் பிரயோகிப்படும், என் மூத்தசகோதரனின் கட்டளைகளை மீறவோ எதிர்க்கவோ எனக்குத் துணிச்சலில்லை. இதுவே என் இளையசகோதரனென்றால் சண்டை இடமுடியும். என் காதலன் விஷயத்தில், எனக்கு எதிராகக்கூட எதையும் செய்யமுடிவதில்லை. இன்றைக்கு உங்களிடத்தில் அதைப்பற்றி சொல்கிறபோதுகூட என் கண்ணெதிரே பராக்கு பார்க்கும் பாசாங்குடன்கூடிய முகமொன்றைப் பார்க்கிறேன், அம்முகத்தில் இது தவிர வேறுவிஷயங்கள் சிந்திக்க இருக்கின்றன என்பதுபோல ஒருபாவனை. எனினும் விலையுயர்ந்த விடுதியொன்றில் நன்றாகச் சாப்பிட ஆசைப்பட்டு, இதுபோன்ற அவமதிப்புகளை சகித்துக்கொள்ளவேண்டியிருக்கிறதே என்பதால் ஏற்பட்ட எரிச்சலில், கீழ்வாய்ப்பகுதி சற்றே இறுக, அதற்கான நியாயத்தையும் புரிந்துகொள்கிறேன். எனது நினைவுகளைச் சூழ்ந்தபடி எங்கும் வேட்டையாடுபவர்களுக்கான தெளிந்த இரவு. குழந்தையொன்று ‘வீல்’ என்று அழுவதையொத்த சத்தம், எதிர்பாராத நேரத்தில் புறப்பட்டு அச்சுறுத்துகிறது.

சூர்ஸூக்குச்(Source) சென்ற பிறகும் நாங்கள் அவனிடம் உரையாடலில்லை என்றே சொல்லவேண்டும்.

மர்த்தெல் பெரியே(Martel Perrier) கொண்டு வரச் செய்தோம். என் சகோதரர்களிருவரும், கொண்டுவந்த உடனேயே மடமடவென்று குடித்துவிட்டு, இரண்டாவதாக ஒன்று வேண்டுமென்றார்கள். அம்மாவும், நானும் எங்களுடையதை அவர்களிடம் கொடுத்தோம். குடித்து முடித்தார்களோ இல்லையோ, போதை தலைக்கேறியது. என் காதலனிடத்தில் பேசவில்லை என்ற குறையே தவிர, அவர்கள் புலம்பலில் குறைச்சல் இல்லை, குறிப்பாக எனது இளைய சகோதரனைச் சொல்லவேண்டும். அந்த இடம் ஏதோ இழவு வீடுபோல இருப்பதாகக் குறைபட்டுகொள்கிறான், தவிர அங்கே மது பரிமாற பெண்கள் இல்லையே என்ற வருத்தம் வேறு. வார நாட்கள் என்பதால் சூர்சு(Source)வில் அதிகக் கூட்டமில்லை. எனது இளைய சகோதரனுடன் சிறிது நேரம் ஆடினேன். என் காதலனுடனும் சிறிது நேரம் ஆடினேன். எனது மூத்த சகோதரனோடு நான் ஆடவில்லை, அவனுடன் இதற்கு முன்பு ஆடியதுமில்லை. ஓர் ஆணுக்கான கவர்ச்சி அவனுடலில் அதிகமென்று நினைக்கிறேன், அது ஏற்படுத்தும் பயம் என்னை அவனை நெருங்கவிடாமல் தடுக்கிறது. எங்கள் இருவருக்கும் பொதுவான அம்சம் எங்கள் முகத்துக்கிடையே உள்ள ஒற்றுமை. ஷோலென் நகரத்து சீனனுடைய கண்கள் கலங்கி இருக்கின்றன, கொஞ்சம் சீண்டினால் அழுது விடுவான்போல. என்னிடம், ” நான் அவர்களுக்கு என்ன குற்றம் செய்தேன்?”, என்கிறான். பதிலுக்கு நான் அவனிடம்,” உனக்கெதற்கு அவர்களைப் பற்றிய கவலை, வீட்டிலும் இதுதான் நிலைமை, எந்த மாதிரியான சூழ்நிலையென்றாலும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதென்பது அரிது”, என்கிறேன்.

அத்தியாயம்-8

அவனது அறைக்குத் திரும்பியதும், விளக்கமாய் எடுத்துரைக்கவேண்டும். நல்லதோ கெட்டதோ எது நடந்தாலும், அல்லது எங்களுக்கு எது நேர்ந்தாலும், எனது மூத்த சகோதரனிடத்தில் முரட்டுசுபாவமும், பரிவற்றதன்மையும், பிறர்அவமதிப்பும் வெளிப்பட்டிருக்கிறது. அந்நேரங்களில் அவனது முதற்தேர்வு எதிராளிகளைக் கொல்லுதல் அல்லது அவர்களது வாழ்க்கையை அர்த்தமற்றதாக ஆக்குதல், இக்கட்டான நேரங்களில் அவர்களிடமிருந்து ஒதுங்கிக்கொள்ளுதல், எதிர்வாதம்செய்தல், வெருட்டுதல், வேதனைப்படுத்துதலென்று எதையாவது செய்வான். அவனுடைய செய்கைகளாற் கலக்கமுறக்கூடியவளென்று பார்க்கையில் நானொருத்தியாகத்தான் இருப்பேன் என்பதால், எனது காதலன் பயப்பட ஒன்றுமில்லை, எனவே அதைத் தவிர்க்கவேண்டுகிறேன்.

காலையோ, மாலையோ, அல்லது புதுவருடமோ எதுவாக இருக்கட்டும் நாங்கள் வணக்கமோ வாழ்த்தோ சொல்லிக்கொள்வதில்லை. நன்றியென்ற சொல்லை அறிந்ததில்லை. எங்களுக்கிடையே உரையாடல்களில்லை, அதற்கான தேவையுமில்லை. ஒவ்வொருவரும் மற்றவரிடத்தில் ஊமையாய் இருக்கப் பழகிக்கொள்கிறோம். எதற்கும் இளகாதக் கல்நெஞ்சக்காரர்கள் நாங்கள். எங்கள் நாட்கள் ஒவ்வொன்றும், எப்படியாவது அடுத்தவரை முடித்துவிடவேண்டும் என்றகவலையோடு பிறக்கிறது, அதற்கான முயற்சியிலும் இறங்குகிறோம். பேசுவது இருக்கட்டும், ஒருவரையொருவர் நேரிட்டுக்கொள்வதையும் தவிர்க்கிறோம். அடுத்தவரை காண்கிறபோதெல்லாம் முகத்தைத் திருப்பிக்கொள்கிறோம். நேரிட்டுப் பார்ப்பதென்பது, பிறரிடத்தில் அல்லது பிறருக்கென்று வெளிப்படுத்தும் ஒருவித ஆர்வச் கோளாறு, அது நம்மைக் கீழ்மைப்படுத்திவிடுமென்பது எங்களுடைய எண்ணம். பார்க்கப்படுகிற ஒருவருக்கும் பார்க்கும்படியான தகுதிகளில்லை. அது தகுதியற்ற செயல். ‘உரையாடல்’ என்ற சொல் எங்கள் அகராதியிலில்லை, மாறாக பாசாங்கும், அகம்பாவமும் எங்களிடத்திருந்தன. வீட்டுநிகழ்ச்சியோ அல்லது பொது நிகழ்ச்சியோ – நிகழ்ச்சியென்று ஒன்றுகூடுகிறபோது, மற்றவர்களுக்கு நாங்கள் இழிவானவர்கள், வெறுக்கத்தக்கவர்கள். மிகக் கேவலமாக வாழ்வதே எங்கள் அத்தனைபேரின் நோக்கம். இச்சமுதாயத்தாற் சீரழிக்கபட்ட நம்பிக்கைக்குரிய பெண்மணி ஒருத்தியை மூன்றுபிள்ளைகளும் தாயாகப் பெற்றிருந்தது ஒன்றுதான் எங்களிடையே இருக்கிற ஆழமான ஒற்றுமை. விரக்தியின் விளிம்பில் எங்கள் அன்னையைத் தள்ளிய சமுதாயத்தின் பக்கம் நாங்கள் இருக்கிறோம். எங்கள் பாசத்திற்கும், நம்பிக்கைக்கும் உரிய அம்மாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிகள், வாழ்க்கை மீதான கசப்பினை எங்களிடத்திற் கூட்டியிருக்கிறது. அவ்வப்போது வீட்டில் அரங்கேறிய நம்பிக்கை பொய்த்த காட்சியிடமிருந்துகூட அவள் பாடங் கற்றுகொள்ளவில்லை, குறிப்பாக அவளது பையன்கள் அதாவது இருமகன்ககளால் ஏற்பட்ட விபரீதம். இவற்றையெல்லாம் முன்கூட்டியே ஒருவேளை அறிந்திருந்தாளா? அவளுடைய வாழ்க்கையே பொய்த்துவிட்ட நிலையில், எப்படி இவளாள் அமைதியாக இருக்க முடிகிறது? முகம், பார்வை, பேச்சு, அன்பு என அத்தனையையும் பொய்யாய், போலியாய் வெளிப்படுத்தும் திறனை எங்கிருந்து பெறுகிறாள். எதற்காக வாழவேண்டும்? இறந்து தொலைத்திருக்கலாமே. வாழ்வதற்கு இயலாத சமுதாயத்திலிருந்து விலகி நிற்பதும், வயதில் மூத்தவனை, இளையவர்களிடமிருந்து பிரித்ததும் அவளல்ல. விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காதவள், பொறுப்பற்றவள், இயல்புகளுக்கு மாறானவளென எல்லாமாக இருந்தவள். அதனாற்றான், அவளுக்கு இயலுமென்றால்கூட பலநேரங்களில் அமைதியாகவோ, ஒதுங்கிக்கொள்ளவோ, பொய்சொல்லவோ முடிவதில்லை. நாங்கள் மூவரும் பலவகையில் வேறுபட்டிருப்பினும், அவளுடனான எங்கள் அன்பில் மாத்திரம் ஒத்திருந்தோம்.

ஏழாண்டு காலம் அது தொடர்ந்தது. எங்களுக்குப் பத்து ஆண்டுகளிருக்கையில் ஆரம்பித்தது. பிறகு பன்னிரண்டு ஆண்டுகள், பிறகு பதினான்கு ஆண்டுகள், பதினைந்து ஆண்டுகள், பதினாறு ஆண்டுகள், பதினேழு ஆண்டுகள்..

ஆக மேற்சொன்ன எல்லாவயதுகாலத்திலும் தொடர்ந்து நடந்தது அதாவது ஏழாண்டுகாலம். அதுவரை இருந்த நம்பிக்கையெல்லாம் பொய்த்துப்போனது அல்லது விட்டுப்போனது. சமுத்திரத்திற்கு எதிரான எங்கள் முயற்சிகள்கூட கைவிட்டுப்போயின. தாழ்வாரத்தின் கீழ் உட்கார்ந்தபடி சியாம் மலையினைவேடிக்கைப் பார்க்கிறோம், சூரியன் உச்சிக்கு வந்திருந்தநேரம், கன்னங்கரேலென்று இருட்டினைப்போல காட்சியளிக்கும் மலை. இறுதியில் வாயடைத்து அம்மா ஊமைபோல நிற்கிறாள். பிள்ளைகள் எங்களுடைய வாழ்க்கை அலுப்புற்றதாகவிருந்தாலும், எதையும் எதிர்கொள்ள தயாராகவிருந்தோம்.

இளைய சகோதரன் 1942ம் ஆண்டு டிசம்பர், ஜப்பானியர் ஆக்ரமிப்பிலிருந்த சமயம் இறந்திருந்தான். பள்ளி இறுதிவகுப்பான இரண்டாவது சான்றிதழைப் பெற்ற பிறகு சைகோனிலிருந்து 1931ம் ஆண்டே புறப்பட்டு விட்டேன். பத்து ஆண்டுகளிம் ஒரே ஒருமுறைதான் எனக்குக் கடிதம் எழுதியிருந்தான். அதற்கான காரணம் என்னவென்று ஒருபோதும் எனக்குத் தெரியாது. அளவாக, பிழையின்றி, படியெடுத்து, முத்துமுத்தாக எழுதபட்டக் கடிதம். அவன் நன்றாக இருப்பதாக கடிதம் தெரிவித்தது, பள்ளி வாழ்க்கையிலும் பிரச்சினைகளில்லையென தெரிவித்திருந்தான். இரண்டுபக்கங்களை நிரப்பியிருந்த ஒரு பெரிய கடிதம். அவனுடைய குழந்தைத் தனமான கையெழுத்து நானறிந்ததுதான். கடிதத்தில் சொந்தமாக ஒரு மகிழுந்தும், வசிப்பதற்கான இருப்பிடமும் உண்டென எழுதியிருந்ததோடு, அவை தயாரிக்கப்பட்ட நிறுவனத்தின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தான். மீண்டும் டென்னிஸ் விளையாட ஆரம்பித்தது, தான் நன்றாக இருப்பது, எல்லாம் ஒழுங்காக இருக்கிறது என எதையும் விடவில்லை. என்னை மிகவும் நேசிப்பதாகக் கடிதத்தை முடித்திருந்தான். நடந்த யுத்தத்தைப் பற்றியோ, எனது மூத்தசகோதரனைப் பற்றியோ மருந்துக்கும் ஒரு வார்த்தை அதிலில்லை.

எனது சகோதரர்களைக்குறித்து பேசுவதே எங்கள் எல்லோரையும்பற்றிப் பேசுவதற்குச் சமம், அவளும் – அதாவது அம்மாவும் அதைத்தான் செய்தாள். நான் ‘என் சகோதர்கள்’ என்ற சொல்லைக் கையாளுவதுபோலவே, அவளும் மற்றவர்களிடத்தில் பேசுகிறபோது ‘என் மகன்கள்’ என்று சொல்வது வழக்கம். தன் மகன்களில் வலிமையைப் பற்றி அவள் சொல்வதெல்லாம், அவர்களுக்குப் புகழ் சேர்ப்பதாக இருக்காது. வெளியில் அதுபற்றி விவரமாகப் பேசுவதில்லை. மூத்தமகன் இளைய மகனைவிட பலசாலி என்பாள். வடபகுதியில் விவசாயம் பார்க்கிற சகோதரர்களைக் காட்டிலும் பலசாலியென்று கூடச் சொல்லியிருக்கிறாள். விவசாயம் பார்க்கிற சகோதர்களைப்போலவே தன் பிள்ளைகளும் பலசலியாக இருப்பதில் அவளுக்குப் பெருமை. தனது மூத்தமகனைப்போலவே அவளும் நலிந்த மனிதர்களை மதிப்பதில்லை. எனது ஷோலென் பிரதேசத்துக் காதலன் கூட அவளது மூத்தமகனைப் போலத்தானாம். அவள் சொன்னவற்றை இங்கே எழுத இயலாது. அவை பாலை நிலங்களில் கிடக்கிற சடலங்களுக்கு ஒப்பானது. ‘எனது சகோதர்கள்’ என்று இப்போது சொல்லக்காரணம் அந்நாட்களில் அவர்களை அப்படித்தான் அழைத்தேன். அப்படி அழைத்தது என் இளையசகோதரன் பெரியவனாகி உயிர்த்தியாகம் செய்யும்வரைத் தொடர்ந்தது.

எங்கள் குடும்பத்தில் விழாவென்று எதையும் கொண்டாடியதில்லை. கிறிஸ்துமஸ் மர அலங்கரிப்பில்லை, கைக்குட்டைகளில் அலங்காரமோ, பூவேலைபாடுகளோ ஒருபோதும் செய்ததில்லை. அதுபோலவே நான் வீட்டிலிருந்தவரை மரணமோ, உடலடக்கமோ, நினைவுகூறலோ நடத்தப்பட்டதில்லை. அவள் தனித்திருக்கிறாள். மூத்த சகோதரன் கொலைகாரன் என்ற பட்டத்துடன், இருக்கவேண்டியிருக்கிறது. பின்னாளில் இளையசகோதரன் இறப்புக்குக் காரணமாகிறான். நான் புறப்பட்டிருந்தேன், அதாவது வேருடன் பிடுங்கப்பட்டிருந்தேன். அவன் இறக்கும்வரை மூத்த சகோதரன் வசம் இருந்தான்.

அந்த நேரத்தில் ‘ஷோலென்’, அதுசம்பந்தப்பட்ட ‘படிமங்கள்’, ‘காதலன்’, ‘அம்மா’ ஆகியச் சொற்கள் என்னைப் பைத்தியக்காரியாக மாற்றியிருந்தன. உண்மையில் ஷோலெனில் என்ன நடந்ததென்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் என்னை அவதானிக்கிறாள் என்பதும், ஒரு சிலவற்றை சந்தேகிக்கிறாள் என்பதும் புரிகிறது. குழைந்தையான தன் மகளைப் பற்றி நன்கு அறிந்தவளில்லையா? மோப்பம் பிடித்துக்கொண்டு அக்குழந்தையைச் சுற்றி வருகிறாள். சமீபத்தில் என்ன ஆயிற்றோ, அவளிடத்தில் ஒருவிதமாற்றம் அதை எச்சரிக்கை என்றும் சொல்லலாம், நெருக்கத்தில் நடந்தது அவளது கவனத்தை ஈர்த்திருக்கிறது, வழக்கத்திற்கு மாறாக நிதானமாக வார்த்தைகள் வருகின்றன. எதிலும் ஆர்வம் காட்டுகிற அவளால், நினைவைத் தொலைத்துவிட்டவள்போல நடமாடமுடிகிறது, நேரான பார்வையைத் தவிர்க்கிறாள், தனது சொந்தத்தாய்க்கே வேடிக்கைப்பொருளாக, வேதனைத் தருபவளாக அவள் மாறியிருக்கிறாள். நடக்கிற சம்பவத்தை வேடிக்கைப் பார்க்கிறாள் என்றும் சொல்லலாம். எனது அம்மாவின் வாழ்க்கையில் எதிர்பாராதவொரு அசம்பாவிதம். அவளது மகள் அவளைப் பொறுத்தவரையில் திருமணமென்றால் என்னவென்று அறிந்திராதவள்; சமுதாயத்தில் தனக்குரிய இடத்தை இன்னமும் தேடிப் பெறாதவள்; அவளோடு ஒப்பிடுகிறபோது பரிதாபத்திற்குறியவள், வீணாய்ப்போனவள், ஒதுக்கபட்டவள், அவ்வாறிருக்க அந்த மகள் ஆபத்தைத் தேடிப்போகிறாள். அவற்றையெல்லாம் நினைத்தமாத்திரத்தில், பைத்தியக்காரிபோல என்மீது விழுந்து பிறாண்டுகிறாள், விரல்களை மடித்து என்னைத் தாக்குகிறாள், எனது உடல், எனது ஆடையென்று மோப்பம் பிடித்தவள், அதில் சீனன் உபயோகிக்கும் வாசனைதிரவியத்தின் மணம் வீசுகிறதென்கிறாள், அவளது குற்றச்சாட்டு எல்லை மீறுகிறது. என்னுடைய ஆடையில் சந்தேகத்திற்குரிய கறைகள் இருக்கிறதாவென்று திரும்பத் திரும்பப் பார்க்கிறாள், அவளது மகள் விபச்சாரியென்று ஊர்முழுக்கப் பேச்சாம், வீதியில் நிறுத்தப் போகிறாளாம், பட்டினிகிடக்கப் பார்க்கவேண்டுமாம், அப்போதுதான் ஒருவரும் என்னைச் சீண்டமாட்டார்களாம், நாயினும் கேவலமானவளாம். வீட்டிலுள்ள நாற்றம் போகவேண்டுமென்றால், மகளை வீட்டைவிட்டுவெளியேற்றாமல் வீட்டிற் வைத்துகொண்டு என்னசெய்யப்போகிறேனென்று அழுகிறாள்.

அடைத்து சாத்தப்பட்ட அறையின் நான்கு சுவர்களுக்குள்ளே, என் சகோதரன்.

அடுத்தவர்க்குக் கேட்டுவிடக்கூடாதென்போல, அவன் குரல் உள்ளிருந்து மெதுவாக வருகிறது.”பிள்ளைகளை அடித்துவளர்க்க தாய்க்கு உரிமை இருக்கிறது”, என்கிறான், சொற்களில் அன்பு குழைந்திருக்கின்றன. “உண்மையை அறிய எதுவென்றாலும் பரவாயில்லை”, என்கிறான். அம்மாவுடைய இந்த மோசமான நிலமைக்கு விடிவு காணவேண்டுமெனில், மகள் தனது பாதையை மாற்றிக்கொள்ளமென்கிற உண்மையை அவர்கள் அவளுக்குக் கட்டாயம் உணர்த்தவேண்டுமாம். அம்மா தனது முழுபலத்தையும் உபயோகித்து அடிக்கிறாள். என் இளையசகோதரன் வேண்டாமென்று கதறித் தடுக்கிறான். தோட்டத்துப் பக்கம்சென்றவன் மறைந்துகொள்கிறான். என்னைக் கொன்றுவிடுவார்களென்கிற அச்சம். உண்மையில் அவனுக்கு வேறொருவனிடம் பயம், அவன் எனது மூத்தசகோதரன். என் தம்பிக்கு ஏற்பட்ட அச்சம், அம்மாவின் கோபத்தைத் தணிக்கிறது. சீரழிந்த அவளது வாழ்க்கையை எண்ணியும், குடும்பத்திற்கு அவப்பெயரைச் சம்பாதித்த தனது மகளை எண்ணியும் அழுகிறாள். இப்போது நானும் அவளுடன் சேர்ந்துகொண்டு, என்பங்கிற்கு அழுகிறேன். “எனது வாழ்க்கையில் எதுவும் நேர்ந்துவிடாது, என்னை முத்தமிடுவதற்குக்கூட ஒருவரையும் அனுமதிக்கமாட்டேன், இது சத்தியம்”, என்கிறேன், பொய் சொல்கிறென் என்பதும் புரியாமலில்லை. “நோஞ்சானாகவும், சகிக்கமுடியாதத் தோற்றத்துடனுமிருக்கும் ஒரு சீனனுடன் எனக்கு உறவிருக்குமென எப்படி உன்னால் நினக்க முடிகிறது?”, என்று அவளைக் கேட்கிறேன். என் அண்ணன் கதவருகில் நின்று ஒட்டுக்கேட்பானென்று எனக்குத் தெரியும். அம்மா என்னசெய்வாளென்பதும் அவனுக்குத் தெரியும். நான் நிர்வாணமாக இருப்பதும், என்னை அவள் அடிக்கிறாள் என்பதுகூட அவன் அறிந்ததுதான். அது தொடரவேண்டுமென்று நினைக்கிறான். என் மூத்த சகோதரன் மனதிற் தீட்டியுள்ள அருவருப்பான, கலவரமூட்டக்கூடிய ஓவியத்தினைக் குறித்த அறிவு அவளுக்கில்லை.

அத்தியாயம்-9

அப்போதெல்லாம் நாங்கள் வயதில் மிகவும் சிறியவர்கள். என் சகோதரர்கள் இருவரும் வெளிப்படையான காரணங்களின்றி ஒரு நாளைப்போல சண்டையிட்டுக்கொள்கிறார்கள். எனது மூத்த சகோதரனுக்கு வழக்கமாகக் காரணம் ஒன்றுண்டு, அது அன்றைக்கும் என் இளைய சகோதரனிடத்தில் சொல்லப்படுகிறது: ” எனக்குத் தொந்தரவு கொடுக்காதே, வெளியிற் போ!” சொல்லி முடித்தானோ இல்லையோ, தம்பியை அடிக்கிறான். வாய்ச் சொல்லுக்குச் செலவின்றி இருவருக்குமிடையே கைகலப்பு. அவ்வப்போது ஸ்.. ஸ்ஸென்று வெளிப்படும் மூச்சுக்காற்றும், பொருமலும், அதிகச் சத்தமின்றி மாறிமாறி இருவரும் குத்திக்கொள்வதும் கேட்கின்றன. இதுபோன்ற சம்பவங்களின்போது, பொதுவாக அம்மா இசைநாடகங்களை பாராட்டுவதுபோல சத்தமிட்டு ஆரவாரம் செய்வது வழக்கம்.

இருவரும் கோபப்படுங்கலையில் தேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். அக்கோபத்தினை சாதாரணரகமென்று சொல்வதற்கில்லை, ஆபத்தானது, ஒருவிதமான கொலைவெறி தன்மை கொண்டது. அதை வேறு சகோதரர்களிடத்திலோ, வேறு சகோதரிகளிடத்திலோ, வேறு அம்மாக்களிடத்திலோ காண்பதரிது. என் அண்ணனுக்கு விருப்பம்போல பாதகங்களை செய்யவும், தீர்மானிக்கவும் இங்கென்று இல்லை வேறு இடங்களிற்கூட முடிவதில்லையே என்ற ஏக்கமுண்டு. அவனது இத்திறனை எதிர்க்கப் பலமின்றி பரிதாபமான நிலைமையில் என் தம்பி.

சண்டையிடுகிறபோது, இருவரில் ஒருவர் உயிருக்கு ஆபத்தென்பதுபோல அஞ்சுவோம். பிறந்ததிலிருந்தே இருவரும், ஒற்றுமையாக விளையாடியதைக் காட்டிலும் சண்டையிட்டுக்கொண்டதே அதிகமென்று அம்மா சொல்லிக்கொண்டிருப்பாள். இருசகோதரர்களிடத்திலுமுள்ள பொதுவான ஒற்றுமையென்று, அவர்களுடைய அம்மா மற்றும் சகோதரியிடத்திலுள்ள இரத்த உறவினைத்தான் குறிப்பிடவேண்டும்.

அம்மா தனது மூத்த மகனைப்பற்றி பேசும்போதுமட்டும் ‘என் பிள்ளை’யென்று சொல்லக் கேட்டிருக்கிறேன்; எங்கள் இருவரையும், ‘சின்னப் பிள்ளைகள்’ என்று அழைப்பதோடு சரி.

பொதுவாக எங்கள் வீட்டிலிருந்து எந்த ரகசியமும் வெளியிற்போகாது. இப்படி வாய்மூடிக்கிடக்கக் கற்றுக்கொடுத்ததே எங்கள் வாழ்க்கையில் முக்கியபங்கினை வகித்த வறுமையென்று கூறலாம், பிறகுதான் மற்றவை. நாங்கள் கட்டிக்காத்த ரகசியங்களுள் முதன்மையானது (இச்சொல் கொஞ்சம் அதிகப்படியானதாக உங்களுக்குப்படலாம்) காதலர் குறித்தத் தகவல்களும், பின்னர் காலனிகளுக்கு வெளியேயென்று ஆரம்பித்து, சைகோன் தெருக்களில்; தோணிப்பயனங்களில், இரயில் பயணங்களின்போது எனத் தொடர்ந்து, இறுதியில் எங்கெல்லாம் முடியுமோ அங்கென காதலர்களுடன் வைத்துக்கொள்கிற சந்திப்புகளூம் ஆகும்.

மாலைவேளையில், குறிப்பாக வறட்சி காலத்தில், திடீரென்று அம்மா கழுவித் தள்ளுகிறேன் பேர்வழிஎன்று ஆரம்பித்துவிடுவாள், வீட்டைத் தூய்மைப்படுத்தவும், குளிர்ச்சிப்படுத்தவும் முழுவதுமாக கழுவியாகவேண்டும் என்பது, அவள் சொல்லுங் காரணம். வீடு, தோட்டத்திலிருந்து பிரிந்து மேடான பகுதில் கட்டப்பட்டிருக்கிறது. அவ்வாறு கட்டபட்டிருப்பதால் பாம்பு, தேள், எறும்பு முதலானவற்றின் படையெடுப்பிலிருந்தும், மீகாங் நதியின் உடைப்பிலிருந்தும், பருவமழையின்போது அடிக்கும் சூராவளியிலிருந்தும் தப்ப முடிகிறது. நிலப்பகுதியிலிருந்து சற்று மேடானப் பகுதியில் வீடு இருப்பதால் பெரியவாளிகளை உபயோகித்து, தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சுவதுபோல நிறைய தண்ணீர் முகர்ந்து கழுவ முடிந்தது. இருக்கிற நாற்காலிகள் அனைத்தும் மேசைமேல் ஏற்றப்படும். வீடு முழுக்க நீரோடைகள் பாயும். கூடத்தில் இருக்கிற பியானோவின் கால்கள் நீரில் ஊறிக்கொண்டிருக்கும். படிகளில் வழியும் நீர் முற்றத்தை நனைக்கும். வேலைக்காரப் பையன்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள், அவர்களுடன் சேர்ந்துகொண்டு தண்ணீரில் நனைகிறோம், பிரான்சு நாட்டில் மர்செய்(Marseille) பகுதியில் தயாரிக்கப்படும் ஒருவிதமான கிருமி நாசினி சவுக்காரத்தினைத் தரைக்குப் போடுகிறோம். காலணிகளென்று எதையும் அணிவதில்லை, அம்மா உட்பட அனைவரும் வெற்றுக்கால்களுடனிருக்கிறோம். அற்பத்தனமான சங்கதிகளை அம்மா கண்டிப்பதில்லை ஆதலால் சிரிக்க மட்டும் செய்கிறாள். புயல்மழைக்குப்பிறகு ஈர பூமியிலிருந்து எழுகிற மணத்தைப்போல வீடு முழுக்க நறுமணம். அம்மணம், வேறு மணங்களுடன் இணைகிறபொழுது குறிப்பாக மர்செய் சவுக்காரம்; தூயதன்மை, உண்மை, துவைத்தத் துணிகள் மற்றும் அதன் வெண்மை போன்றவற்றோடு கலந்து, மகிழ்ச்சியில் மூழ்கடிக்கிறது. தண்ணீர் நாங்கள் உபயோகிக்கும் பாதைகளையும் விட்டுவைக்கவில்லை மூழ்கடித்து விடுகிறது. வேலைக்கார சிறார்களின் குடும்பம், பையன்களின் கூட்டாளிகள், அண்டையிலிருக்கிற வெள்ளைக்கார சிறுவர்களென பெரியதொரு கூட்டஞ் சேர்ந்துவிடுகிறது. வீட்டை இப்படி கலைத்துப் போடுவது, அம்மாவை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. சிலவற்றை மறக்க இதுபோன்ற நேரங்கள் நல்வாய்ப்பாக அமைகின்றன, வீட்டைக் கழுவுதல் அதிலொன்று. அம்மா கூடத்திற்குப் போகிறாள், பியானோவைத் திறந்து, பள்ளியில் கற்றிருந்த இசைக்குறிப்பொன்றை வாசிக்கிறாள், அவள் கற்றிருக்கிற ஒன்றேயொன்று. பாடுகிறாள், அடுத்து வாசிக்கிறாள். சிரிக்கிறாள். உட்கார்ந்திருந்தவள் எழுந்து நிற்கிறாள், பிறகு பாடிக்கொண்டே ஆடுகிறாள். சீர்குலைந்திருக்கும் வீடொன்று சட்டென்று ஒரு குளமாக, ஆறொட்டிய நஞ்சை நிலமாக, ஆழமற்ற துறைநீராக, நதிக்கரையாக அவதாரமெடுக்கிறபோது ஒரு தாயாரானவள் மகிழ்ச்சிகொள்ளலாமென மற்றவர்கள் நினைப்பதுபோலவே அவளும் எண்ணுகிறாள்போலிருக்கிறது.

அந்த வீட்டில் கடைசியாய்ப் பிறந்த பையனும் பெண்ணும் முதன்முதலாக அச்சம்பவத்தை நினைவுபடுத்திக்கொள்கிறார்கள். சிரித்துக்கொண்டிருந்தவர்கள் சட்டென்று நிறுத்திக்கொண்டு, மாலை முதலில் கால்வைக்கிற தோட்டத்துக்குப் போகிறார்கள்.

இதை எழுதிகிற இந்நேரத்தில், சட்டென்று என் நினைவுக்கு வருவது, நாங்கள் வீட்டை இவ்வாறு தண்ணீரில் மூழ்கடித்தபோது என் அண்ணன் வேன்லோங்கில்(Vinhlong) இல்லை, பிரான்சு நாட்டில் எங்கள் கிராமமான லோ-எ-கரோன்னில்(Lot-et-Garonne), எங்கள் பங்குத்தந்தையின் ஆதரவிலிருந்தான்.

அவனும் ஒருசிலநேரங்களில் எங்களைப்போலவே சிரிப்பவன், எனினும் எங்கள் அளவிற்குப் பைத்தியகாரத்தனமான சிரிப்பினை அவனிடம் பார்க்கமுடியாது. எல்லாவற்றையும் மறக்க விரும்புகிறேன், உங்களிடத்தில் சொல்லக்கூட விருப்பமில்லை, அதனினும் பார்க்க நாங்கள் சிரிக்கும் பிள்ளைகளாக இருந்ததையும், அச்சிரிப்பினூடாக சுவாசத்தையும் வாழ்க்கையையும் தொலைக்க நாங்கள் விரும்பியதையும் பகிர்ந்துகொள்ளாலாமென்று நினைக்கிறேன்.

போருக்கும், எனது பிள்ளைப் பருவத்திற்கும் நிறங்களில் அதிக பேதமில்லை. பலநேரங்களில், என் அண்ணனுடைய அட்டூழிய காலத்தையும், போர் நடந்த காலத்தையும் ஒன்றாக எண்ணி குழப்பிக்கொள்கிறேன். ஒருவேளை எனது தம்பி அச்சமயத்தில் இறந்தது காரணமாகயிருக்கலாம். இதற்கு முன்பு நான் குறிப்பிட்டிருந்ததுபோல, அவனது இதயத்தை விட்டுச் சென்றிருக்கிறான். எனது மூத்தச்சகோதரன் அதை ஒருபோதும் சந்தித்தவனில்லை. அதற்கு முன்பாக என் இளைய சகோதரன் உயிருடன் இருக்கிறானா அல்லது இறந்துவிட்டானா என்றத் தகவலைக்கூட மூத்த சகோதரன் சுமந்து சென்றவனில்லை என்கிறபொழுது, இதயம் எக்கேடு கெட்டாலென்ன? மூத்தச்கோதரனைபோலவே போர் எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறது, ஊடுருவுகிறது, களவாடுகிறது, சிறைப்படுத்துகிறது, கலந்து, அங்குமிங்குமாய், உடலில், எண்ணத்தில், முதல் நாளில், உறக்கத்தில், எல்லா நேரங்களிலும், நேசிப்புக்குரிய சிறுபிள்ளை உடலை ஆக்ரமித்துள்ள போதைகிளர்ச்சியின் இரையாக, மெலிந்தவர் சரீரத்தில், குறிப்பாக தோற்றவர்களிடம் அங்குதானே கெட்டதைச் சுலபமாக அரங்கேற்றமுடியும் அதனால் அவர்கள் அண்மையில், அவர்கள் உடலோடென்று எங்கும் இவ்விரண்டும் இருக்கின்றன.

மீண்டும் அவனுடைய அறைக்கு வருகிறோம். நாங்கள் காதலரில்லையா? எங்கள் இருவருக்குமிடையேயான காதலை ஒருவர் மற்றவர்க்கு உணர்த்தவேண்டுமே அதற்காக. அவனுடன் உறங்கிவிடுவதால் சிலவேளைகளில், விடுதிக்குத் திரும்பமுடியாமல் போய்விடுகிறது. அவனது அணைப்பில், கதகதப்பில் உறங்க விருப்பமில்லையென்கிறபோதும், அவனுடைய அறையில், அவனுடைய கட்டிலில் தூங்கிவிடுகிறேன். சில நேரங்களில் பள்ளிக்குச் செல்வதும் இயலாமற் போகிறது. இரவு உணவினை நகரத்தில் முடிக்கிறோம். எனக்குத் தூறற்குளியல் செய்விக்கிறான், நீராட்டுகிறான், நீரில் நனைக்கிறான், அவற்றையும் விரும்பிச் செய்கிறான். எனக்கு ஒப்பனை செய்கிறான், உடுத்திப்பார்க்கிறான், என்னை துதிக்கவும் செய்கிறான். அவனுடைய வாழ்க்கைக்கு நான் மிகவும் வேண்டப்பட்டவள். இன்னொருவனுடனான எனது சந்திப்பென்பது அவனை அதைரியப்படுத்தக்கூடியது. அதுபோன்ற சம்பவங்களுக்கு அதாவது அவன் வேறொருத்தியோடு போனால் நான் கவலைப்படுபவளல்ல. அவனுக்கு வேறொரு அச்சமும் இருக்கிறது. அவ்வச்சம் நான் வெள்ளைக்காரி என்பதால் துளிர்ப்பதல்ல, நானொரு சிறுவயது பெண் என்பதால் வருவது. எங்களிருவருக்குமான உறவு பற்றிய உண்மை வெளிஉலகிறகுத் தெரியவரும்போது, எனது சிறுவயது அவனை சிறைக்குள் தள்ளிவிடுமென்று பயப்படுகிறான். அதனால் என் மூத்தசகோதரன்,என் அம்மா மாத்திரமல்ல வெளி உலகிற்கும் எங்கள் ரகசிய உறவு தெரியக்கூடாதாம். தொடர்ந்து பொய் சொல்லி சாமர்த்தியமாக மறைக்கவேண்டுமென்கிறான். நானும் பொய்களைத் தொடர்ந்து கூறிவருகிறேன். அவனுடைய பயத்தினை நினைத்து சிரிக்கிறேன். இப்போதுள்ள எங்கள் தரித்திர நிலையில் மறுபடியும் வழக்கு வம்பென்று யாரையும் எதிர்த்து அம்மா நீதிமன்றம் போக வாய்ப்பில்லை என்கிறேன். அவள் போடாத வழக்கில்லை அத்தனையும் தோற்றிருக்கின்றன: நில அளவு பிரச்சினைக்காக, நிருவாகிகளுக்கு எதிராக, ஆளுனர்களுக்கு எதிராக, சட்டத்திற்கு எதிராக.. அவளால் அமைதிகாக்க முடியாது, அவளால் முடிந்ததெல்லாம் வழக்குப் போடுவது, போட்டாள். மீண்டும் மீண்டும் காத்திருப்பது அவளால் இயலாது. அப்படி வழக்குகள்போட்டே சீரழிந்தாயிற்று என்று கூச்சலிட்டிருக்கிறாள். தன் மகளுக்கான வழக்கின் முடிவும் தெரிந்ததுதான், எனவே எனது வயது குறித்தபயம் அர்த்தமற்றதென்று கூறுகிறேன்.

– தொடரும்…

– பதிவுகள் சஞ்சிகை , ஜூன் 2008, மூலம்: மார்கெரித் த்யூரா (1914-1996), தமிழில: நாகரத்தினம் கிருஷ்ணா.

நாகரத்தினம் கிருஷ்ணா ஒரு தமிழக எழுத்தாளர். புலம்பெயர்ந்து பிரான்சில் வசித்து வருகிறார். இவர் எழுதிய "நீலக்கடல்" மற்றும் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி இரண்டு நாவல்களும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 மற்றும் 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கின்றன வாழ்க்கைச் சுருக்கம் இவர் தமிழ்நாடு, விழுப்புரம், கொழுவாரி என்ற ஊரைச் சேர்ந்தவர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பிரான்சில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *