கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: April 20, 2023
பார்வையிட்டோர்: 7,767 
 
 

கண்களில் எரிச்சல் உண்டாக ஆரம்பித்தது. பதினைந்து நிமிடங்களுக்குக் கண்களைத் திறக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு தான் அந்த நர்ஸ் கண்களில் மருந்தை ஊற்றினாள். நான்கு மணி நேரத்திற்குப் பார்வை மங்கலாக இருக்கும் என்றாள். ஆனால் கண் எரியும் என்று அவள் சொல்லவில்லை. இன்னும் பதினான்கு நிமிடங்கள் நான் கண்களை மூடியே வைத்திருக்க வேண்டும்.

கண்களைத் திறந்துவிடலாமா என்று எண்ணினேன். ஆனால் கண்களைத் திறந்து, வெளிச்சம் கண்ணில் பட்டுப் பார்வை போய் விட்டால்? நினைக்கும் போதே கிலி ஏற்படுகிறது பார்வை எப்படிப் போகும். போக வாய்ப்பிருக்கிறது. உள்ளே நுழையும் போதே ஏதேதோ டாக்குமென்ட்களில் கையெழுத்து வாங்கினார்கள். அதில் என்ன எழுதியிருந்தது என்று படிக்கவில்லை. ஃபார்மாலிட்டீஸ் என்றார்கள். நானும் கேள்வி கேட்கவில்லை. ஆர்வக்கோளாறில் கண்ணைத் திறந்தீர்கள் எனில் கண் பார்வை போய்விடும் என்று எழுதி இருக்கலாம். அப்படி கண் போய்விட்டால் அதற்கு மருத்துவமனை நிர்வாகம் பொறுப்பல்ல என்று கூட எழுதியிருக்கக்கூடும். கண்ணைத் திறக்காமல் இருப்பதே நல்லது என்று முடிவு செய்தபின், கைக்குட்டையை எடுத்து கண்களில் இருந்து வழியும் மருந்தை துடைத்துக் கொண்டேன்.

“அம்மா உச்சா.. “ அந்தக் குரலுக்குச் சொந்தக்கார சிறுவனுக்கு பத்து வயது இருக்கலாம்.

“டாய்லெட்னு சொல்லு” என்று அவன் தாய் அவன் காதில் கிசுகிசுப்பது கேட்கிறது.

“கூட்டிட்டு போய்ட்டு வந்துருங்க” நர்ஸ் சொல்கிறாள்.

“ஆண்ட்டி நான் மூஞ்ச கழுவிட்டு வந்துறேன். கண் எரியுது” சிறுவன் கெஞ்சினான்.

“அதெல்லாம் செய்யக்கூடாது… கண்ண நாங்க சொல்றப்ப தான் திறக்கணும்” என்றவாறே நர்ஸ் என்னைக் கடந்து சென்றாள். அவள் மீது மல்லிப் பூ வாசம் அடித்துக்கொண்டே இருந்தது. ஆனால் நான் பார்த்தபோது அவள் தலையில் மல்லிப்பூ இல்லை.

“அம்மா கண்ணத் தொறந்தா என்ன ஆகும்”

“ஹான் சாமி கண்ண குத்திடும்” என்றவாறே அந்தத் தாய் அவனை அழைத்துச் செல்கிறாள். இப்போது மீண்டும் நர்சின் குரல் கேட்டது. “லக்ஷ்மி ரெட்டி” என்று உரக்கக் கத்தினாள். யாரும் வந்ததைப் போல் தெரியவில்லை.

“லக்ஷ்மி ரெட்டி” “லக்ஷ்மி ரெட்டி” மீண்டும் கத்தினாள். “போன் மேல போன் போட்டு அப்பாய்ண்ட்மென்ட் வாங்குறது. கரெக்ட் டைம்க்கு வரதுல்ல..”. அவள் முணுமுணுத்தாள்.

லக்ஷ்மி ரெட்டி ஏன் வரவில்லை? முக்கியமான வேலை ஏதாவது வந்திருக்கும். கல்லூரியில் திடீரென்று செய்முறைத் தேர்வு வைத்திருப்பார்கள். இல்லை. லக்ஷ்மி பொய் சொல்லிவிட்டாள். மருத்துவமனைக்குச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு தன் ஆண் நண்பருடன் எங்கேயோ சென்றுவிட்டாள்.

ஒருவேளை அவள் திருமணம் ஆனவளாக இருந்தால்? அவள் மாமியார் ஊரிலிருந்து திடீரென்று வந்திருக்கக் கூடும். “நான் வந்துட்டேனே..அதான் சமச்சு போட பயந்துக்கூட்டு கண் ஹாஸ்பத்திரி போறேன் பல் ஹாஸ்பத்திரி போறேன் புளுவுரா.. இவ வடிச்சுகொட்டி தான் நான் உடம்ப வளக்கணுமா !” என்று அவளது மாமியார் லக்ஷ்மியின் காது படவே சொல்லியிருக்கக் கூடும். (இதை அவள் தெலுங்கில் தான் சொல்லியிருப்பாள். எனக்கு தெலுங்கு தெரியாது) இதைக் கேட்டதும் அவள் என்ன செய்திருப்பாள்? பாவம் அழுது கொண்டே உள்ளே சென்றிருப்பாள். இல்லை. அவளின் குழந்தைக்குக் காய்ச்சல் வந்திருக்கக் கூடும். அவளது கணவனுக்கு வேலை போயிருக்க கூடும். துக்கத்தில் அழுது கொண்டிருக்கும் அவனுக்கு லக்ஷ்மி ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கிறாள் போல. ஆம். அப்படிதான் நடந்திருக்கும். இல்லை, அவள் வீட்டு நாய்க்குட்டி இறந்திருக்ககூடும். இல்லையேல் அவளது புருஷன் வெளியூர் சென்றுவிட்டதால், அவள்…

“எவ்ளோ நேரம் சார் வைட் பண்றது.. டாக்டர் உங்களக் கேட்டுகிட்டே இருக்கார்…”, நர்சின் குரல் என்னை மீண்டும் ஹாஸ்பிடல் அறைக்குள் இட்டு வந்தது.

“சாரி மேடம் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு… “ கரகரப்பான குரலில் பதில் வந்தது.

“நெக்ஸ்ட் டைம் உங்க கம்பெனில இருந்து யாரு வந்தாலும் அப்பாய்ன்ட்மெண்ட் கொடுக்கக் கூடாதுணுட்டார்.. போங்க நீங்களே போய் பேசுங்க…

“பேஷண்ட் இருக்கும் போதே எல்லாரும் பேக தூக்கிட்டு வந்தா எப்படி.. நாங்களும் வீட்டுக்குப் போக வேணாம்” முனவிக் கொண்டே நர்ஸ் நகர்ந்தாள்.

லக்ஷ்மி ரெட்டி ஒரு ஆண். சேல்ஸ் ரெப்ரசென்டேட்டிவ். எனக்கு முழியைப் பிடிங்கிக் கொள்ள வேண்டும் என்பது போல் இருந்தது. ஆண்களுக்கு ஏன் லக்ஷ்மி என்று பெயர் சூட்டுகிறார்கள்?

“ரீ செக்கப்பா?” நர்சின் குரல் மீண்டும் கேட்டது.

“யா…” இனிமையானதொரு பெண் குரல்.

“சரி அந்த சேல்ஸ் ரெப் வந்ததும் நீங்க போங்க..” மீண்டும் நர்சின் குரல்.

“சரி மேடம்” இன்னொரு பெண்ணின் குரல் கேட்டது. இது மிகமிக இனிமையாக இருந்தது. அவர்கள் முன் வரிசையில் இடது மூலையில் அமர்கிறார்கள். என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. சிறிது நேர மௌனம். டாக்டரின் அறைக் கதவு திறந்து மூடப்படுகிறது.

“இப்ப நீங்க போலாம்” நர்சின் குரல் எனக்குப் பிடிக்கவில்லை. எப்படிப் பிடிக்கும்..நான் அந்த மிகமிக இனிமையான குரலுக்கு அடிமையாகி விட்டேன்.

“சரி மேடம்” மீண்டும். மிகமிக இனிமையான குரல்.

சிறிது நேரத்திற்குப் பின் அவர்கள் வெளியே வருகிறார்கள்.

“டாக்டர் பவர் டீடெயில்ஸ் கொடுப்பாரு..டூ மினிட்ஸ்” மீண்டும் நர்சின் குரல்.

“இட்ஸ் ஒகே” அந்த இனிமையான குரல் எனக்கு மிகவும் அருகில் கேட்கிறது. இதோ, அந்தப் பெண்கள் என் அருகாமையில், என் பின் வரிசையில் வந்து அமர்கிறார்கள். மௌனம் இப்போது, ஏதோ பேசத் தொடங்கினார்கள். ஆங்கிலத்தில் பேசினார்கள். நான் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். ஹிந்தியில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

ஐயோ! அவர்கள் என்னைப் பற்றி தான் பேசுகிறார்கள். ஆம் என்னைப் பற்றிதான். கிண்டல் செய்கிறார்கள். எனக்கு ஹிந்தி பாஷை புரியும் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. போலும். அறிந்திருந்தால் இப்படிப் பேசமாட்டார்கள். என்னை வர்ணிக்கிறார்கள். என் ஆடையைப் பற்றி, என் கண்ணாடியைப் பற்றி, ஏதேதோ பேசுகிறார்கள்.

“உனக்கு புடிச்சிருந்தா பேசு..தப்பில்ல” இனிமையான குரல் கொண்டவள், மிகவும் இனிமையான குரல் கொண்டவளிடம் சொல்லுகிறாள்.

“வேண்டாம்..விடு”

“சும்மா பேசு…இல்லனா ஹாஸ்பிட்டல் வெளிய வெயிட் பண்ணுவோம். அவன் வந்தோனோ பேசுவோம்..“ மீண்டும் இனிமையான குரல் கொண்டவள்.

“நஹி… எப்டியும் வாப்பா லவ் மேரேஜுக்கு ஒத்துக்க மாட்டாரு..அமைதியா இரு”

நான் பறந்து கொண்டிருக்கேன். அந்த மிகமிக இனிமையான குரல் கொண்டவளுக்கு என்னைப் பிடித்திருக்கிறது. கண்ணைத் திறந்து பார்க்க வேண்டும். ஆசையாக இருந்தது. திடீரென்று என் அருகில் யாரோ வந்து நிற்பது போல் இருந்தது.

“சார். எவ்ளோ நேரம் ஆச்சு ட்ராப்ஸ் போட்டு”. ஒரு ஆண் குரல். என்னைத் தான் கேட்கிறான்.

“பத்து நிமிஷம் இருக்கும்”

“ஒகே. இன்னும் கொஞ்ச டைலூட் பண்ணியிறலாம். கண்ண திறங்க” எனக்கு சந்தோஷம். அந்தப் பெண்களைப் பார்க்கலாம். கண்ணைத் திறந்தேன். பார்வை மங்கலாக இருந்தது. தலையைத் திருப்ப எத்தனித்தேன். கையில் ட்ராப்சுடன் நின்று கொண்டிருந்த மேல் நர்ஸ் “சார்” என்றான். நான் அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் பார்த்தேன்.

“ரெண்டாவது முறை ட்ராப்ஸ் போடணும்” என்றவாறே கண்களில் மீண்டும் மருந்தை ஊற்றிவிட்டான். அந்தப் பெண்கள் எழுந்து சென்று நர்சிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். “அஞ்சு நிமிஷம் கண்ணத் திறக்காதீங்க..” என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டான். கண்ணைத் திறக்க முடிவு செய்தேன். பார்வை போனாலும் பரவாயில்லை. பார்வையெல்லாம் போகாது. எப்படிப் போகும்?

கண்களைத் திறந்தேன். பார்வை மிகமிக மங்கலாக இருந்தது.

“கண்ணத் திறக்காதீங்க சார்“ நர்ஸ் கத்தினாள். அந்தப் பெண்கள் அங்கு இல்லை. கண்ணிலிருந்து மருந்து வடிந்து கொண்டிருந்தது. “அங்கிள் கண்ணத் திறக்காதீங்க.. சாமி கண்ணக் குத்திரும்” முன் வரிசையில் அம்ரந்திருந்த சிறுவன் என்னைப் பார்த்துச் சொன்னான். “ஹேய் சும்மா இரு” என்று அவனை அவன் அம்மா அதட்டினாள், நான் மருந்தைத் துடைத்துக் கொண்டே, சுற்றும் முற்றும் பார்த்தேன். மின் விளக்குகளின் ஒளி கண்களைக் கூசிற்று. தூரத்தில் லிப்ட்டுக்குள் அந்த இரண்டு பெண்களும் நின்றுகொண்டிருந்தனர். லிப்ட்டின் கதவு கொஞ்சம் கொஞ்சமாக மூடிக் கொண்டிருந்தது. அதில் ஒருத்தி என்னைப் பார்த்து புன்னகை செய்தாள். லிப்ட் மூடிக்கொண்டது.

– நவம்பர் 2014

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *