ஒரு ஜீவன்…துடித்தது!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 5, 2021
பார்வையிட்டோர்: 12,650 
 

(கவனிக்க: காதல் தோல்வியா? மற்றும் வாழ்வில் பற்பல இன்னல்களா? – இக்கதையை படியுங்கள் புரியும்)

தூறலாக ஆரம்பித்து. லேசான மழையாக மாறி, அது மண் வாசனையை கிளப்பியதும், இதமான குளிர்ந்த காற்றும் சேர்ந்து வீச. ஜன்னலை திறந்து வைத்து படுத்திருந்த ரவி மதிய தூக்கம் கலைந்து எழுந்து கொண்டான்.

சில நிமிடங்களில் மழை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க, ஒரு ரம்மியமான ஓசையில், சூழலில், ஆனந்தமாக கட்டிலிலிருந்து இறங்கி ஜன்னலை அடைந்து சிறு பிள்ளை போல் வேடிக்கை பார்த்தான்.

பல சமயங்களில் இப்படிப்பட்ட சிறு பிள்ளை மனோநிலை அவனையே குழப்பியது…இன்னும் அந்த பதின்ம வயதிலிருந்து மீண்டு வராமல் இருக்கிறேனா என்று!!.

ஜன்னல் வெளியே சிட்டுக்குருவி ஜோடி ஒன்று மழையால் ஒதுங்கி இறக்கைகளை குட்டிக் குட்டியாக சிறகடித்து படிந்திருந்த மழை நீரை அகற்றி ஒன்றை ஒன்று ஒத்தாசையாக. சிறு சிறு அன்பு முத்தங்கள் பரிமாறிக் கொண்டன.

‘ஆம். காதல் என்றால் அக்கறை… ஒத்தாசை. அவ்வப்பொழுது அன்பான முத்த பரிமாற்றங்கள். அரவணைப்புகள். ஆனால் இந்த நவநாகரீக உலகில். பணமே குறியாக ஓடும் பந்தயத்தில். காதல் பொய்யாகிக் கொண்டு வருவதையும், அளவற்ற சுயநலம் காரணமாக… கடவுள் சாட்சியாக, பஞ்ச பூதங்கள் சாட்சியாக…பல நூறு சொந்த பந்தங்கள் நண்பர்கள் ஆசியுடன் நடந்தேறிய திருமணங்கள்… கொஞ்ச காலத்திலேயே கசப்பான அனுபவங்கள் காரணமாக, சண்டையிட்டு பிரிந்து. விவாகரத்து வரை. இன்னும் சில தற்கொலை வரை போகின்றனவே!?. எத்தனை இளம் காதல் ஜோடிகள் பழகிய சில காலங்களில் ‘ப்ரேக்கப்’ என்று அந்த சொல்லில் ஏதோ ஒரு மாயை இருப்பது போல் அக்கறையின்றி நடந்து கொண்டு பெற்றோர்கள் மனதையும் புண்படுத்துகிறார்கள்??… எத்தனை பேர் பழி வாங்கும் எண்ணம் கொண்டு கொலை செய்யும் அளவுக்கு மாறுகிறார்கள்???.

‘நம் காதல் உண்மையானது…புனிதமானது, என்று ஆரம்பித்து. கடைசியில் என்ன இழவுக்கு காதலித்து இப்படி ஆனோம் என்று வேதனை தானே மிஞ்சுகிறது?”

கொட்டாவி ஒன்றை விட்டவாறு அறையில் இருந்து வெளியே வந்து ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து கண்களை மூடினான்.

திடீரென்று அம்மாவின் பார்வை தன்னை துளைப்பது போல் உணர. திரும்பி பார்க்க…அதோ அவள், டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டு அவனை ஏக்கமாக பார்த்துக் கொண்டு இருந்தாள். 33 வயதை கடந்த தன் மகனின் மனதில் என்ன யோசனைகள் இருக்கும் என்று குழம்பியவளாக.

ரவி அவள் பார்வையை தவிர்த்து திரும்பிக் கொண்டான். இல்லையேல் அடுத்து ஒரேயொரு கேள்வி தான் அவளிடத்தில் இருந்து வரும்…”நீ எப்பத்தாண்டா கல்யாணம் பண்ணிக்கிட்டு எனக்கு பேரப்பிள்ளைகள் கொடுப்பே?. உன் வயசுல உன் ஃப்ரெண்ட் எல்லாம் இரண்டு பிள்ளைகள்..”

“அம்மா. ஒரு டீ கொண்டு வாயேன்?” அவளை திசை திருப்ப முயன்றான் ரவி.

‘ஆசை ஆசையாய் பெற்ற மகன். இப்படி கணவன் இறந்து போன பின்னும்…என் நிலை அறியாமல் கஷ்டப்படுத்துகிறானே’ மனதிற்குள் முனகியவாறு டீ போடப் போனாள் தாய்.

ஹாலில் இருந்த ஜன்னல் வழியே மழையை ரசித்த ரவி, அங்கே ஒரு காதல் ஜோடிக் கிளிகள் ஒன்றையொன்று நெருக்கமாக உரசிக்கொண்டு முத்தமிட்டுக் கொண்டே இருந்தன.

அதைப் பார்த்த ரவியின் கண்கள் நொடிப்பொழுதில் குளமாக மாறியது. வாழ்க்கையில் ஒரேயொரு முறை தான் அவன் ஒருத்தியை முத்தமிட்டு அந்த ஆனந்தத்தை அனுபவித்திருந்தான். சுமார் இருபது வருடங்களுக்கு முன்!!

டீ போட்டு எடுத்திட்டு வந்தவள் அவன் கண் கலங்கியது பார்த்து தானும் கலங்கினாள். இது அவ்வப்பொழுது நடக்கும் ஒரு அன்றாடம்!!

“இன்னும் எத்தனை காலம் தான் இப்படி அவளையே நினைச்சு என்னையும் கஷ்டப் படுத்தப்போற… அந்த ராணி எங்கே எப்படி. உயிரோட இருக்கிறாளான்னு கூட தெரியாம?” கடிந்து கொண்டே டீயை நீட்டினாள் தாய்.

இதையும் பலமுறை கேட்டு கேட்டு சலிப்படைந்திருந்தான் ரவி.

ரவியின் மனப் போக்கால் அவன் அம்மா படும் கஷ்டத்தை அவள்தான் அறிவாள். எத்தனை சக பெண்களிடம் ‘ஏன் இன்னும் உன் மகனுக்கு கல்யாணம் செய்து வைக்கவில்லை?’ என்று கேட்கும் போது எல்லாம் உள்ளுக்குள் அழுது தீர்ப்பாள்.

‘உன் மகனுக்கு என்ன வயசு…அவனுக்கு ஏதாவது கோளாறா… ஏன் இன்னும் ஒண்டிக்கட்டையா இருக்கான்?’ என்று பலர் பலவிதமாக கேட்டதுண்டு.

ரவியை ஈன்றெடுக்கும் முன் அவனை பெறுவதற்கு சுமார் நான்கு ஆண்டுகள் ஆகின. அப்பொழுதெல்லாம் இதே பெண்கள் ‘ஏன் இன்னும் உனக்கு குழந்தை பிறக்கவில்லை?… அவருக்கு ஏதாவது பிரச்சனையா?… உங்களுக்குள் ஏதாவது பெரிய சண்டையா?’ என அப்போதும் மனதை சங்கடப்படுத்தி பேசியவர்கள் தான் இவர்கள்.

அதற்குப் பிறகு பல பூஜைகளும் வேண்டுதல்களும் கடைபிடித்து செய்த பின் தான் ரவி பிறந்தான்.

இப்பொழுதும் அதே கதை தான். பல பூஜைகளும் வேண்டுதலும் யார் எந்த ஜோசியர் என்ன சொல்கிறார்களோ அதை எல்லாம் கடைபிடித்து வந்தாள் பாவம். ரவிக்கு சீக்கிரம் திருமணம் செய்து வைப்பது ஒன்றே அவளது பெரிய குறிக்கோளாக இருந்தது. ஒரு அம்மாவுக்கு அதை விட வேறு என்ன வேலை?!

‘ஏதாவது ஒரு அழகு தேவதை… அந்த ராணியைப் போல…இல்லை அவளை விட அழகாகவும். ஏன் இவன் வாழ்க்கையில் வந்து இவன் மனதை மாற்றக் கூடாது?…அப்படி ஒரு அழகு தேவதை இவனைக் காதலித்தாள் – நாம் காதலிக்கும் பெண்ணை விட நம்மை காதலிக்கும் பெண்ணை மணந்தால் இன்னும் சிறப்பானது – என்பதை உணரச் செய்யலாமே?’

இப்படியாக பல மனப் போராட்டங்களுடன் நாள் தோறும். அவன் வேலையிலிருந்து திரும்பி வரும் போதெல்லாம். அவன் முகத்தை ஏக்கமாக பார்ப்பாள்… இன்று ஏதாவது பெண்ணை சந்தித்து மனம் மாறி இருக்குமா என்று.

ரவியோ அவ்வப்பொழுது “உன்னையே…எண்ணியே…வாழ்கிறேன்!” என்று பாட்டு பாடுவான்…சிலசமயம் ஹால் முழுக்க கேட்கும்படியாக தொண்டை கிழியும்படி பாடி. பின் அழுவான்.

அவன் பணி செய்யும் அலுவலகத்தில் ‘தான் உண்டு தன் வேலை உணடு’ என்று பெண்களை நெருங்காமலேயே இருந்து வந்தான்.

‘கண்டதும் காதல்!’ என்பதெல்லாம் வாழ்க்கையில் ஒரு முறை தான் நடக்க வேண்டும். அதனாலேயே இன்னொரு பெண்ணை ஏறிட்டுப் பார்ப்பதைத் தவிர்த்தான்.

காதலர்கள் சோகமாக பிரிந்து பாடும் சினிமா பாடல்கள் எல்லாம் அவனை கேட்ட முதல் முறையை ஈர்த்தது… மனதை கவ்வியது. அது போல் சில ஆங்கில பாடல்களும் அவனை கவர்ந்தன. இப்படிப்பட்ட சோகப் பாடல்களை கேட்பதே அவனது பெரும் பொழுது போக்காக இருந்தது. தூக்கம் வராத சமயங்களிலும் அப்படிப்பட்ட பாடல்களை கேட்டு, பின் மனம் நொந்து அழுவான். அப்படி பல இரவுகள் தூக்கமின்மையால் கழிந்தன, இன்சோம்னியா என்ற தூக்க நலக்கேடுக்கும் ஆளானான்.

திருமணம் என்பது வெறும் இரண்டு உயிர்களை சேர்த்து வைக்கும் சடங்கு அல்ல… இரண்டு உள்ளங்களை சேர்ப்பது. அவர்களை சார்ந்த குடும்பத்தையும் ஒன்று சேர்ப்பது… அப்படிப்பட்ட திருமண வாழ்க்கை தனக்கு நேராது என்று அவ்வப்போது ராணியை நினைத்துக் கொண்டே வாழ்ந்து வந்தான்.

இப்படியே சொந்த வாழ்க்கையில் நொந்து போன. சற்றே மன உளைச்சலுடன், கடினமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தவன். வெளியுலகில் சாந்தமான சாதாரணமான மனிதனாக வாழ்ந்து வந்தான்.

****

அன்று அலுவலகத்தில் வேலை ஆரம்பித்த பின், சுமார் அரை மணி நேரத்திற்கு பின் அவனுடைய நண்பன் பிரபு அருகே வந்தான்.

“ஹாய் ரவி… குட் மார்னிங்”

“ஹாய் பிரபு… குட் மார்னிங்… எப்படி இருந்தது இரண்டு நாள் விடுமுறை… பிரயாணம் நல்லபடியாக அமைந்ததா?”

“அது எல்லாம் ஓகே தான். உனக்கு இங்கே ஆபீஸ்ல என்ன புதுசா நடக்கிறது என்று ஒன்னும் தெரியாதா?”

“என்ன புதுசா இருந்திடப் போகுது?… உனக்குத் தான் தெரியுமே. நான் ‘நான் உண்டு என் வேலை உண்டு’ என்று இருப்பேன்னு?!. ”

“சரியான இத்துப்போனவண்டா. நீ முட்டாள்…”

“அதெல்லாம் எனக்கு நல்லாவே தெரியும். அப்படி என்ன புதுசு? அதச் சொல்லு”

பிரபு ரவி காதருகே வந்து கிசுகிசுத்தான்… “உனக்கு வலப்பக்கம் உள்ள க்யூபிக்கள்ல தான் ஒருத்தி, புதுசா இன்னிக்கு வேலையில ஜாயின் பண்ணியிருக்கா. செமையா இருக்கா டா… பார்க்கலையா நீ?”

“டேய் போடா…உன் வேலைய பாருடா…சும்மா காலங்காத்தால வந்து என்ன பத்தி தெரிஞ்சுக்கிட்டும் சும்மா இப்படி கடுப்பேத்தாத. போ போ வேலைய பாரு”

பிறகு சுமார் அரை மணி நேரம் கழித்து.

“மே ஐ கம் இன்?” ஒரு இனிய வசீகர பெண்ணின் குரல் அவனை திடுக்கிட செய்து திரும்பிப் பார்க்கச் செய்தது.

திரும்பிப் பார்த்தவனுக்கு அவளின் கண்ணழகும் மொத்த முக அழகும் அவனை ஏதோ ஜிவ்வென்று உடல் உருகச் செய்தது.

“யெஸ் மிஸ்?”

“ஐ யம் ரோஸி. இன்னைக்கு தான் வேலையில சேர்ந்து இருக்கேன்…கிலாட் டு மீட் யூ” என்று கையை நீட்டினாள்.

ரவியோ அதை தவிர்த்து கைகூப்பி வணக்கம் தெரிவித்து, “என் பெயர் ரவி…என்ன வேண்டும் உங்களுக்கு?” என்று அவளைத் துரத்த முயற்சித்தான்.

“ஓகே மிஸ்டர் ரவி. எனக்கு ஒரு ஃபைல் வேண்டியிருக்கு…அதோ அந்த பச்சை கலர் ஃபைல் தான். ஒரு அரை மணி நேரம் வேண்டியிருக்கு, கொடுங்களேன்”

ரவி ஃபைலை எடுத்து அவளிடம் நீட்டும் பொழுது ஏனோ கை தானாக நடுங்குவதை கண்டு பயந்து போனான். அந்த சிறு நடுக்கத்தை கண்ட ரோஸி ஒரு புன்னகையை உதிர்த்தாள். ஃபைலை வாங்கிக்கொண்டு., இரண்டு முறை முறைத்துவிட்டு அவள் இடத்திற்கு சென்றாள்.

சில நிமிடங்களுக்கு ரவியால் வேலை செய்ய முடியவில்லை!! நடுங்கிக் கொண்டிருந்த ஒரு கை முற்றிலுமாக உடல் முழுவதையுமே நடுங்கச் செய்தது. அது ஏதோ ஒரு குதூகலமான உணர்வையும் ஏற்படுத்தியது.

“எனக்கு ஏன் இப்படி ஆகிறது?…அதுவும் இத்தனை வருடங்கள் கழித்து?…ராணி…ராணி…என்னை மன்னித்துவிடு…எனக்கு இந்த உணர்வு புரியவில்லை. பிடிக்கவில்லை…” சிறிதுநேரம் மண்டையை இரு கைகளாளும் பிடித்துக் கொண்டவன் பின் எழுந்து காபி அருந்தச் சென்றான்.

அதன் பின் தினமும் ரோஸி அவனிடம் ஏதோ ஒரு வேலை வேண்டும் என நெருக்கமாக வந்து நின்று…இது வேண்டும் அது வேண்டும் என்று வாங்கி சென்று…மறுபடியும் அதை திருப்பிக் கொண்டு வந்து…சிறு சிறு புன்னகை பூத்தவாறு…அவனை ஏதோ செய்தாள்!!

ஆரம்பத்தில் வெறும் வேலை விஷயமாக மட்டும் பேசியவள், பின் நட்பு கொள்வது போல் சொந்த விஷயங்களையும் பேச ஆரம்பித்தாள்.

ஒரு நாள் கேண்டீனில் டீ அருந்திக் கொண்டிருக்கும் பொழுது ரவி எதிரே வந்து அமர்ந்தவள் தன்னுடைய டீயை பருகியவாறு, “மிஸ்டர் ரவி உண்மையில் சொல்லப் போனா…உங்களுடைய சாந்தமான முகமும் அமைதியான தோற்றமும், நடவடிக்கையும் ரொம்ப புதுசா இருக்கு எனக்கு…உங்கள போல ஒருத்தர நான் இதுவரை சந்தித்ததில்லை. அதே நேரத்தில் நீங்கள் அப்பப்போ ஏதோ மூடியா இருக்கிறதையும் கவனிச்சேன்..உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா, உங்க மூடியான நிலைக்கு என்ன காரணம் என்று தெரிஞ்சுக்கலாமா?. ஐ யம் சாரி”

சற்றே தயங்கிய ரவி, பின் அவள் தன்னையே ஊடுருவி பார்த்ததால் அதை தவிர்த்து, அவளை வேகமாக திருப்ப வேண்டும் என நினைத்து, “ஆமாம்…நான் என் பொன்னான ஒன்றை என் வாழ்க்கையில் தொலைத்து விட்டேன். அது தான் என்..என்..என் ராணி” என்றவன் எவ்வளவோ முயன்றும் அதைச் சொல்லி முடித்ததும் அவனை அறியாமல் கண்களில் நீர் மல்கியது.

ரோஸியும் ரவி இப்படி திடீரென்று கண்கலங்குவான் என்பதை எதிர்பார்க்காமல், “ஐ யம். ஐ யம் சாரி. சாரி. நான் கேட்டிருக்கக் கூடாது” என்று அவனை சாந்தப்படுத்தினாள்.

ரவிக்கு திடீரென்று இவளிடம் தன் கதையை சொல்ல வேண்டும் என்று தோன்றியது. இத்தனை நாளாக அம்மாவுக்கும் நெருங்கிய ஒரு சில நண்பர்களுக்கும் மட்டுமே தெரிந்த தன் சோக வாழ்க்கை கதையை இப்போது இவளிடம் சொன்னால் மனதிற்கு கொஞ்சம் நன்றாக இருக்குமே என சொல்ல ஆரம்பித்தான்.

*****

ராணி. ரவியின் பக்கத்து வீட்டு தோழி… சிறு வயதிலிருந்தே ஒன்றாக சேர்ந்து விளையாடி, சேர்ந்து பள்ளிக்கூடம் போனவர்கள். அவர்களின் பெற்றோர்களும் அவர்கள் ஒன்றாக இருப்பதை தவறு என்று நினைக்கவில்லை. சிறுவயதிலிருந்து பழக்கம் அல்லவா?. இரண்டு குடும்பங்களும் பல வருடங்களாக ஒன்றாக பழகியவர்கள் அல்லவா. பல சமயம் இரு பெற்றோர்களும் அவர்கள் நெருக்கமாக சேர்ந்து அமர்ந்திருக்கும் தருணமும் விளையாடிய தருணமும் பார்த்து ‘நீங்க இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க பிற்காலத்தில… ரவி… உன்னால் இந்த வாயாடி ராணியை அடக்கி வாழ முடியுமா?” என்று கிண்டலடித்து சிரிப்பார்கள்.

அவர்கள் அப்படி கிண்டலாக சொன்னது ரவியின் மனதில் ஆழமாக பாதித்தது…’இவள் என் வருங்கால மனைவி என்றால்…சினிமாவில் பார்ப்பது போல் நெருக்கமாக பழகலாமே?!’ என்று அவளைத் தொட்டுத் தொட்டு, உரசி, அவளையும் சீண்டி வேடிக்கையாக வாழலானான்.

இரண்டு வருடங்களுக்குப் பின் ராணிக்கும் அவன் தொடுதல் ஏதோ ஒரு காதல் உணர்வை ஏற்படுத்துவதை புரிந்து கொண்டவள், அவனை தவிர்க்க முயன்றாள்.

ஆனால் ரவி உடனே “நாம தான் கல்யாணம் செய்துக்கப் போறோமே?…நம்ம பேரண்ட்ஸ் சொல்றாங்களே??…நாம லவ் பண்ணலாம். தப்பில்லை!” என்று சினிமா பாணியில் பேச ஆரம்பித்தான்.

சில மாதங்கள் கழித்து…ஊடல் முடிந்த பின் இருவரும் சேர்ந்து இருக்க ஆரம்பித்தனர்.

இப்படியே 13 வயது தொட்டதும்…பதின்ம வயது ஆரம்பத்தில் ரவிக்கு உள்ளூர ராணியின்பால் அந்த காதல் உணர்ச்சி மேலோங்கி அவனை ஏதோ செய்தது.

பல சினிமாக்களில் பள்ளிச் சீருடையில் காதலிக்கும் இளம் ஜோடிகளின் கதையை பார்த்தவன்…ஒரு நாள் ராணியை முத்தமிட துடித்தான். தனிமையில் இருக்கும் சமயம் பார்த்து அவளை மெதுவாக நெருங்கினான். அவன் மெதுவாக நெருங்கும் போதே அவன் ஏதோ செய்யப் போகிறான் என்பதை புரிந்து கொண்டவள்…அவளுக்கும் ஏதோ இன்பமாக தோன்ற கண்களை மூடி மயங்கினாள்…அவளை நெருங்கிய ரவி இதமாக கன்னத்தில் முத்தமிட்டான்…அந்த சுகத்தில் அவளும் அவன் முகத்தைப் பிடித்து ஒரு முத்தத்தை திருப்பிக் கொடுத்தாள். ஒரு முத்தம் இரண்டு முத்தமாக…மூன்றாக…கொஞ்சம் கொஞ்சமாக அரவணைத்து முத்தமிட்டு இன்பத்தில் மூழ்கிக் கொண்டிருக்கையில், ராணியின் அப்பா அதை பார்த்து விட்டார்.

அவ்வளவு தான். அவர்களின் காதல் வேட்கைக்கு முடிவு போடப்பட்டது. அன்றிலிருந்து அவர்கள் இருவரையும் சந்திக்க விடவில்லை…பேச விடவில்லை…ஒன்றாக இருக்கவிடவில்லை.

சில மாதங்களில் ராணியின் அப்பா வேறு ஊருக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு குடும்பத்துடன் சென்று விட்டார்.

அவர்கள் எங்கு சென்றார்கள் என்பதை ரவியின் அப்பா அறிந்திருந்தும் அதை ரவியிடம் சொல்லிக் கொள்ளவில்லை.

சில வருடங்கள் கழித்து ரவியின் அப்பா காலமான பின் அம்மாவுடன் வேறு ஊருக்கு மாற வேண்டியதாகியது.

அவ்வளவுதான். அதன் பின் ராணி எங்கிருக்கிறாள், என்ன செய்கிறாள், எப்படி இருக்கிறாள் என்பதை இதுநாள் வரை ரவியால் கண்டுபிடிக்க முடியவில்லை. பலமுறை ஃபேஸ்புக் இணையத்தில் தேடியும் கிடைக்கவில்லை.

*****

ரவியின் பரிதாப காதல் கதையைக் கேட்ட ரோஸி, “இது கிட்டத்தட்ட எல்லார் வாழ்க்கையிலும் நடக்கிற இன்ஃபேட்வேஷன்…வயசுக் கோளாறு தானே. நான் கூட அந்த வயசுல இரண்டு பேர் மேல ஒருதலைக் காதலாக காதலிச்சேன். அப்புறம் புரிஞ்சுக்கிட்டு படிப்பு முக்கியம், பேரண்ட்ஸ் சந்தோஷம் முக்கியம்னு மாத்திக்கிட்டேன்”

“இருக்கலாம். ஆனா நான் அவளோட பழகின காலம் விபரம் தெரிந்த நாளிலிருந்து பார்த்தா..பத்து வருஷத்துக்கு மேல இருக்கும். அப்புறம்.” ரவிக்கு தொண்டை அடக்க மீதமிருந்த டீயை குடித்தான்.

பிறகு தொடர்ந்தான்…”அப்புறம். அவ பிரிச்சு போய் ஒரு எட்டு மாதம் இருக்கும். அவ எனக்கு ஒரு லெட்டர் அனுப்பியிருந்தா…அவளாளயும் என்னை மறக்க முடியல…அந்த லெட்டரை என் அப்பா தான் முதல்ல பார்த்தார்…பார்த்து கிழிச்சுட்டார். ஆனா நான் யதேச்சையாக குப்பைல அதைப் பார்த்து எல்லா துண்டையும் ஓட்டிட்டு படிச்சு அழதப்போ அப்பா என்னை பார்த்து நல்லா கத்தி செமையா அடிச்சார். ஆனா அந்த காலத்தில பார்த்த பாரதிராஜா படம்…இன்னும் சில சினிமா என்னை பைத்தியமாவே ஆக்கிடிச்சு. அடி வாங்கி முடிஞ்சதும் நான் ராணியைப் பார்க்கப் போறேன்னு சண்டை போட்டேன். அப்பா கண் முன்னாலேயே அவர் மணிபர்ஸ்ல இருந்து பணம் எடுத்தப்போ..என் அம்மா என் கால்ல விழுந்து கதறினாங்க. ‘அஞ்சு வருஷம் தவமிருந்து பெத்தேனடா. போறியா போ…ஒரே பிள்ளை செல்லப் பிள்ளைன்னு உன்னை வளர்த்து ஆளாக்கினதுக்கு எங்களுக்கு இது தான் நீ காட்டற நன்றியான்னு?’ புலம்பினாங்க”. ரவிக்கு மீண்டும் தொண்டை அடைக்க, ரோஸி அவனுக்கு தண்ணீர் கொடுத்து, அவன் இரு கைகளையும் பற்றி இதமாக அழுத்தினாள்.

சட்டென்று தன் கைகளை இழுத்துக் கொண்ட ரவி மேலும் தொடர்ந்தான், “நான் பணத்தை எடுத்துட்டு அம்மாவை உதறித்தள்ளினப்போ. அவங்களுக்கு லேசா மண்டைல காயம் பட்டு. அதையும் பொருட்படுத்தாம. இன்னும் பலமா நங்நங்குன்னு சுவத்துல இடிச்சிக்கிட்டு அழுதப்போ.” ரவி விசும்ப ஆரம்பித்தான். அக்கம் பக்கம் அமர்ந்திருந்தவர்கள் பார்க்கிறார்கள் என்பதால் அடக்கிக் கொண்டு, “அப்படி அம்மா தன்னையே தண்டடிச்சிக்கற மாதிரி செய்ஞ்சதத் தான் என் மனசை ஏதோ பண்ணி உறுத்திச்சு.அத்தோட இனி நான் அவளை தேடக் கூடாதுன்னு அப்பா என்னை பூஜை அறைக்கு இழுத்திட்டுப் போய் சத்தியம் வாங்கிக்கிட்டார்” என்றபோது ரோஸியால் அந்த மனம் எவ்வளவு துவண்டிருக்கும் என்று புரிந்து கொள்ள முடிந்தது. மறுபடியும் அவன் இரு கைகளையும் வலுக்கட்டாயமாக இழுத்து தன் இரு கரங்களுக்குள் அடக்கிக் கொண்டாள். இது அவன் மேல் ஏற்படும் அனுதாபமா இல்லை இவனிடம் காதல் வயப்படுகிறோமா என்று குழப்பமாக ரவியையே கண் இமைக்காமல் பார்த்தாள்.

“அத்தோட என் கூத்து அடங்கிடுச்சுன்னு அம்மா அப்பா நினைச்சாங்க. நானும் அப்படித்தான் அன்னிக்கு நினைச்சேன். ஆனா…அன்னிக்கு ராத்திரி பூரா ராணியோட பழகியது எல்லாம் என்னை செமையா தாக்கி…”

ரவிக்கு இன்னும் தொண்டை அடைக்க மேலும் தண்ணீர் குடித்தான். “சத்தியம் செஞ்சுட்டோமேன்னு மனசு தவியாய் தவிச்சது. அந்த சத்தியத்தோட வாழ முடியாதுன்னு. உள்ளுக்குள்ளே பேய் பிசாசு மாதிரி ஆட்டம் போட்டிச்சு. இப்பவும் அந்த நினைப்பெல்லாம் பசுமையா ஞாபகமிருக்கு.என்ன செய்ஞ்சா சத்தியத்தை மீறி வாழலாம்னு.. தூக்கம் வராம…அந்த பேய் மனசு என்னென்னவோ யோசிக்க வெச்சது. கடைசியா. வாழ்ந்தால் தானே சத்தியத்தை மதிச்சு வாழணும்?.ஆனா செத்துட்டா?…செத்துட்டா?ன்னு பேய் எனக்குள்ள சீண்டிச்சு. ஆமா…ஆமா…செத்திடுன்னு அந்தப் பேய் திரும்பத் திரும்ப நினைச்சு திட்டம் போட வெச்சது. தற்கொலைக்கு திட்டம் போட ஆரம்பிச்சேன். தூக்க மாத்திரையை முழுங்கி ராணி மடியில் சாகணும்னு முடிவு பண்ணி விட்டேன்.

மறுநாள் அஞ்சு ஆறு பார்மஸி கடைல கொஞ்சம் கொஞ்சமா இருபத்தஞ்சு தூக்க மாத்திரையை வாங்கினேன்…அதை பேண்ட் பாக்கெட்டில் வெச்சு, இன்னும் தேவைப்பட்ட பணத்தை அம்மா சமையலறைல இருந்து எடுத்துக்கிட்டு யாருக்கும் சொல்லிக்காம நடு ராத்திரியில் ராணி இருந்த ஊருக்கு ரயில்ல கிளம்பிட்டேன்” ரவி தண்ணீர் தேட ரோஸி எழுந்து சென்று இரண்டு கிளாஸ் தண்ணீர் கொண்டு வந்து வைத்தாள்.

பாதி கிளாஸ் தண்ணீர் குடித்த பின் ரவி தொடர்ந்தான் .”இது தான் க்ளைமாக்ஸ் மாதிரி என் லைஃப்ல இருந்திச்சு. ஊர் போய் சேர்ந்தப்போ மணி காலை எட்டு… அவ வீட்டு விலாசம் தேடி கண்டுபிடித்து.. அவ வீட்டுக்கிட்டே இருந்த ஒரு ஹோட்டல்ல நாலு இட்லி வாங்கி சாப்பிட்டு… நைசாக யாருக்கும் தெரியாத மாதிரி. தண்ணி குடிக்கிற மாதிரி. தூக்க மாத்திரை எல்லாத்தையும் இரண்டே வாய்ல முழுங்கிட்டேன். எத்தனை மாத்திரையை முழுங்கினா சாவோம்னு அப்ப தெரியாது…அப்புறம் உடனே சாப்பிட்டதுக்கு பில் பே பண்ணிட்டு…வெளியே வந்ததும் மயக்கம் வரதுக்கு முன்னாலே ராணி வீட்டை அடைஞ்சு. அவ மடியில செத்துடணம்னு ஓட்டம் பிடிச்சேன். இரண்டு நிமிஷத்துல அவ வீடு வந்ததும். அவ பேரை சொல்லிக் கத்திகிட்டே அவளை தேடினேன்…அவளைப் பார்த்ததும் சந்தோஷம்.அந்த உச்சக்கட்ட சந்தோஷம். அதை எப்படி சொல்லியும் புரிய வைக்க முடியாது.ஆங். கமல் அந்த குணா படத்துல பாடினாரே. ‘மானிடன் புரிந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல’. அது மாதிரி இருந்திச்சு. ராணியும் என்னை பார்த்து சிரித்து அழுதா. ‘உன் மடில செத்துடறேன் ராணி’ன்னு அவளை தரையில உக்கார வெச்சப்போ. அவ அப்பா வந்து என்னை தள்ளிட்டார். நான் திரும்ப திரும்ப அவகிட்ட போக துடிச்சு துடிச்சு… கீழே விழுந்தேன். அப்போதுதான் லேசா மயக்கம் வரமாதிரி இருந்துச்சு. உடனே கத்திட்டேன் ‘நான் தூக்க மாத்திரையை முழுங்கி வந்திருக்கிறேன். என்னை ராணி மடியில் மட்டும் சாக விட்டுறங்க’ன்னு கெஞ்சினேன். திடீர்னு உண்மைல சாகிற மாதிரி கண்ணை மூடி சாய்ஞ்சேன். ஆனா அவ அப்பா சத்தம் போட்டு நிறைய பேர கூட்டி.என்னை பக்கத்துல இருந்த ஆஸ்பத்திரியில சேர்த்துட்டார். எனக்கு உண்மையா முழுசா மயக்கம் வரவேயில்லை. அந்த மாத்திரை போதலையா, இல்லை இன்னும் கொஞ்சம் நேரம் கழிச்சு அது வேலை செய்யுமா தெரியல.” ரவி சின்னதாக சிரித்தான்.

கொஞ்சம் இடைவெளிவிட்டு ரோஸி “அப்புறம் என்னாச்சு?” என்று ஆவலுடன் கேட்டாள்.

“அப்புறம் என்ன. ஒரு மீட்டர் நீளமான பைப்பை என் வாய்க்குள் விட்டு என்னமோ பண்ணி வாந்தியெடுக்கச் செய்து. என்னை காப்பித்திட்டாங்க. ஆஸ்பத்திரில அன்னிக்கு தனியா தான் கிடந்தேன். அழகான நர்ஸ் ஒருத்தி என்னை கவனிச்சுக்கிட்டாங்க. மறுநாள் என் அப்பா வந்தார். கூடவே ராணியோட அப்பாவும் வந்தாங்க.வந்து…ஆஸ்பத்திரின்னுகூட கண்டுக்காம. என்னைப் பார்த்து கத்தினார்…’இன்னொரு முறை என் மகளைப் பார்க்க வந்தீன்னா. பொலி போட்டுறுவேன்’னு சொல்லிக்கிட்டே ஒரு பெரிய கத்தியையும் காட்டி மிரட்டிட்டு போனார். என் அப்பா தலைல அடிச்சுக்கிட்டு கதறி தரைல உட்கார்ந்துட்டார். இதைப் பார்த்த என் நர்ஸ் என்னை கண் மூடச் சொல்லி எனக்காக ஒரு ஜெபம் சொன்னாங்க. கிறிஸ்த்தியன் நர்ஸ். என்னமா மனசை துளைக்கிற மாதிரி இருந்தது தெரியுமா!. ரோஸி நீங்களும் கிறிஸ்து தானே?”

ரோஸி ஆம் என்று தலையாட்டினாள்.

“அதுக்கப்புறம் அப்பா என்கிட்ட பேசறதை நிறுத்திக்கிட்டார். மன உளைச்சல் அவரை பயங்கரமா தாக்கியிருக்கும்.ஜடம் மாதிரி வேலைக்கு போவார், வருவார்…நானும் ஒரு மாதிரியாகத் தான் காலத்தை கழிச்சேன்.

அப்புறம் ஒரு நாள் அப்பா ஒரு இடத்தில ரோடு க்ராஸ் பண்ணும்போது லாரி மோதி. ஸ்பாட்லயே செத்துட்டார். என் அம்மா இடிஞ்சு போய்ட்டாங்க…அதுக்கப்புறம் நான் மனசை கல்லாக்கிக்கிட்டு படிப்புல கவனம் செலுத்த ஆரம்பிச்சேன்…படிச்சு முடிச்சு வேலைக்கு போனதும். மனசு கேட்காம திரும்ப ராணியை போய் பார்க்க வேண்டுமேன்னு துடிச்சு.. ஒரு நாள் அம்மாவுக்கு தெரியாம அவ ஊருக்கு போனேன். அவ அப்பா கில்லாடி. ஜாதி வெறி வேற. நான் திரும்பி வருவேனோன்னு யூகிச்சு வேற ஊருக்கு போய்ட்டார்…இப்போ வரைக்கும் ராணியை கண்டுபிடிக்க முடியவில்லை… அவ நினைப்புலேயே வாழ்ந்துட்டு சாகலாம்னு இப்படியே இருந்திட்டேன்..

என்னால இன்னும் அந்த முத்தத்தை. அந்த இதமான அரவணைப்பை மறக்க முடியவில்லை. ஒரு முறை தான் அது நடந்தாலும்…அதை நினைச்சு பார்க்கும் போதெல்லாம்.. அந்த மானசீக காதல் உணர்வே போதும்னு நினைக்கிறேன்”

ரோஸி ரவியை முழுங்குவது போல் பார்த்து பின் கடைசியில் மீண்டும் பெரிதாக புன்னகைத்தாள்.

“எனக்கு இன்னும் உங்க கதையை நினைச்சா. பரிதாபமாகத் தான் தோன்றது. வயசுக் கோளாறின் உச்சக் கட்டம். இரண்டு பேருக்குமே!

ரவி. சொல்லுங்க. வெளிப்படையா கேட்கிறேன்…நீங்களும் வெளிப்படையாக சொல்லுங்க. உங்களுக்கு இப்போ வயசு. முப்பத்து மூன்று?. சரி. நீங்க இன்னும் மானசீகமாக காதலிக்கும் அந்த ராணி வயசும் உண்மையா அது தான். ஆனால் உங்க மனப்பிம்பத்தில இருக்கிறதோ. அந்த பதினைந்து வயசு சின்னப் பொன்னு!!. எனக்கென்னவோ இது சரியாக படவில்லை. யூ நீட் டுபீ ப்ராக்டிக்கல் ரவி.டோண்ட் பி ஸோ க்ரேஸி!”

ரோஸியின் இந்த வார்த்தைகள் ரவியை உறுத்தச் செய்தது. ஒன்றும் சொல்லாமல் எழுந்து வேலைக்கு திரும்பினான்.

அன்று மாலை வேலை முடிந்தவுடன் ரோஸியின் வற்புறுத்தலுக்க இணங்கி அவளை அருகில் ஒரு பூங்காவில் சந்தித்தான்.

ரோஸி அவனுக்காக தன் இனிய…வசீகர குரலில் ஒரு மூன்று நிமிட ஜெபத்தை மிக அருகில் அமர்ந்து அவன் இரு கரங்களைப் பற்றிக்கொண்டு சொன்னாள்.

பொதுவாக. உண்மையில். இந்த கிறிஸ்தவ ஜெபங்கள் மனதை துளைக்கும் படியாகத் தான் இருக்கும்!!

வாழ்க்கையில் இரண்டாம் முறை அப்படியொரு ஜெபத்தை கேட்ட ரவி. கட்டுக்கடங்காமல் அழுதான்.

வீட்டிற்கு திரும்பியதும், அறையை சாத்திக்கொண்டு. மண்டையைப் பிய்த்துக் கொண்டு…அந்த பதினைந்து வயது ராணியின் முகத்தை தன் மனதிலிருந்து அழித்துவிட துடித்தான்.

காதலர்கள் பிரிந்து சோகமாய் பாடும் சினிமா பாடல்கள் அவனைத் தாக்கியது. முக்கியமாக அந்த ஒரு ஆங்கில பாடல். போனியம் (BoneyM) பாடல்…கார்னிவல் இஸ் ஓவர் (Carnival is Over)… Say Goodbye my One True Lover. How it Breaks My Heart to Leave You. Now that Carnival is Gone…

அப்படியே அழுது புலம்பி தூங்கிப் போனான்.

மறுநாள் காலை எழுந்த போது…ரவியின் உள்ளம் மிகத் தெளிவானது போல்…இதமாகவும், மென்மையாகவும், வலி இல்லாமல் தோன்றியது!.

இனி ராணியை நினைத்து வாழ்க்கையை வீணடிக்கக் கூடாது என்பதை புரிந்துகொண்டான். ராணியை மனக்கண்முன் கொண்டு வர உள்ளம் மறுத்தது. இனி கவலை இல்லை.

அலுவலகத்திற்கு சென்றதும் முதல் வேலையாக ரோஸியை இன்முகத்துடன் பார்த்து தன் மன மாற்றத்தை கூறி அதற்கு ரோஸியை பெரிதும் மெச்சினான்.

*****

அன்றிலிருந்து தினமும் ரோஸியை பலமுறை சந்தித்து இனிமையாக பேசி நேரத்தை கழிக்கலானான்.

ரோசஸியும் அவ்வப்பொழுது ரவியிடம் மனதை பறிகொடுக்கிறோமோ என்று சந்தேகம் எழ… அதற்கு உண்டானது போல் ரவியை ஓரக்கண்ணால் பார்க்க. ரவிக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

“நாம காதல் வலையில் விழறோமா ரோஸி?” என்று ஒரு நாள் ரவி வெளிப்படையாக அவள் கரத்தைப் பற்றிக் கொண்டு கேட்டான்.

“ரவி. உண்மையா சொல்லப் போனா…எனக்கு உன் மேல இருக்கிற உணர்வுகள்…அனுதாபமா?… இல்லை காதலா?.. எனக்கு இன்னும் குழப்பமாகத்தான் இருக்குது.”

“இல்லை ரோஸி… ப்ளீஸ்… இப்பத்தான் ராணியை மறந்து ஒரு புது வாழ்க்கையை நான் ஆரம்பித்து இருக்கிறேன்…என் மனக் கோட்டையில் இப்போது நீ தான் இருக்கிறாய்… மறுபடியும் என் மனதை புண்படுத்திக் கொள்ள எனக்கு விருப்பமில்லை. அது உன் கையில் தான் இருக்கிறது… அவகாசம் எடுத்துகிட்டு எனக்கு ஒரு நல்ல முடிவை சொல்லு… ப்ளீஸ்!”

“சரி ரவி. காதல் வயப்பட்டால், முதலில் அது கல்யாணம் வரை சாத்தியப்படுமா என்பது புரிந்து கொண்டு அதன்படி நகர்வது முக்கியம். எனக்கும் உன் மனதை நோகடிக்க விருப்பமில்லை. கண்டிப்பாக இல்லை. கொஞ்சம் அவகாசம் கொடு. நான் கிறிஸ்து, நீ இந்து… இது என் வீட்டில் என் பெற்றோர்கள் சம்மதிக்க வேண்டிய ஒரு விஷயம்… நான் மட்டும் எடுக்க வேண்டிய முடிவல்ல. கொஞ்சம் புரிந்து கொள்… ப்ளீஸ்”

“புரியுது ரோஸி. நான் வெயிட் பண்ணறேன்…ஆனால் ஒரு டெட்லைன் டேட் ஃபிக்ஸ் செய்து கொள்ளலாமே?. ஒரு மாதம் ஓகே தானா?”

“ஓகே… ஓகே ரவி. அதுவரை நாம் நண்பர்களாகவே பழகுவோம்… வேறு எண்ணம் இருக்க வேண்டாம்… அது நல்லதல்ல!”

ரவி இதை ஒப்புக் கொண்டாலும்… அவன் மனம் ‘இனி ரோஸி தான் என் வாழ்க்கையில் இருப்பாள்’ என கற்பனை உலகில் மிதக்க ஆரம்பித்தது. எப்படியும் அவள் பெற்றோர்கள் சம்மதித்து விடுவார்கள் என்று தானாகவே எண்ணிக்கொண்டு அவளையே சதா நினைக்க ஆரம்பித்தது.

ரவியின் அம்மா அவன் முகத்தில் தெரியும் நல்ல மாற்றத்தை கண்டு அவனிடம் என்ன ஆயிற்று என்று கேட்டாள். ரவியும் ரோஸியைப் பற்றி கூறி, அவள் தான் தன் மனமாற்றத்திற்கு காரணம்… அவளை கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்து விட்டதாகச் சொன்னான். அவள் வேறு மதம் என்பதையும் சொன்னான்.

“அதனால் என்ன?…மத வேறுபாடு தான் நம்மை ஒற்றுமை இல்லாமல் பிரித்து சண்டை போட வைக்கிறது. மனிதகுலம் ஒற்றுமையாக வாழணும்னா.. வேற்று மதத்தவர்..ஜாதிமத கலப்புத் திருமணம் செய்துக்கணும்… அது ஒன்று தான் பெரிய… நல்ல தீர்வு. ஏற்கனவே இது பல வருடங்கள் முன்னாலேயே ஆரம்பித்துவிட்டது… நீங்களும் கல்யாணம் செய்து கொள்வதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. உன் சந்தோசம் தான் எனக்கு முக்கியம்… அவளிடம் தெளிவாக சொல்லிவிடு… எப்போது பெண் கேட்க போகலாம்னு கேட்டு விடு”

அதன்பின் நாட்கள் ஓடின… வாரங்கள் ஓடின… அவர்கள் ஒப்புக் கொண்ட ஒரு மாத தேதியும் நெருங்கிக்கொண்டிருந்தது. இந்த ஒரு மாதத்தில் பற்பல கற்பனைகளில் மிதந்த ரவி… அவளை கல்யாணம் செய்து குடும்பம் நடத்துவது போல்… இரண்டு மூன்று பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டது போல். அவர்களுக்கு பெயர் வைத்தது போல்… பள்ளிக்கு அனுப்புவது போல்… என பலவாறு நினைத்து நினைத்து ஆனந்தமாக துள்ளினான்.

சொன்ன தேதி வந்ததும் ரோஸியிடம் ‘என்ன முடிவு ?’என்று கேட்டான்.

“நாளைக்கு சொல்கிறேன் ரவி” என்றாள் ரோஸி.

“சரி அப்படியே ஆகட்டும்… இன்னும் ஒரு நாள்தானே?. பரவாயில்லை… காத்திருக்கிறேன்” என்றான் ரவி.

ஆனால் இந்த ஒரு நாள் அவனுக்கு ஒரு யுகமாக தோன்றியது… தூக்கம் பிடிக்கவில்லை. தூக்கம் வரவில்லை… அவள் பதிலுக்காக சதா ஏங்கிக் கொண்டிருந்தது.அது ‘ஆம்’ என்கிற பதில் தான் என நம்பினான்.

மறுநாள் ரோஸியை அலுவலகத்தில் சந்திக்க…காலை அரை மணி நேரம் முன்பாகவே அலுவலகத்தில் ஆஜர் ஆனான் ரவி.

ஆனால் அவளோ உரிய அலுவலக நேரத்தில் வரவில்லை. அரை மணி நேரம் . ஒரு மணி நேரம். இரண்டு மணி. மூன்று. நான்கு என மதிய உணவு நேரம் கடந்தும் ஏனோ வரவில்லை. இருபத்தைந்து முறை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயன்றும் பயனில்லை. சுவிட்ச் ஆஃப் என்று பதில் வந்தது.

வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. சிறு தவறுகளை செய்து தன் மேனேஜரிடம் திட்டு வாங்கினான்.

அப்படியே அன்றைய பொழுது ‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி’ என பாடிக்கழிக்கும்படி ஆகிவிட்டது.

மறுநாளும் அவள் வராதது கண்டு மிகவும் நொந்து போனான்.

“டேய் என்னடா ஆச்சு ரோஸி க்கு?” என்று நண்பன் பிரபுவிடம் கேட்ட போது அழுகையே வந்து விட்டது ரவிக்கு.

பிரபு அவனை சமாதானம் செய்து.. அட்மின் மேனேஜரிடம் ரோஸியைப்பற்றி கேட்டபோது…திடுக்கிடும்படியாக பதில் வந்தது..,.அவள் இரண்டு வாரம் அவசர விடுப்பில் இருக்கிறாள் என்று.

அதன் பின் ரவி அந்த மேனேஜரிடம் கெஞ்சி கூத்தாடி ரோஸியின் விலாசத்தை கேட்டு வாங்கிக் கொண்டான்.

“டேய். அவ பேரண்ட்ஸ் அனேகமாக அவளுக்கு கல்யாண ஏற்பாடு பண்ணியிருப்பாங்க. ”

“என்னால் நம்பவே முடியவில்லை பிரபு. என்ன ஏதுன்னு ஒரு ஃபோன் செய்து சொல்லலாமே. எனக்கு பைத்தியம் பிடிச்சு. மண்டை வெடிச்சிடும் போல இருக்கு”

“உன் நிலமை எனக்கு புரியுது. ஆனா அவ உன்கிட்ட ஃபெரண்ட்ஸாக மட்டும், அவ முடிவை சொல்ற வரைக்கும் பழகச் சொன்னாள்..இல்லியா?”

தலையை இப்படியும் அப்படியும் ஆட்டிய ரவியால் இருப்புக் கொள்ள முடியவில்லை.

“நான் அவ வீட்டுக்கு போய் பார்க்கிறேன். ”

“போ. ஆனா இப்போ மணி ஆறு தாண்டிடுச்சு. நாளைக்கு காலைல போ” பிரபு அறிவுறித்தினான்.

வீடு திரும்பிய ரவியின் சோகமான முகத்தை பார்த்த அவன் அம்மா நிலைமையை ஓரளவுக்கு புரிந்து கொண்டாள். அவனிடம் உடனே பேசி அவனை கஷ்டப் படுத்த வேண்டாமென்று அவனை தனிமையில் விட்டுவிட்டாள்.

அன்றைய இரவுப் பொழுதும் ஒரு யுகமாக தோன்றியது அவனுக்கு… தூக்கம் வராமல் அழுது தீர்த்தான்.

ரோஸி அன்று இனிய வசீகர குரலில் சொன்ன ஜெபம் பிசகில்லாமல் காதில் ரீங்காரமாக மறுபடியும் மறுபடியும் ஒலித்து.அன்று மனதை தெளிவுபடுத்திய அதே ஜெபம் இப்பொழுது செமையாக குழப்பியது.’ஏன் ரோஸி?. ஏன்?. இதுக்கு நீ என் வாழ்க்கைல வராம இருந்திருக்கலாமே?’ என குழப்பத்துடன் புலம்பி அழுது… விடியும் தருணத்தில் கண் மயங்கி தூங்கினான்.

தூக்கம் கலைந்து எழுந்ததும். ‘ஐயோ எப்படி இப்படி தூங்கிப் போனேன்?’ என்று தன்னையே கடிந்து கொண்டு, விறுவிறுவென குளித்து சாப்பிட்டுவிட்டு ரோஸியின் விலாசத்தை தேடி பைக்கில் பறந்தான்.

பலர் வழிகாட்டி வழிகாட்டி அவனை குழப்ப. சுமார் அரை மணி நேரம் கழித்து அந்த விலாசத்தை அடைந்த போது.அது பூட்டி இருந்தது!!

பக்கத்து வீட்டில் விசாரித்ததில் அவள் குடும்பத்தோடு வெளியூர் சென்று விட்டார்கள் என்பது தெரிந்தது..எங்கே எதற்கு என்று சொல்லவில்லையாம்!!

‘ரோஸி. நீயா இப்படி??. நம்பமுடியவில்லை. நம்பமுடியவில்லை’

பிரபுவுக்கு ஃபோன் செய்து சொல்ல…

“நீ பெட்டர் ஆஃபிஸ் வந்துடு…அவ போறா விடு. பொன்னுங்க நிறைய பேர் இப்படித் தான். வீணா குழப்பிக்காம வேலையை பார்.”

அன்ற மதிய உணவு வேளையில் அட்மின் மேனேஜர் இன்னொரு குண்டைப் போட்டார்…”என்ன அவசரமோ புரியல…ரோஸி ராஜினாமா பண்ணிட்டா. ஒரு மாதம் நோட்டீஸ் கூட கொடுக்கவில்லை. பரவாயில்லை அதற்கான ஒரு மாதசம்பளத்தை பிடித்துக் கொள்ளுங்கன்னு ஒப்புக்கிட்டா. அனேகமா ஏதோ லவ் மேட்டர் தான்னு தோனுது!”

பிரபு ரவியை கவனித்தான். கோபத்தில் கண்கள் சிவந்து கைகளை முறுக்கிக் கொண்டிருந்தான்…

“அப்படி எல்லாம் இருக்காது. நான் நம்ப மாட்டேன். ஏன் மேரேஜ் இன்விடேஷன் அனுப்பலை?..வேற ஏதாவது விஷயமா இருக்கும்” ரவியை சாந்தப்படுத்த பிரபு கூறினான்.

“மே பி. இருக்கலாம். கணக்கு வழக்கு…ஃபைனல் செட்டில்மெண்ட் வாங்க வந்து தானே ஆகனும்?…அப்போ தெரியும்” மேனேஜர் கைகழுவ எழுந்தார்…

ரவியின் வாட்டமான முகத்தைப் பார்த்தவர். “நீ கை கழுவல?” என்று கேட்ட போது ஏனோ முள்ளாக அது ரவியின் இதயத்தை துளைத்தது. அவன் அப்படியே மயங்கினான்!

பிரபு அவனை சாய்வாக கிடத்தி ஒரு நிமிடம் கழித்து முகத்தில் தண்ணீர் தெளித்தான்.

ரவி எழுந்து கொஞ்சம் தண்ணீர் குடித்தான்.

“ஏதோ ஸ்ட்ரெஸ்னு நினைக்கிறேன்” என்று தன் காதல் ஏமாற்றத்தை ஒப்புக்கொள்ள முடியாமல் கை கழுவச் சென்றான். பின்னர் அரை நாள் விடுப்பு போட்டு வீட்டிற்கு சென்றான்.

அம்மா அவனைப் பார்த்ததும் திகைத்தாள். அந்த அளவுக்கு அவன் முகத்தில் சோகம். இருள்!

“என்னடா ஆச்சு?” என்று கேட்டது தான் தாமதம். சோபாவில் அமர்ந்து இருந்த அம்மாவின் மடியில் முகம் புதைத்து கட்டுக்கடங்காமல் மேனிகுலுங்க அழுதான்.

“போகட்டும் டா…” அவன் தலையைக் கோதிவிட்டாள் அம்மா.

“ஏன்மா. ஏன்மா எனக்கு மட்டும் இப்படி?. நான் என்ன பாவம் செய்தேன்?. யாருக்கும் ஒரு துரோகமும் பண்ணலையே?”

“ரோஸி உன்னை கட்டிக்க முடியாதுன்னு சொல்லிட்டாளா?”

“அப்படி என் முகத்தைப் பார்த்து சொல்லியிருந்தா கூட பரவாயில்லை. என்ன ஏதுன்னு சொல்லலை. ராஜினாமா வேற பண்ணி தொலைச்சிருக்கா. என்னை இழிவு படுத்தி ஏமாத்தற மாதிரி. என்னால தாங்க முடியல அம்மா” மறுபடியும் அழுகை பீறிட்டு வந்தது.

“என்னாச்சுன்னு தெரிஞ்சுக்காம தப்பா எடை போட வேண்டாம். இப்படி சின்னபுள்ளைத் தனமா அழறதை முதல்ல நிறுத்து. என் மனசும் நோவுது… முகம் அலம்பிட்டு வா சாப்பிடலாம்”

***

அதன் பின் ரவி நடைப் பிணமாக வாழலானான்.

சுமார் ஒரு மாதம் கழித்து ரோஸி ஒரு நாள் திடீரென்று அலுவலகத்தில் நுழைந்தாள்.தன் கணக்கு வழக்குகளை…ஃபைனல் செட்டில்மெண்ட் வாங்க. தன் இருப்பிடத்திலிருந்த பொருட்களை எடுத்துச் செல்ல…

ரவி இருப்பிடம் அருகே வந்ததும் அவள் கண்கள் கலங்கியிருந்ததை ரவி கவனித்தான். வெறும் கைகூப்பி ‘என்னை மன்னித்துவிடு’ என்பதுபோல் கெஞ்சலாகப் பார்த்தாள்.

பின் அனைவரின் கவனத்தை ஈர்த்து “ஐ யம் ரியலி வெரி வெரி சாரி கய்ஸ்…திடிர்னு என் மேரேஜ் அரேஞ் ஆயிடுச்சு…வெளியூர் போயிருந்தேன்.. என் ஃபோனும் கீழே விழுந்து உடைஞ்சு போச்சு.” அவள் குரலில் தடுமாற்றம் இருந்ததை கவனித்த ரவி அவள் ஏதோ மழுப்புகிறாள் என்பதை புரிந்து கொண்டான்.

“மேரேஜ் ரிஸப்ஷன் அடுத்த வாரம்” என்று சொன்னாள்…

‘சொன்னது நீ தானா?. இன்று சொன்னது நீ தானா??. சொல்…சொல்…என் உயிரே!’ பி.சுசீலா சோகப்பாட்டு ரவி மனதை துளைத்தது!!.

மேரேஜ் ரிஸப்ஷன் கார்டை அனைவருக்கும் கொடுத்துவிட்டு கடைசியாக ரவி அருகே வந்தாள்.

எந்த அசம்பாவிதமும் நேர்ந்துவிடக் கூடாதென்று முன்னெச்சரிக்கையாக பிரபுவும் அருகில் வந்து நின்றான்.

கார்டை நீட்டியவளை சிவந்த… கண் கலங்கிய…ஆத்திரமான பார்வையால் ரோஸியை பார்த்தான் ரவி.

“என்னை ஏமாத்திட்ட இல்லே?” என்றவனுககு அந்த கார்டை வாங்கி கிழித்து விடவேண்டும் போல் திடீரென்று மனம் பேயாட்டம் போட்டது.

பிரபு அந்த கார்டை வாங்கி ரவி கையில் திணித்து “காப்பி அருந்தப் போலாம் வாங்க” என்று இருவரையும் அழைத்துக் கொண்டு கேண்டீனுக்கு சென்றான்.

பிரபு அவர்களை அமரச் செய்தான். “ரவி…ப்ளீஸ். பிஹேவ் யுவர்செல்ஃப்… ரோஸி இப்போ மிஸ் இல்லை… மிஸர்ஸ் ரோஸி. அதை மனசுல வெச்சு பேசு” கூறிவிட்டு காப்பி கொண்டு வர சென்றான்.

“நான் இனி என்னத்தை பேசப் போகிறேன்” என்றவாறு சலிப்புடன் ரோஸியை நேரடியாக பார்ப்பதையும் தவிர்த்தான் ரவி.

“என்னை மன்னித்துவிடு ரவி. ப்ளீஸ். நான் அன்னிக்கு வந்து சொல்லியிருக்கணும் தான்…என் அப்பா நம்ம கல்யாணத்துக்கு ஒப்புக்கலை…அதனால ஆபீஸ் வந்தா பிரச்சினை ஆகும்னு திடுதிப்பென்னு… ஏற்கெனவே எனக்கு வேறொருவரை கல்யாணம் செய்து வைக்கணும்னு முடிவு பண்ணினதை சொல்லி/// என் கால்ல விழாத குறையாக.. குடும்ப கௌரவம் காப்பாத்த அழுதுகிட்டே கெஞ்சினார். என்னால மறுத்துப் பேச முடியலை. என் ஃபோனையும் வாங்கி அம்மாகிட்ட கொடுத்து என்னை பார்த்துக்கச் சொல்லிட்டார். எல்லாம் என் தப்பு தான். என்னை மன்னிச்சிட்டேன்னு ஒரு வார்த்தை சொல் ரவி” ரோஸி அழுகையை கட்டுக்குள் வைத்து மெல்லிய குரலில் சொல்லி முடித்தாள்.

“இந்த இரண்டு மாசம். நான் பைத்தியமா.நடைப்பிணமா வாழ்ந்துட்டு இருக்கேன் தெரியுமா உனக்கு?”

பிரபு காப்பி தட்டை வைத்து ரவியருகே அமர்ந்தான்.

“பேசிக்கிட்ட படி எப்படியாச்சும் அன்னிக்கு. இல்லை ஒன்னு ரெண்டு நாள்ல ரவிக்கு உன் முடிவை சொல்லியிருக்கலாம். இப்ப இவன் கதியை பாரு. ” பிரபு சின்னதாக கடிந்து பேசினான்.

“ஆனா. ஆனா நான் தெளிவா சொன்னேனே… ஃப்ரெண்ட்ஸாக தான் இருக்கணும்னு?”. ரோஸி சட்டென்று சொன்னாள்

இதைக் கேட்டதும் சட்டென்று எழுந்து கொண்டான் ரவி. “விஷ் யுவ் அ ஹாப்பி மேரீட் லைஃப்” கூறிவிட்டு காப்பி அருந்தாமல் நடையை கட்டினான்.

பிரபு ரோஸியைப் பார்த்தான். அவள் விசும்பி அழ ஆரம்பித்தாள்.

“யாரும் பார்க்கறதுக்கு முன்னால. நீ இங்கிருந்து கிளம்பிப் போவது பெட்டர். நான் என் ஃவைப்போட கண்டிப்பா ரிஸப்ஷனுக்கு வரேன்” காப்பி அருந்திவிட்டு, ரவியின் காப்பியை கையில் எடுத்துக் கொண்டு அவனைப் பார்க்கச் சென்றான்.

அன்று மாலை அலுவலகத்தில் வேலை முடிந்தவுடன் வீட்டிற்கு சென்று அம்மாவின் மடியில் தஞ்சம் புகுந்து நடந்ததைச் சொல்லி அழுதான் ரவி.சிறு பிள்ளை போல்.

“செத்தட்டா பரவாயில்லைன்னு தோனுது அம்மா” என்று கேவிக் கேவி அழுத போது அவன் அம்மாவின் கண்களும் குளமானது.

33 வயதுடைய மனிதன் இப்படி அம்மா மடியில் படுத்து அழுவது எல்லோர் வீட்டிலும் நடக்கிற விஷயமா?

அவன் தலையை கோதிவிட்டவள், ஒரு சில நிமிடங்கள் கழித்து, “ஏன்டா…ஊர்ல எத்தனை பிச்சைக்காரன்களை…கால் கை ஊனம், குருடு, புத்தி சுவாதீனம்னு.. எத்தனை எத்தனை பேரை நாம அன்றாடம் பார்க்கிறோம்?.அவங்க எல்லாம் உன்னை மாதிரி சாகணும்னா நினைக்கிறாங்க?… உனக்கு என்ன குறைச்சல்?. இந்த ரோஸி இல்லைன்னா யோசி. இன்னொருத்தி உனக்குன்னு பிறந்திருப்பாள்… வருவாள். வருவாள்” அதை சொல்லி முடிக்கையில் அம்மாவின் குரலும் தழுதழுத்தது.

“அடப்போம்மா. இனிமே நான் எந்த பெண்ணையும் பார்த்து ஆசை படப்போறதில்லை.” சொன்னவன் மிக எளிதாக ரோஸியை தன் ஆழ்மனதில் இருந்து அகற்றி நிம்மதியாக உறங்கினான். சில வினாடிகளில் குறட்டை விட்டு தூங்கினான். நிம்மதியாக இப்படி தூங்கி இரண்டு மாதங்கள் இருக்கும்!

***

சுமார் நான்கு மாதங்கள் கழித்து.

ரவி பிரபுவுடன் ஒரு ஆஸ்பத்திரியில் இருந்தான்.

பிரபுவின் மனைவி தன் முதல் குழந்தையை ஈன்றெடுக்க போராடிக் கொண்டிருந்தாள். பிரபுவுக்கு ஒத்தாசையாக இருக்க வேண்டி வந்திருந்தான்.

பிரபு காதல் திருமணம் செய்து கொண்டதால்…இரு வீட்டார் சம்மதம் இன்றி பகைத்துக் கொண்டு திருமணம் செய்து கொண்டதால்…இப்பொழுது யாரும் அருகில் இல்லை.

பிரபு அவன் காதலித்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டதை நினைத்து, தனக்கு நேர்ந்த அவலம் நினைத்து ரவி பலமுறை பொறாமை பட்டதுண்டு…வெளிப்படையாகவே பிரபுவுடன் பேசி இருக்கிறான்.

இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பின் பிரபுவின் மனைவி ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்.

குழந்தையை வெளியே கொண்டு வந்து பிரபுவின் கையில் கொடுத்த போது ஆனந்த் கண்ணீர் கொட்டக் கொட்ட… முகம் முழுக்க சிரிப்பாக வாங்கிப் பார்த்தான். குழந்தை அச்சு அசலாக பிரபுவைப் போலவே இருந்தது இன்னும் பெரு மகிழ்ச்சியாக இருந்தது.

ரவியும் கண் கொட்டாமல் அந்தப் பிஞ்சுக் குழந்தையை பார்த்து பூரித்துப் போனான். உண்மையில் இது தான் முதல் முறை இப்படி ஒரு பிஞ்சுக் குழந்தையை இவ்வளவு அருகில் பார்ப்பது!!..

பிரபு குழந்தையை சின்னதாக முத்தமிட்டு பின் ரவியின் கையில் பத்திரமாக கொடுத்தான்.

ரவியின் கைகளுக்குள் வந்தது தான் தாமதம். அந்தக் குழந்தை கண்கள் மூடியவாறு ஒரு புன்னகையை பூத்ததை பார்க்க வேண்டும். அப்படி ஒரு வசீகர புன்னகை!!. ரவிக்கு அதைக் கண்டதும் உடல் முழுவதும் இன்பமயமாக. பனிபோல் உருகிப் போனான். பிரபுவிடம் திருப்பிக் கொடுக்க மனம் வராமல் அந்த பிஞ்சு கைவிரல்களை… கால் விரல்களை…கன்னத்தை தொட்டுத் தொட்டு குதூகலம் அடைந்தான்.

ஆனால் பிரபு நைசாக பிடுங்கி கொள்ள நினைத்த வேளையில் நர்ஸ் குழந்தைக்கு பார்க்க வேண்டிய சில காரியங்கள் இருப்பதாக சொல்லி எடுத்துக் கொண்டு போனாள்.

படு ஏமாற்றமாக இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டே கீழே கேண்டீனுக்கு காலையுணவு சாப்பிடச் சென்றனர்.

இருவர் முகமும் இன்னும் இன்முகமாகவே இருந்தது.

மதியம் வீட்டிற்கு திரும்பி வந்த ரவி மீண்டும் அம்மாவின் மடியில் தஞ்சம் அடைந்து.இந்த முறை அழவில்லை. மாறாத இன்முகத்துடன் அம்மாவைப் பார்த்து பிரபுவுக்கு பிறந்த குழந்தையைப் பற்றி கூறினான்.

இது தான் தக்க தருணம் என்று எண்ணிய அம்மா அவன் தலையை கோதிவிட்டவாறு. “நீ ஏன் நான் பார்க்கிற பொண்ணு ஒருத்தியை கல்யாணம் பண்ணிட்டு அது மாதிரி பிள்ளையை பெத்து, என்னையும் சந்தோஷப்படுத்தக் கூடாது. அந்த நாளுக்காக நான் எப்படி ஏங்கித் தவிக்கிறேன்னு அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும்…” என கடிந்து கொண்டாள்.

“அம்மா. உண்மையா சொல்லப் போனா. அந்தக் குழந்தையை பார்த்துட்டு வந்ததிலிருந்து.. எனக்கு அந்த கல்யாண ஆசை வந்திடுச்சு அம்மா” ரவி எழுந்து கொண்டு அம்மாவை சிரிப்பு அடக்க முடியாமல் பார்த்தான்.

“உண்மையாகவா சொல்ற?. என் வயித்துல பால் வார்த்துட்டியே என் மகராசா!” என்றவள் அவனையும் இழுத்துக் கொண்டு பூஜை அறைக்கு சென்று வேண்டிவிட்டு அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.

அவளிடம் ஏற்கெனவே பல பெண் ஜாதகங்கள் வந்தன…ஆனால் ரவி இருந்த மனநிலையில் எதையும் பார்க்க வேண்டும் என நினைக்கவில்லை… இப்போது பார்க்க. நேரத்தை வீணாக்காமல் பெண் தேட ஆரம்பித்தாள்.

***

ஒரே மாதத்தில் நல்ல ஜோடி அமைந்தது.புதியவள் மீனா… அந்த ராணியைவிட. ரோஸியைவிட …இன்னும் லட்சணமாக. தெய்வீக கண்களுடன்… மகாலட்சுமி முகப்பாவணையுடன்.

“டேய் பிரபு. என்ன ஃபீளிங்ஸ்னு எனக்கே புரியவில்லை… ஜென்மம் முழுக்க அவளை பார்த்துக் கிட்டே இருக்கணும்னு தோணுது” என்று அவளின் அழகை வர்ணித்தான் ரவி. இவளை. இந்த அழகுத் தேவதை மீனாவை அடையத் தான் தன் வாழ்வில் இதுவரை அந்த ஆட்டம் போட நேர்ந்ததோ என மலைத்துப் போனான்!!

அதற்கு அடுத்த வாரத்திலேயே திருமணம் நிச்சயம் செய்து திருமண தேதி குறிக்கப்பட்டது.

‘என் வாழ்வில் இனி வசந்தமே’ என நினைத்தவன், மீனாவை தன் மனக் கோட்டைக்குள் நுழைத்து. குடும்பம் நடத்துவது போல் சதா நினைக்க ஆரம்பித்தான்!!.

சோகப் பாடல்கள் மறைந்து இனிய காதல் பாடல்கள் மனதை சந்தோஷ வெள்ளத்தில் திக்குமுக்காடச் செய்தது. ‘வா வா வசந்தமே. சுகம் தரும் சுகந்தமே’ பாடல் அடிக்கடி காதில் ரீங்காரமிட்டது.

திருமண அழைப்பிதழ் அச்சடித்து நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் அழைக்கப்பட்டனர்.

சதா இன்ப நினைவில் மிதந்தவன். திருமணம் நடக்க இன்னும் நான்கு நாட்கள் இருக்கும் தருணத்தில்.

பைக்கில் ஒரு நெரிசலான சாலையில் பச்சை சிக்னலுக்கு காத்திருந்தவன்… அது விழுந்ததும் நிதானமாக. ஜாக்கிரதையாக பைக்கை நகர்த்த. அந்த நெரிசலான நிலையிலும். ஒரு பெண். என்ன அவசரமோ. இவனுக்கு எமனாக. திடீரென்று குறுக்கே வர.அவளை இடித்துவிடக் கூடாதென்று பிரேக் போட்டு..திணற. பின்னாடி ஏற்கெனவே கொஞ்சம் விரைந்து நகர்ந்து வந்த லாரி இவன் மேல் பலமாக மோதியது..

அந்த நிலையிலும்… பெண் மேல் இடித்து விடவேண்டாமே என்று. குழப்பத்தில். பிரேக்கை விடுவித்து ஆக்ஸிலேட்டரை லேசாக திருகினான்…பைக்கை வலப்பக்கம் திருப்பி விட்டான்.. அப்படி செய்ததில் எதிர் சாலையில் கொஞ்சம் நுழைந்து. விரைந்து வந்து கொண்டிருந்த ஒரு வேனை மோதி.சரிந்து கீழே விழுந்து. வேன் அவன் மேல் ஏறிச் சென்று. கொஞ்சம் அவனை இழுத்துக் கொண்டு போய் நின்றது.

திருமண அழைப்பிதழ்கள் சிதறி விழுந்தன. அதைப் பார்த்தவர்கள். வேன் பின் சக்கரத்தில் மாட்டி திண்டாடிக் கொண்டிருந்த இவனைப் பார்த்து. இவன் வாழ்க்கையும் சிதறி சிதைந்து சின்னாபின்னமாகி விட்டதாய் கருதி ‘த்ச்சச்சோ’ என த்ச்சூ கொட்டினர்.

தன்னிலை மறந்து கண்களை மூடினான் ரவி.

***

ஆஸ்பத்திரியில் கண்கள் திறந்த போது. அம்மா அவனருகில் சோகமே உருவாக அமர்ந்திருந்தாள்…அவன் வலக்கையை பற்றிக்கொண்டு “என்ன பாவம் செய்ஞ்சமோ” என்று விசும்பினாள்.

அவன் மனதிலும் அந்தக் கேள்வி விஸ்வரூபம் எடுத்து ஆண்டவனை சாடியது.

‘மனதறிந்து ஒரு பாவமும் செய்யலையே… ஏன் ஆண்டவா… ஏன்? எனக்கு மட்டும் ஏன் இப்படி?… எனக்கு மட்டும் ஏன் இப்படி?… மீனாவை மணந்து சந்தோஷமாக வாழ நினைத்த நேரத்தில்.ஏன் இன்னும் என்னை அலைக்கழிப்பு செய்கிறாய்?… உன் குழந்தைகளை பரிதவிக்க விட்டு வேடிக்கை பார்ப்பது தான் உனக்கு பிடிக்குமோ?…என்ன ஒரு நயவஞ்சக திட்டம் உனது?.ச்சே!’

மறுநாள் அவனைப் பார்க்க வந்த மீனாவின் அப்பா அவனிடம் எதுவும் பேச தைரியமில்லாமல்.அவன் அம்மாவை வெளியே அழைத்துச் சென்று. “என்ன பாவமோ…என் மனசும் நோவுது. மீனாவும் நாள் முழுக்க அழறா. இந்தக் கல்யாணம்…” என சொல்லி முடிக்காமல் தவித்தார்.

“நீங்க யாரும் கவலைப்பட வேண்டாம்…எல்லாம் விதிப்படி நடக்கும். மீனாவை சமாதானப் படுத்தி அவளுக்கு வேற நல்ல மாப்பிள்ளை தேடுங்க. ரவி கிட்ட நான் பேசிக்கிறேன். அவன் புரிஞ்சுப்பான். நீங்க கவலைப்படாம ஆக வேண்டியதை பாருங்க” இரு கைகளையும். நடுங்கியவாறு தூக்கி நிறுத்தி தலைகுனிந்து…கைகூப்பி வணக்கம் தெரிவித்து, பதிலுக்கு காத்திராமல் திரும்பினாள்.

அன்று மாலை. ரவியின் இரு கால்களையும்…முட்டிக்கு சற்று மேலே அறுவை சிகிச்சை மூலம் துண்டித்து எடுக்கப்பட்டது!!

***

எட்டு மாதங்கள் கழித்து.

வேலைக்கு திரும்பி செல்ல முடியாமல். பிடிக்காமல். வீட்டிலேயே சும்மா கிடந்திருந்த ரவி. தன் அம்மா ஒரு நர்ஸைப் போல்… தன்னை கவனித்துக் கொள்வதைப் பார்த்து, மேலும் கவலைப் பட்டான். அவள் சிரமத்தை குறைக்க வேண்டி… தன்னால் தனித்து எல்லாவற்றையும் செய்து கொள்ள முடியும் என்று வைராக்கியத்துடன் செயல்பட ஆரம்பித்தான்.

பத்தாம் வகுப்புவரை டியூஷன் கொடுக்க செயலில் இறங்கினான். அதற்கான கட்டணத்தை, அவரவர் குடும்ப நிலவரம் கருத்தில் கொண்டு முடிந்த மட்டும் தரலாம் என விளம்பரமும் செய்தான். இதனால் டியூஷன் ஆரம்பித்த ஒரே மாதத்தில் 25க்கும் மேல் பள்ளிச் சிறுவர்கள் வந்தனர். இரண்டு மாதங்கள் கழித்து…காலை மதியம், என இருவேளையும் இன்னும் நிறைய பிள்ளைகளுக்கு டியூஷன் கொடுக்கலானான்.

இன்னும் மூன்று மாதங்கள் கழித்து. காலை மதியம் மாலை என மூன்று வேளையும் டியூஷன் கொடுக்கலானான்!!

தனக்கு உதவி புரிய… பிரபு மூலம் ஒரு ஏழைப் பையனை தன் வீட்டிலேயே தங்கவைத்து அந்தப் பையனுக்கும் நல்வாழ்வு வழங்கினான். சமைக்க, துப்புரவு பணிக்கு ஒரு வேலைக்கார அம்மாவை நியமித்து தன் அம்மாவுக்கு ஓய்வு கொடுத்தான்.

இப்படி இருக்க. ஒரு நாள்.

உயர்நிலை மாணவி ஒருத்தி, தன் விஞ்ஞானப் பாட புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள். அதில் இரண்டு விஞ்ஞான விதிகள் தனக்கு மேலும் புரியும்படி ரவியிடம் விளக்கம் கேட்டு நின்றாள்.

“சரி. படித்து சொல்லு அந்த முதல் விதியை” என்றான்.

“ஆற்றல் அழிவின்மை விதி. ஆற்றலை உருவாக்கவோ அழிக்கவோ முடியாது; ஆற்றல் ஒன்று ஒரு வகையில் மறையுமாயின், அதுவே பிறிதொரு வகையில் சேதமின்றி வெளித் தோன்றும்”

அதைக் கேட்ட ஒரு மாணவன், “சார்…இது எனக்கு இங்கிலீஷ்ல நல்லா தெரியும்” என்றான். அவன் ஆங்கிலப் பள்ளியில் படிப்பவன்.

“சொல்லு பார்க்கலாம்” ரவி ஊக்குவிக்கவும் அவன் தொடர்ந்து சொன்னான்.

“Law of Conservation of Energy: Energy Can Neither Be Created Nor Be Destroyed; Energy Disappearing in One Form, Reappears in Another Form without any Loss… அதாவது, உதாரணத்திற்கு. ஒரு ஸ்விட்ச் போட்டா லைட் எரியும். அங்கே மின் சக்தி…அந்த ஆற்றல் சக்தி…ஒளியாக மாறுகின்றது. ”

ரவியும் இதை தன் பள்ளிக் காலத்தில் படித்தது தான்…நினைவுக்கு வந்தது.

“தேங்க்ஸ் டா” என்று அந்த மாணவனுக்கு நன்றி தெரிவித்தவள் “இதையும் விளக்கமுடியுமா பாரு. இது நியூட்டனின் மூன்றாம் விதி: ஒவ்வொரு விசைக்கும் அதற்கு சமமான எதிர்விசை உண்டு… எனக்கு பாதி தான் புரிந்தது… சொல்லேன்” என்று அதே மாணவனைப் கேட்டாள்.

“எனக்கும் அந்த விதி ஃபுள்ளாக புரிஞ்சிக்க முடியலை” என்றவன் அமர்ந்து கொண்டான்… மற்றவர்கள் லேசாக சிரித்தனர்.

இன்னொரு மாணவி எழுந்து “இந்த விதியை என் அம்மா இப்படி விளக்கினாங்க. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். அப்புறம். விதைகேற்ப முளைக்கும். பாவம் செய்ஞா துன்பம் வரும். புண்ணியம் செய்ஞா இன்பம் வரும்” என்று சொல்லி அமர்ந்தாள். எல்லா மாணவர்களும் கைதட்ட. ரவியும் கைதட்டினான்.

கைதட்ட கைதட்ட, அவன் உள்ளம் ஏதோ ஒரு வாழ்வியல் தத்துவம் புரிந்தது போல் பூரித்தது.

‘ஓ.. அந்த ஆற்றல் அழிவின்மை விதி தான் நம்மை ஜென்மம் எடுக்கச் செய்கிறதோ!… வேற்று உயிரினமாகவும் புனர் ஜென்மம் எடுக்கச் செய்கிறதோ?!… அந்த நியூட்டனின் விதிப்படி… இன்ப துன்பங்களை நாம் செய்த…ஜென்ம ஜென்மமாக சேர்த்து வைத்த பாவ புண்ணியங்கள் அடிப்படையில் அனுபவிக்கிறோமோ??!”

அன்று இரவு அம்மாவின் மடியில் தஞ்சம் புகுந்த ரவி… இந்த ஞானோதயத்தை சொல்லி அழுது… நிம்மதியாக உறங்கினான்.

***

மறுநாள் காலை… டியூஷன் ஆரம்பிக்க அரை மணி நேரம் முன்பாகவே கதவு தட்டப்பட்ட போது.,.. வாசலுக்கு தன் இரு சக்கர நாற்காலியில் மெல்ல சென்று கதவை திறந்தான் ரவி…

வாசலில் நின்று இருந்தவளைப் பார்த்து. அவன் இரத்தம் உறைந்தது.

“ராணி. ராணி.. அம்மா. அம்மா… இங்கே வாயேன்” என்று கத்தினான். எதிரே நின்றிருந்த அந்த பதின்ம வயதுப் பெண். அப்படியே. கடைசியாக ராணியை எப்படி பார்த்தானோ. அப்படியே தெரிய… ஒரு கணம்…பேயோ பிசாசோ என்று மனம் குழம்பி அவள் பாதங்களை பார்த்தான்… மிதந்து கொண்டு இருக்கிறாளா என்று!!

என்னோவோ ஏதுவோ என்று பயந்து ஓடி வந்து நின்ற ரவியின் அம்மாவும் திகைத்து நின்றாள்… “ராணி. ராணியா?. ராணியா?” வார்த்தைகள் நடுக்கம் கண்டது.

“நான் கீதா. ராணி என் அம்மாவோட பெயர்…என் அம்மாவை உங்களுக்கு தெரியுமா?” கீதா என்பவள் விழிபிதுங்கி சொல்ல, அவளை உள்ளே அழைத்து சென்றாள் அம்மா.

அவளைத் தொட்டு தொட்டு மெய் சிலிர்க்கப் பார்த்தாள்.

“ஆனா… என் அம்மா இப்போ உயிரோட இல்ல. அது தெரியாதா உங்களுக்கு?” கீதா சொன்னதும் நிலைகுத்திப் போனார்கள் ரவியும் அவன் அம்மாவும்!!.

இன்னும் காலை உணவு சாப்பிட்டிறாத ரவிக்கு இதைக் கேட்டதும் மயக்கம் வருவது போல் இருந்தது. அம்மாவிடம் தண்ணீர் கேட்டு வாங்கிக் குடித்தான். அம்மாவும் கீதாவுக்கு தண்ணீர் கொடுத்து ஹாலில் இருந்த சோபாவில் அமரச் செய்தாள்.

அருகே அவள் எதிரில் வந்த ரவி “என்னாச்சு உன் அம்மாவுக்கு?” என்று அதை அறிந்து கொள்ள தவித்தான்.

“ஒன்னும் ஆகலை. நான் பிறந்தப்போ. என்னமோ ஆகி…என்னை பெத்துட்டு செத்துட்டதா அப்பா சொன்னார்…”கீதாவுக்கு அதைச் சொல்ல தொண்டை அடைத்தது.

“ஓ. ஓ…ஐ யம் சாரி… வெரி சாரி!” என்ற ரவி தன் கண்கள் கலங்குவதை அவள் பார்த்துவிடக் கூடாதென்று சக்கர நாற்காலியை திருப்பிக் கொண்டான்.

கீதாவின் தலையை தொட்டு வருடிக்கொண்டே “எல்லாம் விதிப்படி நடக்கும். நம்ம கையில ஒன்னும் இல்ல. நீ ப்ரேக்ஃவாஸ்ட் சாப்ட்டியா?” என்று திசை திருப்பி பேசினாள் ரவியின் அம்மா.

அதன் பின் கீதா.. தன் அப்பா இன்னொரு கல்யாணம் செய்து கொண்டதையும்… அந்த சின்னம்மா…சித்தி… இவளை கொடுமை படுத்தியது… நாளாக நாளாக அது அதிகரித்து. இரண்டு பிள்ளைகள் பெற்ற பின்… தன்னை முற்றிலும் தவிர்த்து. மனதை காயப்படுத்தும் படி… அன்றாடம் ஏதாவது சொல்லி… சித்திரவதை செய்வது பற்றியெல்லாம். முழுக்கதையை சொல்லி முடித்தாள்.

“சித்தி தொல்லையால் என்னால சரியா படிக்க முடியல… அதான் அப்பாகிட்ட கெஞ்சி… இங்கே டியூஷன் போகப் போறேன்னு சொல்லி பர்மிஷன் வாங்கி வந்திருக்கிறேன்”

கீதாவுக்கு ஒரு டம்ளரில் பால் கொடுத்து முக மலர்ச்சியுடன், “நீ இனிமே எப்ப வேண்ணாலும் இங்க வா. என்னை உன் பாட்டியா நினைச்சுக்கோ. இவரை உன் அப்பாவாக நினைச்சுக்கோ… தயங்காம, கூச்சப்படாம உன் வீடு மாதிரி நினைச்சுக்கோ…சரியா?” என்றவாறு அவள் நெற்றியில் முத்தமிட்டாள் ரவியின் அம்மா.

வேலைக்கார அம்மா சமையலறையில் இருக்கும் போதெல்லாம், வானொலி கேட்டவாறே வேலை பார்ப்பது வழக்கம். வானொலியில் ஒரு பாட்டு. ரவிக்கென்றெ ஒலிபரப்புவது போல் ஒலித்தது.

‘ஒரு ஜீவன். அழைத்தது…ஒரு ஜீவன் துடித்தது. இனி எனக்காக அழ வேண்டாம். ஒரு கண்ணீரும் விழ வேண்டாம்…உன்னையே…எண்ணியே வாழ்கிறேன்!’

கண்ணீர் மல்க கேட்ட ரவி அம்மாவிடம் “கீதாவை நான் தத்தெடுக்க வேண்டும்” என்றான்.

கீதாவிடம் அதுபற்றி ஒரு மாதம் கழித்து பேசினார்கள். கீதா முகம் மலர்ந்து சம்மதம் சொன்னாள். கீதாவின் அப்பாவை ஒரு ஞாயிறு அன்று போய் பார்த்தனர்.

ரவி மிக வெளிப்படையாக தன் வாழ்வில் இதுவரை நடந்ததை கூறி, கீதாவை அவள் சித்தயின் கோரப் பிடியில் இருந்து காப்பாற்ற இந்த தத்தெடுப்பு உதவும் என்று புரியும்படி விளக்கினான்.

தன் மனைவியுடன் பேசி அவள் சம்மதம் கிடைத்தவுடன் பதில் சொல்வதாக வாக்களித்தார் கீதாவின் தந்தை.

ஒரு மாதம் கழித்து. கீதாவை சட்டரீதியாக தத்தெடுத்து அவளை தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர் ரவியும் அவன் அம்மாவும்.

ரவி… அன்று முதல் நாள் கீதா வீட்டிற்கு வந்த சமயம் கேட்ட அந்தப் பாடலை… இன்று தன் மகளாகிவிட்ட கீதாவுடன் அமர்ந்து… யுட்யூப் சேனல் வழியாக டிவி திரையில் போட…

அதைக் கேட்ட கீதா அவனை அரவணைத்து, முத்தமிட்டு, பின் அவன் மடியில் தஞ்சம் அடைந்து நிம்மதியாக உறங்கினாள்.

‘ஒரு ஜீவன். அழைத்தது…ஒரு ஜீவன்…துடித்தது. இனி எனக்காக அழ வேண்டாம். ஒரு கண்ணீரும் விழ வேண்டாம்…உன்னையே…எண்ணியே வாழ்கிறேன்!’

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *