ஓடக்காரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: April 22, 2023
பார்வையிட்டோர்: 7,199 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருச்சியில் மேலச் சிந்தாமணியில் ஒரு சுப்பிரமணிய ஸ்வாமியின் கோவில். அது அந்தப் பக்கத்துக்கே மிகுந்த சோபையைக் கொடுத்து வந்தது. கோவில் சிறியது தான். ஆனால் அதில் இருந்த மூர்த்தி மட்டும் மிகவும் சக்தி வாய்ந்தது என்று சொன்னார்கள். கோவிலைச் சுற்றி அழகிய தோட்டம். அதில் ரோஜா, மல்லிகை மொக்குகள் மலர்ந்து கண்ணைச் சிமிட்டி மின்னின. அமைதியாகப் பவனி வந்த காவேரி ஆறும், கம்பீரக் கோவிலும் பார்க்கத் தெவிட்டாத காட்சியாக அமைந்தன.

காலையில் ஸ்திரீகள் காவேரி நதியில் ஸ்நானம் செய்துவிட்டுக் கோவிலில் ஸ்வாமி தரிசனம் செய்து விட்டுப் போவார்கள். உஷக் காலத்தில் மலைக் கோட்டையிலிருந்து இன்ப மூட்டும் நாகஸ்வர கீதம் மெல்லிய காற்றில் தவழ்ந்து வரும்.

ஆனால், அதைவிட மேலான தெய்விகமான செவியின்பத்தை அங்கே அநுபவித்து வந்தேன். உஷக் காலத்திலும், அந்தி வேளையிலும் ஆற்றங்கரையில் உட்கார்ந்து கவனித்தால், ஒரு பெண்குரல் பாடுவது கேட்டு வந்தது.

“பல்லினைக் காட்டி வெண்முத்தைப்
பழித்திடும் வள்ளியை – ஒரு
பார்ப்பனக் கோலந் தரித்துக்
கரந் தொட்ட வேலவா!”

அந்தக் குரல் இசைத்த மதுர கானம் இதுதான்.

சில காலம் வரையில் அந்தக் குரல் யாருடையது என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு நாள் காவிரிக் கரையில் இருந்த பெரிய பூவரச மர நிழலில் உட்கார்ந்து சிந்தனையில் ஆழ்ந்திருந்தேன்.மாலை நேரம். தொலைவில் ஸ்ரீரங்கத்துப் படித்துறையிலிருந்து ஒரு படகு மெல்ல மெல்ல இக்கரையை நோக்கி நகர்ந்து வந்துகொண்டிருந்தது.

படகு நெருங்க நெருங்க மேலே சொன்ன பாட்டு, கணீரென்று கேட்க ஆரம்பித்தது. படகு கரையை அடைந்ததும் அதில் அழகிய பெண் ஒருத்தி துடுப்பைக் கையில் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். படகை இழுத்துப் பிடித்து மரத்தோடு கட்டி விட்டு அவள் படியேறினாள். அவளை ஆவலுடன் உற்று நோக்கினேன். அவளும் என்னைப் பார்த்துவிட்டு, “ஏன் அம்மா, எங்கே போகணும்?” என்று கேட்டாள்.

“எங்கும் போக வேண்டாம். இத்தனை நேரம் நீதான் பாடினாயா?” என்று கேட்டேன்.

“ஆமாம், அந்தப் பாட்டை நீங்களும் கேட்டாய் விட்டதா? அப்படி நான் என்ன அம்மா நன்றாய்ப் பாடுகிறேன்?” என்று ஆச்சரியம் கலந்த சிரிப்புடன் கேட்டாள்.

“நன்றாய்த்தான் இருக்கிறது. இந்தப் பாட்டு உனக்கு எப்படித் தெரிந்தது?”

“எப்படியோ தெரிந்தது. அந்தப் பாட்டுத்தான் எனக்கு ரொம்பப்பிடித்தது. எவ்வளவு தடவை பாடினாலும் அலுக்கவில்லை”.

“உன் பெயர் என்ன?”

“குஞ்சரி.”

“அழகான பெயர்” என்றேன் நான்.

“பெயரில் என்ன இருக்கிறது அம்மா? முத்து, புஷ்பா என்று வைத்தால் நிறைந்து போய்விடுமா? அதிருஷ்டம் வேண்டாமா?” என்று பெருமூச்ச விட்டாள். அவள் மனத்தில் இருப்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருப்பதாகத் தெரிந்தது. அநுதாபத்துடன் நான் சில வார்த்தை பேசியதும் அவள் ஆரம்பித்தாள்.

நான்கு வருஷங்களுக்கு முன் கடைசியாக ஷண்முகம் இந்தப் பாட்டைப் பாடிவிட்டுப் போனார். திரும்பவும் வரவே இல்லை. தவறு என்னவோ எங்கள் பேரில் தான். இந்தப் பாட்டு என் குழந்தைப்பருவத்திலேயே மனத்தில் பதிந்து போயிற்று. சிறு வயதில் இந்த மரத்தடியில் நானும் அவரும் இந்தப் பாட்டைப் பல தடவை பாடியிருக்கிறோம். நானும் அவரும் எப்பொழுதும் சேர்ந்தே விளையாடுவோம். இதனால் என் பேரில் அப்பாவுக்குக் கோபங்கூட வருவது உண்டு. ‘அந்தப் பயலுடன் ஊர் சுற்றுகிறாயா?’ என்று அடிப்பார். அது ஷண்முகத்துக்குத் தெரிந்துவிட்டால், இந்த அரச மரத்தடியிலிருந்து இரண்டு தடவை விஸில் அடிப்பார்; நான் ஓடிப் போய் விடுவேன்.

“படிப்பு என்னவோ அவர் அதிகம் படிக்கவில்லை என்றுதான் சொன்னார்கள். இருந்தாலும், ஏதாவது பாடிக்கொண்டே இருப்பார். தனியாகப் பாடும்போது அவருக்கு உத்ஸாகம் அதிகம் இருப்பதில்லை. நானும் கூடச் சேர்ந்து பாட ஆரம்பித்தால் உத்ஸாகம் கரை புரண்டுவிடும். படகைத் தள்ளிக்கொண்டே பாட்டைப் பாடிக்கொண்டு இந்த மாதிரி இரவுகளில் எத்தனையோ தடவை போயிருக்கிறோம். அதெல்லாம் இப்பொழுது கதையாகப் போய்விட்டது.

“அம்மா, ஷண்முகத்தைக் கண்டால் என் அப்பாவுக்குப் பிடிக்காது என்பதில்லை. ஒரு சிறிய தவறு அவர் மனத்தைக் கல்லாக்கிவிட்டது.

“ஸ்ரீரங்கத்தில் அன்று என்னவோ உத்ஸவம். நல்ல நிலவு. ஆற்றில் ஏராளமான கூட்டம். அப்பாவுக்கு என்னை அனுப்ப இஷ்டமில்லை. முதல் நாளே அவருக்குத் தெரியாமல் போவது என்று நானும் ஷண்முகமும் ஏற்பாடு செய்திருந்தோம். ஆற்றில் ஜலம் கொண்டுவரப் போவதாகச் சொல்லிப் படகில் இருவரும் கிளம்பிவிட்டோம். ஷண்முகந்தான் படகைத் தள்ளிக்கொண்டு வந்தார். என் மனம் நிலவு பொழியும் நதியைக் கண்டு களிவெறி கொண்டது.

“ஸ்ரீரங்கத்திலிருந்து நாகஸ்வரம் காற்றில் தவழ்ந்து வந்தது. ஷண்முகம் பாட ஆரம்பித்தார். முதல் இரண்டு அடியைப் பாடிவிட்டு என்னைப் பார்த்தார். பிறகு, ‘ஏன் குஞ்சரி,பாடமாட்டேன் என்கிறாய்?’ என்று கேட்டார். நான் பதில் பேசவில்லை. ‘சிரிக்கக்கூட மாட்டாயோ? வெண்முத்துப் போன்ற பல் வெளியில் தெரிந்தால் மோசம் போய்விடுமோ?’ என்றார் அவர். நான் சிரித்து விட்டேன்.

“அவர் என் கையைச் சேர்த்துப் பிடித்துக்கொண்டார். கையை மெதுவாக இழுத்துக்கொண்டேன். சிறிது நேரம் என்னையே மெளனமாக உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவர் பாட்டின் மற்ற அடிகளையும் பாடிவிட்டு, ‘என்னைப் பார்க்க வெட்கமாக இருக்கிறதா? எப்படித் திடீரென்று இந்த வெட்கம் வந்துவிட்டது, குஞ்சரி?’ என்றார். நான் ஒன்றும் புரியாமல் திகைத்தேன்.

”ஒன்றும் புரியவில்லையா உனக்கு? உன்னை ஒன்று கேட்கிறேன். வெட்கப்படாமல் பதில் சொல்லுவாயா?’ என்று கேட்டார்.

‘ஹும்’ என்று தலையை ஆட்டினேன்.

“என்னைக் கல்யாணம் செய்துகொள்ளுகிறாயா?” என்று கேட்டார். இவ்வளவு நேரம் தலையைக் குனிந்து கொண்டிருந்த நான் அவரை நிமிர்ந்து பார்த்தேன். அவர் முகத்தில் உண்மையும் அன்பும் பிரகாசித்தன.

“நான் தலை குனிந்தேன்.”


“எங்கள் இருவர் மனமும் ஒன்றுபட்டதே தவிர அப்பாவின் மனம் சம்மதிக்கவில்லை. இவ்வளவு நாள் அவருடன் சகஜமாகப் பேசிக்கொண்டிருந்த அப்பாவுக்குத் திடீரென்று வெறுப்பு உண்டாகிவிட்டது. அப்பா உத்தரவை மீறி நான் அவருடன் உத்ஸவத்திற்குப் போனதும், அவர் என்னைத் தெரியாமல் அழைத்துக் கொண்டு போனதுமே காரணங்கள்.

”குஞ்சரி, அப்பாவைக் கேட்டாயா?” என்று கேட்பார். நான் பேசாமல் நின்றுகொண்டிருப்பேன்.

“அவரைக் கேட்க வெட்கப்படுகிறாயா? நான் வந்து கேட்கட்டுமா?”

”ஐயோ, வேண்டாம்!” என்றேன்.

“ஏன்?”

“ஏனா? நீங்கள் வந்து கேட்க வேண்டாம்.”

“இப்படியே பல மாதங்கள் போய்விட்டன. இதே மரத்தடியில் நான்கு வருஷங்களுக்கு முன்பு ஒரு நாள் மாலை பாடிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். அந்தக் குரலில் துன்பம் கலந்திருந்தது.

“கடைசியாகக் கேட்கிறேன் குஞ்சரி. அப்பா சம்மதித்தாரா இல்லையா?” என்று கேட்டார்.

“இந்த ஜன்மத்தில் நான் புண்ணியம் செய்யவில்லை. முருகனின் சித்தம் அவ்வளவுதான்” என்றேன்.

“இதுதானா உன் முடிவு?”

”எனக்காக இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்கக் கூடாதா?” என்றேன்.

“ஆமாம்; என் நன்மையில் அக்கறை கொண்ட பெரியவர்களின் மனம் புண்படும்படி இவ்வளவு காலம் இருந்தது போதும். நாள் முட்டாள். மனத்தைக் கண்டபடி அலைய விட்டுவிட்டேன். உன் அப்பாவுக்குப் பிடித்தவனாய்ப் பார்த்துப் பண்ணிக்கொள். நான் போய் வருகிறேன்.”

“அன்று போனவரை இதுவரையில் நான் பார்க்கவே இல்லை”.

இவ்வாறு கூறி முடித்த குஞ்சரியின் கண்களில் ஜலம் வழிந்தது.


நான்கு வருஷங்களுக்குமுன் நடந்த மேற்படி சம்பவம் அநேகமாக என் மனத்தைவிட்டு அகன்றே போய் விட்டது. திடீரென்று ஏற்பட்ட யுத்த அபாயத்தால் திருச்சிக்குப் போனோம். பழைய கரை, முருகன் கோவில், பூந்தோட்டம் எல்லாம் அப்படியே இருந்தன. அந்த மரத்தடியை அடைந்த பிறகு திடீரென்று குஞ்சரியின் நினைவு வந்தது.

ஐயோ! அவள் என்ன ஆனாள்? அப்பொழுது அவள் அந்தச் சோகக் கதையைச் சொன்னாளே, அந்த அபலை. கடைசியில்…ஐயோ! அப்படியும் இருக்குமா…?

திருச்சிபை அடைந்தபத்துத் தினங்களுக்கு அப்புறம் ஒரு தினம் உஷக் காலத்தில் கோவிலிலிருந்து மேளச் சத்தம் கேட்டது. பிராதக் கால பூஜையாய் இருக்கும் என்று எண்ணிக்கொண்டேன்.

ஆனால், சிறிது நேரத் திற்கெல்லாம் ஒரு கல்யாண ஊர்வலம் வந்துகொண் டிருந்தது. கல்யாணப் பெண் குஞ்சரிபேதான்! அவள் பார்வை தற்செயலாக என்பேரில் விழுந்தது.

அன்று மாலை காவேரிக் கரையில் எதிர்பாராத விதமாகக் குஞ்சரியைச் சந்தித்தது பற்றி வியப்பில் மூழ்கியிருந்தேன்.

“அம்மா!” என்று கூப்பிட்டாள் குஞ்சரி. பக்கத்தில் அவள் கணவன் நின்று கொண்டிருந்தான்.

“கல்யாணம் ஆயிற்றா? ரொம்ப சந்தோஷம்” என்றேன்.

“யாரைக் கல்யாணம் செய்துகொண்டேன் தெரியுமா? ரொம்ப வருஷங்களுக்கு முன் என்னைத் தவிக்க விட்டுவிட்டு ஓடிப் போனாரே, அவரையேதான்” என்றாள் குதூகலத்துடன், பிறகு, “இலங்கை இருக்கிறது பாருங்கள்! அங்கே உத்தியோகம் சம்பாதிக்கப் போனாராம். உத்தியோகம் மாத்திரம் சம்பாதிக்கவில்லை. இன்னொரு காதலியையும் சம்பாதித்துக் கொண்டார். இன்றைத் தினம் முகூர்த்தம் வைத்திருந்தார்களாம். ஜப்பான்காரன் முதல் குண்டைப் போட்டதும் உயிர் இருந்தால் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று ஓடி வந்து விட்டார். அந்த முகூர்த்தத்திலேயே இங்கே கல்யாணம் ஆகிவிட்டது. முழிக்கிறதைப் பாருங்கள். முருகனுக்குப் பொறுக்க வேண்டாமா?” என்றாள், ஷண்முகத்தைப் பார்த்தவாறு. அவன் தலையைக் குனிந்துகொண்டே இருந்தாள்.

“சண்டை யெல்லாம் போதும் குஞ்சரி. இனிமேல் ஒற்றுமையாக இருங்கள்” என்று சொல்லிவிட்டு எழுந்தேன்.

“அம்மா, படகில் ஸ்ரீரங்கம் போகலாம் வருகிறீர்களா?” என்று கூப்பிட்டாள்.

“வேண்டாம், நீங்கள் போய்விட்டு வாருங்கள்” என்றேன்.

அந்தி வானம் ஸ்வர்ணமயமாய் இருந்தது. அந்த அபூர்வ ஒளியில் காவேரி, ஸ்ரீரங்கநாதர் கோபுரம், அதற்கு அப்பாலுள்ள தோப்புகள், குஞ்சரியும், ஷண்முகமும் செல்லும் படகு – எல்லாம் மூழ்கிக் குளித்தன.

மலைக் கோட்டையிலிருந்து தவழ்ந்து வரும் அந்த நாகஸ்வர கீதத்துடன்,

“கல்லினைக் காட்டி வெண் முத்தைப்
பழித்திடும் வள்ளியை-“

என்ற பாட்டும் நதி நடுவிலிருந்து ஒலித்துக்கொண்டிருந்தது.

– நவராத்திரிப் பரிசு, முதற் பதிப்பு: 1947 , கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *