ஒரு சுதந்திர தேசத்தின் காதல் கதை !

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 14,702 
 

வழி எல்லாம் புலம்பிக்கொண்டே வந்தான் குமார். அவனது கார் முன்னைப் போல மைலேஜ் தருவது இல்லையாம்; துவரம் பருப்பு 100 ரூபாய்க்கு விற்கிறதாம்; இந்த மாதிரி பல பிரச்னைகள். ஆனால், அவை அனைத்துமே கார் மெக்கானிக்கும் பாரதப் பிரதமரும் தீர்த்துவைக்கக்கூடிய பிரச்னைகளாகவே இருந்ததால், அந்த இரண்டு வேலைக்குமே லாயக்கு இல்லாத தான் என்ன செய்ய முடியும் என்பது பாரத் துக்குப் புரியவில்லை.

அதிலும் கிரெடிட் கார்டுகள் அனைத்தும் மூழ்கி, ஒரு பர்சனல் லோனில் மிச்சம் இருக்கும் கேவலம் 25 ஆயிரத்துக்கு அரெஸ்ட் வாரன்ட் அளவுக்கு வந்துவிட்ட நிலை. தானே பிச்சை எடுக்காத குறை யாக அலைகையில் குமாருக்காக அனு தாபப்படக்கூட மனசு வராது என்பதை அவனிடம் சொல்லவும் தயங்கினான். எல் லாம் பாழாப்போன ஈகோதான்.

அவர்கள் முதல் நாள் வந்தபோது, ‘பாரத் என்பதாக ஒருவன் இங்கே இருந்தது உண்மைதான், அவன் இப்போது டெல்லி யில் இருப்பதாகச் சொல்கிறார்கள்’ என்று அவனே பொய் சொல்லி அனுப்பினான். அடுத்த நாள் போட்டோவைப் பார்த்து உறுதி செய்து கொண்டு வக்கீலோடு வந்து வாசல் நின்றவர்களை மரியாதையாக வீட்டுக்குள் உட்காரவைத்துப் பேச நேர்ந்தது. அவனுக்கு அரெஸ்ட் வாரன்ட் வழங்கப்பட்டு இருப்ப தாக அவர்களில் ஒருவன் தெரிவித்தான். கடைசியாக ஒன் டைம் செட்டில்மென்ட் 10 ஆயிரம் கொடுத்தால் விட்டுவிடுவதாக அவர்கள் தெரிவித்தபோது, இதற்கு மேலும் தயங்க இயலாது என்பதனால், கடைசியாகப் போராடி ஒரு நாள் கெடு வாங்குவதற்குள் தன்மானம் என்பதாக உள்ளே எங்கேயோ ஒளிந்திருந்த ஒன்று ஒரேயடியாக ஓடிப்போய் இருந்தது. ஏனென்றால், மாதம் 80 ஆயிரம் சம்பாதித்துக்கொண்டு இருந்தவன் பாரத்.

வாசலில் இறக்கிவிடும்போதே, அக்கா விடம் தனக்காகக் கொஞ்சம் பரிந்துரைக்கு மாறு ஒரு விண்ணப்பத்தை குமார் வைத்த போதுதான் அவன் இத்தனை நேரம் ஆற் றிக்கொண்டு வந்த உரைக்கெல்லாம் விளக் கம் கிடைத்த மாதிரி இருந்தது.

அக்காவாம் அக்கா! மூன்று மாதங்கள் இருக்குமா? தன் வாழ்நாளில் இனி ஒரு போதும் மிதிக்கவே கூடாது என்கிற தீர் மானத்தோடு இறங்கியிருந்த அந்தப் படியில் மீண்டும் கால்வைக்க வேண்டிய சூழல் வந்திருக்க வேண்டாம். அவள் அந்த அள வுக்கு அவனைக் கொடுமைப்படுத்தி இருந் தாள். தலை தப்பாது என்று வருகிறபோது வேறு என்னதான் செய்வது?

அவனைப் பார்த்ததும் அவளது முகம் விரிந்தது. அதைப் பார்த்ததும் லக்ஷ்மி என் கிற அவளது பெயர் அவளுக்கு எத்தனை பொருத்தம் என்பதாக ஒரு கணம் வியந் தான் பாரத். ‘வாடா!’ என்று வாய் நிறைய வரவேற்றாள் லக்ஷ்மி. கையைப் பிடித்து கிட்டத்தட்ட இழுத்துக்கொண்டு போய் சோபாவில் தள்ளினாள். வேலைக்காரியை அழைத்து அவன் ஆசையாகச் சாப்பிடும் நீர் தோசையும் மீன் குழம்பும் இன்னும் ஒரு மணி நேரத்தில் தயாராக வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தாள்.

மகளைக் கட்டிக்கொடுத்துவிட்டாள். கணவன் பாதி நாட்கள், உலகிலேயே பேரழகிகள் உள்ள தேசம் என்று சிட்னி ஷெல்டனால் கொண்டாடப்பட்ட சிங்கப்பூரில் நடக்கும் புராஜெக்ட்டை மேற்பார்வையிடவும், அந்த அழகிகள் வம்சத்தையே பெண்டாளவும் போய்விடுவான்.

காபியைக் கொடுப்பதற்குள், கடந்த முறை நடந்ததை மனதில் வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும், இனி அந்த அளவுக்கு தான் துன்புறுத்த மாட்டேன் என்றும், அதை நினைத்து தான் வருந்தாத நாளே இல்லை என்பதாகவும் ஒரு பெரிய உரையை ஆற்றி முடித்திருந்தாள் லக்ஷ்மி. பாரத் வயதைவிட 14 வயது மூத்தவள். கிட்டத்தட்ட முக்கால் அம்மா. ஆனால், அவனைப் பார்த்த£லே வயது சுருங்கி, தன் பால்யத்துக்குத் திரும்பிவிடுவது அவளது வழக்கம். அளவு கடந்த பிரியத்தால்தான், கடந்த முறை அவள் அவனை நோகச் செய்தாளே தவிர, அவன் மீது அவள்கொண்டுள்ள அன்பில் எந்தக் குறையும் இல்லை. அதைத் தொடர்ந்து, அவனுக்கு எதிரில் உட்கார்ந்துகொண்டு, அவனது காதல் கதை என்ன ஆயிற்று என்று வாஞ்சையோடு கேட்டாள் லஷ்மி.

அவளது கண்களில் ஒளிர்ந்த வெளிச்சத்தை பாரத் ஒரு கணம் கவனித்தான். உலகத்தில் எந்தக் காதலுக்குமே ஏற்பட்டிராத சோகம் அவனது காதலுக்கு ஏற்பட்டு இருந்தது. அதை அப்படிக்கூடச் சொல்லக் கூடாது. கிறிஸ்டினா தன் மேல் கொண் டுள்ள காதலைத்தான் உண்மையில் சோகம் கவ்வி இருந்தது. பாவம் கிறிஸ்டினா. இந்திய ரத்தம் அதிகமாகப் பாய்ந்து தொலைத்ததால், ஜீன்களில் ஏறியிருந்த பாரம்பரியக் குணம் அவளை அந்நியப்படுத்திவைத்திருக்கிறது.

கிறிஸ்டினாவின் அம்மா கிட்டத்தட்ட ஐந்து தலைமுறைகளாகவே ஆங்கிலோ-இந்திய வம்சத்தில் வந்திருப்பவள். ஆனால், அவளுக்கு தான் வெள்ளைக்காரி என்பதாக ஓர் எண்ணம். அவளது அப்பாவின் அம்மாவோ ஓர் இந்துப் பெண்மணி. அவள் காதலித்து மணந்தது ஒரு வெள்ளைக்காரனை. இதனால் கிறிஸ்டினாவின் அப்பா மிஸ்டர் ப்ரிக், முதல் தலைமுறை ஆங்கிலோ – இந்தியர். கிறிஸ்டினாவுக்கு அவளது பாட்டியின் காதல் கதைதான் உலகிலேயே உன்னதமானது. அதற்கு அவன் என்ன செய்ய முடியும்?

இந்தப் பிரச்னையை முதன்முறை கேள்விப்பட்ட போதே ஆறுதல் சொன்னவள் என்பதால், அதன் காதல் கதை குறித்த லக்ஷ்மியின் வாஞ்சையை அவன் அறிந்தே இருந்தான். ஆனால், அந்தக் காதல் தோற்றதற்குக் காரணம் அவள்தான் என்பதை அவள் அதுவரை அறிந்திருக்க நியாயம் இல்லை.

அந்தக் காதல் முறிந்துவிட்டது என்பதாக மட்டும் தெரிவித்தான் பாரத். இதைக் கேட்டதும் லக்ஷ்மி பதறிப்போனாள். வேலை போய்விட்டது என்பதனாலோ, பணம் இல்லை என்பதனாலோ அந்தக் காதல் முறிந்துபோக வேண்டாம் என்றும், கொஞ்சம் முன்னதாகவே சொன்னால் தேவையான பணத்தைத் தான் தருவதாக ஆறுதலாகச் சொன்னாள். அவள் அவனுக்குக் கொடுக்க நேர்ந்த பணமெல்லாம் அவளது வீட்டுக்காரருக்குத் தெரியாமல் கொடுக்கப்பட்டதுதான். தெரிந்தால் அவளை அவர் கொன்றே போட்டுவிடுவார்.

பிரச்னை, கல்யாணம் அல்ல என்று சொன்னான். தான் கிறிஸ்டினாவைக் காதலிக்க அருகதை இல்லாதவன் என்று சொன்னான். ஏனென்றால், அவன் கிறிஸ்டினாவைக் காதலிக்கவே இல்லை என்பதே உண்மை என்பதை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்வதாக உடைந்த குரலில் தெரிவித்தான்.

ஆனால், கிறிஸ்டினாவோ அவனைத் தன் உயிராக நேசித்தாள்.

மற்ற பெண்களைப்போலவே அவளையும் தான் அணுகியதாகக் குறிப்பிட்டான் பாரத். தான் சொல்லப்போவதைக் கேட்டு லக்ஷ்மி, இனி இந்தப் பக்கமே வராதே என்று வெறுத்து ஒதுக்கினாலும்கூடப் பரவாயில்லை என்பதாகத் தெரிவித்தான். இதனால், லக்ஷ்மி மிகுந்த வருத்தம் அடைந்தவளாகக் காணப்பட்டாள். பாவமன்னிப்பு கேட்பவனைப் போன்ற பாவனையை அப்போது அவன் எட்டியிருந்தான். தன் மனதில் உள்ளதை எல்லாம் அவளிடம் சொல்லி அழுதுவிட்டால் தேவலை என்பதாக உணர்ந்தான்.

அவனது கல்லூரிப் பிராயத்தில் அவன் ஒரு கொலை செய்தான். கொலை என்றால் கோல்ட் பிளடட் மர்டர் அல்ல. ப்ளஸ் ஒன் படித்துக்கொண்டு இருந்த ஹாஸ்டல் வாட்ச்மேனின் மகளை வசீகரித்து அவளைக் கர்ப்பம் ஆக்கினான். மாட்டிக்கொண்டபோது அவனைக் காட்டிக்கொடுக்காமல் அவள் தற்கொலை செய்துகொண்டாள். அவளது சாபம்தான் தன்னைத் தொடர்ந்துகொண்டு இருப்பதாகச் சொன்னான். பல முறை அவள் தன் எதிரில் வந்து நிற்பதைப்போன்ற தோற்றம் குடிபோதையில் தனக்கு ஏற்படுவதாகச் சொன்னபோது, அடுத்த கணமே அவனது முகம் பயத்தில் கறுத்துப்போவதைக் கண்டு வியந்தாள் லக்ஷ்மி.

அதைத் தொடர்ந்து, அவளது கணவனின் அறையில் இருந்து ஜானிவாக்கர் ப்ளூலேபிள் பாட்டில் ஒன்றைக் கொண்டுவந்து அவன் முன்னால் வைத்தாள். ‘முதலில் குடி, அப்புறம் பேசலாம்’ என்று தானே அவனுக்கு ஊற்றிக் கொடுத்தாள். கொஞ்சம் வறுத்த முந்திரிப் பருப்பையும் எடுத்து வந்து அவன் முன்னால்வைத்தாள். ப்ளூலேபிளைப் பார்த்து பல நாட்களாகிறது என்கிற காரணத்தாலும், தன் மனம் இருந்த நிலையினாலும் அவசர அவசரமாக முதல் லார்ஜை விழுங்கிவிட்டு, அடுத்த லார்ஜுக்குத் தயாராகி இருந்த அவனை ஆதூரத்தோடு பார்த்தாள் லக்ஷ்மி.

உயிரைவிட்ட அந்தப் பெண்ணைத் தொடர்ந்து பாரத், கொஞ்சம் கொஞ்சமாகத் தன் விளையாட்டுக்களை விரிவாக்க ஆரம்பித்தான். கையில் கிடைக்கிற பெண்கள் யாரையும் விட்டுவைப்பதில்லை என்கிற நிலைப்பாட்டையே அவன் கல்லூரி முடியும்போது எட்டியிருந்தான். அவனது படிப்புக்கும் ஆங்கிலத்துக்கும் உடனே கிடைத்த வேலை, அவனை இன்னும் அதிகமான பெண்களின் உலகங்களுக்குள் செலுத்தியிருந்தது. ஒரு முறை உறவாடிய பெண்ணை மறு முறை அவன் தீண்டவும் விரும்பியது இல்லை. வேலைக்குப் போவது புதிதாகப் பெண்களைப் பிடிக்கவும், அவர்களுக்குச் செலவு செய்வதற்கான பணத்தைச் சம்பாதிக்கவும் மட்டுமே. இதனால் அவன் ஓரிடத்தில் நில்லாமல் வேறு வேறு நிறுவனங்களில் தேடிப்போய் சேர்ந்துகொண்டு இருந்தான்.

வாழ்வின் அதி ரம்யமான தினங்கள் அவை எல்லாம். இப்படிப் போய்க்கொண்டு இருந்த வாழ்வில் திடீரென்று வந்து நுழைந்தவள்தான் இந்த கிறிஸ்டினா! ஆங்கிலோ – இந்தியப் பெண் என்றதும் அவளை வளைக்க அதிக சிரமம் தேவைப்படாது என்பதாக பாரத் தப்புக் கணக்கு போட்டிருந்தான். ஆனால், அவன் நினைத்ததுபோல இல்லாமல் அவள் வேறு ஓர் உலகில் வாழ்ந்துகொண்டு இருந்தாள்.

தான் நினைத்திருந்தால் அவளை ஏமாற்றி மயக்கப்படுத்தியேனும் கூடியிருக்க முடியும் என்பதாகத் தெரிவித்தான். ஆனால், மனம் ஏனோ கேட்கவில்லை. அதற்குக் காரணம், கிறிஸ்டினாவின் கண்களில் இருந்த உண்மை. அவை தன்னால் தற்கொலை செய்துகொண்ட அந்தச் சிறுமியின் கண்களையே அவனுக்கு நினைவுபடுத்திக்கொண்டு இருந்தன. இதனால், வாய்த்த சந்தர்ப்பங்களையும் அவனால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை.

இதைத் தொடர்ந்துதான் திடீரென்று அந்த அங்கிள் சாம் அலை வீசித் தொலைத்தது. ஒரு லட்சம் சம்பாதித்துக்கொண்டு இருந்தவர்கள், 50 ஆயிரத்துக்கு இறக்கப்பட்டார்கள். புதிதாக வந்தவர் கள் மற்றும் கிரிட்டிக்கல் ஸ்டாஃப் என்கிற உத்தர வாதம் இல்லாதவர்கள் தூக்கி எறியப்பட்டார்கள். ஒரே நாளில் அவனது வாழ்க்கை தலைகீழாகத் திரும்பியது. அவனுக்கு வேலை கொடுக்க ஒருத்தரும் தயாராக இல்லை. கிரெடிட் கார்டுகள் நிரம்பி வழிந்தன. தேடப்படும் கடனாளியாக அவன் ஆகிப் போனான். சொந்தமாக எதையும் செய்யவும் தெரியாது. மாதம் பூரா உழைத்து 10 ஆயிரம் சம்பாதிக்கும் வேலைக்குப் போக மனமும் உடலும் ஒத்துழைக்காத நிலையில் தள்ளப்பட்டு இருந்தான். தங்கியிருக்கும் ஃப்ளாட்டின் வாடகையே 15 ஆயிரம் என்றால், 10 ஆயிரம் எதற்கு உதவும்? பெண்ணின் அவசியமோ பேரதிகம் இருந்தது. காரும் காசும் இல்லாதவனுக்கு அது ஒரு மிகப் பெரிய கேள்விக்குறியாக இருந்தது.

இப்படிப்பட்ட ஒரு நிலையில்தான் கடந்த முறை இங்கே வந்தபோது, தன் காதலைப்பற்றி லக்ஷ்மியிடம் சொல்லியிருந்தான் பாரத். காதல் உண்மையைச் சொன்னதால் உடைந்துவிட்டது என்பதாகத் திடீரென்று சொன்னான் அவன்.

பின்னே? தன்னால் ஒருத்தி கருவுற்றுத் தற்கொலை செய்துகொண்டாள் என்கிற உண்மை யைச் சொன்னால், எந்தக் காதலியால்தான் ஏற்றுக் கொள்ள முடியும் என்று கேட்டாள் லக்ஷ்மி.

‘நான் அந்த உண்மையைச் சொன்னதோடு நிறுத்தவில்லை’ என்று அவன் திடீரெனக் கத்தினான். கிறிஸ்டினாவின் அன்பை நிராகரித்துவிடுவதாக அவன் தீர்மானித்தான். ஏனென்றால், அவள் அருகில் இருப்பது அவனது குற்றமனப்பான்மையைத் தூண்டிக்கொண்டே இருந்தது. இதனால், அவன் அவளுக்கு நிறைய பரிசுப் பொருட்களை வாங்கித் தர ஆரம்பித்தான். அவள் அந்த அன்பால் திக்குமுக்காடிப்போனாள். அதை எல்லாம் அவள் இன்னு யிர்போலப் பாதுகாக்க ஆரம்பித்தாள். உள்ளாடையில் இருந்து துப்பட்டா வரைக்கும் அவன் வாங்கிக் கொடுத்ததைத்தான் அவள் அணிகிறாள் என்கிற நிலை வந்தபோது, அவன் தன்னைப்பற்றிய உண்மையை அவளிடம் சொன்னான்.

அவன் தன் மார்பில் இருந்த காயத்தை அப்போது அவளிடம் காட்டினான். அந்தக் காயம் அயர்ன் பாக்ஸின் முனையால் சூடுபோடப்பட்டதால் உண்டானது. அவள் அதைப் பார்த்துக் கண்ணீர்விட்டாள். தன் உதடுகளால் அந்தக் காயத்தைப் புனிதமாக்க விரும்பினாள். இதனால், அவன் அந்தக் காயம் தனக்கு எப்படி வந்தது என்பதை அவளிடம் சொன்னான்.

அவனுக்கு வேலை போய்விட்டது என்கிற முதல் செய்தியில் இருந்து அது தொடங்கியது. பணத்துக்காக அவன், தனிமையில் தவிக்கும் பேரிளம் பெண்களுக்குப் பணிவிடை செய்துகொண்டு இருக்கிறான். அதற்காக அவர்கள் அவனுக்குத் தேவையான பணத்தைத் தருகிறார்கள். கிறிஸ்டினா அணிந்திருக்கும் உடை கூட அவன் அவ்விதமாகச் சம்பாதித்த பணத்தால் வந்ததுதான் என்பதே அவனது செய்தியாக இருந்தது. இதைக் கேட்டதும் கிறிஸ்டினா தரையில் உட்கார்ந்து விகாரமாக அழத் தொடங்கினாள்.

லக்ஷ்மியின் கண்களிலும் கண்ணீர் சுரப்பதை அப்போது அவன் பார்த்தான். அவள் அவனை அன்போடு அணைத்துக்கொண்டாள். அதைத் தொடர்ந்து அவனிடம் சொன்னாள், ‘இனிமேல் உன்னைக் கட்டிலில் கட்டிப்போடவோ சூடு வைக்கவோ மாட்டேன். வா, என் அன்பை ஏற்றுக்கொள்!’

பின்குறிப்பு: அன்று மாலை பணத்தோடு கிளம்பும்போது, பெட்ரோல் விலை ஏறிவிட்டது, மளிகைச் சாமான் விலை ஏறிவிட்டது என்று குமார் தன் கமிஷனை உயர்த்தித் தரச் சொன்னான் என்று லக்ஷ்மியிடம் நினைவுபடுத்தவும் பாரத் மறக்கவில்லை!

– ஜனவரி 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *