வெய்யில் அதிகம் இல்லாமல் காணப்பட்ட முற்பகல் நேரம். இளம்பெண் உஷா, வீட்டு மாடியில் உள்ள தன்னுடைய அறையில், கட்டிலின் படுக்கையில் லேப்டாப்பை வைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள். லேப்டாப்பில் மெயில் பார்த்துக் கொண்டிருந்தவளின் கவனத்தை திறந்திருந்த ஜன்னல் வழியாக காதுகளில் ஒலித்த பண்பலை வானொலியின் பழைய திரைப்பாடல் கலைத்தது. ‘காதலன் வந்தான் கண் வழிச் சென்றான் கண்களை மூடு பைங்கிளியே’…
உஷா ஜன்னல் அருகே வந்து நின்று வானத்தைப் பார்த்தாள். அவளுடைய வாழ்விலும் ஒரு காதலன் வந்தான். கண் வழிச் சென்றான் …. அவன் சுரேஷ். காவல் துறை அதிகாரியான அவன் என்ன ஆனான் என்றே தெரியவில்லை. இரண்டு வாரங்களாக அவனைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. அவளுடைய நிறுவனத்தின் வழக்கறிஞர் மூலம் அவனது அம்மாவின் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த போது தொழில் அதிபரான அவளுடைய அப்பா மோகன் ராஜுக்கும் அம்மா காவேரிக்கும் ஒரே சமயத்தில் திடீர் என உடல் சுகவீனம் அடைய அவர்களை மருத்துவமனையில் சேர்த்து ஓடியாடிக் கொண்டிருந்தாள் உஷா. கம்பெனி அதிகாரிகளுடனும் அப்பா சார்பில் அவ்வப்போது பேசிக் கண்காணிக்கும் வேலையும் சேர்ந்து கொண்டது. இன்று தான், சிற்றப்பாவையும் அவரது மகனையும் மருத்துவமனையில் அப்பா அம்மாவுக்கு துணையாக வைத்து விட்டு வீட்டுக்கு வந்தாள். அப்பப்பா.. எல்லா சோதனையும் ஒரே நேரத்திலா வந்து சேரும்…?
லேப்டாப்பில் பேஸ்புக் நோடிபிகேஷன் தெரிந்தது. என்ன என்று பார்த்தாள் உஷா. அவளுடைய தோழி உளவியல் மருத்துவர் பூர்ணிமாவின் போஸ்ட். என்ன என்று பார்த்தாள்
‘உளவியல் தகவல் துளி – உங்களுக்கு சவால்களாக இருக்கும் பதற்றங்களையும் தனிமையையயும் எதிர்கொள்ளும் தருணத்தில் உங்கள் காதலர் அல்லது உங்கள் வாழ்க்கைத் துணையின் உடையை முகரும்போது அவற்றை சமாளிப்பதற்கான புத்துணர்ச்சி கிடைக்கும்’
அப்படியா? ஒரு முறை அவன் அவளுடன் வந்த சமயத்தில் அவளுடைய காரிலிருந்து இறங்கிய போது மழையில் நனைந்தான். குடையுடன் காரிலிருந்து இறங்கிய அவள், அருகில் இருந்த துணிக் கடையில் அவனுக்கு டீ ஷர்ட் வாங்கிக் கொடுத்தாள். காரில் உடை மாற்றியவன், பழைய சட்டையை காரிலேயே வைத்து விட்டான். அதை அவள் யாருக்கும் தெரியாமல் துவைத்து எடுத்து வைத்தாள். எங்கே வைத்தோம். துணி அலமாரியில் தேடிப் பார்த்தாள். அங்கே அந்த நீல சட்டை. அதைக் கையில் வைத்துக் கொண்டாள். அவளுடைய கைபேசி ஒலித்தது.
அவளுடைய சிற்றப்பா மகன் ராஜா..
‘சொல்லுப்பா ‘
‘அக்கா.. பெரியப்பாவையும் பெரியம்மாவையும் டிஸ்சார்ஜ் பண்றேன்னு சீஃப் டாக்டர் சொல்லிட்டாரு. நீ அலைய வேணாம். நானும் அப்பாவும் பார்மாலிட்டிஸ் முடிச்சுட்டு அழைச்சுகிட்டு வரோம். இன்னொரு விஷயம்… பிரேக்கிங் நியுஸ் பார்த்தியா… கொள்ளையர்களால் கடத்தப்பட்டு இருந்தாராம் சுரேஷ். இன்னிக்கு அவரே சாகசங்கள் பண்ணி வெளில வந்துட்டாரு. கடத்தின குரூப்பையும் சரண் அடைய வெச்சுட்டாராம். சோஷியல் மீடியா, நியுஸ் மீடியா எல்லாம் இதான் பேச்சு… உடனே பாரு… ஒனக்கு லிங்க் ஷேர் பண்ணி இருக்கேன்..‘
உஷா வாட்ஸ்அப் பில் அந்த இணைய இணைப்பைப் பார்த்தாள். அவளுடைய விழிகள் மலர்ந்தன. அவளுடைய வாய் அந்தப் பாட்டை முணுமுணுத்தது. ‘காதலன் வந்தான் கண் வழிச் சென்றான் கண்களை மூடு பைங்கிளியே’…
குறிப்பு – சவால் என்பதை அடிநாதமாக கொண்டு சவால் கதைகள் 10 என்ற இந்த சின்னஞ்சிறு புனைகதைகளைப் படைத்துள்ளேன். இந்தப் புனைகதைகளில் , சமூக கதைகளில் விவரிக்கப்படும் சூழல்கள் , பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.