கலைந்து போன உறவுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 21, 2020
பார்வையிட்டோர்: 12,145 
 
 

அவள் வசந்தனை சந்தித்தபோது அவனிடம் தன் எல்லா துன்பங்களையும் கவலைகளையும் கொட்டி அழுது தீர்த்து விடவேண்டும் போல் தோன்றியது. அவ்வளவு ஒரு உணர்ச்சிப் பிரவாகம் அவளுள் பொங்கிப் பிரவகித்தது. இந்த இரண்டு மாதங்களில் அவள் அனுபவித்த துன்ப துயரங்களை வேறு எந்தப் பெண்ணும் இந்த உலகத்தில் அனுபவித்திருக்க மாட்டாள் என்று அவளுக்குத் தோன்றியது. தான் ஏன் அப்படி ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டேன் என்று அவளுக்கு விளங்கவில்லை . அது மனித வாழ்க்கையில் ஒரு இயல்பான காரியமாக இருந்த போதும் இந்த சமூகம் என்ற உலகம் இதனை ஏன் இப்படி ஒரு சிக்கலான விஷயமாக மாற்றி வைத்திருக்கிறது என்று அவளுக்கு விளங்கவில்லை.

அவள் தனது பதின்மூன்றாவது வயதில் பூப்படைந்த போது அவளைவிட அதனை கொண்டாடியவர்கள் அவளது பெற்றோரும் உற்றோரும்தான் . அதனை ஏன் அவ்வளவு பெரிதாக கொண்டாட வேண்டும் என்று அவளுக்கு புரியவில்லை . ஆனால் அடுத்தடுத்த நாட்களில் பாடசாலைக்கு சென்ற போது நண்பிகளுடன் கதைத்த போது தான் ஏதோ இன்னொரு உலகத்துக்குள் இப்போது வந்து இருப்பது போல் ஒரு உணர்வு அவளுக்கு தோன்றியது. அப்பொழுது ஒரு நாள் அவளுடன் நட்புடன் பழகும் வசந்தன் அந்த மரத்தடியில் பேசிக்கொண்டிருந்தபோது எதேச்சையாக அவளது கையைப் பிடித்து தொட்டுப் பேசியபோது அவளுக்கு உடலுக்குள் ஏதோ ஒரு மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு ஏற்பட்டு சற்று தலைக் கிறக்கமும் ஏற்பட்டது . அந்த அனுபவம் அவள் இதுவரை அனுபவித்திராத ஒரு சுகானுபவமாக இருந்தது . அதன்பின்னர் வசந்தனை காணும்போதெல்லாம் அவன் தன்னை கையை பிடித்துக்கொண்டு பேச மாட்டானா என்ற ஒரு ஏக்கம் அவள் மனதில் எழுந்தது . ஆனால் வசந்தன் ஒரு போதும் அவள் மனதில் எழுந்த ஏக்கத்தை புரிந்து கொண்டவனாகத் தெரியவில்லை. அவன் வழக்கமாக அவளுடன் நட்புடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு விடைபெற்று சென்று விடுவதை வழக்கமாக கொண்டிருந்தான்.

அப்போதுதான் அவள் சித்திரசேனனை சந்தித்தாள. அவனும் அவளும் ஒன்றாக ஒரே வகுப்பில் படித்தவர்கள் தான். இப்பொழுது அவர்கள் பாடசாலை கல்வியை முடித்து தனியார் நிறுவனமொன்றில் ஒன்றாக வேலை செய்து வந்தார்கள் . அதனால் அவர்கள் நாளாந்தம் ஒருவரை ஒருவர் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டது . அவனுடன் நீண்ட நாள் பழகியதனாலோ என்னவோ அவர்களுக்கு இடையே ஒரு நெருக்கமான நட்பு ஏற்பட்டது . சித்திரசேனன் ஒருநாள் அவளை சினிமாவுக்குப் போகலாமா என்று கூப்பிட்டான் . அவளும் அதனால் ஏற்படப்போகும் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் ஏற்றுக்கொண்டாள் . அன்று ஒரு சனிக்கிழமை . அவர்கள் இருவரும் ஏற்கனவே பேசி கொண்டவாறு பஸ் தரிப்பிடத்தில் சந்தித்து அந்த சினிமா தியேட்டருக்கு போனார்கள். அவள் என்னவோ அவனிடம் சேர்ந்து ஒரு சினிமாவை பார்த்து அனுபவிக்க வேண்டும் என்று நினைத்து சென்றாளே தவிர அங்கு அப்படி ஒரு காரியம் நடக்குமென்று அவள் கனவிலும் கருதி இருக்கவில்லை.

சினிமா படம் ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே அவன் அவளது கைகளை மெதுவாகத் தொட்டு வருடி தன்னுடைய கைகளுடன் சேர்த்து இறுக்கிப் பிடித்துக் கொண்டான். சித்திர சேனனை அவள் மனது ஏற்கனவே நண்பனாக ஏற்றுக் கொண்டிருந்தது. அதனால் அவன் அப்படி செய்ததை அவள் ஒரு பொருட்டாக கருதவில்லை . எனினும் நிமிடங்கள் செல்ல செல்ல அந்த ஸ்பரிசம் அவளை என்னவோ செய்தது . அன்றைய சினிமா பட அனுபவம் அவர்கள் மத்தியில் மிக நெருக்கமான உறவை ஏற்படுத்தியது. அந்த உறவை காதலா நட்பா என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவனுக்கும் அவளுக்கும் இடையில் அதன்பின்னர் ஒரு நெருங்கிய பந்தம் ஏற்பட்டது போல் அவளுக்கு தோன்றியது . அவள் அவனுக்காக எந்த விடயத்தையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இருந்தாள்.

அப்போதுதான் அவன் அவளுடன் அந்த உல்லாச பிரயாணம் செல்வதற்கான அழைப்பினை விடுத்தான். அவளும் அதனை ஒரு நண்பனுடன் செல்லும் உல்லாசப் பயணமாக் கருதி ஏற்றுக்கொண்டாள். ஒரு சனிக்கிழமை காலையில் அவர்கள் தென்னிலங்கையில் பிரபலமான அந்த கடற்கரை நகருக்கு சென்றனர் . அன்றைய பொழுது சிரிப்பும் களிப்பும் கூத்துமாக இனிமையாகவே கழிந்து சென்றது . இரவு வந்தபோது ஒரு ஹோட்டலில் தங்குவதற்காக அருகிலிருந்த அந்த விடுமுறை விடுதிக்கு அவர்கள் சென்றார்கள் . தங்களுக்கு இரண்டு அறைகள் வேண்டும் என்று கேட்ட போது அந்த ஹோட்டல் முகாமையாளர் தற்சமயம் ஒரு அறைதான் காலியாக இருக்கின்றது என்று கூறினார். அவன் அவளிடம் ‘தன்னுடன் ஒன்றாகத் தங்குவதற்கு அவளுக்கு ஆட்சேபனை உண்டா ?’ என்று கேட்டான். அவளும் சற்று சிந்தித்து விட்டு ” இல்லை ” என்று தலையாட்டினாள். அன்றிரவு குளித்து முழுகி விட்டு சாப்பிட்டபின் ஒன்றாக உறக்கத்துக்கு சென்றார்கள்.

அவளுக்கு களைப்பால் உறக்கம் சீக்கிரமே வந்து விட்டது என்ற உணர்வு ஏற்படபோது யாரோ இன்னொரு உருவம் தன்னருகே வந்து படுப்பதை அவள் உணர்ந்தாள் . அது சித்திரசேனன் தான் என்பது அவளுக்கு நன்றாகவே தெரிந்தது. அவளுடைய உணர்வுகள் திடுக்கிட்டு விழித்தெழுந்து அவளை எச்சரித்து கத்திவிட வேண்டும் போல் தோன்றினாலும் அவளால் அப்படி ஒன்றும் செய்துவிட முடியவில்லை . அவள் அசைவற்று அப்படியே இருந்தாள். அவனது கைகள் அவளை ஊடுருவிய போதும் அதனை தடுக்க அவளுக்கு திராணி இருக்கவில்லை . அவர்களை அறியாமலேயே அவர்களுக்கிடையில் அந்த உறவு அன்று ஏற்பட்டுவிட்டது.

அதன்பின் அவளது சந்தோஷம் ஒரு மாதமே நீடித்தது .அவள் சித்திரசேனனு டன் பல இடங்களுக்கும் சென்று சந்தோஷமாக சுற்றித் திரிந்ததுடன் இருவரும் ஒருவரில் ஒருவர் உரிமை எடுத்துக்கொண்டு பழகினர். எனினும் அடுத்து ஒரு மாதம் பூர்த்தியானதைத் தொடர்ந்து அவளுக்கு வழக்கமாக ஏற்படும் மாதாந்திர தீட்டு ஏற்படவில்லை என்று தெரிந்ததும் அவளுக்கு அந்த சந்தேகம் ஏற்பட்டது . அதனை அவள் சித்திரசேனனிடம் தெரிவித்தாள் . அவர்கள் இருவரும் சேர்ந்து சென்று மருத்துவ பரிசோதனை ஒன்றை செய்து கொள்வது என்று தீர்மானித்தனர். அத்தகைய மருத்துவ பரிசோதனை ஒன்றை செய்து கொண்டபோது அவள் கர்ப்பம் தறித்திருக்கிறாள் என்பது மருத்துவர்களால் உறுதிசெய்யப்பட்டது. அந்த நிமிடத்தில் இருந்து அவளுக்கும் சித்திரசேனனுக்கும் இடையில் பெரும் இடைவெளி ஒன்று உருவாகிவிட்டது. அடுத்து என்ன செய்வதென்று அவர்கள் இருவருக்குமே ஒன்றுமே புரியாது இருந்தது . அவன் சில நாட்கள் கழித்து கருவை அழித்து விடலாம் என்று அவளுக்கு ஆலோசனை சொன்னான். அவளுக்கு அந்த ஆலோசனை பேரிடியாக தலையில் வந்து விழுந்தது . அவள் வீடு சென்று அறைக் கதவை மூடிக்கொண்டு நீண்ட நேரமாக தனக்கு ஏற்பட்ட இந்த நிலையை எண்ணி கண்ணீர் விட்டாள். இந்த விடயத்தை எவ்வாறு தன் வீட்டாருக்கு தெரியப்படுத்துவது என்பதும் ஒன்றும் புரியவில்லை . ஒருவாறு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சித்திர சேனனை வலியுறுத்துவது என்று மனதுக்குள் தீர்மானித்து தன்னைத் தேற்றிக் கொண்டாள் . மறுநாள் இந்த விடயத்தை சித்திரசேனனிடம் தெரிவித்தபோது அவன் அந்த யோசனையை முற்றாக மறுத்து விட்டான் . தன் தந்தை மிகக் கண்டிப்பானவர் , கோவக்காரர் என்றும் கூறி அந்த யோசனையை முற்றாக மறுத்துவிட்டு கருவை கலைத்து விடுவது என்பதிலேயே அவன் குறியாக இருந்தான். அதற்குமேல் அவளால் ஒன்றுமே நினைத்துப் பார்க்க முடியவில்லை . மனம் குழப்பமாகவும் சூனியமாகவும் இருந்தது . அவள் விரக்தியின் விளிம்புக்கு சென்றபோது தன் உயிரை மாய்த்துக்கொள்ளலாமா என்றுகூட சிந்தித்தாள்.

அன்றைய தினத்திற்கு பின் அவளால் சித்திரசேனனை சந்திக்க முடியவில்லை . அவன் அவளது தொலைபேசி அழைப்புகளுக்கும் கூட பதில் அளிக்கவில்லை . விசாரித்துப் பார்த்ததில் அவன் கொழும்புக்கு போய் விட்டான் என்று மட்டும் தகவல் கிடைத்தது. அவள் இந்த விஷயத்தை தனது நண்பிகளுக்கு கூட தெரிவிக்க கூச்சமும் வெட்கமும் அடைந்தாள் . இப்படி பல நாட்களாக அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கும் போதுதான் ஒரு நாள் அவள் வசந்தனை சந்தித்தாள். அவனைக் கண்ட உடனேயே அவளுக்குள் குமுறிக் கொண்டிருந்த சோகம் பன்மடங்கு அதிகரித்து அருவியாக கொட்டத் தொடங்கியது . அவள் அவனை அருகிலிருந்த பொது பூங்காவுக்கு அழைத்துச் சென்று அங்கே சற்று மறைவான இடத்தில் அமரச் செய்தாள். அதன்பின் தனக்கேற்பட்ட சித்திரசேன னுடனான அனுபவங்களை ஒன்றுவிடாமல் அவள் தெரிவித்தாள். இடைக்கிடை அழவும் தேம்பவும் செய்தாள். அப்படி அவள் தேம்பி அழுத போதெல்லாம் வசந்தன் அவளைத் தன் தோள்மீது சாத்தி முதுகை தட்டி ஆசுவாசப்படுத்தி ஆறுதலளித்தான். அவனுக்கும் கூட சித்திரசேனனை நன்கு தெரியும் . அவன் எத்தகைய குணம், கொள்கை உள்ளவன் என்பதும் அவனுக்குத் தெரிந்த விடயமே . அவனுக்கு உடனேயே சித்திர சேனன் திட்டமிட்டே அவளை ஏமாற்றி இருக்கிறான் என்பது புரிந்து போய்விட்டது.

வசந்தனும்கூட தன் மனதில் அவளுக்கு ஒரு சிறிய இடத்தை ஏற்கனவே ஒதுக்கித்தான் வைத்திருந்தான. அவள் மீதான அவனது காதல் மிகநீண்ட வரலாற்றைக் கொண்டது . ஆனால் அவனால் ஒரு போதும் அதனை அவளிடம் தெரிவிக்க முடியவில்லை . அதற்கான முயற்சியில் அவன் பல தடவைகள் ஈடுபட்டிருக்கிறான். ஆனால் மறுபக்கத்தில் இருந்து ஒரு சிறு சமிக்கை கூட தனக்கு கிடைக்காததால் அதனை அவன் அவ்வப்போது தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தான் . இருந்தாலும் இவ்வளவு பெரிய இக்கட்டில் அவள் சிக்கிக் கொள்வாள் என்று அவன் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. இப்போது அவன் நினைத்தால் மாத்திரமே அவளுக்கு ஆறுதலை பெற்றுத்தர முடியும் என்ற நிலை வந்தபோது அவன் அதற்கு துணிந்து விட்டான் . அவன் அவளை உழுக்கி நிமிர்த்தி தன் எண்ணத்தை கூறினான் . அவளை அப்படியே முழுமையாக தன்னால் ஏற்றுக்கொள்ள முடியும் என்று அவள் கரங்களை இறுகப் பற்றினான் . அவளும் அதற்கு உடன்படுவது போல் அவன் தோள்களில் சாய்ந்துகொண்டாள் . இப்போது அவள் கண்களிலிருந்து நீர் சுரப்பது நின்று போய்விட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *