பல வருடங்களுக்குப்பின் கவியைப்பார்த்த போது மனம் பரவசப்பட்டது. கல்லூரியில் அனைவருக்குமே பிடித்தமான பெண் என்றால் கவி மட்டும் தான். அந்த நகரத்தின் பெரிய செல்வந்தரின் மகள் போல நடக்காமல் சாதாரணமாக நடந்து கொள்வாள். யாருடனும் சிரித்துப்பேசி மனம் நோகாமல் நடந்து கொள்ளும் பக்குவம் அவளிடம் இளம் வயதிலேயே இருந்தது ஆச்சர்யம்.
அறுபது வயதிலும் அதே சிரிப்பு. முகம் சுருங்கி, முடி நரைத்து, உடல் தளர்ந்திருந்தாலும் குரலுக்கு மட்டும் வயதாகாமல் இருந்ததால் தான் என்னால் அடையாளம் கண்டு பிடிக்க முடிந்தது.
“நீ…. என்றவுடன் கோபப்பார்வையைக்கண்டு நீங்க… என்றவுடன் கண்டு பிடித்து விட்டாள். “ரகு…. ” என்றாள்.
அவளது குரலில் தன் பெயரைச்சொல்வாளா? என அப்போது ஏங்கிய அதே மனம் இப்போது பூரித்தது. ஒரு குரலால் ஒருவரை மகிழ்விக்க முடியும் என்றால் அந்த குரலுக்குரியவரை தம் அருகிலேயே வைத்துக்கொள்ள யாருக்குத்தான் விருப்பம் இருக்காது. எனக்கும் இருந்தது. ஆனால் அது முற்றிலுமான சுயநலம் என்பதும் புரிந்தது. கடல் நீரை கிணற்றுக்குள் அடைக்க நினைக்கும் அறியாமை எனவும் கூறலாம்.
“நீங்க எப்படி இங்கே…? அதுவும் சாதாரண இந்தக்கடைல….?”
“ஏன் நீங்களே இந்தக்கடைல சாப்பிட வந்திருக்கும் போது நான் வரக்கூடாதா….?”
என்னால் உடனே பதில் சொல்ல முடியவில்லை.
தயங்கி “என்னோட வசதிக்கும், வருமானத்துக்கும் இங்க சரி. ஆனா நீங்க….?”
” நான் எப்பவுமே வசதிய நெனைச்சு ஒன்னப்பண்ணினதில்லை. மனசுக்கு எது புடிக்குதோ அதப்பண்ணிடுவேன். இதோ என்னோட ஹஸ்பெண்ட். இவரு நா பண்ணறதை தடுக்க மாட்டார். தோணுனா நல்லதுன்னா உடனே பண்ணிடனம்பார்…”
அவர் சாப்பிட்டுக்கொண்டே என்னைப்பார்த்து நட்பாகச்சிரித்தார்.
“இப்ப கூட ஃபைவ் ஸ்டார் ஹோட்டல பார்டி இருக்கு. அதுக்காகத்தான் போகனம். என்னோட காலேஜ்ல இருந்து தெனமும் இந்த வழியா போகும் போது இந்த ரோட்டுக்கடை முன்னாடி இருக்கிற கூட்டத்தைப்பார்ப்பேன். இத்தனை கூட்டம் வருதுன்னா கண்டிப்பா விசயம் இருக்கும். அத நாமும் டேஸ்ட் பண்ணனம்னு தோணுச்சு. இன்னைக்கு வந்திட்டேன். உங்கள நான் சந்திக்கனம்ங்கிறதுக்கான விதியாகக்கூட இருக்கலாம். நீங்க விரும்பினா எங்களோட வாங்க ஹோட்டல் போகலாம். ஆனா இந்த டேஸ்ட்டோட நான் என்னோட வாழ் நாள்ல எங்கேயுமே சாப்பிட்டதில்லை. ரகு, நான் உங்களுக்கும் சேர்த்து பில் பே பண்ணிட்டேன்”
“ரொம்ப நன்றி. ஆனா என்னால நீங்க கூட்டிட்டு போறதா சொல்லற ஹோட்டலுக்கு வர முடியாது. உடனே என்னோட அம்மாவ ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகனம். வேணும்னா நாளைக்கு இங்கேயே வந்திடறேன். வேற எங்காவது கோவில் பக்கம் போகலாம். உங்க கூட நிறைய பேசனம்னு தோணுது…”
“அப்படியா….? எனக்கும் தான். நம்ம காலேஜ்ல படிச்ச போது நடந்த விசயங்கள பேசுனா ஸ்டிரஸ் குறையும். எனக்கும் ஒவ்வொரு நாளும் பிசினஸ், பிசினஸ்னு, பணம், பணம்னு முடியல. உங்களைப்பார்த்தா பணக்கஷ்டம் இருக்கும் போல இருக்கு. இந்தாங்க…”கொடுத்த கவரை மறுக்காமல் வாங்கிக்கொண்டேன்.
பிரித்துப்பார்த்த போது நூறு ஐந்நூறு இருந்தது. ஐம்பதாயிரம் ஒன்றாக இதுவரை யாரிடமும் வாங்கியதில்லை. கவிதை, கட்டுரை எழுதுபவனுக்கும், மேடையில் இலக்கியம் பேசுபவனுக்கும் பெரிய வருமானம் இருக்காது என்பது பலருக்கும் தெரியும்.
கொண்டு போய் அப்படியே என் மனைவியிடம் கொடுத்து விட்டேன். அவளுக்கும் கை, கால் புரியவில்லை. “இவ்வளவு பணம் எப்படிங்க…?” எனக்கேட்டாள்.
என்ன சொல்வது என புரியவில்லை. யாரோ எனக்கூற முடியாது. யாரோ எதற்காகக்கொடுக்க வேண்டும்….? என கேள்வி வரும். உறவு, தோழி, காதலி எனக்கூற முடியவில்லை.
“என்னோட காலேஜ்ல ஒன்னா படிச்ச பொண்ணு. நல்ல வசதி. நட்புன்னு சொல்ல முடியாது. ஒருத்தரை இன்னொருத்தருக்கு தெரியும். அவ்வளவு தான்.ஹோட்டல்ல பார்த்தாங்க. திடீர்னு கவரைக்கொடுத்துட்டு போயிட்டாங்க”
“அவங்க கடவுள் தாங்க. உங்கம்மாவோட ஆஸ்பத்திரி செலவுக்கு நாளைக்கு என்னோட தாலிக்கொடிய அடமானம் வெச்சு ஐம்பதாயிரம் பேங்க்ல வாங்கலாம்னு நேத்தைக்கு பேசினோமே…. அதே பணத்த அவங்க கொடுத்திருக்காங்கன்னா கடவுளே தான். அவங்கள ஒரு நாளைக்கு நம்ம வீட்டுக்கு கூட்டிகிட்டு வாங்க. அந்தக்கடை சாப்பாட்ட விட சூப்பரா சமைச்சு அசத்திப்போடறேன்” என்றாள் வெகுளியாக.
உண்மையிலேயே மனைவி சுமதியைத்தான் நான் கடவுளாக நினைக்கிறேன். அவள் மட்டும் எனக்கு மனைவியாக வாய்க்காமல் இருந்திருந்தால் என்னுடைய வாழ்க்கை வீணாகப்போயிருக்கும். குடியோ, தம்மோ, வேறு பெண்கள் சகவாசமோ இல்லாத உத்தமனாக, நல்லவனாக இருந்தாலும் குடும்பத்துக்கு தேவையானதை சம்பாத்தித்துக்கொடுக்கும் வல்லவனாக இருக்க முடியவில்லை. அவளும் அதிகம் படிக்கவில்லை என்றாலும் வீட்டிற்கு பக்கத்தில் ஒரு மளிகைக்கடையில் வேலை பார்த்து குடும்பத்தைக்காப்பாற்றுகிறாள்.
கல்லூரி தான் என்னுடைய வாழ்க்கையை மாற்றியது. பள்ளிப்படிப்பு முடியும் வரை படித்து வேலைக்குப்போக வேண்டும், வீடு கட்ட வேண்டும், கார் வாங்க வேண்டும், வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டும் என இருந்தவனுக்கு சிந்தனை தலைகீழாக மாறியது.
அதற்கு காரணம் ஒரே ஒரு கவிதை தான்.
கல்லூரி ஆண்டு விழாவிற்காக கவிதை போட்டி வைத்தார்கள். அதில் எனது கவிதை முதல் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட போது நான் அனைவராலும் ஹீரோவாகப்பார்க்கப்பட்டேன். எத்தனை கோடி செலவு செய்தாலும் பெற முடியாத பெருமை அது. பல பெண்கள் என்னுடன் நட்பாக பழக வந்தார்கள். சினிமாவுக்கு முயற்சி பண்ணச்சொன்னார்கள். அந்தக்கவிதை ஒரு பெண்ணைப்பற்றி எழுதியது தான். அன்று முதல் இன்று வரை என் வாழ்க்கையே கவிதை… கவிதை… கவிதை மட்டுமே தான். அதைத்தவிர வேறு வேலையில்லை.
நான் முதல் நாள் யதார்த்தமாக கோவிலில் சந்திக்கலாம் என கூறியதை நிறைவேற்ற கவி வந்து விட்டாள். நான் எதிர்பார்த்த படி சேலையணிந்து இந்த வயதிலும் ஒரு தேவதை போல, சுவாமி சிலை போல வந்திருந்தாள். காரை அவளே ஓட்டிக்கொண்டு வந்திருந்தாள். கடையில் பில்டர் காபி குடித்து விட்டு கிளம்பினோம். மனம் விட்டுப்பேசுமிடத்தில் மற்றவர்கள் இருக்கக்கூடாது என நினைத்திருப்பாள் என நினைத்துக்கொண்டேன். காரை நன்றாகவே ஓட்டினாள்.
“உண்மையிலேயே நீங்க கல்லூரி கவிதைப்போட்டிக்கு எழுதியிருந்த அந்தக்கவிதையைப்படித்ததுக்கப்புறம் தான் நான் பெண்ணாப்பிறந்ததுக்காகவே சந்தோசப்பட்டேன். எப்படி உங்களால அப்படி ஒரு கவிதை எழுத முடிஞ்சது…? அந்தக்கவிதைய நீங்க நேர்ல பார்த்து உங்களுக்குப்பிடிச்சுப்போன ஒரு பொண்ண நெனைச்சுத்தான் எழுதியிருக்கனம். அந்த அதிர்ஷ்டசாலி, புத்திசாலி யாருன்னு தெரிஞ்சுக்கலாமான்னு அப்பவே கேட்க நெனைச்சேன். கேட்டா என்ன நினைப்பீங்களோன்னு விட்டுட்டேன்” என்றாள் என்னைப்பார்த்து சிரித்த படி.
‘அந்தப்பெண்ணே நீ தான்’ னு சொல்ல வார்த்தை வந்தது. உள் மனம் தடுக்க உதட்டைக்கடித்துக்கொண்டேன்.
“நீங்க சொல்ல வந்ததை உங்க உள் மனசு தடுத்திடுச்சு. சரியா….? ஏன் தடுக்க விடறீங்க? மனசுல இருக்கிற எதுவா இருந்தாலும் பேசற ஒரு தோழியா என்னை நினைச்சுக்கங்க. நான் அப்படி உங்களை ஒரு தோழனா நெனைச்சதுனால தான் இங்க தனியா சந்திக்கவே வந்திருக்கேன்னு ஒரு கவிஞரான உங்களுக்கு புரியலையா…?”
“கவிதை உலகத்துல தடை இல்லை. நிஜத்துல அப்படி இல்லை” எனக்கூறியதை அவள் ஏற்கவில்லை.
எனது அருகாமை அவளுக்கு பிடித்திருந்ததால் சற்று நெருக்கமாக வந்து அமர்ந்து கொண்டாள். ஆனால் எனக்கு பயமாகவும், கூச்சமாகவும் இருந்தது. இப்போது சொல்லி விடத்தோன்றினாலும் வார்த்தை ஏதும் வராமல் ஒருவித நடுக்கம் வந்தது.
“எனக்கு வசதியானவங்களை விட கவிதை, கதை எழுதறவங்களை ரொம்பப்புடிக்கும். என்னோட சொந்த காலேஜ்ல ஒவ்வொரு ஆண்டு விழாவுக்கும் ஒரு கவிஞரோட பேச்சு கண்டிப்பா இருக்கும். ஆனா உங்களை கூப்பிடனம்னு ஏனோ முயற்சி எடுக்கலை. அப்புறம் மறுபடியும் கேட்கறேன். அந்தக்கவிதைப்பொண்ணு யாருன்னு சொல்ல முடியுமா?”
“இதற்கு மேலும் அவள் கேள்வியை வெல்ல இயலாமல் தோற்றுப்போனவனாய் “நீங்க தான்….” எனக்கூறியதும் ஒரு வித பதட்டம் என்னை ஆட்கொண்டு விட்டது. அவளருகே இருக்க முடியாமல் எழுந்து சற்று தூரம் வேகமாகச்சென்று விட்டேன். சென்ற பின் திரும்பிப்பார்த்தேன். அவளும் எழுந்து வேகமாக சொல்லாமல் காரை நோக்கி சென்று விட்டாள். நானும் இது வரை தேக்கி வைத்திருந்த அவளது நினைவுகளை, அணை உடைத்து காட்டாற்று வெள்ளமாய் பீறிடச்செய்து தேம்பி, தேம்பி அழுதேன். மனதிலிருந்த பாரம் முற்றிலுமாக இறங்கியிருந்தது. கவியை ஒரு தலையாய் காதலித்திருக்கிறேன் என்பது தெரியும். எந்த அளவுக்கு என்பது இப்போது தான் எனக்கே தெரிந்தது.
பேருந்திலேறி வீட்டிற்கு சென்று விட்டேன். வெளிப்படையாக சொல்லச்சொன்னவள், சொன்ன பின் எதற்காக சொல்லாமல் செல்ல வேண்டும்? சொல்லாமலேயே விட்டிருக்க வேண்டும். கற்பனை பெண் என ஒரே வார்த்தையில் கூறியிருக்க வேண்டும். அவள் முன் பொய் பேச முடியவில்லை. பல வருடங்களுக்குப்பின் கிடைத்த நட்பை தொலைத்து விட்டோம் என வருந்தினேன்.
மாதங்கள் கடந்தன. ஒரு நாள் என் வீட்டிற்கு ஒரு சொகுசு கார் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கி வந்த ஒருவர் “கவி மேடம் உங்க கிட்ட நீங்க இதுவரைக்கும் எழுதின கவிதைகளை வாங்கீட்டு வரச்சொல்லி அனுப்பினாங்க” எனக்கூறிய மறு வினாடி அலமாரியில் வெறுமனே போட்டுக்கிடந்த அத்தனை கவிதை எழுதிய நோட்டுக்களையும் எடுத்து மொத்தமாகக்கொடுத்து விட்டேன்.
ஒரு மாதத்துக்குப்பின் கல்லூரி ஆண்டு விழாவில் கலந்து கொள்ள அலை பேசியில் அழைப்பு வந்தது. அன்று சொல்லாமல் சென்ற முகத்தை எப்படிப்பார்ப்பது? எனும் யோசனையில் சென்று பார்வையாளர்கள் இருக்கையில் ஓரமாக அமர்ந்திருந்தேன்.
கீழே அமர்ந்திருந்த என்னை கவியாகவே வந்து கையைப்பிடித்து அழைத்துச்சென்றாள். அப்போது தான் தெரிந்தது எனது கவிதைகள் புத்தகங்களாக மாறியிருந்தன. தலைமை நீதிபதி வெளியிட, கவி முதல் நூலைப்பெற்றுக்கொண்டபோது அவளது கண்களில் கண்ணீர் கரை புரண்டு ஓடியது. எதையோ சாதித்த ஆனந்தக்கண்ணீர். ஐந்து லட்சம் ரூபாய் பரிசும், ஒரு விருதும் எனக்கு வழங்கப்பட்டது.
ஆயிரக்கணக்கானவர்கள் வந்திருந்தனர். அனைவரது கைகளிலும் எனது புத்தகம். நான் கற்பனையிலும் நினைத்துப்பார்க்கவில்லை.
“ஒரு பெண்ணைப்பார்த்து கவிதை எழுதினவங்களை நீங்க பார்த்திருக்கலாம். ஆனா ஒரு பெண்ணுக்காக தன் வாழ் நாள் முழுவதும் கவிதை எழுதினவரை நீங்க பார்த்திருக்க மாட்டீங்க. அவரு தான் இவரு. அந்தப்பெண் நான் தான்”. அரங்கமே கை தட்டலால் அதிர்ந்தது.
“அவரோட முதல் கவிதைக்கு ரசிகையான நான் அவரோட மொத்தக்கவிதைகளையும் படிச்சிட்டு அவருக்கு அடிமையாயிட்டேன். அதன் விளைவுதான் இந்தக்கவிதை நூல். அவரு பெண்களோட அழகை மட்டும் வர்ணிச்சு எழுதியிருந்தா நல்ல கவிதைன்னு சொல்லிட்டு போயிருப்பேன். ஆனா கவிதையைப்படிக்கிற ஒவ்வொரு பெண்ணுக்குள்ளிருந்தும் புதிய ஆற்றல் பிறக்கும். சாதிக்கத்தூண்டும். எனக்காக எழுதியதா நான் நினைக்கிற மாதிரி, நீங்க படிக்கும் போது உங்களுக்காக எழுதின மாதிரி நினைக்க வைக்கும். இது தான் இந்த கவிதை நூலோட சாதனையா இருக்கப்போகுது. வாழ்த்துக்கள் கவிஞர் ரகு” என கவி கூறிய போது கை தட்டல் நிற்க சற்று நேரம் கூடியது.
அவள் மீதுள்ள காதலை நான் கவிதையாய் வெளிப்படுத்தியது போல், அவளும் என் மீதுள்ள காதலை கவிதைகளை நூலாக்கி வெளியிட்டுள்ளாள் எனப்புரிந்த போது, காதலென்பது திருமணத்தில் மட்டுமே முடிவதல்ல. அது முடிவில்லாமல் தொடர்வது. தனி ஒருவரோடு நிற்பதுமல்ல. அதையும் தாண்டியது. பரந்து விரிந்தது. உலகிலேயே சிறந்தது என்பதை எனக்குள் அவளது செயல் பதிய வைத்திருந்தது.