கரிசல் காட்டு காதல் கதைகள்!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 10,601 
 
 

வேட்டை நாய்!

பத்ரகாளிக்கு ரெண்டு ஆம்பளைப் புள்ளைக. மூத்தவன் கருப்பழகு, அப்புராணி. வாயத் தொறன்னா கண்ணத் தொறப்பான். சுந்தரம் இளையவன். வாய் சவுடாலு. எப்பவும் சில்லுனு வெள்ளை வேட்டி & சட்டையோட ஊரைச் சுத்திக் கிட்டுத்தேன் அலைவான்.

இவங்களுக்கு ஒரு அத்தை மக இருந்தா. பேரு சுமித்திரா. செம் பருத்திப் பூ கணக்கா அப்பிடி ஒரு சிவப்பு. செஞ்சு வச்ச செப்பு சிலை மாதிரி, அவளப் பார்த்தவக பார்த்த மானைக்கே இருக்கிற மாதிரி ஒரு அழகு. சொத்தும் ஏகப்பட்ட சொத்து. சுந்தரத்துக்கு சுமித்திரா மேலதான் கண்ணு. ‘அயித்த மவள கட்டிக்கிட்ட மின்னா வேலையே செய்ய வேணாம்; காலம் பூரா உக்காந்து திங்கலாம்’னு கணக்குப் போட்டுக்கிட்டு ரொம்ப கெத்தளிப்பா(உல்லாசமா)தேன் திரியுறான்.

மூத்தவன் கருப்பழகு எதைப் பத்தியும் நினைக்காம, தான் உண்டு.. தன் வேலை உண்டுனு எந்நேரமும் காடே கதினு கெடக்கான். ஏன்னா அவனுக்குத் தெரியும்.. ‘நம்ம அழகா இல்ல. எவளும் நமக்கு வாக்கப்படவும் மாட்டா’னு நினைக்கிறதோட மட்டுமில்ல.. எதுக்கால வர்ற பொண்ணுங்களை ஏறிட்டுக்கூட பாக்காமதேன் போறதும், வாரதுமா இருக்கான்.

சுமித்திராவுக்கு கல்யாணம் பேசு தாக. நம்மள விட்டா வேற யாரு அவளுக்கு இருக்காங்கிற தெம்புல சுந்தரம் ‘மேக்கோப்பு’ பண்ணிக்கிட்டு திருயுதான். சுமித்திராவுக்கு அவனைப் பார்க்கறப்பவே எரிச்சலா இருக்கு. சொவடிச்சிக்கிட்டு திரிஞ்சா சோத்துக்கு வருமானு நினைச்சவ, மூத்தவன தேடிப் பிஞ்சைக்கு வந்தா. இவ வந்ததக் கூடப் பார்க்காம வேல மேல கண்ணா இருக்கவனப் பாக்கேலே அதுக்கு மேல எரிச்சலா இருக்கு.

அப்பவும் ‘‘ஒரு மனுசனுக்கு எதுக்க வந்து நிக்கிற ஆளு கூடவா தெரியாமப் போவும். நானு உம்ம நெனச்சி ராவும் பவலும் உறக்கமில்லாம கெடக்கேன். நீரு என்னப் பத்தி கடுகும்புட்டுனாலும் நெனைக்கீரா, நெனைக்கலயா’’னு கேக்க, கருப்பழகு பெருமூச்சுவிட்டான்.

‘‘ஏத்தா, உன்ன நெனச்சி என்ன செய்ய? உன்ன எனக்கு கொடுக்கவும் மாட்டாக. என் தம்பிக்குதேன் கொடுப்பாக.’’

இச்சலாத்தியோட அவன் மேல எரிஞ்சு விழுந்தா சுமித்ரா. ‘‘நானு உம்மத்தேன் நெனச்சிக்கிட்டு இருக்கேன். நானு எங்காத்தாகிட்ட உமக்குத்தேன் வாக்கப்படுவேன்னு கண்டிச்சி சொல்லப் போறேன். நீரு எங்கழுத்தில தாலி கட்ட ரெடியா இரும்’’னு சொல்ல, கருப்பழகு பதறிப் போனான்.

‘‘வேணாம் சுமித்திரா. அப்படியெல்லாம் செஞ்சிராத. எந்தம்பியப் பத்தி உனக்குத் தெரியாது. அவன் நட்டன புடிச்சவன். நம்மள சேந்து வாழ விட மாட்டான். ரெண்டு பேருக்கு இடையில மொளச்சி நம்ம வாழ்க்கையில ‘கோண கலப்பைய’ சாத்திருவான்’’னு சொல்ல சொல்ல.. சுமித்திரா காது கேளாதவ கணக்கா விறுவிறுனு வீட்டுக்கு வந்தா.

‘‘உனக்கு இன்னிக்குப் பரிசம் போடணுமின்னு இருக்கோம்.. எங்க போனே?’’னு கேட்ட ஆத்தாகிட்ட, ‘‘நானு போனது இருக்கட்டும்.. எனக்கு யாரு மாப்பிள்ள?’’னு கேட்டவளை, பத்ரகாளி ஆச்சர்யமா பாத்தா. ‘‘இதென்ன சுமித்திரா இப்படி கேக்க? எம்மவன் சுந்தரந்தேன் உனக்கு மாப்பிள்ளை’’னு பெருமையோட சொன்னா.

சுமித்திரா வெடுவெடுத்தா.. ‘‘அயித்த.. தப்பா நெனைச்சிக்கிடாதீக. உங்க வீட்டுக்கு மூத்த மருமவளா வரத்தேன் எனக்குப் பிரியம்’’.

‘‘இதென்னடி யாத்தா இப்படி சொல்லுதே. எளயவன் உம்மேல உசுரா கெடக்கான்! ஆளு அழகுபட்ட ஆளு. வெள்ளையும் சொள்ளையுமா இருக்கான்!’’

‘‘எனக்கு அழகுபட்ட ஆளு வேண்டாமயித்த. அப்பு ரானியா இருந்தாபோதும். அதேமாதிரி வெள்ளையும் சொள்ளையும் வேணாம். கருத்தா வேல செய்ற ஆளு கிடைச்சாப் போதும். அம்புட்டு எதுக்கு.. உங்க மூத்த மவனுக்கு பேசுனா பேசுங்க. இல்லாட்டி, எனக்குக் கல்யாணமே வேணாம்’’னு சொல்லிட்டு, விருட்டுனு எழுந்து போனவளை கண்ணைக் கூட சிமிட்ட மறந்து பார்த்துக்கிட்டிருந்தா பத்ரகாளி.

அண்ணன் பொண்டாட்டியா புதுச் சீலையும், தாலியுமா வீட்டுக்குள்ள நுழைஞ்ச சுமித்திரா மேல வேட்டை நாய் போல பாய்ஞ்சு கொதறணும்போல இருந்துச்சு சுந்தரத்துக்கு. அவளை தனியா சந்திச்சவன் பல்லைக் கடிச்சான்.

‘‘நானு உன்ன என் உசுரா நெனைச்சி துடிச்சிக்கிட்டு இருக்கேன். நீ என் அண்ணனுக்குப் பொண்டாட்டியா வந்துருக்கே. உன்னை என் அண்ணன்கூட வாழ விட்டுட்டேனாக்கும்.. எம் பேரு சுந்தரமில்ல’’னு சொல்லவும், கலகலனு சிரிச்சா சுமித்திரா.

‘‘இப்ப எதுக்கு சிரிக்கிறே?’’

‘‘இல்ல.. உம்ம ஆத்தாளும், என் ஆத்தாளும் செஞ்ச வேலைக்கு நீரு எம்மேல எதுக்கு இப்படி பாயுதீரு?’’

‘‘நீ என்ன சொல்லுதே?’’

‘‘நானு உமக்குத்தேன் வாக்கப்படணுமின்னு என்னால ஏண்ட மட்டும் சொன்னேன். உங்காத்தாதேன் ‘மூத்தவனுக்கு முடிக்காம எளயவனுக்கு என்னன்னு முடிக்க’னு சொல்லி, உம்ம அண்ணனுக்குக் கட்டி வச்சிட்டாக. அதுக்குக்கூட நானு மாட் டேன்னுதேன் சொல்லியிருப்பேன். ஆனா.. உம்ம நெனச்சிதேன் உம்ம அண்ணனுக்கு வாக்கப்பட்டேன்.’’

பூவுக்குள்ளயே விழுந்தாப்போல வாசமேறிப் போனான் சுந்தரம்.

‘‘சுமித்திரா.. நீ என்ன சொல்லுதே?’’

‘‘தாலிய கட்டிட்டா மட்டும் போதுமா? நானு உம்ம அண்ணனுக்கு பொண்டாட்டியாயிருவேனா? என் நெனைப்பெல்லாம் உம்ம மேலதேன்’’னு சொன்னா சுமித்திரா.

கருப்பழகுக்கு கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசமாகிடுச்சு. வீட்டையே சுத்திக்கிட்டிருந்த சுந்தரம் யாரும் இல்லாதப்போ சுமித்திராகிட்ட கடுகடுத்தான்.

‘‘எங்கண்ணனப் புடிக்கலனு சொன்னே. ஆனா, அவன்கூட இல்ல பழுத்துப் போயி இருக்கே. எங்கூட எப்பத்தேன் பேசி பழகி இருக்கப் போறே?’’ன்னதும் சுமித்திரா இதுக்கும் கலகலனு சிரிச்சா.

‘‘எப்ப நீரு இப்படி கேப்பீருன்னுதேன் காத்துக்கிட்டு கெடக்கேன். ஊரடக்கம் அடங்குன ஒரு சாமத்துக்குப் பெறவு உமக்காவ நானு காத்திருப்பேன். நீரு வந்து கதவத் தட்டும். நானு என்னனு கேப்பேன். நீரு வெத்தலைக்கு சுண்ணாம்பு கொண்டாந்திருக்கேன்னு சொல்லும். நானு கதவத் தொறக்கேன்!’’னதும் சுந்தரத்துக்குக் குடை ராட்டினத்துல சுத்துறாப்போல இருந்தது. சட்டைக் காலரை தூக்கி விட்டுக்கிட்டு, பொழுது அடையுறதுக்காகக் காத்திருந்தான்.

ஒரு சாமம் கழிஞ்சிடுச்சு. இந்நேர வரையிலும் படபடத்த உடலையும், மனசையும் அடக்கிக்கிட்டு இருந்த சுந்தரம், யாருக்கும் தெரியாம அண்ணன் வீட்டுக் கதவைத் தட்டினான். விருட்டுனு கதவைத் திறந்த சுமித்திரா, பதமான அரிவாளால சுந்தரத்தோட மூக்குல ஒரு கொத்து கொத்தினா. அவன் ‘‘அய்யோ!’’னு அலற, ‘‘இதென்ன கொடுமை.. நீருதேன் வந்து கதவத் தட்டுனீராக்கும். நானு எம்புருசன்னு நெனச்சில்ல கொத்திப் போட்டேன்!’’னு இரக்கப்பட்ட சுமித்திரா ‘‘அயித்தே… அயித்தே’’னு அலறினா.

மொத நாள் ராத்திரி கெடை காவலுக்குப் போய்ட்டு, மறுநாள் காலையில வீட்டுக்கு வந்த கருப்பழகு சுமித்திராகிட்ட, ‘‘என்னத்தா என் தம்பி கொருவா மூக்கோட கெடக்கான்’’னு அப்பாவியா கேட்க, ‘‘உன் தம்பி படுக்காளிப் பய! எவளயாவது கையப் புடிச்சி இழுத்திருப்பான்.. அவ வசமா போட்டு இருப்பா. ஊரான் வீட்டுப் பொண்ணு என்ன தெருவிலயா கெடக்கு.. நீரு உள்ள வாரும்’’னா சிரிச்சுக்கிட்டே.

– மே 2006

Print Friendly, PDF & Email

1 thought on “கரிசல் காட்டு காதல் கதைகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *