விடிய விடிய காடு!
தனத்துக்கும் சந்திரனுக்கும் கல்யாணம் முடிஞ்சு ஆறு மாசமாச்சு..
ஆனாலும், சந்திரன் ஒரு நா கூட வீடு தங்கல.
வேட்டை வேட்டைனே சுத்திக்கிட்டிருந்தான்.
அவனயும் வீடு தங்க வெச்சா தனம். எப்படி?
அதான் கதை!
தனம் எப்பயும்போல சந்திரனைப் பத்தி கனா கண்டுக்கிட்டிருந்தா. அதென்னவோ முறை மாமனுங்க ஆயிரம் பேரு இருந்தும், எந்நேரம் பார்த்தாலும் கையில கவணோட வேட்டை, வேட்டைனு ஒரு நாயையும் கூட்டிக்கிட்டு ராத்திரியெல்லாம் காட்டு வழியில அலையுற இந்த சந்திரனைத்தேன் அவளுக்குப் பிடிச்சிருந்தது.
அகலமான மார்புக்கேத்தாப்ல ஒசரமும் கருகருனு திருக்கிவிட்ட அவனோட அடர்த்தியான மீசையும் குறும்புக்குள்ள பதிஞ்சு கெடந்த கருவிழியுமா கெடந்த அவன்கிட்ட அவ சொக்கித்தான் போனா. கருது அறுக்குறப்போ அருவா பிடியிலயும் களை வெட்டு றப்போ சொரண்டி பாரிலுமா அவ கண்ணுக்குள்ள வந்து மாயம் காட்டு னான் சந்திரன்.
பொறுத்து பொறுத்துப் பார்த்த தனம், ஒருநாள் ஆத்தா, அய்யாகிட்ட, சந்திரன்மேல தனக்கிருக்குற ஆசையை நெஞ்சு குமுற சொல்லி முடிச்சா.
மறுநாள் விடியமின்ன, அவ அய்யா கௌம்பிட்டாரு, சந்திரன் வீட்டுக்கு. ‘‘தனம்.. சந்திரன் கிட்டப்போயி உன் கல்யாணத்தப் பத்தி பேசிட்டு வரேன்’’னு அவர் பொறப்பட வும், இவளுக்கு கால் நிலை கொள்ளல. தவிச்சு, தட்டழிஞ்சு தெருவுக்கும் வீட்டு வாசலுக்குமா நடந்துக்கிட்டிருந்தா.
ஒரு நாழிகையிலயே அய்யா திரும்பி வர்றது தெரியவும், வெக்கத்தோட அவருகிட்ட ஓடுனா. மகளையே பார்த்தாரு, அவ அய்யா. வெசாரமும் வேதனையும் அவரு முகம் முழுக்க கோடாகிக் கெடந்தது.
‘‘என்னய்யா.. எம்புட்டுக்கு பரிதவிச்சிக் கெடக்கேன்.. பேசாம வாரீரு?’’னு தனம் கேட்டதும், அவரு குரல் கனக்கச் சொன்னாரு..
‘‘என்னத்த தாயீ சொல்லச் சொல்லுதே.. அவனுக்கு கல்யாணமே வேணாமாம். ‘இனிமே இந்த மாதிரி பேசிக்கிட்டு என் வீட்டுக்கு வராதீக’னு சொல்லிட் டான்’’னாரு.
தனத்துக்கு வானமும் பூமியும் ஒண்ணா சுத்துற மாதிரி இருந்தது. ‘‘என்னய்யா சொல்லுதீரு?’’
‘‘ஆமாத்தா. அவனுக்கு கல்யாணப் பேச்ச எடுத்தாலே வேப்பங்காயா கசக்குதாம். வேட்டயாடுறதிலதேன் இசுட்டமாம். சாவுற வரைக்கும் வேட்டையாடிக்கிட்டே சாவுணுமின்னுதேன் சாமியெல்லாம் கும்புடுதானாம். இப்பிடி பேசுறவன் கிட்ட என்னத்த பேசச் சொல்லுத?’’ன்னவரு துவண்டு போய் நடக்கவும், தனத்துக்கு நெஞ்சை அடைக்கிறாப்போல இருந்துச்சு.
அன்னிக்கு வீட்டுக்குள்ள வந்து படுத்தவதேன்.. பச்சைத் தண்ணியைக்கூட பல்லுல ஊத்தாம கொலைப் பட்டினியா, கலைஞ்சு கெடந்தா. மக கெடக்குற கோலத்தைப் பார்த்து அவ ஆத்தாவும் அய்யாவும் அரண்டு போனாக. ஒரே மக. அதுவும் செல்ல மக. அவளை உசுரோட பறி கொடுக்க முடியுமா?
சந்திரன் வீட்டுக்கு நடையா நடந்தாக. இவுக நடந்தது போதாதுனு ஊருக்குள்ள இருக்குற நாலு பெரியவுகளையும் கூட்டிக்கிட்டு நடந்தாக. இவுக ளோட அனத்தலைப் பொறுக்க முடியாத சந்திரன், தனத்தைக் கட்டிக்கிட சம்மதிச்சான். ஆனா, கூடவே இன்னொரு விசயத்தையும் கண்டிப்பாச் சொன்னான்.
‘‘இந்தா பாருங்க.. நானு தனத்து மேல ஆசைப்பட்டு இந்தக் கல்யாணத் துக்கு சம்மதிக்கல. என்னால ஒரு உசுரு வம்பாரமா போயிரக் கூடாதுன்னுதேன் சம்மதிக்கேன். கல்யாணத்த முடிச்ச பெறவு அவளும் சரி.. நீங்களும் சரி.. வேட்டைக்குப் போவாத, கீட்டைக்குப் போவாதன்னு சொல்லி என்ன தடுத்தீ களோ.. பெறவு நானு பொல்லாதவனா ஆயிருவேன்’’னு சொன்னப்போ யாராலயும் எதுவும் பேச முடியல. ‘இந்த மட்டுக்குமாவது கல்யாணத்துக்கு சம்மதிச்சானே..’னு அவசரமா கல்யாண வேலையைப் பார்த்தாக.
தனத்துக்கும் சந்திரனுக்கும் கல்யாணம் முடிஞ்சு ஆறு மாசமாகிடுச்சு. ஆனாலும், சந்திரன் ஒரு நா ராத்திரிகூட வீடு தங்கல. பொழுது கருகருனு மசங்க, நாய்க்கும் தனக்குமா வயித்தை நிரப்பிக்குவான். பெறகு கவணும் டார்ச்சுமா புறப்படு றவன்தேன்.. மறுநா வெட்டுனு விடிஞ்ச பெறகுதேன் வீடு வந்து சேருவான்.
ஆசை ஆசையா சந்திரனுக்கு வாக்கப்பட்டு வந்த இந்த ஆறு மாசத்துல, தனம் ரொம்ப நொந்துதேன் போனா. எத்தனையோ வேலைகள் இருக்க, இவன் பாவம்.. காட்டுல தன்னிச்சையா அலையுற உசுரைக் கொன்னு பிழைப்பு நடத்துறானேனு நினைச்சப்போ, அவளுக்கு அருவருப்பா வந்துச்சு. அதோட, தெனமும் ராத்திரி நேரத்துல காட்டுல அலையுற புருசனுக்கு என்னாகுமோனு அடி வயித்துல பதட்டத்தோட ராத்திரியெல்லாம் முழிச் சிருப்பாள்னா.. பகல்ல அவன் கொறட்டை விட்டுத் தூங்குறதைப் பார்த்துக்கிட் டிருப்பா. தனிமை அவளை மென்னு தின்னுச்சு.
மஞ்சளும் பூவும் கலந்த வாசனையோட, புருசன் பக்கத்துல உக்காந்து, தன்னோட ஆசைகளைப் பத்தி எவ்வளவோ தரம் கொஞ்சியும் கெஞ்சியும் சொல்லிப் பார்த்துட்டா. ஆனா, சந்திரன் கேக்கவே இல்ல. ‘‘இதுக்குத்தேன் கல்யாணமே வேணாமின் னேன்’’னு சொல்லிட்டு எந்திரிச்சு போய்டுவான்.
அன்னிக்கும் இப்பிடித்தேன்.. வழக்கம்போல வேட்டைக்குப் போய்ட்டு வீட்டுக்கு வந்த சந்திரன், தனத்தைக் காணாம தெகைச்சுப் போய்ட்டான். அப்பதேன், தனத்தோட ஒண்ணு விட்ட அண்ணன் செல்லையா வந்தான்.
‘‘என்ன மச்சினரே.. உம்மோட போவாம தங்கச்சியவும் வேட்டைக்குப் பழக்கீட்டிரு பொலுக்கோ?’’னு அவன் கேட்டதும் அரண்டு போனான் சந்திரன்.
‘‘செல்லையா.. நீ என்ன சொல்லுதே?’’
‘‘என்ன.. இப்படி கேக்கீரு? ராவு நீரு ஓடை எறங்கி காட்டுக்குப் போவயில உம்ம பின்னாலயேதேன் என் தங்கச்சியும் வந்தா. சரி, ரெண்டு பேருமாத்தேன் வேட்டைக்கு போறீக போலனு நானு இருந்துட்டேன். எங்கய்யா எந்தங்கச்சிய?’’னு கேட்டுக்கிட்டே செல்லையா ஓட, சந்திரனும் அவன் பின்னாலயே ஓடுனான். விசயம் தெரிஞ்ச தனத்தோட ஆத்தாவும் அய்யாவும் வாயிலயும் வயித்துலயும் அடிச்சுக்கிட்டு வந்துட்டாக.
பொழுதேறி ரொம்ப நேரமா தேடுன பெறகு, புதர் ஓரமா ரத்தக் காயத்தோட கெடந்த தனத்தை அள்ளிக்கிட்டு வீட்டுக்கு வந்தாக.
தண்ணியை, கிண்ணியை தெளிச்ச பெறகு, கண்ணு முழிச்ச தனம் சொன்னா..
‘‘இனிமே நானும் ராவுக்கு, ராவு வேட்டைக்குத்தேன் போவேன். என்னை யாரும் தடுத்தீகளோ என் உசுர மாச்சிக்கிடுவேன்’’னு அவ சொல்ல, அவசரமா அவளோட வாயைப் பொத்தினான் சந்திரன். அதுக்கப்புறம் அவன் வேட்டைக்குப் போயிருவானா என்ன?
வெறவு பொறுக்கப் போன ரக்குல சறுக்கி விழுந்ததை வெச்சு, புருசனை செயிச்ச கதையைப் பத்தி தனம் யாருகிட்டயும் மூச்சு விடல.
– செப்டம்பர் 2006